எது மாயத்தோற்றம்?

mat2.jpg நமது உணர்வை, அறிவை தீர்மானிப்பது புறமா ? அகமா ?

கே. குமார்.

அகமே தீர்மானிக்கிறது என்கிறது மதம். மதம் என்றால் இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களின் உள்ளடக்கமும் இதுதான். 

ஆதிசங்கரரில் இருந்து  ஜெர்மனைச் சேர்ந்த பெர்குலி பாதிரியார் வரை அகமே என்றுதான் தங்கள் வாதங்களை முன் வைக்கிறார்கள். 

‘இரவில் கயிறை பாம்பாக நினைத்து பயப்படுகிறாய். வெளிச்சத்தில் பார்க்கும்போது பாம்பல்ல கயிறு என்று உணர்கிறாய். நீ பாம்பாக நினைத்தால் பாம்பு. கயிறாக நினைத்தால் கயிறு, என்று  உலப்புகிறார் ஆதி சங்கரர். 

மேலோட்டமாக பார்த்தால் மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தோன்றும். அதை மதவாதிகளின் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால், அப்படித் தோன்றுவது தான் மாயத்தோற்றம். 

மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றால், குழந்தை பிறக்கும்போதே அறிவாளியாக, நல்லது கெட்டதை தெரிந்து கொண்டு பல்வேறு மொழிகளையும் பேச வேண்டும் அல்லவா ?

மாறாக,  நமக்கு நம் பெயரையே அடுத்தவர் வைத்து, பலரால் அழைக்கப்பட்டு அதன் பிறகு, “உங்க பேரு என்னங்க ?” என்றால், பெயர் சொல்லவே தெரிந்துகொள்கிறோம். நம் பெயரையே அடுத்தவர் சொல்லிதான் நாம் தெரிந்து கொள்கிறோம் என்றால், மற்ற விஷயங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ ?

ஒருபொருள் அல்லது ஒரு நபர் இல்லாவிடின் அவர்களை  அவைகளைப் பற்றியான கருத்தோ, அறிவோ நமக்குத் தோன்றாது. உணர்வும் அதோடு இணைந்ததே. 

நமது உணர்வை சமூகம்தான் தீர்மானிக்கிறது. இதை ஒரு எளிமயான உதாரணம் மூலம் புரிந்து கொள்வோம்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து, ஒரு பெண் கருவுறுகிறாள். குழந்தைக்கு  தாயாகப் போகிறாள் என்கிற செய்தி, அவளை அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவளுடைய தாயும் மகிழ்ச்சி அடைகிறாள். கணவன், கணவனின் குடும்பம் என்று எல்லா உறவினர்களுக்கும் கருவுற்றுச் செய்தி சொல்லப்படுகிறது. குடும்பமே விழா எடுத்து குதூகலிக்கிறது. 

இதே சம்பவத்தை கொஞ்சம் திருப்பிப் போட்டுப்  பார்ப்போம். திருமணத்திற்கு முன் அதே பெண் கருவுறுகிறாள். கருவுற்ற செய்தி, கருவுற்றப் அந்தப் பெண்ணையே திகலடைய வைக்கிறது. அவளுடைய தாய் அவமானத்தால் அலறுகிறாள். ஒட்டு மொத்த அந்தப் பெண்ணின் குடும்பமே பயந்துபோய் அந்தச் செய்தியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பாதுகாக்கிறது. குடும்பத்தையே சொல்ல முடியாத சோகம் சூழ்கிறது. 

சம்பவம் ஒன்றுதான்.

இவர்களின் உணர்வை எது தீர்மானிக்கிறது?

மனமா? சமூகமா?

**

2007 நவம்பர் 29 அன்று எழுதியது.

**

கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்

**

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

5 thoughts on “எது மாயத்தோற்றம்?

  1. மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றால், குழந்தை பிறக்கும்போதே அறிவாளியாக, நல்லது கெட்டதை தெரிந்து கொண்டு பல்வேறு மொழிகளையும் பேச வேண்டும் அல்லவா ?

    இதே சம்பவத்தை கொஞ்சம் திருப்பிப் போட்டுப் பார்ப்போம். திருமணத்திற்கு முன் அதே பெண் கருவுறுகிறாள். கருவுற்ற செய்தி, கருவுற்றப் அந்தப் பெண்ணையே திகலடைய வைக்கிறது. அவளுடைய தாய் அவமானத்தால் அலறுகிறாள். ஒட்டு மொத்த அந்தப் பெண்ணின் குடும்பமே பயந்துபோய் அந்தச் செய்தியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பாதுகாக்கிறது. குடும்பத்தையே சொல்ல முடியாத சோகம் சூழ்கிறது.

    சம்பவம் ஒன்றுதான்.

    இவர்களின் உணர்வை எது தீர்மானிக்கிறது?

    மனமா?

    சமூகமா?

    இந்த இரன்டு நிகழ்வுகளுக்கும் சமூகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
    குழந்தையின் மனம் ஒரு clean slate .அதில் எண்ணங்கள் எழுதப்படுகின்றன. ந‌ல்ல எண்ணங்கள் எழுதப்படவெண்டும்.
    அதே போல பிள்ளைக்குத் தந்தை யார் என்று சொல்லும்படி ஒரு குழந்தை அமைய வேன்டும் இதற்கு மனங்களே பொறுப்பு.
    கமலா

  2. “மாறாக, நமக்கு நம் பெயரையே அடுத்தவர் வைத்து, பலரால் அழைக்கப்பட்டு அதன் பிறகு, “உங்க பேரு என்னங்க ?” என்றால், பெயர் சொல்லவே தெரிந்துகொள்கிறோம். நம் பெயரையே அடுத்தவர் சொல்லிதான் நாம் தெரிந்து கொள்கிறோம் என்றால், மற்றவிஷயங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ ?”

    திரு. மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்
    கேட்கப்பட்டிருக்கும் கேள்வி, நமது உணர்வை, அறிவை தீர்மானிப்பது அகமா,புறமா என்பது. நீங்கள் மேலே சொல்லியிருக்கும் வரிகளில் பெயரை உதாரணமாக சொல்லி இருக்கிறீர்கள். நமது பெயரை இந்த சமூகம் சொல்லித் தெரிந்தாலும், நமது உணர்வையும், அறிவையும் சமூகம் எப்படி தீர்மானிக்கிறது என்பது எனக்கு புரியவில்லை.உதாரணமாக நமக்கு பசிக்கிறது என்பதை இந்த சமூகம் சொல்லி நாம் தெரிந்துகொள்வதில்லை. அது போல் என்ன சாப்பிட வேண்டுமென்றும் நாம் தான் தீர்மானிக்கிறோம் அதில் இந்த சமூகம் எப்படி தலையிட முடியும், நமது உணர்வை சமூகம் எப்படி தீர்மனிக்க முடியும். அது போல் பிறக்கும் போதே குழந்தைகள் எல்லாம் தெரிந்திருப்பது என்பது, விதைகள் பதியம் வைத்த மறுநாளே மரமாக நிற்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதைப்போல் உள்ளது. இந்த சமூகம் எப்படி நாம் வாழலாம் என்று வழி காட்டலாமே தவிர தீர்மானிக்க முடியாது. நமது உணர்வையும் அறிவையும் மனம்தான் தீர்மானிக்க முடியும். சமூகம் தெரிந்துகொள்ளலாமே தவிர தீர்மானிக்க முடியாது என்பது என் கருத்து.

