“கிராமங்கள் ஒழிக”

g66868_u42290_dalit_girl_2.jpg 

                        – வே. மதிமாறன்

தீண்டாமையை கடைப்பிடிப்பதில் பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்ககளிடம் பெருமையோடு சுயநலம் சார்ந்த ஒரு ‘தந்திரம்’ இருக்கிறது.

அந்த தந்திரம் சில நேரங்களில் நாயைப் போல் குழைந்து வாலை ஆட்டிக்கொண்டும், பல நேரங்களில் தன்னை விட பலவீனமான விலங்குகளிடம் வீரம் காட்டும் புலியைப் போல் பாய்ந்து குதறவும் செய்கிறது.

ஜாதி இந்துக்கள், ஊரின் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவரை இறங்க அனுமதிப்பதில்லை. ஊர் குளம் என்பது எந்த ஜாதி இந்துக்கும் தனிப்படட சொத்துக் கிடையாது. அது ஊரின் பொதுச் சொத்து.

ஊரின் பொதுச் சொத்தில் தீண்டாமையை தீவிரமாக கடைப்பிடிக்கிற ஜாதி இந்து, தன் தனிசொத்தில் அதை இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? ஆனால் பெரும்பான்மையாக தன்னுடைய தனிச் சொத்து இடங்களில் அவன் தீண்டாமையை கடைப்பிடிப்பதில்லை.

ஆம், ஊரின் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறங்க எதிர்ப்பு தெரிவிக்கிற ஜாதி இந்துதான், தன் சொந்த நிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறங்கி வேலை பார்ப்பதற்கு, அவர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு கூலி கொடுத்து அழைத்துவருகிறான்.

தன் வீட்டுத் திண்ணையிலோ அல்லது ஊரின் தேநீர் கடையின் பென்ஞ்சிலோ தாழ்த்தப்பட்டவரை தனக்கு சமமாக உட்கார அனுமதிக்காத ஜாதி இந்து, ஊருக்குள் வரும் பஸ்சில் ஓடிபோய் ஏறி தாழ்த்தப்பட்டவருக்கு அருகில் இடம் பிடித்து அவரை உரசிக் கொண்டு உட்காருகிறான், அதுபோலவே திரையரங்கிலும்.

ஊர் பொதுக்குளத்தில் தூர் வாருவதற்கும், குளம் வெட்டுவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்திக் கொள்கிற ஜாதி இந்துக்கள், குளத்தில் தண்ணீர் வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மக்களை இறங்க அனுமதிப்பதில்லை.

ஒரு ஜாதி இந்து தன்னுடைய தேவைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தீண்டாமையை கைவிடுகிறான். தன்னுடைய தேவகைள் எங்கெல்லாம் பாதிக்கப்படுவதில்லையோ, தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பு அல்லது உதவி அவனுக்கு எங்கெல்லாம் கட்டாயமாக தேவையில்லையோ அங்கெல்லாம் அவன் தீண்டாமையை கடைப்பிடிப்பதின் மூலமாக தன்னை பெரிய மனிதனாக, தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் தகுதி வாய்ந்தவனாக கருதிக் கொள்கிறான்.

எந்தவிதமான பொருளாதாரக் காரணங்களும் இல்லாமல் வெறும் ‘கருத்தே’ ஒரு தனி ஜாதி இந்து, கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை விட ‘உயர்ந்தவன்’ என்கிற உளவியல், அவனுக்கு இலவசமான அதிகார மயக்கத்தைத் தருகிறது. தீண்டாமையை இழப்பது, தன் அதிகாரத்தை இழப்பதாகவே அவன் உணர்கிறான்.

குறிப்பாக – கோயில் திருவிழா, சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் ‘பிற்படுத்தப்பட்ட இந்து ஜாதி திமிர்த்தனத்தின்’ அடையாளங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வடிவங்கள். அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் ‘கூத்தரப்பாக்கம்’ ‘கண்டதேவி’ போன்ற கோயில்களில் தேர் வடம் பிடிப்பதைக் கூட ஜாதிஇந்துக்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ‘தன் வழிபாடு கெட்டாலும் பரவாயில்லை, அவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது’ என்று கோயிலையே இழுத்து மூடுகிறான்.

இந்த அநீதியைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை ‘தியாகம்’ செய்யக்கூட அவன் தயாராகிறான். இந்த அநீதிக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்துகிற வன்முறையைதான் தன்னுடைய ‘வீரமாக’ அடையாளப்படுத்துகிறான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது எந்த ஜாதி எல்லாம் நேரடி வன்முறையில் இறங்குகிறதோ, அந்த ஜாதிக்காரர்களைத்தான் “தைரியமானவர்கள், வீரமானவர்கள்” என்று ‘உயர்ஜாதி’க்காரர்கள் ‘ஏத்தி’ விடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

கோயில்களில் இவ்வளவு திமிர்த்தனமும், ஊரின் ‘டீ’ கடையில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கிளாசும் வைக்கிற ஜாதி வெறி பிடித்த இந்துக்கள், சாராயக்கடையில் தாழ்த்தப்பட்டவர்கள் குடித்துவிட்டு வைத்த மிச்ச சாராயத்தை நக்கிக் குடிக்கிறார்கள் என்பது நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.

ஆக, தீண்டாமையை எதிர்த்து தாழ்த்தப்பட்டவர்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

முழுமுழுக்க அதில் தண்டணைக்குரியவர்களும், திருந்தவேண்டியவர்களும், மனம் மாற வேண்டியவர்களும் ஜாதி இந்துக்கள்தான்.

                              ***

தீண்டாமைக்கு எதிராக முற்போக்காளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், நகரமயமாக்கல்தான் தீண்டாமையை தீவிரமாக விரட்டும்.

ஏனென்றால், கிராம அமைப்பு முறைதான் தீண்டாமையை பேணி காக்கிறது.கிராமங்களில் இருந்து வெளியேறி நகரத்தில் குடியேறிய தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முன்னேறி இருக்கிறார்கள்.

நகரத்தில் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்கிற தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் சொந்த கிராமத்துக்கு செல்லும்போது, எந்த கல்வியறிவும் அற்ற முட்டாள் ஜாதி இந்துவால் கூட அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிவும், சுயமரியாதையும், வசதியும், சமூக அந்தஸ்தும் ஜாதி இந்துவின் ஆத்திரத்திற்கு ஆளாகி அவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த அனுபவம் உலகமே வியந்து பார்த்த டாக்டர் அம்பேத்கருக்கே ஏற்பட்டிருக்கிறது.அதனால்தான் காந்தியார், “கிராமங்கள்தான் இந்தியாவின் உயிர் நாடி, கிராமரஜ்ஜியம் இருந்தால்தான் ராமாராஜ்ஜியம் வரும்” என்றார்.

அதற்காகவேதான் பெரியார், “கிராமங்கள் ஒழிக” என்றார்.

 மார்க்சிய-பெரியாரிய-பொதுவுடமை கட்சியின் ‘சிந்தனையாளன்’ மாத இதழின் 2008 தை பொங்கல் மலரில் எழுதியது.

6 thoughts on ““கிராமங்கள் ஒழிக”

  1. மார்க்ஸ் கூறியுள்ளது போல முதலாளித்துவம் தீண்டாமையை ஒழிக்கும், ஜாதி இந்துக்கள் உள்வியல் ரீதியாகவும் இப்படி செய்கிறாகள், பிராமணன் போல நாமும் செய்து பார்போம் என்ற
    எண்ணம் தான்.

  2. /தீண்டாமைக்கு எதிராக முற்போக்காளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், நகரமயமாக்கல்தான் தீண்டாமையை தீவிரமாக விரட்டும்.

    ஏனென்றால், கிராம அமைப்பு முறைதான் தீண்டாமையை பேணி காக்கிறது.கிராமங்களில் இருந்து வெளியேறி நகரத்தில் குடியேறிய தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முன்னேறி இருக்கிறார்கள்.

    //

    அப்படியா?

    விந்தையான செய்தியாக இருக்கிறது. ஏதோ நகரங்களில் எல்லாம் சாதி ஒழிந்து விட்டது போன்ற கருத்தை தருகிறது.

