தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

https://i0.wp.com/piccat.com/pictures/1/sleeping_kitty.jpg?w=474

மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிற தமிழர்களின் மேல் அக்கறை கொண்டு, அவர்களை மேன்மையுறச் செய்ய, தமிழர்களை எழுச்சி பெறச் செய்ய, தமிழ் அறிஞர்கள் அல்லது தமிழ் இலக்கிய வழி வரலாற்று அறிஞர்கள், கால எந்திரத்தில் தமிழர்களை ஏற்றி – ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கும் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

‘இப்போது நீங்கள் மன்னராட்சிக் காலத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதோ தெரிகிறதே பிரம்மாண்டமான மாளிகை, அது நீங்கள் கட்டியதுதான். அதோ அந்த மாளிகைக்குள் ஒருவர் கம்பீரமாகச் செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா? அவர்தான் மன்னர். அந்த மன்னர் யார் என்று அடையாளம் தெரிகிறதா? நன்றாக உற்றுப் பாருங்கள். நீங்கள்தான் அது. இப்படி நாட்டையே கட்டி ஆண்ட நீங்கள்தான், இந்த நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறீர்கள்’ என்று கால எந்திரத்தை இயக்கும் அறிஞர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

இந்த கால எந்திர வண்டி, ஒரு தமிழ் வண்டியாக மட்டும் இல்லாமல், ஜாதி மாநாட்டிற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் லாரி போலும் செயல்படுகிறது.

இன்று, ஜாதி சங்கத் தலைவர்களிலிருந்து, ‘ஜாதிக்கு அப்பாற்பட்டது எங்கள் கட்சி’ என்று சொல்கிறவர்கள் வரை, ‘நாங்கள்தான் இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள்’ என்று சொல்கிறார்கள்.

வெறுமனே சுயஜாதி, உணர்வாளர்கள் நிலையில் இருந்து மட்டுமே பிரச்சனைகளை அணுகுகிற, ‘நாங்கள் தான் மூவேந்தர்கள்’ என்று பெருமை பேசுகிற ஜாதிக்காரர்கள் மாதிரியே, வரலாற்று ஆய்வாளர்களாக அவதரிக்கிற அறிஞர்களும் கடைசியில் சுயஜாதிப் பிரியகளாகச் சுருங்கிப் போகிறார்கள்.

ஜாதி உணர்வாளராக இருக்கிற எந்த ஜாதிக்காரரும், தன் நெருங்கிய நண்பராக இருக்க அல்லது திருமண சம்பந்தம் செய்து கொள்ள தன் ஜாதிக்காரராக மட்டும் இருந்தால் போதாது, தன்னைப் போல் வசதியுள்ளவராக, படித்தவராக அல்லது நடுத்தர வர்க்கத்தினராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பது போலவே, உழைக்கும் மக்களாக இருந்தோம் என்று சொல்வதை விட, மன்னராக இருந்தோம், மேட்டுக்குடியாக இருந்தோம் என்று சொல்வதிலும் ஜாதிய உணர்வோடு வர்க்க உணர்வும் சேர்ந்தே இருக்கிறது.

இந்து மத ஜாதிய எதிர்ப்பாளராக அம்பேத்கரிய, பெரியாரிய தத்துவப் பின்னணியில் செயல்படுகிற / விரும்புகிற இளைஞர்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை, இந்த மன்னர் சிந்தனை ஏற்படுத்துகிறது. அவர்களை சிந்தனை ரீதியாகப் பின்னோக்கி இழுக்கிறது. ஏன் இந்த மன்னர் மோகம் அல்லது மேட்டுக்குடி மோகம்? இதனால் இந்த மக்களுக்குச் சாதகமாக என்ன நிகழப் போகிறது? இப்படியாக இந்த மக்களின் எதிரிகள் என்று யாரைக் காட்டப் போகிறார்கள்?

‘‘சேரன், சோழன், பாண்டியன் என்று வாழ்ந்த தமிழன்வீரப்பரம்பரைக்குச் சொந்தக்காரன்’’

இது, ஜாதிக்குள்ளும், ஜாதியைக் கடந்தும், எல்லோர் வாயிலும் வரும் வசனம்.

பல்லவன் முதல் வெள்ளையன் வரை பலபேர் ஆண்டிருக்கிறான் தமிழனை. அப்புறம் எங்கிருந்து வீரப் பரம்பரை?

ஒரு மார்கழி மாதக் குளிர் இரவில், கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை, குழந்தைகளோடு கொளுத்திக் குளிர் காய்ந்தார்கள் தமிழர்கள்.

குளப்பாடி பொதுக்குளத்தில் குளித்த தாழ்த்தப்பட்ட தமிழ் குழந்தைகளை மின்சாரம் பாய்ச்சிக் கொன்றார்கள் தமிழர்கள்.

மேலளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட, ஏழு தாழ்த்தப் பட்டத் தமிழர்களின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள் தமிழர்கள்.

திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை பீ தின்ன வைத்தார்கள் பச்சைத் தமிழர்கள்.

ஆம், சேர, சோழ, பாண்டியன் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக தமிழர்களின் வீரம், இப்படித்தான் அறியப்பட்டிருக்கிறது.

இதுதான் வீரப்பரம்பரையா?

‘‘நம் முன்னோர்களான மூவேந்தர்கள் காலம் தொட்டு தமிழர்களுக்கென்று தனி கலாச்சாரம் இருக்கிறது’’

இந்த வசனமும் ஜாதி மதத்திற்குள் புகுந்தும் தாண்டியும் கேட்கிறது.

கல்யாணம் முதல் கருமாதி வரை பார்ப்பன மயமாகிக் கிடக்கிறது.

ஜாதிக்கொரு பழக்கம், ஜாதிக்கொரு கடவுள். அதற்குப் பெயர் சிறு தெய்வம்.

தமிழர்களின் பெரும்பகுதியை ஒதுக்கி-பள்ளர், பறையர், சக்கிலியராக்கி, ‘தொட்டால் பார்த்தால் தீட்டு’ என்று அவமானப்படுத்துவது.

ஊருக்கு வெளியே சேரி என்று ஒதுக்கி வைப்பது.

சைவம் தழைத்தோங்கிய மூவேந்தர் காலம் முதல் இன்று வரை இந்த ‘ஆச்சாரமே’ கலாச்சாரமாக அறியப்பட்டிருக்கிறது.

இப்படி மன்னர் பெருமை பேசுவது, தமிழ்ப் பெருமை என்பதாக ஆரம்பித்து, பிறகு அது அவர்கள் திட்டமிட்டபடியே சரியாக ஜாதிப் பெருமையில் வந்து முடிகிறது.

ஆம், தமிழ் மக்களின் தொன்மப் பெருமை என்று ஆரம்பித்து, அதற்கு சரியான ஆதாரம் கிடைக்காததால், யூகித்து, யூகித்து கடைசியில் மக்களின் பெருமை எல்லாம் மதப் பெருமை அல்லது சைவப் பெருமை என்று வந்து, ‘சிவனும், முருகனும், திருமாலும் தமிழ் கடவுளே’ என்று உரிமை கொண்டாடி கடைசியில், ‘மன்னன் பெருமையே மக்கள் பெருமை’. ‘மன்னனின் சீரும் சிறப்புமே மக்களின் சீரும் சிறப்பும். அந்த மன்னனே மக்கள்’ என்று முடிவு செய்து, ‘மன்னனாக இருந்த மக்கள் எந்த மக்கள் தெரியுமா?’ அது எங்கள் ஜாதி மக்கள் என்று, ஆய்வு செய்தவர் என்ன ஜாதியோ, அந்த ஜாதியை சொல்லித் தீர்ப்பளிப்பது.

பார்ப்பனர், செட்டியார், ரெட்டியார், உடையார், பிள்ளைமார், முதலியார் இவர்கள் பெரும்பாலும் தங்களை மன்னர் பரம்பரை (ஆண்ட பரம்பரை) என்று சொல்லிக் கொள்வதில்லை.

ஏனென்றால், இவர்களுக்குக் கீழ், ஜாதிப்படி நிலையில் பல ஜாதிகள் இருப்பதே அவர்களுக்கும மரியாதைக்குரிய விஷயமாகப் படுகிறது.

பிற்படுத்தப்பட்ட ஜாதிக்குள் மன்னர் பெருமையைப் பேசுபவர்கள் பெரும்பாலும் – வன்னியர், நாடார், தேவர் சமூகத்தவரே.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதி இந்துக்களுக்கு முன்பு தன்னை மன்னர் பரம்பரை என்பதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னால் தன் ஜாதிப் பெருமை பேசுவதும்தான் இவர்கள் வழக்கம்.

அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களிலும், மன்னர் பெருமை பேசுகிற மனோபாவம் எழுந்திருக்கிறது.

இந்த மனோபாவம், வெறுமனே ஜாதி உணர்வாளர்கள் மத்தியில் மட்டுமில்லை, ‘ஜாதி வேறுபாடுகளைக் களைய வேண்டும்’ என்று சொல்பவர்கள் மத்தியிலும் இருப்பதுதான் வேதனைக்குரியது.

இந்தத் தீவிரமான சுயஜாதி அப்பிராயம் என்பது பார்ப்பனீயமே. பார்ப்பனீய ஆதரவே.

எந்த ஜாதிக்காரராக இருந்தாலும், சுயஜாதி அபிமானியாக ஒருவர் இருந்தால், அவர் தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்களை கீழானவர்களாகவும், தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களை மேலானவர்களாகவும் நிச்சயம் நினைப்பார். இதுதான் ஜாதி நிலையின் உளவியலும் செயல்பாடும்.

‘ஜாதி பிறப்பால் உள்ளது. அதன் இழிவும் பிறப்பாலே தீர்மானமானது ’ என்பதே பார்ப்பனீயம்.

‘ஜாதிகள் ஒழிய வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கும், எப்படி இதுவே கொள்கையாக இருக்க முடியும்?

சமூக நீதி என்பது மநுநீதிக்கு எதிரானது அல்லது மநுநீதியை தலை கீழாக மாற்றுவது, இதற்குள் சுயஜாதி உணர்வுக்கு இடம் ஏது?

(பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி, புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மநு ஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மநு, சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ அந்த இடத்தைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தார்கள். ஒருவர் பார்ப்பனன்  என்பதற்காகவே மநு அவனுக்குச் சலுக்கைகள் அளிக்கவில்லையா? சூத்திரர்கள் உரிமைகள் பெறத் தகுதி பெற்றிருந்தும் மநு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால், அதைப் பற்றி குறை கூற முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், இந்த விதிக்கு உதாரணம் இல்லாமல் இல்லை.

மது ஸ்மிருத்திதான் அந்த உதாரணம். பார்ப்பனரல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும்? பார்ப்பனர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால் மநு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மானவ தர்மத்தின் ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேயின் இந்தக் கட்டுரை)

டாக்டர் அம்பேத்கர்

‘ஜாதி பொய்’ என்று நிச்சயமாக உணர வேண்டும். அப்படி உணர்ந்தவர்களால் தான் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியும். ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளப்பட்டிருக்கிற மக்களின் சார்பாக நின்று போராட முடியும்.

அந்த நிலையில் இருந்து போராடியவர்கள்தான் – தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும்.

ஜாதிப்படி நிலையில் முழுக்க அவமானமும், நஷ்டமும் அடைகிற பார்ப்பனரல்லாதவர்கள், சுயஜாதி உணர்வோடு இருந்து கொண்டு, ஜாதிரீதியாக முழுக்க முழுக்க லாபமும், சமூக அந்தஸ்தும் பெறுகிற பார்ப்பனர்களை ஜாதி உணர்வற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் சுயஜாதி அபிப்பிராயத்திற்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காதவர் டாக்டர் அம்பேத்கர். அதேபோல் தந்தை பெரியாரும். ‘பிறப்பால் ஜாதி எனக்கும் இல்லை; யாருக்கும் இல்லை’ என்பதைத் தெளிவாக உணர்ந்தவர்கள்.

(பெரியாரிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொள்கிறவர்களில் சிலர், ஜாதி உணர்வோடு, அதாவது முதலியார் ‘பொரியாரிஸ்டுகள்’ முதலியார் பெரியாரிஸ்ட்டையும், வன்னிய ‘பெரியாரிஸ்டுகள்’ வன்னிய ‘பெரியாரிஸ்ட்டை’யும் தேடி பழகுகிற, அரசியல் ரீதியாக சேர்ந்து செயல்படுகிற மோசடியை  பெரியாரோடு  முடிச்சுப்போட்டு பார்க்கக் கூடாது. அவர்களுக்கும் பெரியாருக்கும் சம்பந்தமில்லை.)

‘எந்த வகையிலும் என்னைவிட உயர்ந்தவன் எவனுமில்லை. நான் யாரை விடவும் உயர்ந்தவனுமில்லை’ என்கிற தொனியில் அவர்கள் வாழ்ந்தால்தான் இந்து மதமும், அதன் உடன்பிறப்பான ஜாதியும் அவர்களைக் கண்டு அஞ்சியது.

https://i2.wp.com/www.arnenixoncenter.org/exhibits/exhibit_images/cats/write_cat.jpg?w=474

‘‘எங்கள் ஜாதிக்காரர்கள்தான் மன்னராக இருந்தார்கள்’’ என்பது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், தமிழர் அடையாளம் தேடி மன்னராட்சியில் அடைக்கலம் புகுவது.

தமிழ்க் கலாச்சாரம், உடை, உணவு, கலை, இலக்கியம் என்று தேடிப்போய், ‘இதோ கண்டு கொண்டோம்’ என்று அவர்களும் மன்னர் பெருமையில் சிலாகித்துப் போவது.

வேற்று நாட்டு அரசர்கள் தமிழ் நாட்டின் மிது படையெடுத்து வந்ததை, ‘ஆதிக்க வெறியர்கள்’ என்று கண்டிப்பது.

தமிழ் மன்னன் குறிப்பாக ராஜராஜ சோழன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் அந்நிய நாட்டைச் சூறையாடினால், ‘தமிழர்களின் வீரம்’ என்று மார்தட்டுவது.

வேற்று நாட்டு அரசன் செய்தால் ஆதிக்க வெறி. தமிழ் மன்னன் செய்தால் வீரமா?

இரண்டும் ஆதிக்க வெறிதானே? இந்த முரண் சிந்தனையின் தொடர்ச்சியாய், தமிழ்நாட்டில் மார்வாடி வட்டிக் கடை வைத்தால் தமிழனைச் சுரண்டுதல்.

தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்து தமிழனைச் சுரண்டி, பர்மாவுக்குச் சென்று வறுமையில் வாடும் அந்த நாட்டு மக்களிடம் வட்டிக்கடை வைத்துச் சுரண்டி – அந்த ஊர் தேக்கு மரங்களைச் சூறையாடி, இங்கு வந்து பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டிக் கொண்டால், அது திரை கடல் ஓடி திரவியம் தேடியதா?

எவன் செய்தால் என்ன? அது சுரண்டல்தானே.

***

‘நீங்கள் நினைப்பது போல், இந்த மன்னர்கள் ஆட்சியை நாங்கள் சொல்ல வில்லை. தமிழன் அடையாளம் அதற்கு முந்திய காலம்’ என்று சொல்லலாம்.

ஒருவேளை ஆரியக் கலப்பில்லாத தமிழர் ஆட்சியை சில ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் சென்று கண்டுபிடித்து, தமிழர் கலாச்சாரம் இதுதான். இதுதான் தமிழர் உடை, உணவு, கலை, பழக்க வழக்கம், கடவுள் என்று சொல்வார்களேயானால், அதில் எந்தத் தமிழனின் உடை, பழக்க வழக்கங்களை நாம் கடைப் பிடிப்பது?

மன்னர் தமிழனின் உடை, பழக்க வழக்கங்களைக் கடைப் பிடிப்பது என்றால், பொன் ஆபரணம், பட்டு பீதாம்பரம், அந்தப்புரம் இவையெல்லாம் நமக்கு யார் தருவது?

இல்லை. அதற்கு அடுத்த நிலையில் இருந்த மந்திரிகள், நிலப்பிரபுக்கள் பழக்க வழக்கங்களையா?

இல்லை. மன்னருக்கும், நிலப்பிரபுவுக்கும் கொத்தடிமைகளாக இருந்த மக்களின் பழக்க வழக்கங்களையா?

ஏனென்றால், சொத்துடைமைச் சமூகமாக மாறிய போதே, மனிதன் பெண்ணை அடிமைப்படுத்தினான். பிறகு நிலமற்றவர்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டான். தமிழ்ச்சமூகம் மட்டுமல்ல, உலகின் எந்தச் சமூகத்திற்கும் இதுதான் நிலை.

இன்னும் சிலர், ஆதித் தமிழனின் அடையாளங்களில் முக்கியமானவை. அவனின் ‘கடவுள்கள்’ என்கின்றனர். சிவன், திருமால், முருகன் தமிழ்க்கடவுள்கள். இந்தக் கடவுள்களை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து, தமிழர்களின் அடையாளமாக மாற்ற வேண்டுமென்றால், இஸ்லாமியத் தமிழர்களையும், கிறித்துவ தமிழர்களையும், நாத்திகர்களையும், அம்பேத்கர் வழி வந்த பவுத்தத் தமிழர்களையும் எந்த நாட்டுக்கு நாடு கடத்துவது?

இவை எல்லாவற்றையும் விட, இந்து மதவெறி தலைவிரித்தாடுகின்ற இன்றைய நிலையில், குறிப்பாக இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துகிற இந்து மதமும், ஜாதியும் அகலக்கால் பரப்பி நின்று ஆணவமாக சிரித்துக் கொண்டிருக்கிற இந்தக் கொடூர நாட்களில், இவைகளுக்கு எதிராக இந்தப் பழம்பெருமை பேச்சை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

இப்படிக் கேட்டால், ‘மநுநீதிக் காலத்தில் இருந்த ஜாதிய வேறுபாடுகள் மாதிரியா இப்போது இருக்கிறது. எவ்வளவோ மாற்றம் அடைந்திருக்கிறதே, நீங்கள் மட்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனுவை உதாரணம் காட்டி அழுகிறீர்களே? என்கின்றனர் தர்க்க அறிவாளிகள்.

இவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் செவிட்டில் அறைவதுபோல் பதில் சொல்கிறார், ‘மநுநீதி என்பது ஒரு கடந்தகால நடைமுறை அல்ல. தற்காலத்தின் இறந்த காலத்தைவிட அது அதிக மெய்யானது. அது, ‘வாழ்ந்து வரும் கடந்த காலம்’. எனவே, எந்த நிகழ்காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான நிகழ்கால விஷயம்தான்.’’

***

சமூக சுழற்சிக்குத் தன் உழைப்பையும், உயிரையும் கொடுத்த மக்களை, அவர்களின் பாரம்பரியத்தை, ‘மன்னர்களாக இருந்தவர்கள்’ என்று சொல்வது அவர்களைக் கேவலப்படுத்துவதாகும்.

ஆம், மன்னர்கள், ஜனநாயகம் என்றால் என்னதென்றே அறியாதவர்கள். ஊதாரிகள். தன் சுக போகத்திற்காக, பெருமைக்காக மக்களை மிகக் கடுமையாக ஒடுக்கியவர்கள். அவர்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள்.

தஞ்சை ‘பெரிய கோயில்‘. தமிழர்களின் அவமானச் சின்னம்

‘கற்களே இல்லாத சோழ மண்டலத்தில் கிரேன் வசதிகளற்ற அந்தக் காலத்தில், கோயிலின் நிழல் கீழே விழாத அளவிற்கு ராஜராஜசோழன் எப்படித்தான் இந்தக் கோயிலைக் கட்டினானோ?’ என்கிற இந்தத் தமிழ்ப் பெருமை எந்த வைகையில் இன்றைக்கு உதவும்?

உண்மையில், அந்தக் கோயிலைக் கட்டுவதற்காக கையளவு கல்லையாவது புரட்டி இருப்பானா ராஜராஜன்?

உழைக்கும் மக்களைச் சுரண்டி அவர்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் கட்டப்பட்ட எந்தக் கோயிலின் கோபுரத்தையும், பிரம்மாண்டமான மதிற்சுவரையும் ஆழ்ந்து உற்று நோக்குங்கள். அதில் கலை அழகு பொங்கு வழியாது. ஆயிரமாயிரம் உழைக்கும் மக்களின் ரத்தமே பொங்கி வழியும்.

நிற்கதியான நிகழ்கால மக்களின் அபயக்குரல்களைக் கேட்பதற்கு உங்கள் காதுகளுக்கு சக்தி இருந்தால், அந்தக் கோயில்களின் ஆயிரம் கால் மண்டபங்களில் இன்னும் அழுது கொண்டிருக்கும் – இறந்த கால மக்களின் அழுகுரலும் கேட்கும்.

கோயில்களின் தீர்த்தமாகத் தருவது, புனித தண்ணீரல்ல. ஆயிரம் ஆண்டுகளாக அழுது கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் கண்ணீர்.

தலித் முரசு 2002 செப்டம்பர் இதழுக்காக எழுதியது

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க