சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்

black board attack 003

சேதப்படுத்தப்பட்ட தகவல் பலகைக்கு முன் தோழர் கண்ணன்

4-10-2009 அன்று மும்பை தாராவியில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடந்த முப்பெரும் விழாவில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’ என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றிய என்னுடைய புத்தக அறிமுக விழாவும், டாக்டர் அம்பேத்கர் படத்துடன் உள்ள டி சர்ட்டும் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு நிகழ்வுகளாலும், எரிச்சலைடந்த இந்து மத ஜாதி வெறி கும்பல், தங்கள் ஆத்திரத்தை தங்கள் கையாலாகா தனத்தின் மூலம்  வெளிபடுத்தியிருக்கிறது.

மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த தோழர் கண்ணன், அங்குள்ள தகவல் பலகையில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’| என்ற புத்தகத்திலிருந்து,

‘அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

சரியாகவோதவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்காரர்கள். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?

என்ற வரிகளை 10-10-2009 அன்று காலை எழுதியிருக்கிறார். இந்த வரிகளினால், ஆத்திரம் அடைந்த ஜாதிவெறி இந்து மதவாத கும்பல், அன்று இரவு பலகையை சேதப்படுத்தி, அதன் மேல் ‘கடவுள்’ என்று எழுதிவைத்திருக்கிறது.

தோழர் கண்ணன் தகவல் பலகையில் எழுதிய இந்த வரிகளில், கடவுள் குறித்தோ, இந்து மதம் குறித்தோ நேரடியாக எதுவும் இல்லை. ஆனாலும் ஏன் இந்து மதவாதிகள் கோபப்படுகிறார்கள்?

இந்து மதம் வேறு, ஜாதி வேறு அல்ல என்பதைத்தான் இவர்களின் கோபம் மீண்டும் நிரூபிக்கிறது.

black board attack 004

பெயரும் ஊரும் சொல்லாத, ஒரு குரல் தோழர் கண்ணனின் செல்லுக்கு தொடர்பு கொண்டு, “இனிமேல் இதுபோல் எழுதினால், உன் கையை வெட்டுவேன்” என்று மிரட்டி இருக்கிறது.

பதிலுக்கு தோழர் கண்ணன், “என் கை இருப்பதே இதுபோல் எழுதுவதற்குத்தான்” என்று பதில் அளித்திருக்கிறார். மீண்டும் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துவிட்டு துண்டாகியிருக்கிறது அந்தக் குரல்.

அம்பேத்கர் என்கிற சொல், நேரடியான இந்து மதவெறியர்களுக்கும், ஜாதிய உணர்வாளர்களுக்கும் மட்டுமல்ல, வேறு மதங்களில் இருக்கிற தலித் விரோத எண்ணம் உடையவர்களையும், தங்களை ‘முற்போக்காளராக’ காட்டிக் கொள்கிற, பல பேரின் ஜாதி உணர்வையும், அவர்களின் தலித் விரோதப்  போக்கையும் அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் பற்றிய நூலை எழுதியதாலும், டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்டை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டுவந்ததாலும் நான் பல ‘முற்போக்காளர்களால்’ கடுமையாக தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறேன். புறக்கணிக்கப்படுகிறேன். அல்லது அவர்களின் ஜாதி உணர்வை தலித் விரோதப் போக்கை உணர்ந்துகொள்கிறேன்.

புத்துக்குள்ளாற புகையை வைச்சி ஊதுனா, உள்ள இருக்கிற விஷ பாம்பு வெளிய வரமாதிரி, டாக்டர் அம்பேத்கர் நிலையில் இருந்து ஜாதியை அனுகினால், முற்போக்காளர்களிடம் இருந்தும் ஜாதிவெறி படம் எடுத்து ஆடுகிறது.

இதுபோன்ற வன்முறைகளும், கொலை மிரட்டல்களும் ஜாதிவெறிக்கு எதிராக தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்வதும், போராடுவதும்தான் நமது முதன்மையான கடமை என்பதையே நமக்கு மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது.

அண்ணலின் வழியில் தொடர்ந்து போராடுவோம். சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலப்படுத்துவோம்.