    இது உண்மையில்லை. நகரங்கள் எனப்தை உற்பத்தி மையப்படுத்தப்பட்ட பகுதிகள்(கிராமங்களை ஒப்பிடும் போது). ஆக இந்தியா போன்ற நாடுகளில் சாதியத்தின் அடிப்படையான கிராம பொருளாதாரம் என்பதை உடைத்து நொறுக்காமல் நகர்மயமாக்கம் என்ற குறுக்கு வழியை பயன்படுத்தினால் அது சாதியை வேறு ஒரு உயர்ந்த பரிணாமத்திற்க்குத்தான் கொண்டு செல்லும்.

    அதாவது, சேரிகளும், மயிலாப்பூர்களுமாகவே நகரங்கள் உருவாகுமே அன்றி சாதி ஒழியாது.

    ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையாக அது மாறியிருக்குமே அன்றி அது எந்த வகையிலும் சாதி என்ற சமூக பொருளாதார கட்டமைப்பின் அடிப்படையை இம்மி அளவு கூட இழக்காது.

    ஆம் இதற்க்கு இணையாக பண்பாட்டு அடக்குமுறை வடிவமும் கூட அதன் வடிவத்தில் மாறிவிடும். (எ-கா: பழைய நிலபிரபு இருக்க மாட்டான் ஆனால் தீண்டாமை வேறு வடிவில் இருக்கும்).

    இது குறித்து சமீபத்தில் வட மாநிலங்களில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு மற்றும் தலித் விவசாயின் குடும்பத்தை கோடூரமாக கொன்ற சாதி இந்துக்களின் செயலை ஒட்டி நடந்த கலவர்ங்களும் அதனை அரசு கோடூரமாக ஒடுக்கியதையும் ஒட்டி ஆனந்த தெல்தும்ப்டே ஒரு கட்டுரை எழுதியிருந்தார் அதனை படித்து பார்த்தால் மறுகாலனிய பொருளாதாரத்திற்க்கும் சாதியின் பரிணாம வளர்ச்சிக்கும் உள்ள உறவு குறித்து சிறிது தெளிவு கிட்டும்.

    சாதி ஒழிப்புக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது என்பதை குறிக்கவே இதை வலியுறுத்துகிறேன். அது நிலத்தின் மீதான உரிமையில்/கிராம வளங்களின் மீதான உரிமையில் சாதி இந்துக்களுக்கு ஆப்பு அடிப்பதில்தான் ஆரம்பிக்கீறது.

    அசுரன்

  3. //சாதி ஒழிப்புக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது என்பதை குறிக்கவே இதை வலியுறுத்துகிறேன். அது நிலத்தின் மீதான உரிமையில்/கிராம வளங்களின் மீதான உரிமையில் சாதி இந்துக்களுக்கு ஆப்பு அடிப்பதில்தான் ஆரம்பிக்கீறது. //

    மாறாக வளங்களின் மீதான் உரிமையை வேறு வடிவில் மாற்றி(நகர்மயமாக்கம்) அதே ஆதிக்க சாதிகளின் கையில் கொடுப்பதால சாதி ஒழிந்துவிடும் என்று சொல்வது நமது பார்வை தெளிவின்மையை காட்டுகீறது.

    அசுரன்

  4. //மார்க்ஸ் கூறியுள்ளது போல முதலாளித்துவம் தீண்டாமையை ஒழிக்கும், ஜாதி இந்துக்கள் உள்வியல் ரீதியாகவும் இப்படி செய்கிறாகள், பிராமணன் போல நாமும் செய்து பார்போம் என்ற
    எண்ணம் தான்.
    //

    முதலாளித்துவம் சரிதான். எந்த ஊரு முதலாளித்துவம்?

    இந்திய முதலாளியா? பன்னாட்டு தரகு முதலாளியா? டாடா அம்பானி பிர்லா IBM ford இந்த கும்பலெல்லாம் சாதி ஒழிப்பில் என்ன சாதித்து காட்டியுள்ளனர்?

    உண்மையில் சாதியம் அதன் வேறு ஒரு பரிணாமத்திற்க்கு செல்வதைத்தானே தமது கம்பெனியில் பெரும்பான்மையாக ஆதிக்க சாதியினரை வேலையில் இருப்பதன மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்?

    அது எப்படி முதலாளித்துவத்தால் சாதி ஒழிப்பை கொண்டு வந்துவிட முடியும்?

    இதே டாடா அம்பானி பிர்லா IBM Ford கும்பலுக்கு காண்டாராக்ட் எடுத்து வேலை செய்யும் தேசிய முதலாளி தனது உற்பத்தி பட்டறையில் என்ன சாதியை ஒழித்து விட்டான்?

    மேற்பார்வையாளராக ஒரு தலித் இருக்கும் பட்டறையில்(இருப்பதாக வைத்துக் கொள்வோம்) ஒரு வன்னியனால் வேலை செய்ய முடியும் என்பது எத்தனை இடத்தில் சாத்தியம்?

    தனது சொந்த உரிமைகளையே பாதுகாக்க வக்கில்லாத தேசிய முதலாளியால் எந்த வகையிலும் நிலபிரபுத்துவ சாதியை எதிர்த்து விட்டு தனது தொழிலை நடத்தி விட முடியாது. நிலவுகின்ற நிலபிரபுத்துவ பண்பாட்டுக்கு உட்பட்டே அவன் வாழ்கிறான். அதனால் இந்தியாவில் முதலாளித்துவம் சாதியத்தை ஒழித்து விடும் என்பது ஒரு பகல் கனவு.

    அசுரன்

  5. தோழரே! வணக்கம்,

    நகரமயமாக்கல் மட்டும் சாதியை ஒழிக்கும் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. நகரம் ஒன்றும் சாதியை ஒழிக்கும் மாபெரும் ஆற்றல் அல்ல, நகரம் சாதியை ஒளித்து வைத்திருக்கும் ஆற்றலை மட்டுமே தற்போது கொண்டுள்ளது. சென்னையில் தாழ்த்தபட்டவர்களுக்கு வீடு தர தயங்குவார்கள் என்று அங்கு வசிக்கும் என் உறவினர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். நகரங்களிலும்கூட , வாடகைக்கு ஆட்கள் தேடும் நகரவாசிகள் தன் சாதி நபர்கள் கிடைத்தால் பிற சாதிக்கார்ர்களுக்கு தரத்தயங்குவார்கள் என்பதே உண்மை. நான் வசிக்கும் மும்பை நகரிலும் இது உண்மை.

    நகரங்களில் சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்(மக்கள் வளருகிறார்களா என்பது வேறு! ). ஒவ்வொரு குறிப்பிட்ட சாதியினரும் சங்கங்கள் வைத்து குறைந்துபட்சம் தம் சாதிகார்ர்களையாவது வளர்த்தால் நம் பணி குறையும், ஆனால் சங்கங்கள் வைத்து சாதி திமிரை மட்டும் வளர்த்து விட்டு விட்டன.

    பார்ப்பன எச்சிலான சாதியை மட்டுமில்லாது, உண்டு கொழுக்கவும் பார்ப்பனர்களிடம் கற்றுக்கொண்டு விட்டனர் சாதிசங்கத் தலைவர்கள்.

    நகரங்களில்தான் சாதி தேடி புணரும் சாதித்திருமணங்களுக்கு அமைப்புகள்(எ.கா. Matrimony.com)ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய அளவில் விளம்பரப் படுத்துகின்றனர். குழந்தைகளை படிக்க அனுப்பி வைத்தாலும், தம் சாதியை பெருமையாய் கற்று தருகின்றனர். வேறு சாதிக்கார பையனையோ/பெண்ணையோ காதலித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கின்றனர்.

    படித்த இளைஞர்கள் சாதி ஒழிக்க போராட முன்வராமல், சாதிபெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக் கொண்டு பெருமைப்படுகின்றனர்.(தாழ்த்தப்பட்டவர்கள் கொஞ்சம் விதிவிலக்கு)

    நகரம் சாதிக்கு ஒரு இதமான போர்வையாக மட்டுமே இருக்கிறது.

    ஆதலால், நகரமயமாக்கலோ, கல்வியோ தரும் தற்காலிக மாயையில் விழாமல், விழுப்புணர்வோடு, சாதி ஒழிக்கும் பணியும் விழிப்புணர்வோடு இருந்து தொடர்ந்து போராட வேண்டும் என்பதே என் கருத்து.

Leave a Reply

%d bloggers like this: