ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது

tamil1

ழத்தில் நடக்கிற போரை நிறுத்துஎன்று காங்கிரசில் இருந்து திமுக வரை, சோனியாவிலிருந்து கருணாநிதிவரை எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சே ஒரு ஆள்தான் பாக்கி. இதைதான் புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான் என்று சொல்லுவார்களோ!

ஈழத்தில் நடப்பது போர் அல்ல தாக்குதல். அதை போர் என்று சொல்வதே ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. குழந்தைகள், பெண்கள், முதியவர்களை விஷ குண்டு வீசி கொல்கிறது இந்தியாவின் ஆதரவு பெற்ற இலங்கை அரசு. இது எப்படி போர் ஆகும்? அது ஈழ மக்கள் மீது இலங்கை அரசு நடத்தும் தாக்குதல். ஈழ மக்கள் மீது நடக்கும் தாக்குதலை நிறுத்துஎன்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

ஈழ மக்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அநேகமாக ஈழத்தில் தமிழர்களே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தேர்தலுக்குள் முடித்துவிடவேண்டும்என்கிற நோக்கத்தில் இந்தத் தாக்குதல் தீவிரமாகி இருக்கிறது.

ஈழமக்களின் படுகொலையால் தமிழகத்து தமிழர்களிடம், காங்கிரஸ்திமுக கூட்டணி மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பை, எப்படி தனக்கு சாதகமான ஓட்டாக மாற்றிக்கொள்வது என்பதில் கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா. தினம் தினம் ஈழ ஆதரவு அதிரடி அறிக்கைகளால் ஓட்டை அள்ளிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தலுக்குள் முடித்துவிட எண்ணுகிற இந்திய இலங்கை அரசுகளிடமிருந்து ஈழ மக்களை காப்பாற்றுகிற எந்த முயற்சியையும் செய்யாமல், இதை காரணமாக கொண்டு தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது? என்று தீவிரமாக, தமிழர்களின் துயரங்களை ஓட்டாக்க அலைகின்றன ஜெயலலிதா தலைமயிலானக் கூட்டணி.

ஈழப்பிரச்சினையை தீவிரமாக பேசினால் ஓட்டாக்க முடியும்என்று ஜெயலலிதாவிற்கு ஆலோசனை தருகிற ஈழ மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்கள், உடனடியாக ஈழத்தமிழர்களை காப்பதற்கு ஒன்றிணைந்து தமிழகத்தையே நிலைகுலைய செய்கிற, இந்திய அரசை பணிய வைக்கிற போராட்டத்தை செய்யலாம் என்று முயற்சிப்பதில்லை. ஏனென்றால் ஜெயலலிதாகருணாநிதிகாங்கரசை போன்றே இவர்களின் நோக்கமும் தேர்தல் மட்டுமே. அதனால்தான் இந்தப் பிரச்சினையை தமிழகத்தை தாண்டி பக்கத்து மாநிலத்திற்கு கூட இவர்கள் கொண்டு செல்லவில்லை.

தமிழகத்தில் தீவிரமாக ஈழப்பிரச்சினையை முழங்குகிற தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவின் பிற பகுதிகளில் இது பற்றி வாய்திறப்பதில்லை. இவர்கள் நினைத்தால் தமிழக எம்.பிகளோடு (பா.ம.க., ம.தி.மு.க) இணைந்து நாடளுமன்றத்தையே நிலைகுலைய செய்திருக்க முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிற மாநில எம்.பிகள் யாரும் ஈழமக்களின துயரத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தமிழகத்தில்தான் மூச்சு பிடித்து பேசுகிறார் தா. பாண்டியன், தனது அகில இந்திய தலைவர்களிடம் இதை ஒரு அகில இந்திய பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கவில்லை. அவர் ஜெயலலிதாவைதான் மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் முயற்சி ஓரளவுக்கு அவர்களுக்கு ஓட்டாக மாறியிருக்கிறது. அது போதாதா?

ஈழமக்களின் துயரம், தமிழக அரசியில் சூழலில் தமிழர்களுக்கு தந்த செய்தி, அல்லது தமிழ் நாட்டில் அது அம்பலப்படுத்தியது எதை என்று பார்த்தால், துரோகிகளை.

இதுவரை, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஈழத்தமிழர்களின் துயரங்களின்போது நடந்து கொண்டதை நாடறியும்.

ஈழத்தமிழர்களுக்காகவேவிடுதலைப் புலிகளுக்காகவே கட்சி நடத்துவதாகபேசுவதாக சொன்ன இயக்கங்கள், பிரபலங்கள், பகுத்தறிவாளர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள் ஈழ மக்களின் மிகப் பெரிய துயரத்தின் போது எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள், அப்படி நடந்து கொள்வதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

உலகிலேயே மிக மோசமான முறையில் ஈழமக்களை கேவலப்படுத்தி ஜெயலலிதா பேசிய போது, அதை கண்டும் காணமல் தன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்தார் வைகோ. ஈழ பிரச்சினையில் கருணாநிதி எதிர்ப்பில் காட்டிய ஆர்வத்தை, ஈழத் தமிழர்களின் மீது நடக்கிற தாக்குதலை தடுத்த நிறுத்த எந்த தீவிரமான செயலையும் செய்யவில்லை பழ. நெடுமாறன். முத்துக்குமார் தியாகம் கொளத்தூர் மணி, சீமான் கைது இவைகளை ஒட்டி எதிர்கட்சிகளை ஒன்றிணைந்து தீவிரமாக ஈழத்தமிழர்களுக்கான ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டிய வேலையை நெடுமாறன் தலைமையிலான இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செய்யவில்லை.

தேர்தலில் ஜெயலலிதாவோடு இணைந்து செயல்படுவதில் காட்டுகிற வேகத்தில ஒரு பங்கை கூட அதில் ஒருவரும் காட்டவில்லை.

காங்கிரசோடு இணைந்து மத்திய அமைச்சரவையில் பங்கெடுத்து ஈழமக்களுக்கு எதிராக போர் புரிந்தது பாமக. ஈழமக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும்போதும் மதவாத எதிர்ப்பு என்ற முலம் பூசிக் கொண்டு, மிகவும் கம்பீரமாக காங்கிரசுக்கு ஓட்டு கேட்கும் வீரமணி.

ஈழமக்களையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்து பேசியதற்காகவே ஈழ மக்களின் பணத்தில் உலகம் முழுக்க இன்ப சுற்றுலா சுற்றி வந்த உதிரிகள், இன்று கருணாநிதி காங்கிரசின் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை நியாயப்டுத்திக் கொண்டிருக்கிறர்கள். இதுபோன்ற தமிழ் உணர்வாளர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தியது ஈழத்தமிழர்களின துயரம்.

இதில் பெரியார் திராவிடர் கழகம்தான் தொடர்ந்து, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈழமக்களுக்காக சமரசமற்று தினம் ஒரு போராட்டம் என்று அர்ப்பணிப்போடு போராடி வருகிறது. அதன் தலைவர் கௌத்தூர் மணி அதன் காரணத்திற்காகவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அண்ணன் ராமகிருட்டினண் தடா கைதியாக 3 ஆண்டுகள் கொடுஞ் சிறையில் இருந்தார். இப்படி எல்லாம் தியாகங்கள் செய்தபோதும் கூட அவர்கள் ஈழமக்கள் பணத்தில் உலகம் சுற்றி வந்ததில்லை.

ஈழப் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்தின் அர்ப்பணிப்பு, ‘அதிமுகவை ஆதரிப்பதுஎன்ற அவர்களின் தேர்தல் நிலைபாட்டில் விரயம் ஆகியிருக்கிறது. காங்கிரசைப் போல் திமுகவை போல் ஜெயலலிதாவும் ஈழ மக்களுக்கு எதிரானவர்தான். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் வரை இந்து ராமைபோல், அவர் ராஜபக்சேவின் நிலைபாட்டில்தான் இருந்தார். தேர்தல் தேதி அவரை இன உணர்வாளராக மாற்றியிருக்கிறது.

எங்களுககு அது பிரச்சினையில்லை. நேரடி எதிரியான காங்கிரசை தோற்கடிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறோம். அதிமுகவிற்கு அளிக்கிற வாக்கு காங்கிரசுக்கு எதிரான் வாக்குஎன்று அவர்கள் சொல்லலாம்.

தமிழக அரசியில் கட்சிகளிலேயே, ஈழப் பிரச்சினையில் அதிக உயிர் தியாகமும், தொடர்ந்து ஈழமக்களுக்காக காங்கிரசை கண்டித்து பல போராட்டகங்ளை நடத்திய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதன் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் அரசை கண்டித்து, சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். பிறகு பலரின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, “தமிழகத்தில் காங்கிரசை, வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எரிவதே என் லட்சியம்” என்று சபதம் செய்துதான் முடித்தார்.

அவரே காங்கிசுககு ஆதரவா போயிட்டாரு. ஜெயலலிதா போமாட்டாங்களா?