பாவம் அவர்கள் எழுத்தாளர்கள்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. மதனுக்கு பாராட்டு விழா நடத்தியதை கேள்வி பட்டது மிகுந்த மன வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக மதனுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்?

-டி. ரமேஷ்.

 

அன்பே சிவம் படத்திற்கு ‘சிறப்பான முறையில்’ வசனம் எழுதினாராம். அதற்காக பாராட்டு விழா என்று சொல்லிக் கொண்டார்கள்.

 பொதுவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த முன்னணி எழுத்தளார்கள், கலைஞர்களுக்கு ‘பிரபலமாக வேண்டும்’ என்ற எண்ணமும், சினிமா ஆர்வமும் தீவிரமாக இருக்கிறது.

 மதன் – பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா பிரபலங்களிடம் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை பாராட்டினால் ‘அவர் நம் வாழ்க்கையில் ஒளி ஏத்தி வைப்பார்’ என்கிற எண்ணம் தான் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவிற்கு காரணமாக இருக்கும்.

அதை நிரூபிப்பது போல் இந்த எழுத்தளார்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்ற கிசு கிசு பத்திரிகைகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை.

இது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தாரின் நிலை மட்டுமல்ல, முற்போக்காக எழுதுவாதக சொல்லிக் கொள்கிறவர்களும் – தகுதி, திறமையான இலக்கியவாதிகளின் நிலையும் இதுவே. 

வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களில் பலர், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களோடு அவர்கள் பழகுகிற தன்மை மிகுந்த ‘கலை நுட்பம்’ வாய்ந்ததாக இருக்கும். அன்பு மழை பொழிவார்கள். 

எந்த சமரசமும் இல்லாமல் நேர்மையாக எழுதுகிறவர்களை காரணமே இல்லாமல் குறை சொல்லுகிற இவர்கள், சம்பந்தப்பட்ட பத்திரிகையில் கிசு கிசு எழுதுகிற பத்திரிகையாளராக இருந்தாலும் அவருடைய எழுத்தை புகழ்ந்து அவரிடம் அவர்கள் பேசுகிற தன்மை அவ்வளவு ‘இலக்கிய செறிவு’ உள்ளதாக இருக்கும். 

என்ன பண்ணறது பாவம். அவர்கள் எழுத்தாளர்கள் ஆயிற்றே!