ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

maheswaran

ழத் தமிழரை பலியிட்டு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல்என்பதுபோல் ஓட்டோ ஓட்டுஎன்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் திருவிழாவில தீவிரமாக இருக்கின்றன.

இதற்கு முன் போரை நிறுத்து என்று தீவிரமாக நடந்த போரட்டங்கள் தேர்தல் நெருங்க நெருங்க சுத்தமாக நின்று போனது. யாரும் தமிழர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை நிறுத்துவது குறித்து பேசுவதுகூட இல்லை. வசனங்களும் நடிப்புகளும் மட்டுமே ஈழத்தமிழர்களுக்குஆதரவாகவருகிறது.

தேர்தல் முடிந்தால் எல்லாவற்றையும் முடிப்போம் என்கிறார்கள் வசனகர்த்தாக்களும், நடிகையும், துணை நடிகர்களும். ஆனால் ஈழத்தில் அதற்குள் எல்லோரும் முடிந்துவிடுவார்கள்.

வழக்கமாக தமிழ் தமிழர் குறித்து வீரவேசமான வசனங்களை பேசும் வசனகர்த்தா, இந்த முறை வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய வசனங்களை பேசியதால், நடிகைக்கு கொண்டாட்டம்.

நடிகையின் வசனமோ பஞ்ச் டயலாக்காக பறந்து வந்து வாக்காளர்களையும்உணர்வாளர்களையும் தன் வசப்படுத்துகிறது. இந்த முறை அவர் போட்டு இருக்கிற இன உணர்வு வேடத்துக்கு நல்ல வரவேற்பு. அவரின் நடிப்பு தத்துரூபமாக இருக்கிறது என்று பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுக் கிடைக்கிறது. அவார்டு கிடைத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. (தேர்தல் வெற்றி)

வசனகர்த்தாவின் உணர்ச்சிப் பொங்கும் நடிப்போ மிகைப்படுத்தப்படட நடிப்பாக மாறி சென்டிமெண்டுக்குப் பதிலாக நகைச்சுவை உணர்வாக மாறிவிட்டது.

நடிகையின் தமிழ் உணர்வால் வசனகர்த்தா கோபத்தில் இருக்கிறார். இனி தமிழ் உணர்வு என்று சொல்வதே தேச துரோகம் என்று அறிவித்துவிடுவார் போலும். (ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் கொடுத்தாலே குற்றம்)

நடிகைக்கு வசனம் எழுதி கொடுக்கும் துணை நடிகர்கள், கொண்டாடத்தில் இருக்கிறார்கள். நடிகைதான் நாடாளப் போகிறார் என்று.

ஆனால் ஈழத்தமிழர்களோ இப்போதுதான் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். தமிழகத்திலோ எரிகிற வீட்டில் புடுங்கற வரைக்கும் லாபம் என்று அலைகிறார்கள் அரசியல்வாதிகள்.

தனது இறுதி சொற்பொழவில் சும்மாவா சொன்னார் தந்தை பெரியார்: “ஓட்டு என்றால் எதை எதை கொடுக்குறான்? பெண்டாட்டி தவிர எல்லாவற்றையும் கொடுக்கிறானே” என்று, (பெரியார் களஞ்சியம், ஜாதிதீண்டாமை பாகம் 15 பககம் 347)

ஏப்ரல்30, 2009 அன்று எழுதியது.

உறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம்

மனிதர்களுக்கு, மனிதர்களைவிட தங்கத்தின் மேல் மோகத்தை, வெறியை கிளம்பும் அட்சய திரிதியை என்கிற அநாகரிகத்தை கண்டித்து மீண்டும் பிரசுரிக்கப் படுகிறது

சென்னை துரைப்பாக்கத்தில் , குப்பையில் கிடந்த வெள்ளியை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறு, மூன்று பேரின் கொலையில் முடிந்திருக்கிறது. வெறும் நூறு ரூபாய் மதிப்புள்ள அந்த மலிவான உலோகம், மகத்தான மூன்று மனித உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. வெள்ளியே இந்தப்பாடு படுத்தியிருக்கிறதென்றால், தங்கம் என்ன என்ன செய்யும்?

நடுத்தர வர்க்கத்தை ஆட்டிப்படைகிறது தங்கம். அதன் விலையேற்றம் பல பெண்களின் திருமணத்தை நிறத்தியிருக்கிறது, தாமதப்படுத்தியிருக்கிறது. திருமணமான பல பெண்களை புகுந்த வீட்டிலிருந்து விரட்டியடித்திருக்கிறது.

மாப்பிள்ளையாக தங்கத்தை பார்த்து மகிழும் ஆண் – ஒரு பெண்ணின் தந்தையாக – சகோதரனாக இருக்கும் போது தங்கத்தை பார்த்து பயந்து நடுங்குகிறான்.

ஆம், பெண் – ஆண் என்ற வேறுபாடு இல்லாமல் மனிதர்களின் மூலையை பெருமளவில் ஆக்கிரமித்திருக்கிற ஒரே உலோகம் தங்கம் தான். இது ஆட்டுகிற பேயட்டத்திற்கு நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருமே ஆடத்தான் செய்கிறார்கள்.

காரணம், ‘சொத்து’ என்ற வடிவத்துக்கு வீடு, நிலம் போக பெரிய பங்காற்றுவது தங்கம்தான். தங்கம் பணத்தின் மதிப்பைப் பெற்றதால் அது மனிதர்களின் உறவை முடிவுசெய்கிறது. அவர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தைத் தீர்மானிக்கிற உலோகமாக தங்கம் உருமாறியிருக்கிறது.

சில நேரங்களில் அது மனிதர்களை அற்பமானவர்களாகவும் மாற்றிவிடுகிறது.

‘தங்கள் உறவை விட தங்கம்தான் உயர்ந்தது’ என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, உறவுகளைப் பகையாக்கி, நட்பை விரோதமாக்கி, மனிதர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறிது தங்கம்.

‘தங்கம் தனக்கு பாதுகாப்பு’ என்ற நிலையில் ஆரம்பித்து ‘தங்கமே தனக்கு பகையாக` மாறிய கதைகளும் ஏராளம்.

தங்கத்தை பறிப்பதற்காக உயர்த்தப்பட்ட வாள், `உயிரை பறித்தால்தான் தங்கம் கைக்கு வரும்’ என்ற நிலையில், உலகெங்கிலும் பல போர்களை நடத்திருக்கிறது.

வரலாற்றில் வாளுக்கும், தங்கத்திற்கும் நடந்த இந்தச் சண்டையை புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் புஷ்கின் தன் கவிதையில் இப் படிக் குறிப்பிடுகிறார்.

‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது தங்கம்.

‘‘எல்லாம் என்னுடையது’’ என்றது வாள்.

‘‘என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’’ என்றது தங்கம்.

‘‘என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’’ என்றது வாள்.

ஆம், மன்னர் காலத்தில் இருந்து இன்றைய ஜனநாயக காலம் வரை போரில் வெற்றி பெற்ற நாடு, தோல்வியடைந்த நாட்டில் புகுந்து குறி வைத்து சூறையாடியது தங்கத்தைதான். தங்கம் எந்த நாட்டில் அதிகம் இருக்கிறதோ, அந்த நாட்டை நோக்கி படையை நகர்த்துவது வலுத்த நாட்டினர் வழக்கம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கஜினி முகமது, ‘ இந்து கோயிலுககுள் புகுந்தார்’ என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் அவர் நோக்கம் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதல்ல. இந்தியாவில் பெருமளவிலான தங்கம் கோயிலுக்குள் இருந்ததே காரணம். இந்தியாவின் இந்து மன்னர்கள் கூட இன்னொரு இந்து நாட்டின் மீது படையெடுத்து சென்றபோது, அந்த ஊர் கோயிலுக்குள் புகுந்து தங்க நகைகளை சூறையாடி இருக்கிறார்கள் என்பது வரலாறு.

இப்போதுகூட, தனிநபர்களின் பெரும்பான்மையான கொலைகளுக்கு மதம், ஜாதி, உறவு என்ற நிலைகளை எல்லாம் தாண்டி, தங்கமே அந்தக் கொலைகளை செய்திருக்கிறது.

தங்கம் மஞ்சள் நிறத்தில் மினுமினுப்பாக இருந்தாலும் வரலாற்றில் அதன் நிறம் ரத்தக் கறை படிந்தே கிடக்கிறது. தங்ம் மனித உறவுகளை சிதைத்து, ரத்தக்களறியை ஏற்படுத்தியதை மனதில் கொண்டு, தலைவர் லெனின் 1921 ஆம் ஆண்டு இப்படிச் சொன்னார்:

‘‘உலகளவில் நாம் வெற்றி பெற்ற பின்னர், உலகத்தின் மிகப் பெரும் நகரங்களில் சிலவற்றின் தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களைக் கட்டுவதற்கு தங்கத்தை பயன்படுத்துவோம் என நினைக்கிறேன். 1914-18ம் வருடங்களில் நடைபெற்ற யுத்தத்தில் தங்கத்துக்காக பத்து மில்லியன் மக்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? முப்பது மில்லியன் மக்கள் எப்படி ஊனப்படுத்தப்பட்டார்கள் என்பதை இன்னும் மறந்துவிடாத தலைமுறைக்கு மிக ‘நியாயமான’ முறையில் மிகவும் அறிவுட்டுகிற வகையில் தங்கத்தை பயன்படுத்துவது..’’

ஆம், தங்கம இன்றைய மனிதர்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருளாக மாறியிருக்கிறது. பணம் கொடுத்து தங்கம் வாங்குங்கள். அதைப் பத்திரமாக பாதுகாத்தும் வையுங்கள்.

தங்கமா? மனிதமா? என்று வரும்போது , மனிதர்கள் பக்கம் நில்லுங்கள்.

தங்கத்தை விட மட்டுமல்ல, எந்த உலோகததை விடவும் உயர்ந்தவர்கள மனிதர்கள்.

தினகரன். 1.3.2006 ல் எழுதியது.

‘அட்சய திரிதியை‘ நகை வாங்கினால் நல்லது

நகைக்கடைக்காரன் அட்சய திரிதியை என்று சொல்லி மக்களை கூட்டமாக கடையில் குவிப்பது பற்றி உங்கள் கருத்து?

ராமஜெயம்

jj.jpg

சமூக விழிப்புணர்வு மே மாத இதழில் இப்படி எழுதினேன்,

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால்

மிகவும் நல்லதாம்.

உண்மைதான்.

நகைக்கடைக்காரனுக்கு.


வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து……

விலை ரூ. 35

வெளியீடு்

அங்குசம்

ஞா. டார்வின் தாசன்

எண் 15 எழுத்துக்காரன் தெரு,

திருவொற்றியுர், சென்னை-600 019.

தொலைபேசி: 9444 33 7384

தோழர் கொளத்தூர் மணியை சிறையில் சந்தித்தேன்

 

 

dscf4699

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சந்திக்க கடந்த ஒரு மாதமாக மூன்று முறைக்கும் மேலாக பயணத்திற்கு தேவையான ரயில் டிக்கெட் பதிவு செய்து கடைசி நேரத்தில் ரத்து செய்து இருக்கிறோம்.

கோவையைச் சேர்ந்த வழக்குறைஞர் பாலாவும் நானும் அவரை இந்தத் தேதியில் பார்க்க வருகிறோம் என்று முடிவு செய்து, திருபரங்குன்றம் நண்பர்கள்பெரியார் சிந்தனை இணைய அமைப்பாளர் செந்தில், கருத்துப்பட்டறை பதிப்பக உரிமையாளர் பரமனிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் சிறைக்கு போகும் போது தோழர் கொளத்தூர் மணியிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

நாங்கள் பார்க்க போவதாக முடிவு செய்திருந்த நாளில் அவரை திடீர் என்று வழக்கு விஷயமாக திண்டுக்கல் அழைத்துச் செல்வதாக காவல் துறை முடிவு செய்தவுடன் நாம் வருகிற தேதியை நினைவில் வைத்துக் கொண்டு, தோழர் கொளத்தூர் மணி தோழர் மதிமாறனிடம் சொல்லிவிடுங்கள் அவர் வீணாக வந்து திரும்ப நேரிடப்போகிறதுஎன்று தோழர்களிடம் சொல்லியிருக்கிறார். மீண்டும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரும்போதும் அதுபோல் நேர்ந்தது. இந்த 22 ஆம் தேதி அவரை பார்ப்பது என்று முடிவு செய்தோம். தோழர் பாலா கோவையில் இருந்தே எனக்குரிய ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து, என்னுடைய ஈ மெயில் முகவரிக்கு 19 ஆம் தேதியே ரிட்டன் டிக்கெட்டோடு அனுப்பி வைத்துவிட்டார். (அவரின் செலவில்தான்)

நான் திருப்பரங்குன்றம் தோழர்கள் பரமன், செந்தில், தமுஎசவை சேர்ந்த தோழர் செந்தில் குமரன் கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பாலா, குமணன் ஆகிய ஆறுபேரும் 22 ஆம் தேதி காலை 12 மணியளவில் மதுரை சிறைக்கு சென்று, தோழர் செந்திலின் பெரும் முயற்சிக்கு பிறகு, தோழர் கொளத்தூர் மணியை சந்ததித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசினோம்.

வெளியில் இருப்பதைவிடவும் சிறையில் அவர் நலமாக இருப்பதாகவே எனக்கு தோன்றியது. சிறைக்குப் போவது குறித்தான அச்சம் அவரிடம் எப்போதும் இல்லாததால் அதன் காரணமான மன உளைச்சல் அவருக்கு இருக்க வாய்ப்பில்லாததாலும், உள்ளிருப்பதில் அவருக்கு அதிகமான ஓய்வு காரணமாகவும் அவரின் நலம் கூடி இருக்கலாம். 6 மாதமாவது ஜெயிலுக்கு போனால்தான் என் உடம்பு இனியும் இரண்டு வருஷத்திற்கு உழைக்க சவுகரியம் கொடுக்கும்” என்று தந்தை பெரியார் 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருத்துறைப்பூண்டியில் நடந்த மாநாட்டில் பேசியது தோழர் கொளத்தூர் மணியைப் பார்த்த போது என் நினைவுக்கு வந்தது.

தோழர் அன்று சிறையில் லெனின் பிறந்த நாளை கொண்டாடியதாக கூறினார். ஈழத்தமிழர்களின் நெருக்கடியான நிலையை, துயரத்தை கவலையோடு பகிர்ந்து கொண்டார். சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களை அனுமதிக்க மறுத்த ஒரு சிறை அதிகாரியோடு கடுமையான் விவாதத்தையும் அந்த விவாதத்தின்போது “நான் 1973ல் இருந்து Nsa போன்ற சட்டங்களினால் கைதாகி பல சிறைகளைப் பார்த்தவன். என்னுடைய இன்னொரு முகத்தை காட்டாமல் போகலாம் என்று பார்க்கிறேன். என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களின் மேல் அதிகாரி ஜாபர் சேட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று கொஞ்சம் கடுமை காட்டி பேசியிருக்கிறார். அதில் இருந்து அந்த அதிகாரி சட்டத்திற்கு புறம்பாக பார்வையாளர்களை அனுமதிக்க மறுப்பதை தவிர்த்திருக்கிறார்.

அதன் தாக்கம் மணி அய்யாவை பார்க்க வந்திருக்காங்க….என்று சிறைக்காவலர்கள் நம்மிடம் காட்டிய மரியாதையிலிருந்தும் உணரமுடிந்து. ஆனால் நாங்கள் பார்க்க போகும் போது இருந்த சிறை அதிகாரி வேறெருவர். இவர் கைதிகளை மிகவும் தன்மையாக நடத்திய விதத்தை நேரில் பார்க்க முடிந்தது.

தேர்தலில் பெரியார் திராவிடர் கழத்தின் நிலை குறித்து முதல் நாள் மத்தியம் (21 தேதி) என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதிய ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியதுகட்டுரையின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். அது குறித்து விளக்கியும் பேசினேன்.

(இதற்கு முன் போனமாதம் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் கோவை ராமகிருட்டிணனிடம் தொலைபேசியில், ‘தேர்தலில் காங்கிரசை எதிர்ப்பதற்காக அதிமுகவை ஆதரிப்பது என்கிற முடிவை பெரியார் திராவிடர் கழகம் எடுக்காமல் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற எந்தக் கொள்கைகளும் அற்றத் தமிழ்த் தேசிய அமைப்புகள் இதுபோன்ற ஒற்றைக் கோரிக்கையில் ஒரு முடிவை எடுக்கலாம். ஆனால் பெரியார் இயக்கம் அதை செய்யக்கூடாது.” என்று கேட்டுக் கொண்டேன். அண்ணன் ராமகிருட்டிணன் தேர்தல் முடிவுப் பற்றியான எங்கள் பொதுக் குழு கூட்டத்தில் பேசும்போது இதையும் கவனத்தில் கொள்கிறேன். எங்கள் தோழர்களிடம் கலந்து பேசுகிறேன்என்று சொன்னார்.)

கடைசியாக சிறையில் இருந்து கிளம்பும் முன் தோழர் கொளத்தூர் மணியிடம் டாக்டர் அம்பேத்கர் டிசர்ட் தாயாரிப்பும் அதை ஒரு பெரியார் இயக்கம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டும். அதை பெரியார் திராவிடர் கழகம் செய்ய வேண்டும் என்று பேசினேன். கண்டிப்பாக சிறையில் இருந்து வந்தபிறகு அதை எங்கள் கழகத்தின் சார்பாக செயவோம்.என்று கூறினார். இதற்கு முன் 25-2-2009அன்று திருப்பரங்குன்றத்தில் அவரை சந்தித்தபோதும் இதை பற்றி பேசினேன். ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் அன்று சிறப்பாக அண்ணலின் டிசர்ட் வெளியிட்டு விழாவை வைத்துவிடலாம். அண்ணல் படத்தை கொண்டு செல்வது நமது கடமை” என்றார் அதற்குள் அந்த வாரமே கைது செய்யப்பட்டார்.

ஆனாலும், என்னுடைய அம்பேத்கர் பற்றிய புத்தகமான நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லைஎன்ற வாசகத்தை முன்பக்கத்திலும் பின் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் படம் பெரிய அளவில் அச்சிட்டிருந்த டிசர்ட் டை அணிந்து கொண்டு கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஈழத்தில், தமிழர்களை கொல்லும் இந்திய அரசைக் கண்டித்து கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கும் படத்தை தோழர் பாலா காட்டினார். இரண்டுமே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறையில் இருக்கும் அந்தத் தோழர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்றியும் வணக்கமும் டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்டுக்கு மட்டுமல்ல.

ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது

tamil1

ழத்தில் நடக்கிற போரை நிறுத்துஎன்று காங்கிரசில் இருந்து திமுக வரை, சோனியாவிலிருந்து கருணாநிதிவரை எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சே ஒரு ஆள்தான் பாக்கி. இதைதான் புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான் என்று சொல்லுவார்களோ!

ஈழத்தில் நடப்பது போர் அல்ல தாக்குதல். அதை போர் என்று சொல்வதே ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. குழந்தைகள், பெண்கள், முதியவர்களை விஷ குண்டு வீசி கொல்கிறது இந்தியாவின் ஆதரவு பெற்ற இலங்கை அரசு. இது எப்படி போர் ஆகும்? அது ஈழ மக்கள் மீது இலங்கை அரசு நடத்தும் தாக்குதல். ஈழ மக்கள் மீது நடக்கும் தாக்குதலை நிறுத்துஎன்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

ஈழ மக்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அநேகமாக ஈழத்தில் தமிழர்களே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தேர்தலுக்குள் முடித்துவிடவேண்டும்என்கிற நோக்கத்தில் இந்தத் தாக்குதல் தீவிரமாகி இருக்கிறது.

ஈழமக்களின் படுகொலையால் தமிழகத்து தமிழர்களிடம், காங்கிரஸ்திமுக கூட்டணி மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பை, எப்படி தனக்கு சாதகமான ஓட்டாக மாற்றிக்கொள்வது என்பதில் கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா. தினம் தினம் ஈழ ஆதரவு அதிரடி அறிக்கைகளால் ஓட்டை அள்ளிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தலுக்குள் முடித்துவிட எண்ணுகிற இந்திய இலங்கை அரசுகளிடமிருந்து ஈழ மக்களை காப்பாற்றுகிற எந்த முயற்சியையும் செய்யாமல், இதை காரணமாக கொண்டு தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது? என்று தீவிரமாக, தமிழர்களின் துயரங்களை ஓட்டாக்க அலைகின்றன ஜெயலலிதா தலைமயிலானக் கூட்டணி.

ஈழப்பிரச்சினையை தீவிரமாக பேசினால் ஓட்டாக்க முடியும்என்று ஜெயலலிதாவிற்கு ஆலோசனை தருகிற ஈழ மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்கள், உடனடியாக ஈழத்தமிழர்களை காப்பதற்கு ஒன்றிணைந்து தமிழகத்தையே நிலைகுலைய செய்கிற, இந்திய அரசை பணிய வைக்கிற போராட்டத்தை செய்யலாம் என்று முயற்சிப்பதில்லை. ஏனென்றால் ஜெயலலிதாகருணாநிதிகாங்கரசை போன்றே இவர்களின் நோக்கமும் தேர்தல் மட்டுமே. அதனால்தான் இந்தப் பிரச்சினையை தமிழகத்தை தாண்டி பக்கத்து மாநிலத்திற்கு கூட இவர்கள் கொண்டு செல்லவில்லை.

தமிழகத்தில் தீவிரமாக ஈழப்பிரச்சினையை முழங்குகிற தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவின் பிற பகுதிகளில் இது பற்றி வாய்திறப்பதில்லை. இவர்கள் நினைத்தால் தமிழக எம்.பிகளோடு (பா.ம.க., ம.தி.மு.க) இணைந்து நாடளுமன்றத்தையே நிலைகுலைய செய்திருக்க முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிற மாநில எம்.பிகள் யாரும் ஈழமக்களின துயரத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தமிழகத்தில்தான் மூச்சு பிடித்து பேசுகிறார் தா. பாண்டியன், தனது அகில இந்திய தலைவர்களிடம் இதை ஒரு அகில இந்திய பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கவில்லை. அவர் ஜெயலலிதாவைதான் மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் முயற்சி ஓரளவுக்கு அவர்களுக்கு ஓட்டாக மாறியிருக்கிறது. அது போதாதா?

ஈழமக்களின் துயரம், தமிழக அரசியில் சூழலில் தமிழர்களுக்கு தந்த செய்தி, அல்லது தமிழ் நாட்டில் அது அம்பலப்படுத்தியது எதை என்று பார்த்தால், துரோகிகளை.

இதுவரை, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஈழத்தமிழர்களின் துயரங்களின்போது நடந்து கொண்டதை நாடறியும்.

ஈழத்தமிழர்களுக்காகவேவிடுதலைப் புலிகளுக்காகவே கட்சி நடத்துவதாகபேசுவதாக சொன்ன இயக்கங்கள், பிரபலங்கள், பகுத்தறிவாளர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள் ஈழ மக்களின் மிகப் பெரிய துயரத்தின் போது எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள், அப்படி நடந்து கொள்வதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

உலகிலேயே மிக மோசமான முறையில் ஈழமக்களை கேவலப்படுத்தி ஜெயலலிதா பேசிய போது, அதை கண்டும் காணமல் தன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்தார் வைகோ. ஈழ பிரச்சினையில் கருணாநிதி எதிர்ப்பில் காட்டிய ஆர்வத்தை, ஈழத் தமிழர்களின் மீது நடக்கிற தாக்குதலை தடுத்த நிறுத்த எந்த தீவிரமான செயலையும் செய்யவில்லை பழ. நெடுமாறன். முத்துக்குமார் தியாகம் கொளத்தூர் மணி, சீமான் கைது இவைகளை ஒட்டி எதிர்கட்சிகளை ஒன்றிணைந்து தீவிரமாக ஈழத்தமிழர்களுக்கான ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டிய வேலையை நெடுமாறன் தலைமையிலான இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செய்யவில்லை.

தேர்தலில் ஜெயலலிதாவோடு இணைந்து செயல்படுவதில் காட்டுகிற வேகத்தில ஒரு பங்கை கூட அதில் ஒருவரும் காட்டவில்லை.

காங்கிரசோடு இணைந்து மத்திய அமைச்சரவையில் பங்கெடுத்து ஈழமக்களுக்கு எதிராக போர் புரிந்தது பாமக. ஈழமக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும்போதும் மதவாத எதிர்ப்பு என்ற முலம் பூசிக் கொண்டு, மிகவும் கம்பீரமாக காங்கிரசுக்கு ஓட்டு கேட்கும் வீரமணி.

ஈழமக்களையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்து பேசியதற்காகவே ஈழ மக்களின் பணத்தில் உலகம் முழுக்க இன்ப சுற்றுலா சுற்றி வந்த உதிரிகள், இன்று கருணாநிதி காங்கிரசின் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை நியாயப்டுத்திக் கொண்டிருக்கிறர்கள். இதுபோன்ற தமிழ் உணர்வாளர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தியது ஈழத்தமிழர்களின துயரம்.

இதில் பெரியார் திராவிடர் கழகம்தான் தொடர்ந்து, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈழமக்களுக்காக சமரசமற்று தினம் ஒரு போராட்டம் என்று அர்ப்பணிப்போடு போராடி வருகிறது. அதன் தலைவர் கௌத்தூர் மணி அதன் காரணத்திற்காகவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அண்ணன் ராமகிருட்டினண் தடா கைதியாக 3 ஆண்டுகள் கொடுஞ் சிறையில் இருந்தார். இப்படி எல்லாம் தியாகங்கள் செய்தபோதும் கூட அவர்கள் ஈழமக்கள் பணத்தில் உலகம் சுற்றி வந்ததில்லை.

ஈழப் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்தின் அர்ப்பணிப்பு, ‘அதிமுகவை ஆதரிப்பதுஎன்ற அவர்களின் தேர்தல் நிலைபாட்டில் விரயம் ஆகியிருக்கிறது. காங்கிரசைப் போல் திமுகவை போல் ஜெயலலிதாவும் ஈழ மக்களுக்கு எதிரானவர்தான். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் வரை இந்து ராமைபோல், அவர் ராஜபக்சேவின் நிலைபாட்டில்தான் இருந்தார். தேர்தல் தேதி அவரை இன உணர்வாளராக மாற்றியிருக்கிறது.

எங்களுககு அது பிரச்சினையில்லை. நேரடி எதிரியான காங்கிரசை தோற்கடிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறோம். அதிமுகவிற்கு அளிக்கிற வாக்கு காங்கிரசுக்கு எதிரான் வாக்குஎன்று அவர்கள் சொல்லலாம்.

தமிழக அரசியில் கட்சிகளிலேயே, ஈழப் பிரச்சினையில் அதிக உயிர் தியாகமும், தொடர்ந்து ஈழமக்களுக்காக காங்கிரசை கண்டித்து பல போராட்டகங்ளை நடத்திய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதன் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் அரசை கண்டித்து, சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். பிறகு பலரின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, “தமிழகத்தில் காங்கிரசை, வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எரிவதே என் லட்சியம்” என்று சபதம் செய்துதான் முடித்தார்.

அவரே காங்கிசுககு ஆதரவா போயிட்டாரு. ஜெயலலிதா போமாட்டாங்களா?

குமுதத்தின் கயமை

dangers1

-விஜய்கோபால்சாமி

எழுத்தாளர் விஜய்கோபால்சாமி( http://vijaygopalswami.wordpress.com/ ) குமுதத்தின் ஜாதி வெறியை கண்டித்து அல்லது அதன் ஜாதிவெறியை தூண்டும் செயலைக் கண்டித்து நமக்கு இந்தக் கட்டுரையை அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே ‘நான் தமிழன்’ என்ற தலைப்பில் குமுதம் செய்யும் மோசடியைக் கண்டித்து வழக்கிறிஞர்கள் அனுப்பியிருந்த வக்கீல் நோட்டிசையும் அதை ஒட்டி நம் கருத்தையும் பிரசுரித்து இருந்தோம். இந்தக் கட்டுரையும் அதன் தொடர்பாக இருப்பதாலும், குமுத்தின் ஜாதித் தொடரை மிக ஆழமான கேள்விகளோடு மிக நேர்மையாக, எளிமையாக அம்பலப்படுத்தி எழுதப்பட்டிருப்பதாலும் இங்கே பிரசுரிக்கிறோம்:

குடிப்பதற்குக் காரணம் தேடிக்கொண்டிருக்கும் ஒருவன் சொன்னானாம், “அரிசியிலேயே மெத்தனால் இருக்கிறதே, அதைப் பொங்கித் தின்றால் என்ன நேரடியாக மெத்தனாலைக் குடித்தால்தான் என்ன என்று. அதே போல, குடலிலேயே மலம் இருக்கிறதே, அதற்காக சாக்கடையில் போகின்ற மலத்தை மீண்டும் வாய்வழியாகக் குடலுக்கு அணுப்ப முடியுமா? முடியும் என்கிறது குமுதம். அதுதான்நான் தமிழன் என்ற தமிழர்களை சாதியத்தின் பெயரால் பிளக்கும் தொடர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பிய, தமிழக அரசின் கயமைக்குச் சற்றும் குறைவில்லாதது குமுதத்தின் கயமை. தாயகத் தமிழர்கள் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டிய கட்டத்தில், குமுதம் ஏடுஅந்த ஒற்றுமையின் மீது கோடாலியை வீசுவது போலநான் தமிழன் தொடரை வெளியிட்டு வருகிறது. அழிந்து ஒழிக்க வேண்டிய சுயஜாதி அபிமானத்துக்கு உயிர் கொடுக்கும் மலிவான முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறது குமுதம்.

குமுத்தின் இந்த மோசமான செயலைக் கண்டித்து சிலமூக அக்கறை உள்ள வழக்கறிஞர்கள் இத்தொடரை நிறுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீசுக்கு எதிராகத்தான் குமுதம் மிகக் கேவலமான வழிமுறையைக் கையிலெடுத்திருக்கிறது. நோட்டீஸ் வந்திருக்கும் நேரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளும் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுகிற அருந்ததியரைக் குறித்து இரண்டு வாரமாக எழுதிக் கொண்டிருக்கிறது. அருந்ததியரின் மேன்மையைச் சொன்னால் வழக்குப் போட்டுத் தடுக்கிறார்கள் என்று சொல்லப் பார்க்கிற, ஜமுக்காளத்தை நாலாக மடித்து வடிகட்டிய கயமையல்லவா இது.

இந்தத் தொடருக்கான கரு மிக எளிமையானது. ஒரு ஜாதி, அதில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், ..எஸ்., .பி.எஸ். அதிகாரிகள், சட்டமன்றப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஜாதி சங்கப் பிரமுகர்களிடம் மிகச் சுருக்கமான பேட்டி, அவர்களின் திருமணச் சடங்குகள், இவற்றைக் கொண்டே வாரம் மூன்று பக்கங்களை நிரப்பிவிடுவது என்பதுதான் குமுதத்தின் செயல் திட்டம். வாராந்திரப் பரபரப்புக்காகக் குமுதம் பத்திரிகையில் வருகிற இந்தத் தொடர் நீண்டகால வருவாயை ஈட்டித் தரப் புத்தகமாகவும் அவதாரம் எடுக்கும். குமுதம் இதை எந்த வடிவத்தில் கொண்டுவர இருந்தாலும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அதி அவசியமான ஒன்று.

இந்த இடத்தில் நம்முள் ஒரு கேள்வி வரலாம். ஜாதியை மையப்புள்ளியாகக் கொள்ளாமல் இதே கூறுகளை, தமிழக மாவட்டங்கள் அல்லது இந்திய மாநிலங்கள் என்று எடுத்துக் கொண்டு அதில் பிறந்தவர்களைப் பற்றி ஏன் அலசக் கூடாது? அலசலாம்தான், ஆனால் பழைய சோற்றை விட சுடுசோற்றுக்குத்தானே கிராக்கி. ஜாதி என்ன சாதாரன விஷயமா, தெர்மாமீட்டரே தெறிக்கிற அளவுக்கு சூடான விஷயமாயிற்றே. எதிர்ப்பை அனுமானித்தேதான் குமுதம் இப்படி ஒரு தொடரை எழுதத் தொடங்கியிருக்கும். ஏனெனில் எதிர்ப்புகள் என்பவை எதிர்மறை விளம்பரங்கள் என்ற தத்துவத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் குமுதம் நிர்வாகிகள்.

ஒவ்வொரு சாதியின் சிறப்பையும் சொல்லுகிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு சாதியையும் அம்பலப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது குமுதம். ஆதாரமாகக் 15.04.2009 தேதியிட்ட குமுதத்தையே எடுத்துக்கொள்வோம்.

அருந்ததியர்இயக்கங்கள்ஆரம்பகாலங்களில்கல்விப்பணியையும்சமுதாயப்பணிகளையும்மட்டுமேகவனத்தில்எடுத்துக்கொண்டன. பின்னர்சாதிமறுப்பு, பகுத்தறிவுஆகியகோட்பாடுகளையும்கையில்எடுத்துக்கொள்ளவேண்டியகட்டாயம்எழுந்தது.’ (கட்டுரையிலிருந்து)

சாதி மறுப்பையும் பகுத்தறிவையும் அருந்ததிய சமூகத்தவர்கள் கையிலெடுத்தது ஏன் என்று குமுதத்தால் விளக்க முடியவில்லை. விளக்கவும் முடியாது. விளக்கினால் முந்தைய வாரங்களில் எந்தெந்த உயர் சாதியாரைக் குறித்து (உயர்வாக மட்டும்) எழுதியதோ அதே சாதியாரின் முகமூடியையும் கிழிக்க வேண்டியிருக்கும்.

ஆதிக்கசாதித்தலைவர்களில்யாருடையமுயற்சிக்கும்உணர்வுக்கும்தியாகத்திற்கும்குறைவானதல்லஇராவ்சாகிப்எல்.சி. குருசாமி, எச்.எம். ஜெகநாதன்முதலியோரின்செயற்பாடுகள்.’ (கட்டுரையிலிருந்து)

ஆதிக்க சாதித் தலைவர்கள் என்று சொல்லியதிலிருந்தே அவர்களின் செயற்பாடுகள் எத்தன்மையதாக இருந்திருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதல்லவா. அதற்கு சற்றும் குறையாதது அருந்ததிய மக்களின் செயற்பாடுகள் என்று சொல்லுகிறது குமுதம். அருந்ததிய மக்களை இதைவிட மோசமாக யாராவது சிறுமைப்படுத்த முடியுமா?

மன்னர்களைத்தொட்டுப்பேசும்உரிமைஅருந்ததியர்களுக்குஇருந்திருக்கிறது. தோலாடை, பாதரட்சை, வாள்உறைஆகியவற்றைத்தயாரிக்கமன்னர்களின்உடல்அளவு, கால்அளவுதேவை. அதைஅவர்கள்நேரடியாகவேமன்னர்களைத்தொட்டுஅளவுஎடுத்திருக்கிறார்கள்.’ (08.04.2009 இதழில் வந்த கட்டுரையிலிருந்து)

மன்னர்களைத் தொட்டு அளவெடுத்ததெல்லாம் சரிதான். ஆனால், அளவெடுத்த பிறகு மன்னர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டாமா? அவர்கள் தொட்ட பாகங்களை நிச்சயம் கழுவிக் கொண்டிருப்பார்கள். சாதாரணமாக, பெருநகரங்களைத் தவிர்த்த ஊர்புறங்களில் இன்றும் இந்த வார்த்தைகளைக் கேட்க முடியும். ஒரு சிறுவன் முடிதிருத்திக் கொண்டு வீட்டுக்குள் வரும்போதுபரியாரியைத்* (அம்பட்டனை) தொட்டுட்டு குளிக்காம உள்ள வறியே. போய்க் குளிச்சுட்டு வாடா என்று பெரியவர்கள் கத்துவதுண்டு. “உடம்பெல்லாம் முடியிருக்கும் போய் குளித்துவிட்டு வா என்று சொல்லாமல்தாழ்த்தப்பட்டவனைத் தொட்டுவிட்டு வந்திருக்கிறாய் போய்க் குளி என்று சொல்லுகிற ஜாதி வெறி இந்தக் காலத்திலும் உயிரோடு இருக்கும் போது மன்னர்கள் காலத்தில் இருந்திருக்காதா? இதை அருந்ததியர்களுக்கான சிறப்பு என்று சொல்லுகிறது குமுதம். “தலித் மக்களைச் செருப்பாலடித்தாலும், அவர்களுக்குக் கறியும் சோறும் போட்டவர்கள் ஆதிக்க சாதியார் என்று சொல்வது போலிருக்கிறது. *பரியாரிஅனைத்து தாழ்த்தப்பட்ட சாதியாரையும் குறிக்கத் தஞ்சை மாவட்டச் சுற்றுப்புறங்களில் பயன்படுத்தப்படும் சொல்.

..சிதம்பரனார் என்றால் தமிழினம் தோன்றிய நாள்தொட்டு கடலில் கப்பல்விட்ட முதல் தமிழன் என்பதான் தோற்றமே தற்போதும் நிலவி வருகிறது. முண்டாசைக் கட்டியனுப்பி பாரதி என்றும், முகத்திலே பஞ்சை ஒட்டியனுப்பித் திருவள்ளுவர் என்றும் பிள்ளைகளை மாறுவேடப் போட்டிக்கு அனுப்புகிற பெற்றோர்கள் கூட இவரைக் கண்டுகொள்ளாததுதான் பேரவலம். விடுதலைப் போராளியாக மட்டுமல்லாது தொழிற்சங்கவாதியாகவும் விளங்கியவர் சிதம்பரனார். ”பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் ஆக்கித் தந்தால்தான் உண்பேன் என்று சிறையதிகாரியிடம் போராடிய சிதம்பரனார் பெரியாரின் தாக்கத்தால் பெரிதும் மாற்றம் கண்டார். (மேலும் தகவல்களுக்கு தொடர்புடைய பதிவுகளில் சென்று படிக்கவும்.)

அந்த சிதம்பரனார் குமுதத்தின் கண்களுக்குத் தேசத் தலைவராகத் தெரியாமல் பிள்ளைமார் தலைவராகத் தெரிகிறார். இவருக்குச் சமமாக இன்னொருவரையும் கௌரவிக்கிறது குமுதம். “இன்னொரு பிறப்பெடுத்தாலும் பிள்ளைமார் சமூகத்திலேயே பிறக்க விரும்புகிறேன் என்று கூறிய சுயஜாதி அபிமானியும், “தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது என்று கூறிய தமிழ் விரோதியுமான ஜெயகாந்தனையும், சிதம்பரனாரையும் ஒன்றாகக் கருதி கௌரவித்திருக்கிறது குமுதம். ஜெயகாந்தனைக் கௌரவிக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. சமஸ்கிருத தாசனாக இருப்பவரை ஏன் நான் தமிழன் என்று தலைப்பிட்டுக் கௌரவிக்க வேண்டும் என்பது தான் குமுதத்தின் முன் அறிவுடையோர் வைக்கக்கூடிய கேள்வி?

சிதம்பரனாரை பிள்ளைமார் என்று சொன்னவர்கள் பெரியாரை நாயக்கர் என்று சொல்லாமல் விடுவார்களா? அப்படி சொல்வதாயினும் சொல்லித் தொலையட்டும், அவர் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தைக் குறித்து அந்தக் கட்டுரையில் ஒரு வார்த்தையாவது இடம்பெறுமா? அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில்பள்ளன், பறையன், சாணான் சக்கிலி நுழையத் தடை என்று எழுதி வைத்திருந்தனர். இந்த நான்கு சாதியாரும் கூட தமிழகத்தில் பிறந்தவர்கள்தான். இந்த சாதிகளைக் குறித்த கட்டுரையில் இப்படி ஒரு பலகை ஏன் எழுதிவைக்கப்பட்டது, அப்படி எழுதியவர்கள் யார் என்ற விபரமெல்லாம் இடம்பெறுமா?

அத்தனை சாதிகளின் பெருமைகளையும் அலசினால் கூடவே சிறுமைகளையும் அலசவேண்டுமல்லவா? அந்த வரலாறு தில்லை நடராசன் கோவிலில் தாழ்த்தப்பட்டவரான நந்தன் எரிந்த சம்பவத்திலிருந்தும், எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதிலிருந்தும் அல்லவா ஆரம்பிக்கவேண்டும்? இவர்கள் எழுதும் வரலாறு ஏன் விடுதலைப் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது? குமுதம் இதையெல்லாம் நேர்மையோடு எழுதும் என்று நம்புவதே கூட ஒரு மூட நம்பிக்கைதான்.

ஞாநி போன்ற முற்போக்காளர்களின் (?!) எழுத்தைத் தாங்கி வருகிற குமுதம் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று ஆதங்கப்பட்டால், என் மூட நம்பிக்கையை எண்ணி என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும். குமுதத்திடம் இதைத் தவிற வேறெதை எதிர்பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

1. ஜாதித் தொடரை விலக்கு குமுதம் மீது வழக்குவே. மதிமாறன்

2. ஜாதி வெறிக்குநான் தமிழன் என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்வே. மதிமாறன் (இக்கட்டுரையில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.)

3. நான் தமிழன் சாதியத்தின் முகவரிதமிழன்பன்

4. ..சி.யிடம் பெரியாரின் தாக்கம்ராஜாஜியின் பச்சைத் துரோகம்வே. மதிமாறன்

5. பகுதி 2: சுதேசிப் போர்க்கப்பல் தளபதி வே. மதிமாறன்

6. பகுதி 1: சுதேசிப் போர்க்கப்பல் தளபதிவே. மதிமாறன்

[மேலேஉள்ளபதிவுகளின்உள்ளடக்கம்அந்தந்தப்பதிவர்களுக்கேஉரிமையுடையவை. இப்பதிவில்அவைமேற்கோளாகமட்டுமேபயன்படுத்தப்படுகிறது. தோழர்மதிமாறன்மற்றும்தமிழன்பன், இருவருக்கும்இத்தறுவாயில்நன்றிதெரிவித்துக்கொள்கிறேன்.]-விஜய்கோபால்சாமி

ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்

kharoncovers

ராயலசீமா மகேந்திரன்

Diwakarஎன்கிறவர்ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்”என்றகட்டுரைக்குஎன்னைகண்டித்துபின்னூட்டம்அனுப்பியிருந்தார். அதைமறுத்து, கண்டித்து ராயலசீமா மகேந்திரன்எழுதிஅனுப்பியிருந்தார், அதுஇது தான்:

 

1. Movies – There are several movies doing this activity

 

சாதி உணர்வைத் தூண்டுவது போல் வந்த திரைப்படங்களைக் கண்டிக்கவில்லை என்று சொல்லுகிறீர்கள். இதிலிருந்தே இந்த வலைப்பக்கத்தின் கடைசி சில பதிவுகளை மட்டுமே படித்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். தசாவதாரத்தைக் குறித்தும், பாலசந்தரைக் குறித்தும், தோழர் எழுதிய பதிவை நீங்கள் படிக்கவில்லை என்று எண்ணுகிறேன். நேரம் கிடைத்தால் முதல் பதிவிலிருந்து ஒருமுறை படித்துவிட்டுப் பிறகு எழுதுங்கள்.

 

2. Jathi Sangam – There are several Jathi sangams

 

சாதி சங்கங்கள் தேவையற்றவை என்பது தான் என்னுடைய கருத்தும். ஆனால், சாதி சங்கம் அமைப்பதில் பார்ப்பனர்களுக்கு இருக்கிற நியாயம் பள்ளர்களுக்கும் அருந்ததியருக்கும் கூட இருக்கும் என்பதும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சாதி சங்கக் கலைப்பு ஆதிக்க சாதிகளிடம் தொடங்கி தலித் மக்களின் சாதி சங்கங்களுக்கு வருவதுதான் நியாயம். அதற்கான முதல் வேலையாகத் தாம்பிராசைக் கலைக்கச் சொல்லி நீங்களே போராட்டம் தொடங்கலாம். அதன் பிறகு அனைத்து சாதியாருடைய சங்கங்களையும் கலைப்பதற்கு அதுவே ஒரு நல்ல முன்னுதாரணமாய் அமையும். இதை ஏன் நீங்கள் செய்யக் கூடாது.

 

3. Attacking Parppans unnecessarily – I have seen many of your own posts which is creating hatred towards brahmin community. I was a normal person initially and I have several Muslim / hindu (Dalit and all other communities)friends and I never had any problem and I do not even know what their caste is. But unfortunately after going through your posts for some time, I started having the feeling that I have to start support the brahmin community. I am not sure whether you are aware because of your writings you are making the normal persons (who are not attached to the caste) to follow the caste. When I realized this I stopped reading your articles and similarly others Vinavu, tamilovia, tamilachi and others.

 

தோழர்மதிமாறன், பார்ப்பனர்களைத் தேவையில்லாமல் தாக்குகிறார் என்று சொல்லுகிறீர்கள். நீங்கள் சாதி அபிமானமற்றவர் என்றால் உங்கள் சாதியின் மீதான விமர்சனம் ஏன் உங்களுக்கு உறுத்துகிறது. சாதி வெறியைப் போலவே சுயசாதி அபிமானமும் கீழ்த்தரமானது. உங்களுக்கு அனைத்து மத சாதி நண்பர்களும் இருக்கிறார்கள் என்று சொல்வதிலிருந்தே ஒவ்வொருவரும் என்ன மதம் அல்லது சாதி என்பதை தெரிந்துகொண்டுதான் பழகிவருகிறீர்கள் என்று தெரிகிறது. தோழர் மதிமாறனுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்புள்ள எனக்கு இன்று வரை அவர் என்ன சாதி என்பது தெரியாது. தெரிந்துகொள்வதில் எனக்கு ஈடுபாடும் கிடையாது. அதே போல அவரும் என்னுடைய சாதி அடையாளங்களைக் குறித்து தெரிந்து கொள்ள முயன்றதில்லை. நம்மோடு பழகுகிறவர்களின் சாதியை அறிந்துகொள்ளும் குணத்தை முதலில் கைவிடுங்கள்.

 

தோழர்மதிமாறன், அனைத்து மதங்களையும் சாதிகளையும் கண்டித்தே வந்திருக்கிறார். அதில் எனது சாதியும் அடக்கம். எங்கள் சாதியை எப்படி விமர்சிக்கலாம் என்று நான் அவரிடம் கேட்கவில்லை. காரணம் எங்கள் சாதியினர் தங்கள் பண்ணைக் கூலிகளிடம் நடந்துகொண்ட விதத்தை நானறிவேன். என் வீட்டிலேயே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என் கொள்ளுத்தாத்தா காலம் வரை எந்த பண்ணைக் கூலியும்  வீட்டுக்குள் வரமுடியாது. ஏதேனும் வேலை காரணமாக வந்தாலும் அவர்கள் சென்ற பிறகு வீடு முழுவதும் கழுவப்படும். என் தாத்தா காலத்தில் அந்த நடைமுறை மாறியது. தனக்கு முடிவெட்டுகிற அருந்ததியரை வீட்டினுள் வரவழைத்து முடிவெட்டிக்கொள்வார். பண்ணைக் கூலிகள் அனைவரும் வீட்டிற்குள் வரலாம். அவர்களைத் தனக்கு முன்னால் உட்காரவைத்துக் கூடப் பேசுவார். ஆனாலும் அவரிடமும் அந்த சாதியத்தின் எச்சம் எஞ்சியிருந்தது. அவர்கள் தண்ணீர் அருந்த எங்கள் வீட்டில் தனிக்குவளை இருந்தது. கேட்கக் கூசுகிற வார்த்தைகளைக் கொண்டு அவர்களைத் திட்டுவார். இங்கே என் பாட்டன் என்பதற்காக நான் எதையும் மிகைப்படுத்தியோ குறைத்தோ சொல்லிவிடவில்லை. இந்த நேர்மை ஒவ்வொரு சமூகத்தினருக்கும் வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

 

நண்பரே, எத்தனையோ பார்ப்பனர்களின்* நம்பிக்கைகளை கேள்வி கேட்காமல் அவர்களை நண்பர்களாக எண்ணியிருக்கிறேன். ஆனால் என்னுடைய மூட நம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பு போன்றவற்றை அறிந்த மறுநொடியிலிருந்து அவர்கள் என்னிடம் பழகுகிற விதம் மாறிவிடுகிறது. *நீயே சாதி பார்த்துத்தான் பழகியிருக்கிறாய் என்று சொல்ல வரலாம். நானாக அவர்களிடம் சென்று என்ன சாதி என்று கேட்டதில்லை. அவர்களேதான் தங்கள் சாதிக்குரிய அடையாளங்களைப் பெருமையுடன் வெளிக்காட்டிக் கொண்டனர். அதன் வாயிலாகவே அவர்களின் சாதியை அறிய நேர்ந்தது.

 

4. Even in one of your previous posts you said Pappans are not supporting Tamil elam and the reasons, but at the end you also thanked the pappans who are supporting.

 

It means there are Pappans who are supporting and who are opposing and you are writing against the pappans who are opposing fine.

 

But does it mean no others are opposing Tamil elam? If so why you have not written about their community and you only written about them? It clearly shows you want to oppose only Parppans in general and others individually.

 

அந்தப் பதிவில் எல்லா பார்ப்பனர்களும் ஈழ எதிர்புணர்வுள்ளவர்கள் என்று எங்கேயுமே சொல்லவில்லையே. பெரும்பாலான பார்ப்பனர்கள் என்று தான் சொல்லியிருந்தார். பதிவை நன்றாகப் படித்துப் பார்த்து தான் எழுதுகிறேன். ஈழ எதிர்ப்பை பகிரங்கமாகக் கைக்கொண்டிருக்கக் கூடியவர்களைப் பட்டியலிடுங்கள். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அதில் எத்தனை பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள். ஈழ எதிர்ப்பை கைக்கொள்ளும் பிற சாதியார் பலரும் பார்ப்பனர்களின் பரப்புரையின் விளைவாகவே அவ்வாறான நிலைப்பாட்டுக்கு வந்திருப்பவர்களாக இருப்பார்கள். ஆராய்ந்து பாருங்கள். அதற்காக பார்ப்பனர்கள் அத்தனை பேரும் ஈழத் தமிழர்களுக்கு முற்ற முழுக்க எதிரானவர்கள் என்றும் நாங்கள் சொல்லவில்லை.

 

5. I just wanted to raise this because by your writings you are not trying to suppress the pappan community rather they are clearly raising their caste feelings. Who ever does not want to get affected simply ignore your writings by doing this there are moving away from you in understanding your problems and not supporting you. Others are raising their voice severly by opposing what ever you are doing.

 

Currently I am staying abroad and I have a boy of 6 years old but he does not even know what is caste, I do not want to teach him about anything. I had a plan of coming back to India later but unfortunately I am bit concerned about all the things which is happening now and I do not want him to come back to India because I feel he will get into the unwanted caste trap in the colleges.

 

Also I have seen when ever a clear argument is put against you with the necessary proofs, all your followers will start jump against them clearly specifying the words like Pappara naye, pappan ozhikkanum etc.,

 

So this clearly shows you just want to suppress only pappans how others (this includes all FC, MBC, OBC and BCs) have done it to Dalits. At least it is good that most of the time you are not responding to any other comments.

 

I know for sure that you will have some genuine brahmin friends, ask them to read all these and try to take their feelings and find out what is happening.

 

Other thing is sondha karuthu, what only others can have sondha karuthu? Pappans should not have their own sondha karuthu?

 

I am sorry I am totally disappointed because of the poor agenda you have in your mind even though your writings are too good.

 

உங்கள் ஆறு வயது மகனை இந்தியாவுக்கு அழைத்து வருவதும் வராததும் உங்கள் விருப்பம். அதில் நான் புகுந்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்கு நீங்கள் சொல்லுகிற காரணம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. என் மகனுக்குச் சாதி குறித்து எதையும் நான் கற்றுக்கொடுக்கவில்லை. அதை விரும்பவும் இல்லை என்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனால் இந்தியாவுக்கு வந்தால் உங்கள் மகன் இதையெல்லாம் தெரிந்து கொள்வான் என்று அஞ்சுவதிலிருந்தே உங்கள் உள்நோக்கம் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. மற்ற சாதியாரின் சாதிவெறியைத் தெரிந்து கொண்டால் உங்கள் மகன் நம் சாதியில் இது போல் செய்திருக்கிறார்களா? என்று கேட்பானே, நான் அதற்கு என்ன சொல்லுவேன், என்ற பயம்தான் அப்பட்டமாகத் தெரிகிறது.

 

பார்ப்பன நாயே, பார்ப்பான் ஒழிக போன்ற வார்த்தைகளை மதிமாறன் ஒருபோதும் சொன்னதில்லை. மதிமாறனின் பதிவுகளில் விவாதிக்க வருகிறவர்களில் சிலர்தான் இது போல் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பி.முரளி என்பவர் மதிமாறனைக் குறித்து எழுதியதையும் மதிமாறனின் வலைப்பதிவில் தேடிப் படித்துப் பாருங்கள். ஒரே ஒரு பி.முரளி எழுதியதற்காக ஒட்டு மொத்த பார்ப்பனர்களும் அப்படித்தான் என்று நானும் மதிமாறனும் பொதுமைப்படுத்தவில்லை. அதே போல ஒருசிலர் பார்ப்பன நாயே, பார்ப்பான் ஒழிக என்று சொல்வதைக் கொண்டு மதிமாறன் உள்ளிட்ட அனைவரையும் பொதுமைப்படுத்தாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

முரளி என்பவர் மிககீழ்த்தரமானவார்த்தைகளைப் பயன்படுத்தி மதிமாறனை திட்டியபொது நீங்கள் ஏன் இப்படி அநாகரீகமாக எழுதுகிறீர்கள் என்று முரளியை கண்டிக்கவில்லை. அவர் பார்ப்பனர் என்பதினாலா

 

அனைவருக்கும் சொந்தக் கருத்து இருக்கும் போது பார்ப்பனர்களுக்கு ஏன் சொந்தக் கருத்து இருக்கக் கூடாது… தாராளமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்த சொந்தக் கருத்து பொது நலனுக்கு எதிரான சுயநலக் கருத்தாக இருந்தால் கண்டிப்பாக விமர்சனம் வரத்தான் செய்யும். பார்ப்பனர் என்றில்லை, எந்த சாதி மற்றவர்களுக்கு எதிரான சொந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் விமர்சனம் வரத்தான் செய்யும். நீங்கள், நான், மதிமாறன் இப்படி யாருடைய சொந்தக் கருத்தும் அதற்கு விதிவிலக்கில்லை.

 

மதிமாறனின் எழுத்துக்களைப் பற்றி அவரது ஜெனியூன் பார்ப்பன நண்பர்களிடம் கேட்கச் சொல்கிறீர்கள். பார்ப்பனர் என்றில்லை, எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கெல்லாம் ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான். நண்பர் இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் பழகிய பார்ப்பனர்களில் அப்படி யாரும் இல்லாததாலேயே இப்படி என் அடையாளங்களை மறைத்துக்கொண்டு எழுத வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு நிலைமையிலிருப்பதை நினைத்து என்னாலும் உங்களைப் போல் வேதனைப்படத்தான் முடிகிறது. புலி பட்டினி கிடக்காமலிருக்க மான் செத்துதான் ஆகவேண்டும். மான் சாகாமலிருக்கப் புலி பட்டினி கிடந்துதான் ஆகவேண்டும். அதே மாதிரி மதிமாறனின் செயல்திட்டம் (அஜெண்டா) உங்களுக்கு மட்டமானதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நாங்கள் அதைக்குறித்து வருந்தவில்லை. நன்றி.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

ambedkar

ப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, அதவாது 1936 ஆம் ஆண்டில் ஜாத்பட்தோடக் மண்டல் மாநாட்டுக்குடாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் அந்த உரையை இப்படி துவங்கியிருக்கிறார்: இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு பேரன்புடன் என்னை வேண்டிக் கொண்ட ஜாத்பட்தோடக் மண்டல் உறுப்பினர்களின் நிலைக்காகப் பெரிதும் வருந்துகிறேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காகப் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். ……………………………….. நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மாகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுபாம்பாகவே பார்க்கின்றனர். ………………………………………………………………………

…………. மதஈடுபாடுள்ள சாதாரண இந்துக்களுக்கும் கூட என்னைத் தேர்வு செய்தது பிடிக்காது. ஒரு தலைவைரை தேர்ந்தெடுப்பதற்குச் சாஸ்திரங்கள் விதித்துள்ள விதிமுறைகளை மீறியதேன் என இம்மண்டலைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்க நேரலாம். …………. அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று ஆரம்பித்து, சாதிகள் பற்றியும், இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என்றும் வேதங்கள், உபநிஷதங்கள், ஸ்மிருதிகள், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இந்துக்களின் அறநூல்களை அம்பேத்கர் நொறுக்கியிருந்தார்.

அந்தத் தலைமை உரையை படித்துப் பார்த்த மாநாட்டின் வரவேற்புக் குழவினர், அதிர்ச்சி அடைகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரையை சுருக்கிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் வேண்டுமென குழவினர் டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொள்கின்றனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை பதவியை அளித்த கவுரவத்திற்காக, மாநாட்டுத் தலைமையுரையைத் தயாரிப்பதற்குத் தலைவருக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார்.

மாநாட்டுக் குழவினர், டாக்டர் அம்பேத்கரின் தலைமையை நீக்கிவிடுகிறார்கள்.

அதைக்குறித்து 15.5.36 அன்று ஹர்பகவன் என்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: ஒருவரது தலைமையுரையை வரவேற்புக் குழவினர் ஒப்புக் கொள்ளாததால் தலைவரையே ரத்து செய்தது இதுவே முதல் தடவையாக இருக்குமெனக் கருதுகின்றேன். இது சரியோ, தவறோ சாதி இந்துக்களின் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க நான் அழைக்கப்பட்டது இதுவே முதல் தடவை. இது துக்கத்தில் முடிந்தது பற்றி வருந்துகின்றேன். தம் வைதீக சகாகக்களிடமிருந்து சீர்திருத்தப் பிரிவனருக்கும், சீர்திருத்தம் நடைபெற்றே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீண்டாதோரின் தன்மானமுள்ள பிரிவனருக்கும் இடையிலான இத்தகைய அவலமான உறவு எப்படி முடியும்?”

1936 ஆம் ஆண்டின் நிலை மட்டுமல்ல இது. இன்றைய நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எழுதியிருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பல உரிமைகளைப் போராடி சட்டமாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிடை வலியுறுத்தி தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்திருக்கிறார். உலகம் வியக்கும் அறிஞராக பல விஷயங்களில் ஆழ்ந்த கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக மட்டுமே பார்க்கிற தொனி இன்றும் நிலவுகிறது.

அப்படிப் பார்ப்பதுகூட பிரச்சினையில்லை, அவரை பிற்படுத்தப்பட்டவர்களின் எதிரியாக சித்தரிப்பது திட்டமிட்ட சதியாக, பேராபத்து நிறைந்ததாக இருக்கிறது. அதன் பொறுட்டே, அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வியை, வேலைவாய்ப்பை எதிர்த்த, மறுத்த குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி மீது வராத கோபம், காழ்ப்புணர்ச்சி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிட்டை சட்டமாக்கிய டாக்டர் அம்பேத்கர் மீது வருகிறது என்றால், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் என்பதினால்தான். “அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி.

p09

ஒரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள். ஆனால், அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால், சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமனல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராக, தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.

இந்த மனோபாவம், முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்ல, நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம், இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமற, பரம்பொருளைபோல் பரவி இருக்கிறது.

தன் மீது ஆதிக்கம் செலுத்துகிற, தன்னை அவமானப்படுத்துகிற ஆதிக்க ஜாதிகளைப் பார்த்து வராத கோபம் தன்மீது எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்தாத, தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காத, தாழ்த்தப்பட்டவர்கள் மீதே கோபம் கொள்கிற மனோபாவத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த மனோபாவம் மாறாத வரையில் சாதி ஒழியாது. சாதி மட்டுமல்ல, சாதிய ஏற்றத்தாழ்வுகள்கூட ஒழியாது.

ஏனென்றால் சாதிய அமைப்பு முறை உயர்ந்தவன்தாழ்ந்தவன்என்ற இரண்டே வேறுபாட்டில் இல்லை. அப்படி இருந்திருந்தால், அது எப்போதோ ஒழிந்திருக்கும், அல்லது அந்த நிலையில் மாற்றம் வந்திருக்கும். ஆனால் இந்து சாதிய அமைப்பின், ஏற்றத் தாழ்வுகள் படிநிலை நிறைந்தாக உள்ளது. அதனால் தான் வேறொருவனுக்கு அடிமையாக இருப்பதை பற்றிய கவலையில்லாமல், தனக்கு கீழ் ஒரு அடிமை இருப்பதில் மகிழ்ச்சியும், அந்த அடிமை தன்னை மீறி போகும்போது ஆத்திரம், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு வன்முறையில் இறங்க வைக்கிறது. 2000 ஆண்டுகளாகியும் சாதி அமைப்பு முறையை ஒழிக்க முடியாததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் உயர்சாதிக்ககாரர்கள் எல்லா சாதிக்காரர்களையும் மட்டமானவர்களாக கருதினாலும் அல்லது எல்லோரையும் விட நாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு நடந்து கொண்டாலும், அவர்களிடம் எந்த சாதிக்காரர்களும் சண்டைக்குப் போவதில்லை. எந்த சாதிய தகறாறுகளிலும் பாதிக்கப்படாமல், சாதி ரீதியாக மரியாதையோடும் வாழ்கிறார்கள். இதுதான் சாதியின் இயக்கம். இதுதான் சாதிய உணர்வு.

இந்த உணர்வு கொண்ட சாதி இந்துக்கள் மனம் திருந்த வேண்டும். தீண்டாமையை பொறுத்தவரையில் அதில் திருந்த வேண்டியவர்களும், மாற வேண்டியவர்களும் சாதி இந்துக்கள்தான். தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த தவறும் இல்லை.’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார். ஆகையால் தீண்டாமைக்கு எதிராக சாதி இந்துக்களிடம் தீவிரமாக பிரச்சாரம் செய்யவேண்டியது, சமூக அக்கறை உள்ளவர்களின் கடமை. அதனால்தான் தந்தை பெரியாரும் சாதிக்கு எதிராக, இந்து மதத்ததிற்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக சாதி இந்துக்களிடமே அதிகம் பேசினார். அதனால்தான் இந்திய அளவில் மிகச் சிறந்த தலைவராக டாக்டர் அம்பேத்கரை போல் , தந்தை பெரியாரும் விளங்குகிறார்.

சமூகத்தில் சாதிய வேறுபாட்டை எதிர்க்க, சாதிரீதியான காழ்ப்புணர்ச்சியை குறைக்க, முற்றிலும் விலக்க அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை பிற்படுத்தப்பட்டர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். அப்படி சேர்ப்பதின் மூலம் சமூகம் சாதி வேறுபாடற்ற சமூகமாக மாறும். பிற்படுத்தப்பட்ட மக்கள், அம்பேத்கரை தலைவராக ஒத்துக் கொண்டால், அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சசோதரர்களாக பாவிக்கிறார்கள் என்று அர்த்தப்படும். தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாய்த்து தலைவராக வருவதை எதிர்த்து இயங்குகிற, மனநிலையை அது மாற்றும். முற்போக்காளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களிடம் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை, அவர் உருவத்தை கொண்டுபோய் சேர்ப்பது தங்களின் தலையாய கடமை என்று இயங்கவேண்டும்.

அதன் ஒரு நிலையாக யாருமே அணியாத டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட டிசர்ட் அணிந்து, அதை சேகுவேரா, பெரியார் டிசர்ட்டை போன்று பிரபலமாக்க வேண்டும். அம்பேத்கர் டி சர்ட் பிரபலமானால், டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கான பொதுத்தலைவர், என்கிற நிலை உருவாகும். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த வேணடும் என்கிற உணர்வு மாறும். அவர் சிலையை கூண்டுக்குள் வைத்து அவமானப்படுத்துகிற நிலை மாறும். தாழ்த்தப்பட்டவர்களின் மீது நடக்கிற வன்கொடுமைகள் அகலும் அல்லது நிச்சயம் குறையும்.

ஆகவே, அண்ணலின் 114 ஆவது பிறந்தநாளான இன்று அவரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று உறுதி ஏற்பதோடு அவரின் படம் போட்ட டி சர்ட அணிவோம். மிகப் பரவலாக தலித் அல்லாதவர்களையும் அணிய வைப்போம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை, பல புதிய உரிமைகளை மீட்கட்டும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல உரிமைகளை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்கட்டும். சாதி வேறுபாடு அற்ற சமூகம் உருவாகட்டும்.

வே. மதிமாறன்

இன்று (14.4.2009) டாக்டர் அம்பேத்கரின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் ஓசை நாளிதழக்காக எழுதிய கட்டுரை. இன்று வெளியாகி இருக்கிறது. நன்றி தமிழ் ஓசை.

ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்

victory-boy

குமுதத்திற்கு அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் விவிரம்:

எம். பாலச்சந்தர்

வழக்கறிஞர்

காட்டூர்

கோவை-9


1.சம்பத் பிஏ பிஎல்., 2. ஈ.மு. சாஜித் பிஎஸ்சி எல்எல்பி.,

3. அ. பார்த்தசாரதி பிஏ பிஎல்., 4. வெண்மணி எம்ஏ பிஎல் 5. லெனின் பிஎஸ்சி பிஎல்., 6. ஜோதிக்குமார் பிஏ பிஎல்., 7. ஷிலா ராஜ் பிஏ பிஎல்., 8. மதுசூதனன் பி.ஏ பிஎல்.,

9. கலையரசன் பிஏ பிஎல்., 10. விஜயராகவன் பி.ஏ பிஎல்., 11. எஸ். கணேசன் பிஏ பிஎல்., 12. ஆனந்தராஜ் பிஏ பிஎல்., 13. ஜெயந்திநாதன் பிஏ பிஎல்., 14. ஆன்ந்திஈஸ்வரன் பிஏ பிஎல் ஆகிய வழக்கிறஞர்கள் சார்பாகவும், என் சார்பாகவும் தங்களுக்கு அனுப்பப்படும் வழக்கறிஞர் நோட்டீஸ்.


‘1. நான் தமிழன்என்ற தலைப்பில் ஒவ்வொரு ஜாதியைப் பற்றி நீங்கள் குமுதம்இதழில் வெளியிட்டுவருகிற கட்டுரை, மக்கள் மனதில் ஜாதி உணர்வுகளை தூண்டுகிறது. தமிழ் சமுதாயத்திற்காக பாடுப்பட்டத் தலைவர்களை, தியாகிகளை நீங்கள் வெறும் ஜாதிக்காரராக சுருக்கி வெளியிடுவது அவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது.


2. வீரன் அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் போன்ற பல தலைவர்களை, நீங்கள் ஜாதிரீதியாக அடையாளப்படுத்துவது அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் வெள்ளையனை எதிர்த்து தங்கள் ஜாதிக்காரர்களுக்காக போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களுக்காத்தான் போராடினார்கள்.


3. ஜாதி ரீதியாக பிளவுப்பட்டு இருக்கும் சமூகத்தில், ஒருவரையொருவர் வீரோதமாக பார்க்கும் சமூகத்தில், ஜாதி கலவரங்கள் நடக்கும் சமூகத்தில் & பிரபலங்களை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்துகிற உங்கள் வேலை சமூக விரோத நடவடிக்கையாகவே இருக்கிறது. பல பிரபலங்கள், கலைஞர்கள் என்ன ஜாதி என்று தெரிந்து கொள்ளவிரும்பாமலேதான், மக்கள் அவர்களை தமிழர்கள்என்ற பொது அடையாளத்தோடுதான் ஆதரித்து இருக்கிறார்கள்.


4. மக்களின் உணர்வு இப்படி இருக்கையில் நீங்கள் அந்தப் பிரபலங்களை, கலைஞர்களை, தியாகிகளை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்துவது, அந்தப் பிரபலங்கள், கலைஞர்கள், தியாகிகள் சார்ந்த ஜாதிக்காரர்களைத் தவிர மற்றவர்களிடம் அந்நியமாக்குகிற வேலையாகத்தான் இருக்கிறது. இந்த கேவலமான ஜாதி வெறி செய்கைக்கு நான் தமிழன்என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலமாக இருக்கிறது.


5, என் ஜாதியில் நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்.‘ ‘என் ஜாதியில்தான் நாட்டுக்கு போராடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள்என்பது போன்ற தேவையற்ற விவாதங்களை, சண்டைகளை உங்கள் குமுதம் இதழில் வருகிற, ‘நான் தமிழன்கட்டுரை தூண்டுறது. அது மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தனிப்பட்ட முறையில் அல்லாமல் அந்த மக்களே, தங்கள் வாழ்க்கையை சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியும், அதை எதிர்த்தும் போராடி வருகிறார்கள்.


6, நீங்கள் பெருமையாக குறிப்பிடுகிற பல ஆதிக்க ஜாதிகளில் இருக்கிற, ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பல கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நீங்கள் அந்த ஆதிக்க ஜாதிகளின் பெருமை பேசினால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தப்படுகிறது.


7. ஆகவே, நீங்கள், ‘நான் தமிழன்என்ற பெயரில் ஜாதி உணர்வை தூண்டுகிற கட்டுரையை உடனடியாக நிறுத்தவேண்டும். இதுவரை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்தி வெளியிட்டு தியாகிகளை கேவலப்படுத்திய செயலுக்காக, நீங்கள் உங்கள் குமுதம்இதழில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்கவேண்டும்.

8. அப்படி செய்யாத பட்சத்தில் உங்கள் மீது சமூகத்தில் ஜாதி கலவரங்களை தூண்டிய முறையிலும், தியாகிகளை ஜாதிரீதியாக அவமானப்படுத்திய வகையிலும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடருவோம்.


எம். பாலச்சந்தர்

வழக்கறிஞர்

26.03.2009


மேற்கண்ட வழக்கறிஞர்களுக்கு நம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் சமூக பொறுப்புக்கு மரியாதைக்குரிய வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு

lotusskull1தாமரை, இந்த அழகிய மலர் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதவாதத்திற்கான குறியீடு மட்டுமல்ல. அது ஆபாசத்திற்கும்தான்சொப்பன ஸ்கலிதமா? விந்து விரைதலா? இரவில் வீடு செல்ல தயக்கமா? கை, கால் நடுக்கமா?’ என்கிற பாணியில் ஆண்களின் பலான உணர்வுகளுக்காக மட்டும் பத்தரிகை நடத்துக்கிற, தமிழர்களின்ஹார்ட் அட்டாக்கானகுமுதம் வார இதழ் மனிதர்களை வெறும் ஆண்&பெண் உறுப்புகளாக சித்தரித்து வருவது, அனைவரும் அறிந்ததே.


மனிதர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட, நடிகைகளின் இடுக்குகளின் மீதும், சதைகளின் மீதும் பேரார்வம் கொண்ட, நடிகைகளின் உருவங்களை கொண்டுபிழைப்புநடத்துகிற அது, திடீர் என்று நான் தமிழன் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு வருகிறது.


நடிகர், நடிகைகளின் விபச்சாரங்களைதுப்பறிந்துகிசுகிசுக்களாக எழுதி, அதை தனது வாசகர்களுக்கு செய்திகளாக வெளியிடடுமாமாவேலை பார்த்துக் கொண்டிருந்த குமுதத்திற்கு, ‘பாலுணர்வையும் தாண்டி இப்படி தமிழ் உணர்வு பீறிட்டிக் கிளம்பிவிட்டதே, பரவாயில்லையே என்று நினைத்துவிடாதீர்கள். அதன் தமிழ் உணர்வு, அதன் வர்த்தக நோக்கம் கொண்ட பாலுணர்வை விட கேவலமாக இருக்கிறது.


ஆம், தமிழர்களை ஜாதிரீதியாக அடையாளப்படுத்துகிறது.

ஜாதி வெறியை தூண்டுகிற குமுதத்தின் அந்த கட்டுரைகளை விட அதன் பாலுணர்வு கட்டுரைகள் எவ்வளவோ முற்போக்கானவை என்று சொல்லுக்கிற அளவிற்கு, மிக மோசமானதாக இருக்கிறது, அதன்தமிழன் உணர்வு‘.


அதனால் குமுதம் இப்படிதமிழ் உணர்வுகட்டுரைகளை வெளியிட்டு ஜாதி வெறியை தூண்டாமல், வழக்கம் போல்பலானசெய்திகளை வெளியிடுவதே, அதன் சிட்டுக்குருவி லேகிய வாசகர்களுககு அது செய்கிற பெரிய உதவியாக இருக்கும்.


குமுதத்தின்நான் தமிழன்என்ற ஜாதி வெறி கட்டுரையை கண்டித்து, நிறுத்தச் சொல்லி, மன்னிப்புக் கேட்கச் சொல்லி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசந்தர் என்றகிற பாலா அவர்களின் முயற்சியில், சமூக அக்கறை கொண்ட 14 வழக்கிறஞர்கள் ஒன்று சேர்ந்து, பத்து நாட்களுக்குமுன் குமுத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

அதன் பிரதியை நமக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அதன் விவரம் நாளை மறுநாள்.


தொடரும்