பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!

al198

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

தொடர் – 2

பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், `உயர்`ஜாதிகள் அல்லது தலித் அல்லாத ஜாதிகளுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. அவர்களுக்குள் எந்த வகையான கொடுக்கல் வாங்கல் கிடையாது. வழிபாட்டு முறையில் கூட ஜாதிக்கொரு தெய்வம். ஜாதிக்கொரு பழக்கம்தான் இருக்கிறது.

பார்ப்பனரல்லாத `உயர்`ஜாதிகள்  மத்தியில் ‘வன்னியர், கள்ளர்’ ஜாதி மக்களை இழிவானவர்களாக, தங்களை விட மட்டமானவர்களாக நினைக்கிற மனோபாவம் இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ‘பறையன்’ என்ற சொல்லை தங்கள் ஜாதிக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசிக் கொள்ளும்போதுது ஜாதி இந்துக்கள் “போடா பறையா” “பறைச்சி மாதிரி” என்று பேசிக் கொள்வதுதைப்போல், இந்த `உயர்`ஜாதிக்காரர்கள், ‘கள்ளர்-வன்னியர்’ ஜாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ‘தொடுகிற பறையர்’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது வழக்கம்.

தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற, ஜாதிரீதியாக மட்டமாக நினைக்கிற `உயர்`ஜாதிகளை எதிர்த்து நிற்காத இவ்விரு சமூகத்தாரும், தங்கள் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கீடு செய்யாத, தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காத தாழ்த்தப்பட்ட மக்களின் மீதுதான் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள், என்று கடந்த கால கணக்கு சொல்கிறது.

தமிழகத்து வட மாவட்டங்களில், பெரும்பாலும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தென்மாவட்டங்களில் பெரும்பாலும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பெருமளவில் வன்முறையை நிகழ்த்துகிறார்கள். இதற்காக மற்ற ஜாதிகள் தலித் ஆதரவு நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. இந்த ஒரு விசயத்தில் மட்டும் இவர்களுக்கு பல வகையிலும் `உயர்`ஜாதிக்காரர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

தலித் அல்லாத ஜாதிகளுக்குள்ளான ஒரே ஒற்றுமை, தலித் விரோதத்தில் மட்டும்தான் இருக்கிறது. இதில் எந்த ஒரு தலித் அல்லாத ஜாதியும் விதிவிலக்கல்ல.

இதுபோலவே தலித் உட்பிரிவு ஜாதிகளுக்குள் தலித் மக்களாலேயும், ஜாதி இந்துக்களாலும் ஒருசேர அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்கள் அருந்ததிய மக்களே. இந்து அல்லது இந்திய சமூக அமைப்பில் அடித்தாலும் கேட்பதற்கு ஆளில்லாத அளவிற்கு (எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், இவர்களை ஒரு வாக்கு வங்கியாகக்கூட அரசியல் கட்சிகள் நினைப்பதில்லை) மிக பரிதாபகரமான நிலையில் இருப்பது அருந்ததிய மக்களே.

பார்ப்பானுக்கு மேல் ஜாதி இல்லை. அருந்ததியர்களுக்குக் கீழ் வேறு ஜாதியில்லை. இதுதான் இந்து ஜாதிய அடுக்குமுறை.

ஜாதிரீதியாக எல்லோரையும்விட தன்னை உயர்வானவர்களாகவும், மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் நினைக்கிற பார்ப்பனர் போன்ற உயர்ஜாதிக்கார்களுக்கு எப்போதும் பிறஜாதிக்கார்களால் எந்தப் பிரச்சினையும் நேர்ந்ததில்லை. சமூக மரியாதையும் குறைந்ததில்லை. பார்ப்பன எதிர்ப்பை தீவிரமாக கடைப்பிடித்த பெரியார் இயக்கத்தவர்கள் கூட தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களிடம் மிகுந்த கண்ணியமாகத்தான் நடந்திருக்கிறார்கள்.

(ஜெயேந்திரன், சந்திரசேகரன் போன்ற சங்கராச்சாரியார்கள்தான் பார்ப்பன பெண்களிடமே கண்ணியக் குறைவாக நடந்திருக்கிறார்கள்.)

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜாதிரீதியாக சமூக இழிவு மட்டும் அல்லாது, பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்களால் மிகக் கொடுமையான ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

‘உலகில் எந்த நாட்டிலும் இல்லாத, பாராம்பரியமிக்க புனிதமான கலாச்சாரம் நம் நாட்டுக்கு மட்டுமே உரியது’ என்று பீற்றிக் கொள்கிறார்களே, அந்த பாரம்பரியமிக்க புனிதம் மேற்சொன்ன இந்த மானக்கெட்டத்தனம்தான்.

மேற்கண்ட இந்த மானக்கெட்டத்தனத்தை இந்திய வரலாற்றில் அவ்வப்போது, பலர் விமர்சித்திருக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் ‘பார்ப்பன எதிர்ப்பு இந்து மதஆதரவு அல்லது இந்து மத எதிர்ப்பு பார்ப்பன ஆதரவு’ என்று தெளிவற்ற நிலையில் ஏதோ ஓரு வகையில் இந்து அல்லது பார்ப்பன அமைப்புகளோடு சமரசமாகி சுழன்று கொண்டிருந்தது.

ஆனால் இதை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று யாரும் முயற்சித்ததில்லை. இதை முற்றிலுமாக மாற்றுவதற்கு முயற்சித்து அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றவர்கள் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மட்டும்தான்.

அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக பரிந்து 1946ஆம் ஆண்டு ”சூத்திரர்கள் -யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ -ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தினராக ஆயினர்?” என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஓதுக்கீட்டை, அரசியல் சட்டத்தில் உறுதியாக்கி சட்டம் இயற்றினார்.

அவர் இயற்றிய சடத்தின் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்கள், அம்பேத்கர் பெயரை கூட குறிப்பிடாமல் ‘பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கம்’ என்று போஸ்டர் அடிக்கிறார்கள். அவர் சிலை ஊருக்குள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டக் கல்லூரிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

சரியாகவோ-தவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்கார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?

ஆக, சென்னை சட்டக் கல்லூரி மட்டுமல்ல இந்தியாவில் இருக்கிற அனைத்து சட்டக் கல்லூரிகளும் டாக்டர் அம்பேத்கர் பெயரில் இருப்பதுதான் முறையானது. சரியானது.

b15

‘இந்தியா முழுக்க உள்ள கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை விட பிறப்பால் நான் உயர்ந்தவன்’ என்று ஒவ்வொரு ஜாதி இந்துவும் நினைக்கிறான்.

அரசியல் சட்டத்தை எழுதியதன் மூலம், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஜாதி இந்துக்களைவிட, இன்னும் நெருக்கி சொன்னால் ‘அனைத்து ஜாதி இந்துக்களைவிட ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர்ந்தவர்’ என்று டாக்டர் அம்பேத்கர் நிரூபித்திருக்கிறார்.

‘ஒரு ஜாதி இந்து பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ந்தவன் என்பது’ மூடத்தனம் நிறைந்த இந்துமதத்தின் சதி. இது ஜாதி இந்துவிற்கு சிறுமை, அவமானம்.

‘ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒட்டு மொத்த ஜாதி இந்துவைவிட உயர்ந்தவன்’ என்று டாக்டர் அம்பேத்கர் நிரூபித்திருப்பது பெருமை, அறிவாயுதம்.

****

ருதார மணம், விவாகரத்து உரிமை, ஜீவனாம்சம், மறுமணம், விதவை மறுமணம், சொத்தில் உரிமை, வன்கொடுமைகளுக்கு எதிரான, பால்ய விவாகத்திற்கு எதிரான, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிரான தண்டனை போன்றவைகள் டாக்டர் அம்பேத்கரால் சட்டம் ஆக்கப் பட்டிருக்கிறது. இவைகளை சட்டமாக்குவதற்கு டாக்டர் அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அதிகம்.

பார்ப்பனர்களும், பண்ணையாளர்களும், அதிகார வர்க்கதில் உள்ளவர்களின் எதிர்ப்பும், இந்து மசோதா பொறுக்குக் குழுவில் இடம் பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எல். அனந்தசயனம் அய்யங்கார் போன்ற உறுப்பினர்களின் துரோகமும், டாக்டர் அம்பேத்கரை குத்திக் கிழித்தன. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்குக் கூட அவர் இவ்வளவு சிரமமப் படவில்லை.

இதைக் குறித்து டாக்டர் அம்பேத்ரே சொல்கிறார்:

“இந்து சட்டத் தொகுப்பு ஈடுஇணையற்றது; கடந்த காலத்தில் இந்திய சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட எந்த சட்டமும் அல்லது இனி நிறைவேற்றப்படவிருக்கும் எந்த சட்டமும் முக்கியத்துவத்தில் இதற்கு (இந்து சட்டத் தொகுப்பு) இணையாக முடியாது.

இந்து சமூதாயத்தைப் பீடித்துள்ள வர்க்கத்துக்கும் வர்க்கத்துக்கும் இடையேயும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் நிலவிவரும் ஏற்றத்தாழவைப் பற்றிக் கவலைப்படாமல் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மேலும் மேலும் சட்டங்களை இயற்றிக் கொண்டு செல்லுவது நமது அரசியில் சாசனத்தையே கேலிக்கூத்தாக்குவதாகும்; சாணக் குவியல் மீது மாடமாளிகையைக் கட்டியெழுப்புவது போன்றதாகும்”

இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மட்டும் என்று இதை சட்டமாக்கவில்லை. ஒட்டு மொத்த இந்து பெண்களுக்காவும் சட்டமாக்கியிருக்கிறார். இன்னும் சரியாக சொன்னால், இன்று இந்த சட்டத்தின் மூலம் பெரும் பயன்அடைபவர்களும், பாதுக்காப்பாக இருப்பவர்களும் பார்ப்பனப் பெண்கள்தான். பார்ப்பன ஆண்களிடம் இருந்தும், பார்ப்பனரல்லாத ஆண்களிடம் இருந்தும் (திருமண வன்முறைகள்) பார்ப்பனப் பெண்களை பாதுகாப்பது டாக்டர் அம்பேத்கரே.

al116

ஆனால், இதை எத்தனை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெண் உரிமை பேசுகிற பார்ப்பனப் பெண்கள் கூட சங்கராச்சாரியர்களின் இன்டலக்சுவல் வடிவமான சுப்பிரமணிய பாரதியைத்தான் சிலாகிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் பெயரை வாய் தவறிகூட குறிப்பிடுவதில்லை. ஆணாதிக்கத்தை எதிர்க்க தெரிந்திருக்கிற பார்ப்பனப் பெண்கள், பெண்களை கேவலப்படுத்துகிற பார்ப்பன ஆதிக்கத்தை, இந்து மதத்தை எதிர்ப்பதில்லை. அப்படி ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

இந்திய சூழலில் பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மத சகதியையும் புரிந்து கொண்டால்தான் அவர்கள் ஆணாதிக்கத்தையும் புரிந்து கொள்ளமுடியும். இந்தமூன்றுமுடிச்சு`க்குள்தான் இருக்கிறது இந்து பெண்களின் அடிமைத்தனம். இந்த புரிதல் வந்தால்தான், அவர்கள் பெண்களுக்காக சட்டம் இயற்றிய டாக்டர் அம்பேக்கரையும், பெண் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த தந்தை பெரியாரையும் புரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இன்றைய நடைமுறையில் பார்ப்பனப் பெண்கள், பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட, பெண்களை கேவலமாக கருதுகிற ஜாதிவெறியன் சந்திரசேகரன், காமுகன் ஜெயேந்திரன் படங்களைதான் தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜிக்கிறார்கள்.

அம்பேத்கரையும் பெரியாரையும் அறிவாளிகளாக அல்ல, மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.

அதனால் பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டி வைக்க வேண்டிய படம் அண்ணல் அம்பேத்கர் படமும், தந்தை பெரியார் படமும்தான். இவர்கள் இருவரால்தான் அவர்கள் இன்று சமூகத்தில் மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்?

குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்…..