`தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும்’ பாரதி அருளுரை!

 

 

 

 

 

பாரதி ஜனதா பார்ட்டி‘ – 19

 

ஐந்தாவது அத்தியாயம்

 

 

மிழகத்தில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில், புதுச்சேரியில் அரவிந்தருடன் மிகத் தீவிரமாக ஆன்மிகத் தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், இந்திய விடுதலைப் போராட்ட நெருப்புக்கு தன் கவிதைகளால் நெய் ஊற்றிய சுப்பிரமணிய பாரதி.

 

1912 இல் பகவத்கீதையை தமிழுக்கு புதுச்சேரியில் இருந்துதான் மொழி பெயர்த்தார். பிறகு கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற மகாவீர காவியங்களையும் புதுச்சேரியில் இருந்தே எழுதினார். 1909 இல் ஞானரதம்ஏறி தேவலோகம் சென்றிருந்தார். அதுவும் புதுச்சசேரியில் இருந்துதான் (ஞானரதம் என்ற நூலில் 1910 வெளியிடப்பட்டது)

 

நீதிக்கட்சி துவங்கியபின் மீண்டும் சுதந்திரப் போராட்டத்தைத் தூசி தட்டியெடுத்து, அந்தக் கால கட்ட வருணாசிரமத்தின் தலைவனான திலகரின் கொள்கையை தீவிரமாக ஆதரித்துக் கட்டுரைகள் எழுதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் நீதிக்கட்சிக்கு தரும் ஆதரவை கண்டு அஞ்சி நடுங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தார்; நீதிக்கட்சித் தலைவர்களை திட்டித் தீர்த்தார்.

 

மண்டல் குழு பரிந்துரைகளை வி.பி. சிங் நடைமுறைப்படுத்தியபோது, அதை எதிர்த்து அத்வானிரத யாத்திரை நடத்தியதுபோல், நீதிக்கட்சியின் வகுப்புவாரி உரிமை கோரிக்கையை எதிர்த்து, மிகத் தீவிரமாக இந்து மதத்தின் அருமைபெருமைகளை எழுத ஆரம்பித்தார்.

 

தாழ்த்தப்பட்ட மக்களே உண்மையான இந்துக்கள்என்று பூக்களால் மூடப்பட்ட பாறங்கல்லைத் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் தலையில் போட்டார் பாரதி.

 

இந்து மதத்திற்குள் இருக்கும் ஜாதிய வேறுபாடுகளைக் குறிப்பிட்டு அது இந்து மதத்தின் செயலல்ல, இந்துக்களின் செயல் என்று திரிபுவாதம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும். மாமிசம் தின்பதை குறிப்பாக பசுமாமிசம் தின்பதை விட்டுவிட வேண்டும். விட்டு விட்டால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று அருளுரை வழங்கினார்.

 

(தாழ்த்தப்பட்ட மக்கள் பசுமாட்டு இறைச்சி உண்பதை கேள்விக்குட்படுத்தி டாக்டர் அம்பேத்கர் சொன்னதோடு இதை முடிச்சுப்போட்டு பார்க்கிறார்கள் சிலர். இப்படிச் செய்வது திரிபுவாதம், அயோக்கியத்தனம்.

 

பாரதி, பசுமாட்டை தாழ்த்தப்பட்ட மக்களை விடவும் உயர்ந்ததாக, புனிதமாகக் கருதுகினார். ஆம், அவர் பசுக்களின் சார்பாக கதறுகிறார். டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக, சொல்கிறார்.

 

ஆர்.எஸ்.எஸ். காரர்களின் சுதேசியஉணர்வுக்கும், முற்போக்களார்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?)

 

ஆனாலும், காங்கிரசின் மிதவாத, தீவரவாத தலைவர்கள் கடைப்பிடித்த தீண்டாமை, தாழ்த்தப்பட்டவர்களை அவமானப்படுத்தி அவர்கள் பேசிய பேச்சு எழுத்து இவைகளைக் கேட்டும் கண்டும் செவிடராய், ஊமையாய் நடித்தார். அப்படிப் பேசிய தலைவர்களையே தன் தலைவராகக் கொண்டார்; அவர்களையே உயர்த்திப் பிடித்தார்.

 

1918இல் நீதிக்கட்சி, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குழந்தைகளை சென்னை மாநகராட்சி மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முயற்சித்தபோது, பாரதி உச்சி மீது வைத்து மெச்சிக் கொள்கிற காங்கிரஸ் அவையின் உறுப்பினரான அன்னிய தேசத்துப் பெண் அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள்,

” (தாழ்த்தப்பட்டவர்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில்  அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

நீதிக்கட்சியும் பறையர் மகாஜன சபையும் அன்னி பெசன்டுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

 

பாரதி மிகச் சிறந்த பெண்மணிஎன்று உதாரணப் பெண்ணாகக் குறிப்பிடுகிற அன்னிபெசன்டின் லட்சணம் இது.

 

மிகச் சிறந்தவரே இப்படி என்றால், மோசமானவர் எப்படியோ?

 

ஒரு ஆளுக்கு நாலு மகன்கள் இருந்தனராம், வீடடுக்கு வந்த விருந்தாளி, “உங்க நான்கு பையன்களில் நல்லவன் யாரு?’ன்னு கேட்டாராம்.

அதுக்கு அந்த ஆளு சொன்னாராம், “அதோ வீட்டு கூரைமேல நின்னுக்கிட்டு தீப்பந்தத்தைத் தூக்கிப் போட்டு விளையாடிக்கிட்டு இருக்கானே, அவன்தான் என் செல்லக்குட்டிஅப்படின்னாராம்!

 

தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி