பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

வே. மதிமாறன்

30aug-samugam011.jpg

m-r-radha.jpg

ல்லாம் சிவம் மயம் என்பது போல, எல்லாம் பார்ப்பன மயமாக இருந்த காலம் அது. பார்ப்பனரல்லாத பணக்காரர்களிடம் வெள்ளையனுக்கு எதிரான உணர்வை தீவிரப்படுத்தி, அவர்களை தடியடியிலும், கள்ளுக் கடை மறியலிலும் தள்ளி – சொத்தையும் சுகத்தையும் இழக்க வைத்துவிட்டு, வெள்ளைக்காரனிடம் பார்ப்பனர்களுக்கான சலுகைகளைப் பெற்று அதிகார மட்டத்தில் பார்ப்பனர்கள் மட்டும் உச்சத்தில் இருந்த நேரம் அது.

ஈ.வே.ராமசாமி நாயக்கராக இருந்த பெரியாரையும் பார்ப்பனக் கூட்டம் அப்படித்தான் மடக்கி வைத்திருந்தது. அவர் பணத்தை நக்கித் தின்று, வெள்ளையனோடு கள்ளக்காதலில் ஈடுபட்டுக் கொண்டே, சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதாக படம் போட்டுக்கொண்டிருந்தன காங்கிரசில் இருந்த பார்ப்பனத் தலைமைகள்.

நம்பினார் அவர்களை பெரியார்.

தன் சொத்தின் பெரும்பகுதியை சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இழந்தார்.

அவர் அப்படியே தொடர்ந்திருந்தால், அவர் கொண்ட கொள்கையில் அவருக்கு இருந்த நேர்மையும், உறுதியையும் பயன்படுத்தி, பார்ப்பனர்கள் பெரியாருக்கு தூக்கு தண்டனையை வாங்கி தந்து தியாகி ஆக்கி, அவர் குடும்பத்தை பென்ஷன் எலிஜிபலுக்கு மாற்றி இருப்பார்கள்.

(ஒருவேளை பெரியாருக்கு தூக்கு தண்டனை தந்திருந்தால், வெள்ளைக்காரனைவிட பார்ப்பனர்கள்தான் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.)

வெள்ளையனின் ஆதிக்கத்தை விடவும், ‘சுதந்திர போராட்ட பார்ப்பனர்களின் ஜாதி வெறி (அந்தக் காலத்து வேதாந்தி, வ.வே.சு. ஐயரின் கொலைவெறி, ராஜாஜி போன்றவர்களின் நயவஞ்சகம்) குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அவர்களின் வன்மம்பெரியாரை கடுமையாகச் சுட்டது.

பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.

ஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.

***

திகார மட்டத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, 1916 ஆம் ஆண்டு நீதிக்கட்சி துவக்கப்பட்டது. அதுகாரும் வெள்ளையனை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் பார்ப்பன இயக்கம், முழுக்க முழுக்க நீதிக்கட்சிக்காரர்களையே எதிர்க்க ஆரம்பித்து விட்டது.

பூனைக்குட்டி அல்ல. பெருச்சாளியே வெளியே வந்தது. நீதிக்கட்சியை எதிர்ப்பதற்காக ஒரு கலைக்குழுவை தயார் செய்ததது, காங்கிரஸ் பார்ப்பன இயக்கம். சுதந்திர கீதங்களைபாடுவது என்கிற போர்வையில். கிட்டப்பா என்கிற பார்ப்பனரையும்- & பார்ப்பன கைகூலியும், சத்தியமூர்த்தி அய்யரின் கைப்பாவையும்மான கொடுமுடி கோகிலம் என்கிற கே.பி.சுந்தராம்பாள் போன்ற பல கலைஞர்களை விலைபேசி, அவர்களுக்கு பாரதியாரின் கவிதைகளையே பிரச்சார சாதனமாக தந்தது பார்ப்பனியம். பார்ப்பனர்களின் ஊதுகுழலாக இருந்த பாரதியின் பார்ப்பனத் தன்மை கொண்ட பாடல்களுக்காக, 1928 ஆம் ஆண்டு செம்படம்பர் 11 ந் தேதி பாரதியின் பாடல்களை தடை செய்ததது நீதிக்கட்சி அரசு.

kbs.jpg

அச்சமில்லை, அச்சமில்லைஎன்று நீதிக்கட்சி அரசை கண்டித்து கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள் கைகூலி கலைஞர்கள். மாற்று பிரச்சாரத்திற்கு நீதிக்கட்சி சார்பில் கலைஞர்கள் இல்லை. பார்ப்பனியத்தை திட்டவட்டமாக வரையறுக்கத் தவறியதால், தடுமாறியது நீதிக்கட்சி அரசும், நீதிக்கட்சியும்.

***

ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்- கம்யூனிசம் என்னும் பூதம். என்று கம்யூனிஸட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் சொன்னதுபோல், 1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்- தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது.

கடவுள், மத, சாதி எதிர்ப்பு என்று மட்டுமல்ல, – யாராவது உலக ஞானமான விசங்களையோ, புதுமையான கருத்துகளையோ, மெள்ள பேச ஆரம்பித்தாலே போதும், “இவன் சுனாமானாகாரன் என்று சொல்வது ஒரு அடையாளமாக இருந்தது. எழுத்தாளர் புதுமைப்பித்தனையும் கூட சுனாமானக்கரான்என்று தவறுதலாக அடையாளப்படுத்திருக்கிறார்கள்.

இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி சென்றது போல், மக்களை மையமிட்டு இயங்குகிற, நாடக கலைஞர்களிடம் ஊடுருவியது. கலைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தின் குடியரசுஇதழை மறைத்து வைத்துப் படித்தார்கள்.

அதன் தாக்கத்திற்கு பல கலைஞர்கள் ஆளானாலும், அறிவாளிகளை அது அதிக அளவில் ஈர்த்தது. அப்படி ஈர்க்கப்பட்ட அறிவாளிகள்தான் என்.எஸ்.கிருஷ்ணணும், எம்.ஆர்.ராதாவும்.

***

சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டு சரியாக பத்தாண்டுகள் கழித்து, அதாவது 1935 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பேச்சு வந்திருக்கிறது.

அப்படி பேச ஆரம்பித்த தமிழ்சினிமாவில் ஒன்று சதிலீலாவதிஇந்த படத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கே திரையுலகில் நுழைகிறார். அதுவரை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ்.கேவின் முதல் படம் இந்த சதிலீலவாதி.

இது என்.எஸ்.கேவிற்கு மட்டுமல்ல, எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர் இவர்களுக்கும் இதுதான் முதல்படம்.

திராவிட இயக்கச் சிந்தனை கொண்டவர்களில் முதலில் சினிமாவிற்கு போனது, பாரதிதாசன். அதன் பின் என்.எஸ்.கே., அண்ணா, கலைஞர்.

இந்த நான்கு பேரர்கள்தான் தங்கள் கொள்கைகளை சினிமாவில் சொல்லமுடியும் என்கிற நிலையை ஏற்படுத்தினர். இவர்களில் கலைஞரின் வசனமே ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது. அவர் வசனத்தில் இருந்த ஓசைநயம் மக்களை பெருமளவில் கவர்ந்தது.

அவர் வகுத்தப் பாதையை பின்பற்றிதான் பின்னாட்களில், ஏ.வி.பி.ஆசைதம்பி, சுரதா, தென்னரசு, அரங்கண்ணல், ராதாமணாளன், கண்ணதாசன், இரா. செழியன், முரசொலி மாறன் என்று பெரும்படையே கிளம்பி தமிழ் சினிமாவை தங்கள் வசப்படுத்தியது.

பிராணநாதா, ஸ்வாமிஎன்கிற பார்ப்பன மொழிழையயும், புராணக்கதைகளையும் ஒழித்துக்கட்டி – சமுக படங்களை கொண்டு வந்தது.

***

index_11.gif

சினிமாவில் வருவதற்கு முன்பே பெரியாரின் கருத்துகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்.எஸ்.கே. என்பதற்கு இதோ எம்.ஜி.ஆர். சாட்சியளிக்கிறார்;

சதிலீலாவதி என்ற கதையை படமெடுத்தப்போது அதில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நான், படக் கம்பெனியார் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கியிருந்த சமயம். . . . . . . . எங்கள் கம்பெனியில் இருந்த மணி என்பவர் பிராமண வகுப்பைச் சேர்நதவர். ஆகவே, சாப்பிடும் போது தனியாக உட்கார்ந்துதான் சாப்பிட விரும்புவார். அதாவது வேறு வகுப்பாருடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடமாட்டார். இந்தத் தவறான போக்கை நீக்கக் கருதிய என்.எஸ்.கே. . . . . . . . . . . . .கடைசியாக எப்படியும் தடுக்க வேண்டுமென முடிவு செய்து திட்டமும் தீட்டி எங்களுக்கெல்லாம் யார் யார் என்னென்ன செய்யவேண்டுமென்று யோசனையும் கூறினார்.

ஒரு நாள் மணி அவர்களும், மற்றவர்களும் சமையல் அறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே ஏதோ வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தவர், “என்னய்யா இது, எவ்வளவு நாழியா ரசம் கேக்கிறது? சேச்சேஎன்று சொல்லியபடி எழுந்து, ரசப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டுவந்தார். முன்பே திட்டமிட்டபடி நானும் மற்றவர்களும் சமையலறைக்குள் சென்று பொரியல், மோர், சாம்பார், முதலியவைகளைப் பாத்திரத்தோடு தூக்கிக் கொண்டு வந்து, நாங்களே பரிமாறிக் கொண்டோம். உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், சாம்பார் சாதத்தோடு அப்படியே உட்காந்திருந்தார்கள். ரசம், மோர், கறி முதலியனவெல்லாம் மற்றவர்களால் தீண்டப்பட்டுவிட்டதால், தீட்டாகிவிட்டதே ( ) என்ன செய்வார்கள்?

மணி அவர்களுக்கு ஒரே ஆத்திரம். மணி அவர்களோடு உணவருந்திய மற்ற பிராமண நண்பர்களும் கோபத்தோடு எழுந்து வெளியே வந்தார்கள். நாங்களோ பெருவாரியானவர்கள். என்ன செய்வார்கள்? என்.எஸ்.கே-யைக் கண்டிப்பதற்கோ பயம்.

எம்.ஜி.ஆர். நடத்தி 30-9-1957 ல் வெளிவந்த நடிகன் குரல்என்ற இதழில் எம்.ஜி.ஆர்.

இதே போன்று ஒரு அனுபவம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கும் இருந்திருக்கிறது. ஜெகநாத அய்யர் நாடக குழுவில் எம்.ஆர்.ராதா இருந்தபோது, நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டினுள் உள்ள சமையலறையில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் நுழையக்கூடாது என்கிற விதியை மீறி ஒரு முறை ராதா சமையலறையில நுழைந்து, என்ன அய்யர்வாள், சமைக்கிறீங்களா? இன்னைக்காவது ருசியா சமைங்க. என்று சொல்லிவிட்டார் அது பெரிய பிரச்சினை ஆகியிருக்கிறது.

பார்ப்பன நடிகர் ஒருவருக்கு தான் எச்சில் படித்தி குடித்தக் காப்பியை வேறு டம்பளிரில் ஊற்றி, குடிக்க வைத்திருக்கிறார். தன்னுடன் சக நடிகராக இருந்த பார்ப்பனர் டி.ஆர்.மகாலிங்கத்தை டேய் கறி தின்னுடா என்று அவரோடு வம்பு செய்திருக்கிறார். (டி.ஆர்.மகாலிங்கத்தின் கடைசிகாலத்தில் அவர் நொடிந்த நிலையில் இருந்த போது எம்.ஆர்.ராதா மட்டும்தான் உதவி செய்திருக்கிறார்.)

சொந்த வாழ்க்கையில் பெரியார் கொள்கைகளோடு வாழந்த இவர்கள் தனது நாடகங்களிலும், சினிமாவிலும் அதை தீவிரமாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இன்பவல்லிஎன்ற படத்தில ஒரு பாடல்; மந்திரத்தின் பேரைச் சொல்லி/ மாயக்காரர் தான்/ தந்திரமாய் செய்த ஏட்டை – கிளியே/ தாட்சண்யம் பார்க்காமல் கிழியே என்று பாடிக் கொண்டே வந்து கலைவாணர் பஞ்சாங்கத்தைக் கிழித்தெரிவார்.

அதுபோல் 1939 ல் வெளிவந்த திருநீலகண்டர்படத்தில், டி.எஸ்.துரைராஜ் சரஸ்வதி பிரம்மாவின் நாவில் உள்ளதாகவும், அவள் தனக்கு துணை நிற்க வேண்டும் என்று சொல்வார். அதற்கு கலைவாணர்; “மறையவன் (பிரம்மா) நாவில் அவள் (சரஸ்வதி)/ உறைவது நிஜமானால்/ மலஜலம் கழிப்பதும் எங்கே?” என்று கேட்பார்.

annamgrmk.jpg

அண்ணாவின் கதை வசனத்தில் உருவான நல்லதம்பிபடத்தில் வரும் கிந்தனார் காலடசேபத்தில், மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி/ மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே என்று பாடுவார். கலைஞர் வசனத்தில் என்.எஸ்.கே. தயாரித்து நடித்து வெளிவந்த மணமகள்’ ‘பணம்படங்களிலும் திராவிட இயக்க கருத்துகள் கொடிகட்டிப் பறந்தன.

திமுக துவங்கப்பட்டபோது, வெளிவந்த பணம்படத்தில் கலைவாணரின் ஆலோசனையின்படி கண்ணதாசன் எழுதிய, “தீனா…மூனா..கான-எங்கள்/தீனா…மூனா…கான/அறிவினைப் பெருக்கிடும்/ உறவினை வளர்த்திடும்/ பகுத்தறிவோடு நாட்டினர் வாழ/ திருக்குறள் தந்தார் பெரியார்/ வள்ளுவப் பெரியார்என்று பாடினார். இதேப்போல் கலைவாணரின் சோசலிச ஆதரவு கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது. 1951 ல் சோவியத் அரசின் அழைப்பை ஏற்று, ரஷ்யா சென்று வந்த அனுபவத்தை ஒரு கம்யூனிஸ்டைப் போல் பூரிப்போடு, என்.எஸ்.கே. பேசி பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது.

index_09.gif

சிரிப்புப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது இப்படி குறிப்பிடுகிறார்; நல்லா குலுங்கக் குலுங்கச் சிரிக்கணும். மனமாரச் சிரிக்கணும். ஆனா நீங்க சிரிச்சது எப்படி இருந்தது தெரியுமா? லெனின் கிராடில் இட்லர் சிரித்தானே, அப்படி இருந்தது. நான் வேண்டுவது அந்தச் சிரிப்பல்ல. அது மரணச் சிரிப்பு.

சோசலிசம்பெரியார்’, என்று மிகுந்த ஈடுபாட்டோடு இருந்த என்.எஸ்.கேவிற்கு அரசியல் ரீதியாக சின்னக் குறைபாடும் இருந்தது. காந்தியின் மீதும் அளவற்ற ஈடுபாட்டோடு இருந்தார். அந்த உணர்வு காந்தியின் மீதான பரிதாப உணர்ச்சியின் அடிப்படையில்தான் இருந்ததே தவிர. அரசியல் ரீதியாக இல்லை. அதனால்தான் மதுவிலக்கை தீவிரமாக பிரச்சாரம் செய்த கலைவாணரால், அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை.

ஆனால், நடிகவேள் எம்.ஆர்.ராதா அப்படியில்லை. அவருக்கு பெரியாரை தவிர இந்த உலகத்தில் வேறு தலைவர்களே இல்லை என்பதுதான் அவரின் உறுதியான எண்ணம். பெரியாரை தமிழர் தலைவர்என்று நாம் சொல்கிறோம். ஆனால் நடிகவேள் அவரை உலகத் தலைவர் என்று சொல்கிறார்.

அண்ணா, கலைஞர் இவர்களோடு ஆழமான நட்பும் மரியாதையும் நடிகவேளுக்கு இருந்தபோதும், பெரியாரோடு முரண்பட்டு திமுகவை உருவாக்கியபோது, ராதா பெரியோரோடு இருந்தார் என்பது மட்டுமல்ல, அவர்களை பொருள், பதவி நோய்க்கு ஆசைப்பட்டு போய்விட்டார்கள்என்று கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். அறிஞர், கலைஞர், நாவலர், காவலர் எல்லோரையும் பதவி மாளிகையில் போய் படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு தாமே தனித்து நின்று இனவுணர்ச்சிபோர்களத்தில் வாகைசூடியுள்ளார் பெரியார் என்று பேசியுள்ளார். பெரியாரை விட்டு பிரிந்துபோன குத்தூசி குருசாமியும் இவர் தாக்குதலுக்கு தப்பவில்லை.

பெரியாரை யாராவது தரக்குறைவாக திட்டி விட்டால் நடிகவேளால் தாங்க முடியாது. திட்டியவர் சமூகத்தில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அவர்களை கேவலப்படுத்தி பேசிவிடுவார்.

அப்படிதான் மாபொசி பெரியாரை கடுமையாக விமர்சித்த காலம் அது. தஞ்சையில் ரத்தக்கண்ணீர்நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. நாடகத்தில் ஒரு காட்சி, ராதாவின் தாய் இறந்து கிடக்கிறார். பிணத்தின் தலைமாட்டில் இருந்து கொண்டு ராதா இப்படி பேசுகிறார்; அம்மா, இன்னும் மாபொசியே சாவலியம்மா…அதுக்குள்ளே நீ செத்துபோய்ட்டியே என்று. இதுதான் நடிகவேள்.

ஒரு பத்தரிகையில் வாசகரின் கேள்விக்கு அவரின் பதில், நேரு, பெரியார், இராஜாஜி, அண்ணாத்துரை இவர்களின் பொதுப்படையான பொருளை கருத்தாழத்தோடு பேசக்கூடியவர்களை வரிசைப்படுத்தவும்?

எம்.ஆர்.ராதா: பெரியார்தான். வரிசை தேவையில்லை.

                                                            ***

இந்திய கலவரங்களின் கதாநாயகனான ராமன், பெரியாரிடம் செருப்படி பட்ட ராமன், எம்.ஆர்.ராதாவிடம் வாங்கிய உதை கொஞ்ச நஞ词சமல்ல. பெரியாரின் கருத்துகளை உள்ளடக்கி வால்மிகி ராமாயணத்தின் பின்னணியில் ராதா நடத்திய ராமாயணம்நாடகம், அன்றைய பா.ஜ.கவான காங்கிரசை நடுங்க நடுங்க வைத்தது.

mrradha.jpg

1928 ல் நீதிக்கட்சி, பாரதியின் கவிதைகளை தடைசெய்ததைப் போல் ராதாவின் நாடகங்களை தடை செய்து பழிதீரத்துக் கொண்டது காங்கிரஸ். தடையை கண்டித்து பெரியார், தமிழகம் எங்கும் ஆவேசமாக பேசினார். ராதா தடையை தந்திரமாக தகர்த்தார். தலைப்பை மாற்றி மீண்டும் நாடகத்தை நடத்திக் காட்டினார். அப்படியும் அடங்காத காங்கிரசும், பார்ப்பன கும்பலும் குண்டர்களை அனுப்பி நாடக அரங்கில் கலகம் ஏற்படுத்தினர். குண்டர்களை ஓட, ஓட விரட்டி அடித்து விட்டு, அதன் பிறகும் நாடகம் நடத்தியிருக்கிறார் நடிகவேள்.

ராமாயணம் நாடகத்தால் இந்துக்கள் மனம் புண்படுகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள் பார்ப்பனர்கள்.

அதற்கு நடிகவேள், என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள், கண்டிப்பாய் என் நாடகத்திற்கு வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறிவந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதை கண்டிப்பாய் அறியவும். அன்புடன் / எம்.ஆர்.ராதா. என்று விளம்பரப்படுத்தினார். அதற்குப் பிறகுதான் நாடகத்திற்கு கூட்டம் குவிந்திருக்கிறது.

வேறுவழியில்லாமல் காங்கிரஸ் போலிஸ், நடிகவேள் நாடகத்தில் ராமன் வேடம் போட்ட உடனேயே, அவரை கைது செய்திருக்கிறது. மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள். மக்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்து விரட்டியிருக்கறது போலிஸ். அப்படியும் கூட்டம் கலையவில்லை. ராதா வந்து மக்களிடம் நடப்பது காமராஜர் ஆட்சி. அவர் ஆட்சிக்கு எந்த இடையூறும் வரக்கூடாது. அமைதியாக கலைந்து போங்கள்என்று சொன்ன பிறகே மக்கள் விலகி சென்று இருக்கிறார்கள்.

ந்த நாடகத்திற்கு முன்பு கலைஞர் எழுதிய தூக்குமேடைசி.பி.சிற்றரசு எழுதிய போர்வாள்போன்ற நாடகங்களும் இதோபோல் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.

போர்வாள் நாடகத்தின் துவக்கமே, ‘பள்ளியில் படிக்கும் அன்பாதவன் ராமாயண பேச்சுப்போட்டியில் ராமனையும் சீதையையும் கேவலப்படுத்தி பேசினான்என்பதில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

தூக்குமேடை நாடகம், ‘மாரியம்மன் கோவிலுக்கு விளக்கு ஏற்ற வரும், மாரியம்மாள் மீது ஆசைபடும் பணக்காரர் அபிநய சுந்தர முதலியாருக்கு ஆசை. அதற்கு துணைபோக கோயில பூசாரியை பயன்படுத்துகிறார்என்றுதான் நாடகம துவங்கும்.

இந்த நாடகத்திற்கு தலைமை தாங்கிய &- அறிஞர், போராளி, பெரியாரின் தளபதியான அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அந்த மேடையில்தான் எம்.ஆர்.ராதாவிற்கு நடிகவேள் என்ற பட்டத்தை தந்தார். பின்னாட்களில் இந்த நாடகத்தை எழுதிய கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதா தந்தார்.

கம்யூனிசக் கருத்துக்களிலும் அதிக ஈடுபாடு கொண்டவராகவே இருந்திருக்கிறார் ராதா. அந்தக் காலத்தில நாடகங்களில், முன் திரையில் கடவுள் படங்களை தொங்கவிடுவதுதான் வழக்கம். ஆனால் நடிகவேள், உலக உருண்டையின் படம் வரைந்து, அதன் கீழ் உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்என்ற முழக்கத்தை எழுதி தொங்கவிட்டு இருக்கிறார். இடைவேளையின் போது ஆணும் பெண்ணும் அரிவாள் சுத்தி பிடித்திருப்பதுபோன்ற படுதாவை தொங்கவிட்டிருக்கிறார்.

கம்யூன்ஸட்டுகள் தலைமறைவாக இருந்தபோது, ப. ஜீவானந்தத்திற்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு வேண்டிய வசதிகளை செய்திருக்கிறார். அப்போது ஜீவா தந்தக் கடிதங்களை கொண்டு போய் ரகசியமாக ஒருவருக்கு கொடுத்திருக்கிறார். அவைகள் புரட்சிகர கடிதங்கள் என்ற நினைப்பில். ஆனால் அவை அனைத்தும் தன் காதலி பத்மாவதிக்கு ஜீவா எழுதிய காதல் கடிதங்கள் என்பது பின்னர்தான் நடிகவேளுக்கு தெரிய வந்திருக்கிறது.

கம்யூனிசம் பற்றி பெரியாரின் நிலை என்னவாக இருந்ததோ, அதுதான் எம்.ஆர்.ராதாவின் நிலையும். பெரியாரின் வாளாக தன் காலம் முழுக்க சுழன்று கொண்டே இருந்தார் நடிகவேள்.

 

***

திகமாக எடுத்துக் கொண்டதில் கொஞ்சமாக திருப்பி தந்து தங்களை தர்மபிரபுக்களாக காட்டிக் கொண்டவர்கள் ஏராளம். அப்படிக்கூட பெரியார் இயக்கத்துக்கு பணம் தர எத்தனை தர்ம பிரபுக்கள் வருவார்கள்? தன் கருத்துக்களை மட்டுமல்ல, தன் பணத்தையும் வாரி வழங்கியிருக்கிறார்கள் கலைவாணரும், நடிகவேளும்,

கலைவாணர் என்.எஸ்.கே. தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை திராவிட இயக்கத்து தந்திருக்கிறார்.

நடிகவேள் எம்.ஆர். ராதாவோ, ஬ான் சம்பாதியத்தையே கழத்திற்குதான் தந்திருக்கிறார்.

கலைவாணருக்கு பெரியாரிடம் பிடித்தக் கருத்துகள் ஏராளம் உண்டு.

நடிகவேளுக்கோ பெரியாரிடம் பிடிக்காத கருத்துகளே கிடையாது.

கலைவாணர் பெரியார் கருத்துகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

நடிகவேளோ, பெரியாராகவே இருந்தார்.

ஆம், கலைவாணர் தந்தை பெரியாரின் கழுத்தை அலங்கரித்த பூமாலையாக இருந்தார்.

நடிகவேள், அநீதிகளுக்கு எதிராக தந்தை பெரியார் உயர்த்திய கரத்தில் போர்வாளாக ஒளிந்தார். *

பயன்பட்டவை:

குடியரசு

நடிகன் குரல்கலைவாணர் மலர்

கம்யூனிஸ் கட்சி அறிக்கை

என்,எஸ்,கேவின் நான் கண்ட சோவியத் ரஷ்யா

ப.சோழநாடனின் கே.பி.சுந்தரம்பாள் வரலாறு

திராவிட இயக்க எழுத்தளார்கள் பற்றி அட்டைப்படமும் ஆசிரியர் யார் என்ற தகவலும் கிழிந்து போயிருந்த ஒரு புத்தகம்

தஞ்சை சோமசுந்தரம் எழுதிய பெரயாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா

விந்தனின் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

இரா.வேங்கடாசலபதயின் திராவிட இயக்கமும் வேளாளரும்

* 1907 ஆம் ஆண்டு பிறந்த நடிகவேளுக்கு நூற்றாண்டு நிறைவடையப்போகிறது.

* 1908 ஆம் ஆண்டு பிறந்த கலைவாணருக்கு நூற்றாண்டு துவங்குகிறது.

கருஞ்சட்டைத் தமிழர்மாத இதழ் & நவம்பர், 2007