‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5
பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1
‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2
‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3
‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4
–கவி, சிங்கப்பூர்
ஆங்கில மொழியை விரும்புவதற்கு பல காரணங்களை பெரியார் அடுக்குகிறார், “வடமொழித்தொடர்பால் ஏற்பட்ட இன்னல்கள் ஒருவாறு மேலே விளக்கப்பட்டன. அதற்கு மாறாக ஆங்கில மொழித் தொடர்பால் நமக்கேற்பட்டுள்ள நன்மைகளையும் அம் மொழியிலுள்ள கருத்துச் செறிவுகளையும் பாருங்கள். ஆங்கில மொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி அறிவு நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. ‘அடிமை வாழ்வே ஆனந்தம்’ என்று நினைத்திருந்த இவ் இந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கில மொழி அறிவுதான் என்று கூறினால் மிகையாகாது. இராஜா வேண்டாம். குடியரசு தான் வேண்டும் என்கிற அறிவு. சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு ஆணும் பெண்ணும் சமம் என்கிற அறிவு ஆகிய சகல அரசியல் பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக்களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது”.
“தந்தியையும், மின்சாரத்தையும், படக் காட்சியையும், ஆகாய விமானத்தையும் ரேடியோவையும், எக்ஸ்ரேயையும் அதுதான் அறிமுகப்படுத்தியதேயயாழிய, நமது தமிழ் மொழியோ அல்லது அதை அழிக்க வந்த வடமொழியோ அல்ல”.
வீட்டு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள். குழந்தைக்கு தாய்பாலில் ஆங்கிலத்தை கலந்து கொடுங்கள் என்று பெரியார் சொல்லியதற்கு அடிப்படை காரணம் இவை தான் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் பெ.மணியரசன் போன்றவர்கள் பெரியாரைப் படிப்பதுமில்லை. படிக்க முயற்சிப்பதுமில்லை.
மேலும் பெரியார் கூறுகிறார், “அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் சுற்றுச் சார்பு தான் காரணம். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனா யிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண் கொண்டு பார்ப்பான்”. பெரியார் இப்படி ஒப்பிட்டுக் கூறுவதையும் அவர் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் ஒரு காலத்தில் சிறந்த மொழியாக இருந்தது என்று கூறும் பெரியார் அது சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில் புகுந்ததுதான் என்று கூறுகிறார்.
“தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது”.
பெரியாரை தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசிய வாதிகளும் கடும் விமர்சனம் செய்வதற்கு காரணம் அவர்கள் பெரியாரால் பலமாக தாக்கப்பட்டது தான் . தமிழறிஞர்களைப் பற்றி பெரியாரின் பார்வை இதுதான்,
“தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு “கவைக் குதவாத” கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத் தவறினார்கள்.
சிலப்பதிகாரத்தை தலை சிறந்த நூலென்று இன்னமும் போற்றி வருகிறார்கள்.அதில் கண்ணகி என்ற மாது மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள், கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றிக் கொள்கிறது. இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக் காட்டு. அந்த சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணை யிடுகிறாள், பார்ப்பனரை அழிக்காதே என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரிய பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்”.
இன்னுமும் பெரியார் தமிழ் கீழ் நிலையை அடைந்ததற்கு மிகவும் வேதனையடைகிறார்,
“தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்”.
மொழி என்பதை பற்றிய மற்றொரு கருத்தை இங்கு பெரியார் வெளியிடுகிறார். இதையயல்லாம் தமிழிறிஞர்கள் உணர வேண்டும்,
“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள். தமிழ் சிவனும் சுப்பிரமணியனும் பேசிய மொழி. உண்டாக்கிய மொழி என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதேயாகும்”.
தமிழை விட தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கைவைக்கிறார் என்று திசை திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.
தமிழைப் பற்றி கூறும் போது, “தமிழைப் பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனும் அல்ல. தமிழுக்காக எவ்வித தொண்டும் புரிந்தவனும் அல்ல” என்றும் அடக்கமாகக் கூறுகிறார்.
“மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது”.
“உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன”. (குடி அரசு 26.1.1936).
-தொடரும்
தமிழை அறிவியல் மொழியாக்க வேண்டும் என்றும் அதற்கு தமிழறிஞர்களும் பங்களிக்க வேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கைகள் நியாயமான வாதமாகத் தான் இருக்கிறது.
IT IS VERY NICE AND TRUE.
PL KEEP ON WRITING LIKE THIS.
by
srithar
VIZHITHEZHU IYAKKAM
ssrithar007@yahoo.co.in
//தமிழை விட தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர். இதற்கும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காக கடவுள் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்திய பெரியாரை பார்ப்பனர்கள் சாமார்த்தியமாக மத நம்பிக்கையில் கைவைக்கிறார் என்று திசை திருப்பியதற்கும் தொடர்பு இருக்கிறது என்று நாம் உணரலாம்.//
இதைத்தான் திட்டமிட்டே தொடர்ந்து செய்கிறது ஒரு கூட்டம்..
//தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். //
இதை ஏற்க (தடுக்க = நீக்க) முடியாமல் தான் தமிழ் மொழியை காப்பாற்றுவதாக தனக்குத்தானே தம்பட்டம் அடித்து சில வகையறாக்கள் அலைகிறார்கள்..
தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்று பெயர் அளவில் இல்லாமல் நடைமுறையில் அணைத்து துறைகளிலும் (சட்டம் முதல் விஞ்ஞானம் வரை) பயன்ப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் மொழியை மதத்தில் இருந்து விடுதலை செய்து மொழியை மொழியாக (உண்மையாகவே) நடை முறைப்படுத்த வேண்டும்.
//“தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்//
இந்த முயற்சியை உடனடியாக நடைமுறை படுத்தப்பட வேண்டும்..இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர் எவரோ?..அவரே தமிழ் மொழியின் முதல் எதிரி..
//“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்துவிட்டார்கள்//
//“மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது”.
“உதாரணமாக, மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன”. //
தமிழ் அறிஞர்கள் இந்த வரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்?..
தோழமையுடன்
முகமது பாருக்
மதிமாறன் முன்பே எழுதியது போல தமிழை மதம் அதுவும் பார்பனீயம் என்னும் மதத்தில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். இதையே தான் பெரியார் தம் வாழ்நாள் முழுவதூம் தமிழர்களுக்கு உணர்த்த விரும்பினார். இதை இன்று வரை தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் மாக்கள் திசை திருப்ப பார்கிறார்கள். தமிழின் மத சார்பு தமிழர்களை ஒரு முட்டாள் கூட்டமாக மாற்றிவிட்டது. நாம் எல்லா வகையில்லும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளை விட ஒரு ஒரு நூற்றாண்டு பின் தங்கி இருக்கின்றோம் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.(இது வெறும் பொருளாதாரம் மற்றும் இல்லை ). இப்படி ஒரு நிலையில் இருந்து கொண்டு எப்படி தான் பெருமை பேசுகிறார்கள் என்று புரியவில்லை. நாம் நம் நிலையை உணராத வரை பெருமை மட்டுமே பேசிக்கொண்டு திரிய வேண்டியது தான்.
பதிவிற்கு நன்றி கலந்த வாழ்த்துகள் கவி. பெரியாரை இழிவு செய்கிறோம் என்ற போர்வையில் உழைக்கும் தமிழ் மக்களை ஏமாற்றி திரியும் தமிழ் தேசியவயாதிகளுக்கு மரண அடி உங்கள் பதிவுகள்.
தமிழை நீச மொழி என்று சிலர் இழிவு படுத்தியதற்கும் பெரியார் தமிழ் மொழியை சாடுவதற்கும் நிறையவே வித்தியாசமிருக்கிறது. பெரியாருக்கு தமிழர்களின் மொழியை விட மனிதர்களின் சுய மரியாதையே பிரதானமாக இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது
// தமிழை நீச மொழி என்று சிலர் இழிவு படுத்தியதற்கும் //
தமிழை நீச மொழி என்று சொன்னது சங்கரமடத்தின் யோக்கியர்கள்.