மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

ambedkar22

ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை  -8

மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்? -9

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்? -10
டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும் – 11
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்? -12

தொடர் – 13

டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர்.

தந்தை பெரியாரைப் பற்றி எழுதும்போது, பார்ப்பனர்கள், மதவாதிகள் போன்றவர்கள் நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரை பற்றி எழுதும்போது பார்ப்பனர்கள், மதவாதிகளோடு கூடுதலாக பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்து கொண்டு, நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். நமது தொடர் சாதிய கண்ணோட்டம் கொண்ட பிற்படுத்தப்பட்டவர்களையும் முற்போக்காளர்களையும் கேள்வி கேட்டது, நம்மீதான கோபத்திற்கான இன்னொரு சிறப்புக் காரணம்.

சரி. இதுவொன்றும் சமூகத்திற்கு புதியதில்லை. ஆனால் பிரச்சினை இதோடு மட்டும் நிற்கவில்லை. தொடரை ஒட்டி பல அவதூறுகளும், புரளிகளும் டாக்டர் அம்பேத்கர் மீதும், என்மீதும், அம்பேத்கர் T.shirt தயாரிப்பில் தீவிரமாக இருக்கிற எனது நண்பர்கள் மீதும் வீசப்பட்டன. அந்த அவதூறுகளில் இரண்டு அவதூறுகளை மிக மோசமானதாக உணர்கிறேன்.

1. அம்பேத்கர் T.shirt போட்டு நன்றாக சம்பாதிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வழி.

2. டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரை எப்படி பார்ப்பன எதிர்ப்பாளராக சொல்வது?

இந்த இரண்டு புரளிகளும் அற்பமானவை, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் எழுபவை என்று முற்றிலுமாக புறம் தள்ளிவிடலாம். ஆனால் இந்த அற்பமான புரளிகளின் இன்னொருபுரம் ஆபத்தானதாக இருப்பதால், இந்தப் புரளிகளுக்கு நம் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது.

அற்பம் 1. அம்பேத்கர் T.shirt போட்டு நன்றாக சம்பாதிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வழி.

இது போன்ற அவதூறுகள் பெரியார் T.shirt போடும்போதோ, சே குவோர T.shirt போடும்போதோ சொல்லப் படவில்லை. அம்பேத்கர் T.shirt போட வேண்டும் என்று சொல்லும்போதுதான் இந்த அவதூறு தீவிரமாகப் பரப்பப்படுகிறது. இந்த அவதூறு வழக்கமான மற்ற அவதூறுகளை போன்ற ஒன்று என்று சாதாரணமாக, எளிதாக வரையறுத்துவிட முடியாது. இது அவைகளை விடவும் மிகவும் இழிவானது, கேவலமானது. காரணம் இது அவ்வளவு தலித் விரோதமும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டது.

அம்பேத்கர் T.shirt வாங்குவதற்கு ஆளில்லை என்பதால்தான் அதை யாரும் விற்பனைக்கே கொண்டுவரவில்லை. லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற வியாபார நோக்கோடு பார்த்தால், அம்பேத்கர் படம் போட்ட T.shirt விற்பனைக் கொண்டு வருவது முட்டாள்தனமானது. பெரும் நஷ்டத்திற்குரியது. இன்றைய நிலையில் வர்த்தக நோக்கத்தோடு T.shirt போட வேண்டும் என்றால், அதற்கு பொருத்தமானது சே குவேரா படம் போட்ட T.shirt போடுவதுதான். அதுதான் பெருத்த லாபம் தரும். யதார்த்தம் இப்படி இருக்கையில், நம்மீது வீசப்படும் அவதூறோ இப்படி இருக்கிறது. ஆத்திரம் அறிவுக்கு ஆகாது என்பர்களே அதற்கு இந்த அவதூறு நல்ல உதாரணம்.

டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T.shirt அணிவது ஸ்டைலுக்காகவோ அல்லது பார்வைக்கு தன்னை ஒரு முற்போக்காளனாக மற்றவர்களுக்கு ‘பந்தா’வாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ அல்ல. அப்படி ஒரு பொதுப்பார்வை அம்பேத்கர் மீதும் இருந்திருக்குமாயின் சே குவேரா T.shirt அணிபவர்கள் எல்லாம் அம்பேத்கர் T.shirt டும் அணிந்திருப்பார்கள். ஆனால் அம்பேத்கர் T.shirt அணிவது ஜாதிகளுக்கு எதிரான, ஜாதிவெறியர்களுக்கு எதிரான ஒரு கலகக் குறியீடு என்பதால்தான்.

அண்ணலின் படம் போட்ட T.shirt அணிந்து பாருங்கள் அன்பர்களே, இந்த ஜாதிய சமூகம் உங்களை எப்படி அடையாளப்படுத்துகிறது? அண்ணலின் படத்தை பார்த்தவுடன் எப்படி அலறுகிறது? என்று அனுபவித்து பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும். ஆனால் இனிமையாக இருக்காது.

அற்பம் 2. அம்பேத்கர் பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சமூகத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதிரீதியான ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது. அதனால்தான் அதை எதிர்த்து தீவிரமாக இயங்கினார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் ‘உண்மையில் ஜாதி என்பது பொய். அப்படி ஒன்று மனிதர்களுக்கு அவசியம் இல்லை.’ என்கிற கண்ணோட்டம் டாக்டர் அம்பேத்கரிடம் தீவிரமாக இருந்தது. அதனால்தான் தன்னுடைய தனிவாழ்க்கையில் அவர் ஜாதி உணர்வற்று இருந்தார். அவரிடம் சுயஜாதி உணர்வு என்பது துளியும் இல்லை. ‘இந்திய ஜாதிகளிலேயே மகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் உயர்ந்தவர்கள். இந்த நாட்டை ஆண்டவர்கள்.’ என்பதுபோன்ற சுயஜாதி பெருமைகளில், பிரியங்களில் அம்பேத்கர் ஒருநாளும் கவனம் செலுத்தியதில்லை.

அருந்ததயிர் சமூகம் உட்பட எல்லா தாழ்த்தப்பட்ட மக்களின் துயரங்களையும் புரிந்திருந்தார். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத்தான் டாக்டர் அம்பேத்கரின் குரல் இருந்தது. அதனால்தான் அவரை இந்தியாவில் இருக்கிற அனைத்து தலித் மக்களும் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்தச் சிறப்பு தலித் தலைவர்களிலேயே டாக்டர் அம்பேத்கரிடம் மட்டுமே இருந்து. காரணம் ஜாதி என்பது பொய். ‘பிறப்பால் ஜாதி பார்ப்பதும், தன்னை ஜாதியாக உணர்வதும் 2000 ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்த சமூகத்தில் ஏற்படுத்திய பழக்கம்’ என்கிற கண்ணோட்டம் அவரிடம் உறுதியாக இருந்தது. அதனால்தான் ஜாதிகளுக்கு எதிரான புத்தரை தனது முன்னோடியாக கொண்டார்.

ஒருவரை தனிவாழ்க்கையில் நண்பராக ஏற்றுக் கொள்வதற்கும், துணைவராக ஏற்றுக் கொள்வதற்கும், ‘அந்த நபர் தனக்கு பொருத்தமாக இருப்பாரா?’ என்பதை தீர்மானிப்பதில் ஜாதியின் பங்களிப்பு இருப்பது மோசடியானது. அதுதான் இந்து மத ஜாதியக் கண்ணோட்டம் நிறைந்தது. நட்பையும், காதலையும், கல்யாணத்தையும் ஜாதி தீர்மானிக்கக்கூடாது, தனது விருப்பங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் வலியுறுத்திய சமத்துவம்.

ஜாதியை தெரிந்துகொண்டு ஒரு நபரை விரும்ப முடியாது. கூடாது. அப்படி விரும்பியப் பிறகு ஜாதி தெரிந்தால் விலக்கிக் கொள்ள முடியாது. கூடாது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் டாக்டர் அம்பேத்கரை குறைசொல்பவர்கள் இன்னும் ஜாதிய கண்ணோட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

ambedkar1மேற்சொன்ன இந்த விளக்கம் தந்தை பெரியாருக்கும் பொருந்தும். தன்கொள்கை சார்ந்தவர்களோடு, தன்னுடைய தோழர்களோடு சண்டை வந்து பேச்சு வார்த்தைக்கூட இல்லாமல் இருந்திருக்கிறார் பெரியார். ஆனால் தன் காலம் முழுவதும் ராஜாஜியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தபோதும், அவரோடு தனிப்பட்ட முறையில் நட்பை முறித்துக் கொண்டதில்லை. அவரோடு அவர் பேசாமல் இருந்ததுமில்லை. தனது இரண்டாவது திருமணத்தின் போது உறவினர்கள் உட்பட யாரிடமும் ஆலோசனைக் கேட்காத பெரியார், தனது அரசியல் எதிரியான ராஜாஜிடம்தான் ஆலோசைனக்கேட்டார். ராஜாஜியின் மரணம் வரை அவரோடு நட்பாகத்தான் இருந்தார்.

தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, மருத்துவமனையில் தன்னை பார்க்க வந்த தொண்டர், தனக்கு கொடுத்த பசும் நெய்யை, ராஜாஜி விரும்பி உண்பார் என்பதற்காக, மருத்துமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ராஜாஜியின் வீட்டில் நெய்யை தந்து விட்டுச் சென்றவர்தான் பெரியார்.

தன் சொந்த வாழ்க்கையில் பார்ப்பனர்களோடு நட்பாக இருப்பதற்காக, அல்லது அவர்கள் மூலம் கிடைக்கும் தனிப்பட்ட லாபங்களுக்காக  பார்ப்பன எதிர்ப்பு என்கிற அரசியலையே கைவிட்டுவிட்டு அதற்கு எதிராகவே மாறிவிடுகிற இன்றைய சில அறிவாளிகளைப்போல் அல்ல அவர்கள் இருவரும்.

டாக்டர் அம்பேத்கர்-தந்தை பெரியார் இருவரிடமும் சுயஜாதி அபிப்பராயம் சுத்தமாகக் கிடையாது. அவர்கள் ஜாதியை துளியும் நம்பியதில்லை. அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீவிரமாக போராட முடிந்தது. அவர்களால் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் வெற்றியும் பெறமுடிந்தது.

இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம்.

-முற்றும்

டாக்டர் அம்பேத்கர் T.shirt தயாரிப்பு மற்றும் ஆலோசனைக் குழு

மும்பை

கதிரவன்

மகிழ்ன்

கோவை

பாலா

அய்தாரபாத்

விஜய் கோபாலசாமி

பெங்களூர்

பிரடெரிக்

தமிழன்பன்

வெங்கடேஷ்

சென்னை

ஆறுமுகம்

சசி

வெங்கட்

சுவன்

அருண்

கலாநிதி