இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல


மிழ் சினிமாவை காட்சி அமைப்புகளின் மூலமாக இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர். சினிமா மொழியை விரிவாக கையாண்ட முதல் தமிழ் திரைப்பட இயக்குநர். தனது வித்தியாசமான கேமரா கோணங்களால், தமிழ் சினிமாவை அழகுபடுத்தியவர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி இப்படி பல சிறப்புகள் சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஸ்ரீதருக்கு உண்டு.

ஹாலிவுட் படங்கள், அய்ரோப்பிய படங்கள் ‘க்ரைம்’ படம் என்றால் முழு நீளப் படமும், க்ரைம் சூழலையே சுற்றி வரும். ‘காமெடி’ என்றால், படம் முழுக்க காமடியே. அதுபோல்தான் இவரின் ஆரம்ப கால படங்களும் அமைந்திருந்தன. குறிப்பாக இவரின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். (அதற்கு முன் பம்மல் சம்பந்த முதலியார் எழுதி, ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இயக்கிய ‘சபாபதி’ திரைப்படம்தான் தமிழின் முதல் ழுழு நீள நகைச்சுவைப் படம்)

ஒரே லொக்கேஷனில் (மருத்துவமனை) ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தை குறைந்த நாட்களுக்குள் தரமாக எடுத்து தமிழில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர் ஸ்ரீதர். பின்னாட்களில் இந்தப் படத்தைதான் கொஞ்சம் உல்டா செய்து, அதைபோன்றே ஒரே லொக்கேஷனில் ‘நீர்க்குமுழி’ என்று படத்தை எடுத்தார் கே. பாலச்சந்தர்.

வேலையற்ற இளைஞர்களை மையமாக வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய ‘நெஞ்சிருக்கும் வரை’ படம், கொஞ்சம் மாற்றங்களோடு, பார்ப்பனத் தன்மை கலந்து பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என்று மாறியது.

Fantasy பாணியிலான மறுஜென்ம கதையான இவருடைய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் நம்புபடியாக இல்லாவிட்டாலும் கூட ரசிக்கும் படியாக இருந்தது. இந்தக் கதையைதான் பின்னாட்களில் நடிகர் நாசர் தனது இயக்கத்தில் ‘தேவதை’ என்ற பெயரில் ரசிக்கக் கூட முடியாதபடி எடுத்திருந்தார்.

‘சினமா என்கிற ஊடகம் முழுக்க முழுக்க பொழுது போக்கிற்கான கலைவடிவம் மட்டும்தான்’ என்கிற எண்ணம் இயக்குநர் ஸ்ரீதரிடம், மிக ஆழமாக இருந்திருக்கிறது. அதனால்தான், ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, ‘மனிதர்களுக்கு பிரச்சினை காதல் மட்டும்தான்’ என்பதுபோல் சோகம், நகைச்சுவை என்று வேறு வேறு வடிவங்களில் காதலையே பெரும்பாலும் காட்டிக் கொண்டிருந்தார்.

மிகப் பெரும்பாலும் பொழுது போக்கு படங்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் எடுத்த ஒன்று-இரண்டு அரசியல் படங்களும், ‘நாலு Fight அஞ்சு Song’ என்கிற போழுது போக்கு பாணியில்தான் அமைந்திருந்தது.

அதன் பொருட்டே இவர் பின்னாட்களில் எடுத்த மீனவ நண்பன், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடிகிறது, நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னைத் தொடு, நானும் ஒரு தொழிலாளி, துடிக்கும் கரங்கள் போன்ற படங்களில் வழக்கமான அவருடைய நேர்த்தியான வடிவத்தைக் கூட அவரால் தர முடியவில்லை.

இதில் உரிமைக் குரல் திரைப்படம் மிக மோசமான திரைப்படங்களுக்கு முன்மாதிரியாக விளங்கியது. இந்தப் படத்தில்தான் பெண்களின் பேராதரவுப் பெற்ற, ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘காயா இல்லை பழமா? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார்.

இவர் இயக்கிய படங்களில் ‘வெண்ணிற ஆடை’ மிகுந்த அழகியலோடு, நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். வடிவம் ஐரோப்பிய சினிமா பாணியில் அமைந்தது. உள்ளடக்கம் இந்து பழமையில் ஊறிய கதை. நவீன பாணியில் படம் அமைந்திருந்தாலும், பணக்கார இளம் விதவைக்குக்கூட மறுமணம் செய்து வைக்க முடியவில்லை ஸ்ரீதரின் நவீன பாணி சினிமாவால்.

‘வெண்ணிறாடை’ படத்திற்கு இவர் நடிகர்களை தேர்வு செய்தது பிராமண சங்கத்தில் இருந்தோ, என்று எண்ணுகிற அளவிற்கு பார்ப்பனர்களால் நிரம்பி வழிந்தது அந்தப் படம்.

அந்தப் படத்தில் அறிமுகமான ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, டைப்பிஸ்ட் கோபு, நீலு இவர்கள் மட்டுமல்ல – ஏற்கனவே நடிகர்களாக இருந்த மேஜர் சுந்தரராஜன், லட்சுமியின் அம்மா ருக்மணி இன்னும் துணை நடிகர்கள் கூட பார்ப்பனர்கள்தான். அநேகமாக அந்தப் படத்தில் இயக்குநர் ஸ்ரீதரை தவிர எல்லோரும் பார்ப்னர்களாகத்தான் இருந்தனர்.

‘பார்ப்பனர்களுக்கு அதிக வாய்ப்புத் தரவேண்டும்’ என்கிற எண்ணம் இயக்குநர் ஸ்ரீதரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ‘தன்னுடைய கதாபத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்களா?’ என்பது மட்டும்தான் ஸ்ரீதரின் கவனமாக இருந்திருக்கும். அதனால்தான் அவர் படங்களில் பார்ப்பன கதாபாத்திரங்கள் அநேகமாக இல்லை. ஆனாலும் அந்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களால்தான் நிரப்பப்பட்டது.

காரணம், ஸ்ரீதரை சுற்றி எப்போதும் மிகப் பெரிய பார்ப்பன கும்பல்தான் இருந்தது. அவர்கள் கொண்டு வருகிற, பரிந்துரைக்கிற நபர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதன் பொருட்டுதான், பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனியத்தை விமர்சிக்காதவர்களுக்கு மட்டும்தான் ஸ்ரீதர் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் இருந்தது.

அதனால்தான் உலகின் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவரான நடிகவேள் எம்.ஆர். ராதாவிற்கு, ஸ்ரீதரின் ஒரு படத்தில் கூட வாய்ப்புத் தரவில்லை. பெரியாரின் கொள்கைகளில் ஊறிய நடிகவேளுக்கு வாய்ப்புத் தரவில்லை என்பதால், ஸ்ரீதரை திறமையற்றவர் என்று சொல்லி விட முடியாது. தனக்கு லாபம் இல்லை என்பதாலோ, தன்னை புறக்கணிப்பதாலோ தரமான ஒன்றை தரமற்றது என்று சொல்வதும், திறமையான ஒருவரை முட்டாளாக சித்தரிப்பதும்தான் பார்ப்பனியம்.

இந்தி சினிமாவின் இயக்குரும் நடிகருமான ராஜ்கபூர் போன்ற, இசைக்கு அல்லது பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து படம் எடுத்த இந்தியாவின் திறமையான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஸ்ரீதர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி.

தொடர்புடையது:

சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..