கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

pict0001தோழர் கொளத்தூர் மணியுடன் நான்

ழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்  சார்பாக  மதுரை திருப்பரங்குன்றத்தில் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி, சிங்கள அரசிற்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் 25-2-2009 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியோடு நானும் கலந்த கொண்டு பேசினேன்.

நாகை திருவள்ளுவன் (தமிழ்ப்புலிகள்) பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்) வழக்கறிஞர் நா. கதிர்வேல் (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) மு. தமிழ்க்கூத்தனார் (முற்போக்கு கவிஞர் பேரவை) முதல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்)  இவர்களும் பேசினார்கள்.

மு. கனகவேல் தலைமையும் பி.எம். ரவிச்சந்திரன் முன்னிலையும் வகித்தார்கள்.  நன்றியுரை  ஐ.வி. கணேசனும், த. செந்தில் நிகழ்ச்சியை தொகுத்தும் வழகங்கினார்கள்.

***

தமிழர்களின் இதய துடிப்பு என்று தனக்கு தானே அடைமொழி தந்துகொண்டு, தமிழர்களின் Heart attackஆக திகழ்கிற குமுதம் வார இதழில், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், உலகின் தலைசிறந்த ஜனநாயகவாதியுமான ‘ஞாநி’ வார வாரம் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருவது அறிந்ததே.

ஆனால், இந்த முறை ஏதோ ஒரு கூட்டத்தில்  தோழர் கொளத்தூர் மணி பேசியதாக ஒரு பேச்சை குறிப்பிட்டு, அவரிடம் கேள்வியை கேட்டிருக்கிறார்.  கேள்வியின் சாரம், ராஜிவ் கொலையை ஆதரிக்கிற நீங்கள், ஏன் மரணதண்டனையை எதிர்க்கறீர்கள் என்பதுதான்.

மரண தண்டனைக்கு எதிரான மனிதாபிமானம் என்ற முற்போக்கு மூலம் பூசப்பட்ட பாணியில் இருந்தாலும், அந்தக் கேள்வியின் உள்ளடக்கம், காட்டிக் கொடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் `பெரியார் திராவிடர் கழக தலைவர்` என்பதோடு மட்டும் நிற்காமல், `விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான கொளத்தூர் மணி` என்று அவரை அடையாளப்படுத்துகிறார், ‘ஞாநி’.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு பேச்சு. கைதாவாரா சீமான்?’ என்ற தினமலர் பாணியிலான பச்சை பார்ப்பனத் தனமானதாக இருக்கிறது. அந்தக் கேள்வி.

ஞாநி எப்போதுமே பார்ப்பனத் தன்மை உள்ளவராக இருக்கிறார் என்று நான் பலமுறை தொடர்ந்து எழுதியிருக்கிறேன். ஆனால் பெரியார் திராவிடர் கழகம் ஞாநியை ஒரு தோழமை சக்தியாகவே கருதிவந்தார்கள். அவருடைய ‘பெரியார்’ என்கிற படத்தை தங்கள் கழகத்தின் மூலமாக தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து திரையிட்டு, அவரையும் அழைத்து பல நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஞாநி, தமிழக முதல்வரை ‘திராவிட இயக்கத் தலைவர்’ என்கிற காரணத்திற்காகவே, மிகத் தரக்குறைவாக எழுதியபோது, தமிழகத்தில் மிகப் பரவலாக முற்போக்காளர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் ஞாநி. அப்போதும் பெரியார் திராவிடர் கழக இதழான புரட்சி பெரியார் ழுழக்கம் அவரை பற்றி விமர்சிக்கவில்லை. ‘தோழமையானவராக  இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே,  அவரை கண்டிக்காமல் விட்டார்கள்.

என்னுடைய வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழாவில் பேசிய தோழர் கொளத்தூர் மணியும், தோழர் விடுதலை ராசேந்திரனும் ‘ஞாநி’ யைப் பற்றி நான் விமர்சித்து எழுதியிருந்த, பல பதில்களை குறிப்பிட்டு பேசுவதைக்கூட தவிர்த்தார்கள். ஆனால், ஞாநி….

இந்த பெருந்தன்மை எல்லாம் ஞாநிக்கு துளியும் இல்லை.” என்று சிலர் கோபப்படலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனென்றால் அவர் இந்தியாவின் மிக சிறந்த ஜனநாயகவாதி. ‘யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அதனால் தோழமையானவர்களை, தெரிந்தவர்களை விமர்சிக்கக் கூடாது, என்பது நேர்மையல்ல’ என்கிற கருத்தைக் கொண்டவர்.

“அப்படியா? நீங்கள் சொல்றது உண்மையாக இருந்தால், உலகநாயகன், ஆஸ்கார் நாயகன் என்று கோமளித்தனங்களை செய்து கொண்டிருக்கிற கமல்ஹாசனை, பார்ப்பன ஜாதி வெறி கொண்ட அசோகமித்தரனை எல்லாம் ஏன் அவர் ஜனநாயக முறைப்படி விமர்சிக்க மறுக்கிறார் என்று நீங்கள் கேட்கலாம்.

இதை என்னிடம் கேட்காதீர்கள். ஞாநியிடம் கேளுங்கள்.

குறிப்பு:

தோழர் கொளத்தூர் மணியை காட்டிக் கொடுத்து எழுதியிருக்கிற ஞாநி எழுத்தை உதாரணம் காட்டி காங்கிரஸ்கார்கள், “கொளத்தூர மணியை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்கலாம். உடனே தோழர் கொளத்தூர் மணியை தமிழக அரசு `தேசிய பாதுகாப்பு சட்டத்தின்` மூலமும் கைது செய்யலாம். அப்படி தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டால், அதற்கு முழு பொறுப்பும் ஞாநிதான்.

இன்னொரு குறிப்பு:

பாம்புக்கு பால் வார்த்தாலும் என்கிற பழமொழி ஒன்று தமிழில் இருக்கிறது. பாவம் பாம்பு அது என்ன செய்யும்? அதற்கு அறிவா இருக்கிறது-? இது பகுத்தறிவற்ற கேள்வி.

அதனால் அந்த பழமொழியை மாற்ற வேண்டும். அதை எப்படி மாற்றுவது என்று தோழர்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடையவை:

‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல

சின்மயி விவகாரமும் ஞாநியின் பஞ்சாயத்தும்

ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

யார் வெறி நாய்?

விஸ்வரூப தந்திரம்