‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

periyar-04

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

கவி, சிங்கப்பூர்

மிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார்,

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது.

இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல.

தனித் தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றையயல்லாம் பெ.மணியரசன் படித்தாரா? இல்லையா என்ப தெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ்க் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில், அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.

இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார்,

நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன? பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி , சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும்  அறியாமை என்று தோன்றவில்லையா? என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

https://i1.wp.com/www.periyar.org/html/Periyar.jpg?w=474

தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்? அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புரு­னுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே!  இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்றுதானே கூறுகிறார். அதாவது புரு­னும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள்.

மோட்சம் என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி?  நெறி, கோள் என்றால், வெறி ஏது? பதிவிரதாத தன்மை என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? பதிவிரதம் என்ற வார்த்தை இருந்தால், ‘சதி விரதம் அல்லது மனைவி விரதம் என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே! இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன?

தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு  என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை.

மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தொடரும்

‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

https://i1.wp.com/www.ambedkartimes.com/Image/PERIYAR.jpg?w=474

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

கவி, சிங்கப்பூர்

மிழை ‘நமது தகைமைசால்  தமிழ்’ என்று அழைத்து அது பற்றியும் பெரியார் கூறுகிறார்.

தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா?  மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து, மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள், தமிழைப் பொறுத்த வரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன.  எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன.

இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால்  தமிழ் , தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும் படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும் , ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன.

வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத் திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து  சென்று ஆங்காங்கு குடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வட நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களுக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும் படி செய்து, அதன் மூலம் தமது கலை, ஆசசார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்தி விட்டனர். அந்த வட மொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும் , அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழி களென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்.

இவ்வளவு ஆழ்ந்த விளக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார்,  தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாளம், தெலுங்கு  மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விளக்குகிறார்:

நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர் களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது.

இதையெல்லாம் இன்று வரை தமிழறிஞர்கள் ஆராய்ந்தார்களா அல்லது பெரியாருக்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக்களையாவது வெளியிட்டார்களா என்பதற்கு ஆதாரம் இல்லை.

மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் போது தமிழ்நாட்டிலிருந்து   ஆந்திரம் பிரிந்து சென்றதை “தொலைந்தது சனியன்” என்று கூறிய பெரியார், அதற்கு முன் கூறிய கருத்துக்களையும் இங்கு காண்போம்.

வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்.

இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.

தொடரும்

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

https://i1.wp.com/3.bp.blogspot.com/_0XidROab6yk/R2-rHn8LJLI/AAAAAAAADIE/DJrvnXEMQZI/s400/periyar_340.jpg?w=474

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

கவி, சிங்ப்பூர்.

மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை பிழையானது என்று பெ.மணியரசன் அவர்கள் பிழையாகக் கூறி வருகிறார்கள். மொழிப் பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது:

மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறா விட்டாலும் ஒலிக் குறிப்பு என்று கூறலாம்.

இப்படி மொழிப் பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், ஒருவரை பார்த்து, உங்கள் மொழி என்ன? என்று கேட்பதற்கு, நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது.

இப்படி பெரியார் விளக்கிய பிறகு மீண்டும் அவரைப் பார்த்து குதர்க்கமாக கேள்வி கேட்க விரும்புபவர்களுக்கு மீண்டும்  விளக்கம் கூறுகிறார்,

மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால் அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்ல வென்றும் உங்களுக்கு விளக்கிக் காட்ட விரும்புகிறேன்

என்றால்லாம் கூறிய பெரியார் சில உதாரணங்களையும் கூறுகிறார், “யாழ்ப்பாணத்தான், அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள் என்று கூறுவதை, திருநெல்வேலியான், அவா அப்பமே வந்தா என்பான். கிராமத்தான், அவியயா அப்படியே வந்தாங்கோ என்பான். இப்படி ஒரு மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைகள்தான் காரணம் என்று பகுத்தறிவு கொண்டு விளக்கிக் காட்டியுள்ளார்.

இதோடு விட்டுவிட வில்லை  பெரியார். அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார்,

மற்றும் மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத் திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்க காண்கிறோம். உதாரணமாக வடமொழியிலுள்ள போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆழ் து³Èத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது.

உதாரணமாக ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாகக் குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு ‘ஹா’ என்கிற பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம் மொழியும் ஏன் அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் , ‘ள இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பது தான் காரணம்.

‘ழ’, ‘ள’ என்ற எழுத்துக்களின் ஒலி அமைப்பையும் உச்சரிப்பு முறையையும் விளக்கிய பெரியாருக்கு மொழிப் பற்றிய பார்வை இல்லை என்று தமிழ் நன்கு கற்றறிந்த  பெ. மணியரசன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒரு மொழிக்குச் சிறப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பற்றியும் கூறுகிறார் பெரியார்,

இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து அந்தக்  கருத்து இருந்ததில்லை என்பது தான்.

இத்தோடு பெரியார் விட்டுவிட வில்லை. மேலும் ஒரு அழுத்தம் கொடுக்கிறார். அதாவது, “அந்தக் கருத்து அவர்களிடம் ஏற்பட வேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் காரணம்” என்று வலியுறுத்துகிறார்.

இந்த இடத்தில் ஜாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்கங்ளேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் ஜாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் ஜாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்களேன். இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள், வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால்  நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப பாருங்கள் என்று கூறியுள்ளதையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்.

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம் மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டு பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட அறிவைக் கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்களை வாங்கிப் படித்தால் அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியை ஏற்பதும் தள்ளுவதும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின் பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாக கற்றுக் கொள்ளப் படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசிய மாகும்.

ஒரு மொழி சிறப்புத் தன்மையடைவதற்கு அடிப்படையான விசயங்களை பெரியார் இவ்வாறு தெளிபடுத்தியுள்ளதை பெ. மணியரசன் ஊன்றிப் படிக்க வேண்டும்.

தொடரும்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்

http://www.employees.org/~desikan/images/d_periyar.gif

மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி என்று பெரியார் சொன்னார்.

பெரியாரின் இந்த அறிவியல் பார்வையை தமிழர்களுக்கு எதிராக, தமிழனுக்கு எதிரான கண்ணோட்டமாக மாற்றினார்கள், பெரியாருக்கு எதிரான, தமிழர்களின் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து பேசாத, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் எதிரிகளான, தனித்தமிழ் பேர்வழிகளும், தமிழ்த்தேசிய பேர்வழிகளும்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பெரியாரின் மொழிப்பார்வை எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று விளக்கி எழுதியிருக்கிறார் தோழர் கவி. இதை இவர் எழுதியது என்பதைவிட, பெரியாரே எழுதினார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு பெரியாரின் எழுத்துக்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி, தன் எழுத்தை சுருக்கியிருக்கிறார்.

இவர் சொந்த ஊர் திருவாரூர். இப்போது சிங்ப்பூரில் பணிபுரிகிறார். பெரியாருக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளை கண்டித்து,  நான் எழுதியதை தொடர்ந்து படித்து வந்த தோழர் கவி, அவர் எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பி வைத்தார்.

இதில், பெரியார் மொழிக்குறித்தும், தமிழ் குறித்தும் சொல்லியிருக்கிற செய்திகள் நிரம்ப அறிவு செறிவுள்ளதாக இருக்கிறது. (பெரியாரின் தமிழ் பற்றிய இந்த சிறப்பான கருத்துக்களும், டாக்டர் அம்பேத்கர் தமிழ் பற்றி சொன்ன கருத்துக்களும் ஓரே தன்மையுடையவை. இதுபற்றி நான் வேறு ஒரு சமயத்தில் எழுதுகிறேன்.)

தமிழ் மொழியை தாய்மொழி என்பதும்,  அதைப் புனிதமாக பார்க்கும் போக்கும், பழைய தமிழ் புலவர்களை பெரிய மேதைகளாக நினைக்கும் எண்ணமும், சில பெரியாரிஸ்டுகளிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், பெரியார் கருத்துக்களைவிட தமிழ்தேசிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முறையாக அவரை வாசிக்காததும் அல்லது சில இடங்களில் அவர் கொள்கைகளை கைவிட்டுவிடுவது, வசதியாக இருப்பதுமே காரணம்.

தோழர் கவி எழுதியிருக்கிற இந்தக் கட்டுரை, தமிழ்த் தேசிய வாதிகளுக்கு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு ஆர்வத்தில் பெரியாரை ஆதரிக்கிற சில பெரியாரிஸ்டுகளுக்கும், பெரியாரின் மொழி கொள்கையை தெளிவாக காட்டும். அதனால இதைத் தொடராக வெளியிடுகிறேன்.

இப்படி வெளியில் இருந்து ஒருவர் எழுதிய கட்டுரையை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு என் பதிவுகளில் இடம்பெற்ற கட்டுரைகளை ஒட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்த தோழர் ஏகலைவன், தோழர் விஜய் கோபால்சாமி இவர்களின் கட்டுரைகள் மட்டும்தான் இடம் பெற்றிருக்கிறது.

தோழர் கவியின் இந்தக் கட்டுரை, பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு ஒர் அறிவு சுரங்கம்.

-வே. மதிமாறன்

***

சுப.வீ எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம்’ நூல் குறித்து ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆகஸ்ட் 2005 இதழில், திரு. பெ.மணியரசன் எழுதியிருந்தார். சுப.வீ யின் நூலை ஆய்வு செய்கிறவர் அதை ஆய்வு செய்வதில் முனைந்திருக்கலாம். அதை விடுத்து பெரியாரின் பக்கம் போய் பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

‘பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்புக் கொண்டது’ என்கிறார் பெ.மணியரசன். இக்கருத்தை அவரே வரையறுத்துக்கொண்டு சுப.வீ யி ன் கருத்தை மறுக்கத் தொடங்குகிறார். பெரியாரின் கருத்தியல் என்பது சமூக நீதி. சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும். இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இதுதான் பெரியாரியல்.

‘பெரியாரின் சமூகவியல் கொள்கை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு.’ இதுவும் பெ.மணியரசன் அவர்களின் பிழையான பெரியார் கொள்கை பற்றிய பார்வை. ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாகவும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார்.

பெரியார் சொன்ன ‘திராவிடம்’ என்பது ‘பழைய சென்னை மகாணம்’ தான். அதில் உள்ள தெலுங்கு பேசுபவர்களையும் கன்னடம் பேசுவர்களையும் மலையாளம் பேசுபவர்களையும் மட்டும் உள்ளடக்கியது தான். இப்போது பெ.மணியரசன் போன்றவர்கள் தாங்களாக கொண்டுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளடக்கிய திராவிடம் அல்ல.

‘மொழிக் கொள்கையில் பெரியார் பிழை செய்திருக்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் சம்பள உயர்வுக்குப் பெரியார் ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் மொழிக் கொள்கை ஆகாது. தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்க வில்லை. மூட நம்பிக்கை மொழியென்றும் பகுத்தறிவு மொழி என்றும் எதுவுமில்லை. தமிழிறிஞர்கள் குறித்த பெரியாரின் பார்வை சமனற்றது. தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள். உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற பெரியாரின் இக்கணிப்பு தவறு.’ என்று பெ. மணியரசன் எழுதியவற்றிற்கு எல்லாம்,  பெரியாரைக் கொண்டே விடை கூறியிருக்கிறேன்.

பெ. மணியரசனின் பெரியார் மீதான் அவதூறுகளை மறுத்து, 2005 ல் நான் எழுதிய நூலினை உங்களுக்கு தொடராக தருகிறேன்.இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இதுவே பெ.மணியரசன் அவர்களுக்கு போதுமானது என்று கருதுகிறேன்.

கவி, சிங்ப்பூர்.

-தொடரும்

குடியரசு இதழில் வெளியான பெரியாரின் எழுத்துக்களை, பேச்சுகளை புத்தகமாக வெளியிடலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரியார் திராவிடர் கழகத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.

பெரியாரின் நூல்கள்தான் தமிழர்களின் அழியா சொத்து. இந்தச் சொத்து வழக்கில் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்பாகியிருக்கிறது.
மகிழ்ச்சி.
-வே. மதிமாறன்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

https://i1.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2011/09/bradlaughwithperiyar.jpg?w=474

தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

குமார்

‘kumarasamy mudaliyar High School’ என்று ஒரு பள்ளியின் முகப்பில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிற பெயரை தமிழனவாதிகள் பார்த்தால், ‘பள்ளியின் பெயரை தமிழில் எழுதுக’ என்பார்கள்.

பெரியார் தொண்டர்கள் பார்த்தால், ‘முதல்ல அதுல இருக்கிற முதலியார் என்கிற பெயரை எடு. அப்புறமாகூட தமிழில்ல பெயரை வைச்சிக்க’ என்பார்கள். இதுதான் தமிழனவாதிகளுக்கும் பெரியார் தொண்டர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். எதற்கு முன்னுரிமை தருவது என்பதில்.

தந்தை பெரியாருக்கு முன்பிருந்த சமூகம், தன் பெயருக்கு பின்னால், ஜாதி பெயரை போட்டுக் கொள்வதில் பெருமை உடைய சமூகமாக இருந்தது. ஜாதி, மதத்திற்கு எதிராக தந்தை பெரியார் ஓயாது போராடி,  தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும்படியான ஒரு மனநிலையை தமிழர்களிடம் உருவாக்கினார். இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத நிலை.  எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு.

சுதந்திர போராட்டத்திலும் சரி அதற்கு பின்னும் சரி, மேற்கு வங்காளம் பல புரட்சியாளர்களை தந்திருக்கிறது. ஆனால் அந்த மண்ணில், ஜாதிக்கு எதிரான மனோபாவம் முற்போக்காளர்கள் மத்தியிலேயே உருவாகவில்லை. அதன் சாட்சியாகத்தான் இன்றும் அந்த மாநில கம்யுனிஸ்ட்   கட்சி தலைவர்களே  சீதாரம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சாரியா, சோம்நாத் சட்டர்ஜி,  இந்திரஜித் குப்தா என்று ஜாதி பட்டத்தோடுதான் அலைகிறார்கள்.

ஆனால், தமிழ் நாட்டில் பெரியார் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, ஜாதி உணர்வுள்ள சராசரி தமிழன், பார்ப்பனர்கள், ஜாதி சங்கத்திற்கு தலைவனாக இருப்பவர் கூட தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டுக்கொள்ள விரும்பாத அல்லது முடியாத ஒரு சூழலை தந்தை பெயரியார் உருவாக்கினார்.

தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே, சிங்கள ராஜபக்சே அரசால் படுகொலை செய்யப்பட்ட,  லட்சக்கணக்கான ஈழமக்களின் துயரங்களின்போது,   தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சேவை, இந்திய அரசை  நாம் கண்டித்து எழுதியபோது, ‘ஆக சபாஷ்’ என்று நம்மை பாராட்டிய தமிழனவாதிகள்,

இந்து மதத்திற்கு, பார்ப்பனியத்திற்கு எதிப்பு தெரிவிக்காமல், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் தலித் வீரோத போக்கை, தலித் மக்களுககு எதிரான கொலைவெறி மனோபாவத்தை கண்டிக்காமல், ஈழப்பிரச்சினையை காரணம் காட்டி தமிழ்நாட்டிலும் ஈழம்போல்   பொதுவாக ‘தமிழன்’ என்று கும்மியடிக்கிறவர்களை, நாம் கேள்வி கேட்டால், பெரியாருக்கு எதிரான தமிழனவாதிகளும், பெரியார் பெயரை பெயரளவில் பயன்படுத்தி தீவிராமக தமிழ்தேசியம் பேசுகிறவர்களும் நம்மீது பாய்ந்து புடுங்குவதுபோல்,

பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனரல்லாதர் நலம் என்று பெரியார் பேசியபோது, ‘பெரியார் வாழ்க’  என்று முழுங்கிய நீதிக்கட்சிக்காரர்கள், உயர்ஜாதி இந்துக்கள் – பெரியார் இந்து மதத்திற்கு எதிராக,  தீண்டாமைக்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, ஜாதி அடையாளங்ளை, மத அடையாளங்கைளை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னபோது, பெரியார் மீது பாய்ந்து புடுங்கினார்கள்.

1929 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 18-19 நாட்களிலில் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டு தீர்மானங்கள் வரலாற்று சிறப்பு மிக்கது.   தன்னை தீவிரமாக ஆதரித்து, மாநாட்டுச் செலவுககு பணம் கொடுத்த பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்கார்களை, பணக்காரர்களை மிக கடுப்பேற்றிய தந்தை பெரியாரின் தீர்மானங்களில் முக்கியமானவை,

ஜாதிபேதம்

() மக்கள் பிறவியினால் உயர்வு, தாழ்வு உண்டு என்ற கொள்கையை இம்மாகநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கிற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை யெல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக்கூடாதென்றும்,

(பி) வருணாசிரமமென்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்றும்,

(சி) மனித நாகரீகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்குத் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லா பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், கோவில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களை தட்டுத் தடங்கலின்றி அநுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் உரிமைகொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது.

(டி) இவைகள் நிறைவேறச் செய்யப்படும் பிரசாரமும் முயற்சியும் ஒரு சில சுயநல வகுப்பாரின் மத சம்மந்தமான பிடிவாத்தினாலும் முட்டுக் கட்டையினாலும் போதிய அளவு சித்திபெறாமலிப்பதினாலும், இதற்காக அரசாங்கச் சட்டம் அவசியம் என்று கருதுகிறபடியால், சட்டசபைப் பிரதிநிதிகளும், சர்க்காரும் தக்க ஏற்பாடு செய்து பொதுஜன முயற்சிக்கு உதவிபுரிய வேண்டுமென்று இம் மாகநாடு தீர்மானிக்கிறது.

ஜாதிப்பட்டமும்மதக்குறியும்

() மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுதவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டுமென்று இம்மாகாநாடு பொது ஜனங்களை கேட்டுக்கொள்கிறது.

(பி) ஜாதி அல்லது சமயப் பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக் கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறது.

(குடியரசு 24-2-29)

இந்த தீர்மானங்களினால் நீதிக்கட்சியை சேர்ந்த தலைவர்களே பெரியார் மீது வெறுப்புக் கொண்டார்கள்.

மனித நாகரீகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்குத் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லா பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், கோவில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களை தட்டுத் தடங்கலின்றி அநுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் உரிமைகொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது

என்கிற பெரியாரின் இந்தத் தீர்மானத்தால் கடுப்பான பிள்ளைமார்கள், அதே ஆண்டு ‘சைவசமய மாநாடு’ என்ற பெயரில் திருநெல்வேலியில், செங்கல்பட்டு மாநாட்டிற்கு போட்டி மாநாடு நடத்தி பெரியாரை தூற்றினார்கள். ஆனாலும், பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக கொண்டுவந்த மேற்கண்ட  தீர்மானத்தால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தப்பிக்க தங்களையும் முற்போக்காளர்களாக காட்டிக் கொள்ள, அவர்களும்  ‘எல்லா மக்களும் கோயிலில் நுழைய வேண்டுமானல், அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானத்தை காறி துப்புவதுபோல் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த கோவை அய்யாமுத்து இப்படி எழுதினார், ‘அய்யா, சைவப் பெரியோரே, தாங்கள் கோரும் சுத்தம் அகச்சுத்தமா, புறச்சுத்தமா? அகச்சுத்தமாயின், அகச்சுத்தமுள்ளவனுக்கு கோயில் எதற்கு? புறச்சுத்தமாயின், நாளைய தினமிருந்து தங்களை ஒரு அழுக்குள்ள குடிசையில் குடியிருக்கச செய்து, திருநெல்வேலியிலுள்ள கக்கூசு  மலங்களையெல்லாம் வாரியெடுத்து அப்புறப்படுத்துவதைத் தங்களுக்குத் தொழிலாகக் கொடுத்து அதற்காக தங்களுக்கு மாதம் ஐந்து ரூபாய் சம்பளமும் கொடுத்து, கிணற்றிலும் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டால் தாங்கள் சுத்தமாக இருக்க முடியுமா? (பெரியாரும் அவர் இயக்கத்தவரும், பார்ப்பனரல்லாத ஜாதியினரை  பிள்ளைமார், செட்டியார், முதலியார்,  தேவர்,வன்னியர் போன்ற ஜாதியினரின் தலித் விரோத போக்கின்போது, பெயர் சொல்லி திட்டி எழுதினார்கள். ஆனால் இன்றைய பெரியாரிஸ்ட்டுகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதா ஜாதிவெறியர்களை பெயர் சொல்லி திட்டுவதில்லை.)

பெரியார் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்ட, இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த சண்முகம் செட்டியார் போன்றவர்களே, ஜாதிகளுக்கு எதிரான செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானங்களினால் பெரியார் மீது விரோதம் வளர்த்தார்கள்.

இதற்கெல்லாம் கலங்குகிறவரா பெரியார்? 1929 ஆம் ஆண்டு போட்ட இந்த தீர்மானங்களுககு 1973 ஆம் ஆண்டு தன் இறுதிநாள் வரை உண்மையாக நடந்து கொண்டார். தன்னுடைய இறுதி சொற்பொழிவிலும் (19-12-73) பார்ப்பனியத்திற்கு எதிராக இந்து மதத்திற்கு எதிராக ஜாதி இழிவுக்கு எதிராகத்தான் தீவிரமாக முழங்கினார்.

29ககு பின் பெரியாரின் அரசியலில், எதை எதிர்த்தாலும், எதை ஆதரிர்த்தாலும், யாரை எதிர்த்தாலும், யாரை ஆதரி்த்தாலும் அவருடைய செயல் இந்தத் தீரமானங்களையே சுற்றியே வந்தது.

1947 ஆகஸ்ட் 15 தேதியை நாடே கொண்டாடியபோது, துணிந்து ‘இது துக்கநாள்’ என்று அறிவித்தார். அதனால் அவருக்கு ‘தேச துரோகி’ பட்டம் கிடைத்தது. பெரியார் இயக்கத்தில் இருந்த அண்ணாதுரை போன்றவர்களே, பெரியாரை எதிர்த்து பேசினார்கள்.

வெள்ளைக்கார ஆட்சியில் எந்த பதவியும் ஏற்காத, தனிப்பட்ட முறையில் ஒரு பைசாகூட லாபம் அடையாத, எந்த சொகுசையும்  அனுபவிக்காத பெரியார், வெள்ளையர் இந்த நாட்டை விட்டு போவதை துக்கநாள் என்றதற்கு காரணம், அவன் பார்ப்பானிடம் ஒப்படைத்துவிட்டு போகிறான் என்பதினாலும் 29 ல் போட்ட தீர்மானத்தை சமூகத்தில் பார்ப்பன் அமல் படுத்த விடமாட்டன் என்பதினாலும்தான்.

பெரியார், தனித் தமிழ்நாடு கோரிக்கை பற்றி பேசினால் அதிலும் இதுதான் உள்ளடாக்கமாக இருக்கும். இந்தியா ஒழிஞ்சா பாப்பான் ஒழிவான். சூத்திரப்பட்டம், பஞ்சமன் என்கிற இழிவு ஒழியும் என்பார்.

இந்தியா-சீனா யுத்தத்தின் போது, சீனாவை ஆதரித்தார் பெரியார். அதற்கும் இதுவே உள்ளடக்கம். சீனாக்காரனுக்கு ஜாதிகிடையாது இல்ல… அவன் நம்பள பள்ளன் பறையன் சூத்திரன்னு நடத்தமாட்டான். ….. அவன் ஜெயிச்சு வந்து ஆளட்டும் என்றார்.

காங்கிரசை எதிர்த்ததற்கும் இதுவேதான் உள்ளடக்கம். பிறகு காமராஜருக்காக காங்கிரசை ஆதரித்தபோதும் இதுவேதான் உள்ளடக்கம்.

ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்கு இதுவல்ல உள்ளடக்கம். ‘ இத்தனை கோடி தமிழனுககு ஒரு நாடு இருக்கிறதா….. (இந்தியாவில எந்த மொழி பேசுறவன் தனியா நாடு வைச்சிருக்கான்?) முதலில் தமிழனுக்கு என்று ஒரு நாடு அமையட்டும். தமிழ்நாடு தனிநாடாக ஆகட்டும்… அதன்பிறகு இதைதப்பற்றி பேசுவோம்…   என்கிறார்கள்.

ஆனால் பெரியார், நீ எத பத்தி பேசுறதா இருந்தாலும் முதல்ல இதப் பத்திப் பேசு…என்றார். அதனால்தான் தமிழ்தேசியவாதிகள் பெரியார் மேல் கடுப்பாக இருக்கறார்கள். அதன் பொருட்டுத்தான் பெ. மணியரசன் பெரியாருக்கு மொழி குறித்து தெளிவில்லை என்று எழுதினார்.

அதனால்தான் பழ. நெடுமாறன்,    ஐந்தாண்டுகளுக்கு முன் பெங்களுரில் தமிழர் மாநாடு நடத்தியபோது, அதில் தமிழர் தலைவர்கள் என்று வரிசைபடுத்தி படம் திறந்ததில் பார்ப்பன ஜாதி உணர்வாளரான சுப்பிரமணிய பாரதி படம் திறந்தவர், தமிழர்களின் ஒப்பற்ற ஓரே தலைவர் தந்தை பெரியார் படத்தை திறந்து வைக்கவில்லை. மாநாட்டு பந்தலில் பெரியார் படத்துக்கு இடமும் ஒதுக்கவில்லை.

இது புரியாம நம்ம பெரியாரிஸ்டுங்க…தமிழ்தேசியவாதிகளுக்கு சப்போட்டா இருக்காங்க….தமிழ்தேசியவாதிகளும் வெட்கமில்லாமல், பெரியார் தொண்டர்கள் முதுகில் சவாரி செய்கிறார்கள்.

(20-07-2009 அன்று எழுதியது)


தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

pagangods

து ஒரு நகரம். அந்த நகரத்தின் சிறப்பே அந்த சிவன் கோயில்தான். அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். நகரின் பெரிய கோயில், பாடல் பெற்ற ஸ்தலம் என்றால், கர்ப்பகிரகத்திற்குள் நின்று கொண்டு பக்தர்களுக்கும் – கடவுளுக்கும் இடையில் தரகர்களாக இருக்கிற பார்ப்பனர்கள்தான் அந்தக் கோயிலிலும் கடவுளுக்கான தகவல் தொடர்பு கருவியாக இருந்தார்கள்.

பார்ப்பனருக்கு அடுத்த நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சைவப் பிள்ளைகள், நாட்டுக் கோட்டை செட்டியார்கள். உடையார்கள், முதலியார்கள் உட்பட இதர ஜாதி இந்துக்களான சூத்திரர்களும், அவர்களால் தீண்டப்படாதவர்களாக நடத்ப்படும் தலித் மக்களும் அருகருகே, நின்று உரசிக்கொண்டு சிவனை வழிபட்டு பிறகு கலைந்து, தங்கள் தங்கள் கிராமத்துக்குப் போக, பிதுங்கி வழியும் பேருந்தில் முண்டியடித்து ஏறி, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, தூங்கி விழுந்து ஊர் போய் சேர்ந்தார்கள்.

ஆம், பார்ப்பனர்களைத் தவிர வேறு ஜாதி-வேறுபாடுகள் அற்ற சமூகம்.

காட்சி மாறுகிறது உள்ளூர்த் திருவிழா, ஆய்வாளர்களின், அறிவாளிகளின், தமிழினவாதிகளின் வார்த்தையில் சொல்வதென்றால், சிறுதெய்வ வழிபாடு அல்லது தமிழ்த் தெய்வ வழிபாடு, தமிழனின் அடையாளம்.

ஊரே திருவிழா உற்சாகத்தில். ஆத்தா பல பேர் மீது இறங்குவதும், மலையேறுவதுமாக இருக்கிறாள். சாமி ஆடிக்கொண்டு இருக்கிறது அந்த ஊர். ‘சாமி’ வந்து ஆடும் அளவிற்கு ‘அருள்’ இல்லாதவர்கள், சாராயம் குடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஜாதி இந்துக்களான சூத்திரத் தமிழர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. வாய்க்கு வெளியே இரண்டு ஓரங்களிலும் பல்லை நீட்டியபடி, சீவி சிங்காரித்து ஊரைச் சுற்றி வருவதற்குத் தயாராக இருந்தாள் ஆத்தா. கையில் பறையை வைத்துக்கொண்டு ஆத்தாவின் வருகையை அறிவிப்பதற்காக பஞ்மத் தமிழர்கள், கோயிலில் இருந்து 30 அடி தள்ளி ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள்.

ஓர் ‘உயர்சாதி சூத்திர’னின் குரல் உரக்க,“டேய் நாய்களா, சாமி புறப்படத் தயாராயிடுச்சி, அங்க என்ன புடிங்கிக்கிட்டா இருக்கீங்க. அடிங்கடா மோளத்தை” என்று அதட்டியது. அதட்டல் கேட்டவுடன், பறையை அடிக்கத் தொடங்கினார்கள் பஞ்சமத் தமிழர்கள்.

“நிறுத்துங்கள்” என்ற கலகக் குரல் பறை சத்தத்தையும் தாண்டி இடியென இறங்கியது. கூட்டம் பேச்சிழந்தது. சாமியாடிக் கொண்டிருந்தவர்கள் கூட சட்டென்று நின்றார்கள். இம்முறை கற்பூரத்தை முழுங்காமலேயே ஆத்தா மலையேறி விட்டாள்.

‘நிறுத்துங்கள்’ என்ற அந்தக் கலகக் குரலுக்குச் சொந்தக்காரன் 30 வயது இளைஞன். இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தலித் குடியிருப்பிலிருந்து எழுதப் படிக்க கற்றுக் கொண்ட முதல் ஆள். பட்டதாரி இளைஞன். அவனைச் சுற்றி அய்ந்து இளைஞர்கள். தன் உறவினர்களின் சார்பாக, “இனி இவர்கள் பறையடிக்க நாங்கள் விட மாட்டோம்” என்றான் அந்த இளைஞன்.

“எங்க முன்னால கை நீட்டி சத்தமா பேசுற அளவுக்குத் திமிராப் போச்சா? ஏண்டா அடிக்க உடமாட்டிங்க?” என்றான் நகரத்து சிவன் கோயிலில் தலித்தை உரசிக் கொண்டு சாமி கும்பிட்ட ‘உயர் ஜாதிச் சூத்திரன்’

“அவுங்க பறையடிக்கணும்னா, எங்க தெருவழியா சாமி வரணும். ஆத்தாவை எங்க ஜனங்களும் கோயில் உள்ள போயி கும்பிடணும். அப்படியிருந்தா, ஆத்தா காதுகிழிய பக்கத்துல நின்னே பறையடிப்பாங்கடா”. பதில் ‘டா’ போட்டு கோபமானான் அந்த தலித் இளைஞன்.

அவ்வளவுதான், அந்த இளைஞன் உட்பட ஒட்டமொத்த தலித் மக்கள் மீதும் ஊரே வன்முறையில் இறங்கியது. தலித் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன.

இம்முறையும் சூத்திரர்கள் சார்பாக போலீஸ் வந்தது. வன்முறைகலவரம் என்று வார்த்தை மாற்றப்பட்டது. சூத்திரர்களோடு சேர்ந்து கொண்டு, கலவரக்காரர்கள் என்று அறிவித்து தலித் மக்களை வேட்டையாடியது போலீஸ்.

சூத்திரர்களால் தாக்கப்பட்டு இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமூகத்தில் படித்த ஒரே தலித் இளைஞனை போலீஸ் சுட்டுக் கொன்றது.

‘ஜாதிக் கலவரங்களைத் தூண்டிவிட்ட இளைஞன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பிஓட முயற்சிக்கும்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும் இது ஒரு அச்சுறுத்தலாக, பாடம் புகட்டப்பட்டது.

தலித் இளைஞர்கள் ஊரைவிட்டே ஓடினார்கள். ஊரின் எல்லையில் கையில் வீச்சரிவாளோடு நிற்கும் அய்யனார் சிலையும், ‘தன்னை வெட்டத்தான் நிற்கிறதோ’ என்கிற பய உணர்வோடே ஓடினார்கள்.

ஊருக்குள்ளே ‘ஆத்தா’ சிரிக்கிறாளா, உக்கிரமாக இருக்கிறாளா என்பது புரியாதபடி – பல்லை வெளியே நீட்டி தமிழனின் அடையாளங்களின் சாட்சியாக நின்றாள். பச்சைத் தமிழனின் தொன்ம அடையாளம், பறைத் தமிழனின் பிணத்தின் மீது கொடிகட்டிப் பறந்தது.

kaaval_theivam“பார்ப்பனக் கடவுளுக்கு எதிராக பார்ப்பனரல்லாத கடவுளை முன்னிறுத்துவது. இந்து மத எதிர்ப்புணர்வில் இது ஒரு நுட்பம். சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம். கலாச்சார அடையாளம்” என்கிற குழப்பம் புதிய சிந்தனை போல் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.

அப்படியா? இது புதிய சிந்தனையா? இந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகுதான் மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் இறங்கப் போகிறார்களா?

இதுவரை மக்கள் நாத்திகர்களாக இருந்தார்களா?

இல்லை, எந்த நேரமும் பார்ப்பனக் கோயிலின் படிக்கட்டுக்களிலேயே படுத்துக் கிடந்தார்களா?

நடுத்தர மக்களின் புதிய பழக்கங்களை, ஒட்டு மொத்த தமிழர்களின் ‘பழக்கம்’ என்ற முடிவுக்கு வந்ததினால் வந்த வினையல்லவா இது. உழைக்கும் மக்களின் இழிவுக்கும், சிந்தனையின் தேக்க நிலைக்கும் சிறு தெய்வங்களும் ஒரு காரணமல்லவா? தலித் மக்களின் மீதான வன்முறை நடந்தபோதெல்லாம், இந்த அய்யனாரும் – ஆத்தாளும் சாட்சிகள் அல்லவா? இத்தனை ஆண்டுகளாய் தன்னை வருத்தி, (வழிபாட்டு முறை) தன் தெய்வங்களை வழிபட்டவர்களின் உயர்வுக்காக, விடுதலைக்காக என்ன செய்தார்கள், இந்த ‘இஷ்ட தெய்வங்கள்?’

“இப்படி மொன்னையாக விஷயங்களை அணுகாதீர்கள்? அவர்களின் வழிபாட்டு முறையில் உள்ள கலாச்சாரத்தையும், கலை வடிவத்தையும் உயர்த்திப் பிடிப்பதால், அதைப் பார்ப்பனீயத்திற்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.”

குழந்தையை உயிரோடு குழியில் புதைப்பது, பெண்களை குப்புறப்படுக்க வைத்து ஆணி செறுப்பால் மிதிப்பது, மூளை கலங்கும் அளவிற்கு மண்டையில் தேங்காய் உடைப்பது, கத்தியால் கீறிக் கொள்வது, பேய் ஓட்டுகிறேன் என்று மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்துக் கொல்வது, நெருப்பு மிதிப்பது, அலகு குத்திக் கொள்வது என்று மக்களின் அறியாமையால் விளைந்த காட்டுமிராண்டித் தனங்களையா கலாச்சாரம் என்று உயர்த்திப் பிடிப்பது?

சமூகத்தைப் பின்நோக்கி நிலப்பிரபுத்துவத்திற்கு அழைத்துச் செல்வதா மாற்று அரசியல்? நடுத்தர வர்க்க குணாம்சத்தோடு இருக்கிற உங்களின் அறிவுஜீவித்தனத்திற்கு, பேராசிரியத் தனத்திற்கு, நகர் சார்ந்து வாழுகிற உங்கள் வாழ்க்கை முறைக்கு – மக்களின் இந்த அறியாமை, கலாச்சாரமாகத் தெரியும், கலைவடிவமாகத் தெரியும்.

இதனால் நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றதும், அதை ‘பாரம்பரிய கலை வடிவம்’ என்ற பெயர் வைத்து நீங்கள் கலைஞர்களாக, கவிஞர்களாக பெருமையானதைத் தவிர இந்த மக்களுக்கு மயிரளவுகூட பயன் இல்லை என்பதுதானே உண்மை.

வரலாற்று ஆய்வாளர்களே! வரலாற்றைப் பின்னோக்கி இழுக்காதீர்கள்.

இன்னும் சில கேள்விகள்

ஜாதிக்கொரு தெய்வம். ஒவ்வொரு ஜாதிக்கும் சமூகத்தில் என்ன மரியாதை, இழிவு இருக்கிறதோ அதுவே அவர்களின் தெய்வங்களுக்கும்.

பார்ப்பனர்கள்-பிற்படுத்தப்பட்டவர்களின், தலித்மக்களின்  தெய்வங்களை வணங்குவதில்லை. கருவறைக்குள் இருவரையும் அனுமதிப்பதில்லை.

பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்களின் தெய்வங்களை வணங்குவதில்லை. அவர்களின் கடவுளை விடவும், ‘நாங்கள் உயர்ந்தவர்கள்’ என்பதே ஜாதி இந்துக்களின் மனநிலை. கடவுளுக்கும் தீண்டாமை உண்டு.

தலித், பிற்படுத்தப்பட்டவர்களின் கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை. கடவுளுக்கும் தீட்டு ஒட்டிக்கொள்ளும். இந்த அழுகிய அமைப்போடே தொடர்ந்து வழிபடுவதும், வழிபடச் சொல்வதும்தான்-பார்ப்பனீயத்திற்கு மாற்று அரசியலா?

‘இந்தக் கலாச்சாரம், கலையெல்லாம் உயர்வானதாக இருக்கட்டும். அதைவிட எங்களுக்கு இழிவிலிருந்து வெளியேற்றுவதுதான் முக்கியம்’ என்று மதம் மாறிப் போன இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை- ‘இந்திய கலாச்சாரத்தில் இருந்து வெளியேறியவர்கள், அவர்களுக்கு இந்திய உணர்வில்லை’ என்ற சொல்லுகிற ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் இருந்து நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?

குழந்தையைப் புதைத்தல், பெண்களை செறுப்பு போட்டு மிதித்தல் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அது தமிழ்க் கலாச்சார அடையாளம் என்றால்-நெருப்பு மிதித்து, மொட்டையடித்து, முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி கலாச்சாரத்தைக் காப்பாற்ற நீங்கள் தாயரா? (பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழனவாதிகள்)

***

என்ன செய்வது?

அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் உரிமைகளாய் உயர்ந்து நிற்பது. சமஸ்கிருதமே வழபாட்டு மொழி என்கிற இடங்களில் தமிழ்தான் என்று எழுவது. கர்ப்பக்கிரகத்தில் நுழையக்கூடாது என்பதை எதிர்த்து நுழைவேன் என்று துணிவது.

சிறு தெய்வங்களின் வழிபாட்டு முறையிலேயே பார்ப்பனத் தெய்வங்களை வழிபட முயற்சிப்பது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, தில்லை நடராஜன், சிறீரங்கம் ரங்கனாதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவண்ணாமலை அருணாசலேசுவரன் போன்ற கோயில்களில் பொங்கல் வைத்து, கடா வெட்டி, உறுமி பறையடித்து, சாமியாடி வழிபடுவோம். இதுதான் எங்கள் வழிபாட்டு முறை என்று முனைவது. பிறப்டுத்தப்பட்டவர்களின் கோயிலில், தலித் மக்கள் நுழைவதை தீவிரத்தன்மையோடு செயல்படுத்துவது.

ஆம், செய்ய வேண்டியது மாற்று அரசியல் அல்ல. எதிர்ப்பு அரசியல். கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்.

சக்கிலியர், பறையர், பள்ளர் என்று உழைப்பை மட்டுமே உடைமையாகக் கொண்ட மக்கள், அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் உரிமைகளாக உயர்ந்து நிற்பார்களேயானால், இந்து மதம் நிலைகுலைந்து போகும். தனது பழக்க வழக்கங்களைத் தொன்மையான கலாச்சார வழிபாட்டு முறையைகளைக் கூட கைவிட்டுவிடும். கண்டதேவியில் தலித் மக்கள், “இவ்வளவு பெரிய தேரை நீங்கள் மட்டும் இழுத்து கஷ்டப்படுகிறீர்களே, நாக்களும் ஒரு கை பிடிக்கிறோம்” என்று உதவிக்குப் போனபோதுதான், தேர் இழுக்கும் தனது புனித கலாச்சாரத்தையே தியாகம் செய்தார்கள் ஜாதி இந்துக்கள்.

கூத்திரம்பாக்கத்தில், “இவ்வளவு சக்தி வாய்ந்ததா உங்கள் தெய்வம் நாங்களும் வந்து கும்பிடுகிறோம்” என்று பக்தியோடு தலித் மக்கள் நுழைய முயன்றபோதுதான், கோயிலின் கதவுகள் மூடிக் கொண்டதும், பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வழிபாட்டையே நிறித்துக்கொண்டதும், சங்கராச்சாரி பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக வந்து, தலித் மக்களிடம் “உங்களுக்குத் தனிக்கோயில் கட்டித் தருகிறோம்” என்று அநியாயம் பேசியதையும் மறந்துவிட முடியாது.

“இந்து தத்துவம்-சிறு தெய்வம்-பெரு தெய்வம் எல்லாம் தலித் மக்களுக்கு எதிரானது. அதனால், ஒட்டு மொத்தமாக மாறுங்கள் பவுத்தம்” என்றார் அண்ணல் அம்பேத்கர்.

‘கடவுள் இல்லை’ என்று பிரச்சாரம் செய்த தந்தை பெரியார்தான், “இழிவு நீங்க வேண்டுமானால், இந்து மதத்திலிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள். இஸ்லாத்திற்கு மாறுங்கள்” என்றார். சிறு தெய்வ வழிபாட்டு முறையைதான் ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று கண்டித்தார்.

மற்றபடி, பெருந்தெய்வம் x சிறுதெய்வம், அடிக்கட்டுமானம் x மேல் கட்டுமானம். மேல் நிலையாக்கம் x கீழ் நிலையாக்கம் என்று குழப்பி, தமிழ்க் கடவுள் முருகனுக்கு மொட்டை போட்டு அலகு குத்தி அரோகரா கூப்பாடு போட்டு, உடுக்கை சிலம்பு வைத்துப் பாட்டுப்பாடி, குழந்தையை மண்ணில் புதைத்து, கூழாங்கல்லை நட்டுவைத்து கும்மியடியுங்கள் என்று சொல்லவில்லை.

ஆம், சிறு தெய்வ வழிபாட்டு முறையில் நீங்கள் தமிழர்களை ஒன்று சேர்க்கலாம். ஆனால், அது இந்துமத வெறியர்களுக்கே லாபமாக முடியும். வழிபாட்டு முறையில், பக்தியோடு மக்களிடம் அய்க்கியமாவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கே உண்டு.

அதனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள் அறிஞர்களே!

ஆகவே, கவிஞர்களே, கலைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, ஆய்வாளர்களே, பேராசிரியப் பெருமக்களே, உழைக்கும் மக்களுக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, புத்தம் புதிய தத்துவங்களோடு அவர்கள் வாழ்க்கை முறையை விளக்குபவர்களே, விடுமுறை நாட்களின் வீரர்களே!

உங்களிடம் பணிவோடு சொல்லிக் கொள்வது, உழைக்கும் தலித் மக்களுக்கு வேண்டியது அவர்களின் நேற்றைய இன்றைய வாழ்க்கை குறித்த விளக்கங்கள் அல்ல. விடுதலை.

*

ஜாதி, இந்து மத சார்ப்பு கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல; தன்னை பெரியாரிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்து மத சார்ப்பு கொண்டவர்களைப்போலவே சிறுதெய்வ வழிபாட்டு முறையை எளிய தமிழர்களின் பண்பாடாக அடையாளப்படுத்த முயற்சித்த பேராசிரியர் தொ. பரமசிவம் போன்றவர்களின் செயலைக் கண்டித்தும் தலித் முரசு, ஏப்ரல் 2003 இதழக்காக எழுதியது.

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?


தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2009/07/photo06l.jpg?w=474

சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமி சிதம்பரம் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்களால் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறார்.  தீட்சதர்களால் அவர் தாக்கப்படுவதற்கான சூழல் இருக்கிறது என்று      முன்பே       (சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்) (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…) எழுதியிருந்தோம்.

நாம் எழுதிய ஒரு மாதத்திற்குள் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். ‘தமிழன் ஆண்ட பரம்பரை, வீரபரம்பரை, தமிழன் மீது கை வைத்தால் நடப்பதே வேறு. ரத்த ஆறு ஓடும்.’ என்ற தமிழனவாதிகளின் அனல் பறக்கும் வசனங்களை, தீட்சதப் பார்ப்பனர்கள் ஏதோ காமெடி வசனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சைவ சமயத்தில் வீர சைவர்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வீரமாக இருந்தார்கள் என்று அறிவதில் நாம் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். இப்போதும் அவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை?

‘சைவ மட ஆதினமாக வருவதற்கு பார்ப்பனர்களை உள்ள விடமாட்டோம்’ என்று மார் தட்டுகிறார்கள் முதலியார்கள்.

சிதம்ரபம் கோயிலில் ஒரு சிவனடியாரை பார்ப்பனர்கள் தாக்கியிருக்கிறார்கள். எங்கே போய் மார்அடித்துக் கொண்டிருக்கிறார்கள், முதலியார்கள் அல்லது ஆதினங்கள் அல்லது பிள்ளைமார்கள்.

‘வன்னியருன்னா நெருப்பு’ என்று தாழ்த்தப்பட்டவர்களிடம் அனல் கக்குகிற வீர வன்னியர்கள், தங்கள் சமூதாயத்தைச் சேர்ந்த ஒரு சிவனடியார், தீட்சிதப் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் என்றவுடன், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்னிய வீரம் பொங்க மறுக்குதே ஏன்?

(சும்மா இருங்க. இவுங்களயும் கிளப்பி விடாதீங்க… இவுங்க எல்லாம் ஒன்னு சேந்து வெளிப்படையா வந்தா அதுக்கப்புறம் தீட்சதர்களுககு ஆதரவு பெருகிகிட்டே இருக்கும். ஏற்கனவே ஒரு தமிழின அமைப்பு சிதம்பரத்துல தீட்சதர்களோடு இணைந்து ‘ஒன்னா சேந்து சுமுகமா நடராஜர் கோயில்ல புழங்கலாம்…’ என்று திட்டம் வைத்து கருத்தரங்கம் எல்லாம் நடத்தி இருக்காங்க… அவுங்க போதாதுன்னு… இவுங்க வேறவா?

ஏதோ கோயிலுககுப் போனமா சுண்டலா சாப்பிட்டமா என்று இவர்கள் இருப்பதினால்தான், ஓரளவுக்கு தீட்சிதர்களை எதிர்த்து போராட முடியுது. இவுங்க களத்துல இறங்குனாங்க… ஆபத்து தீட்சிதர்களுக்கு இல்ல… நமக்குத்தான்.   – யாராவது இப்படி ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.)

‘எந்த ஜாதிக்காரராக இருந்தாலும், சுயஜாதி அபிமானியாக  இருந்தால், அவர் தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்களை கீழானவர்களாகவும், தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களை மேலானவர்களாகவும் நிச்சயம் நினைப்பார். இதுதான் ஜாதி நிலையின் உளவியலும் செயல்பாடும்.’ என்று     தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல் என்ற கட்டுரையில் எழுதியிருந்தேன். அதை இதோடு பொறுத்திப் பார்த்து புரிந்து கொள்ளவும்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணைகிற மையப்புள்ளி ஒன்று இருக்கிறது’’ என்கிறார்களே, அது என்ன மையப்புள்ளி?

-க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

ஜாதி. முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாதவர்கள் தங்களை நேரடியாக ஜாதி உணர்வாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்’ ன்னு பேசுற இந்த ‘நம்மாளு’ ங்கதான் ஜாதிக்கு நிறைய ரகசியப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அதுல ஒண்ணுதான் இந்த மையப்புள்ளி.

இந்த உணர்வு பார்ப்பன அல்லாத ‘முற்போக்கனவர்கள்’ மத்தியிலும் அதிகமாக இருக்கு. பார்ப்பனர்களை குறை சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பதே நமது கருத்து. இந்த விசயத்துல இவுங்கள விடவும் ரஜினி ரசிகர்கள் முற்போக்கானவர்கள்தான்.

இந்த மையப்புள்ளியைப் பத்தி ஒரு உதாரணத்தின் மூலமாகவே பார்க்கலாம்.

சுஜாதா, மதன், ஞாநி இந்த மூம்மூர்த்திகளில் ஞாநிதான் ‘முற்போக்கானவர்’ என்கிற தோற்றம் இருக்கிறதல்லவா, அது மாயத் தோற்றம். உண்மையில் இந்த மூவரையும் இணைக்கிற மையப்புள்ளி ஒன்றல்ல, இரண்டு இருக்கிறது. 1. ஆனந்த விகடன் 2. கமல்ஹாசன்.

உலகத்தின் எந்த முற்போக்கு சக்திகளையும் கடுமையாக விமர்சிக்கிற இந்த மாமேதைகள் இந்த இரு புள்ளிகளிடம் மட்டும் சமரசம் அல்ல, சரணாகதியாய் இருக்கிறார்கள்.

ரஜினியும் கமலும் இணைந்து நடித்தக் காலத்தில் ஒரு வாரப் பத்திரிகையில், ‘எழுத்தாளர்’ சுஜாதா ‘கமல்ஹாசனை போன்ற அழகான நடிகர்கள் பக்கத்தில் இப்படி அசிங்கமான நடிகர்’ என்று ரஜினியை குறிப்பிட்டு எழுதியதாக நண்பர் தீஸ்மாஸ் ஞாபகப்படுத்தினார்.

அதே போல் ஞாநியின் – ‘ரஜினி, டாக்டர். கிருஷ்ணசாமி, திருமாவளவன் எதிர்ப்பை’ கமல்ஹாசனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ‘சண்டியர்’ படத்தின் தலைப்பை மாற்ற டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்த்த போதுதான் அவரை கண்டித்திருக்கிறார் ஞாநி. ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் பெயரை தமிழில் வைக்க சொன்னபோதுதான் அவர் திருமாவளவனை கண்டித்திருக்கிறார்.

ஞாநிக்கு டாக்டர் அம்பேத்கர் என்று ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தது தெரியுமா என்பது கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. காந்தியவாதியின் தொனியில் காந்தியை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி எதவாது குறிப்பிட்டு இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

ஞாநியின் ‘குமுதம் எதிர்ப்பை’ ஆனந்த விகடனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த விடகன் வேறு, இந்த மூவரும் வேறு வேறு வேறு அல்ல. ஆனந்த விகடனை கழித்து விட்டு இந்த மூவரையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இந்த மூவரின் உருவம் நம் கண்களுக்கு புலப்படாமலே போகும்.

‘’அகம் வேறு, பிரமம் வேறு அல்ல. அகம்தான் பிரமம், பிரமம்தான் அகம்.’ ’கமல்-ஆனந்த விகடன்-சுஜாதா-மதன்-ஞானி ’ இந்த அய்ந்து புள்ளிகளையும் இணைத்தால்…..

பொதுவாக புள்ளிகளை இணைத்தால் கோலம் வரும். ஆனால் இந்தப் புள்ளிகளை இணைத்தால் ‘நூல்’ வரும். இந்த நூல் பலபேருக்கு உடலில் இருக்கும். சில பேருக்கு மனதில் இருக்கும். இதுதான் ஆதிசங்கரர் தனது அத்துவைதைதத்தில் சொல்லியிருக்கிறாரோ?

‘நீங்கள் பாம்பாக பார்க்கும் போது கயிறு. கயிறு என்று நினைத்துப் பார்த்தால் பாம்பு’ என்று.

சமூக விழப்புணர்வு மாத இதழ் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் நூலில் இருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 33 7384

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

கருத்தரங்கம்
.
டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

இடம்: எம்.ஆர்.ஆப் தொழிலாளர் சங்க அரங்கம்

திருவொற்றியூர் மார்கெட் அருகில்

சென்னை-19

நாள்: 12-7-2009

ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி

கருத்தரங்க உரை:     வே. மதிமாறன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:


அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்

பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்….

http://cpmtataistfascist.files.wordpress.com/2009/01/periyar.jpg?w=474

‘பழந்தமிழன்’ பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் திண்ணைப் பேச்சு வீரர்களை, தந்தை பெரியார் தடியாலேயே தலையில் அடிக்கிறார்.

ழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆளைக் காணோம். வீணாக அந்தப் பெயரின் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ, தங்கள் எண்ணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவோ அது பயன்படுகிறது.

பழந்தமிழன் யாரயிருந்தால் எனக்கு என்ன – உங்களுக்குத்தான் என்ன காரியம் ஆகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாய் இருந்தாலும் இங்கு, இன்று நமக்கு அதனால் என்ன லாபம் என்பதுதான் கேள்வி. பழந்தமிழர் நிலையைப் பற்றி பேசுபவர்கள் பகுத்தறிவாதிகளானால், நடுநிலைமைக்காரர்களானால் – அவர்களை ஒன்று கேட்கிறேன்.

அதவாது, காட்டுமிராண்டி வாழ்க்கைக் கால மனிதனைவிட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன் சிறந்தவன் அல்லவா என்பதும்; அது போலவே 4000 , 5000 வருஷ காலத்திற்கு முன் இருந்த மனிதனை விட, இன்று 20 ஆவது நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவமும், அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா அல்லவா என்பதோடு, அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வைவிட, எண்ணிய எண்ணத்தைவிட வேறான எண்ணங்கள் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா இல்லையா என்பதுமே ஆகும்.

இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்குப் பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாகக் கேட்கிறேன்.

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்தச் சீர்த்திருத்த்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, பகுத்தறிவுவாதியின் கடமையாகி விட்டது.

இன்றும் நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவுப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்குக் காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை என்பன போன்ற பழமையேயாகும்.

பழந்தமிழர் பேச்சைப்பேசி இனி ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கிய கடமையாகும்.

தந்தை பெரியார்

குடி அரசு 10-1-1948

தலித் முரசில் நான் எழுதியஆண்ட பரம்பரைக் கனவு-தொடரும் ஜாதியின் நிழல் என்ற கட்டுரைக்கு பலம் சேர்ப்பதற்காக அந்தக் கட்டுரையின் இடையில் கட்டம் கட்டி பெரியாரின் இந்தக் கட்டுரையை தேர்தெடுத்து, தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் வெளியிட்டு இருந்தார்.

கட்டுரைக்குள் தரப்பட்டு இருக்கிற அழுத்தம் ( Bold ) என்னால் தரப்பட்டது. பெரியாரின் கட்டுரைக்குள் இருந்த வாசகத்தை எடுத்து தலைப்பாக நானே வைத்தேன், இந்தப் பதிவுக்காக.