ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

maheswaran

ழத் தமிழரை பலியிட்டு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல்என்பதுபோல் ஓட்டோ ஓட்டுஎன்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் திருவிழாவில தீவிரமாக இருக்கின்றன.

இதற்கு முன் போரை நிறுத்து என்று தீவிரமாக நடந்த போரட்டங்கள் தேர்தல் நெருங்க நெருங்க சுத்தமாக நின்று போனது. யாரும் தமிழர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை நிறுத்துவது குறித்து பேசுவதுகூட இல்லை. வசனங்களும் நடிப்புகளும் மட்டுமே ஈழத்தமிழர்களுக்குஆதரவாகவருகிறது.

தேர்தல் முடிந்தால் எல்லாவற்றையும் முடிப்போம் என்கிறார்கள் வசனகர்த்தாக்களும், நடிகையும், துணை நடிகர்களும். ஆனால் ஈழத்தில் அதற்குள் எல்லோரும் முடிந்துவிடுவார்கள்.

வழக்கமாக தமிழ் தமிழர் குறித்து வீரவேசமான வசனங்களை பேசும் வசனகர்த்தா, இந்த முறை வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய வசனங்களை பேசியதால், நடிகைக்கு கொண்டாட்டம்.

நடிகையின் வசனமோ பஞ்ச் டயலாக்காக பறந்து வந்து வாக்காளர்களையும்உணர்வாளர்களையும் தன் வசப்படுத்துகிறது. இந்த முறை அவர் போட்டு இருக்கிற இன உணர்வு வேடத்துக்கு நல்ல வரவேற்பு. அவரின் நடிப்பு தத்துரூபமாக இருக்கிறது என்று பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுக் கிடைக்கிறது. அவார்டு கிடைத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. (தேர்தல் வெற்றி)

வசனகர்த்தாவின் உணர்ச்சிப் பொங்கும் நடிப்போ மிகைப்படுத்தப்படட நடிப்பாக மாறி சென்டிமெண்டுக்குப் பதிலாக நகைச்சுவை உணர்வாக மாறிவிட்டது.

நடிகையின் தமிழ் உணர்வால் வசனகர்த்தா கோபத்தில் இருக்கிறார். இனி தமிழ் உணர்வு என்று சொல்வதே தேச துரோகம் என்று அறிவித்துவிடுவார் போலும். (ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் கொடுத்தாலே குற்றம்)

நடிகைக்கு வசனம் எழுதி கொடுக்கும் துணை நடிகர்கள், கொண்டாடத்தில் இருக்கிறார்கள். நடிகைதான் நாடாளப் போகிறார் என்று.

ஆனால் ஈழத்தமிழர்களோ இப்போதுதான் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். தமிழகத்திலோ எரிகிற வீட்டில் புடுங்கற வரைக்கும் லாபம் என்று அலைகிறார்கள் அரசியல்வாதிகள்.

தனது இறுதி சொற்பொழவில் சும்மாவா சொன்னார் தந்தை பெரியார்: “ஓட்டு என்றால் எதை எதை கொடுக்குறான்? பெண்டாட்டி தவிர எல்லாவற்றையும் கொடுக்கிறானே” என்று, (பெரியார் களஞ்சியம், ஜாதிதீண்டாமை பாகம் 15 பககம் 347)

ஏப்ரல்30, 2009 அன்று எழுதியது.