இயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்

கு.ராமகிருஷ்ணன், சீமான், ஆறுச்சாமி

24 ஆம் தேதி கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’ பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், இயக்குநர் சீமானின் சிறப்புரையோடு சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நமது நிகழ்ச்சியை நடத்தவிடாமல் இருப்பதற்காக, காவல் துறையிடம் பொய் புகார் கூறியும், அரங்க உரிமையாளர்களை மிரட்டியும் இருக்கிறார்கள். அதையும் மீறி 600 க்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்போடு விழா சிறப்பாக நடந்ததில் மதவெறி கும்பலுக்கு கடுப்பு.

`ராம. கோபலான் பெரிய வீரன்` என்று இல. கணேசன் சொல்வது போல, `கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கோட்டை` என்ற ஒரு பச்சைப் பொய்யை பரப்பி வைத்திருந்தார்கள், பா.ஜ.க. காரர்களே.

(‘பெருமாள், திருமால், விஷ்ணு, கண்ணன், ராமன்’ என்று ஒரே ஆளே பல பெயரில் இருப்பது போல், ஒரே கும்பல்தான் ‘பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்’ என்கிற பெயரில், பெரிய கூட்டம் தன் பின்னால் இருப்பது போன்ற ஒரு `பில்டப்பை` தந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.)

‘உங்கள் கோட்டையிலேயே வந்து எங்கள் கொடியை ஏற்றுகிறோம்’ என்று அண்ணன் ராமகிருஷ்ணன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ‘கோட்டையிலேயே’ பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சீமானின் எழுச்சி உரை மக்களை மகிழ்ச்சியிலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களை ஆத்திரத்திலும் ஆழ்த்தியது.

துப்பாக்கியில் இருந்து தோட்டக்கள் சீறுவதுபோன்ற சீமானின் பேச்சால், ஆர்.எஸ்.எஸ். காரர்களின் ‘மண் கோட்டை’ சிதறி தெரித்தது.

‘நமது பகுதியில் வந்து மக்களை தன் வயப்படுத்தி, நமது கோட்டையை தரைமட்டும் ஆக்குகிறானே சீமான்’ என்கிற இயலாமை ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வெற்று கோபமாக வெளிப்பட்டது.

15 பேர் கொண்ட மதவெறி கும்பல் கூட்டத்தில் வந்து குழப்பம் விளைவிக்க, பார்த்து கொண்டிருந்த பொதுமக்களும், சில பெரியார் தொண்டர்களும், அவர்களை நன்கு ‘கவனித்து’ விரட்டி அடித்தார்கள்.

இந்த எதிர்ப்புக்குப் பிறகும் இன்னும் எழுச்சியோடு பேசிய சீமானின் உரை, மதவெறி கும்பலை ஆத்திரமூட்டியது. அருகில் போய் எதிர்ப்பு தெரிவித்தால் பொதுமக்களிடம் அடிவாங்க வேண்டி இருக்கும் என்பதால், தூரத்தில் இருந்து ராமனை போன்ற ‘வீரத்தோடு’, மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிவிட்டு ஓடியது அந்த ‘வீர’ கும்பல்.

தமிழகம் முழுக்க சீமான் எங்கு போய் பேசினாலும், அவர் பேச்சை கேட்டு திகில் அடைகிறது இந்து மதவெறி கும்பல்.

காரணம், மக்களிடம் மிக பிரபலமான ஒருவர், பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் சவால் விட்டு பேசுவதும், சீமானின் பேச்சு மிகுந்த வீச்சோடு பல இளைஞர்களை ஒரு பௌதிக சக்தியாக பற்றி கொள்வதையும் அதனால் தங்கள் இருப்பு கால் நழுவி போவதையும் உணர்கிறார்கள் மதவெறி கும்பல்.

அதன் பொருட்டேதான் சீமான் எங்கு போய் பேசினாலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.

சீமானின் தமிழ் தேசிய கருத்துகளோடும் ‘எவனோ ஒருவன்’ என்கிற படத்தில் அவருடைய பங்களிப்பு குறித்தும் நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் –

பிரபலமானவராக இருந்து கொண்டு, அதுவும் சந்தர்ப்பவாதிகளும், சூதாடிகளும், சுயமோகிகளும், சமூகவிரோதிகளும், பதவி வெறியர்களும் நிறைந்த சினிமாவில் இருந்து கொண்டு – பெரியாரின் கருத்துகளுகாகவும், பார்ப்பனிய இந்து மதவெறி கும்பலை எதிர்த்தும் வீதியில் இறங்கி சமரசம் இல்லாமல்,

தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியது.

இந்து பாசிச கும்பலை எதிர்த்து தீவிரமாக இயங்குகிற சீமானுக்கு, வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு அவரின் இந்த செயலுக்கு நாம் தீவிர ஆதரவும் அளிப்போம்.

– வே.மதிமாறன்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

‘மாணவர்களுக்கு கம்பராமாயணத்தில் உள்ள அறிவியல் கருத்துகளை சொல்லிக் கொடுஙகள்’ என்று பெரியார் உடன் இருந்து அரசியலுக்கு வந்த ஆர்.எம். வீரப்பன் சொல்லியிருக்கிறாரே? இதுதான் பெரியார் சீடர்களின் யோக்கியதையா?

-கு. கலாநிதி.

பெரியார் உடன் நாய், பூனை எல்லாம்தான் இருந்தது. அதெல்லாம் பகுத்தறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான் பகுத்தறிவா?

‘அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் நூலை படியுங்கள். மத நூல்களில் அறிவியலை தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது’ என்று பெரியாரே இதுபோன்ற மோசடி அறிஞர்களின் கருத்துகளை கண்டித்திருக்கிறார்.

ஆர்.எம். வீரப்பன் என்ற ‘விஞ்ஞானியின்’ ஆலோசனையை கேட்டு நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்குவது என்றால் போய் பொறுக்குங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

ஓகஸ்ட்19, 2008

பாரத் மாத்தாக்கி ஜே…

* காந்தியை சுட்டுக் கொன்றான் ஒரு பார்ப்பன இந்து மதவெறியன். இப்படியாக துவங்கியது சுதந்திர இந்தியாவின் சாதனை.

* ஜகத்குரு ஜெயேந்திரர் என்கிற துறவி, சங்கரராமன் என்பவரை கூலி படை வைத்து கொலை செய்தார்.

*குஜராத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் குத்தி கருவில் இருந்த குழந்தையையும் கொன்றார்கள் மோடி தாசர்கள்.

*செத்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக, மூன்று தாழ்த்தப்பட்டவர்களை கொன்று, அவர்களின் தோலை உரித்தார்கள் ஜாதி இந்துக்கள்.

*கடன் தொல்லையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

*வறுமையின் காரணத்தினால் நெசவாளர்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்றார்கள்.

*அதே காரணத்திற்காக பெண்கள், வாடகை தாய்களாக மாற்றப்பட்டு உடல் மற்றும் உளவியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

*காவல் துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்து விபச்சார விடுதியில் விற்றனர்.

*தாய்நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்வதாக சொல்லப்படுகிற, நம்பப்படுகிற ராணுவத்தினர் – தொடர்ந்து பெண்களை தூக்கி வந்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்வதை கண்டித்து, அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ அலுவலகம் முன்பு நிர்வாணமாக நின்று தங்கள் எதிரிப்பை தெரிவித்தனர் அந்த வீரமிக்க பெண்கள். அந்த அவமானம் கொஞ்சமும் உரைக்காமல் மிடுக்கோடு தேசத்திற்காக ‘பாடுபடுட்டு’க் கொண்டுதான் இருக்கிறார்கள், தாய்நாட்டின் மானம் காப்பவர்கள்.

*கட்டடம் மற்றும் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு, தங்குவதற்கு வீடு இல்லாததால், சாலையோரத்தில் தங்கி ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் லாறி ஏறி சாகிறார்கள்.

*தனது பதவி காலம் முடிந்த பிறகும் அரசு வீடுகளை காலி செய்ய மறுத்தனர் முக்கியஸ்தர்கள். செய்வதறியாது விழிப்பது போல் நடிக்கிறது – அரசும், நீதி மன்றமும்.

*சாலை விரிவாக்கத்திற்காக குடிசைகள் பிய்த்தெரியப்பட்டதால், திக்கு தெரியாமால் விழிக்கிறார்கள் வீடு அற்றவர்கள்.

*“சுதந்திர இந்தியா பெருமளவில் உயர்ந்திருக்கிறது.” குடியரசுத் தலைவரும் – பிரதமரும் பெருமை பொங்க உரையாற்றுகிறார்கள்.

*ரிலைன்ஸ் அம்பானியின் தவப்புதல்வர்கள் குட்டி முதலாளிகளாக இருந்து பெரும் முதலாளிகளாக உயர்ந்திருக்கிறார்கள்.

*வறுமையிருந்தாலும், நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது என்கிறார் நிதியமைச்சர்.

*நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் கட்டு கட்டாக பணம் கை மாறியது.

*அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருந்த இந்திய ஆளும் கும்பலின் தேசப்பற்று மிக்க சுதந்திர தின உரையைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டிருப்பார் ஜார்ஜ் புஷ்.

60 ஆண்டுகளைத் தாண்டியும் சுதந்திர இந்தியாவின் சாதனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க அதன் தொண்டு.

மகாத்மா காந்தியின் சொந்த ஊரான குஜராத்தை தனக்கும் சொந்த ஊராக கொண்ட, காந்தியவாதியைப் போல் சிக்கனமாக உடை உடுத்தும் நடிகை நமீதா எதோ ஒரு தொலைக்காட்சியில் சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்….

பாரத் மாத்தாக்கி ஜே… ஜெய்ஹிந்த்.

2008/08/15 அன்று எழுதியது.

தொடர்புடையது:

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!

முற்போக்காளர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதே தவறு என்று சொல்கிறீர்களா?
-எஸ். ரமேஷ்.

ம்முடைய கருத்தை வெகுஜன ஊடகங்களில் சொல்வது ஒரு நல்ல வாய்ப்புதான். ஆனால் பெரும்பான்மையான முற்போக்கு முகாமை சேர்ந்த எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களில் தன் கருத்தை பிரபலப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தை விடவும் தன்னை பிரபலபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எழுத்தும் அதைதான் உணர்த்துகிறது.


தான் சார்ந்து இருக்கிற கொள்கைகளுக்கு குழி தோண்டுவதாக இருந்தாலும் பரவாயில்லை. தன்னை அங்கீகரித்தால் போதும், என்கிற தொனி தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் பிரபலமாகுகிறார்கள். அவர்கள் எழுதிய விஷயங்கள் மறந்தே போகிறது.


பெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்காக எழுதுவதாகவும், பத்திரிகை  நடத்துவதாகவும் ஆரம்பிக்கிற இளைஞர்கள், ஒரு பார்ப்பனர் அரையாண்டு சந்தாவாக ரூ. 50 கட்டினாலோ அல்லது பார்ப்பனர்கள் தன்னை பாராட்டி விட்டாலோ தங்கள் பார்ப்பன எதிர்ப்பை மூட்டை கட்டி விட்டு – அணு உலை எதிர்ப்பு, சுற்று சூழல், நவீன கவிதை, என் கவுண்டர் கொலைகள் எதிர்ப்பு, அலிகள் முன்னேற்றம், ஒலிம்பிக், சினிமா, உலக அதியசங்கள் என்று.. அதாவாது பார்ப்பனர்கள் மனது கோணாமால், பார்ப்பனர்களோடு சேர்ந்து  ‘ஒரு என்.ஜி.ஓ பிராஜக்ட்’ மாதிரி கும்மி அடிக்கிறார்கள்.


இந்தியாவிற்கு என்றே இருக்கிற பிரேத்தியேகமான, முதன்மையான பிரச்சனையான ‘சாதி ஆதிக்கம், தீண்டாமை, இந்து மத தீங்கு போன்றவற்றை எழுதாமல் முற்போக்காளர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்’  என்ற சந்தர்ப்பவாதத்திலேயே துவங்குகிறார்கள், இன்றைய இளைஞர்களும்.


கொள்கைக்காக பத்திரிகை என்று ஆரம்பித்து, பிறகு பத்திரிகை நடத்துவதே கொள்கையாக மாறிபோகிறார்கள்.

ரஷ்ய புரட்சிக்கு பின் தலைவர் லெனின் தலைமையில் அமைந்த சோசலிச குடியரசை எதிர்த்து உலகம் முழுக்க உள்ள முதலாளித்துவ நாடுகளும், முதலாளிகளும் தங்கள் பத்திரிகைகளில் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு உள்ளூரில் இருந்த எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் பணம் மற்றும் ஆயுதம் கொடுத்து உதவின.


1918 முதல் 1922 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தமும், அன்னிய தலையிடும் தலைவர் லெனின் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ‘முடிந்தது சோவியத் குடியரசு’ என்று முதலாளித்துவ பத்திரிகைகள் உலகம் முமுவதும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.


இந்த நெருக்கடியான காலத்தில் தலைவர் லெனின் பல வெளிநாட்டு பத்திரிகையாளர்களை தானே விரும்பி அழைத்துச் சந்திக்கிறார், ஒரு நிபந்தனையுடன்.


“எனது பதில்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பத்திரிகைகளில் முழுமையாக வெளியிடப்படும் என்று எழுத்து மூலம் தரப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்ற நிபந்தனையின பேரில் எனக்கு அளிக்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுதான் அந்த பேட்டியை துவங்குகிறார்.


பேட்டியில் முழுக்க முழுக்க முதாலாளித்துவ நாடுகளையும் முதலாளிகளையும் அவர்களின் ஊடகங்களையும் காறி உமிழ்ந்து, சவாலுக்கு அழைக்கிறார் தலைவர் லெனின்.

அமெரிக்க பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியிருந்து சில வரிகளை உதாரணத்திற்கு தருகிறேன்.


“அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருட்டு முதலாளிகளை ருஷ்ய விவசாயிகள் வீரத்தோடு எதிர்த்து நிற்கின்றனர்”

“முதலாளிகளால், பூர்ஷ்வா வர்க்கத்தால் ‘அதிகப்பட்சம்’ இன்னமும் சில லட்சம் தொழிலாளர்கள், விவசாயிகளைச் சுட்டுக் கொன்று ஏதாவது ஒரு தனிப்பட்ட நாட்டில் சோசலிசத்தின் வெற்றியைத தள்ளிப் போட முடியும். ஆனால் முதலாளித்துவத்தைக காப்பாற்ற அவர்களால் முடியாது.”

“சோவியத் அரசாங்கங்களைத் தவிர மற்றெல்லா அரசாகங்களும் ஒடுக்குமுறை, வெகு ஜனங்களை ஏமாற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன.”


வெகு ஜன ஊடகங்களை நம் கொள்கைகளை சொல்வதற்கு எப்படி பயன்படுததுவது என்று தலைவர் லெனின் காட்டிய வழி இது.


நமது முற்போக்கு எழுத்தாளர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதை தவறு என்று சொல்லவில்லை. அதில் எழுதுகிற காரணத்திற்காகவே, அந்த இதழ்களின் வர்த்தக நோக்கத்திலான கீழ்த்தரமான செய்திகளை இவர்கள் வெளியில் கூட கண்டிப்பதே இல்லை. (பல எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை எப்படி வேண்டுமானாலும் வெட்டி, மாற்றினாலும் பரவாயில்லை. பிரசுரமானல் போதும் என்கிற பரிதாப நிலையில் வெகுஜன ஊடகங்களில் ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்கள்.)

தான் சார்ந்திருக்கிற கொள்கைக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடும்போது கூட அவர்கள் ஒரு பற்றற்ற ஞானியைப் போல் நடந்து கொள்கிறார்கள்.

இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.

ஆரிய சமாஜ்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர்

 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 23

 

ஆறாவது அத்தியாயம்

 

பாரதியின் இந்த அவஸ்தைகளுக்கும், ஆவேசத்திற்கும் காரணம், உலகின் தலைசிறந்த, ஈடு இணையற்ற ஒரே தத்துவம் வேதங்களே என்று அவர் நம்பியது.

 

‘வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’

என்று அழுத்தமாக வேத ஆணி அடிப்பதும்,

 

‘பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே

பார்மிசையே தொரு நூல் இதுபோலே’ என்று சவால் விடுவதும்,

 

பாரத மாதவிற்கு திருபள்ளி எழுச்சிப் பாடும் போதுகூட,

‘தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்திரு நாமம் ஓதிநிற்கின்றார்’ என்று உருகுவதும்,

 

‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பாளோ பாரததேவி! ‘

மாரட்டிய சிவாஜியின் குரல் வளையாய் கூக்குரலிடுவதும்,

 

‘வேத வுப நிடத மெய்நூல்க ளெல்லாம் போய்

பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே’

(`பேதைக் கதைகள்’ என்று பாரதி குறிப்பிடுவது பைபிளையும் குரானையும்)

என்று புலம்பலுமாய் இருந்த வேத வெறிபிடித்த சுப்பிரமணிய பாரதியைப் போன்ற ஆரிய சமாஜ்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்,

 

“ஆரிய சமாஜிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் மற்றொருவகை இந்துப் பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் வேதங்களைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். வேதங்களில் இல்லாத எதையும் புறக்கணிப்பவர்கள் என்கிற வகையில் இவர்கள் வைதீர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். வேதங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதே இவர்களது கோட்பாடு.

 

வேதங்கள் நிலைபேறுடையவை, சாசுவதமானவை, ஆரம்பமோ அந்தமோ இல்லாதவை, பிழைபாடில்லாதவை. இதே போன்று இந்த வேதங்களின் அடிப்படையில் அமைந்த இந்து சமூக அமைப்புகளும் நிலைபேறுடையவை, ஆரம்பமோ அந்தமோ இல்லாதவை, பிழையாதவை என்று நச்சுப்பிரச்சாரம் செய்து, இந்து சமுதாயத்தை ஒரு தேக்கநிலை சமுதாயமாக ஆக்கும் மிகப் பெரும் தீங்கை ஆரிய சமாஜிகள் இழைத்துள்ளனர்.

இத்தகைய ஒரு பொய்யான நம்பிக்கையைப் பரப்புவதன் மூலம் ஒரு சமுதாயத்திற்குச் செய்யும் மிக மோசமான தீமை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆரிய சமாஜிகளின் இந்த சித்தாந்தம் முற்றலுமாக அழித்தொழிக்கப்பட்டாலொழிய, இந்து சமுதாயம் தன்னைச் சீர்திருத்திக் கொள்ளும் அவசியத்தை ஏற்றுக் கொள்ளாது என்று நான் திடமாக நம்புகிறேன்.”

 

டாக்டர் அம்பேத்கர் விவரிக்கும் ஆரிய சமாஜின் தத்துவப் பின்னணிதான் பாரதிக்கும்.

 

-தொடரும்

 

பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. மதனுக்கு பாராட்டு விழா நடத்தியதை கேள்வி பட்டது மிகுந்த மன வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக மதனுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்?

-டி. ரமேஷ்.

 

அன்பே சிவம் படத்திற்கு ‘சிறப்பான முறையில்’ வசனம் எழுதினாராம். அதற்காக பாராட்டு விழா என்று சொல்லிக் கொண்டார்கள்.

 பொதுவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த முன்னணி எழுத்தளார்கள், கலைஞர்களுக்கு ‘பிரபலமாக வேண்டும்’ என்ற எண்ணமும், சினிமா ஆர்வமும் தீவிரமாக இருக்கிறது.

 மதன் – பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா பிரபலங்களிடம் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை பாராட்டினால் ‘அவர் நம் வாழ்க்கையில் ஒளி ஏத்தி வைப்பார்’ என்கிற எண்ணம் தான் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவிற்கு காரணமாக இருக்கும்.

அதை நிரூபிப்பது போல் இந்த எழுத்தளார்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற கிசு கிசு பத்திரிகைகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை.

இது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தாரின் நிலை மட்டுமல்ல, முற்போக்காக எழுதுவாதக சொல்லிக் கொள்கிறவர்களும் – தகுதி, திறமையான இலக்கியவாதிகளின் நிலையும் இதுவே. 

வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களில் பலர், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களோடு அவர்கள் பழகுகிற தன்மை மிகுந்த ‘கலை நுட்பம்’ வாய்ந்ததாக இருக்கும். அன்பு மழை பொழிவார்கள். 

எந்த சமரசமும் இல்லாமல் நேர்மையாக எழுதுகிறவர்களை காரணமே இல்லாமல் குறை சொல்லுகிற இவர்கள், சம்பந்தப்பட்ட பத்திரிகையில் கிசு கிசு எழுதுகிற பத்திரிகையாளராக இருந்தாலும் அவருடைய எழுத்தை புகழ்ந்து அவரிடம் அவர்கள் பேசுகிற தன்மை அவ்வளவு ‘இலக்கிய செறிவு’ உள்ளதாக இருக்கும். 

என்ன பண்ணறது பாவம். அவர்கள் எழுத்தாளர்கள் ஆயிற்றே!

உறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம்

சென்னை துரைப்பாக்கத்தில் , குப்பையில் கிடந்த வெள்ளியை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறு, மூன்று பேரின் கொலையில் முடிந்திருக்கிறது. வெறும் நூறு ரூபாய் மதிப்புள்ள அந்த மலிவான உலோகம், மகத்தான மூன்று மனித உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. வெள்ளியே இந்தப்பாடு படுத்தியிருக்கிறதென்றால், தங்கம் என்ன என்ன செய்யும்?

நடுத்தர வர்க்கத்தை ஆட்டிப்படைகிறது தங்கம். அதன் விலையேற்றம் பல பெண்களின் திருமணத்தை நிறத்தியிருக்கிறது, தாமதப்படுத்தியிருக்கிறது. திருமணமான பல பெண்களை புகுந்த வீட்டிலிருந்து விரட்டியடித்திருக்கிறது.

மாப்பிள்ளையாக தங்கத்தை பார்த்து மகிழும் ஆண் — ஒரு பெண்ணின் தந்தையாக – சகோதரனாக இருக்கும் போது தங்கத்தை பார்த்து பயந்து நடுங்குகிறான்.

ஆம், பெண் – ஆண் என்ற வேறுபாடு இல்லாமல் மனிதர்களின் மூலையை பெருமளவில் ஆக்கிரமித்திருக்கிற ஒரே உலோகம் தங்கம் தான். இது ஆட்டுகிற பேயட்டத்திற்கு நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருமே ஆடத்தான் செய்கிறார்கள்.

காரணம், ‘சொத்து’ என்ற வடிவத்துக்கு வீடு, நிலம் போக பெரிய பங்காற்றுவது தங்கம்தான். தங்கம் பணத்தின் மதிப்பைப் பெற்றதால் அது மனிதர்களின் உறவை முடிவுசெய்கிறது. அவர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தைத் தீர்மானிக்கிற உலோகமாக தங்கம் உருமாறியிருக்கிறது.

சில நேரங்களில் அது மனிதர்களை அற்பமானவர்களாகவும் மாற்றிவிடுகிறது.

‘தங்கள் உறவை விட தங்கம்தான் உயர்ந்தது’ என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, உறவுகளைப் பகையாக்கி, நட்பை விரோதமாக்கி, மனிதர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறிது தங்கம்.

‘தங்கம் தனக்கு பாதுகாப்பு’ என்ற நிலையில் ஆரம்பித்து ‘தங்கமே தனக்கு பகையாக` மாறிய கதைகளும் ஏராளம்.

தங்கத்தை பறிப்பதற்காக உயர்த்தப்பட்ட வாள், `உயிரை பறித்தால்தான் தங்கம் கைக்கு வரும்’ என்ற நிலையில், உலகெங்கிலும் பல போர்களை நடத்திருக்கிறது.

வரலாற்றில் வாளுக்கும், தங்கத்திற்கும் நடந்த இந்தச் சண்டையை புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் புஷ்கின் தன் கவிதையில் இப் படிக் குறிப்பிடுகிறார்.

‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது தங்கம்.

‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது வாள்.

‘‘என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’’ என்றது தங்கம்.

‘‘என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’’ என்றது வாள்.

ஆம், மன்னர் காலத்தில் இருந்து இன்றைய ஜனநாயக காலம் வரை போரில் வெற்றி பெற்ற நாடு, தோல்வியடைந்த நாட்டில் புகுந்து குறி வைத்து சூறையாடியது தங்கத்தைதான். தங்கம் எந்த நாட்டில் அதிகம் இருக்கிறதோ, அந்த நாட்டை நோக்கி படையை நகர்த்துவது வலுத்த நாட்டினர் வழக்கம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கஜினி முகமது, ‘ இந்து கோயிலுககுள் புகுந்தார்’ என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் அவர் நோக்கம் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதல்ல. இந்தியாவில் பெருமளவிலான தங்கம் கோயிலுக்குள் இருந்ததே காரணம். இந்தியாவின் இந்து மன்னர்கள் கூட இன்னொரு இந்து நாட்டின் மீது படையெடுத்து சென்றபோது, அந்த ஊர் கோயிலுக்குள் புகுந்து தங்க நகைகளை சூறையாடி இருக்கிறார்கள் என்பது வரலாறு.

இப்போதுகூட, தனிநபர்களின் பெரும்பான்மையான கொலைகளுக்கு மதம், ஜாதி, உறவு என்ற நிலைகளை எல்லாம் தாண்டி, தங்கமே அந்தக் கொலைகளை செய்திருக்கிறது.

தங்கம் மஞ்சள் நிறத்தில் மினுமினுப்பாக இருந்தாலும் வரலாற்றில் அதன் நிறம் ரத்தக் கறை படிந்தே கிடக்கிறது. தங்ம் மனித உறவுகளை சிதைத்து, ரத்தக்களறியை ஏற்படுத்தியதை மனதில் கொண்டு, தலைவர் லெனின் 1921 ஆம் ஆண்டு இப்படிச் சொன்னார்:

‘‘உலகளவில் நாம் வெற்றி பெற்ற பின்னர், உலகத்தின் மிகப் பெரும் நகரங்களில் சிலவற்றின் தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களைக் கட்டுவதற்கு தங்கத்தை பயன்படுத்துவோம் என நினைக்கிறேன். 1914-18ம் வருடங்களில் நடைபெற்ற யுத்தத்தில் தங்கத்துக்காக பத்து மில்லியன் மக்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? முப்பது மில்லியன் மக்கள் எப்படி ஊனப்படுத்தப்பட்டார்கள் என்பதை இன்னும் மறந்துவிடாத தலைமுறைக்கு மிக ‘நியாயமான’ முறையில் மிகவும் அறிவுட்டுகிற வகையில் தங்கத்தை பயன்படுத்துவது..’’

ஆம், தங்கம இன்றைய மனிதர்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருளாக மாறியிருக்கிறது. பணம் கொடுத்து தங்கம் வாங்குங்கள். அதைப் பத்திரமாக பாதுகாத்தும் வையுங்கள்.

தங்கமா? மனிதமா? என்று வரும்போது , மனிதர்கள் பக்கம் நில்லுங்கள்.

தங்கத்தை விட மட்டுமல்ல, எந்த உலோகததை விடவும் உயர்ந்தவர்கள மனிதர்கள்.

தினகரன். 1.3.2006 ல் எழுதியது. வே.மதிமாறன்

எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்


23/07/08 அன்று சென்னை, பெரம்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, கே.பி. சுந்தராம்பாளுக்கும் இதுவே நூற்றாண்டாக இருப்பதனால் அவர்களுக்கும் விழா எடுக்கவிருப்பதாக அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அறிவித்தார். இவர்களோடு கே.பி. சுந்தராம்பாள்? எங்கோ இடிக்கிறதே.

இவர்கள் காந்தியையும் பகத்சிங்கையும் கொண்டாடுவது போல, பாரதியையும் பெரியாரையும் உயர்த்திப்பிடிப்பதுபோல, எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பா ளையும் இணைத்து விழா எடுக்கிறார்களோ என்னவோ?

-கலைவேந்தன்.

கே.பி. சுந்தராம்பாள் தன் காலம் முழுவதும் பார்ப்பன சேவகத்திலேயே முடித்துவிட்டார். அவருடைய ‘பார்ப்பன சேவை’ ஒரு சாதரண இந்து பக்தரை போன்ற அறியாமையால் அமைந்ததல்ல. அது மிக சரியாக திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நடந்தது. அதிலும் குறிப்பாக நீதிக் கட்சி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம் மற்றும் பெரியார் எதிர்ப்பு இவைகளுக்காகத்தான் அவருடைய திறமை பயன்பட்டது.

சத்தியமுர்த்தி அய்யர் என்கிற ஒரு ஜாதி வெறி பார்ப்பனரின் ஊதுகுழலாக செயல்பட்டவர்தான் சுந்தராம்பாள். கிட்டப்பா என்கிற பார்ப்பனருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அவருடன் இணைந்து தமிழகம் முழுவதும் தேசப்பக்தி பாடல்கள் என்ற போர்வையில் நீதிக்கட்சி எதிர்ப்புப் பாடல்களை பாடினார்.

தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிட்டப்பாவின் முதல் குடும்பத்தாரிடம் இழந்தார். வறுமையில் சிக்கினார். மீண்டும் பார்ப்பன சேவையில் ஈடுபட்டு வசதியான நிலைக்கு உயர்ந்தார்.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் தராத ரூ. 1 லட்சம் தந்தார். அந்த தொகை கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் திறமைக்குத் தரப்பட்டத் தொகை அல்ல. அவரின் பெரியார் எதிர்ப்புக்கு தரப்பட்டத் தொகை.

ஆனாலும் அதே எஸ்.எஸ். வாசனின் ‘ஆனந்த விகடன்’ ஒருமுறை கே.பி.எஸ் அவர்களை ஜாதி பெயர் சொல்லி கேவலப்படுத்தி திட்டியபோது, பெரியார் ஒருவர்தான் ஆனந்த விகடனை கண்டித்து, சுந்தராம்பாளை ஆதரித்தார்.

நடிகவேள் எம்.ஆர். ராதா பெரியாரின் போர்வாளாக தமிழக மேடைகளில் சுழன்று கொண்டிருந்தபோது, அவருடைய நாடகத்தை எதிர்த்து தனி சட்டம் கொண்டு வந்து, தடை செய்த கும்பல் கே.பி. சுந்தராம்பாளை ஆதரித்த கும்பல்.

ஆனாலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘சுந்தராம்பாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்’, எந்த அரசியல் காரணங்களும் அற்று ‘பிரபலமான கலைஞர்’ என்கிற முறையில் கொண்டாடக் கூடியதாக இருக்கும் என்று உணர்கிறேன்.

இது போன்ற தேவஷங்களை அல்லது திதிகளை ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற `மனமகிழ்` மன்றகங்கள்தான் கொண்டாடும். அது போல் ஒரு மன்றமாகத்தான் இருக்கிறது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

ஏற்கனவே இந்த மனமகிழ்மன்றத்தார், ஒரு இந்து தீவிரவாதி எடுத்த ‘பம்பாய்’ என்கிற ஒரு தேச விரோத படத்துக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.

தலைவர் ஸ்டாலினை மிக கேவலமாக எழுதிய ஆபாச எழுத்தாளன் ‘மதன்’ என்பவருக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கறார்கள்.

ஆக, இவர்கள் கே.பி. சுந்தராம்பாளுக்கு விழா கொண்டாடுவது தவறில்லை.

நடிகவேளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதுதான் தவறு.

ஆர்.எஸ்.எஸ்.காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல.
*
நாம எழுதியதால் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது; பிறகு இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை தமுஎச.

ஓகஸ்ட்4, 2008

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்

‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்

 

 

டாக்டர் அம்பேத்கரின் பேச்சும்-எழுத்தும் பெரும்பாலும் புத்தகங்களாக வந்திருக்கிறது. காந்தியின் பேச்சும்-எழுத்தும் கூட புத்தகங்களாக வந்திருக்கிறது. பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், பேச்சுகள் கூட பெருமளவில் வந்திருக்கிறது. இன்னும் வந்து கொண்டே இருக்கிறது.

 

இந்த மூன்று பேரில் டாக்டர் அம்பேத்கரின் தொகுப்புகள்தான் நமக்கான ஆயுதமாக இருக்கிறது.

 

ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தன் மரணம் வரை,  தினந்தோறும் மக்களை சந்தித்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறைவான அளவே புத்தகங்களாக வந்திருக்கிறது.

 

இன்னும் இன்னும் அவரின் பேச்சும்-எழுத்தும் பல தொகுதிகளாக வராதா என்று பெரியார் தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இந்தப் பெரும்பணியை செய்ய ‘வசதிபடைத்த’ யாரும் முன்வராததால், தன்மீது போட்டுக் கொண்டு, தன்னுடைய பொருளாதார சக்தியையும் மீறி, தந்தை பெரியார் நடத்திய ‘குடியரசு’ இதழ்களை தொகுத்து, நூல்களாக கொண்டு வருகிறது பெரியார் திராவிடர் கழகம்.

 

1925 முதல் 1938 முடிய பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதும் தொகுக்கப்பட்டு 27 தொகுதிகளாக பெரியார் பிறந்த நாளானா செப்டம்பர் 17 அன்று வெளிவரவிருக்கிறது.

 

இந்த வரலாற்று சிறப்பு மிக்க பணியை செய்யும் ‘பெரியார் திராவிடர் கழத்திற்கு’ நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறாம்.

 

ரூ. 5400 விலையுள்ள இத் தொகுதிகள் முன் பதிவு திட்டத்தின் கீழ் ரூ. 3500க்கு கிடைக்கும்.

 

டிராப்ட், மணியார்டர் மூலம் மட்டும் பணத்தை அனுப்பவும். (T.S. MANI என்ற பெயருக்கு டிராப்ட் எடுக்க வேண்டும்)

 

அனுப்ப வேண்டிய முகவரி:

தா.செ. மணி, பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை – 1, சேலம் மாவட்டம்&636 401.