நீதிக்கட்சியின் தேசத் துரோகம்?

 

 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 18

ஐந்தாவது அத்தியாயம்

என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!”

“சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்”

“இங்ஙனம் தமிழ்ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர்.நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிட கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு…..”

இப்படி நீதிக் கட்சித் தலைவர்களை தேசத் துரோகிகள் எனறு சகட்டுமேனிக்கு சபிக்கிறாரே சுப்பிமணிய பாரதி, அப்படியென்ன தேசவிரோத செய்கையில் ஈடுபட்டனர் நீதிக்கட்சித் தலைவர்கள்?

காங்கிரஸ்காரர்கள்துப்பாக்கி எடுத்து பிரிட்டிஷ்காரனை விரட்டி, விரட்டி சுட்டதுபோலவும், ‘அய்யோ ஆளைவிட்டாபோதும்’னு வெள்ளைக்காரன் அலறி ஓடியதுபோலவும்,

இந்த நீதிக்கட்சித் தலைவர்கள் மட்டும், பிரட்டிஷ்காரனுக்கு கால் அமுக்கி விட்டு சலுகைகள் பெற்றதுபோல் – பாரதியை பின் பற்றி கதையளக்கிறார்கள், இன்றைய சுப்பிரமணிய பாரதிகளான சோவும் அவாள்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற ஜெயகாந்தனும் இன்னும் பெறத் துடிக்கிற பார்ப்பனரல்லாத புத்திஜீவிகளும்.

அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சட்டத் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு, மாநில சட்டசபையில் குப்பை கொட்ட அலைந்தவர்கள்தானே இந்த காங்கிரஸ்காரர்கள்!

காங்கிரஸ்காரர்களும், இந்த படித்தப் பார்ப்பனர்களும் வெள்ளைக்காரனை எதிர்த்து எப்படி வீரம் செறிந்த போர் புரிந்திருக்கிறார்கள் பாருங்கள்,

“மக்கள் தொகையில் 2 சதவகிதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்களில் அச்சமூகத்து மாணவர்கள் 31 சதவிதம், பட்டதாரிகள் 68.8 சதவிகிதம், பொதுத் துறையில் 48 சதவிகிகதம் உள்ளனர். எஞ்சிய இடத்தில்தான் பெரும்பான்மை மக்களாகிய பார்ப்பனரல்லாதவர்கள், இஸ்லாமியகர்ள், போட்டி போட வேண்டியிருக்கிறது.”
(முனைவர் பி.சரசு எழுதி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளிட்ட, ‘வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் வாழ்வும் பணியும்’ என்ற நூலிலிருந்து இப்புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது)

இந்தச் சூழலில், நீதிக்கட்சித் தலைவர்கள் பார்ப்பனரல்லாதார் உரிமையை எழுப்பியதில் என்ன தவறு?
நீதிக் கட்சியை ஆரம்பித்து அவர்கள் என்ன மாபெரும் அய்யோக்கியத் தனத்தை செய்துவிடடார்கள்?

1916 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் தியாகராயர், பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்:

“நீதிகட்சிக்கு டாக்டர் டி.எம். நாயர் குறிக்கோள்களை உருவாக்கினார். அவற்றில் முக்கியமான இரண்டு;
1. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமூதாயங்கள் ஒவ்வொன்றிலும் கல்வி, சமூகவியல், பொருளியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றமடையச் செய்தனர்.

2. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமுதாயங்கள் எல்லாவற்றின் விருப்பங்களையும் நிறைவேற்றவும், பாதுகாக்கவும் அவர்களின் கருத்துக்களையும் விருப்பங்கள¬யும் அறிந்து ஆராயந்து – அரசாங்கத்திற்கு உண்மையானவையாகவும் தக்க சமயத்திலும் கருத்துக்களை அளிப்பதற்காகப் பொதுச் சிக்கல்களை ஆய்தல்.

மாண்டேகு இந்தியா வந்து சென்றபின் 1919ஆம் ஆண்டில் லண்டனில் ஜாயின்ட் பார்லிமென்டரி குழுமுன் வகுப்புவாரி உரிமை தொடர்பாக சாட்சியம் அளிக்க நீதிக்கட்சியின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் அங்கு சென்றார். சர்.கே.வி. ரெட்டி, சர்.ஏ.ராமசாமி முதலியார், கோகா, அப்பாராவ் நாயுடு ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றனர். புதிய சட்டத்தில் அரசுப் பணிகளிலும் பொது நிறுவனங்களிலும் வகுப்புவாரி உரிமை என்பது மக்கள் தொகைக் கேற்ப அமைந்த விகிதாசார முறையேயாகும் என இக்குழு சாட்சி அளித்தது.

தேர்தல் காலங்களில் பொதுத் தொகுதிகளில் பார்ப்பனரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குழு கோரியது. இக்கோரிக்கை பிரிட்டனிலுள்ள அரசியல்வாதிகட்கு வியப்பை அளித்தது. எனென்னறால், பெரும்பான்மை பார்ப்பனரல்லாத சமுதாயம் சிறுபான்மை பார்ப்பன சமுதாயத்திடமிருந்து பாதுகாப்புக் கேட்பது அவர்கள் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. இதை டாக்டர் டி.எம். நாயரிடம் அவர்கள் அறிவித்தார்கள். அப்போது டாக்டர் நாயர் “ஓர் ஓநாயிடமிருந்து மிகப் பலவான ஆடுகளைப் பாதுகாப்பதில்லையா?” என்று விளக்கினார்.

பிறகு, ஜாயிண்ட் பார்லிமென்டரி குழவினரிடம் நீதிக் கட்சித் தலைவர்கள் சாட்சியம் அளித்தபோது ‘திராவிடச் சங்கம்’ சார்பில் சர்.ஏ. ராமசாமி முதலியார் குழு முன் சாட்சியம் அளித்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் தக்க சார்பாளர்களை அவர்கள் சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர்வாதிட்டார். இந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், நியமனம் மூலம் தாழ்த்தப்பட்டவர்கட்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனச் சட்டத்தில் வகை செய்யப்பட்டது.”

நீதிக் கட்சி பத்தரிகையான ‘திராவிடன்’ 3.10.1917இல்,

“லெஜிஸ்லேடிவ் கவுன்சிகளில் நிறவேற்றுமைகள் இடம் பெற்றால் உடனே பார்ப்பனரின் பெரிய ஓலம் கேட்கிறது. ஆனால், சாதி வேற்றுமைகள் பற்றி பேசப்பட்டால் அவர்கள் அதுபற்றி அறியாதவர்கள்போல் இருந்து விடுகிறார்கள். இந்தியர்களின் பிறப்புரிமை பற்றி இப்பொழுது நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பஞ்சமர்க்கு ஒரு நாயின் பிறப்புரிமை கூட மறுக்கப்படுகின்றது. ஒரு பஞ்சமர் மட்டும் லெஜிஸ்லேடிவ் கவன்சிலில் உறுப்பினராய் இருப்பாரேயானல் அவர் தம் சமுதாய மக்கள் அடைந்துவரும் இன்னல்களை அழுத்தமாக எடுத்துரைக்க மாட்டாரா? இதனாலேயே அரசாங்கதின் ஒவ்வொரு கவுன்சிலிலும் அரசாங்கத்தின் எல்லாப் பொது நிலையங்களிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாம் வறுப்புறத்துகிறோம்.”

என்று எழுதி பாரதி கும்பலின் சாபத்துக்கு ஆளானது.

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

 

 

துறவிகள்

 

யாகவாவிற்கும் சிவசங்கர் பாபாவிற்கும் நடந்த சண்டையை ஒட்டி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆசிரியராக இருந்த  ‘நந்தன்’ இதழக்கு (1998 செப்டம்பர்) நான் அளித்தப் பேட்டி….

 
‘புதுக்கோட்டையில் போலி சாமியார் கைது’
‘மார்த்தாண்டத்தில் போலி சாமியார் கைது’

போலி சாமியார் அப்படிங்கற வார்த்தைப் பிரயோகமே தவறானது.
மாட்டுறவரைக்கும் சாமியார் – மாட்டிக்கிட்டா போலிச் சாமியாரா?
1994க்கு முன்னால் பிரேமானந்தாவும் சாமியார்தான்.
சாமியாரே போலிதான்.
வேணும்னா, சாமியார்களை போலி மனிதர்கள்னு சொல்லலாம்.

சாமியார்களின் பின்னணியில் தொழில் அதிபர்கள் நிச்சயம் இருப்பார்கள். சில சாமியார்களே தொழில் அதிபர்களாகவும் இருப்பார்கள். சிலபேருக்கு சாமியார் வேலையே பெரும் வருமானம் வரும் தொழிலாகவும் இருக்கும்.

இதில்… யாகவா, அவரே ஒரு தொழில் அதிபர்தான்.
சிவ சங்கர் பாபா – இவரோட பின்னணியில் அனுபவ் பவுண்டேஷன்.

ஆன்மீகம், மதம்னு சொன்னாலே மக்கள் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் – சந்தேகப்படறதே பாவம் அப்படிங்கற மனநிலை.
இதுவே சாமியார்களுக்கான வெற்றி.

ஒரு சாமியாரை உருவாக்கி – மீடியாக்கள் மூலமா அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி, அவரோட ஆசியால், அருளால் இந்த நிறுவனம் இருப்பதால், இது நாணயமானது. நேர்மையானது என்கிற நம்பகத் தன்மையை உருவாக்கி தன்னோட தயாரிப்புகளை விற்றுக்கொள்வது – பங்குகளை வாங்கிக் குவிப்பது.
அனுபவ் நிறுவனங்களுக்கு ஒரு சங்கர் பாபா.
பாலு ஜுவல்லர்ஸ்க்கு ஒரு பாம்பன் சுவாமி.

இன்னும் கள்ள நோட்டு அடிக்கிற, என்ஜினியரிங் கல்லூரி நடத்துகிற துறவிகளும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெறும் உள்ளூர் வஸ்தாதுகள்தான்.
இந்திய – சர்வதேச சாமியார்கள் இன்னொரு வகை – சங்கராச்சாரி, சாய்பாபா போன்றவர்கள். இதில் சங்கராச்சாரி சாய்பாபா போன்றவர்ளைப் பற்றி எப்போதுமே எதிரான செய்திகள் வெளிவராது. தவறி வந்தாலும் அது மறுநாளே அமுக்கப்படும்.

ஒரு நாத்திகனுக்குரிய ஆவேசத்தோடு பார்ப்பனரல்லாத சாமியார்களைப் பற்றி செய்திகள் வெளியிடுகிற ஜுனியர் விகடன், சங்கராச்சாரியர்களைப் பற்றிய சர்ச்சையில் இறங்கவே இறங்காது.
பார்ப்பன நலன், தீண்டாமை கடைபிடிப்பு, பெண்களுக்கு எதிரான கருத்து, பிரதமர்கள், ஜனாதிபதிகள் தொடர்பு இது பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாது.
ஏன்… துறவு வாழ்க்கையில் தண்டத்தை வைத்து விட்டு ஓடிப்போய்விட்ட ஜெயேந்திரனைப் பற்றி ஒருவரிகூட எதிராக எழுதியதில்லை.

