இதுதான் அறிவு நாணயமா?

 பெரியாரை சரியாக புரிந்து கொள்ள ஒரே வழி

stalin_photo.jpg 

பெரியாரைப் பற்றி ஆய்வு செய்து தடி தடி புத்தகங்கள் வெளியிட்ட புது பெரியாரிஸ்ட்டுகளான மார்க்சியஅறிஞர்கள், பெரியாரின் கம்யூனிச ஆதரவு பற்றி நிரம்பப் பூரிப்போடு புத்தகம் வெளியிட்டார்கள்.ஆனால் அவர்கள் தங்கள் சொந்தக் கருத்தை பெரியார் மீது ஏற்றி, பெரியாரின்  ஸ்டாலின் ஆதரவு நிலையை இருட்டடிப்பு செய்தார்கள். 

பெரியார் அயல் நாட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் நிர்வான சங்கத்தில் கலந்து கொண்டதை கூட மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் இன்னொரு மார்க்சியஅறிஞர். (ஒரு அனுபவமாகத்தான் பெரியார் நிர்வான சங்கத்திற்கு சென்றிருக்கிறாரே தவிர, அதை ஒரு தத்துவமாக பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)இவரும் பெரியாரின் ஸ்டாலின் ஆதரவை இருட்டடிப்பு செய்தார். 

periyar_in_russia.jpg

பெரியார், ஸ்டாலின் ஆட்சியை புகழந்து எழுதினார் என்பது மட்டுமல்ல, பல குழந்தைகளுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக திராவிட இயக்கமே ஸ்டாலின் ஆதரவு நிலையில்தான் இருந்தது. அதனால்தான் கலைஞர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார். நிற்க. 

உலகம் முழுக்க உள்ள கிறிஸ்தவர்கள் ஸ்டாலின் பெயரை வைக்க மாட்டார்கள். ஒருவேளை  தெரியாமல் வைத்துவிட்டாலும், அந்தப் பெயருக்கு எந்த பாதிரியும் ஞானஸ்நானம் செய்யமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (சர்ச்சுகளை எல்லாம் ஆஸ்பத்திரியா மாத்துன, பாதியார்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செஞ்சா, எந்தப் பாதிரி குழந்தைகளுக்கு ஸ்டாலின் பேரை வைப்பான்) 

மதவாதிகளை அச்சுறுத்துவதைப் போலவே ஸ்டாலின் என்கிற அந்த பெயர் போலி மார்க்சிய அறிஞர்களையும் அச்சுறுத்துகிறது, என்பது தற்செயலானது அல்ல.இந்த மூன்று அறிஞர்களும், பெரியாரின் ஸ்டாலின் ஆதரவை மட்டுமா இருட்டடிப்பு செய்தார்கள், அவரின் பாரதி எதிர்ப்பையும் இருட்டடிப்பு செய்தார்கள்.  

எங்களுக்கு பெரியாரின் இந்தக் கருத்துக்களில் உடன்பாடில்லை. ஆனால் அவர் இப்படி ஒரு நிலையில் இருந்திருக்கிறார்  என்று அதை பெரியாரின் கருத்தாக கூட பதிவு செய்ய மறுத்தார்கள். இதுதான் இவர்களின் அறிவு நாணயம்? 

lenin_and_stalin.jpg

பெரியாரின் ஸ்டாலின் ஆதரவும், பாரதி எதிர்ப்பும் இந்த அறிஞர்களை அச்சம் கொள்ள செய்து, பெரியார் இவர்களையே விமர்சிப்பது போல் தோன்றியது போலும். 

 ( நமது பாரதிய ஜனதா பார்ட்டிஎன்ற பாரதியின் விமர்சன நூலுக்குப் பிறகு பாரதி பற்றிய தங்கள் கருத்துகளில்  இந்து மூவரும் மவுனம் சாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) 

ஆகவே தோழர்களே, பெரியாரை சரியாக புரிந்து கொள்ள ஒரே வழி – பெரியாரைப் பற்றி படிக்காமல், பெரியாரையே படியுங்கள்.

வே. மதிமாறன்