பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்….

http://cpmtataistfascist.files.wordpress.com/2009/01/periyar.jpg?w=474

‘பழந்தமிழன்’ பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் திண்ணைப் பேச்சு வீரர்களை, தந்தை பெரியார் தடியாலேயே தலையில் அடிக்கிறார்.

ழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆளைக் காணோம். வீணாக அந்தப் பெயரின் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ, தங்கள் எண்ணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவோ அது பயன்படுகிறது.

பழந்தமிழன் யாரயிருந்தால் எனக்கு என்ன – உங்களுக்குத்தான் என்ன காரியம் ஆகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாய் இருந்தாலும் இங்கு, இன்று நமக்கு அதனால் என்ன லாபம் என்பதுதான் கேள்வி. பழந்தமிழர் நிலையைப் பற்றி பேசுபவர்கள் பகுத்தறிவாதிகளானால், நடுநிலைமைக்காரர்களானால் – அவர்களை ஒன்று கேட்கிறேன்.

அதவாது, காட்டுமிராண்டி வாழ்க்கைக் கால மனிதனைவிட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன் சிறந்தவன் அல்லவா என்பதும்; அது போலவே 4000 , 5000 வருஷ காலத்திற்கு முன் இருந்த மனிதனை விட, இன்று 20 ஆவது நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவமும், அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா அல்லவா என்பதோடு, அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வைவிட, எண்ணிய எண்ணத்தைவிட வேறான எண்ணங்கள் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா இல்லையா என்பதுமே ஆகும்.

இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்குப் பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாகக் கேட்கிறேன்.

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்தச் சீர்த்திருத்த்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, பகுத்தறிவுவாதியின் கடமையாகி விட்டது.

இன்றும் நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவுப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்குக் காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை என்பன போன்ற பழமையேயாகும்.

பழந்தமிழர் பேச்சைப்பேசி இனி ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கிய கடமையாகும்.

தந்தை பெரியார்

குடி அரசு 10-1-1948

தலித் முரசில் நான் எழுதியஆண்ட பரம்பரைக் கனவு-தொடரும் ஜாதியின் நிழல் என்ற கட்டுரைக்கு பலம் சேர்ப்பதற்காக அந்தக் கட்டுரையின் இடையில் கட்டம் கட்டி பெரியாரின் இந்தக் கட்டுரையை தேர்தெடுத்து, தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் வெளியிட்டு இருந்தார்.

கட்டுரைக்குள் தரப்பட்டு இருக்கிற அழுத்தம் ( Bold ) என்னால் தரப்பட்டது. பெரியாரின் கட்டுரைக்குள் இருந்த வாசகத்தை எடுத்து தலைப்பாக நானே வைத்தேன், இந்தப் பதிவுக்காக.