பாஜகவிற்கு ஆதரவாக ப. சிதம்பரம்

 

கர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றி, இந்துத்துவத்திற்குக் கிடைத்த வெற்றிதானே?
-ஏ. சுரேஷ்.

ஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும், ‘இந்துத்துவ மதவாத அரசியல்’ பெரும்பாலும் இந்திய நகரங்களில் நடக்கிற அரசியல். அல்லது இஸ்லாமியர்கள் இருக்கிற பகுதிகளில் மட்டும் நடக்கிற அரசியல்.

கிராமப்புறங்களில் இந்து அமைப்புகள், மதவாத அரசியலை நடத்துவதில்லை. அது அங்கு எடுபடாது.

பெருவாரியான கிராமங்களில் ‘இந்து மதம்’ என்று ஒன்று இருப்பதாக பல இந்துக்களுக்கு தெரியாது.
கிராமங்களில், “நீங்க யாரு?” என்று மக்களிடம் கேட்டால், அவர்கள் ‘இந்து’ என்று சொல்லமாட்டார்கள். மாறாக, தாங்கள் சாந்திருக்கிற ஜாதி பெயரைத்தான் சொல்லுவார்கள்.

அதனால்தான் பாஜக போன்ற மதவாத அமைப்புகள், கிராமப்புறங்களில் உயர்ஜாதிக்காரர்களோடு, பண்ணையார்களோடு இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலை நடத்துகிறார்கள். (நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.)

தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து கோயில்களில் சமஉரிமைக்காகப் போராட முன்வரும்போது, ஜெயேந்திரனில் இருந்து ராமகோபாலன் வரை உள்ள பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகதான் நடந்து கொள்வார்கள். நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக ‘இந்துத்துவம்’ என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.

இப்படியிருக்கையில், கர்நாடக தேர்தல் முடிவு இந்துத்துவத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு என்று அர்த்தம் ஆகாது.

மாறாக அது மத்திய காங்கிரஸ் அரசின் கையாலாகாத ஆட்சியால், ஏற்பட்டிருக்கிற விலைவாசி உயர்வு மற்றும்  மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மதவெறியும், ஜோதிட வெறியும் பிடித்த ஜெயேந்திரனின் அடிமையும் ஆன தேவகவுடா மற்றும் அவர் குடும்பத்தினரின் அதிகார வெறி, இவைகள்தான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம். கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறியிருக்கிற ஆட்சி மாற்றம்.

விலைவாசியை கட்டுக்கடங்காமல் உயர்த்திவிட்டு, அது ஏன் உயர்ந்திருக்கிறது என்று விளக்கம் கொடுப்பதற்கு மட்டும்தான் பயன்படுகிறது பொருளாதார மேதைகளான பிரதமர், நிதியமைச்சரின் ‘மாபெரும்’ படிப்பறிவு. (இதைதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சொல்லிக்கொடுக்கிறான் போல)

வருகிற நாடளுமன்ற தேர்தலில் பாஜகவை  வெற்றி பெற வைத்தே தீருவது என்று தீவிரமாக இயங்குகிறார்கள், அமெரிக்க தாசர்களான ப. சிதம்பரமும், மன்மோகன் சிங்கும்.
(தேர்தல்ல ஓட்டு ‘புஷ்ஷா’ வந்து போடப்போறாரு?)