எது மாயத்தோற்றம்?

mat2.jpg நமது உணர்வை, அறிவை தீர்மானிப்பது புறமா ? அகமா ?

கே. குமார்.

அகமே தீர்மானிக்கிறது என்கிறது மதம். மதம் என்றால் இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களின் உள்ளடக்கமும் இதுதான். 

ஆதிசங்கரரில் இருந்து  ஜெர்மனைச் சேர்ந்த பெர்குலி பாதிரியார் வரை அகமே என்றுதான் தங்கள் வாதங்களை முன் வைக்கிறார்கள். 

‘இரவில் கயிறை பாம்பாக நினைத்து பயப்படுகிறாய். வெளிச்சத்தில் பார்க்கும்போது பாம்பல்ல கயிறு என்று உணர்கிறாய். நீ பாம்பாக நினைத்தால் பாம்பு. கயிறாக நினைத்தால் கயிறு, என்று  உலப்புகிறார் ஆதி சங்கரர். 

மேலோட்டமாக பார்த்தால் மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தோன்றும். அதை மதவாதிகளின் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால், அப்படித் தோன்றுவது தான் மாயத்தோற்றம். 

மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றால், குழந்தை பிறக்கும்போதே அறிவாளியாக, நல்லது கெட்டதை தெரிந்து கொண்டு பல்வேறு மொழிகளையும் பேச வேண்டும் அல்லவா ?

மாறாக,  நமக்கு நம் பெயரையே அடுத்தவர் வைத்து, பலரால் அழைக்கப்பட்டு அதன் பிறகு, “உங்க பேரு என்னங்க ?” என்றால், பெயர் சொல்லவே தெரிந்துகொள்கிறோம். நம் பெயரையே அடுத்தவர் சொல்லிதான் நாம் தெரிந்து கொள்கிறோம் என்றால், மற்ற விஷயங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ ?

ஒருபொருள் அல்லது ஒரு நபர் இல்லாவிடின் அவர்களை  அவைகளைப் பற்றியான கருத்தோ, அறிவோ நமக்குத் தோன்றாது. உணர்வும் அதோடு இணைந்ததே. 

நமது உணர்வை சமூகம்தான் தீர்மானிக்கிறது. இதை ஒரு எளிமயான உதாரணம் மூலம் புரிந்து கொள்வோம்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து, ஒரு பெண் கருவுறுகிறாள். குழந்தைக்கு  தாயாகப் போகிறாள் என்கிற செய்தி, அவளை அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவளுடைய தாயும் மகிழ்ச்சி அடைகிறாள். கணவன், கணவனின் குடும்பம் என்று எல்லா உறவினர்களுக்கும் கருவுற்றுச் செய்தி சொல்லப்படுகிறது. குடும்பமே விழா எடுத்து குதூகலிக்கிறது. 

இதே சம்பவத்தை கொஞ்சம் திருப்பிப் போட்டுப்  பார்ப்போம். திருமணத்திற்கு முன் அதே பெண் கருவுறுகிறாள். கருவுற்ற செய்தி, கருவுற்றப் அந்தப் பெண்ணையே திகலடைய வைக்கிறது. அவளுடைய தாய் அவமானத்தால் அலறுகிறாள். ஒட்டு மொத்த அந்தப் பெண்ணின் குடும்பமே பயந்துபோய் அந்தச் செய்தியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பாதுகாக்கிறது. குடும்பத்தையே சொல்ல முடியாத சோகம் சூழ்கிறது. 

சம்பவம் ஒன்றுதான்.

இவர்களின் உணர்வை எது தீர்மானிக்கிறது?

மனமா? சமூகமா?

**

2007 நவம்பர் 29 அன்று எழுதியது.

**

கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்

**

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384