யாகவா முனிவர் – சிவ சங்கர் பாபா, இந்த இரண்டு கடவுள்களின் ‘பேட்டை ரவுடி’ சண்டையை முதலில் வெளியிட்ட பத்திரிகை துக்ளக்தான். அதன் நோக்கம்,
சங்கராச்சாரியாரைத் தவிர வேறு சாமியார்கள் இல்லை என்பதே.
அதுவே இப்போது இந்த பிஸ்தாக்களின் தகராறில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதனை விட இன்னொரு மனிதனுக்கு அதீத சக்திகள் இருப்பதாக சொல்லுகிற அநாகரிகத்தை, மோசடியை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சமீபத்தில் சென்னை ராயபுரத்தில் 117 ஆண்டுகளுக்கு முன்னால் புதைக்கப்பட்ட கிறிஸ்த்துவ சாமியாரின் எலும்பு அப்படியே இருப்பதாக அதிசயப்பட்டார்கள்.

117 ஆண்டுகள் என்ன? 2017 ஆண்டுகள்கூட ஆகட்டும், அந்த எலும்பே ஏசு கிறிஸ்துவாகக்கூட உயிர்தெழுந்து வரட்டும், அதனால் மக்களுக்கு என்ன நன்மை? குறைந்தபட்சம் அந்தப் பகுதி மக்களுக்காவது என்ன நன்மை?

பல்வேறு பிரச்சினைகளின் அழுத்தத்தால் எதைத் தின்றால் பித்தம் தௌயும் என்று புரியாமல் முழிக்கும் மக்களின் பலவீனம் பயன்படுத்தி அவர்களை கேலிக்குரியவர்களாக்கி, அவமானப்படுத்தி, சுய சிந்தனையற்றவர்களாக மாற்றி சுரண்டுபவன் – பார்ப்பானோ, பார்ப்பனரல்லாதவனோ, அற்புத சுகமளிப்பதாக சொல்லும் கிறிஸ்த்தவனோ, பில்லி-சூன்யம்-ஏவல் என்று பிதற்றும் இஸ்லாமியனோ-எவனாக இருந்தால் என்ன? அவன் விரட்டியடிக்கப்பட வேண்டியவனே.

சங்கராச்சரியாரைப் பற்றி ஒரு சம்பவம்.

செத்துப்போன பெரியவாளுக்குக் கண்ணில் குறைபாடு. கண் மருத்துவர் அறுவை சிகிச்சை முடித்து – சுவாமிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

ஒருவாரம் தலைக்குக் குளிக்காதீர்கள் – குளித்தால் கண்ணுக்கு ஆப்த்து’ என்றார். அதையும் மீறி அவர் தலைக்கு ஸ்நானம் செய்ய கண் குருடானது.
அந்தக் கண்ணைப் பார்த்துதான் ‘ஒளி தெரிகிறது, ஜோதி தெரிகிறது, அருள் வழிகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

அவர் நினைத்துக் கொண்டிருப்பார்,
‘உங்களுக்கு என் கண்ணில் ஒளி தெரியுது, ஜோதி தெரியுது. அடபாவிகளா, எனக்கு கண்ணே தெரியலடா’

இதுதான் அதீத சக்தி.

‘நந்தன்’ மாத இதழ் 1998 செப்டம்பர்.
 

‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’

 

 

 

 

 காரை மைந்தன் என்பவர் என்னிடம் தொலைபேசியில் தமிழர் தொலைநோக்கு என்கிற ஒரு இதழை நான் நடத்துகிறேன். அதில் பாரதி குறித்த உங்களின் நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்புகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். பிறகு நேர்காணலுக்காக நேரில் சந்தித்தபோது கேள்விகள் தயாராக இல்லாததால், சில கேள்விகளை எழுதி எனக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.

 

அவர் அனுப்பி வைத்த கேள்விகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நான் பதில் எழுதியிருந்தேன்.(பிப்ரவரி 2008) அதைத்தான் இங்கு பிரசுரித்திருக்கிறேன். 
 

 

 

 

 தமிழ்நாட்டில் பெண்கல்வி,  பெண் விடுதலை, சாதீய ஒற்றுமை குறித்து பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் நீங்கள் காணும் வேற்றுமை என்ன?

 பாரதி பெண் கல்வி, பெண்விடுதலை, சாதீய ஒற்றுமையை இந்து மத, பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையில் எழுதினார்.

பாரதிதாசன் பெரியாரின் சிந்தனையின் பின்னணியில் எழுதினார்.

பாரதி ஏற்றத்தாழ்வகளோடே ஒற்றுமையாக இருக்கவேண்டும், என்று சாதீய ஒற்றுமையை வலியுறுத்தினார்.

பாரதிதாசன் பெரியாரின் சிந்தனையான சாதி ஒழிப்பு பற்றி எழுதினார்.

 

சுருங்கச் சொன்னால் பாரதி வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டினார்.

பாரதிதாசன் பெரியாரின் பேச்சை கவிதையாக மொழி பெயர்த்தார்.

பெரியாரை தவிர்த்து விட்டால், பாரதிதாசனிடம் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாரதி ஆதரவையும் சேர்த்து.

 

  பாரதி பெண்கல்வி குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பரப்புரை செய்தது, சட்டசபையில் மகளிருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோருவதை எதிர்ப்பவர்களைப்போல தன் குலத்துப் பெண்டிரை மனதில் வைத்துதான் என்று எண்ணுகுகிறீர்களா?

 இது பாரதி குறித்தான என் எண்ணமில்லை. பாரதி அப்படித்தான் இருந்து இருக்கிறார், என்பதை அவர் எழுத்து உதாரணங்களோடு நீரூபித்து இருக்கிறேன.

 

  நீதிக் கட்சித் தலைவர்களை பாரதி கடுமையாக விமர்சித்தது நாட்டு விடுதலைக்கான போரை பின் தள்ளிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் என்று உங்களை எதிர்கொள்ளும் கருத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?

 நீதிக் கட்சித் தலைவர்களின் பார்ப்பன எதிர்ப்பை சுட்டிக் காட்டிதான் பாரதி அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். “பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா? எதற்கும் இந்து மத வீரோதிகள் பேச்சைக் கேட்கலாமா?” என்று எழுதுகிறார்.

இந்துமதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட, கடவுள் நம்பிக்கையாளர்களான நீதிக்கட்சிக்காரர்களை ‘இந்து மத விரோதிகள்’ என்று குறிப்பிடுகிறார். பார்ப்பனர்களை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது என்ற புரிதல் பாரதிக்கு இருந்திருப்பதற்கான சாட்சிதான் ‘இந்து மத வீரோதிகள்’ என்கிற அந்த வார்த்தை.

 

 1916 ல் தான் நீதிக்கட்சி துவங்கப்பட்டது. அந்த ஆண்டுகளில் பாரதி சுதந்திர போராட்ட நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 1918 டிசம்பர் 10 தேதி கடலூர் சிறையில் இருந்து  சென்னை மாகாண பிரிட்டீஷ் கவர்னருக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில்,

“மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கொடுக்கிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளைத் துறந்துவிட்டேன். நான் எப்போதும் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்.” என்று கடிதம் எழுதிதந்த விட்டுதான் வெளியே வருகிறார்.

 

அந்தக் கடித வாக்கியங்களுக்கு உண்மையாகவும், தான் சொன்ன வார்த்தையை தன் மரணம் வரை காப்பாற்றுகிறார்.

ஆக, நீதிக்கட்சி செல்வாக்கு பெற ஆரம்பித்தக் காலங்களில் பாரதியே  பிரட்டிஷ் அரசுக்கு எதிராக இல்லை.

 

 பாரதியின் கட்டுரைகளை பார்த்தால் அது தமிழ் கட்டுரைதான எனும்  அளவிற்கு சமஸ்கிருதம் நிறைந்து இருக்கிறது. கவிதைகளிலும் சமஸ்கிருதம் காணப்படுகிறது. இது காலத்துக்கேற்ற எழுத்து என்று ஏற்பதா அல்லது தன் காலத்தை தாண்டி புரட்சி செய்த கவிஞனின் தவறுகள் என்று ஏற்பதா?

 பாரதிக்கு தமிழ் மீது விரோதம் இல்லை. ஆனாலும் தமிழை விட சமஸ்கிருதமே சிறந்தமொழி என்று உறுதியாக நம்பினார். சமஸ்கிருத கலப்போடு எழுதுவது, தமிழை மேம்படுத்தும் என்றும் உறுதியாக நம்பினார்.

 

“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாதவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்” என்பதே பாரதியின் நிலை. இதுதான் காலத்தை தாண்டிய புரட்சியா?

 

 பணக்காரர்களிடமும் பண்டிதர்களிடமும் அடைப்பட்டுக் கிடந்த தமிழ்க் கவிதையை எளிய மக்களிடம் கொண்டு சென்றவன் பாரதி என்கிறார்களோ?

 பொய். பாரதிக்கு முன்பே சித்தர்கள் மக்கள் மொழியில்தான் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். சித்தர்கள் மொழி மட்டும் எளிமையல்ல அவர்களின் வாழ்க்கையே எளிமையானதுதான். காரணம் அவர்களே எளிய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள்தான்.

 

பாரதிக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்க அடிகளின் குரல் ஒரு கலகக் குரல்.

 “இராமலிங்க சுவாமிகள் “களங்கமறப் பொது நடனங் கண்டு கொண்ட தருணம்” என்ற பாட்டைத் திரித்துப் பாடியது,

“தாயுமானவர் ஆனந்த களிப்பு மெட்டு, காவடிச் சிந்தில் ஆறுமுகவடிவேலவனே என்ற வர்ண மெட்டு”

“பெரிய புராணத்தில் வருகிற மாடு தின்னும் புலையா என்ற பாட்டின் மெட்டில் பாடியது” என்று பாரதியே       அவர்களின் பாடல்களை பயன்படுத்தி               இப்படி குறிப்பிட்டுதான் பாடியிருக்கிறார்.

 

அவ்வையாரின் ஆத்திச்சூடியைப் போல்தான் பாரதியும் ஆத்திச்சூடி பாடியிருக்கிறார்.

 

இவர்களிடம் இருந்து வேறுபடக் காரணம், ஆங்கிலம் தெரிந்த பத்திரிகையாளராக பாரதி இருந்ததால் தொழில் காரணமாக ஆங்கில பத்திரிகைகளை படிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. கவிஞனாகவும் இருந்ததால் அந்தச் செய்திகளை கவிதையாகவும் பாட முடிந்தது.

 

இதன் காரணமாகதான் அவர் ரஷ்யா பற்றி, பிஜித் தீவைப் பற்றி இன்னும் பல நாடுகளை பற்றியும், அந்த நாட்டின் போராட்டங்களைப் பற்றியும், ஆங்கில இலக்கியங்களையும் குறிப்பிட்டு எழுத முடிந்தது. ஆங்கில கவிதைகளின் தாக்கத்தினால்தான் அவர் கவிதைகளில் ஒரு நவீன தன்மை இருந்ததது.

 

கவிதைகளையும், கட்டுரைகளையும் ‘அப்டேட்’ செய்வதற்கு அவருடைய பத்திரிகையாளர் பணி அவருக்கு பெரிதும் உதவியது. இதைதான் மதவாதிகள் ‘பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ என்று திரித்து சொல்கிறார்கள்.

 

இது போக சமஸ்கிருதம் கலந்து  எழுதியதாலும்,  சமஸ்கிருத ஆதரவாளர்கள் அவரை பெரிதும் “புதுமையானவர், இதுவரை தமிழை இவ்வளவு எளிமையாக யாரும் எழுதியதில்லை” என்று திட்ட மிட்டு  பாராட்டினார்கள்.

 அந்தக் காலததில் இருந்து இந்த காலம் வரை அவர்களிடம்தானே முக்கியமான பத்திரிகைகள் இருக்கிறது, அல்லது பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.

 

 

ஆக பாரதிதான் எளிய மக்களிடம் கொண்டுசென்றான் என்பது உண்மையல்ல. நீதிகட்சியின் ஆட்சிக்கு பிறகுதான் எளிய மக்கள் எழுத படிக்கவே ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பாரதி கவிதைகளையும் படித்தார்கள், என்பதுதான் உண்மை.

 

 பாரதி, பாரதிய ஜனதாவின் முன்னோடி என்று எழுதிய உங்கள் நூலுக்கு மறுப்பு புத்தகங்கள் வந்திருக்கிறதே. அவைகள் உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?

 

 இல்லை. அந்த புத்தகங்கள் நாம் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், சொன்னவற்றையே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள். அவை என் கவனத்தை கவரவில்லை.

 

என் புத்தகம் பாரதியை ஆதரிக்கிற முற்போக்காளர்களை நோக்கிதான். என் புத்தகத்தால் பாதிக்கப்பட்ட தன்னை முற்போக்காளர்களாக நினைத்துக் கொண்டிருக்கிற பாரதி ஆதரவாளர்களில் சிலர் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுதப்பட்ட புத்தகங்கள் அவை.

 

 தமிழர் திருநாள் பொங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கவும், தகர்க்கவும் வேண்டிய ஒன்று. இதற்காக பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான விழாவல்ல என்றும் நீங்கள் அண்மையில் எழுதியிருப்பது தமிழ் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் நீர்க்க அடித்து வீடாதா?

 

 தமிழர்களுக்கு என்று தனி கலாச்சாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆச்சாரம்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வழக்கம்.

இதை மீறி தமிழர்களுக்கு என்று தனியான ஒரே பொது அடையாளம் மொழி மட்டும்தான்.

 

ஜாதிரீதியான ஏற்றத் தாழ்வுகள் அற்று எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதைதான் நாம் தமிழர் அடையாளம் என்று சொல்லமுடியும்.

ஆனால் பொங்கலும் அப்படியில்லை.

பொங்கல் விவசாயிகளின் திருநாள் என்பது உண்மைதான். நிலம் உடைய விவசாயிகள் விசேஷமாக கொண்டாட, நிலமற்ற விவசாயிகள் உறுதுணையாக இருக்கிற விழாவாகத்தான் பொங்கல் இருக்கிறது.

 

ஆண்டையிடம் கைகட்டி ‘இனாம்’ வாங்கி கொண்டாட வேண்டிய அவல நிலையில்தான் தாழ்த்தப்பட்ட தமிழர்களை இதர தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்.

 

ஏற்றத் தாழ்வுகள் அற்ற பொங்கல் கொண்டாட வேண்டுமென்றால், விவசாயத்தில் 99 சதவீதம் தங்கள் உழைப்பை செலுத்துகிற விவசாயிகளான நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமாக என்று நிலம் கிடைக்கிறதோ, அன்றுதான் பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களின அடையாளமாக அறியப்படும்.

 

அதுவரை அரசு நடத்துகிற ‘சுற்றுலாபொருட்காட்சி’தான் பொங்கலை விட சிறந்த ‘தமிழர்திருவிழா’ என்பேன்.

 

 

 

 

 

 

 

 

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பார்ப்பனரல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர்.

மாநாட்டுக்கு அவரை அழைத்தப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள். முதலவருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக சமஸ்கிருத சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. எல்லோரும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள். அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

‘நிறைவாக இப்போது முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்படுகிறது’ பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார். தமிழில் அல்ல… தெளிவான சமஸ்கிருதத்தில்.
அதுவரை பேசியவர்களைவிடச் சிறப்பாக, அவர்களுக்கு பதில் சொல்வது போல், இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை சமஸ்கிருதத்தில் ஆற்றி முடிக்கிறார். முதல்வர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர் என்ற தகவல் அவர்களுக்கு தெரியாததால் , அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானப்பட்டு போகிறார்கள்.

அந்த மாநாடு முடிந்த சில நாட்களுக்குள் ஓர் உத்தரவை பிறப்பிக்கிறார் முதல்வர். அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

‘ஆங்கிலத்தில் படிக்கப்போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்கிறது.
‘சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் அதாவது பார்ப்பனர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்கவேண்டும். மற்றவர்கள் படிக்கக்கூடாது ’ என்ற ‘பரந்த’ உணர்வே அதற்கு காரணம் என்பதை  உணர்ந்தார் முதல்வர். அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது. மருத்துவத் துறையில் தகுதி, திறமை போய்விடும் என்கிற கூப்பாடு எழுகிறது. அதை புறம் தள்ளுகிறார் முதல்வர். அதன் பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த்துவர்கள் என்று நிறையபேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.
இன்று இந்நியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களை கொண்ட ஊர் என்ற பெயரை  பெற்றிருக்கிறது சென்னை. வெளிநாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு – செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது என்றால் அது அதிகபட்சமான வார்த்தையாகாது.

***

ன்று உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தவுடன், 80 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருத மாநாடு நடத்தியவர்களின் பேரன்கள், துள்ளிக் குதிக்கிறார்கள்,
‘ஐயோ தகுதி, திறமை போய்விடும். மனிதாபிமானம் போய்விடும்’ என்கிறார்கள்.

தேர்வில் 90 சதவிதம் எடுத்தால் அது ‘தகுதி’, 87 சதவிதம் எடுத்தால் அது ‘தகுதியில்லை’ என்ற அர்த்தமா?
ஆம், இடஒதுக்கீடு என்பது இந்தமாதிரி சின்ன வித்தியாசம் மட்டுமே. இதைத்தான் ‘தகுதி குறைவு’ என்கிறார்கள்.
சரி தகுதி, திறமை அடிப்படையில் வந்த இவர்களின் மனிதாபிமானம் எப்படி இருக்கிறது?
உயிருக்குப் போராடிய நிலையில் ஒரு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். இந்த தகுதி, திறமை வாய்ந்த மனிதாபிமான மருத்துவர்கள், ‘சிகிச்சை அளிக்க முடியாது. நாங்கள் போரட்டத்தில் இருக்கிறோம். இடஒதுக்கீட்டை வாபஸ் பெறச் சொல்லுங்கள்’ என்று புறக்கணிக்கிறார்கள்.
ஒருபாவம் அறியா ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கக் காத்திருக்கிற இவர்கள்தான் சொல்கிறார்கள், ‘இடஒதுக்கீடு வந்தால் மனிதாபிமானம் போய்விடும்’ என்று.

***

ந்தியாவுக்கு இடஒதுக்கீடு புதியதல்ல. அது 2 ஆயிரம் ஆண்டு காலமாக நடைமுறையில் இருப்பதுதான்.
ஆம், மனுதர்ம சாத்திரத்தில் வகைப்படுத்திச் சொல்கிற இடஒதுக்கீடு, மன்னர் ஆட்சிக்காலத்தில்; ‘அரசனின் அனைத்துத் திட்டங்களும் பிராமணர்களையே போய்சேரவேண்டும், அதன் பிறகே அடுத்தவர்களுக்கு’ என்று வகைப்படுத்தினார் மனு.

அவர் வரிசைப்படுத்திய சமூக அமைப்பு இதுதான், முதலில் பிராமணர், பிறகு சத்திரியர், அடுத்து வைசியர், அதன்பிறகு சூத்திரர், அதற்கும் கடைசியாக பஞ்சமர் என்று சொல்லப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்கள். இதுவே மனுவின் இட ஒதுக்கீடு.

அரசின் சலுகைகள், முதலில் பஞ்சமர் என்று மனு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறகு சூத்திரர் எள்று சொல்லப்படுகிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கடைசியாக பிராமணர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று 80ஆண்டுகளுக்கு முன்னால் இதை திருப்பிப்போட்டார்கள் நீதிக்கட்சிக்காரர்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்று கோரிக்கையை எழுப்பும் போதெல்லாம், ‘அப்போது எங்களுக்கு?’ என்ற கேள்வியை உயர்சாதிக்காரர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

மனுவின் இட ஒதுக்கீடு அமலில் இருந்தது 2 ஆயிரம் ஆண்டுகள். மாற்று இட ஒதுக்கீட்டின் காலம் ஒரு நு£ற்றாண்டுகூட இல்லை.
2ஆயிரம் ஆண்டுகாலம் இவர்களைத் துாக்கிச் சுமந்தவர்கள் கொஞ்சம் மேல் எழுந்து வர முயற்சிக்கும்போது, இவர்கள் காட்டுகிற எதிர்ப்பு, ‘ஐயோ, கீழே இறக்கிவிடாதே எனக்கு கால் வலிக்கும்’ என்பது போல் இருக்கிறது.

-தினகரன் நாளிதழுக்காக 9. 6. 2006ல் எழுதியது.

அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..

Lenin with Child

 ‘வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிபடுகிறது உள்ளடக்கம்’ என்று பெரியார் நாடகம் பற்றிய விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்களே, வடிவம் என்பது அழகியல் சார்ந்த விஷயம். அப்படியானால் அழகியலே தேவையில்லை என்கிறீர்களா?

-தேன்மொழி

 

நம் சிந்தனையை, கற்பனையை பரவலாக பலருக்கு சொல்வதற்கான ஒரு முறைதான் வடிவம். ஆக முதலில் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை தெளிவாக, குழப்பமற்று முடிவு செய்து கொள்ளும்போதே அதனோடு சேர்ந்தே இயல்பாகவே ஒரு நேர்த்தியான வடிவம் உருவாகும்.

 

புரட்சிக்கு முந்திய பழைய சோவியத்தில் டால்ஸ்டாயைத் தவிர குறிப்பிட்டு சொல்லுபடியான இலக்கயவாதிகளோ, கலைஞர்களோ இல்லை. புரட்சிதான் மிக சிறந்த கலைகளையும், கலைஞர்களையும் உருவாக்கியது.

அப்படித்தான் ஐஸன்ஸ்டின் என்கிற கலைஞனையும் புரட்சி உருவாக்கியது. ரஷ்ய புரட்சியை ஆதரித்து படம் எடுத்த ஐஸன்ஸ்டினுக்கு அழகியலான வடிவமும் அப்படித்தான் நேர்ந்தது.

 

அதனால்தான் உலக சினிமாக்களுக்கு நேர்த்தியான வடிவத்தை அவரால் உண்டாக்கித் தரமுடிந்தது.

அவருடைய ‘பொட்டம் கின்’ ‘அக்டோபர்’ படங்கள்தான் உலக சினிமாவிற்கு பல்வேறு புதிய உணர்வூபூர்வமான ‘ஷாட்’டுகளை உருவாக்கித் தந்தது. இன்றைய ஹாலிவுட் படங்களுக்கான வடிவம் ஐஸன்ஸ்டின் போட்ட பிச்சை அல்லது, அவரிடம் இருந்து களவாடப்பட்டது.

ஒரு கம்யூனிஸ்ட்டின் வடிவங்களைக் கொண்டுதான் கம்யூனிச விரோதப் படங்களையும் உருவாக்குகிறது ஹாலிவுட்.

 

ஆக, ஒரு நேர்த்தியான வடித்தின் மூலம் என்ன செய்தி சொல்லப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

சிலசமயங்களில் பெருவாரியான மக்களுக்கு ஆதரவான ஒரு செய்தி, மிக மோசமான வடிவத்தில் கூட சொல்லப்பட்டுவிடலாம். அதனால் ஒன்றும் ஆபத்தில்லை.

ஆனால், பெருவாரியான மக்களை கேவலப்படுத்தி, ஆதிக்கத்தை நியாயப்படுத்தி சொல்லுகிற செய்தி, மிக நேர்த்தியான வடிவத்தில் இருந்தால், அது மிகவும் ஆபத்தானது. அருவருப்பானது.

 

“வேறு வழியில்லை, பசிக்கு உணவு எச்சிலை சோறுதான்” என்றால் கூட மனிதர்கள் உண்டு விடலாம்.

ஆனால் தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக மலத்தை தின்ன முடியுமா?

*

ஏப்ரல் 11-2008 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

“சுயமரியாதையற்ற பெரியார்”

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

கீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால், இலக்கியவாதிகள் என்ன ஆவார்கள்?

“சுயமரியாதையற்ற பெரியார்”

படம் உதவி, சுயமரியாதை இயக்க சுடரொளி காரைக்குடி  என்.ஆர். சாமி குடும்பத்தினர்

(9-8-2003ல் எழுதியது)
பெரியார் பற்றிய ‘மதுரை நிஜ நாடகக் குழு’ வினரின் நவீன நாடகம் – ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் முயற்சியில் 9.8.03 அன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நாடகத்திற்குப் போகலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம். குழப்பத்திற்குக் காரணம், நவீன நாடகம் என்றாலே-உள்ளடக்கத்தை விடவும் வடிவத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதுதான். மாறாக, இந்த நாடகம் எளிமையான, நேர்த்தியான வடிவத்தோடு இருக்கிறது. சுருங்கச் சொன்னால், வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிப்படுகிறது உள்ளடக்கம்.
                             …
நாடக ஒத்திகையாகவே நாடகம் ஆரம்பிக்கிறது. ‘என்ன நாடகம் போடுவது’ என்ற விவாதத்தோடே தொடங்கி ‘பெரியார் நாடகம் போடலாம்’ என்று முடிவாகிறது. பெரியாராக நாடக இயக்குநர் மு. ராமசாமியே நடிக்கிறார். கறுப்புச் சட்டையுடன் இருந்த பெரியாரை, சிவப்புச் சட்டையாக மாற்றி இருக்கிறார்கள்.
அதற்கான காரணத்தையும் ராமசாமி விளக்குகிறார்.
“வரலாற்றுப் புகழ் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகத் தமிழில் வெளியிட்டு அறிமுகப்படுத்தியவர் பெரியார். லெனின் எழுதிய ‘லெனினும் மதமும்’, எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிசத்தின் கொள்கைகள்’, பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ முதலிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்து மொதல்ல வெளியிட்டவர் பெரியார். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூணு பேரையும் ஆங்கில அரசு தூக்கிலிட்டபோது, பகத்சிங் கொள்கையே சுயமரியாதைக் கொள்கைன்னு பயப்படாம சொன்னவர் பெரியார்.

சுயமரியாதை சமதருமம் இரண்டையும் இணைச்சி, சுயமரியாதை சமதருமக் கட்சியை 1932ல் தொடங்கியவர் பெரியார். நாத்திகத்தை மார்க்சியத்தின் தொடக்கமாகவும், அறிவியல் வளர்ச்சியின் முதிர்ந்த கோட்பாடாகவும் பெரியார் விளக்கிக் காட்டிய நூல்தான், 1932இல் வெளிவந்த ‘பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம்-இப்ப சொல்லுங்க, சிவப்புச் சட்டைப் போட்டு வந்தா தப்பா?”
பெரியார், ஸ்டாலின் ஆட்சியைப் புகழ்ந்து எழுதியதையும் குறிப்பிட்டிருக்கிலாம். (பெரியார் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிற மார்க்சிய அறிஞர்கள்கூட, அவரின் ஸ்டாலின் ஆதரவை இருட்டடிப்புச் செய்திருக்கிறார்கள்.)

நாடகம், பெரியாரின் பிறப்பு-வளர்ப்பு என்று போகாமல், அவரின் அரசியல், சிந்தனை என்று நேரடியாக விஷயத்திற்கு வந்திருப்பது பாரட்டுக்குரியது. ஒரு மனிதன் பிறப்பதென்ன பிரமிப்புக்குரிய விஷயமா? இல்லை, அது அவனுடைய சாதனையா? பிறப்பில் உயர்வு பார்ப்பதும், மரியாதைக்குரிய மனிதர்களின் பிறப்பை வியந்து போற்றுவதும் மதச் சிந்தனைதானே. கர்த்தர், கண்ணன் பிறப்பு மாதிரி.

நாடகத்தின் பெரும் பகுதி, கேள்வி-பதில் பாணியிலேயே அமைந்திருக்கிறது. கேள்விகளுக்கான பெரியாரின் (மு. ராமசாமி) பதில்களில் அரங்கமே அதிர்கிறது. வசனம் தந்தை பெரியாரே. ஆம். அவரின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் இருந்தே காட்சி அமைப்பு, வசனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு, தலித் மக்களுக்கான ஆதரவு, கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, பெண் விடுதலை என்று அவரின் பன்முகத்தன்மையோடு இருக்கிறது நாடகம்.

‘தலித் மக்களை இந்து மதத்திலிருந்து மதம் மாறச் சொன்ன பெரியாரின் கருத்துகள் சொல்லப்படவில்லை.` என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். உண்மைதான். சில செய்திகள் சொல்லாமல் விடுபட்டுக்கூட போகலாம். ஆனால் சொல்கிற செய்திகள் எதுவும் தவறானவையாக இருந்துவிடக்கூடாது. இந்த நாடகம், பெரியார் குறித்து ஆதரவாகவோ-எதிராகவோ தவறான செய்திகளைச் சொல்லிவிடவில்லை என்பது, இன்றைய ‘அவதூறு அறிஞர்கள்’ சூழலில் கவனத்திற்குரியது.

பெரியார் என்பது ஒரு ஆளுமை, குழப்பமற்ற சிந்தனை என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதே நாடகத்தின் நோக்கமாக இருக்கிறது. நாடகத்தின் இடையில் நிஜப் பெரியாரை திரையில் (ஒளி வடிவில்) காட்டியது ஒரு வித்தியாசம்.
                         …

தமிழ் காட்டுமிராண்டி மொழி x இந்தி எதிர்ப்பு – பெரியாரின் இந்த முரண்பாட்டின் நோக்கம், மொழியை மதத்திலிருந்து விடுதலை செய்தல், ஆதிக்க எதிர்ப்பு.
மதங்கள், கடவுள்களுக்கு செருப்படி x அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும், தலித் மக்கள் கோயில் நுழைவு, இழிவு நீங்க இஸ்லாம் மாறச் சொன்னது – இந்த முரண்பாட்டில், பார்ப்பனரல்லாத, உழைக்கும் மக்களின் சுயமரியாதை.

சாதி ஒழிப்பு x சாதி வாரியான இட ஒதுக்கீடு – இந்த முரண்பாட்டில், பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களின் உரிமை.

ஏறக்குறைய இவற்றை விளக்குவதுபோல் நாடகத்தில் ஒரு காட்சி. பெரியார் பேசுகிறார்: “நான் பல விஷயங்களில் அறிவுக் குறைவு உள்ளவனாக இருக்கலாம். பல தவறுகள் செய்திருக்கக் கூடும். இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும். பல கருத்துகளை மாற்றியும் இருக்கிறேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான ஆராய்ச்சிகளைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ கடுகளவுகூட காரணம் கொண்டதாய் இருக்காது.”

                               …

நாடகத்தில் பெரியார் வரும் முதல் காட்சியே, அவர் செருப்படி வாங்குகிற காட்சிதான். கடவுள் சிலைகளை செருப்பால் அடித்து அவமானப்படுத்திய பெரியார், தனக்கு விழுந்த செருப்படிகளை எப்படி அலட்சியப்படுத்தினார் என்பது நாம் அறிந்ததே. நாடகத்தில் அது சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மக்களின் சுயமரியாதைக்குப் பாடுபடுகிற ஒருவனுக்கு, தன் மரியாதை குறித்து அதாவது சுய மரியாதை குறித்து அக்கறை இருக்காது. இருக்கக் கூடாது என்பதற்கு, பெரியாரின் வாழ்க்கையே பாடம்.

நாடகத்தில் பெரியாரை நோக்கி ஒரு கேள்வி: “கடவுளே இல்லேங்கிறீங்க, ஆனா, உங்க பேர் மட்டும் ராமசாமின்னு இருக்கே?”
பெரியார்: “அறியாத வயசுல எங்க அப்பா, அம்மா வெச்ச பேரு. அந்தப் பேரு மேல வேற எந்த மரியாதையும் எனக்குக் கெடையாது. உங்களுக்கு அந்தப் பேரு புடிக்கிலேன்னா, என்னை ‘மசுரு’னு கூப்பிடுங்க, எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை” இதுதான் பெரியார்.

இப்படியாக பெரியோர் சொன்னதை வைத்து, ‘பெரியாரே தன்னை ‘மசுரு’ என்ற கூப்பிடச் சொல்லியிருக்கிறார். இனி நாங்கள் அவரை ‘மசுரு’ன்னுதான் குறிப்பிடுவோம்’ என்று ‘அவதூறு அறிஞர்’களும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறிவாளிகளிடம் ஏது அறிவு நாணயம்?
                                 …

நாடகம் முடிந்த பிறகு, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் சார்பில் செந்தில்நாதன் பேசினார்: “இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பெரியார் பேசியது, இந்த நாடகத்தில் இடம் பெற்றது. அதையெல்லாம் தாண்டியும் பெரியரை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது” என்றார்.

உண்மைதான். இத்தனை ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் சுப்பிரமணிய பாரதிக்குத் தந்த முக்கியத்துவத்தை, தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் தந்திருந்தால், அதன் வீச்சு கூடுதலாகவே இருந்திருக்கும். கம்யூனிஸ்டுகள் எதிர்க்க மறுக்கிற ‘இந்துத்துவா’வின் மூலமான இந்து மதத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் கெட்ட கனவு- இந்த இருவரைத் தவிர வேறு யார்?

‘மதுரை நிஜ நாடகக் குழு’ ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி
இந்த நாடகம். இந்த 25 ஆண்டுகளில் அநேகமாக அரங்கு நிறைந்த மக்களோடு, ஆரவாரத்திற்கிடையே அவர்கள் நாடகம் போட்டது, இதுவே முதல் முறையாக இருக்கும். (ரூ. 50 கட்டணம்) காரணம், மக்கள் பிரச்சனையை பேசிய ஒரு மக்கள் தலைவன் பற்றிய நாடகம் என்பதினால்தான். இந்த சிறந்த நாடகத்தை அளித்த பேராசிரியர் மு. ராமசாமி தலைமையிலான அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது நன்றியும் பாராட்டும்.

‘நிஜ நாடகக் குழு’வினர், கடைசியாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் – ‘கலகக்காரர் தோழர் பெரியார்’. அவர்களின் அடுத்த நாடகம், அண்ணல் அம்பேத்கர் பற்றியா? எதிர்பார்ப்போம்.

-வே. மதிமாறன்
தலித முரசு 9.8.03