கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

லங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம்.

“எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.” என்கிறார் ராஜபக்சே.

ஆனால் தமிழர்களை தன் சொந்த நாட்டு மக்களாக நினைத்துப் பார்க்கிற எண்ணம் துளி கூட ராஜபக்சேவிடம் இல்லை. தமிழர்களுக்கும் உரியதுதான் இலங்கை, என்கிற எண்ணம் ராஜபக்சேவிடம் இருந்தால், தன் சொந்த நாட்டு மக்களையே இப்படிதான் ஒரு அரசு விமானத் தாக்குதல் நடத்தி கொல்லுமா?

தன் நாட்டு மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுபொட்டலம் வழங்குகிற அரசுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் ராஜபக்சே அரசு தன் நாட்டு தமிழ் மக்களுக்கு விமானம் மூலம் ஏவகணை தாக்குதல்களை வழங்குகிறது.

கேட்டால், “அப்படி எதுவும் தாக்குதல் இல்லை” என்று புளுகுகிறார் ராஜபக்சே.

ஆனால் அவருடைய சமீபத்திய செயற்கையான தமிழ் மற்றும் தமிழர்கள் ஆதரவு வசனம், தமிழர்கள் மீதான கொலைவெறியை மறைப்பதற்கான யுக்தியாகத்தான்வெளிபடுகிறது.

ஐநா சபையில் முதன் முதலாக ஒலித்த அந்த ஆபாசமான தமிழ் குரல், தமிழர்களை கொல்ல உத்தரவு போட்ட ராஜபக்சேவின் குரல். இந்த தமிழ் வேசமே அவரின் தமிழர் விரோதத்தை மறைப்பதற்கான தந்திரமே. அதுவும் ஐநா சபையிடம் தங்கள் நாட்டு பிரச்சினைக்காக சமாதானத்தை வேண்டி முறையிடுகிறார்.
சமாதனதத்தின் பெயரிலான அந்த முறையீடு, உண்மையில் சமாதானத்தை வேண்டி அல்ல. தங்களின் சதிக்கு ஒத்துழைப்பு வேண்டி. ஏனென்றால் இந்த மாதிரியான சதிக்கு துணைபோகிற வேலைகளை செய்வதில் ஐநாவின் புகழ் உலகறிந்தது.

ஐநாவின் யோக்கியதையைதான் ஈராக்கில் காறி உமிழ்ந்ததே. பொதுவாக ஐநாவின் சமாதானம் என்பதே, ‘நீ போனா தகராறு ஆயிடும். நான் போய் அவனை செருப்பால அடிச்சிட்டுவர்றேன்’ என்கிற முறைதான்.

****

ந்தியாவில், இந்துக்களின் எதிரிகளாக இஸ்லாமியர்களை சித்தரித்து அவர்களை கொல்வதின் மூலம் ஆட்சியை பிடித்த மோடியை போல்,
சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களை மிகபெரிய எதிரிகளாக சித்தரித்து, சிங்கள இன வெறியை தூண்டி —; சிங்கள மக்களிடம் செல்வாக்கு பெறவும், தன்னை மீண்டும் ஆட்சியில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் மூலமாக கொல்கிறான் ராஜபக்சே.

தன் மாநில மக்களுக்கு எதிராகவே மோடி நடத்தியது கலவரம்.
தன் நாட்டு மக்களுக்கு எதிராகவே ராஜபக்சே நடத்துவது போர்.
இதுதான் முதல்வருக்கும் -; அதிபருக்கும் இடையில் உள்ள அதிகாரம் வேற்றுமையோ? எங்கிருந்தாலும் பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

மோடியின் கேடித்தனத்துக்கு கண்டனம் தெரிவித்து, தன் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து தன்னை நல்லவன் போல காட்டிக் கொண்டது ஈராக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த அமெரிக்கா. அந்த மோடியை போன்ற ஒரு கொலைகாரனான ராஜபக்சேவை அழைத்து, ஐநா சபையில் பேசவைக்கிறது அதே ‘டபுள் ஆக்சன்’ அமெரிக்கா. இதுபோன்றுதான் பல விஷயங்களில், அமெரிக்காவின் ‘இரட்டை வேட ஜனநாயகம்’ உலகம் முழுக்க நாறி கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்ததிற்காக, தன் உயிரைக்கூட தர தயாராக இருக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் உயிரை பறிக்கிற ராஜபக்சே அரசை வேடிக்கை பார்க்கிறார். தமிழர்களின் குரல் மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை தாண்டி அவர் காதுகளில் விழ மறுக்கிறது.

தன் சொந்த நாட்டு மக்களை (மீனவர்களை) சுட்டு வீழ்த்துகிற இலங்கை ராணுவத்தை கண்டிக்க வக்கற்ற இந்திய அரசு, ஈழத் தமிழர்களை காப்பாற்றும் என்று நம்புவது மூடநம்பிக்கைதான். ஆனாலும், தமிழர்கள் அதிலும் குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தால்தான், மன்மோகன் சிங் அரசு இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும். குறைந்த பட்சம் விமானத் தாக்குதல்களையாவது தடுத்து நிறுத்த முடியும்.
இல்லையென்றால், தமிழர்களை கொன்று குவித்து, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி விட்டு, ஒரு துரோக தமிழனை அங்கிகரித்து தன் கொலைகளை நியாயப்படுத்திக் கொள்ளும் ராஜபக்சே அரசு.

ஈழத்தில் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்து நாம் இதை மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கே பாதிக்கப்படுகிற எளிய மக்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். எப்போதுமே கலவரங்களிலும், பொது இடங்களில் குண்டு வைப்பதிலும், போர்களிலும் கையாலாகாத பாசிஸ்டுகள் எளிய மக்களைத்தான் கொன்று குவிப்பார்கள். அதுதான் குஜராத்திலும் நடந்தது. ஈராக்கிலும் நடந்தது. இப்போது ஈழத்திலும் நடக்கிறது.

தமிழர்கள் கொல்லப்படுவதை, சிங்கள இன வெறியர்களைவிடவும், மாஜி போராளிகளான துரோகத் தமிழர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்ற ஆசையில்.

8 thoughts on “கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

  1. “தமிழர்கள் கொல்லப்படுவதை, சிங்கள இன வெறியர்களைவிடவும், மாஜி போராளிகளான துரோகத் தமிழர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்ற ஆசையில்.”

    கடைசியில் உண்மை எப்படியோ வெளியில் வந்துவிடுகிறது. ‘சாத்தான்’ ஐ.நா.வரை போய் வேதம் ஓதிவிட்டு வந்திருக்கிறது.

  2. ஐ.நா என்பதே வெறும் புரட்டு தானே.. அமெரிக்க கைக்கூலியாக இருந்து கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை… நம்ம மன்மோகன் சிங்குக்கு புஷ் ஐ பார்த்து “ஐ லவ் யூ”ன்னு சொல்றதுக்கு தான் நேரம் இருக்கு… இதெல்லாம் உருப்படும்… நம்ம தமிழக அரசியல்வாதிகள் பேச்சுல மட்டும் தான் “ஈழம், மீனவர்கள் பிரச்சனை”ன்னு பேசுவாங்க. வை.கோ. கண்ணீர் விடுவாரு, கலைஞர் கடிதம் எழுதுவாரு.. அம்மாவை பத்தி சொல்லவே வேண்டாம்… இவங்களை நம்பி நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க ஐயா

  3. தமிழன் வீடு கடந்த 50 ஆண்டுகளாக இழவு வீடாகவே உள்ளது. பிணம் வீட்டில் இருக்க பக்கத்து வீட்டில் தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் அளவிற்கு தமிழகத் தமிழர்களுக்கு பிணவாடை பழக்கமாகிப்போன ஒன்றாகிவிட்டது. தன் உறவு சிந்திய இரத்த வாடையைக் கூட உணரமுடியாமல் தமிழனுக்கு போதையேற்றப்பட்டுள்ளது, தொடர்ந்தும் ஏற்றப்படுகிறது…

    … கடமையை உணர்ந்து உடனடியாக உலகத்தமிழர்கள் அனைவரும் தன் இனத்திற்கான வரலாற்றுத் துயரை உணரவேண்டும். அதுபற்றி சிந்திக்க வேண்டும். ஆதற்கான காரணகாரியங்களை அலசி ஆராயவேண்டும். தமிழின விடியலுக்கான ஆக்கப்பணிகளை கட்சி மறந்து, சாதி மறந்து, சமூக பூசல்களை மறந்து ஒவ்வொரு தமிழனும் மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக ஒவ்வொரு தமிழனும் தன் இனத்திற்கான சிக்கல்களை தன்னுடைய குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைத்து தமிழர்களிடமும் கலந்து பேசி அவர்களையும் இன உணர்வாளர்களாக மாற்றவேண்டும்.

  4. தமிழ் ஈழ பத்தி உங்க முதல் கட்டுரை அருமை இன்னும் நங்கள் உங்களிடம் இருந்து தமிழ் ஈழ பத்தி அதிகம் எதிபார்கிறோம்

  5. தோழா தங்களின் ஆதங்கம் புரிகிறது.
    ஈழ தமிழர் தாக்கப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அதே சமயம்
    தனி நாடு கேட்பது என்பது எந்த ஒரு அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
    ஈழ தமிழரின் உரிமைகள் பாதுகாக்க பட வேண்டுமே ஒழிய இந்தியா பாகிஸ்தான் பிரிவை போல இன்னொரு சோகம் இலங்கைக்கு வேண்டாமே !!
    இழப்பு இருபக்கமும் தான் 🙁

  6. உங்கள் கட்டுரைக்கு நன்றிகள்.

    //தோழா தங்களின் ஆதங்கம் புரிகிறது.
    ஈழ தமிழர் தாக்கப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அதே சமயம்
    தனி நாடு கேட்பது என்பது எந்த ஒரு அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
    ஈழ தமிழரின் உரிமைகள் பாதுகாக்க பட வேண்டுமே ஒழிய இந்தியா பாகிஸ்தான் பிரிவை போல இன்னொரு சோகம் இலங்கைக்கு வேண்டாமே !!
    இழப்பு இருபக்கமும் தான்//

    தோழர் அன்புச்செல்வன் !!

    தனிநாடு என்ற ஒரு சூழ்நிலைக்குள் தமிழரை இன்றுவரை தள்ளிக்கொண்டிருப்பது சிங்கள அரசும் அதன் கூட்டாளிகளும் தான். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரு சிறு தீர்வையேனும், சிறு உரிமையை கூட தர மறுக்கின்றது சிங்கள அரசு. கடந்தவாரம் சிங்கள தளபதி பொன்சேகா இலங்கை முழுவதும் சிங்களவருக்கே சொந்தம் என குறிப்பிட்டுள்ளார். தமிழன் பல ஆண்டுகள் சத்வீக வழியில் போராடினான், பின் ஆயுத வழிக்கு தள்ளப்பட்டான், பின் ஆயுதங்களை இந்தியாவை நடுநிலைக்கு வைத்து ஒப்படைத்தான், எல்லாக்காலகட்டத்திலும் தமிழன் ஏமாத்தப்பட்டான், தனிநாடை தவிர தமிழனுக்கு வேறெந்த தீர்வையும் சிங்களம் இதுவரையான வரலாற்றில் முன்வைக்கவில்லை.

  7. //தனிநாடு என்ற ஒரு சூழ்நிலைக்குள் தமிழரை இன்றுவரை தள்ளிக்கொண்டிருப்பது சிங்கள அரசும் அதன் கூட்டாளிகளும் தான். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரு சிறு தீர்வையேனும், சிறு உரிமையை கூட தர மறுக்கின்றது சிங்கள அரசு. கடந்தவாரம் சிங்கள தளபதி பொன்சேகா இலங்கை முழுவதும் சிங்களவருக்கே சொந்தம் என குறிப்பிட்டுள்ளார். தமிழன் பல ஆண்டுகள் சத்வீக வழியில் போராடினான், பின் ஆயுத வழிக்கு தள்ளப்பட்டான், பின் ஆயுதங்களை இந்தியாவை நடுநிலைக்கு வைத்து ஒப்படைத்தான், எல்லாக்காலகட்டத்திலும் தமிழன் ஏமாத்தப்பட்டான், தனிநாடை தவிர தமிழனுக்கு வேறெந்த தீர்வையும் சிங்களம் இதுவரையான வரலாற்றில் முன்வைக்கவில்லை.//
    well said!!

Leave a Reply

%d bloggers like this: