ஆரிய சமாஜ்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர்

 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 23

 

ஆறாவது அத்தியாயம்

 

பாரதியின் இந்த அவஸ்தைகளுக்கும், ஆவேசத்திற்கும் காரணம், உலகின் தலைசிறந்த, ஈடு இணையற்ற ஒரே தத்துவம் வேதங்களே என்று அவர் நம்பியது.

 

‘வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’

என்று அழுத்தமாக வேத ஆணி அடிப்பதும்,

 

‘பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே

பார்மிசையே தொரு நூல் இதுபோலே’ என்று சவால் விடுவதும்,

 

பாரத மாதவிற்கு திருபள்ளி எழுச்சிப் பாடும் போதுகூட,

‘தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்திரு நாமம் ஓதிநிற்கின்றார்’ என்று உருகுவதும்,

 

‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பாளோ பாரததேவி! ‘

மாரட்டிய சிவாஜியின் குரல் வளையாய் கூக்குரலிடுவதும்,

 

‘வேத வுப நிடத மெய்நூல்க ளெல்லாம் போய்

பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே’

(`பேதைக் கதைகள்’ என்று பாரதி குறிப்பிடுவது பைபிளையும் குரானையும்)

என்று புலம்பலுமாய் இருந்த வேத வெறிபிடித்த சுப்பிரமணிய பாரதியைப் போன்ற ஆரிய சமாஜ்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்,

 

“ஆரிய சமாஜிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் மற்றொருவகை இந்துப் பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் வேதங்களைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். வேதங்களில் இல்லாத எதையும் புறக்கணிப்பவர்கள் என்கிற வகையில் இவர்கள் வைதீர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். வேதங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதே இவர்களது கோட்பாடு.

 

வேதங்கள் நிலைபேறுடையவை, சாசுவதமானவை, ஆரம்பமோ அந்தமோ இல்லாதவை, பிழைபாடில்லாதவை. இதே போன்று இந்த வேதங்களின் அடிப்படையில் அமைந்த இந்து சமூக அமைப்புகளும் நிலைபேறுடையவை, ஆரம்பமோ அந்தமோ இல்லாதவை, பிழையாதவை என்று நச்சுப்பிரச்சாரம் செய்து, இந்து சமுதாயத்தை ஒரு தேக்கநிலை சமுதாயமாக ஆக்கும் மிகப் பெரும் தீங்கை ஆரிய சமாஜிகள் இழைத்துள்ளனர்.

இத்தகைய ஒரு பொய்யான நம்பிக்கையைப் பரப்புவதன் மூலம் ஒரு சமுதாயத்திற்குச் செய்யும் மிக மோசமான தீமை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆரிய சமாஜிகளின் இந்த சித்தாந்தம் முற்றலுமாக அழித்தொழிக்கப்பட்டாலொழிய, இந்து சமுதாயம் தன்னைச் சீர்திருத்திக் கொள்ளும் அவசியத்தை ஏற்றுக் கொள்ளாது என்று நான் திடமாக நம்புகிறேன்.”

 

டாக்டர் அம்பேத்கர் விவரிக்கும் ஆரிய சமாஜின் தத்துவப் பின்னணிதான் பாரதிக்கும்.

 

-தொடரும்

 

Leave a Reply

%d bloggers like this: