ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

-வே. மதிமாறன்

டந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட  ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள்.

ஒன்று தமிழ் சினிமா.

இரண்டு ஜோதிடம்.

உலகத்தின பல நாடுகளின் தியைரங்குகளில் தமிழ்சினிமா திரையிடப்பட்டதே, ஈழத் தமிழர்கள் உலகம் முழுக்க குடியேறிதற்குப் பிறகே. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ‘பாடல் ஒலித்தகடு, திரையரங்கில் திரைப்படம் திரையீடு, திரைப்பட சிடி விற்பனை’ என்று பல கோடிகள், ஏறக்குறை 25 சதவீதம் ஈழத்தமிழர்களின் பாக்கெட்டில் இருந்துதான் பிடுங்கப் படுகிறது.

இதுபோக இந்தத் தமிழ் சினிமாவின் ஊதாரிகள் பலருக்கு, இன்ப சுற்றுலா, நட்சத்திர இரவு (கலை நிழ்ச்சியாம்) என்று நிகழ்ச்சி நடத்தி அதில் வேறு பணம். அநேகமாக ஈழத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடுகிற போராளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளைவிட தமிழ் சினிமா ஊதாரிகளுக்கு இவர்கள் செய்த உதவிகள் நிச்சயம் அதிகம் இருக்கும்.

பெண்களை, தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேலமாக சித்தரிக்கும் – ஜோதிடம் என்கிற ஒரு மனிதகுல வீரோத மூடநம்பிக்கையின் மீது, தமிழக தமிழர்களைவிட ஆழ்ந்தப் பற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்து பல ஜோதிடர்களை வெளிநாட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்து, ஏரளாமான பணம் கொடுத்திருக்கிறார்கள். கொடுக்கிறார்கள். தமிழர்களின் பேராதரவின் காரணமாக பல ஜோதிடர்கள், ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபேர’ என்று உலல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஈழம் எப்போது அமையும்?’ என்று போராளிகளை நம்புவதை விட, ஜோதிடர்களை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை, ஈழத்தமிழர்களால் பெரும் லாபம் அடையும் மேற் சொன்ன இருவரும், வாய் திறந்து கருத்து சொல்லக் கூட மறுக்கிறார்கள். ஜோதிடர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது நேரடியாக தெரிந்ததே. அவர்களுக்கு ‘நேரம் சரியில்லை’ என்று கூட புரிந்த கொள்ளலாம். ஆனால் சினிமாவையும் தாண்டி பல்வேறு சமூக பிரச்சினைகளில் அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிற சினிமாக்காரர்களை அப்படி ஒரே வார்த்தையால் வரையறுக்க முடியாது.

***

சினிமாக்காரர்களில் இயக்குநர் சீமான் முயற்சியால், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்டவர்களைத் தவிர, வேறு யாரும் தன்னிச்சையாய் அறிக்கைக் கூட தரவில்லை. (இயக்குநர் மணிரத்தினம் இதிலும் கலந்து கொள்ளவில்லை.) நடிகர்கள் அதிலும் குறிப்பாக நாடாள ஆசைப்படும் நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முத்திய அல்லது மூத்த நடிகர்கள் யாரும் சுயமாக வாய் திறக்கவில்லை.

சாதாரண விஷயத்திற்குக்கூட ஊர் நியாயம் பேசுகிற இவர்கள், தமிழர்கள் தாக்கப்படுவதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட கண்டிக்கவில்லை. ஒக்கேனேக்கல் விவகாரத்தில் சத்யராஜ் பேச்சை, ஏளனம் செய்து, நாகரீகமற்ற பேச்சாக கண்டித்து, ‘வன்முறை தீர்வாகாது. அவர்களை போல் நாம் நடந்து கொள்ளக்கூடாது.’ என்று ஜென்டில்மேன் போல் வசனம் பேசினார் கமல்ஹாசன். அதற்கு முன்பு  தன்னுடைய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியானபோது, திருட்டு விசிடியை எதிர்த்து சென்னை பாரிமுனையில் ரோட்டில் இறங்கி ‘துணிச்சலாக’ சண்டை போட்டவர்தான் இவர். இந்த மிஸ்டர் கிளினும் நாகரிகமான முறையில் கூட தனது கண்டனத்தை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தெரிவிக்கவில்லை.

கர்நாடகத்தை ஒரு பெரிய ‘மார்க்கெட்டாக’ நினைத்து நடுக்குகிற இந்த நடிகர்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் தமிழர்களிடம் வர்த்தகம் நடத்திக் கொண்டே, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு கண்டனத்தை கொடுக்கக் கூட தயங்குகிறார்கள் இந்த அட்டைக் கத்தி வீரர்கள். இந்த டூப் நாயகர்கள், கும்பல் கூடி நவம்பர் 1 அன்று ஊமைபோல் இவர்கள் இருக்கபோகும் அடையாள உண்ணாவிரதம், இவர்களின் நடிப்புத் திறமைக்கு சிறந்த சான்றாகத்தான் இருக்கும்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழர்களும் இந்த எதிர்ப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.

இன்ப சுற்றுலாவிற்கும், படப்பிடிப்பிற்கும் வரும் இவர்களை அங்கிருந்த விரட்ட வேண்டும். இது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள், தன் தாயக ஈழத்தமிழர்களுக்கு செய்யும் பேருதவியாகத்தான் கருத்தப்படும். இந்தப் பேருதவியை செய்வார்களா ? அல்லது ரஜினியின் எந்திரனுக்காக காத்திருப்பார்களா? அல்லது ஜோதிடர்களை கேட்டு முடிவெடுப்பார்களா? பார்ப்போம்.

ஜெயலலிதாவின் சூழ்ச்சி – சீமான், அமீர் கைது – காங்கிரசின் மகிழ்ச்சி


தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் – வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)

ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.

‘கருணாநிதியே ஆட்சியை ராஜினமா செய்’ என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிராகரித்த முதல்வர், ‘சீமான்-அமீரை கைது செய்’ என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நிராகரித்து இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை குலைத்த, குலைக்கிற ஜெயலலிதாவிற்கு துணைபோகாமல், உடனடியாக ‘சீமான், அமீரை’ தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

சமீபமாக ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் தராமல், ‘விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று குழுப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

***

மிழக அரசின் முயற்சியால், சிங்கள ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஒத்துக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு. நேற்றுவரை ‘அப்பாவி தமிழர்கள் தாக்கப்படவில்லை’ என்று ஆணித்தரமாக பொய் சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சே, இப்போது இந்த நடவடிக்கையால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

சிங்கள ராணுவத்தின் வன்முறையை, மனித உரிமை மீறலை இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையன நெருக்குதலை தரவேண்டும். இல்லையேல், இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும், நாம் இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிக் கொண்டே இருப்போம், என்பது அவலத்திற்குரியது.

‘ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்’ என்கிற இந்த முயற்சி, குண்டடிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சம் மூச்சு விட உதவும். ஆனால், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் குண்டுகளிலிருந்து இது காப்பாற்றாது.

40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.

-வே. மதிமாறன்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல


மிழ் சினிமாவை காட்சி அமைப்புகளின் மூலமாக இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர். சினிமா மொழியை விரிவாக கையாண்ட முதல் தமிழ் திரைப்பட இயக்குநர். தனது வித்தியாசமான கேமரா கோணங்களால், தமிழ் சினிமாவை அழகுபடுத்தியவர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி இப்படி பல சிறப்புகள் சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஸ்ரீதருக்கு உண்டு.

ஹாலிவுட் படங்கள், அய்ரோப்பிய படங்கள் ‘க்ரைம்’ படம் என்றால் முழு நீளப் படமும், க்ரைம் சூழலையே சுற்றி வரும். ‘காமெடி’ என்றால், படம் முழுக்க காமடியே. அதுபோல்தான் இவரின் ஆரம்ப கால படங்களும் அமைந்திருந்தன. குறிப்பாக இவரின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். (அதற்கு முன் பம்மல் சம்பந்த முதலியார் எழுதி, ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இயக்கிய ‘சபாபதி’ திரைப்படம்தான் தமிழின் முதல் ழுழு நீள நகைச்சுவைப் படம்)

ஒரே லொக்கேஷனில் (மருத்துவமனை) ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தை குறைந்த நாட்களுக்குள் தரமாக எடுத்து தமிழில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர் ஸ்ரீதர். பின்னாட்களில் இந்தப் படத்தைதான் கொஞ்சம் உல்டா செய்து, அதைபோன்றே ஒரே லொக்கேஷனில் ‘நீர்க்குமுழி’ என்று படத்தை எடுத்தார் கே. பாலச்சந்தர்.

வேலையற்ற இளைஞர்களை மையமாக வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய ‘நெஞ்சிருக்கும் வரை’ படம், கொஞ்சம் மாற்றங்களோடு, பார்ப்பனத் தன்மை கலந்து பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்று மாறியது.

Fantasy பாணியிலான மறுஜென்ம கதையான இவருடைய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் நம்புபடியாக இல்லாவிட்டாலும் கூட ரசிக்கும் படியாக இருந்தது. இந்தக் கதையைதான் பின்னாட்களில் நடிகர் நாசர் தனது இயக்கத்தில் ‘தேவதை’ என்ற பெயரில் ரசிக்கக் கூட முடியாதபடி எடுத்திருந்தார்.

‘சினமா என்கிற ஊடகம் முழுக்க முழுக்க பொழுது போக்கிற்கான கலைவடிவம் மட்டும்தான்’ என்கிற எண்ணம் இயக்குநர் ஸ்ரீதரிடம், மிக ஆழமாக இருந்திருக்கிறது. அதனால்தான், ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, ‘மனிதர்களுக்கு பிரச்சினை காதல் மட்டும்தான்’ என்பதுபோல் சோகம், நகைச்சுவை என்று வேறு வேறு வடிவங்களில் காதலையே பெரும்பாலும் காட்டிக் கொண்டிருந்தார்.

மிகப் பெரும்பாலும் பொழுது போக்கு படங்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் எடுத்த ஒன்று-இரண்டு அரசியல் படங்களும், ‘நாலு Fight அஞ்சு Song’ என்கிற போழுது போக்கு பாணியில்தான் அமைந்திருந்தது.

அதன் பொருட்டே இவர் பின்னாட்களில் எடுத்த மீனவ நண்பன், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடிகிறது, நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னைத் தொடு, நானும் ஒரு தொழிலாளி, துடிக்கும் கரங்கள் போன்ற படங்களில் வழக்கமான அவருடைய நேர்த்தியான வடிவத்தைக் கூட அவரால் தர முடியவில்லை.

இதில் உரிமைக் குரல் திரைப்படம் மிக மோசமான திரைப்படங்களுக்கு முன்மாதிரியாக விளங்கியது. இந்தப் படத்தில்தான் பெண்களின் பேராதரவுப் பெற்ற, ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘காயா இல்லை பழமா? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார்.

இவர் இயக்கிய படங்களில் ‘வெண்ணிற ஆடை’ மிகுந்த அழகியலோடு, நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். வடிவம் ஐரோப்பிய சினிமா பாணியில் அமைந்தது. உள்ளடக்கம் இந்து பழமையில் ஊறிய கதை. நவீன பாணியில் படம் அமைந்திருந்தாலும், பணக்கார இளம் விதவைக்குக்கூட மறுமணம் செய்து வைக்க முடியவில்லை ஸ்ரீதரின் நவீன பாணி சினிமாவால்.

‘வெண்ணிறாடை’ படத்திற்கு இவர் நடிகர்களை தேர்வு செய்தது பிராமண சங்கத்தில் இருந்தோ, என்று எண்ணுகிற அளவிற்கு பார்ப்பனர்களால் நிரம்பி வழிந்தது அந்தப் படம்.

அந்தப் படத்தில் அறிமுகமான ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, டைப்பிஸ்ட் கோபு, நீலு இவர்கள் மட்டுமல்ல – ஏற்கனவே நடிகர்களாக இருந்த மேஜர் சுந்தரராஜன், லட்சுமியின் அம்மா ருக்மணி இன்னும் துணை நடிகர்கள் கூட பார்ப்பனர்கள்தான். அநேகமாக அந்தப் படத்தில் இயக்குநர் ஸ்ரீதரை தவிர எல்லோரும் பார்ப்னர்களாகத்தான் இருந்தனர்.

‘பார்ப்பனர்களுக்கு அதிக வாய்ப்புத் தரவேண்டும்’ என்கிற எண்ணம் இயக்குநர் ஸ்ரீதரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ‘தன்னுடைய கதாபத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்களா?’ என்பது மட்டும்தான் ஸ்ரீதரின் கவனமாக இருந்திருக்கும். அதனால்தான் அவர் படங்களில் பார்ப்பன கதாபாத்திரங்கள் அநேகமாக இல்லை. ஆனாலும் அந்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களால்தான் நிரப்பப்பட்டது.

காரணம், ஸ்ரீதரை சுற்றி எப்போதும் மிகப் பெரிய பார்ப்பன கும்பல்தான் இருந்தது. அவர்கள் கொண்டு வருகிற, பரிந்துரைக்கிற நபர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதன் பொருட்டுதான், பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனியத்தை விமர்சிக்காதவர்களுக்கு மட்டும்தான் ஸ்ரீதர் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் இருந்தது.

அதனால்தான் உலகின் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவரான நடிகவேள் எம்.ஆர். ராதாவிற்கு, ஸ்ரீதரின் ஒரு படத்தில் கூட வாய்ப்புத் தரவில்லை. பெரியாரின் கொள்கைகளில் ஊறிய நடிகவேளுக்கு வாய்ப்புத் தரவில்லை என்பதால், ஸ்ரீதரை திறமையற்றவர் என்று சொல்லி விட முடியாது. தனக்கு லாபம் இல்லை என்பதாலோ, தன்னை புறக்கணிப்பதாலோ தரமான ஒன்றை தரமற்றது என்று சொல்வதும், திறமையான ஒருவரை முட்டாளாக சித்தரிப்பதும்தான் பார்ப்பனியம்.

இந்தி சினிமாவின் இயக்குரும் நடிகருமான ராஜ்கபூர் போன்ற, இசைக்கு அல்லது பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து படம் எடுத்த இந்தியாவின் திறமையான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஸ்ரீதர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி.

தொடர்புடையது:

சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

குழந்தையைக் கிழிக்கும் புத்தகங்கள்


ந்தப் பெற்றோர்கள் எந்த நேரமும் பயமும், பதட்டமுமாகவே இருந்தார்கள்.
என்ன ஆயிற்று அவர்களுக்கு?
குடும்பத்தில் எதாவது பெரிய பிரச்சனையா?
குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையா?
அதெல்லாம் ஒன்றுமில்லை தங்கள் மகனுக்கு முழு ஆண்டுப் பரீட்சை நெருங்கிவிட்டது. பரீட்சைக்கு தயாராகிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு வந்திருப்பது பரீட்சை ஜுரம் (Exam Fever)

அவர்களின் பயமும், பதட்டமும் அவர்களின் ஒரே மகனையும் பற்றிக் கொண்டது. குடும்பமே மிரண்டு போய் கிடக்கிறது.
சரி. அப்படி இருண்டு போய் கவலைப்படும் அளவிற்கு என்னதான் படிக்கிறான் அவன்?
ஒன்றாம் வகுப்பு.

இந்தக் காட்சி இந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. எல்லா நடுத்தர வர்க்கத்தின் நிலையும் இதுதான்.
தன் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் பக்குவமற்றதுதான் குழந்தை. குழந்தையின் பொருட்டே பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள். தவறில்லை. அதுதான் பெற்றோர்களின் கடமையும் கூட.

ஆனால் பெற்றோர்கள், குழந்தையின் எதிர்காலம் குறித்து மட்டுமல்ல, தங்களின் எதிர்காலம் அவர்களின் கனவு, -கவுரவம் என்று எல்லாவற்றையும் தன் ஐந்து வயது குழந்தையின் தலையிலேயே சுமத்துகிறார்கள். அதன் பொருட்டே அவர்களும் பாரம் சுமக்கிறார்கள். தன் மகன் 90 சதவீதம் மதிப்பெண் வாங்கினால் அதைப் பாராட்டாமல்,

“டேய் மார்ட்டினை பார்த்தியாடா அவன் 95 மார்க்கு வாங்கியிருக்கான். இத்தனைக்கும் அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க இல்ல. அவ்வளவா வசதிவேறு இல்லாதவங்க. கிராமத்துல இருந்து வந்தவன். பள்ளிக்கூடத்திற்கு நல்ல சாப்பாடு கூட அவன் கொண்டுவர்றதில்லை. யாரோ அவனோட மாமா அவனை படிக்க வைக்கிறாராம். அப்படியிருந்தும் அந்தப் பையன் நல்லா படிக்கிறான். நல்லா படிச்ச எங்களுக்கு பொறந்துட்டு ஏண்டா எங்க மானத்தை வாங்குற? அடுத்த முறை அவனை விட நீ ஒரு மார்க்காவது கூட வாங்கனும் இல்லாட்டி செமத்தியா அடி விழும்” என்று அந்த பிஞ்சின் நெஞ்சில் தாழ்வுமனப்பான்மையையும் சக மாணவனை பற்றியான பொறாமை எனும் நஞ்சையும் கலக்கின்றனர் பெற்றோர்கள்.

துன்புறுத்தல் என்பது விரோதியிடமிருந்து, விரோதமான வடிவத்தில்தான் வரும் என்பதில்லை. அது அன்பானவர்களிடமிருந்தும், அன்பான வடிவத்திலும் வரும். முற்றிப் போன சக்கரை நோயாளிக்கு, வாய்நிறைய திருப்பதி லட்டை அன்போடும், பக்தியோடும் திணித்துப் பாருங்கள். அந்த லட்டே கொலைக்கருவியாகவும், நீங்கள் கொலைகாரராகவும் மாறியிருப்பீர்கள்.

இரும்பை எடுத்து தலையில் போட்டால் மண்டை பிளந்து போகும் என்பது தெரிந்ததே.
ஆனால், ‘மலர்கள் மோதி மரணம் நிகழுமா?’
நிகழும். அதன் அளவும். எடையும் கூடும்போது. டன் கணக்கில் பூக்களை மூட்டையில் அடைத்து, அதை ஒரு மனிதன் மீது தள்ளிப்பாருங்கள். அங்கேயே அவன் நசுங்கிச் சாவான்.

ஆம், ‘குழந்தைகளை வளப்படுத்துவதற்கே’ வந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கல்வியே. அவர்களின் குழந்தை பருவத்தையும் சாகடித்து விடுகிறது.
15-கிலோ எடையுள்ள குழந்தை 10-கிலோ எடையுள்ள புத்தக மூட்டையை சுமக்கிறது.
நியாயமா இது?
5-வயதாகும் குழந்தைக்கு 11 வகையான பாடத்திட்டம். அடுக்குமா இது?
ஒரு பொறுப்புள்ள அரசு இப்படித்தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்குமா?

***

அந்த உயர்நிலைப்பள்ளியில், அன்று காலை 11.00 மணியளவில் விடுமுறை விடப்பட்டது. குழந்தைகளுக்கு ஒரே குதூகலம். திடீர் விடுமுறைக்கும் – குதூகலத்திற்கும் காரணம் என்ன?
ஆசிரியர் இறந்து விட்டாராம்.
என்ன அவலம் இது? ஆசிரியர் இறந்ததற்கு குதூகலமா?

ஆம், அந்த ஆசிரியர் மிகவும் கறாரான பேர்வழி. பிரம்பெடுத்தாரென்றால், அது முறியும் வரை மாணவனை அடிப்பாராம். இட்லரைப் பற்றியும் மாணவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார். ஆனால் அவர் இறந்த அன்று மாணவர்கள் இப்படிப் பேசிக் கொண்டார்களாம். ‘டேய், இட்லர் செத்துப் போய்ட்டானாம்.’

ஒரு ஆசிரியரின் மரணம், மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதென்றால், இந்த அவலத்திற்கு யார் பொறுப்பு? சுய சிந்தனையை வளர்க்காத, மனிதாபிமானத்தை சொல்லித்தராத, வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே சொல்லித் தருகிற இந்த மனப்பாட கல்வி முறையல்லவா காரணம். படித்தவன் தானே -‘லஞ்சம், ஊழல்’ என்று நாட்டைப் பாடாய் படுத்துகிறான்.

அப்படியானால் குழந்தைகளைப் புரட்டி, புரட்டியடிக்கும் இந்தப் படிப்பை என்ன செய்வது?
முறைப்படுத்த வேண்டும்.

‘ஏற்றத் தாழ்வற்ற கல்வி. எல்லாக் குழந்தைகளுக்கும். ஒரே மாதிரியான பாடத் திட்டம் கொண்ட தாய்மொழிக் கல்வி. குழந்தைகளின் இயல்பைப் புரிந்து கொண்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டி ஆற்றலை வளர்க்கும் காழ்புணர்ச்சியற்ற இலவசமானக் கல்வி என்று ஒழுங்குப்படுத்த வேண்டும்.

யார் செய்வது இதை?
வேறு யார்?
அரசுதான் செய்ய வேண்டும்.
செய்யுமா?
செய்ய வைக்க வேண்டும்,

அதுவரை…?
உங்கள் குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு, அவர்களின் திறன் (Capacity)) ஆர்வம் என்னவென்று தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் பயிற்சி கொடுங்கள்.
இல்லையேல். அதீத அக்கறையும் ஆபத்தாகவே முடியும். குழந்தைகள் படிப்பாளியாக மட்டும் வளர்ந்தால் போதாது. அவர்கள் அறிவாளியாகவும், சகமனிதனின் துயரங்களை புரிந்து கொள்பவராகவும் திகழ வேண்டும்.

ஆம், அவர்கள் உங்கள் குழந்தைகள்தான். அதற்காக அவர்களை அன்பாக துன்புறுத்தாதீர்கள். உங்கள் குழந்தை பருவத்தில் எதெல்லாம் உங்களைச் சங்கடப்படுத்தியது. எதெல்லாம் சந்தோசப்படுத்தியது என்று நினைவுபடுத்திப் பாருங்கள். நியாயம் புரியும்.

மாமேதை லெனின் சொல்வார். ‘சாட்டையால் அடித்துச் சொர்க்கத்திற்கு அனுப்பாதீர்கள்’.

-வே. மதிமாறன்.

‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் 2002 ஆண்டு எழுதியது.

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை


பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை அதன் ஐயங்கார் பார்ப்பன தன்மைக்காக, 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதது:

ழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன ‘இந்து’ ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் – தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.

விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். <மாலினி பார்த்தசாரதியின் ‘மலநாற்றம்’ வீசும் கட்டுரை வெளியிட்ட ‘இந்து’ ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.

நன்றி
புரட்சி பெரியார் முழுக்கம். (16-10-2008)

த்திரிகைளுக்கு எதிராக நடந்த வன்முறை’ என்று இதைக் கருதி கண்டிப்பதாக கோவையில் உள்ள ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ கூடி முடிவெடுத்திருக்கிறார்களாம். அதனால், இந்து நாளிதழ் எரிக்கப்பட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் வெளியிடவில்லை. போதாகுறைக்கு, பெரியார் திராவிடர் கழக தலைமைக்கு ‘கட்சியை எப்படி நடத்துவது?’ என்று அறிவுரையும் சொல்லி தீர்மானம் போட்டிருக்கிறார்களாம், பத்திரிகையாளர்கள். நல்லது.

‘இந்து’ பத்திரிகைக்கு வலித்தால், இவர்கள் அழுகிறார்கள். ‘இந்து’ பத்திரிகைக்கு கோபம் வந்தால் இவர்கள் சீறுகிறார்கள். இப்படி கொதித்து எழும் இந்த கிளப்புகள், ஜெயலலிதா ஆட்சியில், நக்கீரன் கோபால் பொடாவில் கைதானபோதும், நிருபர்கள் தாக்கப்பட்டபோதும், இப்படித்தான் ‘தைரியாமாக’ ஒரே குரலில் செயல் பட்டதா?

பல பத்திரிகை நிர்வாகங்கள், தன்னிடம் வேலை பார்க்கும் பத்திரிகையார்களை அடிமைகளை போல் நடத்துவதும், மரியாதைக்குறைவாக அழைப்பதும், கேவலப்படுத்துவதும், நினைத்தால் வேலையை விட்டு விரட்டுவதும், அடியாட்களை வைத்து அடிப்பதும், மிரட்டுவதுமாக இருந்து இருக்கிறார்கள். இருக்கிறார்கள். முதலாளிகளால், நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக கிளப்புகள், செய்தது என்ன?

தனிநபராக நிர்வாகத்தை எதிர்த்து, துணிந்து மோதிய பத்திரிகையாளர்களுக்கு மறைமுக ஆதரவைக் கூட தந்ததில்லை கிளப்புகள். அந்தப் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டால் தமக்கு ஆபத்து வருமோ என்று கருதி, தொலைபேசியில் கூட விசாரித்ததில்லை, கிளப்புகளின் பொறுப்பாளர்கள், சக பத்திரிகையாளர்கள். அப்படியானால் பத்திரிகையாளர்களுக்கான கிளப்புகள் யாருக்கானவை?

ஒரு படத்தில் நடிகர் விவேக், டீக் கடையில் இருக்கும் போது, ரவுடிகளால் தாக்கப்படுவார். அந்தக் கடையின் உரிமையாளர் அதை பார்க்கமால் அவர் பாட்டுக்கு டீ போட்டுக் கொண்டு இருப்பார். அவரை பார்த்து விவேக், “யாருமே இல்லாத டீக் கடையில, யாருக்குடா டீ ஆத்திக்கிட்டு இருக்க” என்பார். அதுபோல்தான் செயல் படுகிறது இந்த பத்திரிகையார்களின் கிளப்.

பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்க முன் வராத கிளப்புகள், நிர்வாகத்திற்கு பிரச்சினை என்றால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் போல் அறிவுரைச் சொல்கிறார்கள். தீர்ப்பும் வழங்குகிறார்கள்.

சேலம் ரயில்வே கோட்டம் விவகாரத்தில், கேரளாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட்டார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளம் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வேலை பார்க்கும் மலையாளிகள்.

தமிழர்கள் பிரச்சினைகளின் போதோ, தமிழர்கள் பாதிக்கப்படும் போதோக்கூட குரல் கொடுக்க மறுக்கிறார்கள், இந்து பத்திரிகையின் ஆதரவாளர்களான ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ தமிழ் பத்தரிகையாளர்கள். காரணம் இவர்கள் தமிழர்கள் அல்ல. இந்துக்கள்.

பாவம் பத்திரிகையாளர்கள். அவர்களின் சமூக அக்கறைக்கும், சுயமரியாதைக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-வே. மதிமாறன்

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

லங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம்.

“எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.” என்கிறார் ராஜபக்சே.

ஆனால் தமிழர்களை தன் சொந்த நாட்டு மக்களாக நினைத்துப் பார்க்கிற எண்ணம் துளி கூட ராஜபக்சேவிடம் இல்லை. தமிழர்களுக்கும் உரியதுதான் இலங்கை, என்கிற எண்ணம் ராஜபக்சேவிடம் இருந்தால், தன் சொந்த நாட்டு மக்களையே இப்படிதான் ஒரு அரசு விமானத் தாக்குதல் நடத்தி கொல்லுமா?

தன் நாட்டு மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுபொட்டலம் வழங்குகிற அரசுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் ராஜபக்சே அரசு தன் நாட்டு தமிழ் மக்களுக்கு விமானம் மூலம் ஏவகணை தாக்குதல்களை வழங்குகிறது.

கேட்டால், “அப்படி எதுவும் தாக்குதல் இல்லை” என்று புளுகுகிறார் ராஜபக்சே.

ஆனால் அவருடைய சமீபத்திய செயற்கையான தமிழ் மற்றும் தமிழர்கள் ஆதரவு வசனம், தமிழர்கள் மீதான கொலைவெறியை மறைப்பதற்கான யுக்தியாகத்தான்வெளிபடுகிறது.

ஐநா சபையில் முதன் முதலாக ஒலித்த அந்த ஆபாசமான தமிழ் குரல், தமிழர்களை கொல்ல உத்தரவு போட்ட ராஜபக்சேவின் குரல். இந்த தமிழ் வேசமே அவரின் தமிழர் விரோதத்தை மறைப்பதற்கான தந்திரமே. அதுவும் ஐநா சபையிடம் தங்கள் நாட்டு பிரச்சினைக்காக சமாதானத்தை வேண்டி முறையிடுகிறார்.
சமாதனதத்தின் பெயரிலான அந்த முறையீடு, உண்மையில் சமாதானத்தை வேண்டி அல்ல. தங்களின் சதிக்கு ஒத்துழைப்பு வேண்டி. ஏனென்றால் இந்த மாதிரியான சதிக்கு துணைபோகிற வேலைகளை செய்வதில் ஐநாவின் புகழ் உலகறிந்தது.

ஐநாவின் யோக்கியதையைதான் ஈராக்கில் காறி உமிழ்ந்ததே. பொதுவாக ஐநாவின் சமாதானம் என்பதே, ‘நீ போனா தகராறு ஆயிடும். நான் போய் அவனை செருப்பால அடிச்சிட்டுவர்றேன்’ என்கிற முறைதான்.

****

ந்தியாவில், இந்துக்களின் எதிரிகளாக இஸ்லாமியர்களை சித்தரித்து அவர்களை கொல்வதின் மூலம் ஆட்சியை பிடித்த மோடியை போல்,
சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களை மிகபெரிய எதிரிகளாக சித்தரித்து, சிங்கள இன வெறியை தூண்டி —; சிங்கள மக்களிடம் செல்வாக்கு பெறவும், தன்னை மீண்டும் ஆட்சியில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் மூலமாக கொல்கிறான் ராஜபக்சே.

தன் மாநில மக்களுக்கு எதிராகவே மோடி நடத்தியது கலவரம்.
தன் நாட்டு மக்களுக்கு எதிராகவே ராஜபக்சே நடத்துவது போர்.
இதுதான் முதல்வருக்கும் -; அதிபருக்கும் இடையில் உள்ள அதிகாரம் வேற்றுமையோ? எங்கிருந்தாலும் பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

மோடியின் கேடித்தனத்துக்கு கண்டனம் தெரிவித்து, தன் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து தன்னை நல்லவன் போல காட்டிக் கொண்டது ஈராக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த அமெரிக்கா. அந்த மோடியை போன்ற ஒரு கொலைகாரனான ராஜபக்சேவை அழைத்து, ஐநா சபையில் பேசவைக்கிறது அதே ‘டபுள் ஆக்சன்’ அமெரிக்கா. இதுபோன்றுதான் பல விஷயங்களில், அமெரிக்காவின் ‘இரட்டை வேட ஜனநாயகம்’ உலகம் முழுக்க நாறி கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்ததிற்காக, தன் உயிரைக்கூட தர தயாராக இருக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் உயிரை பறிக்கிற ராஜபக்சே அரசை வேடிக்கை பார்க்கிறார். தமிழர்களின் குரல் மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை தாண்டி அவர் காதுகளில் விழ மறுக்கிறது.

தன் சொந்த நாட்டு மக்களை (மீனவர்களை) சுட்டு வீழ்த்துகிற இலங்கை ராணுவத்தை கண்டிக்க வக்கற்ற இந்திய அரசு, ஈழத் தமிழர்களை காப்பாற்றும் என்று நம்புவது மூடநம்பிக்கைதான். ஆனாலும், தமிழர்கள் அதிலும் குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தால்தான், மன்மோகன் சிங் அரசு இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும். குறைந்த பட்சம் விமானத் தாக்குதல்களையாவது தடுத்து நிறுத்த முடியும்.
இல்லையென்றால், தமிழர்களை கொன்று குவித்து, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி விட்டு, ஒரு துரோக தமிழனை அங்கிகரித்து தன் கொலைகளை நியாயப்படுத்திக் கொள்ளும் ராஜபக்சே அரசு.

ஈழத்தில் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்து நாம் இதை மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கே பாதிக்கப்படுகிற எளிய மக்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். எப்போதுமே கலவரங்களிலும், பொது இடங்களில் குண்டு வைப்பதிலும், போர்களிலும் கையாலாகாத பாசிஸ்டுகள் எளிய மக்களைத்தான் கொன்று குவிப்பார்கள். அதுதான் குஜராத்திலும் நடந்தது. ஈராக்கிலும் நடந்தது. இப்போது ஈழத்திலும் நடக்கிறது.

தமிழர்கள் கொல்லப்படுவதை, சிங்கள இன வெறியர்களைவிடவும், மாஜி போராளிகளான துரோகத் தமிழர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்ற ஆசையில்.

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்


மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் எனக்கொரு கேள்வி அனுப்பியிருந்தார்.
அதற்கான பதிலை நான் எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன் (https://vemathimaran.com/2008/08/04/article104/)

அந்தப் பதிலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. டி.கே. ரங்கராஜனுக்கு திரு.கலைவேந்தன் அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு திரு. ரங்கராஜன் அளித்த பதிலும், பதிலுக்கு திரு.கலைவேந்தன் அளித்த பதிலும்.

திரு.கலைவேந்தன் இதை நமக்கு அனுப்பியிருந்தார். அதை உங்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கிறேன்.

அன்பும், பாசமும் உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு,

எவரையும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கடமையை நீங்கள் செய்திருக்கிறீர்கள். நடிகவேள் எம்.ஆர். இராதாவைப் பற்றிக்கூட இறுதிக் காலத்தில் அவருடைய நடைமுறை பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல் வந்ததாகவும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது.
எப்படியிருப்பினும் நடிகவேள் சுயமரியாதை
கருத்துக்கு செய்த பணி என்றும் அனைவராலும் பாராட்டப்படும்.

அதேபோல், கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி விவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.
ஆனால், சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார்.

மதனைப் பற்றிநான் எதுவும் கூறவிரும்பவில்லை.

வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்
டி.கே. ரெங்கராஜன்

நண்பர் டி. கே. ரங்கராஜன் அவர்களுக்கு,
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இதுபோன்ற எளியோரின் மின்னஞ்சல்களை கவனத்தில் கொண்டு பதிலளித்ததற்கு நன்றி! பாராட்டுக்கள்! நான் மிகத்தாமதமாக பதிலளிக்க நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.
உங்களுடைய பதில் தெளிவில்லாமலும் பொறுப்பற்றதாகவுமே இருக்கிறது.

************கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி
விவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டக்
காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்
செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ****************

ஏகாதிபத்திய எதிர்ப்பில் சுந்தராம்பாள் ஈடுபட்டதாக நான் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் அவ்வாறு எங்கேயும் குறிப்பிடவில்லை, அது உங்களது கற்பனையில் மட்டுமே உதித்தது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய பார்ப்பன சேவகத்தை நான் விமர்சிக்கவில்லை. அது உங்களது உரிமை. ஆனால், எம்.ஆர்.ராதாவை விட்டுவிடுங்கள் என்பதுதான் எமது கோரிக்கையும் தோழர் மதிமாறனுடைய கோரிக்கையுமாகும்.

பாரதி குறித்த விமர்சனங்களுக்கே இன்னும் மழுப்பல்களையும் கள்ள மவுனத்தையுமே பதிலாகத்தரும் உங்களது கட்சியினர் சுந்தராம்பாள் விடயத்தில் எத்தகைய கருத்தாக்கத்தில் இருப்பார்கள் என்பதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. நான் தெளிவு படுத்த விரும்புவது மற்றவர்களுக்குத்தான்.

நல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவர்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி.

என்னைப்பொருத்தவரை பாரதிக்கு, விழா எடுப்பதற்கும் சவர்க்கருக்கு விழா எடுப்பதற்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
தங்களது மேலான பதிலை நாடி நிற்கும்,
– கலைவேந்தன்.

இந்தப் பதிலுக்கு எந்த பதிலும் திரு. ரங்கராஜன் அளிக்கவில்லை.

*
நாம எழுதியதால் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது; பிறகு இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை தமுஎச.

ஓகஸ்ட்9, 2008

எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்

‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்

கிறிஸ்த்துவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள்’ என்று திரும்ப, திரும்ப ஒரு செய்தி இந்தியா முழுக்கச் சொல்லப்படுகிறது. ஆனால் அது கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்கள் அல்ல. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள்.

இந்தத் தாக்குதல்கள் மதக் கலவரம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, ஜாதி இந்துக்கள் நடத்தும் வன்கொடுமை. இந்தியா முழுக்க கிறிஸ்த்துவர்கள் மீதான வன்முறை, இந்து அமைப்புகளால் பெரும்பாலும் உயர்ஜாதி கிறிஸ்துவர்கள் மீதோ, இடைநிலை ஜாதி கிறிஸ்தவர் மீதோ நடத்தப்பட்டதில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதுதான் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

மலைவாழ் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கிறிஸ்த்துவராக மாறுகிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை. கிறிஸ்துவ நிறுவனங்கள் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் முன்னேறி, ‘தங்களின் அடிமைகள் கை மீறி செல்கிறார்கள்’ என்கிற காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும்தான் – நிலப்பிரபுக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிக பிற்படுத்தப்பட்டவர்கள் போன்ற சமூகத்தில் உள்ள சில ஜாதி வெறியர்களால் மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறைகள் நடத்தப்படுகிறது.

ஸ்டெயின்ஸ் பாதிரியார் போன்ற தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத கிறிஸ்த்துவர்கள் கொலை செய்யப்பட்டது கூட, அவர்கள் மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வேலை செய்தார்கள் என்பதினால்தான். அதுபோல்தான் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் வழிபடும் ‘சர்ச்சு’கள்தான் தாக்கப்படுகின்றன.

அதே காரணத்திற்காகத்தான் சில நேரங்களில் கிறிஸ்த்துவப் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் கூட விழுப்புரத்தில் வன்னியக் கிறிஸ்த்துவர்கள் தாழ்த்தப்பட்ட கிறிஸ்த்துவர்கள் மீது கொடூராமான முறையில், ஒரிசாவில் இந்து ஜாதி வெறி கிறிஸ்துவர்களை தாக்கியது போன்று கிறிஸ்துவர்களே கிறிஸ்துவர்களை தாக்கினார்கள்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் யூனியன் அமைப்பதினால், ‘கம்யூனிஸ்டுகளுக்கு நேர் எதிரானவர்கள் இந்து அமைப்புகள்’ என்ற காரணத்தினால், பல கிறிஸ்த்துவ முதலாளிகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்புகளுக்கு பணம் கொடுத்து, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இந்து வெறியர்களை அடியாட்களாக பயன்படுத்துகிறார்கள்.
ரப்பர் தோட்ட முதலாளிகளாக இருக்கிற சிரியன் சர்ச் கிறிஸ்த்துவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக, இந்து அமைப்புகளுக்கு பணம் கொடுக்கிறார்கள். கிறிஸ்த்துவ நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்புடைய கிறிஸ்த்துவரான ஜேப்பியார் போன்ற ‘கல்வி வள்ளல்கள்’ இதுபோன்ற ‘வள்ளல்’ தனங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

***

பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளாக இருப்பவர்கள் மிகப்பெரும்பாலும், பழங்குடி மற்றும் தாழ்த்தப்படட மக்களே. இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நேர் விரோதிகளாக இருக்கிற ஆதிக்க ஜாதி நிலப்பிரபுக்களை கொன்று, நிலங்களை பிடுங்கி நிலமற்றவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக மவோயிஸ்டுகளை ஒன்றும் செய்ய முடியாத நிலப்பிரபுக்கள், அவர்கள் மீது உள்ள கோபத்தை, அவர்கள் சார்ந்த சமூக மக்கள் மீது திருப்புகிறார்கள். கூலி படையை ஏவி பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை கொல்கிறார்கள்.

இதுபோக, இயல்பாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உயர்ஜாதிக்காரர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்கள் மீது உள்ள காழ்ப்புண்ர்ச்சியை, வெறுப்பை இந்து அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது இந்து அமைப்பை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பு கொண்ட உயர்ஜாதிக்காரர்கள் வழிநடத்துகிறார்கள்.

1991 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, இந்தியா முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு அரசியல் விழுப்புணர்ச்சி எழுந்தது. ஜாதி இந்துக்கள் துணையில்லாமல், அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்தார்கள். தமிழகம் முழுக்க ‘அம்பேத்கர் மன்றம்’ என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிறைய பொதுக்கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தார்கள். இது ஜாதி இந்துக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த எரிச்சல் பாஜக ஆதரவாக அவதாரம் எடுத்தது.

எனக்கு தெரிந்து 17 ஆண்டுகளுக்கு முன்னால் – சென்னையில் இருந்து 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வந்தவாசியில் பாஜகவில் பெருமளவில் பங்கெடுத்து, அதை வழி நடத்தியவர்கள் முதலியார் ஜாதியை சேர்ந்தவர்கள்தான். முதலியார்கள் வழிநடத்திய பாஜக இஸ்லாமியார்களோடு இணக்கமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுதான் விரோதம் காட்டியது. இஸ்லாமியர்களின் பொதுக்கூட்டத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. அம்பேத்கர் கூட்டங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நிறைய தடைகளை உருவாக்கினார்கள். வாஜ்பாய், அத்வானி போன்றவர்களை எல்லாம் அழைத்து வந்து வந்தவாசியல் மாநாடும் நடத்தியிருக்கிறார்கள்.

(அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும், வர்த்தகப் போட்டிக்காகவும் இந்து அரசியல்வாதிகளும் – இந்து முதலாளிகளும் ‘இந்து’ அடையாளத்தோடு தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் இறக்குவார்கள் என்பது வேறு.)

அதுபோக இந்தியா முழுக்கவே பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற இந்து மதவெறி அமைப்புகள் இஸ்லாத்திற்கு எதிராக இந்து மதவெறியை நிறுவுவது போல், கிறிஸ்த்துவத்திற்கு எதிராக செய்வதில்லை. அதற்குக் காரணம், ஜாதி மற்றும் வழிபாட்டு முறைகளில், பழக்க வழக்கங்களில், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றில் இந்துக்களுக்கு அனுக்கமாகவே நடந்து கொள்கிறார்கள் கிறிஸ்த்துவர்கள். ஒரே ஜாதியில் இன்னும் நெருக்கமாக சொன்னால், ஒரே குடும்பத்தில் இந்துக்களும் கிறிஸ்த்துவர்களும் பின்னி பிணைந்து இருக்கிறார்கள்.

தமிழகத்து தென் மாவட்டங்களில், நாடார் சமுதாயத்தில் இப்படி ஒரே குடுபத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்த்துவர்களாகவும், இந்துக்களாகவும் பெருமளவில் இருக்கிறார்கள். தேவர் ஜாதியிலும் இப்படி இருக்கிறார்கள். எல்லா ஜாதியிலும் இப்படி கிறிஸ்த்துவர்களும், இந்துக்களும் கலந்து புழங்கத்தான் செய்கிறார்கள். ஒரே சமூகத்தில் 100 சதவீதம் கிறிஸ்த்துவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மட்டும்தான். அதனால்தான் மண்டைக்காடு கலவரம் நாடார்களுக்கும், மீனவர்களுக்கும்தான் நடந்தது. அது கிறிஸ்த்துவர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம் என்றால், இந்து நாடார்கள் கிறிஸ்த்துவ நாடார்களுக்கு எதிராக ஏன் இல்லை? கிறிஸ்த்துவ நாடார்கள், கிறிஸ்த்து மீனவர்களுக்கு ஆதரவாக ஏன் இல்லை?

இதுபோக கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கும், இந்து அமைப்புகளுக்கும் – உலகளவில் இஸ்லாம் பற்றியும் உலக அரசியலில் பாலஸ்தீன விவகாரத்திலும் ஒத்தக் கருத்து நிலவுகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற கிறிஸ்த்துவ நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக, பாலஸ்தீனத்திற்கு எதிராக இருக்கிறது. அதுவே இந்து அமைப்புகள், கிறிஸ்த்துவ நிறுவனங்களின் நிலையுமாக இருக்கிறது. (கிறிஸ்த்துவர்களுக்கல்ல)

இவை எல்லாவற்றையும் விட கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கும், எழுப்புதல் கூட்டங்களுக்கும் எந்த நாட்டில் இருந்து பணம் வருகிறதோ அதே நாட்டில் இருந்துதான் இந்து அமைப்புகளுக்கும், ஆன்மீக பேரொளியாய் அறிவுரை சொல்லுகிற ‘ஹைடெக்’ இந்து சாமியார்களுக்கும் பணம் வருகிறது. இந்த பிராடு இந்து சாமியார்களுக்கு கிறிஸ்துவ நாடுகளிலும் பல ஆசிரமங்கள் இருக்கிறது. (வெளிநாட்டில் இருந்து, சுனாமி நீதியை வாங்கி சூறையாடியதில் இரண்டு பேருக்கும் சம பங்கு இருக்கிறது.) அதனால் இந்த இரு நிறுவனங்களுக்குள்ளும் ஒரு டெலிபதி, ஒற்றுமை தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

ஆகவே பாதிக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்த்துவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக தாக்கப்படுவதில்லை. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதினால்தான் தாக்கப்படுகிறார்கள்.

ஒக்ரோபர்6, 2008

எது அநாகரீகம்?

எவ்வளவோ நாகரீகம் வந்து விட்டது. ஆனால் இன்னும் அரசியல் கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக் கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா?

எஸ்.என்.சிவசைலம், சேலம்.

தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது.

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் ‘உயர் ஜாதி’க்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாக போராடியது.

ஒடுக்கப்பட்ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த – நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.

இன்று கூட தோளில் துண்டு போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே.

தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் – அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டுப் போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள்.

அரசியல்வாதிகள் தோளில் துண்டுப் போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?

தோளில் துண்டுப் போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரீகம்

வே. மதிமாறன் பதில்கள்
பக்கங்கள் 88. விலை ரூ. 35.

அங்குசம் வெளியீடு

தொடர்புக்கு;

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

காமராஜரின் சிறப்பு எது? எளிமையா? பெரியாரா?

தொடர்ச்சி

* ஒரு முறை நான் டைரக்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைத்தார்.

உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க?”
அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் பதட்டமாயிட்டேன்.

“காமராஜரின் சிறப்பே பெரியாரின் பாதிப்புதான். பெரியாரின் தாக்கம் இல்லேன்னா… கிராமப்புற பள்ளிக்கூடம் வந்திருக்காது. நம்ம கல்வி இன்னும் தள்ளிப் போயிருக்கும்.” என்று சொன்னேன்.

அதுக்கு பாலகிருஷ்ணன்,
“விட்டா நீங்க பெரியாரை காமராஜரை விட பெரிய தலைவர்ன்னு சொல்லுவிங்க போல.” என்றார்.

அதுக்கு மேலே அவருக்கூட விவாதிக்க விருப்பம் இல்லாமல் அமைதியாயிட்டேன். ஆனால் ‘காமராஜர்’ படம் வந்தபோது திரையில் பெரியார் இருந்தார். முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு.

காமராஜர் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த, கிராமப் புற பள்ளிக்கூடம் திட்டத்தை இருட்டடிப்பு செய்து, பார்ப்பனர்கள் திரும்ப, திரும்ப காமராஜரின் சிறப்பாக சொல்வது அவருடைய எளிமையை மட்டும்தான்.

காமராஜரை பார்ப்பனப் பத்திரிகைகள் புகழ்வது அவர் மேல் கொண்டு அன்பினால் அல்ல. காமராஜரை – அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை மட்டம் தட்டுதற்கான ஒரு குறியீடாக பயன்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் காமராஜரின் சிறப்பு பெரியாரின் ஆலோசனையோடு, அவர் ராஜாஜியை எதிர்த்து அரசியல் பண்ணியதுதான். அதை பார்ப்பனப் பத்திரிகைகள் ஒரு போதும் சொல்வதில்லை. பெரியாரையும் காமராஜரையும் இணைத்து பார்ப்பனர்கள் எப்போதும் எழுதுவதே கிடையாது.

தன் கடைசிகாலம் வரை தீவிரமாக தேசியத்தை வலியுறுத்திய காமராஜரை ஆதரிக்கிற தமிழ் தேசியவாதிகள்கூட, பார்ப்பனர்கள் ஆதரிக்கிற தொனியில்தான் காமராஜரை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் திராவிட இயக்க எதிர்ப்பு குறியீடாக ஒரு பொதுக்கருத்தைப் போல, “காமராஜர் போல ஒரு முதலமைச்சரை இனி பார்க்க முடியாது” என்று சொல்கிறார்கள்.

காமராஜர் ஆட்சி வரமுடியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு போதும் ராஜாஜி ஆட்சி மட்டும் திரும்ப வந்துடக் கூடாது. போயஸ் தோட்டத்து ‘பொம்பள ராஜாஜி’யையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

எளிமையாகவும் நேர்மையாகவும் ஒருவர் இருந்தால் மட்டும் போதாது. அந்த எளிமையும், நேர்மையும் யார் பொருட்டு இருக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு. இந்தியாவிலேயே மிக எளிமையான அமைச்சராக இருந்தவர் என்று, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிரூபன் சக்கரவர்த்தியை சொல்லுவார்கள்.

இன்றைக்கும் கூட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் பஸ்ல போறதா சொல்றாங்க. பஸ்ல போறது பெரிய விஷயமல்ல. எங்க போறங்க அப்படிங்கறதுதான் முக்கியம். பஸ் ஏறி ‘போயஸ் தோட்டத்துக்கு’ போறதுனால சமூகத்துக்கு என்ன பயன்?

ஒரு கம்யூனிஸ்ட் எளிமையாக இருப்பது அதிசயம் அல்ல. அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். அதை ஒரு செய்தியாக சொல்லிக் காட்டுவதுதான் ஆபாசம். ஆனால் ஒரு காங்கிரஸ்காரர் எளிமையாக இருப்பது சாதாரணமல்ல. அப்படிப் பார்த்தால் இந்தியாவிலேயே மிகவும் எளிமையான, நேர்மையான மந்தரி என்றால் அது கக்கன் அவர்களைதான் சொல்லமுடியும்.

ஆனால் அவருடைய எளிமையும், நேர்மையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன், ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தான். அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை.

தான் கொண்ட கொள்கைக்காக தன்னையே தியாகம் செய்வது பெரிய விஷயம்தான். ஆனால் அந்த உயிர் ஆதிக்கத்திற்கு ஆதரவாக போகிறதா? இல்லை ஆதிக்கத்திற்கு எதிராக போகிறதா? என்பதின் பொருட்டே அந்தத் தியாகம் மதிக்கப்படுகிறது.

கோட்சேக் கூட தான் கொண்ட கொள்கைக்காக தூக்கில் தொங்கினான்.
ஆனால் பகத்சிங்தான் நமக்கு மாவீரன். அவர் தியாகம்தான் நாம் பின்பற்றுவதற்குரியது.

ஆக, காமராஜர் வெறும் எளிமையாகவும், நேர்மையாகவும் மட்டும் இருந்து, பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால், அவர் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக இருந்து மறைந்திருப்பார். நமது நினைவுளிலும் இருந்திருக்க மாட்டார்.

அதேபோல், அண்ணா முதல்வராக இருந்தார் என்பது சிறப்பல்ல. அவர் பெரியாரோடு இருந்தார் என்பதுதான் அவருக்கான சிறப்பு. பெரியாருக்கு எதிராக தீவிரமாக இயங்கிய மிக மோசமான முதலமைச்சரான பக்தவச்சலத்தை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குக்கூட அவருடை ஞாபகம் கிடையாது.

கடைசியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.
இன்றைய சூழலில் பெரியார்-அம்பேத்கரின் பாதிப்பு இல்லாமல் ஒரு முற்போக்கு இயக்கம் தமிழகத்தில், இந்தியாவில் இருக்க முடியாது. இவர்கள் இருவரையும் தவிர்த்து முற்போக்காளர்களாக தன்னை காட்டிக் கொண்டால், அவர்கள் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்திற்கு வால் பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

பார்ப்பனியம் என்பது இந்து மத சடங்குகளை கடைப்பிடிப்பது மட்டுமல்ல. ஜாதிய கண்ணோட்டமும், சுயஜாதி அபிமானமும்கூட பார்ப்பனியம்தான். இந்து மதமே ஜாதியாகத்தான் இருக்கிறது.

ஆக, சுயஜாதி அபிமானத்தோடோ, கிறிஸ்த்தவர், இஸ்லாமியர் என்கிற மத உணர்வோடோ – இந்து மதத்தை பார்ப்பனியத்தை எதிர்கொள்ள முடியாது. இந்த உணர்வுகள் எதிராகவே பதிவானால் கூட, அது பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வளர்க்கவே உதவும்.

பார்ப்பனியத்தை, இந்து மதத்தை வீழ்ந்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பெரியாரின் பகுத்தறிவு பாதைதான்.

நன்றி, வணக்கம்.

(24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.)

கீற்று இணையதளம் இந்த உரையை வெளியிட்டு இருந்தது. அதைதான் மறு வெளியீடு செய்திருந்தோம்.

விழா நிழற்படங்கள் நண்பன் ந. வெங்கட்ராமன். (கோவை)