ரஜினியால் இழுக்கு

ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களாமே? நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே?
டி.குமாரசாமி, கோயம்புத்தூர்

பெரியாரிடம் ஒருவர் வந்து, “அய்யா, ஜப்பான்ல கூட அலகு குத்துறாங்களாம், சாமி ஆடுறாங்களாம். என்னங்கய்யா அந்த நாட்டுல்ல கூட இப்படி” என்று வருத்தப்பட்டாராம்.

அதற்கு பெரியார், “மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டு மொத்தமா நம்ம நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்னு நினைச்சீங்கிளா?”ன்னு திருப்பிக் கேட்டாராம்.
ஆனாலும் நம்ம பிரதமர் ‘அஞ்சா நெஞ்சன் பாட்சா ரஜினி ரசிகர் மன்ற தலைவர்’ மாதிரி, ரஜினியைக் குறிப்பிட்டு பேசினதை தவிர்த்து இருக்கலாம்.

எங்க நாட்ல இருந்த பெரியம்மையும், காலராவும் இப்போ உங்க நாட்லேயும் வந்திருக்கிறதைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்குன்னு சொல்ல முடியுமா?

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு;‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச; 9444 337384

பாஜகவிற்கு ஆதரவாக ப. சிதம்பரம்

 

கர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றி, இந்துத்துவத்திற்குக் கிடைத்த வெற்றிதானே?
-ஏ. சுரேஷ்.

ஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும், ‘இந்துத்துவ மதவாத அரசியல்’ பெரும்பாலும் இந்திய நகரங்களில் நடக்கிற அரசியல். அல்லது இஸ்லாமியர்கள் இருக்கிற பகுதிகளில் மட்டும் நடக்கிற அரசியல்.

கிராமப்புறங்களில் இந்து அமைப்புகள், மதவாத அரசியலை நடத்துவதில்லை. அது அங்கு எடுபடாது.

பெருவாரியான கிராமங்களில் ‘இந்து மதம்’ என்று ஒன்று இருப்பதாக பல இந்துக்களுக்கு தெரியாது.
கிராமங்களில், “நீங்க யாரு?” என்று மக்களிடம் கேட்டால், அவர்கள் ‘இந்து’ என்று சொல்லமாட்டார்கள். மாறாக, தாங்கள் சாந்திருக்கிற ஜாதி பெயரைத்தான் சொல்லுவார்கள்.

அதனால்தான் பாஜக போன்ற மதவாத அமைப்புகள், கிராமப்புறங்களில் உயர்ஜாதிக்காரர்களோடு, பண்ணையார்களோடு இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலை நடத்துகிறார்கள். (நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.)

தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து கோயில்களில் சமஉரிமைக்காகப் போராட முன்வரும்போது, ஜெயேந்திரனில் இருந்து ராமகோபாலன் வரை உள்ள பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகதான் நடந்து கொள்வார்கள். நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக ‘இந்துத்துவம்’ என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.

இப்படியிருக்கையில், கர்நாடக தேர்தல் முடிவு இந்துத்துவத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு என்று அர்த்தம் ஆகாது.

மாறாக அது மத்திய காங்கிரஸ் அரசின் கையாலாகாத ஆட்சியால், ஏற்பட்டிருக்கிற விலைவாசி உயர்வு மற்றும்  மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மதவெறியும், ஜோதிட வெறியும் பிடித்த ஜெயேந்திரனின் அடிமையும் ஆன தேவகவுடா மற்றும் அவர் குடும்பத்தினரின் அதிகார வெறி, இவைகள்தான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம். கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறியிருக்கிற ஆட்சி மாற்றம்.

விலைவாசியை கட்டுக்கடங்காமல் உயர்த்திவிட்டு, அது ஏன் உயர்ந்திருக்கிறது என்று விளக்கம் கொடுப்பதற்கு மட்டும்தான் பயன்படுகிறது பொருளாதார மேதைகளான பிரதமர், நிதியமைச்சரின் ‘மாபெரும்’ படிப்பறிவு. (இதைதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சொல்லிக்கொடுக்கிறான் போல)

வருகிற நாடளுமன்ற தேர்தலில் பாஜகவை  வெற்றி பெற வைத்தே தீருவது என்று தீவிரமாக இயங்குகிறார்கள், அமெரிக்க தாசர்களான ப. சிதம்பரமும், மன்மோகன் சிங்கும்.
(தேர்தல்ல ஓட்டு ‘புஷ்ஷா’ வந்து போடப்போறாரு?)

நிழற்படங்கள்

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா – நிழற்படங்கள்

விழாவில் கலந்து கொண்டவர்களில் இரு பகுதி

தொகுத்து வழங்கிய தோழர் ஆனந்தராஜ். வரவேற்றுப் பேசிய தோழர் ராஜிவ் காந்தி.

விடுதலை ராஜேந்திரன், பெரியார்தாசன், மருதையன், கொளத்தூர் மணி, தமிழேந்தி. Continue reading நிழற்படங்கள்

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

காலச்சுவடு – ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்கிய வடிவமாகவே பார்க்கிறது. எல்லா மனிதர்களும் அவர்களுக்கு கதாபாத்திரங்கள் அல்லது தீவிர வாசகர்கள், வாசகர் அல்லாதவர்கள். காலச்சுவட்டின் பார்வையில் சமூகத்தில் இரண்டு விஷயங்களே:

தரம் x திறமை – தரமின்மை x திறமையின்மை

இவைகளுக்குள் நடக்கும் யுத்தம். மனிதர்களின் ஜீவாதாரமான விஷயம் இலக்கியம். அதிலும் உயர்தரமான இலக்கியம். உயர்தரமென்றால் அரசியல் அற்ற(?) பிரச்சாரமற்ற இலக்கியம். மக்கள் பிரச்சினையை மையமாக வைத்து தீவிரமாக எழுதுகிற நிலைக்கு எதிர்நிலை.

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பிரச்சாரம் இருக்கக் கூடாதா(?). நீ பீயைப் பற்றி வேண்டுமானாலும் எழுது. ஆனால் அழகாக எழுது.


இந்த அழகியல் ஆராதனையில், ஜாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் (முற்போக்கு). ஆனால், பார்ப்பனத் தரமில்லாமல் இருக்கிற இலக்கியங்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டும். (தீவிர இடதுசாரி சிந்தனை எழுத்துகளை, தலைவர்களை) இதில் பார்ப்பனரல்லாதவருக்கே முன்னுரிமை.


அப்படி விமர்சிப்பவர் கூடுதல் தரம், திறமை உள்ளவராக அங்கீகரிக்கப்படுவார். சுருங்கச் சொன்னால், இந்த வகையான இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்கிற மநுதர்மம். (வேதம் தெரிந்தவன்-அறிவாளி, உயர்ந்தவன். தெரியாதவன்-முட்டாள், தாழ்ந்தவன்)

பார்ப்பனரல்லாத இந்த வகை அழகியல் அறிவாளிகள் நிறையப் பேர் காலச்சுவடுமுழுக்க விரவிக் கிடைக்கிறார்கள். (தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை) அதில் முக்கியமாக இரண்டு விசுவாசிகள் பிரபஞ்சன், ரவிக்குமார்.


இவர்கள் காலச்சுவட்டிலும் அதைத் தாண்டி வெளியிலும் நிரம்ப விசுவாசத்தோடு இருப்பவர்கள். இவர்களின் சிந்தனையில் ஒரு தொடர்ச்சி இந்த விசுவாசத்தில் மட்டுமே.


காலச்சுவடு வைத்திருக்கிற அழகியல் அளவுகோலில் அளந்துப் பார்த்தால், உருப்படியாக ஒரு சிறுகதையைக் கூட எழுதாத பிரபஞ்சன் சொல்கிறார்:

திராவிட இயக்கம் இலக்கியத்தில் ஒன்றும் செய்யவில்லைஎன்று. இதனாலேயே இவர் அழகியல் அறிஞர். (இவரின் ஞானகுருவை ஜெயகாந்தனிலிருந்து சுந்தர ராமசாமிக்கு மாற்றி விட்டார்)


ரவிக்குமார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இவரை விடவும் இவருடைய அவதூறுகள் புகழ்பெற்றவை. காலச்சுவட்டின் சகவாசத்திற்குப் பிறகுதான் இவர் பெரியார் குறித்த அவதூறுகளில் தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பெரியார் குறித்தோ, திராவிட இயக்கங்கள் குறித்தோ சுந்தர ராமசாமியோ, அவருக்குப் பிறகு மறைமுகமாக மணிமுடி சூட்டிக் கொண்ட அவருடைய மகன் கண்ணனோ தீவிரமாக எழுதுவதில்லை. சொல்லப் போனால், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரை அப்பாவும், மகனும் கலைஞர்என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கருணாநிதி என்று மொட்டையாக எழுதுவதில்லை.


ஒரு போராட்டக்காரனாய், உலகத்தில் புனிதம், புனிதன் என்று எதுவுமில்லை என்று இந்து மதத்தின் எதிரியாய், ஜாதியின் விரோதியாய் வாழ்ந்த தலைவர் பெரியாரை, ஒரு சாதாரணக் கவிஞன் சுப்பிரமணிய பாரதிக்கு இணையாக நிறுத்திப் போற்றுகிற(?) ஞானிகூட காலச்சுவடுபேட்டியில், கருணாநிதியின் இன்னொரு புறத்தையும், முரசொலிமாறனின் மறுபுறத்தையும் பெருமையோடே குறிப்பிடுகிறார்.

இது எப்படி இருக்கு?

***

தலிபான்களின் பெண் அடிமைத்தனத்தை, பெண்களுக்கு எதிரான செயலைக் கண்டிக்கிற காலச்சுவடு’ (கண்ணன்), ஒட்டு மொத்தமான தமிழ் மக்களை வெறும் ஆண்குறிகளாக, பெண் குறிகளாக மட்டுமே பார்க்கிற, தமிழ் ஆபாசத்தின் குறியீடான குமுதத்தை, பெண்களுக்கு எதிரான அதன் சிந்தனையைக் கண்டித்து, ஒரு வார்த்தை கூட எழுதாத இந்த இலக்கிய இதழ், திடீரென்று தன் தலையங்கத்திலேயே பாய்ந்து புடுங்கிறது.


குமுதம் தொடரும் அராஜகம்

‘‘குமுதத்திலும், குமுதம் டாட் காமிலும் காலச்சுவடுக்கு எதிரான திட்டமிட்ட அவதூறு, இருட்டடிப்பு ஆகியவை தொடர்ந்து ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. (இது பற்றி காலச்சுவடுஇதழ் 37லும் எழுதியிருந்தோம்)

காலச்சுவடு கடந்த எட்டு ஆண்டுகளில் வெகுஜன கலாச்சாரம் பற்றி தொடர்ந்து விவாதங்களை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், குமுதத்தை எப்போதும் வம்புக்கு இழுத்ததே இல்லை. அது மட்டுமல்ல, குமுதம் வெளியிட்டு வரும் தீபாவளி சிறப்பு இலக்கிய இதழ்களை வரவேற்று எழுதிய ஒரே இதழ் காலச்சுவடுதான்.’’ (‘காலச்சுவடுதலையங்கம் நவம்பர்-டிசம்பர்2001)


காலச்சுவட்டின் சமூகப் பொறுப்பிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றால், பற்றி எரிகிற பிரச்சனைகள் வரும்போது, காலச்சுவட்டிற்கு பீரிட்டுக் கிளம்புகிறது சமூகப் பொறுப்பு. அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்டதை (அது அமெரிக்காவின் ஆண்குறியாம்) பற்றி எழுதுகிற கண்ணன் – அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும், சில இடதுசாரி அறிவு ஜீவிகளுக்கும் கண்டனங்களையும், அறிவுரைகளையும் சொல்லிவிட்டு பெரிய தீர்வையும் – தீர்ப்பையும் சொல்லி விட்டதாக அவரே பெருமைபட்டுக் கொள்கிறார்.


கொசுறாக, இந்தத் தீர்ப்பின் இன்னொரு நீதிபதி சேரன், டொரன்டோவிலிருந்து எழுதுகிறார்: இந்த சம்பவத்திற்குப் பிறகு எங்கள் சுக வாழ்விற்குத் தீங்கு வந்துவிட்டது. சொந்த நாட்டு மக்களையே நொறுக்குகிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவால் ஆப்கானிஸ்தான் மக்கள் என்ன சிரமப் படுகிறார்களோ, அதே சிரமம்தான் அமெரிக்க மக்களுக்கும்என்பது போல் அவரும் ஒரு தீர்ப்பை எழுதுகிறார். இவை எல்லாவற்றையும் விட, கண்ணன் எழுதிய கட்டுரைக்கு என்ன தலைப்பு தெரியுமா?

அமெரிக்க – இஸ்லாமிய பயங்கரவாதம்: இறுதித் தீர்ப்பும் இறுதித் தீர்வும்’.அதாவது, அமெரிக்காவிற்கு எதிராக இஸ்லாம்.

அமெரிக்க – அல்கொய்தா பயங்கரவாதம் அல்லது அமெரிக்க – தலிபான் பயங்கரவாதம்இப்படிக் கூட தலைப்பு வைத்திருக்கலாம்.

ஏன் இல்லை? எல்லாம் மனுஷ்யபுத்திரன் இருக்கிற தைரியம்.


இது மகனோட பாணி சமூக அக்கறை. அவுங்க அப்பாவோட சமூக அக்கறை இதையே தூக்கி சாப்பிடுவது.

இந்தியாவில் இந்து – முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது?இந்தக் கேள்விக்கு சுந்தர ராமசாமி பதில் சொல்கிறார்:

‘‘மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்ததும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பாகிஸ்தானைப் பிரித்துத் தர முஸ்லிம்கள் வற்புறுத்தியதும், இந்து – முஸ்லிம் உறவை மேம்படுத்த காந்தி எடுத்த முயற்சிகளை அவர்கள் போதிய அளவுக்கு அங்கீகரிக்காததும், வரலாற்று ரீதியாகவே இந்துக்களுக்கு இஸ்லாமியர் பற்றி குறையும் வருத்தமும் உருவாக்கியிருக்கின்றன’’

(காலச்சுவடுசனவரி – பிப்ரவரி 2002)


இதை ஒட்டு மொத்த இந்துக்களின் இயல்பான உணர்வு போல ஆண்டியக்கிறார் சுந்தர ராமசாமி. எந்த இந்துக்கு குறையும் வருத்தமும் உருவாகியிருக்கிறது?


ஜாதி அடையாளத்தைத் தவிர, இந்து என்ற அடையாளத்தோடு, உணர்வோடு எவன் இருக்கிறான்? இந்து என்கிற உணர்வே இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு உண்டாக்கிய ஒன்றுதானே. (பார்ப்பனிய – ஜாதி ஆதிக்கத்தை மறைத்துக் கொள்ளவும்) அப்படியிருக்க வரலாற்று ரீதியாகவே இஸ்லாமியர் மீது இந்துக்களுக்கு எப்படி குறையும், வருத்தமும் இருக்க முடியும்?


இஸ்லாமிய மன்னர்களுக்கு எதிராக – பாகிஸ்தானுக்கு எதிராக – காந்திக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், அந்த அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் முறை என்ன? எப்படி வெளிப்படுத்தினால் நீங்கள் அவர்களை அங்கீகரிப்பீர்கள்?


இந்த பதிலைப் பின் தொடருகிறவரிகளில், இந்து மத தீவிர அமைப்புகளுக்குப் பாடம் கற்பிக்கிறார். பெரியாரையே பின் தள்ளும் அளவுக்கு சகல மதங்களையும் சவுக்கால் அடிக்கிறார். இஸ்லாமியருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்துக்களின் தலைவர்போல் அறிவுரையெல்லாம் சொல்லி முடிக்கிறார். அத்வானியின் மத நல்லிணக்கம் போல்.

***

பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின், இஸ்லாமியர்களின் விரோதிஎன்று ஆதாரப்பூர்வமாக பொய் சொல்கிற ரவிக்குமார், இஸ்லாமியர்களின் தீவிர ஆதரவாளரும், இந்தியாவின் ஆயுதம் தாங்கி இயங்குகிற புரட்சிகர இயக்கத்தின் தலைவரும், சே குவேராவிற்கே கொரில்லா யுத்த முறையை பயிற்சி அளித்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் உயிரையே அர்ப்பணித்தவரும், சங்கராச்சாரி, ஜீயர்களின் ஜென்ம விரோதியும் ராம. கோபாலனின் கெட்டக் கனவும் ஆன சுந்தர ராமசாமியை எப்படி கொஞ்சுகிறார் பாருங்கள்.


நா. பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி ஒரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலைப் பற்றி ரவிக்குமார் எழுதுகிறார். கவிதை குறித்து ரவிக்குமாருக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியுமா?என்று சுந்தர ராமசாமியே ஆச்சரியப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு கவிதைகளைத் தனித் தனியாகக் கழட்டி மாட்டுகிறார்.


கட்டுரையின் ஓர் இடத்தில், சு.ராவின் (சுந்தர ராமசாமியைத்தான் செல்லமாக சொல்கிறார்) இந்த நூலைப் படிக்கும் போதும், பிறகு பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் படித்த போதும் எனக்கு தோன்றிய இன்னொரு விஷயம், பிச்சமூர்த்தியின் கவிதைகளை விடவும், சுந்தர ராமசாமியின் உரைநடை கவித்துவத்தோடு இருக்கிறது என்பதுதான்’.


இந்த வரிக்காகவே, சு.ரா. (நாமும் செல்லமாக சொல்லுவோம்) ரவிக்குமாரின் கவிதை அறிவை நினைத்து ஆச்சரியப் பட்டிருப்பார். பிறகு இன்னொரு இடத்தில் பயங்கரமான பிரகடனம் ஒன்றை அறிவிக்கிறார் ரவிக்குமார்:

‘‘உரைநடை எழுத முடியாத கவிஞன் கவிதை எழுத முடியாதுஎன்ற சு.ரா.வின் முடிவு, இன்றைய நவீன கவிகள் பலரை நடுநடுங்க வைத்துவிடும்’’நவீன கவிஞன் நடுநடுங்குகிறானோ இல்லையோ, இந்த வரியைப் படிச்சு சு.ரா.நடுநடுங்கிப் போயிருப்பாரு.


கடைசியாக கட்டுரையை முடிக்கும் போது, ‘‘ஆக சு.ரா. சொல்லியிருப்பதை உரைநடைக்கும் கவிதைக்குமான எதிர்நிலைகளாக கொள்ளாமல், உரை நடையை கவிதைக்கு அருகில் கொண்டு செல்லவேண்டுமென்று குறிப்பாகவே நான் கொள்ளுகிறேன். அப்படி கொண்டு செல்லும்போது, விமர்சனம் படைப்பிலக்கியத்தின் ஆற்றலைப் பெறுகிறது. இதற்கான சரியான உதாரணம் மாரி ப்ளான்ஷொவின்எழுத்துகள். தமிழில் உதாரணம் காட்ட எவருமில்லையா என்று நீங்கள் கேட்கலாம்.’’

இதற்குப் பின் ஒரு பெயர்ப்பட்டியலைத் தருகிறார் ரவிக்குமார். எல்லாம் பச்சைத் தலித்துகளின் பட்டியல்:

‘‘ப்ளான்ஷொவை பதிலீடு செய்யாவிட்டாலும் கூட பாரதி, புதுமைப்பித்தன், ஜீ.நாகராஜன், சு.ரா. சுஜாதா எனப் பலரிடமிருந்தும் இதற்கான சான்றுகளை நிச்சயமாக நாம் எடுத்துக் காட்டமுடியும்.’’ (காலச்சுவடு மார்ச் ஏபரல்2002)


இப்படி உள்ளன்போடு கவிதைகளைக் குறித்து மட்டும் நேசிப்போடு பார்ப்பனர் திறமையைப் பாராட்டி பட்டியல் இடுகிற ரவிக்குமார், தலித் எழுத்தாளர்களை, குறிப்பாக, தாய் மண்ணிலும், தலித் முரசிலும் எழுதுகிற இளைஞர்களை அல்லது தாய் மண்குறித்தும், தலித் முரசுகுறித்தும் இப்படி எழுதுவாரா?

மாட்டார்என்றால் என்ன காரணம் சொல்வார்? அவர்களுக்கு அந்தத் தகுதியோ, திறமையோ கிடையாது என்பாரோ?

சுப்பிரமணிய பாரதிக்கு ஒரு கனகலிங்கம். சுந்தரராமசாமிக்கு ஒரு ரவிக்குமார்.

***

சமூகத்தை சீர்த்திருத்துவதற்கு முன்னால், சாகித்ய அகாதமியை சீர்திருத்தணும்ங்கற வேகத்தோடவும், கோபத்தோடவும் அறிஞர்கள் சில பரிந்துரைகளை சொல்றாங்க.

. . .

பிரபஞ்சன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. ராஜ் கவுதமன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. பாவண்ணன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. ராஜமார்த்தாண்டன்: சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. நாஞ்சில் நாடன்: இவரும் அவ்வண்ணமே.


சுந்தர ராமசாமி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறது தப்பில்லை. ரசிகர்களின் மன உணர்வைப் புரிஞ்சுக்க முடியுது. இப்படி எல்லோரும் போற்றும் உலகத் தரத்துக்கு எழுதுற  ஒரே தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, யாரையெல்லாம் பரிந்துரைக்கிறார் என்ற ஆர்வத்தில் காலச்சுவட்டைப் புரட்டி, புரட்டிப் பார்த்தா, அய்யங்கார் பாணி வடகலை நாமத்தைக் குழைச்சிப் பெரிசா போட்டாரு.

***

காலச்சுவட்டின் கவிதைகளைக் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். இதில் வருகிற ஒவ்வொரு கவிதையும், தனக்கென்று சுயநடையோடு, சுயமொழியோடும், சுய உணர்வோடும் இல்லாமல் எல்லா கவிதைகளும், ஒரே மாதிரியாகத்தான் இருக்கு. எழுதியவர்களின் பெயர் மட்டும்தான் வித்தியாசமா இருக்கு. பாரதிதாசன் குறித்து காய்மொழி சொன்ன கனிமொழியின் கவிதையும் அதே லட்சணம்தான்.


எல்லோருடைய கவிதையும், கவிதை படிச்சி, கவிதை படிச்சி – அது மாதிரி ஒரு ஒரு கவிதை எழுதுன கதையாகத்தான் இருக்கு. பல கவிதைகள் suicide pointஇல் நின்று கொண்டு கடைசி நேரத்தில் எழுதுன மாதிரி அவ்வளவு நம்பிக்கையா இருக்கு. சுருக்கமாகச் சொன்னால், கவிதைகள் பிணமுக லட்சணம்’.


இன்னும் நிறைய இருக்கு எழுதுறதுக்கு. ஆனா, எழுதுனவங்க மட்டுமே படிக்கிற காலச்சுவட்டைப் பற்றி இவ்வளவு எழுதுனதே அதிகம்னு தோணவே, இத்தோட முடிச்சிக்கிறேன்.

வர்க்க புத்தி..

சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி (தொழிலாளர்கள்) இவர்களுக்கு உள்ள மட்டமான அபிப்ராயமே கதை எழுதுகிற ஆட்டோக்காரரை குறித்து பெருமையாக பேச வைத்தது.


தன் கதைகளில் பொருளாதர ரீதியாக ஜாதி ரீதியாக உயர்ந்தவனை கிரிமினல் ஆக இருந்தாலும், அவர் இவர் என்று எழுதுவதும் – ரிக்ஷாக்காரர், மீன் விற்கும் பெண், கீரை விற்பவர், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக நேர்மையானவர்களாக இருந்தாலும் அவர்களை `அவன் – அவள்என்று விளிப்பதுதான் இவர்களது அழகியல்.


ஆம், எழுத்தாளனாக இருப்பவன் வங்கியில், தொலைபேசி துறையில், ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும்; அல்லது துணிக்கடை வைத்திருக்க வேண்டும். இல்லையேல் எந்த வேலையும் செய்யாமல் ஊதாரியாக ஊர் திரிய வேண்டும். உழைப்பாளர்கள் கதை எழுதுகிறார்கள் என்பது, இவர்களுக்கு அதிசயம் மட்டுமல்ல. அவமானமும் கூட.


பெருவாரியான உழைப்பாளர்கள் இவர்களைப் போல் இலக்கியவாதிகளாக மாறிவிட்டால், இவர்கள் வேறு துறைக்கு மாறிக் கொள்வார்கள் என்பதே உண்மை. இது உயர் நடுத்தர வர்க்க புத்தி.

மார்க்ஸ் நாவல்கள் எழுதியிருந்தால்…

ராசேந்திர சோழன் இவர் ஒன்பதாவது படிக்கும் போதே ஞானம் பெற்றவர். (அகிலன், மு.வ, கல்கி, ஜெகசிற்பியன் இவர்களெல்லாம் வாழ்க்கையை சித்தரிக்கவில்லை, போலியாக எழுதுகிறார்கள் என்பதை அப்போதே கண்டுபிடித்திருக்கிறார்.) ஞானசம்மந்தனுக்கு வந்தது போல் பார்ப்பனர்களுக்குத் தான் பிறவியிலேயே ஞானம் வருமா என்ன? காலச்சுவட்டில் இவரின் பதிமூணு பக்க பேட்டியின் சாரம் இதுதான், படைப்புகள் (எழுத்தாளன் என்ன பிரம்மனா?) இசங்கள் சார்ந்து இருக்கக் கூடாது. முற்போக்கு சண்டித்தனம் பண்ணக் கூடாதுஎன்பதே.


தி.ஜானகிராமன், ராஜேஷ் குமார், சுபா, சுஜாதா, லா.ச.ரா., பால குமாரன் இவர்கள் மாதிரி கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார் போலும்.


கார்ல்மார்க்சையும் சிறந்த எழுத்தாளராகத்தான் பார்க்கிறார். மார்க்ஸ் மூலதனம் எழுதியதற்கு பதில் மூன்று நாவல்கள் எழுதியிருந்தால் அவரால் தி.ஜானகிராமனுக்கு இணையாக எழுதியிருக்கமுடியும்னு இன்னும் கொஞ்ச நாளில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தலித் முரசு இதழுக்காக 2002ல் எழுதியது.

தொடர்புடையது:
கலைஞன் பரப்பிய வெளி: சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு

சிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.
அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா  கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.

குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல்
மேனியற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த
பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.

இந்தப் பாட்டு ‘தளபதி’ படத்துல நடிகை ஷோபனா வாயசச்சப் பாட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை எழுதுனது,   வயித்துவலி தாங்காமல், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாறுன சைவ சமயத்தின் ஆன்மீக ஒளி, அப்பர் அலய்ஸ் திருநாவுக்கரசர். (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ?)

தேவாரத்தில் அப்பர் அடிகள் இப்படி வர்ணித்தது போல்தான், சிதம்பரத்தில் முழுஉருவமாக, நடராஜ பெருமானாக காட்சி தருக்கிறார், சிவன்.
இந்த வித்தியாசம் சிவனின் உருவத்தில் மட்டுமல்ல, சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முன்குடுமி மயிரில் இருக்கிறது. காவல் துறை அதிகாரியை அடிப்பதற்கு உயர்த்திய அந்தக் கரத்தில் இருந்தது. நந்தானரையும், ராமலிங்க அடிகளையும் கொளுத்திய அந்த நெருப்பில் இருந்தது. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீட்சிதர்கள் கொண்ட அந்த வெறுப்பில் இருக்கிறது.

‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பார்கள், சைவ அன்பர்கள்.

“உன் திருவாசகத்தை கொண்டுபோய் தெருவுல பாடு. கோயில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பாடுன வாயில குத்துவேன்’ என்றார்கள் தீட்சிதர்கள்.
“குத்துங்கடா அப்பவும் பாடுவேன்” என்றார் வீரமிக்க சிவனடியார் ஆறுமுகசாமி.
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர், சுந்தரர் – தேவாரம், திருவாசகத்தின் மூலவர்களான நால்வர்களுக்கும் இல்லாத ‘தில்’லு  ஆறுமுகசாமி என்கிற இந்த சிவனடியாருக்கு இருந்தது.

(சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏற முயற்சித்த வள்ளலாரையும் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். அதன்பிறகுதான் கோபத்தில் அவர் வடலுரில் ஒரு போட்டி சிற்றம்பல மேடையை உருவாக்கினார். அதிலும் ஊடுறுவி அதை சீர்குலைத்தார்கள் தீட்சிதர்கள்)

63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.

அதுபோல், நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் திட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை  64 நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப்போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை.

காரணம், நந்தனின் காலம் தந்தை பெரியருக்கு முந்தைய காலம்.
பெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியருக்கு பிந்தைய காலம்.


‘சிற்றம்பல மேடையில் ஏறி யாரும் பக்திப் பாடல்களை தமிழில் பாடலாம்’ என்ற தமிழக அரசின் உறுதியான உத்தரவை அடுத்து 4.3.2008அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மேல் அமரவைத்து, ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள், மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும்.

அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவாரம் பாடச் சென்ற சிவனடியாரையும் மற்ற தோழர்களையும் பாடவிடாமல் தாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களிடம் அடிவாங்கிய காவல் துறை, அவர்களை ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்த தேவாரம் பாடச் சென்ற தோழர்களை வால்டர் தேவவரம் போல் பாய்ந்து தாக்கியது. சிவனடியார் உட்பட தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘சிற்றம்பல மேடையில் ஏறி பாடச் செல்வோரை தாக்குகிற, தடுக்கிற தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்தது.
சிவனடியார் சிறையில் இருக்க, அடுத்தநாள் மேடை ஏறி பாடுவதற்கு எந்த சிவபக்தர்களும்  முன்வராததால், நாத்திகர்களான மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களே, சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகத்தை பாடினார்கள்.
இப்படியாக அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடேந்தேறியது.

சிதம்பரம் கோயில் விவகாரத்தில், பல ஆண்டுகளாக பல அமைப்புகள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்காக 2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பொதுகூட்டங்கள், போராட்டம், ஆர்பாட்டம் என்றும் வழக்குமன்றத்திலும் போராடி அரசு இப்படி ஒரு உத்தரவு போடுவதற்கு காரணமாக இருந்த பெரியவர் ஆறுமுகசாமிக்கும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கும், மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை  பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
இதுவே, ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் தீட்சிதர்களுக்கு எதிராக போராடியவர்கள், பொடாவில் உள்ள போய் இருக்க வேண்டியதுதான்.

எல்லா விஷயங்களிலும் சீறுகிற ஜெயலலிதா, சிதம்பரம் நடராஜன் விஷயத்தில காட்டிய மவுனம் அதைதான் உணர்த்தியது. (நமது போர்வாள் வைகோவோ, ‘சிதம்பரம் நடராஜனோ, சசிகலா நடராஜனோ எல்லோரும் ஒண்ணுதான்’ என்கிற அத்துவைத நிலையில இருந்துவிட்டர்.)

“தேவாரம், திருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது?” என்று கேட்கிறார்கள், இல. கணேசன்கள்.

அவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.

ஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது. அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்துவது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும்.
அதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது.
ஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதராவக வந்தார்கள்.

“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்ன நியாயம்?” கேட்கிறார்கள், இராம. கோபாலன்கள்.

நீ போய் பாட வேண்டியதுதானே?  நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள்? உன்னுடைய பக்தி பாடல்களைத்தானே பாடினார்கள்.
தமிழா? சமஸ்கிருதமான்னு நெருக்கடி வரும்போது, உன் பார்ப்பன யோக்கியதை  எப்படி  பல்ல காட்டுதுன்னு பாத்தீயா?  (ஜெயேந்திரன் பல்லு மாதிரி)
உன் யோக்கியதை சரியல்லை. பக்தர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதனால்தான், அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள் பாடி தொலைச்சாங்க.

மற்றபடி நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி  சொற்பொழிவில்,
“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காதலாகிக் கசிந்து கண்ணீர்
மல்கி ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்
பொருளாவது நாதன்
நாமம் நமச்சிவாய வே.

என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே  பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?
இதோ தந்தை பெரியார் சொல்கிறார்:
“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் – பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று” இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.

இப்படி பிஞ்சிலேயே பழுத்தவன்,  எழுதிய தேவாரத்தை நாத்திகர்கள் பாடுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், பார்ப்பன  மேல்ஜாதி திமிரை எதிர்க்க, அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதிதான்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கையில் ஒரு சம்பவம். நடிகவேள் சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.

உடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க?” என்று கேட்டாரம்.

அதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.

அதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.

கோயில் நுழைவுப் போராட்டம், கருவறைப் நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியதா இருக்கு. எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு. என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு பக்தர்களோட பக்தி.

***
`அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்`

பார்ப்பனர்கள் இதை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேவாரம், திருவாசகத்தை பாடுவதையே தன் தொழிலாக கொண்ட – திருநாவுக்கரசு, ஞானசம்பந்தனோட வாரிசு என்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனரல்லாத ஆதினங்கள் இதை குறித்து வாய் திறக்கவில்லையே?

ஆதினங்களின் மவுனத்திற்கு பின் இருக்கிறது பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை.

ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப்  பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்”  என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.

தீட்சிதர்களின் திமிரை அடக்கவும், ஆதினங்களின் கள்ள மவுனத்தை குலைக்கவும் -சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்கவேண்டும். சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். சிதம்பரம் கோயிலில் நந்தன் நுழைந்த பகுதி என்பதற்காக ‘தீண்டாமை’யின் அடையாளமாக இருக்கிற தெற்கு வாசல் சுவரை இடித்து அதை திறக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் போடுவோம்.

இந்த முறை ‘ஜோதி’யில் கலப்பது தீட்சிதர்களாக இருக்கட்டும்.

***

பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் கேட்டுக் கொண்டுதற்காக, ‘கருஞ்சட்டை தமிழர்இதழக்கு 2008 மார்ச் 24 அன்று எழுதப்பட்ட கட்டுரை. ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்கள் வெளிவராததால், கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

`தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும்’ பாரதி அருளுரை!

 

 

 

 

 

பாரதி ஜனதா பார்ட்டி‘ – 19

 

ஐந்தாவது அத்தியாயம்

 

 

மிழகத்தில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில், புதுச்சேரியில் அரவிந்தருடன் மிகத் தீவிரமாக ஆன்மிகத் தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், இந்திய விடுதலைப் போராட்ட நெருப்புக்கு தன் கவிதைகளால் நெய் ஊற்றிய சுப்பிரமணிய பாரதி.

 

1912 இல் பகவத்கீதையை தமிழுக்கு புதுச்சேரியில் இருந்துதான் மொழி பெயர்த்தார். பிறகு கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற மகாவீர காவியங்களையும் புதுச்சேரியில் இருந்தே எழுதினார். 1909 இல் ஞானரதம்ஏறி தேவலோகம் சென்றிருந்தார். அதுவும் புதுச்சசேரியில் இருந்துதான் (ஞானரதம் என்ற நூலில் 1910 வெளியிடப்பட்டது)

 

நீதிக்கட்சி துவங்கியபின் மீண்டும் சுதந்திரப் போராட்டத்தைத் தூசி தட்டியெடுத்து, அந்தக் கால கட்ட வருணாசிரமத்தின் தலைவனான திலகரின் கொள்கையை தீவிரமாக ஆதரித்துக் கட்டுரைகள் எழுதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் நீதிக்கட்சிக்கு தரும் ஆதரவை கண்டு அஞ்சி நடுங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தார்; நீதிக்கட்சித் தலைவர்களை திட்டித் தீர்த்தார்.

 

மண்டல் குழு பரிந்துரைகளை வி.பி. சிங் நடைமுறைப்படுத்தியபோது, அதை எதிர்த்து அத்வானிரத யாத்திரை நடத்தியதுபோல், நீதிக்கட்சியின் வகுப்புவாரி உரிமை கோரிக்கையை எதிர்த்து, மிகத் தீவிரமாக இந்து மதத்தின் அருமைபெருமைகளை எழுத ஆரம்பித்தார்.

 

தாழ்த்தப்பட்ட மக்களே உண்மையான இந்துக்கள்என்று பூக்களால் மூடப்பட்ட பாறங்கல்லைத் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் தலையில் போட்டார் பாரதி.

 

இந்து மதத்திற்குள் இருக்கும் ஜாதிய வேறுபாடுகளைக் குறிப்பிட்டு அது இந்து மதத்தின் செயலல்ல, இந்துக்களின் செயல் என்று திரிபுவாதம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும். மாமிசம் தின்பதை குறிப்பாக பசுமாமிசம் தின்பதை விட்டுவிட வேண்டும். விட்டு விட்டால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று அருளுரை வழங்கினார்.

 

(தாழ்த்தப்பட்ட மக்கள் பசுமாட்டு இறைச்சி உண்பதை கேள்விக்குட்படுத்தி டாக்டர் அம்பேத்கர் சொன்னதோடு இதை முடிச்சுப்போட்டு பார்க்கிறார்கள் சிலர். இப்படிச் செய்வது திரிபுவாதம், அயோக்கியத்தனம்.

 

பாரதி, பசுமாட்டை தாழ்த்தப்பட்ட மக்களை விடவும் உயர்ந்ததாக, புனிதமாகக் கருதுகினார். ஆம், அவர் பசுக்களின் சார்பாக கதறுகிறார். டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக, சொல்கிறார்.

 

ஆர்.எஸ்.எஸ். காரர்களின் சுதேசியஉணர்வுக்கும், முற்போக்களார்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?)

 

ஆனாலும், காங்கிரசின் மிதவாத, தீவரவாத தலைவர்கள் கடைப்பிடித்த தீண்டாமை, தாழ்த்தப்பட்டவர்களை அவமானப்படுத்தி அவர்கள் பேசிய பேச்சு எழுத்து இவைகளைக் கேட்டும் கண்டும் செவிடராய், ஊமையாய் நடித்தார். அப்படிப் பேசிய தலைவர்களையே தன் தலைவராகக் கொண்டார்; அவர்களையே உயர்த்திப் பிடித்தார்.

 

1918இல் நீதிக்கட்சி, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குழந்தைகளை சென்னை மாநகராட்சி மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முயற்சித்தபோது, பாரதி உச்சி மீது வைத்து மெச்சிக் கொள்கிற காங்கிரஸ் அவையின் உறுப்பினரான அன்னிய தேசத்துப் பெண் அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள்,

” (தாழ்த்தப்பட்டவர்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில்  அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

நீதிக்கட்சியும் பறையர் மகாஜன சபையும் அன்னி பெசன்டுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

 

பாரதி மிகச் சிறந்த பெண்மணிஎன்று உதாரணப் பெண்ணாகக் குறிப்பிடுகிற அன்னிபெசன்டின் லட்சணம் இது.

 

மிகச் சிறந்தவரே இப்படி என்றால், மோசமானவர் எப்படியோ?

 

ஒரு ஆளுக்கு நாலு மகன்கள் இருந்தனராம், வீடடுக்கு வந்த விருந்தாளி, “உங்க நான்கு பையன்களில் நல்லவன் யாரு?’ன்னு கேட்டாராம்.

அதுக்கு அந்த ஆளு சொன்னாராம், “அதோ வீட்டு கூரைமேல நின்னுக்கிட்டு தீப்பந்தத்தைத் தூக்கிப் போட்டு விளையாடிக்கிட்டு இருக்கானே, அவன்தான் என் செல்லக்குட்டிஅப்படின்னாராம்!

 

தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி