தமிழ் தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது உங்களுக்கு என்ன அவ்வளவு வெறுப்பு? ஏதாவது அவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?

மா. தமிழ்வாணன்.

ழம் பெருமை பேசுவதின் மூலம்தான் தமிழ்த் தேசியத்தை பரிந்துரைக்கிறார்கள். இந்தியத் தேசியத்திற்குள் எந்த மாநில மக்களும் நலமாக இல்லை என்பதை சொல்வதற்கு பதில், அல்லது இந்திய தேசியத்தை விமர்சிப்பதை விட, மற்ற மாநில மக்களை எதிரிகளாக சித்தரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். சரியான செயல் திட்டத்தோடு, கொள்கை விளக்கங்களை தருவதில்லை. தனிநாடுக்கான சமீபத்திய தேவை, அதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விளக்குவதில்லை.

‘தமிழன் கடாரம் கொண்டான். கொடாரம் கொண்டான்… ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன் இன்று நாடெற்று தவிக்கிறான்…’ என்பது போன்ற சென்டிமென்ட்டான, உணர்ச்சிகரமான வசனங்கள்தான் அதிகம் இடம் பெறுகிறன. அரசியல் ரீதியான அனுகுமுறை மிக குறைவாக இருக்கிறது.

ராஜராஜ சோழன் போன்ற மக்கள் வீரோதியை, தேவதாசி முறையை கொண்டு வந்து பெண்களை இழிவு படுத்தியவனை,  வட இந்தியப் பார்ப்பனர்களை தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கி, பார்ப்பனியத்தை  வலுப்பெறுச்செய்தவனை, பல புத்தக்கோயில்களை இடித்தவனை, சைவ சமயத்திற்கு விளக்குப் பிடித்தவனை ‘தமிழ் மன்னர்களின் தலைசிறந்தவன், இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன்’ என்று கூச்சமில்லாமல் பெருமை கொள்கிறார்கள். இதில் பல ஜாதிக்காரர்கள் இவனை தங்கள் ஜாதிக்காரன் என்று பெருமை பொங்க உரிமை கொண்டாடுகிறார்கள். இதில் சில அறிவாளிகளும் அடக்கம்.

மற்ற நாட்டுக்காரன் தமிழ்நாட்டை கைப்பாற்றி ஆண்டால் அது ஆதிக்கம். தமிழ் மன்னன் மற்ற நாட்டை கைப்பற்றி ஆண்டால் அது வீரமா? சேட்டு இங்கு வந்து வட்டிக்கடை வைத்து தமிழர்களை கொள்ளையடிக்கிறான். அது சுரண்டல். சரிதான்.

ஆனால் செட்டியார் பர்மாவுக்கு போய் பரிதாபத்திற்குரிய அந்த மக்களை வட்டிக் கடை வைத்துக் கொள்ளையடித்து, அந்த நாட்டு இயற்கை வளங்களை சூறையாடி, ‘பர்மா தேக்குல கட்டுன வீடு’ என்று பகட்டா வாழ்ந்தால், அது திரைக்கடல் ஓடி திரவியம் தேடியதா?

ஆதிக்கம், சுரண்டல் இவைகைளை சேட்டு பண்ணா என்ன? செட்டியார் பண்ணா என்ன? எல்லா பயலும் ஒணணுதான்.

தமிழன் என்ற பொது அடையாளத்தில் சுற்றி வந்தாலும் – தமிழ், தமிழன், தனிநாடு என்று பேசுபவர்களில் எனக்கு தெரிந்த பல பேர் ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள். அல்லது ஜாதி வெறி நடவடிக்கைகளை, தாழ்த்தப்பட்டமக்கள் மீது நடக்கிற வன்கொடுமைகளை கண்டிக்க மறுக்கிறார்கள்.

எவ்வளவு சத்தமாக பேசினாலும் கடைசியில் இவர்கள் சரணாகதி அடைவது பார்ப்பனியத்திடம்தான். பார்ப்பனியத்தின் நுட்பமான, வலுவான சுயஜாதி அடையாளத்தில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். ‘அந்த ஜாதிக்காரன் தமிழன் அல்ல. தெலுங்கன். தங்கள் ஜாதிதான் மூத்தக்குடி. அந்தக் காலத்தில் நாடாண்டது எங்கள் ஜாதிதான்.’ என்று பெருச்சாளியாய் வெளியே வருகிறார்கள்.

இதில் ஆதிக்கஜாதி வெறியர்களில் இருந்து, தாழ்த்தப்பட்ட ஜாதி உணர்வாளர்கள் வரை இப்படித்தான் இருக்கிறார்கள். இப்படி பேசுகிறவர்கள் கடைசியாக தமிழ்நாட்டின் ஒப்பற்ற தனிபெரும் தலைவரான, தமிழர்களின் சுயமரியாதைக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்துகொண்ட மாபெரும் சிந்தனையாளரான தந்தை பெரியார் மீது அவதூறு சுமத்தி, அவரை தமிழ், தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்திரிக்கிறார்கள்.

இன்னும் சிலர், பெரியார் இயக்க தொண்டர்கள் மீது சவாரி செய்து கொண்டிருப்பதால், நேரடியாக பெரியாரை பற்றி விமர்சிக்காமல் தந்திரமாக, ‘திராவிட இயக்கம் இந்த நாட்டை கெடுத்துவிட்டது. திராவிடன் என்று சொல்வது மோசடியானது’ என்று சுற்றி வளைத்து பெரியாரை சீண்டுகிறார்கள்.

இப்படி பெரியாரை  அவதூறு செய்கிறவர்கள் அவருக்கு மாற்றாக யாரை முன் நிறுத்துகிறார்கள் என்று பார்த்தால், தங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவரை மாபெரும் தலைவராக, பெரியாருக்கு மாற்றாக சொல்கிறார்கள். ‘அவரை பெரியார் இருட்டடிப்பு செய்து விட்டார். அவருடைய தத்துவங்களை திருடிவிட்டார்’ என்றும் பழி சுத்துகிறார்கள்.

‘தமிழ், தமிழன், தொல்குடி, பெருங்குடி’ என்று பேசினாலும், இவர்களின் உள்ளுணர்வு ஜாதி பாசத்தில்தான் இருக்கிறது. இவர்களின் அரசியல் நிலைபாட்டை தீர்மானிப்பது, அவர்களின் சுயஜாதி வெறிதான். அதுதான் பார்ப்பனியம். இந்த உணர்வுதான் பார்ப்பனியத்தை வாழ வைக்கிறது.

ஒவ்வொரு ஜாதிக்காரருக்கும் இந்த சுயஜாதி பற்று இருக்கும் வரை, பார்ப்பனியத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அசைக்க முடியாது. 3 சதவீதம் மட்டும் இருக்கும் பார்ப்பனர்களால் மட்டும் எப்படி பார்ப்பனியத்தை இத்தனை ஆண்டுகள் உயிர்ப்போடு வாழ வைக்க முடியும்? அதுக்குத்தான் இருக்கிறதே பார்ப்பனரல்லாதவர்களிடம் சுயஜாதி பாசம்.

*

02-07-2009 அன்று எழுதியது.

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க