‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

periyar-04

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

கவி, சிங்கப்பூர்

மிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார்,

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது.

இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல.

தனித் தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றையயல்லாம் பெ.மணியரசன் படித்தாரா? இல்லையா என்ப தெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ்க் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்பு கூட அல்ல. தமிழில், அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்கள் இல்லை. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்பதைக் கூட அழகாக ஆனால் ஆழமாக மறுக்கிறார் பெரியார்.

இதே போல் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான். ஏன்? நம் தாய் நம்மைப் பெற்றெடுத்தும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ , துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழியோ பேசுவோமா? அல்லது நம் தாய் தமிழ் பேசியதன் காரணமாக, நம்மைப் பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக வெளிவருமா? என்று தாய்மொழி என்ற கருத்துருவையே கேள்விக்குள்ளாக்கும் பெரியார்,

நம் தாய் குழந்தையாக இருந்த போது பேசியதென்ன? பாய்ச்சி குடிக்கி, சோச்சி தின்னு, மூத்தா பேய், ஆய்க்கு போ, என்றுதானே பேசியிருப்பாள்! இப்போது நாம் பாச்சி , சோச்சி, மூத்தா, ஆயி என்றா பேசுகிறோம்? இந்தக் காலத்தில் நம் தாய்கள் பேசுகிற மொழியே அதிசயமாயிருக்கும். ஆதலால் தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும்  அறியாமை என்று தோன்றவில்லையா? என்று விளக்குவதையும் தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

https://i1.wp.com/www.periyar.org/html/Periyar.jpg?w=474

தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்ற பேர்கள் வந்த பிறகு தானே நம் பெண்கள் கணவனின் கைப்பொம்மைகள் ஆனார்கள்? அதன் பிறகுதானே சிறிது சச்சரவு நேர்ந்து தன் வீட்டுக்கு வந்த தன் மகளைப் பார்த்து. ஆமாம்மா! உன்னைக் கன்னிகாதானம் செய்தாயிற்றே! உன்னை உன் புரு­னுக்குக் கொடுத்துவிட்டோம். தானம் செய்து விட்டோமே!  இனி, உனக்கு இடம் அவன் இருப்பிடம் தானம்மா என்று கூறும் தகப்பன்மார் தோன்றினார்கள். கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்களேன். திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்றுதானே கூறுகிறார். அதாவது புரு­னும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள்.

மோட்சம் என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருளையும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி?  நெறி, கோள் என்றால், வெறி ஏது? பதிவிரதாத தன்மை என்பதற்காவது தமிழில் வார்த்தையுண்டா? பதிவிரதம் என்ற வார்த்தை இருந்தால், ‘சதி விரதம் அல்லது மனைவி விரதம் என்கின்ற வார்த்தையும் இருக்கவேண்டுமே! இதுவும் வடமொழி தொடர்பால் ஏற்பட்ட வினைதான். ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? ஆத்மாவால் எவ்வளவு மூட நம்பிக்கைக் களஞ்சியங்கள் நம் புலவர்கள், அறிஞர்களிடையேயும் புகுந்துவிட்டன?

தமிழ்நாட்டு மக்களின் வழக்கங்கள் யாவும் பெரிதும் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையின் மீதும், பகுத்தறிவு  என்ற அடிப்படையின் மீதும் அமைந்திருக்கக் காண்கிறோம். நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை.

மூட நம்பிக்கை மொழி என்று ஒன்று இல்லை என்று கூறிய பெ.மணியரசன் ஆங்கில மொழியிலும் மூட நம்பிக்கை கருத்துக்கள் என்று அடுத்த வரியிலேயே ‘பல்டி’ யடித்தவர் மேலே பெரியார் கூறியவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தொடரும்