டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

ambedkar-2

ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை  -8

மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்? -9

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்? -10

தொடர் -11

முதலாவது வட்டமேசை மாநாடு லண்டனில் 1930 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 1931ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி வரை நடந்தது. இந்த மாநாட்டில் இங்கிலாந்தில் இருக்கும் வெள்ளைக்கார தலைவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், இந்தியாவில் வாழும் வெள்ளைக்கார இந்தியத் தலைவர்கள், இந்தியத் தலைவர்கள் என்று 89 பேர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்கர் ஒருவரே முறையாக பல்கலைக்கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர்.

டாக்டர் அம்பேத்கர் மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில்தான் காந்தி உட்பட்ட அனைத்து இந்திய, இந்து தலைவர்களின் ஜாதி உணர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் மீதுள்ள காழ்ப்பணர்ச்சியை அவர்களின் முகத்திற்கு நேராக கேள்விகேட்டு அம்பலப்படுத்தினார் அம்பேத்கர்.
“தாழ்த்தப்பட்டவர்களை இந்துமதத்திலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது. அவர்கள் கடவுளின் குழந்தைகள் (அரிஜன்)” என்ற காந்தியிடம், ‘தாழ்த்தப்பட்டமக்கள் இந்துக்களே அல்ல. அவர்களை நீங்கள் இந்துக்களாக அல்ல மனிதர்களாகக்கூட நடத்துவதில்லை’ என்று ஆதாரத்தோடு நிரூபித்தார். இந்து மதத்தை, காந்தியை அம்பலப்படுத்தி பிரிட்டிஷ் அரசிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமையைப் பெற்றார்.

டாக்டர் அம்பேத்கரோடு விவாதிக்க முடியாத காந்தி, ‘எங்க ஏரியாவுக்கு வா, கவனிச்சிக்கிறேன்’ என்கிற பாணியில், இந்தியாவிற்கு திரும்பிய உடன், அம்பேத்கர் போராடி பெற்ற இரட்டை வாக்குரிமையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா முழுக்க ஊடகங்களும், தலைவர்களும், காந்தியை கொல்ல வந்த வில்லனை போல் அம்பேத்கரை சித்தரித்தனர்.
காந்தியின் மனைவி அம்பேத்கரை நேரில் சந்தித்து கணவனை காப்பாற்றித் தருமாறு தாலிபிச்சைக் கேட்டார். இந்திய தலைவர்களில் ஒருவர் மட்டுமே டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவாக இருந்தார். அவர் அம்பேத்கருக்கு இப்படி தந்தி கொடுத்தார்:

கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிட, ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. காந்தியின் மரணத்தை குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்கள் உறுதியில் இருந்து பின்வாங்காதீர்கள்”
இப்படி தந்திக் கொடுத்தத் தலைவர் தந்தை பெரியார்.

ஆனால், அம்பேத்கர் காந்தியின் உயிரை காப்பாற்றினார். உண்ணாவிரத்தில் காந்தி இறந்திருந்தால், அதைக் காரணமாக கொண்டு கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுவார்கள், என்ற கவலையால் அம்பேத்கர், காந்தியின் பிளாக்மெயில் அரசியலிடம் தோற்றார்.

பின்னாட்களில், இந்திராகாந்தி கொலைசெய்யப்பட்டபோது, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதும், ராஜிவ் கொலையின்போது தமிழர்கள் மீது கொலைவெறி தாக்ககுதல் நடந்ததும் – அன்றைக்கு அம்பேத்கரின் அந்த முடிவு அல்லது அந்த தீர்க்க தரிசனம் எவ்வளவு சரியானது என்று நிரூபித்தது.

(காந்தி ஆரம்பித்தில் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர் என்று நினைக்கவில்லை. ‘அறிவாளியாக இருந்தால் அவர் அய்யராக இருப்பார்’ என்பது பொது புத்தியில் இருக்கிற ஜாதி இந்துவின் மூட நம்பிக்கை. அதுபோல்தான் காந்தி, ‘தாழ்த்தப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்ட பார்ப்பனர்’ என்றே அம்பேத்கரை கருதியிருந்தார்.)

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் என்று மிரட்டிய காந்தி, பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ‘வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறும்வரை உண்ணாவிரதம்’ என்று போராடவில்லை. அப்படி போராடியிருந்தால், வெள்ளைக்காரன் முடித்து வைத்திருப்பான். உண்ணாவிரதத்தை அல்ல, காந்தியை.

***

தனக்கு உதவி  செய்கிறவர்கள், தன்னை ஆதரித்துவிட்டு, தான் ஆதரிக்கிற கொள்கைகளுக்கு சமாதி கட்டினாலும் பரவாயில்லை. தன்னை முன்னேற்றிக் கொண்டால் போதும், என்கிற போக்கு இன்றைக்கு ‘முற்போக்காளர்கள்’ மத்தியில் விரவி கிடக்கிறது.

பலர் தன்னுடைய ‘முற்போக்கான’ கொள்கையை உடன் வேலை செய்கிறவர்களுக்குக்கூட தெரியக்கூடாது என்கிற முறையில் ரகசியமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய சந்தர்ப்பவாதத்தை பகிரங்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்றைய நெருக்கடியான சூழலிலேயே இப்படிப்பட்ட அறிவாளிகள் நிறைந்திருக்கிறபோது, அன்றைக்கு டாக்டர் அம்பேத்கர் தன்னைப் பாராட்டிய பிற்போக்காளர்களை புகழாமல், அவர்கள் இவருக்கு நடத்தியப் பாராட்டு விழாவிலேயே அவர்களை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார்.

1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்கு எதிர்ப்பாக இருந்த பார்ப்பனரல்லாத உயர்ஜாதி கும்பல், சென்னை கன்னிமரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கருக்கு விருந்து கொடுத்து, அவரிடம் ‘நாங்கள்தான் உண்மையான பார்ப்பனரல்லாத இயக்கம்’ (நீதிக்கட்சி) என்று நற்பெயர் வாங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த திட்டம் அண்ணல் அம்பேத்கருக்கும் தெரிந்திருக்கிறது. தன்னைப் பாராட்டி விருந்து கொடுத்தவர்கள் மத்தியில் அண்ணல் இப்படி பேசியிருக்கிறார்:

“பார்ப்பனரல்லாத தோழர்களே, உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே அதில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங்கள் என்ன? உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன?
எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கும் மாறான கட்சி என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பனப் புரோகிதம், நடவடிக்கையில் பார்ப்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும் இரண்டாவது வகுப்புப் பார்ப்பனர் மாதிரி ஆக்கிக் கொண்டு, முதலாவது வகுப்புப் பார்ப்பானாக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொண்டு வருவீர்களானல் நீங்கள் எந்தத் தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ள அருகர்கள் ஆவீர்கள்?

பார்ப்பனர்லலாதார் கட்சிக்கு முதாலவதும் கடைசியானதுமான கொள்கை ‘உத்தியோம்’ தானா? அல்லது உத்தியோகத்தில் சரிபங்கு மாத்திரம்தானா? இதைத் தவிர வேறு என்ன கொள்கையை இதுவரை பின்பற்றிவந்தீர்கள்?”

“உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டிப் பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள். அதனாலேயே உங்களுக்குச் செல்வாக்கில்லை. இப்படியே இருந்தால் இனியும் நீங்கள் என்றென்றும் உருப்படமாட்டிர்கள்”
என்று பேசியிருக்கிறார்.

(குடியரசு 30.9.1944)
2195237_ambedkar_periyar
ஒருவர் அறிவாளியாக இருப்பது ஒன்றும் அதிசயமில்லை. அந்த அறிவு யாருக்காக பயன்படுகிறது? இக்கட்டனா சூழலில்கூட அவர்கள் எவ்வளவு துணிவோடு தங்கள் நிலையை வெளிபடுத்துகிறர்கள், என்பதை பொறுத்துதான் ஒருவரின் மேதமையை மதிக்கமுடியும். அப்படி அறிவாளிகளுக்கான முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர்தான் நமது அண்ணல் அம்பேத்கர்.

சொல்லுங்கள் இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் மட்டும்தானா? இவர் பெயரை பிற்படுத்தப்பட்டவர்கள் புறக்கணிப்பது முறைதானா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்தில் அவர் அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டார் என்பது உண்மைதான். தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் யாரால் தாழ்த்தப்பட்டவர்கள்?
பார்ப்பனர்களாலும், பிற்படுத்தப்பட்டவர்களாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்தான் அவர்கள் நலனில் அதிகம் கவனம் எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு பார்ப்பனர்களால், பிற்படுத்தப்பட்ட நிலைமைக்கு ஆளானார்கள் என்பதால் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்டார். ஒட்டு மொத்தமாக பெண்கள் எல்லா சமூகங்களுக்குள்ளும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதால், இந்து சட்டத் தொகுப்பை கொண்டுவந்தார்.

இவை எல்லாமே பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் நடத்திய போராட்டங்கள். இந்திய சூழலில் எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்தாலும் கூட ஒரு முற்போக்காளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைகள் இவை. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்ததால் அவரை ஜாதியோடு முடிச்சுப்போட்டு பார்க்கிறார்கள். அதற்கு அவர் பொறுப்பல்ல. வழக்கம்போலான இது இந்து மானோபாவம்தான்.

நேரு தலைமையிலனா இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சட்ட மந்திரியாக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டையும், பெண்களுக்கான இந்து சட்ட மசோதாவையும் அரும்பாடுபட்டு உருவாக்கினார் டாக்டர் அம்பேத்கர். அவைகளை நேருவும் அவர் அமைச்சரவையும் நடமுறைக்கு கொண்டு வரமால் இருந்ததை கண்டித்துதான் தன் சட்ட அமைச்சர் பதவியை 11.10.51அன்று ராஜினமா செய்தார். அவரின் ராஜினமாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோரிக்கை ஒன்றுமில்லை.

பெண் அடிமைத்தனத்தை வலியுத்திய, பார்ப்பன பாரதியை கொண்டுகிற பெண்விடுதலை பேசுகிற பெண்கள், டாக்டர் அம்பேத்கரை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள்.

பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்காத, அம்பேத்கரை புறக்கணிக்கிற இவர்களின் பெண் உரிமை யாருக்கானது? இந்த மனோபாவம் கொண்டவர்கள் ‘விடுதலை’ அடைந்து மட்டும் என்ன செய்யப் போகிறார்கள்?

பிற்படுத்தப்பட்டவர்களின் ஒதுக்கீட்டுக்காக தன் பதவியை துறந்த அம்பேத்கரை, பிற்படுத்தப்பட்டவர்களும் மிக பிற்படுத்தப்பட்டவர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரை ஜாதியின் காரணமாகவே கடுமையாக எதிர்க்கிற பிற்படுத்தப்பட்டவர்களை ‘சூத்திரர்கள்’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?

-தொடரும்
————–

அய்ரோப்பிய நாடுகளில் தமிழ்ஒலி; அதில் நான்

mutram1

இங்கே அழுத்தவும்
அய்ரோப்பிய வானொலியில்…
“முற்றம்” நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பினை உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் இணையத்தளம் ஊடாக கேட்க்கலாம்.
இணையதள முகவரி: http://www.tamilolli.com

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.