டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல்

ambedkar12
டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்! -2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3

தொடர்-4

ந்திய மரபில் வேதம் யாராலும் எதிர்க்கப்படாதது. காரணம் அதன் சாரம் அவ்வளவு தர்க்கம் நிறைந்தது. தத்துவ மயமானதுஎன்று பார்ப்பன அறிவாளிகள் குறிப்பிடுகிகறர்கள்.

ஆனால் இந்திய தத்துவ‌ மரபில் வேத எதிர்ப்பு தீவிரமாக இருந்திருக்கிறது. பவுத்தம் மட்டுமல்ல நியாயம், வைசேஷிகம், பூர்வமீம்சை ஆகியவைகளும் இவர்களைப் போலவே சார்வாகர்கள், பிருகஸ்பதி இவர்களும் வேதங்களை கடுமையான விமர்ச்சிதிருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

சார்வாகர்களின் வேத எதிர்ப்புக்கு டாக்டர் அம்பேத்கர் ஒரு உதாரணத்தை தருகிறார்:

வேதம் மூன்று குறைபாடுகளால் கறைபட்டுள்ளது. உண்மையல்லாதது, தனக்குதானே முரண்படுதல், கூறியது கூறல் என்பவை இந்தக் குறைபாடுகள். மேலும் வேத பண்டிதர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அழிப்பவர்களாயிருக்கிறார்கள். கர்ம காண்டத்தின் அதிகாரத்தை ஏற்பவர்கள் ஞான காண்டத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிகிறார்கள். ஞான காண்டத்தை ஏற்பவர்கள் கர்ம காண்டத்தை தூக்கியெறிகிறார்கள்

 சார்வாகர்களை விடவும் வேத எதிர்ப்பில், பிருகஸ்பதி ஒரு படி மேலே இருக்கிறார். மாதவ ஆசார்யர் பிருகஸ்பதி குறிப்பிட்டதை மேற்கோளாக காட்டியதை எடுத்து அம்பேத்கர் தருகிறார், இந்த பிரகஸ்பதியின் வாதம் தந்தை பெரியாரின் வாதத்தை ஞாபகம் படுத்துகிறது.

 அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசியின் திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது இவையெல்லாம் அறிவும் ஆண்மையும் இல்லாதர்களின் வாழ்க்கைகாக செய்யப்பட்டவை. ஜ்யோதிஷ்டமோ சடங்கில் கொல்லப்படும் விலங்கே கூட சுவர்க்கத்துக்குப் போகும் என்றால், வேள்வி செய்பவர் தமது தந்தையை அதில் பலி கொடுக்காதது ஏன்?

சிரார்த்தத்தில் நாம் கொடுக்கும் நிவேதனங்கள் சுவர்க்கத்தில் உள்ளவர்களை மகிழ்விககுமு என்றால் இங்கே வீட்டின் கூரைமேல் நிற்பவர்களுககு உணவைக் கீழேயே ஏன் கொடுக்கக் கூடாது?

உயிர் உள்ளபோது மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும்; கடன் பட்டாலும் கூட அவன் நெய்யுணவு உண்ணட்டும்; உடல் சாம்பாலாகிப் போனபின் அது எப்படி மீண்டும் வர முடியும்?

எனவே, பிராமணர்கள் இங்கே ஏற்படுத்தியிருப்பவை வாழ்க்கை நடத்துவதற்கான வழியே.

…………………………………………….

வேதங்களை இயற்றிய மூன்றுபேரும் கோமளிகள், அயோக்கியர்கள், பிசாசுகள்.” இது பிருகஸ்பதி.

இப்படி வேத எதிர்ப்புக்கு இந்திய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் டாக்டர் அம்பேத்கர். பார்ப்பனியத்தை வேதத்தை எதிர்த்த தந்தை பெரியாரையும்டாக்டர் அம்பேத்கரையும்பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள்என்ற ஒற்றை வாக்கியத்தில் புறம்தள்ளுகிற பார்ப்பனர்கள், பிருகஸ்பதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள்?

 சொல்லியிருக்கிறார்கள், இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது விவகாரமாக கேள்வி கேட்டால், உடனே அவரைவந்தட்டாய்யா..பிருகஸ்பதி” “போய் தொலைஞ்சானா அந்த பிருகஸ்பதிஎன்று கேலி செய்வதுபோல் ஒரு வழக்கத்தை பேச்சில் பரம்பரை பரம்பரையாக கடைப்பிடிப்பதின் மூலம் பிருகஸ்பதியை பழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

***

 வேத காலத்தில் ஆரியர்களிடம் அல்லது இந்துசமூகத்திடம் குடி, சூது, வரைமுறையற்ற பால் உறவு, விபச்சாரம், விவசாய வேலைகளுக்குக்கூட மிச்சம் வைக்காமல் மாமிசத்திற்காக விலங்குகளை யாகத்தில் பலியிட்டு தின்பது என்கிற பழக்கங்கள் ஓங்கி இருந்தது. அதை எதிர்த்துதான் புத்தர்மது குடிப்பது, விபச்சாரம் செய்வது, பிறன் மனை நோக்குவது, விலங்குகளை பலியிடுவது போன்றவற்றை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரம் இந்தியா முழுக்க அலையாக அடித்தது. அதன் தாக்கத்தில்தான் தமிழகத்து திருவள்ளுவரும், பிறன்மனை நோக்காமை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை எழுதினார். புத்தரின் தாக்கத்தினால்தான், வேதக் கடவுள்களான தேவர்களை திருடர்களோடு ஒப்பிட்டும் எழுதினர் வள்ளுவர்.

 தேவர் அணையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.”

கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம்போன போக்கில் நடந்தலால், கயவர் தேவரைப் போன்றவர்என்று எழுதினார்.

டாக்டர் அம்பேத்கர் இதை தன் ஆய்வின் மூலமாக நிரூபிக்கிறார்;

 ஆரியர்கள் சூதாடும் இனத்தினர். ஆரிய நாகரிகத்தின மிக ஆரம்ப காலத்திலேயே சூதாட்டம் ஒரு விஞ்ஞானமாகவே வளர்க்கப்பட்டு, அதற்கெனத் தனியாகத் தொழில்நுட்பச் சொற்களை கூட உருவாக்கபட்டிருந்தன. இந்துக்களின் வரலாற்றுக் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்து அவற்றுக்குக் கிரேதா, திரேத, துவாபர, கலி என்று பெயர் வைத்திருந்தார்கள். உண்மையில் இந்தப் பெயர்கள் ஆரியர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய பகடைகளின் பெயர்களாகும். மிக அதிர்ஷ்டமான பகடை கிரேதா என்றும் மிகவும் துரதிர்ஷ்டமான பகடை கலி என்றும் குறிப்பிடப்பட்டது. திரேதா, துவாபர என்பவை இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.

ராஜ்யங்களும், மனைவியரும் கூடச் சூதாட்டங்களில் பந்தயமாக வைக்கப்பட்டனர். …………………………..

ஆரியர்களிடம் சூதாட்டம் பணக்காரர்களின் விளையாட்டாக இருக்கவில்லை. அது பலரிடமும் உள்ள கெட்ட பழக்கமாகவே இருந்தது. ஆரியர்களிடம் ஆண்பெண் உறவுகள் தளர்த்தியான முறையில் இருந்தன………………………………………

விபச்சாரம் தாராளமாகவும் மிக மோசமான முறையிலும் நடைபெற்று வந்தது. விலங்குகளிடம் உறவு கொள்ளும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. இதைச் செய்தவர்களில் மிகவும் மரியாதைக்குரிய ரிஷிகளும் இருந்தார்கள்.

புராதான ஆரியர்கள் குடிகார இனமாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மதத்தில் மது ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்தது.”

தாந்திரக வழிபாட்டில் முக்கிய அம்சங்களாக ஐந்துமகரங்கள்உள்ளன. இவை வருமாறு:

1. மத்யம் (பல வகையான மது பானங்களை குடித்தல்)

2. மாம்சம் (மாமிசம் உண்ணுதல்)

3. மத்ஸம் (மீனை உண்ணுதல்)

4. முத்ரம் (வறுத்த அல்லது பொரித்த தானியத்தை உண்ணுதல்)

5. மைதுனம் (பால் உறவு)

 ஊதாரித்தனமும் ஒழுக்கக் கேடுமே புராதான இந்துக்களின் முறையாக இருந்திருக்கிறது. இது இப்போது இருப்பது போல் தனிபரின் பழக்கமாக இல்லாமல், மதத்தின் பேரில் ஒட்டு மொத்த சமூகத்தின் பழக்கமாகவே இருந்திருக்கிறது, என்பது வெட்கக் கேடானது.

 இப்படி பின்நவீனத்துவ தத்துவவாதிகளைபோல் வாழ்ந்திருக்கிறார்கள் வேதகாலத்து இந்துக்கள். ஆனால் இன்றுகுடிப்படிதும், கூத்தடிப்பதும் ஒருவர் பலரோடு உறவு வைத்துக் கொள்வதும் நமது பாரம்பரிய இந்து பண்பாட்டுக்கு உகந்ததல்ல.” என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், பொய் சொல்கிறார்கள் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துமதவெறி அமைப்புகள்.

காதலர் தினம்போன்ற சாதாரண மேற்கத்திய கலாச்சாரத்தைக்கூட இந்து மதத்தின் பேரால் எதிர்ப்பது எவ்வளவு கேலிக்குரியது.

ambedkar2 

ஆம், இந்து மதவெறியர்களின் பாரம்பரியம் எவ்வளவு கேவலமானது என்று அம்பலப்படுத்திய மாமேதை டாக்டர் அம்பேத்கரை இந்து மதவெறியர்கள் எதிர்த்தால் அதில் அர்த்தமிருக்கிறது.

ஆனால் அவர் தாழ்த்தப்படட சமூகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட சமூதாய மக்களுக்காகவும் பாடுபட்டவர், ஏறக்குறைய இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மொழி வேறுபாடின்றி, உட்பிரிவுகள் வேறுபாடின்றி அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காவும்,

 “இந்த தலித் பசங்க எல்லாம் இன்னைக்கு படிச்சு நம்மள தாண்டி போக பாக்குறான். நமக்கு மேலே வர பாக்குறான் என்றால் அதுக்கு இந்த ஆள்தாண்ட காரணம்” என்கிற தொனியில் உயர்ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களும்’

இந்த ஒரு செயலுக்காக மட்டும் ஒன்று சேர்ந்து, அவரை உதாசினப்படுத்துகிற, அவமானப்படுத்துகிற, புறம் தள்ளுகிற மோசடிபேர்வழிகளை உலகத்தின் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினால் கூட அந்த வார்த்தைகள் கெட்டவார்த்தைகள் அல்ல.

தொடரும்

 தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.