`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை


பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை அதன் ஐயங்கார் பார்ப்பன தன்மைக்காக, 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதது:

ழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன ‘இந்து’ ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் – தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.

விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். <மாலினி பார்த்தசாரதியின் ‘மலநாற்றம்’ வீசும் கட்டுரை வெளியிட்ட ‘இந்து’ ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.

நன்றி
புரட்சி பெரியார் முழுக்கம். (16-10-2008)

த்திரிகைளுக்கு எதிராக நடந்த வன்முறை’ என்று இதைக் கருதி கண்டிப்பதாக கோவையில் உள்ள ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ கூடி முடிவெடுத்திருக்கிறார்களாம். அதனால், இந்து நாளிதழ் எரிக்கப்பட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் வெளியிடவில்லை. போதாகுறைக்கு, பெரியார் திராவிடர் கழக தலைமைக்கு ‘கட்சியை எப்படி நடத்துவது?’ என்று அறிவுரையும் சொல்லி தீர்மானம் போட்டிருக்கிறார்களாம், பத்திரிகையாளர்கள். நல்லது.

‘இந்து’ பத்திரிகைக்கு வலித்தால், இவர்கள் அழுகிறார்கள். ‘இந்து’ பத்திரிகைக்கு கோபம் வந்தால் இவர்கள் சீறுகிறார்கள். இப்படி கொதித்து எழும் இந்த கிளப்புகள், ஜெயலலிதா ஆட்சியில், நக்கீரன் கோபால் பொடாவில் கைதானபோதும், நிருபர்கள் தாக்கப்பட்டபோதும், இப்படித்தான் ‘தைரியாமாக’ ஒரே குரலில் செயல் பட்டதா?

பல பத்திரிகை நிர்வாகங்கள், தன்னிடம் வேலை பார்க்கும் பத்திரிகையார்களை அடிமைகளை போல் நடத்துவதும், மரியாதைக்குறைவாக அழைப்பதும், கேவலப்படுத்துவதும், நினைத்தால் வேலையை விட்டு விரட்டுவதும், அடியாட்களை வைத்து அடிப்பதும், மிரட்டுவதுமாக இருந்து இருக்கிறார்கள். இருக்கிறார்கள். முதலாளிகளால், நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக கிளப்புகள், செய்தது என்ன?

தனிநபராக நிர்வாகத்தை எதிர்த்து, துணிந்து மோதிய பத்திரிகையாளர்களுக்கு மறைமுக ஆதரவைக் கூட தந்ததில்லை கிளப்புகள். அந்தப் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டால் தமக்கு ஆபத்து வருமோ என்று கருதி, தொலைபேசியில் கூட விசாரித்ததில்லை, கிளப்புகளின் பொறுப்பாளர்கள், சக பத்திரிகையாளர்கள். அப்படியானால் பத்திரிகையாளர்களுக்கான கிளப்புகள் யாருக்கானவை?

ஒரு படத்தில் நடிகர் விவேக், டீக் கடையில் இருக்கும் போது, ரவுடிகளால் தாக்கப்படுவார். அந்தக் கடையின் உரிமையாளர் அதை பார்க்கமால் அவர் பாட்டுக்கு டீ போட்டுக் கொண்டு இருப்பார். அவரை பார்த்து விவேக், “யாருமே இல்லாத டீக் கடையில, யாருக்குடா டீ ஆத்திக்கிட்டு இருக்க” என்பார். அதுபோல்தான் செயல் படுகிறது இந்த பத்திரிகையார்களின் கிளப்.

பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்க முன் வராத கிளப்புகள், நிர்வாகத்திற்கு பிரச்சினை என்றால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் போல் அறிவுரைச் சொல்கிறார்கள். தீர்ப்பும் வழங்குகிறார்கள்.

சேலம் ரயில்வே கோட்டம் விவகாரத்தில், கேரளாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட்டார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளம் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வேலை பார்க்கும் மலையாளிகள்.

தமிழர்கள் பிரச்சினைகளின் போதோ, தமிழர்கள் பாதிக்கப்படும் போதோக்கூட குரல் கொடுக்க மறுக்கிறார்கள், இந்து பத்திரிகையின் ஆதரவாளர்களான ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ தமிழ் பத்தரிகையாளர்கள். காரணம் இவர்கள் தமிழர்கள் அல்ல. இந்துக்கள்.

பாவம் பத்திரிகையாளர்கள். அவர்களின் சமூக அக்கறைக்கும், சுயமரியாதைக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-வே. மதிமாறன்