ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

Obama 2008

கறுப்பர் இனத்தில் இருந்து முதல்முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புமனிதன்இது புரட்சிகர மாற்றம்தானே?

விமல்

தற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு  தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நாசபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில் தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிகமோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்து மீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளி விவகாரத் துறையையும் ,  அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றைபோட்டு எப்படி  அந்தநாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூகமாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறிவிடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக’ முன்னேறலாம்.

‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக்கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

rice_bush

ரஷ்யாவில் ஜார்மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடிசூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார்மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

**

மெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப்பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகு முறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபுநாடுகளின் மக்கள் மத்தியிலும் மிகமோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதேநிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத்தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்தபொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான், அமெரிக்கப் பெரும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன? லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்துகொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும்போது, ‘அது இந்துமதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி’ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர்வேண்டும்’ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மைச் மூகத்தை சேர்ந்த அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரைஆதரிக்க வேண்டும்’ என்று ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர் கொள்ளமுடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்பசுற்றாலாதான் செல்லமுடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

/2008/11/07 அன்று எழுதியது.

தொடர்புடையது:

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

31 thoughts on “ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்”

 1. ஓ…

  இப்படியெல்லாம் வில்லங்கம் இருக்குங்களா ?..
  பாஜக உதாரணம் அவங்க வில்லங்கத்தையும், இவங்க வில்லங்கத்தையும் சரியாக புரிந்து கொள்ள முடியுது..

  தெளிவா எழுதி இருக்கீiங்க வேதிமாறன்..

  வாழ்க தமிழுடன்,
  நிலவன்,

  http://eerththathil.blogspot.com

 2. 1. அமெரிக்க நகரங்கள், குடியிருப்புகள், உணவு விடுதிகள், காவல் துறை, வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முதலான ஒட்டு மொத்த அமெரிக்காவில் வேர் கொண்டிருக்கும் வெள்ளை நிறவெறி இனிமேல் இல்லாமல் போய்விடுமா?

  2. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்காகத் தரப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை இனிமேல் பொருளாதார அளவு கோலின்படி செய்யலாம் என்று ஒபாமா பேசியிருப்பதற்கும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை அதேபோல மாற்றியமைக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பேசிவருவதற்கும் என்ன வேறுபாடு?

  3. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அமெரிக்கர்களில் பெரும்பான்மையினரும், அமெரிக்கச் சிறைகளில் மெஜாரிட்டியாகவும் இருக்கும் அமெரிக்க – ஆப்ரிக்க மக்களின் யதார்த்தம் இனிமேல் மாறிவிடுமா?

  4. திவாலான அமெரிக்க நிறுவனங்களால் வாழ்விழந்து, வீடிழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சில அமெரிக்கர்களை இந்த வெற்றி எந்த வகையில் எதிர் கொண்டு ஆறுதல் சொல்லும்?

  5. வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தமது வருமானத்தில் பெரும்பகுதியை வீட்டிற்கும், காப்பீட்டிற்கும் ஒதுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை ஒபாமாவின் வருகை மாற்றி அமைத்து விடுமா?

  6. திவாலாகி வரும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை, மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றும் புஷ்ஷின் நடவடிக்கைகள் இனிமேல் நிறுத்தப்படுமா?

  7. ஆண்டுதோறும் பல நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் வேலையிழந்து தவிக்கும் அமெரிக்க மக்களுக்கு அளவிடற்கரிய வேலை வாய்ப்புக்களை ஒபாமா அரசு உருவாக்குமா?

  8. அமெரிக்காவின் சமூக வன்முறைகளுக்குக் காரணமான தடையற்ற துப்பாக்கிகளின் சுதந்திரம் ஒபாமாவால் தடை செய்யப்படுமா?

  9. மேல்நிலைக் கல்வி கற்கவேண்டுமென்றால் ஒரு அமெரிக்க மாணவன் பத்து இலட்ச ரூபாயைக் கடன் வாங்கித்தான் செய்ய முடியும் என்ற நிலைமை இனிமேல் மாறுமா?

  10. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?

  11. கிளிண்டனில் தொடங்கி புஷ்வரை ஈராக்கையும், ஆப்கானையும் ஆக்கிரமித்து நடத்தப்படும் போரை

  ஒபாமா நிறுத்துவாரா? அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுமா?

  12. இசுரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் நயவஞ்சகத்துடன் பின்பற்றப்படும் அமெரிக்காவின் மத்திய கிழக்கின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுமா?

  13. வளைகுடாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரபு நாடுகளை அவை சர்வாதிகார நாடுகளாக இருந்தாலும் தனது செல்வாக்கில் வைத்திருக்கும் அமெரிக்காவின் தூர கிழக்குக் கொள்கைகள் இனிமேல் அரபு நாட்டு மக்களின் நலனுக்காக மாற்றப்படுமா?

  14. அணுஆயுதம் தயாரிக்க முயற்சி செய்வதாகக்கூறி ஈரானை மிரட்டி வரும் அமெரிக்காவின் அணுகுமுறை இனிமேல் ஜனநாயகப்பூர்வமாக அவதாரம் கொள்ளுமா?

  15. பால்கன் நாடுகளில் செர்பியாவை மிரட்டுவதற்காக மற்ற சிறிய நாடுகளை ஆதரிக்கும் கொள்கைகள் இனிமேல் எப்படி பார்க்கப்படும்?

  16. ஆப்பிரிக்க நாடுகளில் கனிமவளங்களைத் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்காக பின்தங்கிய இனக்குழுக்களின் உள்நாட்டுப்போரை மறைமுகமாக ஆதரிக்கும் அமெரிக்க அரசின் ஆப்பிரிக்க சூதாட்டம் இனிமேல் நிறுத்தப்படுமா?

  17. பொருளாதாரத் தடைகளால் கியுபாவையும், வட கொரியாவையும் தொடர்ந்து மிரட்டி வரும் அமெரிக்காவின் ரவுடி அணுகுமுறைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

  18. இந்தியா, பாக்கிஸ்தானை தொடர்ந்து ஒரு ஆயுதப் போட்டியில் வைத்திருப்பதற்காக இரண்டு நாடுகளையும் கூட்டாளிகளாக நடத்தும் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைக்கப்படுமா?

  19. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை தனது செல்வாக்கில் சிறைபிடிக்கும் புஷ் அரசாங்கத்தின் இந்தியக் கொள்கை ரத்து செய்யப்படுமா?

  20. விடுதலைப் புலிகளைத் தடை செய்ததோடு ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் வருமா?

  21. தென் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழக் குடியரசுகளை உருவாக்குவதற்காக தனது கைக்கூலிகளின் அரசுகளை ஏற்படுத்த எல்லா சதிகளிலும் ஈடுபடும் அமெரிக்க அரசின் தென்னமெரிக்க கொள்கையில் ஏதேனும் மாற்றம் வருமா?

  22. உலக அளவில் அமெரிக்க நலனுக்காக சாம, தான, பேத, தண்ட என எல்லா முறைகளிலும் செயல்பட்டு வரும் சி.ஐ.ஏ உளவு அமைப்பு ஒபாமாவின் காலத்திலாவது சைவப் புலியாக மாறுமா?

  23. ஆயுத ரீதியில் வல்லரசாகவும், பொருளாதார ரீதியில் தற்போது வலுவடைந்து வரும் ரசியாவுக்கு எதிராக முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சதுரங்கக் காய்களை நகற்றி வரும் அமெரிக்காவின் நாட்டம் இனிமேல் தலைகீழாக மாறுமா?

  24. உலகமெங்கும் இருக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், கப்பற்படைகள் எல்லாம் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுமா?

  25. அமெரிக்கா முதலாளிகளின் நலனுக்காகவும் ஏழை நாடுகளைச் சுரண்டுவதற்காகவும் டாலரை உலகச் செலவாணியாக பயன்படுத்துமாறு நிர்ப்பந்தித்து, அதன் மதிப்பை தேவைக்கேற்றபடி கூட்டியோ குறைத்தோ

  பொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா?

  முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது

 3. வணக்கம் தோழர்,
  இந்த நிகழ்ச்சிகளை சரியான உதாரனம் சொல்லி அதை எடுத்துக்காட்டியது மிக அருமையாகவும் மற்றும் எளிமையாக குழப்பம் இல்லாமல் அனைவருக்கும் புரியும்படியக உள்ளது.

  இப்படிக்கு,
  செ.தமிழ்ச்செல்வன்

 4. அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

  வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

  ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

  nedriyel aani adithathu maathiri sonneerkal mathimaaran .

  nanri
  maharaja

 5. நல்ல ஒரு எடுத்துகாட்டு தலைவரே….
  உலக அரசியலும் உங்கள்ளுக்கு அத்துபிடி போலே….
  கண்டலிசா ரைஸ் பண்ண வேலைகள் அனைத்தும் மிக கொடுமை….

 6. ஒபாமா அமெரிக்கத் தலைவர் ஆனதில் உலகமே தலைகீழாய் மாறுவது போல் உருவாக்கிய ஒரு மாயத்தோற்றத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறீர் தோழா….

 7. கலைஞர் வாழ்த்துகிறார்… ஆதிக்கம்-ஆணவம் அழிந்து வெள்ளிமுளைத்தது என்று வீரமணி உச்சி மோர்ந்து வரவேற்கிறார் உலகத்தமிழர்கள் எல்லாம் நம்பிக்கை பிறந்தது என்று கொண்டாடுகிறார்கள்… நீங்க மட்டும் ஏன்யா அந்தக் கிழவன் பெரியார் மாதிரி உண்மையயைப் போட்டு உடைக்கிறீங்க…

 8. தேர்தல் ஒரு மோசடி நாடகம். திரை மறைவில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அரசின் வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். உலகெங்கும் போர் வெறியன் என்று கெட்ட பெயரெடுத்த புஷ் போன்றவர்களை வைத்து இனிமேல் அரசியல் நடத்த முடியாது, அதற்கு பதிலாக வசீகர தோற்றம் கொண்ட, அதுவும் சிறுபான்மை கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா சிறந்த தெரிவாக பட்டிருக்கலாம். “ஒபாமாவா இப்படி?” என்று பலர் எதிர்பார்க்காத ஒருவரைக் கொண்டு காரியங்களை சாதிப்பது இலகு. அதாவது “மென்மையான ஏகாதிபத்தியம்” தான் இனிமேல் அமெரிக்காவின் வெளித்தோற்றத்தை தீர்மானிக்கப் போகின்றது.

  http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_05.html

 9. சமூக மாற்றம் பற்றி நீங்கள் கூறுவது சரி.

  ஆனால் அமெரிக்க அரசியலமைப்பு ஒர் சிலர் கையில் மட்டும் உள்ளது என்பதனை ஏற்று கொள்ளுவது கடினமாயுள்ளது.

  சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக கொழும்பில் நான் 9/10 வது படித்துக் கொண்டிருந்போது சமூகவியல் கற்பித்த ஆசிரியரும் உங்களைப் போலவே இதைத்தான் கூறினார். அனால் இப்பொது 25 வருடங்கள் இங்கு வாழ்ந்த பிற்பாடு அப்படியான என்ணம் எனக்கு உண்மையாகப் படவில்லை.

  அமெரிக்க அரசியலில் என் அவதானத்தின்படி நடப்பது தமது ஆதரவு வாக்காளர்களை, போட்டியாளர்கள் தேர்தல்தினத்தன்று வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்குப் போட வைக்கும் நிர்வாகத்திறன் தான் வெற்றியை நிர்ணயிக்கிறது.

  இதற்கு கட்டுக்கோப்பான தேர்தல் பிரசார அமைப்பும், பண பலமும் தேவை. இந்த இன்டர்னெட் யுகத்தில் பணம் சேர்க்கும் பராக் குழுவினரின் நவீன யுக்திகள், எட்டு வருட புஷ் ஆட்சியின் பிற்பாடான புது திருப்பத்திற்கான நாட்டம் எல்லாம் இலகுவில் பாராக் ஒபாமா பக்கம் வாக்காளர்களை அனுப்பிவிட்டது.

  அரசியலினால் – தேர்தலினால் தங்கள் அடிப்படை வாழ்வு நிலை மாற்றம் பெரிதாக எதனையும் கண்டு விடாது என எண்ணி வாக்களிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பர் அமெரிக்கர்கள். ஆனால் இம் முறை தேர்தல் நாட்டம் வெகுவாக அதிகரித்திருந்தது. வியட்நாம் யுத்த கால 1968 இன் பின்னர் இம் முறைதான் வாக்களிப்பு வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

  அரசியல் தலவர்களை தமது ஹீரோக்களாக எண்ணாத அமெரிக்கர்களில் கணிசமானோர் இம்முறை அதிலிருந்து விலகி, ஒருவித பின்பற்றுதலை ஒபாமா மீது கொண்டுள்ளனர்.

  ஆனால் தேர்தலிலும் பிற்பாடும் நீங்கள் கூறுவது போல, வெறும் ‘அரசியல்வாதியாகவே’ நடந்து கொண்டார் – நடந்து கொள்ள்வார் – அல்லது நடக்க நிர்ப்பந்திக்கப் படுவார். இதனால் ஏமாற்றங்கள் எழத்தான் போகின்றன.

  எனினும் பாரக் ஹுசெயின் ஒபாமா இலகுவாக இந்த வெற்றியைப் பெறவில்லை.

  வேறேதும் நல்லதாய் – தற்சமயம் புதிதாய் இல்லாத அரசியல் உலகத்தில் அவரின் வெற்றி மகிழ்வைத் தருகிறது எனக்கு.

 10. உங்க பதிவுகளின் எழுத்துக்கள் ஏன் வெறும் நட்சத்திரங்களாகத் தெரிகிறது? எந்த font உபயோகப் படுத்துகிறீர்கள்??
  அழகி use பண்ணலாமே?
  just visit http://www.azhagi.com.
  download n ask for password….then its urs.the easiest and the fastest.
  anbudan aruNaa

 11. sorry……உங்க பதிவுகளின் எழுத்துக்கள் ஏன் வெறும் நட்சத்திரங்களாகத் தெரிகிறது தமிழ்மணத்தில்?னு இருந்திருக்க வேண்டும்.
  அருணா

 12. அருமையாக ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள்.

  ஏகாதிபத்தியத்தின் சிகரமான அமெரிக்காவில் ஒரு மாற்றம் என்பது ஒபாமா வடிவில் தனது முதல் ஆரம்பத்தை பெறுகின்றது என்று இந்த ஒபாமா வருகையை நம்புகின்றவர்கள் ஏராளமானவர்கள். ஒரு காலத்தில் கறுப்பர்களை கப்பல்களில் படுக்க போட்டு கட்டி ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டுவந்தர்கள். இடை நடுவில் மாண்டவர்கள் ஏராளம். கொண்டு வந்த பின் அமெரிக்க துரைமார்கள் அடிமைகளின் விதைகளை நசுக்கி பார்த்து உரமான அடிமைகளை காசு கொடுத்து வாங்கி போனார்கள். சவுக்கால் அடிப்பதும் சமயத்தில் குருவி சுடுவது போல் சுட்டுககொல்வதும் சர்வ சாதரணமானதாக இருந்தது. இப்படி யொரு வரலாறு நிஜமாக இருப்பதால் ஒபாமா வருகை இன்று உலகத்தோர் கவனம் முழுவதையும் ஆக்கிரமித்து நிற்கின்றது, அமெரிக்க றொம்ப நல்லவனா காட்சி தருகின்றான், ஈராக்கில் பத்து பன்னிரண்டு லட்சத்தை தாண்டியும் சாவு நிற்கவில்லை. ரத்தம் இன்னும் காயவில்லை. ஈராக்கும் அப்கானிஸ்தானும் நொருங்கிய கண்ணாடிபோல் ஆகிவிட்டது. இருந்தும் அமரிக்கன் ஒபாமாவை அரியணை ஏற்றி நல்லவனாகி காட்சி தருகின்றான். ஆபிரிக்க எங்கும் பரவி விரிந்து செல்லும் சீனவின் பொருளாதர வலைக்குள் சிக்குப்பட்ட ஆபிரிக்க தேச மக்கள் ஒபாமாவின் வெற்றியை கண்டு சந்தோசத்தில் திக்குமுக்காடி நிற்கின்றனர். காலம் தான் நிறைய விசயங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

 13. //ஆனால் அமெரிக்க அரசியலமைப்பு ஒர் சிலர் கையில் மட்டும் உள்ளது என்பதனை ஏற்று கொள்ளுவது கடினமாயுள்ளது.

  சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக கொழும்பில் நான் 9/10 வது படித்துக் கொண்டிருந்போது சமூகவியல் கற்பித்த ஆசிரியரும் உங்களைப் போலவே இதைத்தான் கூறினார். அனால் இப்பொது 25 வருடங்கள் இங்கு வாழ்ந்த பிற்பாடு அப்படியான என்ணம் எனக்கு உண்மையாகப் படவில்லை.
  ///

  This is not true… The two parties are highly lobbyed by big tycoons.

  //
  அமெரிக்க அரசியலில் என் அவதானத்தின்படி நடப்பது தமது ஆதரவு வாக்காளர்களை, போட்டியாளர்கள் தேர்தல்தினத்தன்று வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்குப் போட வைக்கும் நிர்வாகத்திறன் தான் வெற்றியை நிர்ணயிக்கிறது.

  //

  The Voting percentage in America is far less than in India. Indian politicians are very very good in this. This implies Indians are efficient in delivering democracy than USA. This is funny…. 🙂

  Prognosticsage

Leave a Reply