பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்

http://www.employees.org/~desikan/images/d_periyar.gif

மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி என்று பெரியார் சொன்னார்.

பெரியாரின் இந்த அறிவியல் பார்வையை தமிழர்களுக்கு எதிராக, தமிழனுக்கு எதிரான கண்ணோட்டமாக மாற்றினார்கள், பெரியாருக்கு எதிரான, தமிழர்களின் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து பேசாத, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் எதிரிகளான, தனித்தமிழ் பேர்வழிகளும், தமிழ்த்தேசிய பேர்வழிகளும்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பெரியாரின் மொழிப்பார்வை எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று விளக்கி எழுதியிருக்கிறார் தோழர் கவி. இதை இவர் எழுதியது என்பதைவிட, பெரியாரே எழுதினார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு பெரியாரின் எழுத்துக்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி, தன் எழுத்தை சுருக்கியிருக்கிறார்.

இவர் சொந்த ஊர் திருவாரூர். இப்போது சிங்ப்பூரில் பணிபுரிகிறார். பெரியாருக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளை கண்டித்து,  நான் எழுதியதை தொடர்ந்து படித்து வந்த தோழர் கவி, அவர் எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பி வைத்தார்.

இதில், பெரியார் மொழிக்குறித்தும், தமிழ் குறித்தும் சொல்லியிருக்கிற செய்திகள் நிரம்ப அறிவு செறிவுள்ளதாக இருக்கிறது. (பெரியாரின் தமிழ் பற்றிய இந்த சிறப்பான கருத்துக்களும், டாக்டர் அம்பேத்கர் தமிழ் பற்றி சொன்ன கருத்துக்களும் ஓரே தன்மையுடையவை. இதுபற்றி நான் வேறு ஒரு சமயத்தில் எழுதுகிறேன்.)

தமிழ் மொழியை தாய்மொழி என்பதும்,  அதைப் புனிதமாக பார்க்கும் போக்கும், பழைய தமிழ் புலவர்களை பெரிய மேதைகளாக நினைக்கும் எண்ணமும், சில பெரியாரிஸ்டுகளிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், பெரியார் கருத்துக்களைவிட தமிழ்தேசிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முறையாக அவரை வாசிக்காததும் அல்லது சில இடங்களில் அவர் கொள்கைகளை கைவிட்டுவிடுவது, வசதியாக இருப்பதுமே காரணம்.

தோழர் கவி எழுதியிருக்கிற இந்தக் கட்டுரை, தமிழ்த் தேசிய வாதிகளுக்கு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு ஆர்வத்தில் பெரியாரை ஆதரிக்கிற சில பெரியாரிஸ்டுகளுக்கும், பெரியாரின் மொழி கொள்கையை தெளிவாக காட்டும். அதனால இதைத் தொடராக வெளியிடுகிறேன்.

இப்படி வெளியில் இருந்து ஒருவர் எழுதிய கட்டுரையை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு என் பதிவுகளில் இடம்பெற்ற கட்டுரைகளை ஒட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்த தோழர் ஏகலைவன், தோழர் விஜய் கோபால்சாமி இவர்களின் கட்டுரைகள் மட்டும்தான் இடம் பெற்றிருக்கிறது.

தோழர் கவியின் இந்தக் கட்டுரை, பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு ஒர் அறிவு சுரங்கம்.

-வே. மதிமாறன்

***

சுப.வீ எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம்’ நூல் குறித்து ‘தமிழர் கண்ணோட்டம்’ ஆகஸ்ட் 2005 இதழில், திரு. பெ.மணியரசன் எழுதியிருந்தார். சுப.வீ யின் நூலை ஆய்வு செய்கிறவர் அதை ஆய்வு செய்வதில் முனைந்திருக்கலாம். அதை விடுத்து பெரியாரின் பக்கம் போய் பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

‘பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்புக் கொண்டது’ என்கிறார் பெ.மணியரசன். இக்கருத்தை அவரே வரையறுத்துக்கொண்டு சுப.வீ யி ன் கருத்தை மறுக்கத் தொடங்குகிறார். பெரியாரின் கருத்தியல் என்பது சமூக நீதி. சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும். இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இதுதான் பெரியாரியல்.

‘பெரியாரின் சமூகவியல் கொள்கை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு.’ இதுவும் பெ.மணியரசன் அவர்களின் பிழையான பெரியார் கொள்கை பற்றிய பார்வை. ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாகவும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார்.

பெரியார் சொன்ன ‘திராவிடம்’ என்பது ‘பழைய சென்னை மகாணம்’ தான். அதில் உள்ள தெலுங்கு பேசுபவர்களையும் கன்னடம் பேசுவர்களையும் மலையாளம் பேசுபவர்களையும் மட்டும் உள்ளடக்கியது தான். இப்போது பெ.மணியரசன் போன்றவர்கள் தாங்களாக கொண்டுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளடக்கிய திராவிடம் அல்ல.

‘மொழிக் கொள்கையில் பெரியார் பிழை செய்திருக்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் சம்பள உயர்வுக்குப் பெரியார் ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் மொழிக் கொள்கை ஆகாது. தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்க வில்லை. மூட நம்பிக்கை மொழியென்றும் பகுத்தறிவு மொழி என்றும் எதுவுமில்லை. தமிழிறிஞர்கள் குறித்த பெரியாரின் பார்வை சமனற்றது. தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள். உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற பெரியாரின் இக்கணிப்பு தவறு.’ என்று பெ. மணியரசன் எழுதியவற்றிற்கு எல்லாம்,  பெரியாரைக் கொண்டே விடை கூறியிருக்கிறேன்.

பெ. மணியரசனின் பெரியார் மீதான் அவதூறுகளை மறுத்து, 2005 ல் நான் எழுதிய நூலினை உங்களுக்கு தொடராக தருகிறேன்.இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இதுவே பெ.மணியரசன் அவர்களுக்கு போதுமானது என்று கருதுகிறேன்.

கவி, சிங்ப்பூர்.

-தொடரும்

குடியரசு இதழில் வெளியான பெரியாரின் எழுத்துக்களை, பேச்சுகளை புத்தகமாக வெளியிடலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரியார் திராவிடர் கழகத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.

பெரியாரின் நூல்கள்தான் தமிழர்களின் அழியா சொத்து. இந்தச் சொத்து வழக்கில் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்பாகியிருக்கிறது.
மகிழ்ச்சி.
-வே. மதிமாறன்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க