  3. மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றால், குழந்தை பிறக்கும்போதே அறிவாளியாக, நல்லது கெட்டதை தெரிந்து கொண்டு பல்வேறு மொழிகளையும் பேச வேண்டும் அல்லவா ?
    உங்களின் பதிலில் உள்ள முதல் கேள்விக்கான எனது பதில்:
    குழந்தைகள் பிறக்கும்போது மனதோடு பிறப்பதில்லை.அதற்க்கு உணர்வு இருக்குமேதவிர மனம் கிடையாது.மனம் என்பதை வார்தையாக்கதில் காட்டுவது என்றால் தன்முனைப்பு அல்லது கர்வம், ஆணவம் என்பவை சற்றே நெருங்கிவரும் வார்த்தைகளாகும்.
    குழந்தை பிறக்கும்போது அதற்க்கு தான் என்றோ மற்றவர் என்றோ தனித்தனியாக தெரியாது.எல்லாம் ஒன்று என்பதுவும் தெரியாது எல்லாம் வேறுவேறு என்றும் தெரியாது.இன் நிலையை ஒரு நிலை கண்ணாடிக்கு ஒப்ப நாம் சொல்லலாம்.
    ஆனால் நாளடைவில் அறிவுட்டுகிறோம் எனும் பெயரில் நாம் தான் அதனுள் பல பிரிவுகளை பிரிக்க ஆரம்பிக்கிறோம்.குழந்தையிடம் பிறந்த குழந்தைக்கு இது அம்மா,இது அப்பா,இது மருத்துவர்,இது செவிலித்தாய்,இவர் உறவினர்,இவர் நம்மவர், இவர் பகைவர், இது மனை,இது மருத்துவமனை,இது தாய்பால்,இது தண்ணி என்றெல்லாம் தெரியாது.இந்நிலையில் அக்குழந்தையிடம் பசி,தாகம்,தூக்கம், போன்ற உணர்வுகள்மட்டுமே இருக்கும்.
    நாளடைவில் நாம் சொல்லிகொடுப்பதில்தான்,பழக்கப்படுத்துவதில்தான் குழந்தை பார்ப்பவற்றை பிரித்துப்பார்க்க ஆரம்பிக்கிறது.
    அதனுடைய தன்முனைப்பும்,ஆணவமும் வளர ஆரம்பிக்கிறது.தன்னுடையது,மற்றவருடையது,நல்லது,கெட்டது,சாதகமானது,எதிரானது,ஒன்று,பலது,கருப்பு,செவப்பு,சகோதரன்,அந்நியன் என்றெல்லாம் தன் மனதினுள் பிரிவுகளை உண்டாக்கிக்கொண்டு தன்னை வடிவமைத்து கொண்டு நான் என்பதை வரையரைசெய்துகொள்ள ஆரம்பிக்கிறது.
    இந்நிலையில் உணர்வுகள் வெறும் உணர்வுகளாகமட்டும் இல்லாது அவை அவனால் வரையறுக்கப்பட்ட உணர்வுகளாக இருக்கும்.
    அவன் வாழும் சமூகம் சார்ந்த நியதிகள் மற்றும் அவனது மனம் வகுத்த வரையறைகள் இதன் அடிப்படையிலேயே அவனது வாழ்க்கை அமைகிறது.
    அவனது தனிப்பட்ட மன வரையறைகளுக்கும்,சமுகத்தின் சட்டதிட்டங்களும் இடையே காணப்படும் உறவின் தன்மையில்தான் ஒருவன் சமூகத்தோடு ஒட்டிவாழும் மனிதனாகவும்,அதனுடன் மாறுபடும்போது போது ஒன்று அஞ்சி வாழும் கோழையாகவோ,அல்லது ஒரு புரட்சிகாரனகாவோ உருவெடுக்கிறான்.
    நல்ல விழிப்புள்ளவனுக்கு தனது சமூகம் கொடுத்த,அல்லது அவனது பெற்றோர் கொடுத்த வரையரைகலைஎல்லாம் தாண்டிய தன்னைப்பற்றிய,தன் செயல்கள்,ஆற்றலை பற்றிய ஒரு லட்சியஉருவகம் இருக்கும்.
    ஒரு பிறவியில் அவனது அத்தகைய லட்சிய பயணத்தில் அவன் பயணித்த தூரம்போக மீதி தொலைவும்,ஆற்றலும் இப்பிரபஞ்சத்தில் இருந்துகொண்டே இருக்கும்.விழிப்புணர்வு உள்ளவனது ஆற்றல் அடுத்த உடலை தனக்குஏற்றவாறு,தனக்கு ஏற்ற சுழலில் தேர்ந்தெடுத்து தனது லட்சிய பயணத்தை தொடரும்.
    இப்படி மீண்டும் ஒரு உடலை எடுத்து குழந்தையாக பிறக்கும்போது அக்குழந்தைகளுக்கு சில மனப்பதிவுகள் இருக்கும்.காரணமின்றி ஒன்றின் மீது ஈர்ப்பு,வெறுப்பு ஏற்ப்படுவது இத்தகைய பழைய பதிவுகளால் தான்.சிலசமயம் அவர்களது பெற்றோர்,அல்லது சமூகம் கற்றுதந்ததைவிட மாறுபட்ட கண்ணோட்டத்தில், சிந்திக்கமுடிவது,செயல்படமுடிவது(திருஞான சம்பந்தர் சிறுவயதில் பாடியது உட்பட) என்பதெர்க்கெல்லாம் அடிப்படையிலேயே நம்முள் உள்ள ஊற்றுதான் காரணம்
    பொதுவில் ஒருவரின் ஆழமான அகங்காரம் அவரிடம் பிரிவுகளை அதிகப்படுத்தி அவரை மற்றவரிடமிருந்து பெரிதும் தனிமைப்படுத்திவிடுகிறது.அவரால் அடுத்தவரை தன்னைப்போல் மற்றவரை நினைக்கமுடியாது.இத்தகைய ஆணவம் இல்லாது அனைத்து உயிர்களையும் தன்னுயிர்போல் பாவிக்கும் தன்மையே அனைத்தும் ஒன்றே என்று என்னும் நிலையே மேன்மையான நிலை ,அதாவது இறைதன்மை என அழைக்கப்படுகிறது.
    குழந்தைகளின் பேதமற்ற,மனமற்ற தூய்மையான நிலைமையின் காரணமாகவே குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் எனும் வழக்கும்,மீண்டும் குழந்தையாகுபவர்களுக்கே இறைவனின் ராசியத்தில் இடமுண்டு என்று ஏசுவும் கூறிஇருப்பார்.
    (நான் உங்களிடம்பேச ஆரம்பித்து அதை பாதியில் முடிக்க இயலாதுநீண்ட தூரம் வந்துவிட்டேன் என்பதை உணர்வேன்.எனினும்எந்நிலையில் நிறுத்தினாலும் நிறைவுசெய்யாமல் விட்டுவிட்ட உணர்வு தோன்றியதால்இது தவிர்க்க இயலாது போய்விட்டது.)

    சம்பவம் ஒன்றுதான்.
    இவர்களின் உணர்வை எது தீர்மானிக்கிறது?
    மனமா?
    சமூகமா?

    உங்களின் பதிலில் உள்ள இரண்டாவது கேள்விக்கான எனது பதில்:
    மனம் சமூகத்தை உருவாகுகிறது.சமூக நியதியை உருவாக்குகிறது.
    மனிதர்களின் மனம் உருவாக்கியதே சமுதாய நியதிகள். மனம் மாறும்போது சமுதாய நியதிகளும் மாறும். ஆனால் பொதுவில் எதுவும் பெரும்பான்மை பார்த்தே மாற்றத்திற்குள்ளாகிறது.தவறாகவே இருந்தாலும் பெரும்பான்மையானோர் செய்ய ஆரம்பித்துவிட்டால் அது சமுகத்தில்சரியான நியதியாகிவிடுகிறது. பெரும்பான்மையானோரின் மனம் செய்யும் தவறு நாளடைவில் ஒரு சமுகத்தின் நியதியாக மாறிவிடுகிறது. நீங்கள் குறிப்பிட்ட திருமணதிற்கு முந்திய கருவுருதலும்,அவர்களின் குடும்ப அலறுதலும் கூட அத்தகைய வரைமுறைமீறிய நிகழ்வுகள் சிறு அளவில் நிகழும்போது மட்டுமே.அதுவே சமூகத்தின் பெரும்பாலான குடும்பங்களில் நடக்க ஆரம்பித்தால் நாளடைவில் சமூகம் மனதின் இத்தகைய எண்ணங்களுக்கு தடைபோடமுடியாது என உணர்ந்துகொண்டு தனது நியதியை மாற்றிக்கொள்ளும்.அங்கீகரிக்கப்பட்ட சிவப்புவிளக்கு பகுதிகள் இதற்க்கு சான்று.
    சிலரது தனிப்பட்ட மனதின் ஆற்றல் தான் பெரும்பான்மைநியதிக்கே சவால் விடும் வகையிலும் அவற்றை மாற்றுமளவிர்க்கு சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.(அது காலத்திற்கேற்ற மாற்றமாகவோ,தெளிவுபெற்ற ஞானதிர்கேற்ற மாற்றமாகவோ இருக்கலாம்).பெரியாரும்,அம்பேத்காரும் அதற்க்கு ஒரு சான்று.

  4. “மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக , அவர்களது சமூக வாழ்க்கையே அவர்களது சிந்தனையை தீர்மானிக்கிறது.”

    -கார்ல் மார்க்ஸ்

  5. //திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து, ஒரு பெண் கருவுறுகிறாள். குழந்தைக்கு தாயாகப் போகிறாள் என்கிற செய்தி, அவளை அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவளுடைய தாயும் மகிழ்ச்சி அடைகிறாள். கணவன், கணவனின் குடும்பம் என்று எல்லா உறவினர்களுக்கும் கருவுற்றுச் செய்தி சொல்லப்படுகிறது. குடும்பமே விழா எடுத்து குதூகலிக்கிறது.

    இதே சம்பவத்தை கொஞ்சம் திருப்பிப் போட்டுப் பார்ப்போம். திருமணத்திற்கு முன் அதே பெண் கருவுறுகிறாள். கருவுற்ற செய்தி, கருவுற்றப் அந்தப் பெண்ணையே திகலடைய வைக்கிறது. அவளுடைய தாய் அவமானத்தால் அலறுகிறாள்//. சம்பந்தப்பட்ட பெண் மனவளர்ச்சி குன்றியவர் என்று வைத்துக் கொள்வோம். கருவுற்றதையே அறிந்து கொள்ளவில்லை என்றால்? இங்கு சமூகம் பற்றிய கவலை, அவமானம் எதுவுமே அவருக்கு இருக்காதல்லவா? ஆக மனம்தானே அவமானத்தைத் தீர்மானிக்கிறது?
    முதல்நிகழ்வின் கொண்டாட்டம், இரண்டாவதின் அவமானம் இரண்டும் தனிமனிதனிடம் ஏற்படுத்தும் மான, அவமான உணர்ச்சிகளை உணர்வது எது? மனம்தானே?
    இருட்டில் ஒரு கயிற்றைப் பார்ப்பவர் அதைப் பாம்பு என்று எண்ணுகிறார். உண்மை விளங்கும்வரை அவருக்கு அது பாம்புதானே? பாம்பு பொய் என்றாலும் அவரது உணர்வில் பொய் இல்லை. கயிறு படமெடுத்ததா? சீறியதா? என்னைப் பார்த்து பயப்படு என்றதா? இங்கு மனம்தானே அச்சத்தை உண்டுபண்ணுகிறது?

    கயிறைப் பாம்பென்று கண்டவர் ஒரு வேளை உண்மையை நிதானமாக அறிவதற்கு பதில் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார் என்றால் அவரைப் பொறுத்தவரை இறுதிவரை அது பாம்பாகவே தானே இருக்கும்? கயிறு என்று அறிய வாய்ப்பே இல்லாமல் போய்விடும் அல்லவா? உலகம் மாயை என்ற கொள்கையை இதைவிட அழகாக என்ன உதாரணம் கொண்டு விளக்க முடியும்? ஆதி சங்கரர் சொல்லவரும் பொருளை உணராத/உணர விருப்பமில்லாதவர்களுக்கு அவர் உலப்புவதாகவே தோன்றும். (உண்மையை அறியாமல் ஓடிவிட்டவருக்குக் கடைசிவரை கயிறு பாம்பாகவே தோன்றுவதுபோல்)

Leave a Reply

%d bloggers like this: