‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

egg-on-face

ழத்தமிழர்கள் துயரத்திற்காக, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். அப்படியிருந்தும் நேற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஒரு முக்கியப் பிரமுகரின்மேல் கொண்ட பேர் ஆர்வத்தால், அவர்மேல் கொண்ட அளவற்ற அன்பால், அந்த முக்கியப் பிரமுகரின் ‘வழக்கை’ மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.


முக்கி, முக்கி தமிழ்ப் பேசுகிற தமிழ்க் கடவுள் பெயரை தன் பெயராக வைத்திருக்கிற, அந்த முக்கியப் பிரமுகருக்கு, வழக்கமாக பக்தர்கள் கனவில் வருவதே தன் கடமையாக கொண்ட சிதம்பரம் நடராஜனே, கனவில் வந்து சொல்லியிருப்பான் போல,

‘பக்தா, தீட்சிதர்கள் சார்பாக நீ போய் சென்னை உயர்நீதிமன்றத்திலே ஆஜர் ஆகு, மீதிய அங்கிருக்கிற வக்கீல்கள் பாத்துப்பாங்கனு’ அதனால் அவராகவே வசமாக வந்திருக்கிறார் ‘வழக்கிற்கு’.


இந்த வழக்கின் புதுமை, ஒரு நபருக்காக பல வழக்கறிஞர்கள் ஒரே சமயத்தில் ஒன்றுசேர்ந்து ஆஜராகியதுதான்.

எல்லா வழக்கிற்கும் நீதிபதிகள்தான் தீர்ப்பளிப்பார்கள், ஆனால் இந்த வழக்கின் இன்னொரு புதுமை, வழக்கறிஞர்களே ‘தீர்ப்பு’ வழங்கவில்லை, ‘தீர்ப்பை’ அடித்திருக்கிறார்கள். அந்த முக்கிய நபர் ‘போதும்,போதும்’ என்று சொல்ல சொல்ல திருப்தியாக வழங்கியிருக்கிறார்கள் தீர்ப்பை.


தமிழறிஞர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், முற்போக்காளர்கள், தமிழ் உணர்வாளர்கள் எல்லோரும் ஒருசேர, வழக்கறிஞர்கள் வழங்கியத் தீர்ப்பை இப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்:

 

“இதுதாண்டா தீர்ப்பு” என்று.

 

hands-egg

அந்தப் புகழ்பெற்றத் தீர்ப்பு இதுதான் ‘நல்ல முட்டையைவிட, அழுகிய முட்டையே அதிக பயன்தரும்’.

இந்தத் தீர்ப்பின் சிறப்பு, இதை வழக்கறிஞர்கள், செய்முறை விளக்கம் காட்டி நிரூபித்ததுதான்.


மிகிச் சிறந்த புரதச்சத்தான, நல்ல முட்டையை வீணாக்காததற்கும், அழுகிய முட்டையை எவ்வாறு வீணாக்காமல் ‘முறையாக’ பயன்டுத்துவது என்பதை தமிழக மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததற்கும், நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


வாழ்க வழக்கறிஞர்கள். அவர்களின் சமூக அக்கறைக்கு நமது மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.


இவ்வளவு வாங்கியப் பிறகும் அந்த முக்கியப் பிரமுகர்,

“டேபிள் மேலே முட்டையை அடிச்சுட்டா, டாக்குமண்ட் மேலே முட்டையை அடிச்சுட்டா.” என்று அதைத்தான் சொல்கிறாரே தவிர, தன் மீது விழுந்த முட்டைகளின் கணக்கையோ, முட்டைகள் விழுவதற்கு முன் விழுந்ததையோ சொல்லவில்லை. என்ன அவருடைய பெருந்தன்மை.


அவர் பேட்டியைப் பார்த்தபோது, நடிகர் வடிவேலுவின், இந்த வசனமே ஞாபகம் வந்தது:


‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்… இவன் ரொம்ப…. நல்லவன்’