டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

al175

ரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள்.

ஆனால், அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால், சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமனல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராக, தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.

இந்த மனோபாவம், முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்ல, நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம், இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமற, பரம்பொருளைப்போல் பரவி இருக்கிறது.

இந்தச் சமூக அவலம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியாளருக்கு மட்டுமல்ல, டாக்டர் அம்பேத்கருக்கே இது நேர்ந்திருக்கிறது.

1929 ஆம் ஆண்டில் பாம்பாய் அரசாங்கம், (பிரிட்டிஷ்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து விசாரணை செய்ய, அமைத்தக் கமிட்டியில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அந்த கமிட்டியின் சார்பாக பயணம் செய்தபோது சாலிஸ்கான் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மஹர்வாடா என்ற ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள், டாக்டர் அம்பேத்கரை தங்கள் ஊருக்கு வந்து தங்களோடு ஒர் இரவு தங்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறார்கள்.

சாலிஸ்கான் ரயில் நிலையத்தில் இருந்து கிராமத்திற்கு குதிரை வண்டியில்தான் போக வேண்டும். வண்டிக்காரன் ஒரு ஜாதி இந்து. டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், பெரும் பணம் கொடுக்க முன்வந்தபோதும் கூட, ஜாதி இந்து வண்டி ஓட்ட மறுக்கிறான். வண்டியை மட்டும் வாடகைக்கு எடுத்து, வண்டி ஓட்டிப் பழக்கமில்லாத ஒரு தாழ்த்தப்பட்டவர் வண்டியை ஓட்டியதால் விபத்துக்குள்ளாகி டாக்டர் அம்பேத்கரின் கால் எலும்பு முறிந்து விடுகிறது.

இந்த அவலம் நிறைந்த அனுபவத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர், அந்தக் கட்டுரையை இப்படி முடிக்கிறார்;

“அனைத்து தீண்டப்படாதவர்களைவிட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று ஒரு வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான்.”

al233டாக்டர் அம்பேத்கரைப் பற்றியான இந்த எண்ணம், 1929 ஆம் ஆண்டில் பம்பாயை ஒட்டி இருந்த கிராமத்தின் எழுத படிக்க தெரியாத வயதான வண்டி ஓட்டியான ஜாதி இந்துவின் மனோபாவம் மட்டும் அல்ல. 2008 ஆண்டில் சில ஜாதி இந்து மாணவர்களின் மனோபாவமும் இப்படியேத்தான் இருக்கிறது. அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த மறுக்கிறார்கள். அதனால்தான் அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஒரு நடிகனின் சிலைக்குத் தருகிற மரியாதையை கூட உலக அறிஞர்களில் குறிப்பிடத்தக்க அறிஞராக அறியப்பட்டிருக்கிற டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு தர மறுக்கிறார்கள். அதனால்தான் அவரின் சிலை மட்டும் கூண்டுக்குள் சிறை வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறது.

***

“தீண்டாமையைக் கடைப் பிடிப்பதில் எத்தகைய தவறும் இருப்பதாக பழைய பழுத்த வைதிக இந்து கருதுவதில்லை, அவனுக்கு இது இயல்பான, இயற்கையான, பொதுமுறையான ஒரு விஷயம். இதனால் அவன் இதற்குக் கழுவாய் தேடுவதற்கோ அல்லது சமாதானம் கூறுவதற்கோ முயல்வதில்லை.

ஆனால் புதிய நவீனகால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக திட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்க்கு தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான்.”

1948 ல் டாக்டர் அம்பேத்கர் நவீன இந்துவைப் பற்றி, ‘மானம் அவமானத்திற்கு பயந்தவனாக’ குறிப்பிட்டிருக்கிறார். சரியாக 60 ஆண்டுகள் கழித்து 2008ல் இருக்கிற நவீன இந்து, அவரின் சிலையை இடிப்பதின் மூலமாகவும், அவர் பெயரை பயன்படுத்த மறுப்பதின் மூலமாகவும் அம்பேத்கரின் கூற்றை பொய்யாக்கி இருக்கிறான்.

இதற்குக் காரணம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே அவர்களின் ஒப்பற்றத் தலைவரான டாக்டர் அம்பேத்கரின் மீதும் பிரதிபலிக்கிறது.

உண்மையில் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டும்தானா? அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் இடஓதுக்கிடுக்கு மட்டும்தான் பாடுபட்டாரா?

குற்றப் பரம்பரையினர் என்ற ஒரு சமூகம் தலித் அல்லாத சமூகங்களில் மிகவும் பின்தங்கிய சமூகமா இருக்கிறது. பலநேரங்களில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை இந்த சமூக மக்களை ‘ஏத்திவிட்டே’ உயர்ஜாதி இந்துக்கள் நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர் மேல் இருக்கிற இந்த சமூகம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளில் அடிக்கடி ஈடுபடுகிற சமூகமாகவும் இந்து ஜாதி அமைப்பு முறை உருவாக்கி வைத்திருக்கிறது.

1948 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘தீண்டப்படாதார் என்பவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படதார் ஆயினர்?’ என்ற நூலுக்கான முன்னுரையை இப்படி துவக்குகிறர்:

“சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. மேலே குறிப்பிட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:

1) குற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;

11) ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;

111) தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.

இப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைபுலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது! மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்: அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்கமுடியும்.”

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேச வந்த டாக்டர் அம்பேத்கர், சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப் பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார்.

இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இவ்வளவு ஆவேசம்.

al343
தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளை கண்டிக்கும் போது பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை கண்டிக்கிற டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு முழுக்காரணம் என்று இந்து மதத்தையும் பார்ப்பனர்களையுமேதான் குற்றம் சுமத்துகிறார்:

“இன்று அனைத்துப் புலமையும் பிராமணர்களிடமே கட்டுண்டு கிடக்கிறது. ஆனால் அப்படியிருந்தும் துரதிருஷ்டவசமாக எந்தப் பிராமண அறிஞரும் ஒரு வால்டேராகச் செயல்படுவதற்கு இதுவரை முன்வரவில்லை. எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமண அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை.

இந்த வால்டேர் யார்? கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வளர்ந்தவர்; எனினும் விரைவிலேயே அந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, குரல் எழுப்பும் அறிவாற்றல், நேர்மை அவரிடமிருந்தது.

பிராமணர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லையே என்பது அவர்களது புலமைக்கு இகழ் சேர்க்கிறது; அவர்களது அறிவாற்றலுக்கு அவப்பெயர் தேடித்தருகிறது. பிராமண அறிஞர் என்பவர் ஒரு கற்றறிந்த மனிதரே தவிர அவர் ஓர் ஆய்வறிவாளர் அல்ல என்பதை மனதிற்கு கொண்டால் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை.

கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர்; தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர்.

பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர்.

பிராமணர்கள் படித்தவர்களாக மட்டுமே இருப்பதால் அவர்களால் ஒரு வால்டேரை தங்கள் மத்தியில் தோற்றுவிக்க முடியவில்லை.

பிராமணர்களால் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை? போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழிந்துரைக்கவில்லை?……………………………………….

……………………………………………………………………………

பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரமும் அந்தஸ்தும் இந்து நாகரிகம் அவர்களுக்கு அருள்கொடையாக அளித்தவையே ஆகும். அது அவர்களைத் தெய்வீக மனிதர்களாகப் பாவிக்கிறது; கீழ்த்தட்டுகளிலுள்ள வகுப்பினரை எல்லாவிதமான இன்னல் இடுக்கண்களுக்கும் உள்ளாக்குகிறது; அவர்கள் வீறு கொண்டெழுந்து தங்கள்மீது பிராமணர்களுக்குள்ள ஆதிக்கத்துக்குச் சவால் விடாதபடி, அதற்கு ஆபத்தை உண்டுபண்ணாதபடிப் பார்த்துக் கொள்கிறது.

ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான். அப்படியிருக்கும்போது பிராமணர்கள் எவ்வாறு வால்டேர்களாக இருக்க முடியும்?”

உண்மை எது என்று தெளிவாக ஆய்ந்து தனது சொந்த விருப்பங்களுக்கு இடம் கொடுக்காமல், இயங்கிய இந்த மாமேதையின் சிலையை இடிப்பதற்காகவா ஜாதிவெறியர்களுக்கு இவ்வளவு ‘வீரம்’?

-தொடரும்

al371

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்?

குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்…..

கையில் கத்தியுடன் வருவது வழிப்பறிக்காறர்கள் மட்டுமல்ல; டாக்டர்களும்கூடத்தான்

mother

எல்லாத் துறைகளும் வர்த்தகமாக மாறி வருகிறது. அதுவும் முதலீடு செய்யாமலேயே லட்சக்கணக்கில் சம்பாதிப்பது என்கிற நோக்கில் வர்த்தகம் இன்றைக்கு நேரடியான ஏமாற்றாக மாறிஇருக்கிறது.

வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வாங்கி திருப்பிக் கட்டாதவன், முறையான வருமானவரி கட்டாதவன், தொழிலாளர்களை ஏமாற்றுகிறவன், மின்சாரவாரியத்திற்கே கோடிக்கணக்கில் பாக்கி வைத்து ஷாக் அடிக்கவைத்தவன, சிறிய அளவில் தொழில் செய்கிறவர்களை நசுக்கி, தன்னை பெரிய வர்த்தகனாக காட்டிக் கொள்கிறவன், சூதாட்ட விடுதி நடத்துகிறவன், வியாபாரத்தையே சூதாட்டமாக நடத்துகிறவன் இவர்களெல்லாம்  ‘முறையான’ செயல்களில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் பணம் சேர்த்துவருகிறார்கள்.

அடுத்தவன் பணத்தில், அடுத்தவன் உழைப்பில் கோடிக்கணக்காக சம்பாதிப்பவர்கள் தொழில் அதிபர்களாகி இருக்கிறார்கள்.

அடுத்தவர் உறுப்பில், அடுத்தவர் உடம்பில் கோடிக்கணக்காக சம்பாதிப்பர்கள் இன்றைக்கு புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கிறார்கள்.

மக்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகத் திருட்டில் ஈடுபடும் மருத்துவர்கள், அதே வறுமையை பயன்படுத்தி பெண்களை வாடகைத் தாய்களாக மாற்றி கோடிக்கணக்கல் சம்பாதிக்கிறார்கள். மருத்துவம் இன்று அச்சுறுத்துகிற மனிதர்களின் கசாப்புக்கடை வர்த்தகமாக மாறி இருக்கிறது.

அதிலும் வாடகைத் தாய்முறை இந்திய பெண்களை உணர்வுள்ள மனுஷியாகவே மதிப்பதில்லை. ஒரு இயந்திரத்தில் மூலப்பொருட்களை உள்ளே தள்ளினால், அது ஒரு முழுப் பொருளை வெளியே தள்ளுவதுபோல், ஒரு பெண்ணின் உடலில் செயற்கையான முறையில் கருமுட்டையை செலுத்தியப் பிறகு, அந்தப் பெண் குழந்தையை வெளியே தள்ளிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டும் என்கிறது மோசடியான மருத்தவ வர்த்தகம்.

ஏழைப் பெண்களுக்கான இந்தக் கொடுமையை பெண் மருத்துவர்களே தீவிரமாக செய்கிறார்கள். (வர்க்க வேறுபாட்டில் ஆண் என்ன? பெண் என்ன?)
இந்தப் பெண் மருத்துவர்கள் சொல்லுகிற காரணம்,”இது ஒரு புண்ணியக் காரியம். வாடகைத்தாய் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவுகிறாள். அதற்காக பணமும் பெறுகிறாள்” என்கிறனர்.
சரி. அது புண்ணியக் காரியம் என்றால் வாடகைத் தாயாகவும் இருந்து அந்தப் புண்ணியத்தை முழுவதும் இந்த மருத்துவர்களே பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? உண்மையில் வாடகைத் தாய் முறையில் அதிகமான பணம் அடிப்பவர்கள் இந்த மருத்துவர்கள்தான்.

***

குழந்தை இல்லாதது மிகப் பெரிய சமூக குற்றம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஆணாதிக்க சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த மூடத்தனத்தையே முதலீடாக வைத்துக் கொண்டு பலமருத்துவர்கள் பணம்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
‘சொத்துக்கு ஒரு வாரிசு’ என்று பணக்காரர்களுக்கு குழந்தைத் தயாரித்துத் தரும் இந்த முறையை ஆரம்பித்து வைத்த டாக்டர் கமலா செல்வராஜ் போன்றவர்கள், இன்று இந்த மருத்துவ முறையால் பலகோடி சொத்துக்கு வாரிசாக ஆகியிருக்கிறார்கள்.

வசதிப்படைத்தவர்களை சுரண்டுகிறார்கள் என்பதல்ல நமது குற்றச்சாட்டு. வசதி படைத்தவர்களுக்கும் வெளிநாட்டுக் காரர்களுக்கும் ஒரு இயந்திரமாக இந்திய ஏழைப் பெண்களை, வாடகைத் தாயாக மாற்றுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குறியது.

சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த ஓரினசேர்க்கையில் ஈடுபடுகிறவர்கள் இந்தியாவில் வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பெண் எவ்வளவு மலிவானவளாக மாற்றப்பட்டிருக்கிறாள் என்பதையே இது காட்டுகிறது. மருத்துவம் முழுமையான மோசடி வர்த்தகமாக மாறியிருப்பதை பார்க்கும்போது,

இந்த நவீன உலகில் கையில கத்தியுடன் வருவபர்கள் வழிபறிக்காறர்கள் மட்டுமல்ல. அவர்கள் மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள், என்றே தோன்றுகிறது.

இந்த வாடகைத்தாய் முறையை முன்அறிவிப்பு போல் எச்சரித்து ‘குங்குமம்’ வார இதழில் , 13.8.2006 அன்று எழுதியிருந்தேன். அதன் தீவிரம் உணர்ந்து அதை மீண்டும் மறுபிரசுரம் செய்கிறேன்.

விரிவாகப் படிக்க இங்கே அழுத்தவும்;

தாய்மை விற்பனைக்கு

http://vemathimaran.com/2007/10/30/mathi/

சட்டக் கல்லூரி சண்டையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வன்முறையும்

atrocity

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை.

-எஸ். சௌமியா

அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி.

அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்.

நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சியே நம்மை இவ்வளவு திகில் அடைய வைக்கிறதே, மேலவளவு என்ற கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, ஓடுகிற பஸ்சில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் வித விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் ஒருபாவமும் அறியாத முருகேசன்.

அந்தக் கொலை வழக்கில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புரையின் சிறிய பகுதியை உங்களுக்குத் தருகிறேன்;

1. “ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?” என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).

2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).

3. “முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).

4. “சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).

5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).

6. “அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)

மனிதாபிமானம் கொண்ட எந்த ஜாதிக்காரர் இதைப் படித்தாலும் ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் படிக்க முடியுமா?

இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறதே….
இந்தக் கொலைகளையும் காட்சியாகத் தந்திருந்தால்…..

இந்த ஜாதிவெறிதான் தமிழனின் வீரமா?

தமிழனை பல்லவன் ஆண்டு இருக்கிறான். விஜயநகர மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள். மொகலாயர்கள் ஆண்டு இருக்கிறார்கள். வெள்ளையன் ஆண்டு இருக்கிறான் தமிழர்கள் அல்லாத பல நாட்டு மன்னர்கள் தமிழர்கள் மீது பல ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தியிருக்கிறார்கள், சுரண்டி இருக்கிறார்கள்
‘குற்றப்பரம்பரையினர்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்கள் உட்பட பலரும் கேவலப்படுத்தி அவமானப்படுத்தி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

அவர்களை எதிர்த்து வராத வீரம், ஒரு தாழ்த்தப்பட்டவர் பஞ்சாயத்துத் தலைவராக வரும்போது வருகிறதே? இந்த மோசமான மனநிலைக்கு பெயர் தான் தமிழனின் வீரமா?

ஜாதி படிநிலையில் தனக்கு மேல் உள்ளவர்கள் தன்னை அவமரியாதை செய்வதை, பொருட்படுத்தாமல் இருப்பதும், தனக்கு கீழ் உள்ளவர்கள் மேல் நிலைக்கு வருவதை பொறுத்துக் கொள்ளாமல் இருப்பதும்தான் ஜாதி இந்துவின் உளவியல். இப்படித்தான் ஜாதி சிஸ்டம் உயர்ஜாதிக்காரர்களுக்கு அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு எந்தப் பிரச்சினை இல்லாமல், ஜாதி ரீதியான சமூக அந்தஸ்த்தோடு இயங்குகிறது.

இடைநிலை ஜாதிகளுக்கு ‘சூத்திரன், வேசி மகன்’ என்ற பட்டங்கள் இருந்தாலும் அதைக் குறித்தான எந்த சொரணையும் இல்லாமல், பார்ப்பனியத்தின் மீது எந்த கீறலும் விழாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தனது காழ்ப்புணர்சியின் மூலமாக ஜாதி மேலாதிக்கத்தை, பார்ப்பனியத்தை பிற்படுத்தப்பட்ட ஜாதிகள்தான் மிகவும்  பத்திரமாக பாதுகாக்கிறது

 

murugesan_3401

மேலவளவு முருகேசனின் மனைவி பிணமான தன் கணவனுடன்

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை பார்த்தே உங்களால் ஒருநாள் முழுக்க சாப்பிட முடியவில்லை என்கிறீர்கள். மேலவளவு முருகேசன் கொலையைக் காட்சியாக்கிக் காட்டியிருந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவை மறந்துதான் வாழ்ந்து இருக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சண்டை காட்சிகளை திரும்ப, திரும்ப தொலைக்காட்சியில் காட்டப் படுவதால் மக்களிடம் தேவையற்ற பதற்றமும், கலவரமும்தான் ஏற்படும். வர்த்தக மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புவதை அரசு தடைசெய்யவேண்டும்.

***

இந்தச் சண்டை நடக்கும்போது அதை தடுக்கு முயற்சிகாமல் காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்தது சட்டபடியும் குற்றம். அதை தடுக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் செய்யாமல் விரட்டி, விரட்டி படம் எடுத்த போட்டோக் கிராப்பர்கள், கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் செய்தது தர்மபடி குற்றம்

தனிமனிதராக இந்தச் சண்டைய தடுக்க முயற்சித்த கேண்டின் பொறுப்பாளருக்கு இருந்த இந்த உணர்வும், தைரியமும் – காவல் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இல்லாதது வெட்கப்படக்கூடியது. மிகுந்த வன்முறை நிறைந்தது.

கண்முன்னே ஒருவன், புதைக்குழியில் சிக்கி ‘காப்பாற்றுங்கள்’ என்ற கூக்குரலிட்டபடி மரணதத்தோடு போராடுகிறான். பத்திரிகை, தொலைக்காட்சி கேமராமேன்கள் அவரை காப்பாற்றுவார்களா? மரணம் வரை படம் எடுப்பார்களா?

அதுபோன்ற காட்சிகள் கிடைப்பது அரிது. அதனால் மரணம் வரை படம் எடுப்பார்கள். பார்வையாளர்களை பரபரப்பாக்கி பல முறை பார்க்க வைக்கிற காட்சி அது. தொழிலில் ஒரு நல்ல பெயர் கிடைக்கும். முதலாளியின் பாராட்டையும் பெற முடியும். முன்கூட்டியே அந்த நபர் புதைக்குழியில் மாட்டிக் கொள்ளபோவது தெரிந்தால், நன்றாக மார்க்கெட்டிங் செய்து,This program sponsor by என்றும் ஒளிபரப்பலாம்.

அது மனித தர்மமாக இல்லாமல் இருக்கலாம். அதுதான் தொழில் தர்மம். தொழில் அதிபதிர்களுக்கு லாபம் தருகிற தர்மம். அதுவேதான் பத்திரிகை தர்மமும்.

‘தமிழர்களுக்கு வாய்க்கரிசி’-இதுதாண்ட இந்தியா

sirlanka-1

· கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம்.

· புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.’ – இது பழமொழி அல்ல.

· தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி.

· உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.

· ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது.

· குண்டால் அடிச்சி சோறுபோடுறான்.

· ‘இனி நம்ம கிட்ட ஒண்ணுமில்லே. எல்லாம் மேலே இருக்கிறவன்கிட்டதான் இருக்கு.’ -கையாலாகாத டாக்டரின் வசனம்.

· “அவளே போனபிறகு, நான் உயிரோடு இருக்கிறதுல அர்த்தம் இல்ல. என்னைவிடுங்க நானும் போய் சாகிறேன்.”

பொண்டாட்டியை இவனே தூக்குல மாட்டி தொங்க விட்டுவிட்டு, ஊர் மக்கள் மத்தியில் வசனம் பேசுகிறான் கொலைகார கணவன்.

· “தமிழர்களின் நலனுக்காகத்தான் போர்” என்று ராஜபக்சே சொல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.

நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி.

இதுதாண்டா இந்தியா.

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

Obama 2008

கறுப்பர் இனத்தில் இருந்து முதல்முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புமனிதன்இது புரட்சிகர மாற்றம்தானே?

விமல்

தற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு  தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நாசபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில் தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிகமோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்து மீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளி விவகாரத் துறையையும் ,  அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றைபோட்டு எப்படி  அந்தநாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூகமாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறிவிடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக’ முன்னேறலாம்.

‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக்கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

rice_bush

ரஷ்யாவில் ஜார்மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடிசூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார்மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

**

மெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப்பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகு முறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபுநாடுகளின் மக்கள் மத்தியிலும் மிகமோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதேநிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத்தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்தபொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான், அமெரிக்கப் பெரும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன? லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்துகொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும்போது, ‘அது இந்துமதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி’ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர்வேண்டும்’ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மைச் மூகத்தை சேர்ந்த அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரைஆதரிக்க வேண்டும்’ என்று ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர் கொள்ளமுடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்பசுற்றாலாதான் செல்லமுடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

/2008/11/07 அன்று எழுதியது.

தொடர்புடையது:

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

rajini-kamal1-500x3882

ராகவேந்திரா கல்யாணமண்டபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, கர்நாடகாவை கடுமையாக விமர்சித்து பேசியது பாராட்டுக்குரியதுதானே?
-விமல்.

தற்கு முன்பு தமிழர்களுக்கு எதிராக வன்முறை செய்த கன்னடர்களை விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், கர்நாடகாவில் இவர் படம் ஓட வேண்டும் என்பதுதற்காகத்தான். ஒக்கேனக்கல் பிரச்சினையின் போது, நிர்பந்தத்தின் காரணமாக, மேடையில் சத்யராஜ் போன்றவர்களின் மிக நேரடியான குற்றச்சாட்டின் நெருக்கடியின் காரணமாக கன்னடர்களை ரஜினி திட்டிப் பேசினார்.

அதன் விளைவாக ‘குசேலன்’ பட வெளியிட்டின் போது கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கன்னடர்களை திருப்தி படுத்துவதற்காக மன்னிப்பும் கேட்டார். அந்த மன்னிப்பின் மறுபக்கம், தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் கணிசமான பிரிவினர் ‘அவனா நீ?’ என்று குசேலன் படத்தை புறக்கணித்தனர். (பி. வாசுவும் படத்தில் தன் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தார்.)

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போய்விடுமோ என்ற பயத்தில்தான் ரஜினியின் இந்த கன்னட எதிர்ப்பு வீர வசனமும். ஈழத் தமிழர்கள் மீதான சென்டிமென்ட்டும்.

இதே காரணங்களுக்காகத்தான் நமது ‘உலக நாயகன்’ (என்ன கொடுமை சார் இது?) கமல்ஹாசன், தமிழர் பிரச்சினைகளுக்காக எந்த மேடையில் ஏறி பேசினாலும், பட்டும் படாமலும் ரொம்ப உஷாராக, ஒரு அத்துவைதியை போல் பேசுகிறார். (அய்யங்கார இருந்துக் கிட்டு அத்துவைதைத்தை ஆதரிக்கிறாரு, என்ன பெருதன்மை!)

‘தமிழன் என்கிற குறுகிய எண்ணத்தோடு….’ என்று கமல் பேசியதற்கு அர்த்தம், உண்மையிலேயே அவர் தன்னை உலக நாயகன் என்று நினைத்துக் கொண்டு பேசினார் என்று அர்த்தமாகாது.‘அது சும்மா தமாசு’ என்பது அவருக்கே தெரியும். வேறு மொழிகளிலும், பிற மாநிலங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்படுகிறது, நேரடியாக வெளியாகிறது என்பதுதான் அதற்கு அர்த்தம்.

கமலின் முந்தைய சாமார்த்தியமான அந்தப் பேச்சினால்தான் கர்நாடகத்தில், ‘குசேலனுக்கு’ வந்த எதிர்ப்பு ‘தசாவதாரம்’ என்கிற அய்யங்கார் அரசியல் படத்துக்கு வரவில்லை. (அய்யங்கார் மேன்மையை வலியுறுத்தியதால்தான் அந்தப் படத்தின் மீது அய்யர்களுக்குக்கூட கோபம். சில அய்யர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் போன்ற போர்வையில் அந்தப் படத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.)

ஆக, ரஜினி – கமல் இருவருக்கும் கன்னடர், தமிழர் என்கிற இன உணர்வெல்லாம் கிடையாது. அவர்களிடம் பண உணர்வு’ மட்டும்தான் இருக்கிறது.

rajini_kamal_05

குறிப்பு
கதாபாத்திரத்திற்கு எந்தவகையிலும் பொறுத்தம் இல்லாமல், தேவர் மகன் படத்தில், வாலி என்கிற அய்யங்கார், ‘கமல்ஹாசன்’ என்கிற அய்யங்காரை ‘தமிழச்சி பால் குடிச்சவன்டா’ ‘சங்கத் தமிழன், சிங்கத் தமிழன்’ என்று சொறிந்து விட்டதையும், அந்த சொறியை எடுத்து, இது ‘நியாயமான அரிப்புதான்’ என்கிற பாணியில் சுஜாதா என்கிற அய்யங்கார், ‘குமுதம்’ என்கிற அயங்கார் பார்ட்டனர் பத்திரிகையில் பக்குவமாக ‘தேய்த்து’ விட்டதையும், ‘தமிழன் என்கிற குறுகிற எண்ணத்தோடு…’ என்று கமல் இப்போது பேசியதையும் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள வேண்டாம். அப்படி புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று அவர்களின் ‘கொள்கைகளை’ வைத்துதான் தலைப்பிட்டேன். மற்றப்படி கே. பாலசந்தரை நான் ‘குட்டை’ என்று சொல்லிவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல.

அதேபோல், ‘தமிழன் என்பது குறுகிய எண்ணம், அய்யங்கார் என்பது பரந்த எண்ணமா?’ என்று கேள்வி கேட்காதீர்கள்.

-வே. மதிமாறன்