தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

vijayakanth

விஜயகாந்த் தொப்பிக்கு மேல் காவி. நல்ல குறியீடு. எதிர்காலத்தில் பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைக்கான  ‘காவித் தலை’ . சபாஷ் சரியான அறிகுறி.

***

டிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் – தமிழக மீனவர்களை, ஈழத் தமிழர்களை சுட்டுக்கொல்கிற, இலங்கை ராணுவத்தை கண்டித்து, அதன் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் ‘ஒரேஒரு வேளை’ உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த உண்ணாவிரதத்தின் போது, தமிழக மீனவர்கள் அணியும் தொப்பி என்று தலையில் நீண்ட குடுவையைப்போன்ற தொப்பியை அணிந்திருந்தார். எந்த ஊரில் மீனவத் தமிழன் இப்படி ஒரு தொப்பியை அணிந்திருக்கிறார்?  இது சினிமாவில் வருகிற மீனவர் அணிகிற காஸ்டியூம்.

தமிழ் சினிமாவில் மீனவர்கள், நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிந்து முழங்கைக்கு மேல் தாயத்து கட்டி, இறுக்கமான சட்டையும் அணிந்திருப்பார்கள்.

இதுபோன்ற கோமாளித்தனமான காஸ்டியூம்களோடு, தமிழக மீனவர்களை வேடிக்கைப் பொருளாக, மீனவர்கள் அல்லாத தமிழர்களிடம் இருந்து வேறுபடுத்தி,  ‘தமிழ் மீனவர்கள் வேறு யாரோ’ என்பது போன்ற எண்ணத்தை சித்திரித்து பிரபலமாக்கியது,  கடற்கரையை மீனவர்கள் அசுத்தப்படுத்துகிறார்கள் என்பதாக குற்றம் சாட்டி, சென்னை மெரினா கடற்கரையில், மீனவர்களை தன் ஆட்சிகாலங்களில், இன்றைய இலங்கை ராணுவம் போல் சுட்டுக்கொன்ற,  மீனவ நண்பன் எம்.ஜி.ஆர்.

நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிவது ஆந்திர மீனவர்கள் வழக்கம். ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்களே. படகோட்டி படமும் கூட ஆந்திராவைச் சேர்ந்த, நாகிரெட்டியின் திரைப்படம்தான்.

அதனால், அவர்கள் ஆந்திர மீனவர்கள் அணிகிற உடையை, செயற்கையான சினிமா சேர்க்கைகளோடு கொச்சைப்படுத்தி, தமிழக மீனவர்களின் அடையாளமாக காட்டினார்கள்.

தமிழர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்து கட்சி நடத்துவதாக சொல்கிற விஜயகாந்த் போன்றவர்கள், தமிழக மக்களில் மிக பெரும்பான்மையான உழைக்கும் மக்களான மீனவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கைத் தரம், முறை எப்படி இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமல், ‘சாவு வீட்ல பொணமாகவும்-கல்யாண வீட்ல மாப்பிளையாகவும்’ இருக்க வேண்டும் என்கிற சினிமாக்காரர்களின் விளம்பர மனோபாவதில் இருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தமிழக மீனவர்கள் அணிகிற குல்லா என்று ஒன்றை தன் தலையில் வைத்திருக்கிறார்.

உண்மையில் தமிழ் மீனவர்கள் தலையில் அவர் வைக்கும் குல்லாஅது.

‘யார் வீ்ட்டு எழவோ… பாய் போட்டு அழவோ’ என்று ஒரு பழமொழி வட மாவட்டத் தமிழர்களிடம் இருக்கிறது. அதுபோல் கூலிக்கு மாரடிக்கிற இந்தச் சினிமாக்காரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழக மீனவர் துயரமும், ஈழத்தமிழர் துயரமும், தான் தலைவர் ஆவதற்கும், ஓட்டு வாங்குவதற்கும் ஒரு கருவியாக, பிரச்சாரமுறையாக பயன்படுகிறது.

ஒரு வேளை, சிங்கள ராணுவம் ஒரு நெருக்கடியின் காரணத்தால்,  ஈழத் தமிழர்கள் மீதான,  தமிழக மீனவர்கள் மீதான கொலை வெறித் தாக்கதலை நிறுத்திவிட்டால், அதன் மூலம் பெரும் அதிர்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகுபவர்கள் இந்த அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள்.

வாய்க்கரிசியையும் புடுங்கி, கள்ள மார்க்கெட்ல வித்து காசு பாத்துடுவாங்க.

படம்; தினகரன்

செப்டம்பர்30, 2009 எழுதியது.

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

mathi1

மிழ்த்தேசியவாதிகள் சிலர், “பார்ப்பனர்களால் என்ன பிரச்சினை அவர்கள் நல்லவர்கள்தான். திராவிடம் பேசி தமிழர்களை வீணாடித்துவிட்டார்கள் –  திராவிடம் பேசுபவர்கள்தான் நமக்கு எதிரி” என்று தொடர்ந்து, பேசிவருகிறார்கள்.

பார்ப்பனர்களோ மறந்தும் தமிழ்த்தேசியம் பேசமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் அதற்கு நேரடி எதிரானவர்கள். இந்திய தேசியவாதிகள். அனேகமாக குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காரர்களின் ஒட்டுமொத்த உணர்வும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்றால், அது பார்ப்பனர்களாக மட்டும்தான் இருப்பார்கள்.

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள், உருதை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியத் தமிழர்கள் கூட தமிழ்த்தேசியத்திற்கு தீவிர ஆதரவாளராக இருக்கிறார்கள். ஈழபிரச்சினைக்காக தன்னை அர்பணித்து போராடியும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழை ‘தாய்மொழியாக’ கொண்ட பார்ப்பனர்களோ, இந்தியத் தேசியத்திற்குதான் ஆதரவளராக இருக்கிறார்கள்.

‘மற்ற ஜாதியில் இல்லையா?’ என்று கேட்கலாம். இருக்கலாம்.

அது,  தனிநபரின் கொள்கைதானே தவிர அந்த ஜாதியை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் உணர்வு என்று சொல்லமுடியாது.

தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்திய தேசியத்திற்கும் ஆதரவாக இல்லை,  தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவாக இல்லை. அல்லது அவர்களின் வாழ்க்கை நிலை இதுபற்றி எல்லாம் தெரிந்து கொள்ளும் சூழலில் இல்லை. ‘இன்றைய பொழுது எப்படிடாபோகும்? ’என்கிற பொருளாதார, சமூக நெருக்கடிகளின் துயரங்களில் சிக்கி இருக்கிறார்கள்.

ஆனால், பார்ப்பனர்களின் நிலை இப்படி இல்லை. பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கிற ஒரு ஏழை பார்ப்பனரின் கருத்துகூட இந்திய தேசியத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறது.

ஆனாலும், தமிழ்த்தேசியவாதிகள்-பெரியாரை அல்லது திராவிடத்தை எதிர்ப்பதுபோல் பார்ப்பனியத்தை எதிர்ப்பதில்லை என்பது மட்டுமல்ல, பார்ப்பனியத்தின் மீது கள்ளக்காதலும் கொள்கிறார்கள்.

தந்தை பெரியார், ‘சூத்திரனாக இருக்காதே, சுயமரியாதையோடு இரு’ என்றார்.

“அதெல்லாம் முடியாது. நான் சூத்திரனாகத்தான் இருப்பேன்” என்று அடம்பிடிக்கிறார்கள், இவர்கள்.

இந்த சூழலில், 20122007 அன்று எழுதிய ஒரு கேள்விக்கான பதிலை ‘அவர்களுக்கு’ காணிக்கையாக்குகிறேன்.

தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்களே?

ஜான்சன்.

எதை ஒன்றை ஒருவர், எந்த விதமான அரசியல் காரணங்களும் இன்றி, போலியான ‘சப்பைக் கட்டுகளோடு’ தீவிரமாக வலியுறுத்திகிறாரோ, அதில் அவர் தனிப்பட்டமுறையில் லாபம் அடைபவராக இருப்பார். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

அதன் பொருட்டே, அதை நேரிடையாக சொல்லாமல், தனது ‘சமூக அக்கறையின்’ வாயிலாக ‘தேசப்பற்றின்’ மூலமாக ‘உயர்ந்த ரசணை’யின் அடிப்படையில் வலியுறுத்துவார்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

“அகமதாபாத் மாமா, சிம்லா சித்தி, அய்தராபாத் அத்தை, பம்பாய் மன்னி, விஜயவாடா பெரியப்பா, டெல்லி கணேஷ், கல்கத்தா விஸ்வநாதன், பாம்பே ஞானம் – இப்படி இந்தியா முழுக்க சொந்தக்காரங்க இருக்கிறவங்க ‘தேசியம்’ த்தை வலியுறுத்தி பேசறதுல அர்த்தமிருக்கு.

மேலத் தெரு பெரியப்பா, மூணாவது தெரு மூலி சித்தப்பா,  சின்னத் தெரு குள்ளச்சி அத்தை, கீழத் தெரு மொண்டி மாமா, குன்னுமேடு கோவிந்த மாமா  இப்படி நாலு தெருவுக்குள்ளேயே நம்ம சொந்தம் முடிஞ்சிபோது.

இப்படி இருக்கிற நம்மளையும் தேசியத்தை பேசச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

நம்ம சொந்தக்காரங்களுக்கு டெல்லி ன்னா, எருமை மாடுதான் தெரியும். அவுங்களுக்கு எப்படி தேசியத்தை புரியவைக்கிறதுன்னுதான் புரியலை.

***

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

யார் தமிழனவிரோதி?; கிராமம் தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

2195237_ambedkar_periyar

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக தீவிரமாக போராடுவதுதான் முதன்மையானது என்று நீங்கள் தொடர்ந்து எழுதிய பிறகும், இணையத்தில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் அதற்கு பதில் சொல்லாமல் தனிப்பட்ட முறையில், உங்களுக்கு எதிராக தமிழினவிரோதி, தெலுங்கன் என்று உங்களை தொடர்ந்து திட்டி எழுதிகொண்டு, மீண்டும் சாதி வேறுபாடுகள் பார்க்காமல், தமிழர்களாவே ஒன்று சேருங்கள், தமிழுக்காக போராடுங்கள் என்று அழைக்கிறார்களே?

தமிழ்ச்செல்வன்

கிராமத்தில் இருநது நகரத்த்தி்ல் வந்து குடியேறியவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள் இவர்கள் எப்போதும், தங்கள் கிராம வாழ்க்கையைப் பற்றி பெருமையாக, ‘அந்த அழகான குளம்,  மாரியம்மன் கோயில் ஆலமரம், ஆறுமுக கோனார் வீட்டு டீ கடை, அப்பாவியான கிராமத்து மக்கள்,  அந்த மாந்தோப்பு,  சுத்தமான காத்து, சுவையான கிணத்து தண்ணீ…’ என்று சிலாகித்து கொள்வார்கள்.  தங்கள் எழுத்துக்களிலும், திரைப்படங்களிலும் அதை தீவிரமாக பதிவும் செய்வார்கள்.

இப்படி கிராம வாழ்க்கை குறித்து, பெருமை கொள்கிறவர்கள் பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். மிக பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் நாட்டுப்புற வாழ்க்கையை சிலாகிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்திய  கிராம முறை மிகத் தீவிரமான ஜாதிய உணர்வு நிறைந்ததாக, தலித் விரோ்தம் கொண்டதாக இருப்பதே அதற்குக் காரணம்.

டாக்டர் அம்பேத்கர் இந்திய கிராமங்களைப் பற்றி சொல்லும்போது,இந்து கிராமம் இந்து சமூக அமைப்பின் செயல்முறை விளக்க வரைபடமாகும். அதில், இந்து சமூக அமைப்பு முழுவீச்சில் செயல்படுவதைக் காணலாம். சராசரி இந்து, இந்தியக் கிராமத்தைப் பற்றியப் பேசும்போதெல்லாம் பேரானந்தத்தில் திளைக்கிறார். உலகிலேயே வேறேங்கும் ஈடு, இணை காணமுடியாத இலட்சிய சமூக அமைப்பு அது என்று அவர் எண்ணுகிறார்

இது (கிராமம்) தீண்டாதவர்களைச் சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகைக் காலனி ஆதிக்கமாகும். தீண்டாதவர்களுக்கு உரிமைகள் எதுவும் இல்லை. அவர்கள் வாழ்வதெல்லாம் காத்திருக்கவும், பணி செய்யவும், பணிந்து நடக்கவுமே செய்வதற்கு அல்லது செத்து மடிவதற்கு என்றார்.

பெரியாரும், கிராமங்களை நகரங்கள் சுரண்டி தின்பதற்காகவும், அதன் ஜாதிய அபினமானத்திற்காகவும்,நாட்டில் கிராமங்களே எங்கும் இல்லாதபடி அவற்றை ஒழித்து விடுவதேயாகும். அதுமாத்திரமல்லாமல் கிராமங்கள் என்கிற வார்த்தை அகராதியில் இல்லாதபடி செய்துவிட வேண்டும் அரசியலிலும் கூட கிராமம் என்ற வார்த்தை இருக்கக் கூடாது. என்று கண்டித்தார்.

இந்த இரு தலைவர்களின் கிராமங்களின் மீதான கோபம், காந்தியின் கிராமராஜ்ஜியத்திற்கு நேர் எதிரானது. உண்மையானது. நேர்மையானது.

கிராமத்திற்குள், ஜாதி இந்துக்கள் சகஜமாக ‘போக வர’ இருக்கிற இடங்களுக்கு எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் ரகசியமாக கூட போக முடியாது. அதையும் மீறி போனால், பிணமாகத்தான் வேண்டும்.

ஜாதி இந்துவிற்கு அழகானதாக இருக்கிற குளம், தாழ்த்தப்பட்டவருக்கு ஆபத்தானதாக இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் அழகான குளத்தில் ஆசையாக இறங்கி கால் நினைத்தால்,  அவரை ஊனமுற்றவராக மாற்றிவிடுவார்கள் ‘அப்பாவியான’ கிராமத்து மக்கள்.

சுவையான கிணத்து தண்ணீரை ருசி பார்த்தால்,   ஆலகால விசத்தை குடித்த சிவனின் உயிர் காக்க தொண்டை குழியை பிடித்து அமுக்கிய பார்வதியை போல், தண்ணீர் தொண்டைக்குள் இறங்குவதற்கு முன் ஒரே அமுக்காக அமுக்கி தாழ்த்தப்பட்டவரின் உயிர் போக்குவார்கள் ஜாதி இந்துக்கள்.

ஆறுமுக கோனார் வீட்டு டீ கடை, ரெட்டை டம்பளரோடு இருக்கிற அவமானச் சின்னம்.

மாரியம்மன் கோயில் ஆலமரம், கோயிலினுள் நுழைந்து பக்தியோடு அம்மனை கும்பிட்டால், அந்த ஆலமரம்தான் தாழ்த்தப்பட்டவருக்குத் தூக்குமேடை.

மாந்தோப்பு – தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துபட்டு கொலை செய்யப்படுகிற  இடம்.

கிராம வாழ்க்கை முறை இவ்வளவு கொடூரமாக இருந்தால், ஒரு தாழ்த்தப்பட்டவர் எப்படி அதை சிலாகிப்பார்?

அதுபோல், ‘ ஈழப்பிரச்சினையோடு தமிழகப் பிரச்சினை பொருத்தி பார்ப்பது பொருத்தமல்ல. இந்தப் போக்கு,  ஈழ மக்களின் துயரங்களுக்காகப் போராடுகிற தன்மையை வலுவிழுக்கச் செய்யும். தமிழ்நாட்டுப் பிரச்சினையும், ஈழ மக்கள் பிரச்சினையும் ஒன்றல்ல. ஜாதிகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளுககு எதிராக, குரல் கொடுப்பதுதான் தமிழக அரசியல் சூழலுக்கு முதன்மையானது.  தமிழ்த் தேசியவாதிகள் இந்து மத எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு இவைகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டும்’ என்று நாம் சொன்னால், அதில் உள்ள நியாயத்தை தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிற தமிழ்த்தேசியவாதிகள், புரிந்து கொள்கிறார்கள். ஒத்துக்கொள்கிறார்கள்.

அதற்கு மாறாக, தமிழர்களிடம் பிளவை உண்டு பண்ணுபவனாக, நம்மீது குற்றம்சாட்டி, கோபம் கொண்டு வசவு வைப்பவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது தலித் அல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் தமிழ் உணர்வு அல்ல; ஜாதி உணர்வும், தலித் விரோதமும்தான். அவர்களின் தமிழ் உணர்வு அவர்களின் ஜாதி உணர்வுக்கு, மத உணர்வுக்கு எதிரானதாக இல்லை. அதனால்தான் தமிழ் உணர்வு பீய்ச்சி அடிக்கிறது. ஆனால், பெரியார்-அம்பேத்கரின் அரசியல், அவர்களின் ஜாதி உணர்வுக்கு வேட்டு வைப்பதாக இருப்பதால்தான் இந்தக் கோபம். அல்லது அவர்களை புறக்கணிக்கிறத் தன்மை. இதை தீவிரமாக வலியுறுத்துவதால்தான், என்னை தமிழுக்கு, தமிழனுக்கு எதிரானவனைப்போல் சித்தரிக்க முயலுகிறார்கள்.

மத மூடத்தனங்கள் நிரம்பியிருக்கிற தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ என்று சொன்ன பெரியார்தான், தமிழ் மீது இந்தி ஆதிக்கம் வந்தபோது எதிர்த்து நின்றார்.

அப்போது தமிழறிஞ்ர்கள், கம்பராமாயணத்தில் கவிழ்ந்துகொண்டு இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டும், பெரிய புராணத்திற்கு பேன் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள்.

அதுபோல், ஜெயகாந்தன் – பார்ப்பனர்கள் நிறைந்த சபையில், தமிழை, தமிழறிஞர்களை கேவலப்படுத்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசியபோது,  அதே மேடையில் ஏறி ஜெயகாந்தனை கண்டித்தவன் நான்தான்.   அப்படி பேசியதற்காக,  தமிழகம் முழுக்க தோழர்களாலும், பெரியார் தொண்டர்களாலும் ஜெயகாந்தனுக்கு எதிர்ப்பும், மன்னிப்பு கேட்கும்  சூழலை உருவாக்கியவனும் நான்தான்.  என்னை போன்ற பெரியார் தொண்டர்கள்தான். தமிழறிஞர்களோ-தமிழன உணர்வாளர்களோ அல்ல.

மாறாக, அதே கூட்டத்தில் பார்வையாளராக வந்திருந்த ‘பிள்ளைமார் தமிழறிஞர்கள்-கவிஞர்கள்-எழுத்தாளர்கள்’ சிலர், அமைதியாக ஜெயகாந்தினிடம் பல்லைக் காட்டிக் கொண்டு அசடு வழிந்து கொண்டிருந்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம், கட்சி வேறுபாடின்றி ஜாதி வேறுபாடின்றி மாபெரும் எழுச்சியை ஏற்படு்த்திய தியாகி முத்துக்குமார், என் உடலை காவல் துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்என்று தமிழனத்திற்கான தன் உயிலில் எழுதியிருந்தார். ஆனால், அங்கிருந்த தமிழினத் தலைவர்களும், தமிழன உணர்வாளர்கள் பலரும் முத்துக்குமார் உடலை உடனே எடுத்து எரித்துவிடுவதில், காவல் துறையைவிட அதிக ஆர்வம் காட்டினார்கள்.

உணர்வுமிக்க வழக்கறிஞர் நண்பர்களோடு இணைந்து, முத்துக்குமார் உடலை அன்று எடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தி, அதை மறுநாளுக்கு மாற்றியது பெரியார் தொண்டானாகிய  நான்தான்.

ஆனால், இன்று?

முத்துக்குமாரை  ஈழமக்களின் ஆதரவு தீப்பபந்தமாக,  மாற்றுவதை விட்டுவிட்டு, திமுக எதிர்ப்பாளராக மட்டுமே மாற்றிக் கொண்டார்கள், இந்த சவடால் தமிழ்த்தேசியவாதிகள்.

அவர் பெயரை கூட்டம் சேர்ப்பதற்காகவும், புத்தகம் விற்பதற்கான ஒரு நல்ல பிராண்டாகவும், ஜாதி அடையாளம் தந்தும் அவமானப்படுத்துகிறார்கள், ஜாதி உணர்வு தமிழ்த்தேசியவாதிகள்.

எப்போது எதை செய்யவேண்டும்? எதற்கு முன்னுரிமை தரவேண்டும்? என்று தெளிவாகத் தெரிந்திருப்பவன்தான் சமூக அக்கறை உள்ளவனாக இருக்க முடியும். மாறாக, அரசியல் தெளிவின்றி வெறும் ஆர்வமும், கோபமும் இருந்தால் அவர்களை சந்தர்ப்பவாதிகள்தான் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்வார்கள். சமூகத்திற்கு எந்த நன்மையும் ஆகாது.

***

தமிழறிஞர்களுக்கு எதிராக, ஜெயகாந்தன் பேசிய விவகாரத்தை பற்றி தெரிந்து கொள்ள, நெல்லை கண்ணனை கண்டித்து, குமுதத்திற்கு நான் எழுதி ‘அது’ பிரசுரிக்க மறுத்த இந்தக் கடிதத்தை, மீண்டும் பிரசுரிக்கிறேன்.

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

16.5.2005 தேதியிட்ட குமுதம் இதழில் ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் எழுதிய கடிதத்தை மறுத்த ஒரு கடிதம்.

23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவில் சமஸ்கிருத ஸேவ ஸமிதி சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டுவிழாவில், ஜெயகாந்தன் பேசி, அந்த அநாகரிகமானப் பேச்சை நான்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தினேன்.

குமுதத்தில் ஜெயகாந்தன் பேசியதாக நெல்லை கண்ணன் குறிப்பிட்டிருக்கிற அந்த வாக்கியங்கள் அப்படியே, மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தங்களின் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு, ஜெயகாந்தனுகுக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து 28.4.2005 அன்று ராணி சீதை அரங்கத்தில் அவருக்கு நடந்த மற்றொரு பாராட்டு விழாவில் அவர்கள் விநியோகத்ததில் இருந்தது.

அடுத்து, ‘ஸம்ஸ் கிருத ஸேவா ஸமிதி’யில் ஜெயகாந்தன் பேசிய மக்கள் விரோதப் பேச்சை, அம்பலப்டுத்தியவன் என்கிற முறையிலும், அதே மேடையில் நிகழ்ச்சி முடிந்தபிறகு, ஜெயகாந்தனிடம், ‘‘உங்களுக்க இங்கு நடந்த பாராட்டு விழா, உங்கள் திறமைக்கு கிடைத்த பாராட்டல்ல. உங்களின் இந்தச் செயலுக்கு கிடைத்ததுதான்’’ என்று சொன்வன் என்ற முறையிலும், (‘‘ஆமாம், அதற்காகதான் இந்தப் பாராட்டு’’ என்றார் ஜெயகாந்தன் . அருகில் முனைவர் பொற்கோ இருந்தார்.)நெல்லை கண்ணன் கடிதத்தில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெயகாந்தனின் தமிழ், தமிழர் விரோதப் போக்கை கண்டிக்கிறார் நெல்லை கண்ணன். சரிதான். ஆனால், உங்களின் ஞானத்தந்தை பாரதியும், ஜீவாவும் போல் நீங்கள் இல்லை என்று கண்ணன் சொல்லியிருப்பது, ‘பா.ஜ.க மதவெறி கட்சி’ என்று சொல்லுகிற ஒருவர், ‘ஆர் எஸ்.எஸ், அற்புதமான கட்சி’ என்று சொல்லுவது போல் இருக்கிறது.

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

பாரதியின் ஜிராக்ஸ் காப்பிதான் ஜெயகாந்தன். ‘ஸமஸ் கிருத ஸேவ ஸமிதியில்’ ஜெயகாந்தன் சொன்னக் கருத்து, கருத்தென்ன ஒவ்வொரு வார்த்தையும் பாரதிக்குச் சொந்தமானது.

‘‘வரண் வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’ – ஜெயகாந்தன்.

“வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

விந்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் – தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி –

பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி

……………………………………………………..

…………………………………………………….

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே – செத்துவீழ்ந்திடும் மானிடச் சாதி”

பாரதியார்

‘‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது’’ -ஜெயகாநதன்

“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸமஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவானம்.”

’‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாக கொண்டாடி வரும் ஸமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதை தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்கு தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வபாஷை யென்கிறொம்.”

“எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மாஹான்கள் வழங்கிய பாஷை”

“தமிழர்தகளாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் அவசியமாகும்.  ‘இங்கிலிஷ் பாஷை அன்னியருடையது, நமது நாட்டிற்குச் சொந்தமானதன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினர்களுக்கும் ஸ்திரமாகப் பதிந்துவிடும் இயற்கை உடையதன்று. ஹிந்தியோ அங்ஙனமன்ற”’

பாரதியார் (பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு)

ஆக, என்றும் பேசுகிற வாய் ஜெயகாந்தனுடையதாக இருக்கலாம். அதிலிருந்து வருகிற வார்த்தைகள் பாரதியுடையது.ஜெயகாந்தனை விமர்சிக்கற ஒருவர் பாரதி ஆதரவாளராக இருக்க முடியாது.  இருக்க கூடாது.

அடுத்து ப.ஜீவானந்தம்

தந்தைபெரியரை எவ்வளவோ பேர் அவதூறாக, கேவலமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். ஆனாலும் ப. ஜீவானந்தம் பெரியாரை கேவலப் படுத்தியதுப் போல்,. இதுவரை யாரும் செய்ததில்லை. இதோ பெரியார் மீது ஜீவா அடித்துச் சேற்றில் இருந்து சில துளிகள்.

சுயமரியாதைத் தந்தை, சிந்தனை சிற்பி, புரட்சிப் பெரியார் என்ற பெரிய பட்டங்களைச் சூடி, சமதர்ம இயக்கத்தை பொதுமக்கள் புரட்சி எழுச்சியை காட்டிக் கொடுத்திருக்கிறார்.

அழுகிப் போன ஜமீன்தாரி, நிலச் சுவான்தாரி வர்க்கத்தின் பாதை. பிற்போக்குப் பணமூட்டைகளின் பாதை, ஈரோட்டுப் பாதை.

1935 மார்ச் 10 ஆம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். பொய்புளுகுகளோடு. கனமான பாஷைப் பிரயோகத்தில் டாட்டன் ஹாமையும் மிஞ்சினார் ஈ வெ.ரா என்பது உறுதி. (பா.ஜீவானந்தம் எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலிலிருந்து)

இதுதான் ஜீவாவின் ‘நேர்மை’ . இந்த ஜீவாவிடம் இருந்து ஜெயகாந்தன் கற்றுக்கொண்டது, மார்க்சியத்தை அல்ல. பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியை, திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பை. அதனால்தான் ‘ஜெயந்திரன்’ போன்ற எவ்வளவு மோசமான விஷயத்தையும் ஆதரிக்கிற ஜெயகாந்தன்,

தன்னுடைய சந்தர்ப்பவாதத்திற்காகக் கூட திராவிட இயக்கங்களை ஆதரிப்பதில்லை, என்பது மட்டுமல்ல, அவைகளை தொடர்ச்சியாக எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறார். சமீபத்தில் ஞானபீட விருது பெற்றமைக்காக வாழ்த்துச் சொல்ல முயற்சித்த கலைஞரை திட்டமிட்டு அவமானப்படுத்தியது வரை.

ஆக, தமிழைத்தாண்டி சமஸ்கிருத மதிப்பும், வேதம், பகவத்கீதை, இந்து, இந்தி இவைகள்தான் இந்தியா என்கிற பாரதியின் துடிப்பும்- பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சி, திராவிட இயக்க எதிர்ப்பு என்கிற ஜீவாவின் வெறுப்பும் கலந்து செய்த கலவைதான் ஜெயகாந்தன்.

இந்த ‘தத்துவ’ பின்னணியே ஜெயகாந்தனுக்கு ‘ஞான பீட விருது ’ வரை பெரிய அங்கீகாரத்தைப் பெற்று தந்திருக்கிறது. இதற்குப் பெயர்தான் ஜெயகாந்தனிசம். இப்படியாக உண்மை இருக்க, நெல்லை கண்ணனோ அசலைப் புகழ்ந்து, நகலை நக்கல் செய்கிறார். இதுவும் ஒருவகையில் ஜெயகாந்தனிசமே.

***

குமுதம் இந்தக் கடிதத்தைப் பிரசுரிக்கவில்லை. பாரதிக் குறித்த விமர்சனம் இடம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம். எல்லோரையும் கேலி செய்கிற குமுதம், இதுவரை பாரதிப் பற்றிய சின்னக் ‘கீறலை’க் கூட வெளியிட்டதில்லை என்பதே என் ஞாபகம்.

‘ஜெயேந்திரன் கொலை செய்தார்’ என்று அரசு ஆதாரங்களைச் சொல்லி கைது செய்த போதிலும்,‘இல்லை அவர் கொலை செய்து இருக்கமாட்டார்’ என்று நம்ப மறுக்கிற அவரின் பார்ப்பனப் பக்தர்களைப் போல், ‘பாரதி இந்து மத, பார்ப்பனச் சிந்தனையாளர்கள்தான்’ என்பதை அவரின் எழுத்து உதாரணங்களோடு நான் நிருபித்த போதும், (‘பாரதி ’ய ஜனதா பார்ட்டி நூலில்) பாரதி பக்தர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். இருக்கட்டும்.

மூடநம்பிக்கைகள் ‘முற்போக்காளர்களிடம்’ (அறஞர்கள்) இருக்கமுடியாது என்று நினைப்பதுக் கூட ஒருவகையான மூட நம்பிக்கைதானே. அதற்காக குமுதத்தை ‘முற்போக்கு’ என்று சொல்வதாக அர்த்தமில்லை.

குமுதம்-முற்போக்காளர்களும்- மதவாதிகளும் உள்ளார்ந்த உணர்வோடு, சந்தித்துக் கொள்கிற மையப்புள்ளி பாரதி என்பதற்காகச் சொன்னேன்.

இந்த கடிதத்தைப் பிரசுரித்த சிந்தனையாளன், கவிதாச்சரண், நாளைவிடியும் இதழ்களுக்கு நன்றி.-வே.மதிமாறன்

16.5.2005

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

https://i1.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/04/evr-with-periyar.jpg?resize=449%2C594


பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.

இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா’ என்கிற பாணியில் அவரால் ஆளக்கப்பட்டவர்களாளேயே உண்டாக்கப்படுகிறது. பெரியார்  காலத்திலேயே இதுபோன்ற நெருக்கடிகளை அவர் சந்தித்திருக்கிறார்.

1936ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைவர் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே ப.ஜீவானந்தம், ‘பெரியார் நீதிக்கட்சிகாரர்களிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்தார்.  ஜீவானந்ததி்ற்கு நன்றாக உரைப்பது போல், பெரியார் உரிய சாட்டையடி பதிலை தன் தலைமை உரையில் தந்தார்.

ஆனாலும், பின்னாளில் ஜீவா, பெரியாரிடம் இருந்து விலகி, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டினார். அதான் கம்பராமாயணத்திற்கு மார்க்சிய முலாம் பூசினார்.

அதற்குப் பிறகும் பார்ப்பனர்கள் மனம் குளிர வைக்கும் வகையில், பெரியாரை மிக கேவலமாக, ‘கைகூலி, சாக்கடை’ என்றெல்லாம் திட்டி எழுதினார். உண்மையில் அவரின் நோக்கம், பெரியாரிடம் இருந்தால் இந்து மதத்தை, பார்ப்பனர்களை, ஜாதி வெறியர்களை பகைத்துக்கொண்டு வாழ வேண்டும். பார்ப்பன ஆசிர்வாதம் இல்லாமல், நாம் தனி தலைவராக உருவாவது தடைபடும் என்பதுதான்.

சுருக்கமா சொல்லுனும்னா ‘கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’

இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜீவா அறியப்படுகிறார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் பெரியார்தான் தலைவராக போற்றப்படுகிறார்.

***

பெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும், 1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது ச்சும்மா…’

அவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.

பெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.

பெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி,  எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என்று பேசி, போராடி மக்களிடம் செருப்படியும், கல்லடியும் வாங்குவதற்கு பதில் – தமிழ், தமிழன் என்று  பேசி தமிழர்களிடம் செல்வாக்கு பெருவது சுலபமாகவும், வசதியாகவும் இருந்ததால், இந்த தமிழ் வண்டி 100 மைல் வேகத்தில் பறந்தது.

‘தமிழன்’ என்ற சொல் கூட்டம் சேர்ப்பதற்கு வசதியாக இருந்தது. கூட்டம் சேர, சேர தமிழ் உணர்வும் பீறிட்டுக் கிளம்பியது. தமிழ் உணர்வு கட்சியாக மாறியது. கட்சி ஆட்சியாக மாறியது.

இன்றைக்கும் விஜயகாந்த் வரை, ‘தமிழ்-தமிழன்’ என்று கொஞசம் டென்சனாக சவுண்டு கொடுத்துப் பேசினால், கூட்டம் சேருகிறது. கூட்டத்தை பார்த்த உடனே அவர்களுக்கு ஆட்சி கனவு வருவதற்கு அண்ணாதுரையின் ‘பார்மெட்டே’ பிள்ளையார் சுழியாக பயன்படுகிறது.

இதில் வேடிக்கை, பெரியாரின் தலைமை பிடிக்காமல் தனியாகப் போய் கட்சி ஆரம்பித்த அண்ணாத்துரை, ‘திமுகவின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அது தந்தை பெரியாருக்காக காத்திருக்கிறது’ என்று பெரியாரை திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். அல்லது பெரியார் மீது செண்டிமென்டாக தாக்குதல் நடத்தினார். இத்தனைக்கும் பெரியார், மணியம்மையை விவாகரத்துகூட செய்துவிடவில்லை. அப்புறம் ஏன் இந்த அழைப்பு?

பெரியாரின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்கள் ஏன் பெரியாரை விட்டு விலக வேண்டும்? ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும்? பெரியாரின் தலைமைதான் முக்கியம் என்றால் மீண்டும் திகவிற்கே திரும்பி  இருக்கலாம் அல்லது திகவைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்.

பெரியாருக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, தொண்டர்கள் மத்தியில், ‘அண்ணாவிற்கு என்ன ஒரு பெருந்தன்மை? இவரல்லவா தலைவர்!’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கான யுக்தியல்லவா? இதை விடவா பெரியாரை கேவலப்பத்த முடியும்?

அண்ணாத்துரை மற்றும் கூட்டாளிகளின் இந்த செயல்களைப் பற்றி, சுருக்கமா சொல்லுனும்னா  ‘இந்தக் கிளிக்கும் இறக்கை முளைளச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’

இன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.

***

பெரியாருக்கு பின் மிக சமீப காலங்களில் பெரியாரின் பேரன்களில் சிலர் திடீர் என்று ஒருநாள், ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. தலித்துகளுக்கு எதிராக இருந்தார்’ என்று அவதூறுகளை அள்ளி வீசி பெரியாரின் மார்பில் முட்டினார்கள்.

இன்னும் சில பிற்படுத்தபப்பட்ட குழந்தைகள், பெரியாரை நேரடியாக விமர்சிக்க தயங்கி, ’திராவிட இயக்கம் என்ன செஞ்சி கிழிச்சிது?’ என்று பெரியாரின் தாடி மயிரை பிடித்து இழுக்கிறார்கள்.

ப.ஜீவானந்ததிலிருந்து, இன்றைக்கு பெரியாரை விமர்சிப்பவர்கள் வரை, தங்கள் கொள்கை என்ன வென்று சொல்லாமல், பெரியாரை விமர்சிப்பதே தங்கள் கொள்கையாக அடையாளப்படுத்துகிறார்கள்.

பெரியாரை விமர்சிக்கக் கூடாதா? பெரியார் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?”

இல்லை. தமி்ழ் நாடு கடவுளையே செருப்பால் அடித்த ஊரு. இங்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.

ஆனாலும் பெரியாரை விமர்சிப்பவர்கள் அவரைத் தாண்டி சிந்தப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது செயல்படவேண்டும். ஆனால், இவர்களோ வரலாற்றை பின்னோக்கி இழுத்து, பெரியாரிடம் சண்டையிட்டு, பார்ப்பனியத்திடமும், இந்து மதத்திடமும், ஜாதிய அபிமானிகளிடமும் சரணடைகிறார்கள்.

பெரியாரை விமர்சித்த ஜீவா, பெரியாரின் தாக்குதலால் சாய்ந்தபோன கம்பராமாயணத்திற்கு முட்டுக்கொடுத்தார். பெரியாருக்கு எதிராக பார்ப்பன பாரதிக்கு காவடி தூக்கினார்.

பெரியாரோடு முரண்பட்டு புதுக்கட்சி உருவாக்கிய அண்ணாத்துரை, பெரியாரின் அரசியல் எதிரியான பார்ப்பன ராஜாஜியோடு தேர்தலில் கூட்டு வைத்துக்கொண்டார்.

பெரியாரை தலித் வீரோதியாக சித்திரித்த குணா, ரவிக்குமார் போன்றவர்கள் அதற்கு மாற்றாக பார்ப்பனியத்தை பரிந்துரைத்தார்கள்.

‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் சுற்றி வளைதது மூக்கை தொடுவதைப்போல், மறைமுகமாக பெரியாரை சீண்டுகிற நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், பார்ப்பனியத்தை ஆசையோடு கள்ளப் பார்வை பார்க்கிறார்கள்.

இப்படி பார்ப்பன ஆதரவு நிலைகொண்டு, பார்ப்பனரல்லாதவர்கள் கொடுக்கிற நெருக்கடியை பெரியார் மிகச்சாதரணமாக, பலமுறை தகர்த்திருக்கிறார். மாறாக, பெரியாரை தகர்க்க நினைத்தவர்கள்தான் தகர்ந்து போயிருக்கிறார்கள். மீண்டும் பெரியாரிடமே வந்து மண்டியி்ட்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்கள்.

***

இதுபோன்ற பெரியார் எதிர்ப்பு-திராவிட இயக்க எதிர்ப்பு சூழல் 1992-93 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக இருந்தது.

பிரபஞ்சன், ராஜேந்திர சோழன் போன்ற எழுத்தாளர்கள், பார்ப்பன குடும்ப சூழலை பின்னணியாக கொண்டு, பார்ப்பன மொழி நடையில் எழுதப்பட்ட பார்ப்பன இலக்கியங்களை, ‘நவீன இலக்கியங்கள்’ என்று பெயர் சூட்டி, குறிப்பாக மவுனி, சுந்தர ராமசாமி,  மலையாள பிட்டு படத்து கதையான ‘மோகமுள்’ நாவலை எழுதிய தி. ஜானகிராமன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே –

இன்னொருபுரத்தில் தமிழ் மொழி உணர்வு, அரசியல் விழிப்பபுணர்ச்சி, யார் வேண்டுமானாலும் கவிதை, கதை எழுதலாம், எழுத்தாளராகலாம், பேச்சாளராகலாம், பத்திரிகை நடத்தலாம் அதற்கு பிறப்பின் அடிப்படையில் தகுதியோ,  மொழிப் புலமையோ தேவையில்லை. சமூக அக்கறையும், மொழி உணர்வும் இருந்தால் போதும் என்று இலக்கியத்தை ஜனநாயகப்படுத்திய திக, திமுகவைச் சேர்ந்த திராவிட இயக்க எழுத்தளார்களை கேவலப்படுத்தினார்கள். இதில் பார்ப்பனரல்லாத பிரபஞ்சன் போன்றவர்களின் பங்கும் இருந்தது. ஆனால், பிரபஞ்சனின் பங்கு மிகத் தீவராமாக இருந்தது. (அப்போது ரவிக்குமார் திராவிட இயக்க ஆதரவாளராக, தீவிர பெரியார் பற்றாளராக இருந்தார். எஸ்.வி. ராஜதுரை-வ.கீதாவின் பெரியார் சமதர்மம் நூலை (96ஆம் ஆண்டு) அவர்தான் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.)

‘பெரியார்-மணியம்மை திருமணம் தவறு. அது செல்லாது’ என்கிற பாணியில் மிக கடுமையாக பெரியாரின் இரண்டாவது திருமணத்தை கண்டித்து நக்கீரனில் எழுதினார் பிரபஞ்சன். அவர் எழுதியதை ‘நன்றி பிரபஞ்சன்’ என்று நோட்டிஸ் போட்டுக் கொடுத்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.

ஆக, பார்ப்பன ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் பெரியார் எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க எதிர்ப்பு காலபோக்கில் அவர்களாலேயெ கடைப்பிடிக்க முடியாமல் மீண்டும் பெரியாரிடமே வந்து சரணடைந்து விடுகிறார்கள்.  இதற்கு அடிப்படை காரணம், பெரியார் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதைவிட, பார்ப்பனர்களால் இவர்களுககு காரியம் ஆகவேண்டும் என்பதுதான் முக்கியம்.

பெரியார் எதிர்ப்பாளராக இருந்தால் அந்தக் காரியம் சீக்கிரம் நடக்கும் என்பதுதான் பெரியார் எதிர்ப்பின் உள்ளர்த்தம். அப்படியும் காரியம் நடக்காமல் போனால்……? இருக்கவே இருக்கிறது மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு.

பெரியார் எதிர்ப்புக்கும், பாரதி அபிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பெரியார் எதிர்ப்பையும் பெரியார் ஆதரவையும் மாறி மாறி செய்கிற இந்த அறிவாளிகள், பெரும்பாலும் பாரதி மீது் அபிமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். காரணம், பெரியார் கருத்துக்களில் தன்னை ஈடுபாடு உள்ளவர்களாக காட்டிக் கொண்டாலும் பாரப்பனர்களோடு சுமுகமாக பழகுவதற்கு பாரதிதான் இவர்களுக்கு கைகொடுக்கிறார். பார்ப்பனர்களிடம் தன்னை முற்போக்காளனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் உறவு முறியக்கூடாது. அப்படியானால் அங்கே பெரியார்-அம்பேத்கர் பற்றியா பேச முடியும்? பேசினால், கை குலுக்கலா நடக்கும்.? கை கலப்புதான் நடக்கும்.

இந்த இக்கட்டில் இருந்து பார்ப்பனரல்லாத அறிவாளிகளை காப்பதற்காகத்தானே,  அவதாரம் எடுத்திருக்கிறான் ஆபத்தாண்டவன் பாரதி. அந்தக் காலத்து ஜீவா முதல் இந்தக் காலத்து திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்கள் வரை இவர்களுக்கு கைகொடுக்கிற ஒரே கடவுள் பாரதி அய்யர்தானே.

***

பெரியாரின் மார்பில் முரட்டுத்தனமாக முட்டி மோதி  பிறகு சறுக்கி, பெரியாரின் பாதத்தில் வந்து விழுந்துவிடுகிறார்கள், பரிதாபத்திற்குரிய பார்ப்பனரல்லாத, இந்த பெரியார், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.

பார்ப்பனரல்லாத திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பெரியார் மீது வீசிய கேள்விகளை குறித்து,  1993 ல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடத்திய ‘இனி’ இதழில் ஒரு கவிதை எழுதினேன்

பிரபஞ்சனின் திராவிட இயக்க எதிர்ப்பு மனோபாவமே, இந்த கவிதையை எழுதுவதற்கு எனக்கு உந்துதலாக அல்லது உள்ளடக்கமாக இருந்தது.

பெரியாரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் அந்தக் கவிதையை இங்கு பிரசுரிக்கிறேன்.

இதை எழுதி 16 ஆண்டுகள் ஆகிறது. அப்போது பெரியாரின்-திராவிட இயக்கத்தின் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் இப்போது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அப்போது ஆதரவாளராக இருந்தவர்கள் இப்போது எதிப்பாளராக மாறி இருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கவிதை பொறுத்தமாக இருக்கிறது. இந்தக் கவிதை எப்போது பொறுத்தமற்று போகிறதோ அப்பபோது் சமூகம் பல படி முன்னேறி இருக்கிறது என்று அர்த்தம். பார்ப்போம்.

***

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

பனை ஏறும்

தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்.

***

“பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”

இதுமுடி வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

***

“என்னங்கபெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக்க

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன்.

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

***

இனி மாத இதழுக்காக 1993 அக்டோபரில் எழுதுயது

தொடர்புடையவை:

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

‘எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்’ இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

https://i1.wp.com/cache.daylife.com/imageserve/0eGW2kfa7bbzl/340x.jpg?w=474

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகம்

ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது.

தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் காசு வாங்கிக் கொண்டு படுகொலை செய்கிற ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஜூனியர் விகடன் விகேஷ் மட்டுமல்ல, இன்னும் பல ‘எட்டப்பன்கள்-பச்சைத் தமிழன் புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான்கள் -ஆற்காட்டு நவாப்புகள்’ பத்திரிகை உலகில், பல பெரிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.. (நக்கீரன் மட்டும்தான் அம்சா சதியை அம்பலப்படுத்தியது )

ஆட்சியில் நடக்கும் ஊழல்களை துப்பறிந்து உலகத்துக்கு அம்பலப்படுத்துவதாக மார்தட்டுகிறது ஜூனியர் விகடன். ஆனால், தன் நிறுவனத்தில் இப்படி ஒரு ஊழல் நடப்பது உலகத்துக்கே தெரிந்த பிறகும், தனக்கு தெரியாமல் ஜூனியர் விகடன் துப்பு கெட்டு கிடந்தது எதனால்?

திடீர் என்று தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்கு விகேஷை மட்டும் பலியிட்டது எதனால்?

இதே ஜீனியர் விகடனும், இன்னும் பல பத்திரிகைகளும் ஈழத்தமிழர்களின் கொலைகளை நியாப்படுத்தியும், போராளிகளை காட்டிக் கொடுத்த துரோகிகளின் பேட்டிகளை பிரசுரித்தபோதும், எத்தனை பேர் இந்த பத்திரிகைகளை கண்டித்தார்கள்?

மாறாக, ‘நம்ம கிட்ட ஒரு பேட்டி எடுக்க மாட்டானா? நம்மள ஒரு கட்டுரை எழுத சொல்ல மாட்டானா?’ என்று நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு அலைந்தார்கள் எழுத்தளார்களும், பிரபலங்களும். அல்லது அதை கண்டித்தால் நாம அந்தப் பத்திரிகைகளில் எழுத முடியாது. நம்ம தொடர நிறுத்திடுவான்.  நம்ம பேட்டிய போட மாட்டானுங்க… என்று பம்மிக் கொண்டு கிடந்தார்கள்.

ஒரு பேட்டிக்கும், இரண்டு பக்கம் கட்டுரை எழுதற வாய்ப்புக்காகவும் பத்திரிகைகளின் மோசடிகளை கண்டிக்காமல், காந்தியின் குரங்குகளைப்போல்,  கண்ணை, காதை, வாயை மூடிக்கொண்டு சோரம்போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், ‘சமூக அக்கறை’ கொண்ட பெரும்பாலான எழுத்தாளர்களும், பிரபலங்களும்.

தமிழனல்லாவர்கள் யாராவது தமிழின விரோதிகளாக இருந்தால், ‘தமிழனாக இருந்தால் இதை செய்வானா?’ என்று சவடால் பேசுகிறார்கள், சில தமிழனவாதிகள். இன்று பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல முதலாளிகளும், பொறுப்பில் உள்ளவர்களும் பச்சை தமிழர்கள்தான்.

இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?

தமிழன் என்பதற்காகவே தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை அரசின் படுகொலைகளை நியாப்படுத்தி, ‘விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது, இடையில் சிக்கி பலியான தமிழர்கள்’ என்று படத்திற்கு கீழ் ஏதோ தமிழர்கள் தற்செயலாக கொல்லப்பட்டதுபோல் ‘புட்நோட்’ எழுதினார்கள்.

புலிகளை காட்டிக் கொடுத்தவர்களோடு உறவு வைத்துக் கொண்டு பணம் பார்த்தார்கள்.

இன்னொருபுரம் ஆதரவாக செய்தி வெளியிடுதைப்போல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய செய்திகளை, கட்டுக்கதைகளாக எழுதி அவர் படங்களை பிரசுரித்து, புலிகளின் ஆதரவாளர்களையும், வாசகர்களையும் ஏமாற்றி பணம் சேர்த்தார்கள்.

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களுக்கு மேல், மிக கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறார்கள். பலர் நிர்வாணப்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்படுகிறார்கள். ஆனால் இந்த தமிழ் பத்திரிகைகள் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழர்களிடம் அரசியல் எழுச்சியை உண்டாக்குவதற்கு பதில், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், ‘ஈழ வரலாறு-இலங்கை வரலாறு-பிரபாகரன் வரலாறு’ என்று பழைய கதைகளை எழுதி, தமிழர்களை வெற்று பெருமை பேச வைத்து, பணம் பார்க்கிறார்கள்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போரடுகிறவர்களின் பாக்கெட்டில் கைவிட்டு திருடுகிறவனைப்போல், ஈழத் தமிழர்களின் துயரங்களை வைத்து பணம் சம்பாதிப்பவைகளாகத்தான் இருக்கிறது தமிழ் பத்திரிகைகள்.

தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலை, ஈழத்தமிழர்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை. அதன் மூலம் பலகோடி ரூபாய் பெரும் லாபம் அடைந்தவர்கள் தமிழ் பத்திரிகைகள்தான்.

எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம் என்று செயல்படுபவைகள்தான் தமிழ் பத்திரிகைகள்.

தமிழ் பத்திரிகையாளர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவளார்களான சில உணர்வாளர்கள்கூட,  தங்கள் உணர்வை  இணையங்களில் ரகசியமாக புனைப் பெயர்களில்தான், பகிர்ந்து கொண்டார்கள். ‘ஆபிசுக்கு தெரிஞ்ச பிரச்சினை.. யாருக்கிட்டயும் சொல்லாதீங்க…அதை எழுதுனது நான்தான்…’ என்கிற பாணியில்…

ஆனால், தமிழர்களுக்கு எதிரான  சிங்கள அரசின் கொடுமையை உலகத்துக்கு அம்பலப்படுத்தியவர்கள், சிங்களப் பத்திரிகையாளர்கள்தான். தமிழர்களை கொன்று குவிக்கிற ராஜபக்சே அரசை கண்டித்து,  தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார்கள் சிங்களப் பத்திரிகையாளர்கள். சிங்களப் பத்திரிகையாளர்களின் ஜனநாயகத் தன்மைதான், இன்று தமிழர்களின் துயரங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.

ஹிட்லருக்கு பிறகு, கடந்த் 50 ஆண்டுகளில் உலகில் இதுவரை, இதுபோன்ற ஒரு கொடூரத்தை எந்த நாடும் தன் சொந்த மக்களுக்கே செய்ததில்லை என்பதை நிரூபிப்பதைப்போல், தன் நாட்டில் வாழும்  தமிழ் மக்களை மிக கொடுமையான முறையில் கொன்று ஒழிப்பவன் ராஜபக்சே. இவனின் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்காக, நாடு கடத்தப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 30.

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூரத்தை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டதால், சிங்கள அரசால் இதுவரை கொலை செய்யப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 20.

2006 ல் இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதற்காக, திஸ்ஸ நாயகம் என்கிற  பத்திரிகையாளருக்கு (தமிழர்) 20 ஆண்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் துன்புறுத்தப்படுகிறார்.

இன்று இலங்கை ராணுவம் தமிழர்களை நிர்வாணப்படுத்தி, சுட்டுக்கொல்கிற கொடூரத்தை வெளி கொண்ர்ந்ததும் சிங்களப் பத்திரிகைளார்கள்தான்.

ஆனால், தமிழ் முதலாளிகளால், தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த தமிழ் பத்திரிகைகள்….. ச்சீ…

சவடாலாக பேசும் தமிழனவாதிகள் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் யோக்கியதை குறித்தும், பார்ப்பன அறிவாளிகளின் அயோக்கியத்தனத்தை பற்றியும்  16-02-2009 அன்று  கு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கேள்விக்கு எழுதிய பதிலை மீண்டும் பிரசுரிக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்?

-கு. தமிழ்ச்செல்வன்

‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.

‘ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது சிங்கள அரசு. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்கு தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.

இந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை. அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.

மற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.

‘சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது’ என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்த ‘சிங்களவர்கள்’ தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.

ஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போர்’ என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.

சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை?

காரணம், கொலை செய்யப்பட்ட அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் – யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.

ஆனால், பல தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, அவர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறும் எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.

நேர்மையான, திறமையான பத்திரிகையாளர்களை உடன் வேலை செய்கிற சக பத்தரிகையாளர்களுக்கும் பிடிப்பதில்லை. நிர்வாகத்திற்கும் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களை டம்மி ஆக்கி வைத்துக் கொள்வார்கள். அல்லது வேலையை விட்டு தூக்குவதற்கு நிர்வாகத்தோடு இணைந்து சக பத்திரிகையாளர்களும் சதி செய்வார்கள்.

நிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத,  எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி. ஜாடிக்கேத்த மூடி.

குறிப்பு:

* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா?

* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.

* ‘தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது’ என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற ‘ஊதாரி-உதவாக்கரை-தரமான’ எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.

16-02-2009 அன்று  எழுதியது.

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில்  ஈடுபட்ட நேரு, ராஜாஜி போன்ற தலைவர்கள் அதற்கு விலையாக இந்த நாட்டையே பெற்றார்கள். இதுவா தியாகம்?
தியாகம் என்பது முற்றிலுமாக தன்னை இழப்பது.
கட்டபொம்மன், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், பகத்சிங் என்று பலபேர் வெள்ளையரை  எதிர்த்து, தன் நாட்டுக்காக  உயிரையே தியாகம் செய்தார்கள். அந்த தியாகிகளின் வரிசையில் அர்பணிப்போடு பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய கடைசி தமிழன் வ.உ.சி.
மற்ற எந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நேராத அவலம் வ.உ.சிக்கு மட்டுமே நேர்ந்தது. அவர் ஒருவர்தான் பிரட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைககும் உள்ளானர். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கும், சதிக்கும் ஆளானார்.
வ.உசி வாழ்க்கையின் முற்பகுதி பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சீரழிந்தது. அவரின் பிற்பகுதி அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தில் சிக்கி பாழானது. வாழும் காலத்திலேயே, தான் கொண்ட கொள்கையின் இரண்டு நேர் எதிர் நிலைகளையும் சந்தித்த தியாகி, அநேகமாக வ.உ.சிதம்பரமாக மட்டுமாகத்தான் இருப்பார்.
5-9-2009 அன்று அவரின் பிறந்த நாள் என்பதால் அவரை பற்றிய நினைவுகளுக்காக…இந்தக் கட்டுரையை மீண்டும் பிரசுரிக்கிறேன்.

பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த “காண்டீன் கான்டிராக்ட்‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.

இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.

இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.

ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.

“வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி.

சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி.

1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன.

தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.

ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.

சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.

திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது

கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.

வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.

”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி.

மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.

நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.

வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.

அன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.

உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார்.

சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.

எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.

மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.

சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.

சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார்.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.

காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.

கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.

சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்” என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.

அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.

வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம்

1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.

19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார்.

1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை.

திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் “கவுரவிக்க‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:

“கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.

அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.

எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

-வே. மதிமாறன்

புதிய கலாச்சாரம் 2006

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

https://i1.wp.com/www.anu.edu.au/anugreen/files/403_question%20mark.jpg?resize=373%2C560

நீங்கள் ஏன் உங்களைப் பற்றியான விமர்சன கட்டுரைகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் மறுப்பு சொல்வதில்லை?

குமார்

நான் மறுப்பு சொல்ல வேண்டிய அளவிற்கு அவைகள் அருகதை அற்றவையாக இருப்பதுதான் காரணம்.

எனது கட்டுரைகளில், பதில்களில் நான்  எழுப்பிய கேள்விகளுக்கு உள்ளே வராமல், வெளியே சுற்றிவந்து அரைத்தமாவையே அரைத்து கொண்டிருப்பவர்களிடம் நான் விவாதிக்க போனால், நானும் அவர்களைப்போல் அரைத்த மாவையேதான் அரைக்கவேண்டியிருக்கும்.

அல்லது எனது எழுத்துக்களுக்குள் நுழைந்து பதில் சொல்லமுடியாதவர்கள், அதை  சுற்றி சுற்றி வந்து ‘  கம்முனாட்டி மதிமாறன் பிராமணரை மட்டும்தான் திட்டுவானா?’ ‘பாரதியை விமர்சிக்க இந்த மதிமாறனுக்கு என்ன யோக்கியதை இருக்கு?‘ ‘பொங்கி வருகிற தமிழனின் எழுச்சியை, சாதி உணர்வை தூண்டிவிட்டு திசை திருப்பிற மோசடி பேர்வழி மதிமாறன்’

‘மகஇகவின் கை ஆள் மதிமாறன்’ ‘இப்பதான் மதிமாறனுக்கு சாதி குறித்து தெரியுதா? நாங்க எல்லாம் இரண்டாயிரம் வருசத்துக்கு முந்தியே சாதிய எதிர்த்தவங்க… அப்ப எங்க போயிருந்தார் மதிமாறன்?‘ ‘இந்திய உளவு நிறுவனத்தின் கை ஆள் மதிமாறன்’ என்று அரசியல் விளக்கமே இல்லாமல், தங்கள் இயலாமையை  கோபமாக, கிசு கிசு பாணியில் தனிப்பட்ட முறையில் என் மீது மண்ணை வாரி தூற்றுவதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல?

ஒரு பெரியார் தொண்டனின் பார்வையில், டாக்டர் அம்பேத்கர் குறித்து  நான் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள், அந்தப் புத்தகத்திற்கு விழா எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களே விழா தேதியையும் சிறப்பு விருந்தினர்களையும் முடிவு செய்து  அறிவித்தனர். எல்லோருக்கும் விழா பற்றி எப்போது தெரியுமோ அப்போதுதான் எனக்கும் தெரியும்.

ஆனால், என் ‘இனிய நண்பர்களோ’ மிக மோசமான முறையில்… அவதூறுகளைப் பரப்பி, அந்த விழாவை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் அவதூறுகளை மறுத்து நான் சொல்வதற்கு என்ன பதில் இருக்கிறது?

தோழர்கள் கொளத்தூர் மணி, சீமான் பற்றி நான் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பேசியதாக, அவர்களிடமே ஒரு குழுவாக போய் மாறி, மாறி பரப்புகிற அவதூறுகளுக்கு நான் என்ன விளக்கம் தர?

அதிலும் குறிப்பாக தோழர் கொளத்தூர் மணியை நான் ஜாதி உணர்வாளர் என்று சொன்னதாக, அவரிடமே  சொல்லி இருக்கிற என் ‘இனிய நண்பர்களை’ பற்றி நான் என்ன விமர்சிக்க?

‘ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நானாக கவனித்துக் கொள்கிறேன்’ என்று யாரோ ஒரு இறை நம்பிக்கையாளர் புலம்பியதைபோலவா நான் புலம்ப முடியும்?

“நீங்கள், தோழர் கொளத்தூர் மணியிடமும், சீமானிடமும் இதுபற்றி விளக்கம் கொடுத்துவிடுங்கள்… இதனால் விழா நின்று விடப்போகிறது” என்று தோழர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பேசாத அல்லது எழுதாத ஒரு விசயத்திற்கு நான் ஏன் வலிந்து போய் விளக்கம் கொடுக்க வேண்டும்? இத்தனைக்கும் தோழர் கொளத்தூர் மணியோடு நான் வேறு விசயங்கள் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்படி ஒரு அவதூறு பரப்பப்படுவதை பொறுட்டாக மதித்து என்னிடம் ஒரு வார்த்தைகூட அவர் கேட்டதில்லை.

நண்பர் சீமான் இதை உண்மை என்று நம்பியிருந்தால், அவரே என்னை தொலைபேசியில் அழைத்தாவது கேட்டிருப்பார். இப்படி இருக்கையில் நான் மட்டும் இவைகளை ஏன் ஒரு பொறுட்டாக மதிக்க வேண்டும்?

அரசியல் சார்ந்து நான் எழுப்புகிற கேள்விகளுககு உரிய விளக்கம் அளிக்க முடியாத அரசியல் எதிரிகளும், தனிப்பட்ட முறையில் என்மீது காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் கொண்ட என் ‘இனிய நண்பர்களும்’ பரப்புகிற அவதூறுகளுக்கு நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?  (பொறாமை என்கிற உணர்வு-நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம்தான் வேலை செய்யும்)

பாரதிக்கே மறுப்பு எழுதிய எனக்கு இவர்களுக்கு மறுப்பு எழுவதுவதா முடியாது?

என் கருத்துகளுக்களை உரிய விவரங்களோடு, தர்க்கத்தோடு மறுத்து எழுதுபவர்களுக்கு மறுப்பு எழுதலாம். வெறுப்புக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என்ன செய்ய முடியும்?

தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்பினார்கள். ஆனால் அவைகளை ஒரு பொறுட்டாகவே மதித்ததில்லை தலைவர் பெரியார். பெரியாரை ‘தமிழனல்ல கண்டன்’ என்று தமிழ்த்தேசியவதிகள், தமிழறிஞர்கள் அவதூறு செய்தபோது மட்டும் தலைவர் இப்படிக் கேட்டார்:

தமிழர்களே! அட, மானங்கெட்ட தமிழர்களே! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம். நாயர்.

அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.தியாகராய செட்டியார்.

தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்?”

-விடுதலை நாளிதழ்

இந்த துணிச்சல், நேர்மை யாருக்கு வரும்?

தமிழர்களை ஏமாற்றி, ‘தமிழா நீ ஆண்ட பரம்பரை. இன்று அடிமைப்பட்டுக்கிடக்கிறாய்’ ‘தமிழ் இனம் உலகத்தின் மூத்த இனம்’ ‘தமிழ் என் மூச்சு’ என்றெல்லாம் ஏற்றி பேசி, தமிழர்களிடம் செல்வாக்கு பெற்று, தலைவனாக  மாறி நாட்டையே  பிடித்தவர்கள் மத்தியில், தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதை போன்ற  இப்படி ஒரு பதிலை தலைவர் பெரியாரைத் தவிர வேறு யாரால் தர முடியும்?

நான் இந்த சில்லரை விவகாரங்களுக்கு பதில் தரவேண்டும்மென்றால், தலைவர்போல்தான் பதில் தரவேண்டும்.

காந்தி தனது அரிஜன் பத்திரிகையில், டாக்டர் அம்பேக்ரின் இந்து மத எதிர்ப்பையும், அவரையும் விமரிசித்து விரிவான கட்டுரை எழுதினார். அதற்கு பதில் அளிக்க வந்த அண்ணல் அம்பேத்கர்:

சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. எனது எதிராளி ஒரு அனாமதேய ஆத்மா‘வாக இருந்திருந்தால், நானும் போனால் போகட்டும் என விட்டிருப்பேன். ஆனால், மகாத்மாவே என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.

நானும் அண்ணலைப்போல்தான். சிறப்பான காரணங்கள் இருந்தால்தான் விவாதித்திறகு வருவேனே தவிர, என்னை கடுமையாக திட்டுகிறார்கள் என்பதற்காகவே இந்த சில்லரைகளுக்கும், சில்லரை விசயங்களுக்கும் பதில் தரவேண்டிய அவசியம் எனக்கில்லை.