தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

family.jpg 

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தான் அவன். பல டாக்டர்களைப் பார்த்தாகி விட்டது. குணமாகவில்லை.
குடும்ப நண்பர் ஒருவர் வந்து சொன்னார்;
‘‘இந்த நோய்க்கு இந்த டாகடர் சிறப்பாக சிகிச்சை அளிப்பார். இவரைப் போய் பாருங்கள். நிச்சயம் நோய் குணமாகும்” என்றார்.

அவனை அழைத்துக் கொண்டு அந்த டாக்டரிடம் நம்பிக்கையோடு போனது குடும்பம். அவனைப் பரிசோதித்த பின் டாக்டர் சொன்னார்,
‘‘அறுவை சிகிச்சை செய்தால், நோய் குணமாக 90 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. 10 சதவீதம் குணமாகாமல் போகவும் வாய்ப்பிருக்கு ஆனா ஒரே வழி அறுவை சிகிச்சைதான். அதைக் கண்டிப்பாகவும், அவசரமாகவும் செய்தே ஆக வேண்டும்’’ என்றார்.

‘‘அதுக்கு எவ்வளவு செலவாகும் டாக்டர்?’’ வார்த்தைகள் நடுங்கக் கேட்டார். அவனின் தந்தை.

‘‘மூன்று லட்சம்தான்’’ ஒரு வியாபாரியைப் போல் சாதாரணமாகச் சொன்னார் டாக்டர்.

ஒட்டு மொத்த குடும்பமும் இடிந்து போனது.
‘அவனுக்கு வந்திருக்கும் நோய் உயிர் குடிக்கும் நோய்’ என்று தெரிந்த போது, அதிர்ந்ததைவிடவும் அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது அந்தக் குடும்பம். வீடு திரும்பிய பின் அவன் சிகிச்சை குறித்த கலந்துரையாடலில் அவனைத் தவிர்த்து அப்பா, அம்மா,  தங்கை மூவரும் இறங்கினர்.

‘‘என்னடி இது? மூணு லட்சம் ஆகுங்குகிறானடி டாக்டர்? என்ன பண்றது?’’ கேள்வியை அவன் தாயை நோக்கி வீசினார் தந்தை.
‘‘என்ன பண்றது? நம்மகிட்ட அவ்வளவு பணம் ஏது? இருக்கிற நகையை வித்துப் பணமாக்கினாலும் அவ்வளவு தேறாதே’’ அழுது கொண்டே தாயும் ஒரு எதிர்கேள்வியை வீசினார்.

‘‘நகையை வித்து வாற்ரபணம், பேங்குல இருக்கிற பணம், கொஞ்சம் கடன்னு வாங்கி, மூணு லட்சத்தைப் பொரட்டிடலாம். ஒரு வேளை குணமாகாமப் போச்சுன்னா, என்னடி பண்றது? அந்தப் பணம் எல்லாம் போன பிறகு இவ கல்யாணத்தை எப்படி நடத்துறது?’

தந்தையின் இந்தக் கேள்விக்கு, தாயிடம் இருந்த பதில் இல்லை. ‘ஓ’ என்ற அழுகை சத்தமே கேட்டது. தங்கை அமைதியாக அழுதாள்.
கடைசியாக, கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ‘சிகிச்சை அளிப்பதல்லை’ என்று முடிவுக்கு வந்தது அந்தக் குடும்பம்.

ஆம், அவர்கள் ஆசையாய் வளர்த்த அன்பு மகனின் – மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடுத்தரவர்க்கம் இப்படித்தான், முக்கியமற்ற விஷயத்திற்காக முக்கியமான விஷயத்தைக் கைவிட்டுவிடும்.

திருமணம் முக்கியமற்ற விஷயமா? திருமணம் முக்கியமற்ற விஷயமல்ல.
திருமணத்திற்கான செலவுதான், முக்கியமற்ற விஷயம். நடுத்தர வர்க்கத்தின் மிகப் பெரிய பிரச்சினையே தண்ட செலவுகளை உள்ளடக்கிய திருமண முறையும், வரதட்சணையும் தான்.
இரண்டு நாட்கள் நடக்கும் திருமணத்தில் இவர்கள் கட்டிக் காப்பாற்ற நினைப்பது வெட்டி கவுரவத்தையே.

எந்த கவுரவத்தைக் காப்பாற்ற கடன் வாங்கித் திருமணத்தை நடத்தி முடிக்கிறார்களோ, பின்னால் அந்தத் திருமணக் கடனே , அவர்களின் கவுரவத்தை கேள்விக்குள்ளாக்கி, அவமானப்படுத்தி, கைகொட்டி சிரிக்கும்.

ஆணாதிக்கம் – வரதட்சணை என்கிற இந்த முரட்டுப் பந்தை எவ்வளவு பலம் கொண்டு பெண்கள் மீது வீசியடித்ததோ, வீசிய அதே வேகத்தில் திரும்ப ஆண்களையும் அது வீழ்த்திவிடுகிறது.

ஆம், நம் சமூக அமைப்பில் நான்கு பெண்களைப் பெற்ற நடுத்தர வர்கத் தகப்பன் முகத்தில் சிரிப்பைப் பார்க்கமுடியுமா?
இரண்டு தங்கைகளின், அண்ணனிடம் இளமைக்குரிய குறும்புகளைப் பார்க்கமுடியுமா?
இந்த வரதட்சணையும் அதிகமாக ஆட்டம் காட்டுவது நடுத்தர  வர்கத்திற்கேதான்.

எல்லா வகையிலும் தன் பெண்ணைவிட அதிகத் தகுதிகள் கொண்ட ஆணை வலைவீசித் தேடுவதே இவர்களின் வழக்கம். பெண்களுக்கும் அப்படித்தான்.

தன்னைவிட அறிவாளியாக, அதிகம் படித்தவனாக, அதிகம் சம்பாதிப்பவனாக, தன்னைவிட உயரமானவனாக உள்ள ஒருவனே தனக்குக் கணவனாக வரவேண்டும் என்கிற அடிமைப்புத்தியின் அடிப்படையிலேயே கனவு காண்பவள்.
அந்தக் கனவு வசப்படுவதற்காக தன் கல்யாண காலத்தை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் நீடித்துக்கொள்வார்கள்.

இந்த மனோபாவம் கொண்டதினாலேயே நடுத்தர வர்க்கத்துப் பெண், எந்த அளவிற்கு அதிகம் படிக்கிறகளோ, அதைவிட அதிகம் படித்த ஆணை நிறைய விலை கொடுத்து வாங்கவேண்டிய கால் விலங்கை அவளே பூட்டிக் கொள்கிறாள்.

தன் சம்பாத்தியம் என்ன? தன் தேவை என்ன? தன்னிடம் உள்ள பொருள் தனக்குப் போதுமானதா? என்கிற எண்ணத்தை விடவும், அடுத்தவரோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு ஓய்ந்து போகிற வர்க்கம் இந்த நடுத்தர வர்க்கம்.

இந்த ஒப்பீட்டில் அம்மா, அப்பா, மகன், மகள், தம்பி, அக்கா, அண்ணன், தங்கை, மனைவி, கணவன் என்று எந்த உறவுகளையும் இது விட்டு வைக்காது.

‘‘தங்கச்சி கல்யாணத்திற்கு மட்டும் எவ்வளவு நகை போட்டீங்க. கச்சேரி எல்லாம் வைச்சிங்க. என்னுடைய கல்யாணத்தை மட்டும் ஏம்மா பிச்சைக்காரி கல்யாணம் மாதிரி பண்ணிங்க’’ என்று கேள்வி கேட்கும்.
தன் நலனே பிரதானம் என்று வாழ்கிற வர்க்கம் இது.

இந்த உலகின் பெரிய பிரச்சனையே, ‘தன் வீட்டில் இன்னும் ஃபிரிட்ஜ் இல்லை. ஃபிரிட்ஜ் இருந்தால் வாஷிங் மிஷின் இல்லை. தனக்கு மோட்டார் சைக்கிள் இல்லை’  என்று இப்படி ஏதாவது ஒன்று ‘இல்லை’ என்பதே மாபெறும் கவலையாக உள்ள சமூகம்.

இப்படி அர்த்தமற்ற விஷயத்திற்காக உயிரே போவதுபோல் கவலைப்படுவதும், சின்னச் சின்ன விஷயத்திற்காக சண்டையிட்டுக் கொள்வதும், நடுத்திர வர்கத்தின் மிகப் பெரிய துயரம்.

மனித வாழ்வின் துயரம் என்ன என்பதை சரியாகப் புரிந்துக் கொள்ளாத வர்க்கம்.

உண்மையில் துயரம் என்றால் என்ன? இதோ இந்தப் பெண்ணின் வாழ்க்கையே சாட்சி.

women-workers.jpg
ஊருக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்து விட்டு, வீதியில் வாழ்கிற மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களில் ஒரு பெண். அவள் நிறைமாத கர்ப்பினி. நிறைமாத கர்ப்பத்தோடே கல் உடைத்தல், மண் சுமத்தல் என்று கடுமையான உடல் உழைப்பில் இருந்த பெண் அவள்.

கணவன், வேறு ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அன்றும் அவள் வழக்கம் போல் வேலைக்கு சென்று தன் இருப்பிடமான சாலைக்குத் திரும்பியிருந்தாள்.

இரவு நடுநிசியில் பிரசவவலி. யார் உதவியும் இன்றி ஒரு அனாதையைப்போல் பிரசவமான அவளுக்கு,
‘நீ அனாதை இல்லையம்மா, உன் உயிரின் உறவு நான் இருக்கிறேன் ’ என்று தன் அழுகையால் பதில் சொல்வது போல் குழந்தை பிறந்தது. மயக்கமானாள் அந்தத் தாய்.

நேரம் கழிந்தது. மயக்கம் தெளிந்து ஆசையோடு தன் குழந்தையை பார்க்கிறாள். குழந்தையின் தலையை நாய் கடித்துப் போட்டிருந்தது. பிரசவ வலியால் அவள் இட்ட கூக்குரலை விடவும், பல மடங்கு அதிகமாகக் கதறினாள்.

ஆனால், அவள் கதறலைக் கேட்பதற்குக் காதுகள் இல்லை. அந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க மனிதரும் இல்லை. கடவுளும் இல்லை. ஆம், அந்த இரவு விடிந்தது. அவளுக்கு மட்டும் இருண்டது.

இந்த சோகத்தால் மனம் உடைந்து அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டாள். பழையபடி தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

வெளியூர் சென்று இருந்த கணவனும் வந்து சேர்ந்தான். அவள் வாழ்க்கை நம்பிக்கையோடு நகர்ந்தது. விசேஷம் என்னவென்றால்,
அவள் மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.

வருமை தருகிற துயரங்களோடு அவள் வாழ்க்கை நகர்ந்தாலும், நம்பிக்கையோடு இருக்கிறாள். அதனால் தன் வாழ்க்கையை அதிகம் நேசிக்கிறாள்.

ஆம், இன்பமானாலும் துன்பமானாலும் மனித வாழ்க்கை ரசனைக்குரியதல்லவா? சாகும்வரை சலிப்போடு வாழ்வது சரியா?     

 -வே. மதிமாறன்.

‘தினகரன் வசந்தம்’ இதழில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை

11 thoughts on “தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்”

  1. மனதை உருகவைக்கும் சம்பவம். இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும், ஏழ்மையை போக்கும் நியாயப்பாடுகளுடன் கூடிய சட்டங்கள் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு, அதற்கு செயல் வடிவம் கொடுக்கப்படவேண்டும்.

  2. அழுது தோற்பதே பெண்ணின் வெற்றி! இந்தக் கொடுமையை நான் கவிதையாக வடித்துள்ளேன். இந்த நிலை மாற பெண்கள் மனம் வைத்தாலன்றி சாத்தியமில்லை!

    பெண்ணே அழுது தோற்காதே

  3. குடும்பம் என்ற ஏற்பாடே சாதியையும் , பெண் அடிமைத்தனத்தையும் கட்டிக்காப்பத்துவதர்காகவே ஏற்படுத்தப்பட்டது. அதில் திருமண என்பது ஒரு நுழைவு வாயில். இந்த குடும்பம் என்ற அமைப்பு நமக்கும் சமூகத்திற்குமான உறவை உடைத்து, தன் குடும்பம், தன மக்கள் என்று சுயநலத்துடன் நம்மை வாழ நிர்பந்திக்கிறது.

    அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் நாம் மட்டும் சொத்து சேர்த்து, வீடு நிறைய பொருட்ட்களை நிறைத்து நாம் மட்டும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி வளர்த்துக்கொண்டிருக்கக்கூடிய இந்த குடும்பம் என்ற அமைப்பை சீர்திருத்த வேண்டும் இல்லையேல் ஒழிக்க வேண்டும்.

    சமத்துவத்தை நிலை நிறுத்தி , மனிதத்தை வளர்த்தெடுத்து சமூக அக்கறையுடன் கூடிய ஒரு அமைப்பே சிறந்த ஒன்றாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். அப்படி ஒன்றை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

Leave a Reply