‘எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?’ பாரதியின் ஆவேசம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 12            

dravidian_1779.jpg

(நீதிக்கட்சியின் முதல் மாநாட்டில் தியாகராயர், நடேசன், மாதவன் நாயர், பனகல் அரசர் இவர்களுடன் நீதிக்கட்சி பிரமுகர்கள்)

மூன்றாவது அத்தியாயம்

“வேதியராயினும் ஒன்றே – அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே”

-இது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர் பிரிவையே குறிக்கிறது.

“வேதம் நிறைந்த தமிழ் நாடு – உயர்

வீரம் செறிந்த தமிழ் நாடு

வேதம் என்பது பார்ப்பனர்கள். வீரம் என்பது பார்ப்பனரல்லாதவர்கள் என்றே இது அர்த்தமாகிறது. இப்படி பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரிவை சாதகமான நேரங்களில் பெருமையோடு நுட்பமாக உணர்த்துகிற பாரதி,நீதிக் கட்சித் தலைவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதவரின் உரிமையைப் பேசியபோது – கோபமுற்று கமண்டலத்தில் இருந்து ‘மந்திர ஜலம்’ எடுத்துத் தெளித்து சாபிமிடுகிறார்:

“இந்த ‘பிராமணரல்லாதார் கிளர்ச்சி’ கால கதியில் தானே மங்கி அழிந்துவிடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற அய்க்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலியவற்றில் கவுரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்றே ஆவலுடையவர்களே இக்கிளரச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.”

1906இல் முனிசிபல் சார்பாக சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்ட மாதவன் நாயரை ‘இந்தியா’ பத்திரிகை கட்டுரையில், தியாகி, அறிவாளி என்று போற்றிய பாரதி, 1916க்குப் பிறகு ‘பார்ப்பனரல்லாத கிளர்ச்சி’ யில் மாதவன் நாயர் பங்கெடுத்த பின் அவரையும் சேர்த்தே இங்கு திட்டுகிறார்:

“திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலே சைவ வேளாளர் என்ற வகுப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம் சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நம்முடைய சைவ வேளாளருள்ளே ‘அல்லாதார்’ கிளர்ச்சியைச் சேர்நதிருப்பவருங் கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர் பிரிவுக் குணமுடையோரென்றும், மற்ற வகுப்பினருடன் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களேயல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியர்களுடன் தாம் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள்.

‘பிராமணரல்லாதார்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது.

ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர்.

இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது.

எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம், சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.

‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே, இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்.”

-என்று பஞ்சாயத்துப் பேசுகிற மகாகவி,

பார்ப்பனர்கள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டபோது – நானாடவில்லையம்மா…. சதையாடுது…’ என்று பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு ‘டேய்… எவன்டா அவன் எங்க ஆளுங்கள அடிச்சது’ என்று எகிறிக் குதிக்கிறார்.

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் இந்து மதவிரோதிகள் பேச்சைக் கேட்கலாமா?

 நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற இந்துக்கள் கும்பிடவில்லையா?”

இந்த வரிகளைப் பின் தொடர்கிற வரிகள், ஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல, ‘தாழ்த்தப்பட்ட மக்களே உண்மையான இந்துக்கள்; அவர்களைக் கைதூக்கி விட வேண்டும்’ என்ற கதையெல்லாம் வருகிறது.

சுப்பிரமணிய பாரதியின் இந்த சிந்தனை, குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

7 thoughts on “‘எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?’ பாரதியின் ஆவேசம்”

 1. ஒரு பொருப்பான, நேர்மையான, மனசாட்சி உள்ளவர் என்று கூறிக்கொள்ளும் நீங்கள், ஒரு தவறான வழி காட்டியாக, வன்முறையை தூண்டும்/ஆதரிக்கும் விதமாக எழுதுவது, மிகவும் வறுத்தத்தை அளிக்கிறது.
  அன்றைய நிலைமை வேறு… இன்றைய நிலைமை வேறு… ஒரு தலித் குழந்தைக்கும், ஒரு பார்பனக் குழைந்தைக்கும் என்ன வேற்றுமை இருக்க முடியும்?

  எனது தலித் சகோதரர்கள், எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் காலம் இது.
  எத்துணை IPS and IAS, டாக்டர், எஞ்சினீயர்…..

  (நான் எப்பொழுதும் ஜாதீயத்தை எழுத கூடாது என்று எண்ணியவன்… இங்கு தலித் என்றும் பார்பனன் என்றும் எழுதியதற்கு வெட்கப் படுகிரேன்)

  “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற உலகத்திற்கு கற்றுக் கொடுத்த தமிழினம் இது.

  ஆக்கப் பூர்வமான பல படைப்புகள் தரும் நீங்கள், சில சமயம் பெருத்த ஏமாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.
  “ஜாதி இரண்டொழிய வேறில்லை – ஆண், பெண். அவர்கள் இருவரும் சமமானவர்கள். ஆணில்லையேல், பெண்ணில்லை. பெண்ணில்லையேல், ஆணில்லை”

  தோழரே, பேனாவின் முனை மிக வலிமையானது… அதனை தவறாக உபயோகிக்கும் போது, அது பேனாவுக்கும் அழகு அல்ல, உங்களுக்கும் அழகு அல்ல…..

  மன்னிக்கவும். இது உங்களுக்கு மட்டும் அல்ல… இதனை போல் மற்றவர்களும் எழுதியிருந்தால் அவர்களுக்கும் தான்…

 2. திரு செந்தில்நாதன் செல்லம்மாள் அவர்களுக்கு,

  தோழரே,

  பேனாவின் முனை மிக வலிமையானது…
  அதனை தவறாக உபயோகிக்கும் போது,
  அது பேனாவுக்கும் அழகு அல்ல,
  உங்களுக்கும் அழகு அல்ல…..

  பராசத்தி

 3. செந்தில் நாதன் செல்லம்மாள் அவர்களுக்கு,

  ஜாதீயைப் பற்றி பேச வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இன்னும் நாம் நாட்டில் இரட்டை குவளை (டம்ளர்) முறை மட்டும் இல்லாமல் இரட்டை பெஞ்ச் முறையும் உள்ளதே… அதற்கு பதில் என்ன சொல்கிறீர்கள்? அது உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா?

  கீழ் கண்ட வலையை பாருங்கள்.

  http://www.athirai.blogspot.com/

  என்றைக்கு பார்ப்பனர்கள் பூநூலை கழட்டி எறிகிறார்களோ? அன்றைக்குத்தான் சாதி பற்றி பேசாமல் சமத்துவம் பற்றி பேச இயலும்.

  அது வரை பாரதியாக இருந்தாலும் சரி… பரதேசியாக இருந்தாலும் சரி….சாதி விமர்சனத்துக்கு உட்பட்டுதான் ஆவார்கள்.

  நீங்கள் மறு மொழி எழுதுவதற்கு பதிலாக,சாதியை ஒழிக்க சிறு துரும்பையாவது அசையுங்கள்.

Leave a Reply