பணமா? பாசமா?

பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே, அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும்?

வி.மஞ்சுளா, சென்னை.

அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அதைச் சொன்னார்.

நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றை தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கிற மோதிரம், செயின் போன்றவற்றை கழட்டிக் கொள்கிறோமே எதனால்?

பணமதிப்பை கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால்-படுக்க உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் தலையணையும்.

தங்கத்தால் என்ன பயன்? ஆனால், தங்கத்திற்கு இருக்கும்  பண மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் இந்த அன்பு அல்லோகலப் படுவதைக் கவனிக்கலாம். கல்யாண வீட்டுக்காரர்கள், கல்யாணத்திற்கு வந்திருக்கிற வசதி குறைந்த உறவினரை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே, தூரத்தில் வருகிற வசதியானவர் முகம் Closo up பில் தெரிவதும், அருகில் இருக்கிறவரின் முகம் Fade Out ஆகி மறைவதையும் எது தீர்மானிக்கிறது? அன்பா?

திருமணம் நிகழ்ச்சிக்கு போய் வந்த நடுத்தர வர்க்கத்தின் குடும்பங்களில் இப்படியான பேச்சு கண்டிப்பாக இருக்கும், “நம்மள அவ கண்ணுக்கு தெரிஞ்சதா பாத்தியா?”

***

செப்டம்பர்  2007 சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்


தமிழர்களின் பிரச்சினை தெரியாத, மார்க்சியம் எப்படி தமிழர்களின் விடுதலைக்குப் பயன்படும்?

-தமிழ்ப்பித்தன்

தமிழின் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு இடத்தில்கூட திருவள்ளுவர், ‘தமிழ், தமிழன், தமிழர்’ என்ற சொற்களை பயன்படுத்தவில்லை. மாறாக, உலகு ‘உலகம்’ என்கிற சொற்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு’ – என்று துவங்கிய வள்ளுவர், ’உலக மக்கள் அனைவருக்குமான பொது நலன்’ என்ற அடிப்படையில்தான் தன்னுடைய 1330 குறள்களையும்  பதிவு செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட திருக்குறளை ‘தமிழர்களுக்கு மட்டும்’ என்று சுருக்கிவிட முடியாது. திருக்குறளில் சொல்லப்பட்ட செய்திகள், தமிழர்களை பற்றி மட்டுமல்ல. அது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான ‘மனிதாபிமானம், பொது ஒழுங்கு’ ஆகியவற்றை வலியுறுத்துவதால்தான் அதனை ‘உலகப் பொதுமறை’ என்று அழைக்கிறோம்.

ஆக, 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் திருவள்ளுவர், ஒரு சர்வதேசியவாதியாக உலக மக்கள் எல்லாம் நலமாக வாழவும், பிறரை துன்புறுத்தாமல், பிறர் துன்பம் கண்டு கலங்குபவராகவும் இருக்க வேண்டும் என்று மனமார விரும்பி திருக்குறளை எழுத முடிந்தபோது,

150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது?

காரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.

கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…


சுயஜாதி உணர்வைவிட, மதஉணர்வும் கடவுள் நம்பிக்கையும் ஆபத்தானது அல்ல, முற்போக்கானது என்று சொல்லி இருக்கிறீர்களே, அது எப்படி?

-தமிழ்ப்பித்தன்

முத்துராமலிங்கத் தேவரின் சுயஜாதி உணர்வைவிடவும், வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் இறைநம்பிக்கை ஆபத்தில்லாதது. அன்பு மயமானது. வடமாவட்டத்து வாழும் முத்துராமலிங்கத் தேவரான டாக்டர் ராமதாசின் ஜாதி அபிமானத்தைவிட, சிவனடியார் ஆறுமுகசாமியின் இறைநம்பிக்கை முற்போக்கானது.

பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?

பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, தலித் அரசியல், தமிழ்த்தேசியம், இடஒதுக்கீடு ஆதரவு என்று பெயரளவில் இவைகளை தெரிந்துகொண்டு, ஆர்வ மிகுதியால், தன் ‘பொதுவாழ்க்கை’யை துவங்குகிற ஒரு சிறுவன், முதலில் விமர்சிப்பது அநேகமாக இளையராஜாவைதான். துவங்கும்போதே இளையராஜாவைவிட தான் பெரிய முற்போக்காளன் என்கிற மனநிலையை இந்தச் சிறுவர்களுக்கு உண்டாக்கிய பெருமை தத்துவ பெரியவர்களுக்கே உண்டு.

தங்கள் பார்ப்பன எதிர்ப்பையே இளையராஜா எதிர்ப்பின் மூலமாக காட்டிக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்; அல்லது இளையராஜா மீது உள்ள வெறுப்பை தங்களின் பார்ப்பன எதிர்ப்பு என்கிற முற்போக்கான முறையில் வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள்.

தமிழ்த்தேசியத்தை தீவிரமாக பேசுகிற தமழினவாதிகள், இந்திய தேசியத்தை தன் இறுதி மூச்சுவரை ஆதரித்து, தழினவாதிகளை கடுமையாக விமர்சித்த முத்துராமலிங்கத் தேவரை ஆதரித்துக்கொண்டே, இளையராஜாவை விமர்சிக்கிறார்கள்.

தலித் அரசியலின் தலைமகன் என்பதுபோல் தன்னை சித்தரித்துக்கொண்டு, கடைசியில் தலித் விரோதியான காந்தியின் பாதங்களில்போய் சரணடைந்து ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பஜனை பாடுகிற ‘மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரிய’ அறிஞர்களும் காந்தியின் பார்ப்பன-பனியா இந்து அரசியலை ஆதரித்துக்கொண்டே இசைஞானி இளையராஜாவின் இந்து இறைநம்பிக்கையை விமர்சிக்கிறார்கள்.

ஆக, இசைஞானி இளையராஜாவை பொதுபுத்தியில் இருந்து விமர்சிக்கிற இந்த அறிவாளிகளுக்கான பொது விமர்சனமாக இருப்பதால்   இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + தீராநதி அவதூறுகள் என்கிற இந்தக் கட்டுரையை தேவை கருதி தலைப்பை மாற்றி மீண்டும் பிரசுரித்து இருக்கிறேன்.

***

லித் முரசு இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும், மிகச்சிறந்த மக்கள் பாடகரும், புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன் இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார்.

அந்தத் தொடரின் இறுதிப் பகுதியில் இசைஞானி இளையராஜாவைப் பற்றி, இசைக்கு வெளியே சென்று கடுமையான விமர்சனங்களை எழுதி அனுப்பியிருந்தார்.

டாக்டர் குணசேகரன் அவர்களை தொடர் எழுத வைக்கும் பொறுப்பையும், அந்தத் தொடரில் இசைஞானி பற்றி தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய ஆதாரமற்ற விமர்சனங்களை பிரசுரிக்க வேண்டாம் என்கிற முடிவையும் நான்தான் எடுத்தேன். அதற்கான பொறுப்பை தலித் முரசு ஆசிரியர் திரு. புனிதபாண்டியன், என்னிடமே ஒப்படைத்திருந்தார்.

ஆனாலும், டாக்டர் குணசேகரன் அந்தக் கட்டுரைகளை புத்தகமாக கொண்டுவந்தபோது, தலித் முரசால் பிரசுரிக்க மறுத்த, இசைஞானி பற்றிய அந்த ‘விமர்சனங்களை’ சேர்த்துக் கொண்டார்.

‘என்னை தனிப்பட்ட முறையில் அவதூறு செய்கிறது’ என்று  தலித் முரசில் பிரசுரிக்க  மறுத்த அந்தப் பகுதிகளை சுட்டிக்காட்டி இசைஞானி இளையராஜா, டாக்டர் கே.ஏ. குணசேகரன் மீது வழக்கு தொடர்ந்தார். இப்போது அந்தப் புத்தகம் விற்பனைக்கு இல்லாமல் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

‘தலித் முரசு’ சார்பாக டாக்டர் குணசேகரன் நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை வைத்து ஒரு அக்கப்போர் கட்டுரையை பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘தீராநதி’ இதழில் எழுதியிருந்தார்.

அ. மார்க்சின் அக்கப்போரை மறுத்து, கண்டித்து நான் எழுதிய கட்டுரையை தலித் முரசின் நிலைபாடாகவே, அதன் ஆசிரியர் திரு. புனிதபாண்டியன் வெளியிட்டார். அதற்கு முன் அந்த மறுப்பை ‘தீராநதி’ வெளியிட மறுத்தது.

என்மீது கொண்ட நம்பிக்கை, என் நிலைபாட்டில் உள்ள நியாயம் புரிந்து, அதை தன்னுடைய நிலையாகவே உணர்ந்து தலித் முரசின் நிலைபாடகவே அந்தக் கட்டுரையை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு. புனித பாண்டியனின் நேர்மைக்கு இந் நேரத்தில் என் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

தில்லை நடராஜன் மீது தீராத பத்தி கொண்டு இந்து மத அபிமானியாக – அப்பாவியாக வாழ்ந்தவர் நந்தனார். இருந்தும், `தீண்டப்படாதவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர் ஆயினர்?’ என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர், முதல் பக்கத்திலேயே பின்வருமாறு அறிவிக்கிறார்:

`தீண்டப்படாதவரிடையே பிறந்து நமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பைப் பெற்று புகழ்மிகு திருவருட்செல்வர்களாகத் திகழ்ந்த -நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளர் ஆகிய மூவர் நினைவுக்கு உரிமையாக்கப்பட்டது.’

புகழ்பெற்ற நடிகையும், பாடகியுமான கே.பி. சுந்தராம்பாள், சத்தியமூர்த்தி அய்யரோடு சேர்ந்து கொண்டு தந்தை பெரியாரையும், அவரது இயக்கத்தையும் மேடைதோறும் ஏறி திட்டித் தீர்த்தவர்; காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர். அப்படியிருந்தும் பார்ப்பனப் பத்திரிகைகள், அவரது ஜாதியைக் குறிப்பிட்டுக் கேவலமாக எழுதியபோது, அதைக் கடுமையாகக் கண்டித்து, கே.பி.சுந்தராம்பாளை ஆதரித்தவர் பெரியார்.

இதுதான் பெரியார்-அம்பேத்கரின் சமூக நீதி அரசியலின் அடிப்படை. இந்த அடிப்படையில்தான், இளையராஜா பற்றிய டாக்டர் குணசேகரனின் விமர்சனக் கட்டுரையை ‘தலித் முரசு’ வெளியிட மறுத்தது. இது சமூக நீதி அரசியலின் பால பாடம்.

ஆனால், ‘இசை குறித்தும் எனக்குத் தெரியும்’ என்கிற தொனியில் – ‘இனி இளையராஜா எப்படி இசையமைக்க வேண்டும்’ என்று சொல்லுமளவிற்கு அ.மார்க்சின் அறியாமை, ‘தீராநதி’ கட்டுரையில் கொடிகட்டிப் பறந்தது. கூடவே திரித்தலும், பொய்த்தகவல்களும் இணையாகப் பறந்தன.

எடுத்துக் காட்டாக, `வேதம் புதிது போன்ற படங்களில் அவரின் சிறந்த திரை இசைகள் பல சமஸ்கிருத சுலோகங்களோடு குழைந்து வெளிப்பட்டதை மறந்து விட இயலுமா? இவற்றைக் கேட்கிற செவிகளுனூடாக ஏற்படுகிற உணர்வலைகள் எத்தன்மையானவை?` என்கிறார் அ.மார்க்ஸ்.

1. `வேதம் புதிது’ படத்தின் கதையமைப்புக்கு அப்படித்தான் இசையமைக்க வேண்டும். (‘கல்லூரி பாடத்திட்டம் பிற்போக்குத் தனமாக இருக்கிறது; அதை நான் போதிக்க மாட்டேன்’ என்று எந்த முற்போக்குப் பேராசிரியரும் முரண்டு பிடிப்பதில்லை.)

2. அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா அல்ல. தேவேந்திரன்.

கட்டுரையின் இன்னொரு இடத்தில், `நாட்டுப்புற இசையைக் கூட அவர் சாஸ்திரியப் படுத்துகிறார். `பாடறியேன்… படிபப்றியேன்… எனத் தொடங்கி ‘மரி மரி நின்னே’ என முடியும் அவரது புகழ் பெற்ற திரை இசை” என்கிறார் அ. மார்க்ஸ்.

இளையராஜா மீதான இந்த அவதூறு அப்பட்டமான திரித்தலினால் வருவது. ‘பாடறியேன்… படிப்பறியேன்..’ என்ற நாட்டுப்புறப் பாடலில் இருந்துதான் உங்களின் சாருமதி ராகம் வந்தது என்பதைதான் ‘மரி மரி நின்னே…’ வில் அவர் நிரூபித்தார்.

தாழ்த்தப்பட்டவர், நிறைந்த பக்தியோடு கோயிலின் கருவறைக்குள் நுழைந்து, கடவுள் மீது கை வைக்க ஆசைப்பட்டது மாதிரி, மிகவும் புனிதமானது கர்நாடக சங்கீதம், தெய்வாம்சம் பொருந்தியது, அதில் ஒரு திருத்தம் கூட செய்யக் கூடாது?’ என்று சனாதனவாதிகள் கொண்டாடிய அதே வார்த்தைகளோடும், அதே பக்தியோடும் உள்ளே சென்று, அந்தப் புனிதத்தில் கை வைத்து – ‘இதில் புனிதமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை’ என்று தன் இசையால் அந்தப் புனிதத்தை நடுத்தெருவில் போட்டுடைத்தார் இளையராஜா.

‘மரி மரி நின்னே…’ இந்தக் கீர்த்தனையை தியாகய்யர் காம்போதி ராகத்தில்தான் இயற்றி இருந்தார். ஆனால், இளையராஜா தன் அசாத்தியமான, துணிச்சலான இசைத் திறமையால், காம்போதியில் இருந்து ‘மரி மரி நின்னே…’ என்ற வார்த்தைகளை மட்டும் உருவி சாருமதியில் தான் உருவாக்கிய ராகத்தில் இட்டு நிரப்பினார்.

ஆம், தியாகய்யரையே மெட்டுக்குப் பாட்டெழுத வைத்தவர் இளையராஜா. சனாதன ஆதரவாளர் என்று சொல்லப்படும் இளையராஜாவின் இந்தச் செயலுக்கு, அவரைக் கொலை செய்யும் அளவுக்கு கோபத்தில் இருந்தனர் சனாதனவாதிகள் என்பது, சனாதன எதிர்ப்பாளரான அ.மார்க்சுக்கு எப்படித் தெரியாமல் போனது?

(உண்மையான பக்தியோட கோயிலுக்குள் நுழைய முயற்சித்த நந்தனைத்தானே கொளுத்தினார்கள். ஆம், நந்தன் தன்னை அறியாமலே செய்த கலகம் அது.)

***

எஸ்.என்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், இப்படி எல்லா இசையமைப்பாளர்களும் திரை இசைப் பாடலை கர்நாடக சங்கீத அடிப்படையில் தான் அமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இளையராஜாவும் அதைச் செய்தார்.

மேற்சொன்ன அனைவரும் கர்நாடக இசை மரபுக்குள்ளேயே அடக்கி வாசித்தவர்கள். இளையராஜா ஒருவர்தான் திமிறி நின்றவர்.

அது மட்டுமின்றி, ‘தோடி, காம்போதி போன்றவை மிகக் கடினமான, உயரிய ராகங்கள். அதை மிக எளிமையாக எவனாலும் கையாள முடியாது’ என்ற மிரட்டலோடு இறுமார்ந்த கூட்டத்தைக் கேலி செய்வதுபோல் அந்த ராகங்களை மிகச் சாதாரணமாகக் கையாண்டு அதில், பம்பை, உடுக்கை, பறை போன்ற தமிழர் இசைக் கருவிகளை மிக அதிக அளவில் பயன்படுத்தி, அந்த ராகங்களின் புனிதத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தவர் இளையராஜா. இந்த கலகத்தை அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் இசை அறிவின் இயல்பான உணர்வு அது.

எடுத்துக்காட்டாக, ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில், `மாம(ன்) ஊடு மச்சு ஊடு’ என்ற கானாப் பாடலை, மோகனமும்+சங்கராபரணமும் கலந்த பிலஹரி ராகத்தில் அமைத்திருப்பார்.

ஆரோகணம் –    ச ரி க ப த ச்

அவரோகணம்  –  ச நி த ப ம க ரி ச

(ஸ்வர ஜதி இதன் சாகித்தியம் – ரா ர வேணு கோபாலா)

இவைகளோடு அந்தப் பாடலின் மய்யமாக ஓடுவது, `வெஸ்டர்ன் கிளாசிக்கல்’. இவை எல்லாவற்றையும் விட அந்தப் பாடலை ஆக்கிரமிக்கும் வாத்தியக் கருவிகள் எவை தெரியுமா? உறுமியும், பறையும்.

ஆம், யாரும் தொட அஞ்சுகிற இந்தக் கடினமான ராகத்தை ‘மாம(ன்) ஊடு மச்சு ஊடு…’ என்று சேரிகளில் இருந்து ஒலிபெருக்கி மூலமாக மச்சு வீட்டு சங்கீத வித்வான் காதில் விழுந்த போது, அவரின் புனிதம் எப்படி பொல பொலத்துப் போனது என்று அ.மார்க்சுக்கு தெரியுமா? இது போல் நிறைய எடுத்துக் காட்டுகளைச் சொல்ல முடியும். கர்நாடக இசையில் இனி புதிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு அதைச் சக்கையாக்கி வீசியவர் இளையராஜா ஒருவர்தான்.

ஆம், அவர் மேற்கத்திய இசையில் நின்று கொண்டுதான் கர்நாடக இசையைக் குனிந்து பார்க்கிறார். அதனால் தான் அவர் உலகின் தலை சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கர்நாடக இசையின் உச்சத்தைச் சென்று அதை உலுக்கிய பிறகும், இளையராஜாவை சாஸ்திரிய இசை மேதைகள் புகழ்கிறார்கள் என்றால், இளையாரஜாவை, ‘வம்புக்காகவாவது’ அவரது இசை குறித்து அவதூறு சொன்னால், ‘தனக்கு இசை பற்றி தெரியாது’ என்று ஆகிவிடுமோ என்கிற பயமே காரணம். உண்மை இப்படி இருக்க, `சனாதன இசையில் இளையாராஜா காணாமல் போய்விட்டார்’ என்பது கற்பனை மட்டுமல்ல, பித்தலாட்டமும் கூட.

`மணியே, மணிக்குயிலே…’ (நாடோடித் தென்றல்) என்கிற பாடல் பின்னுக்குச் சென்று ரஹ்மானின் `சின்னச் சின்ன ஆசை (‘ரோஜா’) முன்னுக்கு வந்தது. ரசிக மதிப்பீட்டில் ராஜாவின் வீழ்ச்சி இப்படியாக வெளிப்பட்டது. உண்மையிலேயே ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது” என்கிறார் அ.மார்க்ஸ்.

`சின்னச் சின்ன ஆசை’யோடு  `மணியே மணிக்குயிலே’ பாடலை ஒப்பிடுவதே அபத்தம். மிக அற்புதமான உணர்வுகளைத் தரக்கூடிய உன்னதமான பாடல் `மணியே மணிக்குயிலே’. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் `ரோஜா’ திரைப்படம் அளவிற்கு ஓடவில்லை என்பதால், `சின்னச் சின்ன ஆசை’ அளவிற்கு `மணியே மணிக்குயிலே..’ பிரபலமாகவில்லை.

ஒரு பாடலின் வெற்றி என்பது, பிரபலமாவதில் மட்டுமில்லை. அப்படிப் பார்த்தால், தமிழ் நாட்டின் மிகப் பெரிய அறிவாளி ரஜினிகாந்தாகத்தான் இருப்பார்.

`சின்னச் சின்ன ஆசை…’ பாடலை ரஹ்மான், அ.மார்க்ஸ் விரும்புவது போல் ஜாஸ், புநூஸ், நாட்டுப்புறப் பாடல்கள் சாயலில் அமைக்கவில்லை. `ஹரி காம்போதி’ என்கிற சாஸ்திரிய சங்கீத அடிப்படையில்தான் அமைத்தார். வீணையும், கஞ்சீராவும் அதில் முக்கியமான கருவிகள். இதைத்தான் ‘ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது’ என்கிறார் அ.மார்க்ஸ்.

இளையராஜாவிற்கு எதிராக ரஹ்மானை நிறுத்துவது, இளையராஜாவிற்கு எதிராக தேவாவை  ஒப்பிடுவது என்பது ஒரு இசை ஒப்பீடாக இல்லை. (அவருடன் ஒப்பிடுவதற்கு இங்கு ஒருவரும் இல்லை) அ.மார்க்சின் இந்த ஒப்பீட்டில் அரசியல் இருக்கிறது.

அந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக எம்.சி.ராஜாவை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக தேவா.

இந்தக் காலத்தில், டாக்டர் கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக அப்துல் கலாமை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக ரஹ்மான். இந்த அரசியல்தான் அ.மார்க்சின் ஒப்பீட்டில் ஒளிந்திருக்கிறது.

இதை நிரூபிப்பது போல், “உலகத் தரத்துக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தக்க அளவில் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் முதலானோர் இசைக் கட்டுமானங்கள் அமைத்து அவற்றை வெகுசனப்படுத்தினர்” என்கிறார் அ.மார்க்ஸ்.

உண்மையில் ரஹ்மான் என்கிற புயல், தமிழ் மக்களின் மனதில் இசைப் புழுதியை வாரி இரைத்துவிட்டு கரை கடந்து போய் அய்ந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இந்த அய்ந்தாண்டில் ஒரு பாடல் கூட பிரபலமாகவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர், நான்கு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறார். அதில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் பிரபலம் (‘வசீகரா’)

உண்மை இப்படியிருக்க, இவர்களை `உலகத்தரத்துக்கு’ என்று பொய் சொல்கிறார்.

அ.மார்க்சே ஒரு ஒப்பீட்டை உண்டாக்குகிறார். அந்த ஒப்பீட்டிலும் அவர் நேர்மையாக இல்லை. இன்றைய திரை இசை நிலையில் வியாபார ரீதியாகவும்,  வெற்றி பெற்று நிறைய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜாதான் (இளையராஜாவின் மகன்.) அதன் பிறகு வித்யாசாகர். நிலைமை இப்படியிருக்க மறந்து ஓரிடத்தில் கூட, யுவன் சங்கர் ராஜாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏன்?

இளையராஜாவின் பரம்பரையின் மீதே கோபமா?

***

ஜெ.பிஸ்மியின் ‘தமிழ் சினிமாவில்..’ என்ற புத்தகத்திற்கான முன்னுரையில் அ.மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்;

“யோசித்துப் பார்க்கும்போது இச்சைகளின் ஓட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த வகையில் தமிழ்த் திரைப்படங்கள் பாசிசத்திற்கு, பாசிசக்கட்டமைப்பிற்கு எதிரான ஒரு பாணியைத் தம்மை அறியாமலேயே நிறைவேற்றி வந்துள்ளது என்று சொல்லத் தோன்றுகிறது…”

“கவுண்டமணி – செந்தில் நகைச்சுவையையும் கூட நாம் இந்த நோக்கில் பரிசீலிக்கும்போது வேறுவிதமான முடிவுகளுக்கு வர முடியும். காலங்காலமாக இங்கே பதிக்கப்பட்டுள்ள பல்வேறு மதிப்பீடுகளையும், பிம்பங்களையும், அவர்கள் தலை கீழாக்கிக் கவிழ்த்து நொறுக்குவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே எனக்குப் படுகிறது.”

`இட்லர், பாசிசத்திற்கு எதிரானவர்’ என்பதுபோல் தமிழ்த் திரைப்படங்கள் பாசிசத்திற்கு எதிரானது என்கிறார் அ.மார்க்ஸ்.

பெண்களை, உடல் ஊனமுற்றவர்களைப் படுகேவலமாக கேலி செய்து, ‘சண்டாளப் பயலே’ `அட சண்டாளா’ என்று தலித் மக்களை இழிவுபடுத்துகிற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிற கவுண்டமணி – செந்திலை அதையெல்லாம் தாண்டி, ‘பல்வேறு மதிப்பீடுகளையும், பிம்பங்களையும் அவர்கள் தலைகீழாக்கிக் கவிழ்த்து நொறுக்குகிறார்கள்’ என்கிற அ.மார்க்ஸ் தான், இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அ.மார்க்ஸ் உட்பட பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கான தகுதி, திறமைக்கான இந்திய உதாரணம் மட்டுமல்ல இளையராஜா; மூன்றாம் நாடுகளில் முகம் அவர்.

பின்குறிப்பு: “யாரையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக நிறுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான ஒன்று. யாரையும் விமர்சனத்திற்குத் தகுதியற்றவர்களாக நிறுத்துவது இன்னும் மோசமான ஒன்று. விமர்சன அறிவு என்பது ஒரு மனித மாண்பு”என்று கட்டுரையில் ‘தலித் முரசு’க்கு அறிவுரை சொல்கிறார் அ.மார்க்ஸ்.

அதனால் அவரைப் பற்றியான இந்த விமர்சனங்களுக்கும் இதே அளவுகோலைப் பொருத்திப் பார்ப்பார் என்று நம்புகிறோம்.

-வே. மதிமாறன்

‘தலித் முரசு’ ல் டிசம்பர் 2002 ல் எழுதியது.

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?


சென்ற இதழில் இளையராஜாவை பற்றிய கேள்விக்கு பதில் ஒத்துக் கொள்வதுபோல் இருந்தாலும், இளையராஜாவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக காட்டும் தொனி தென்பட்டதே?

க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை. இளையராஜாவை பற்றியான விமர்சனங்களில் அவரை ஒரு கலைஞராக மதிப்பிடாத தன்மை இருப்பதையே சுட்டிக் காட்டினேன்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவர்களாகவோ இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பெண் பித்தனும், முழுநேர குடிகாரனும், பார்ப்பன மோகியுமான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். (மெட்டுகளை உருவிவிட்டு, கண்ணதாசன் பாடல்களை படித்துப் பாருங்கள், அது அவர் கவிதைகளை விடவும் கேவலமாக இருக்கும்) அவர்களும் இளையராஜாவின் பார்ப்பன ஆதரவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கமல்ஹாசன் போன்ற கழிசடைகளின் தீவிர ரசிகனாக இருக்கிற ஞாநி போன்றவர்கள் கூட உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் ஒப்பற்ற ஒரே கலைஞர் இளையராஜாவைத்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த மோசடிப் போக்கைத்தான் விமர்சித்தேன்.

ஜுன் 2007 சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் படத்துக்கு இளையராஜா இசைக்க மறுத்தாராமே?

க.டென்னீஷ், பெரியபாளையம்.

“நான் மறுக்கவில்லை” என்று இளையராஜா மறுத்திருக்கிறார்.

அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள்.

அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம்.

99 சதவீதம் அவர் நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை “பாடறியேன்… படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா.

சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியதுதான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். தியாகய்யரையே மெட்டுக்கு பாட்டெழுத வைத்தார். உண்மையில் தியாகய்யர் சமாதி அடைந்தது அன்று தான்.

கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது. இளையராஜாவின் இந்தச் செயல், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு வார்த்தைகளை விடவும் படு பயங்கரமானது.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது அவாளுக்கு. “அதெப்படி பார்ப்பன உணர்வுள்ள பாலசந்தர் படத்தில் இதை செய்ய இளையராஜாவால் முடிந்தது?’ பார்ப்பன எதிர்ப்பாளர் என்கிற உணர்வோ அப்படி ஒரு நிலையிலோ இருந்து அதை செய்யவில்லை இளையராஜா. “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

இளையராஜா உருவாக்கிய ஒரு மெட்டை மாற்றுகிற தைரியம் இதுவரை எந்த இயக்குனருக்கும் வந்ததில்லை. தமிழர்களின் இனிமை அவர்.

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா?

தமிழ்ப்பித்தன்

பெரியாருக்கு எதிராகவும்,  மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும்,  ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும் ‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,

பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும்,  அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,

‘அண்ணாதுரை முதலியாரின் மறைவுக்குப் பிறகு முதல்வராகும் தகுதி நெடுஞ்செழியன் முதலியாருக்கும், அன்பழகன் முதலியாருக்கும்தான் இருந்தது.  அதை கருணாநிதி தட்டிப் பறித்துவிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை உண்மையாக நம்பி, அதை உள் அரசியலாக வைத்து, வெளியில் ‘கருணாநிதி தமிழன விரோதி, திராவிட இயக்க கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டார்’ என்று முற்போக்காக குற்றம் சாட்டி, திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பழ. நெடுமாறனையும், ராமதாஸையும் – கருணாநிதி எதி்ர்ப்பிற்காகவே ஆதரிக்கும், முதலியார் பெரியாரிஸ்ட்டுகளின்  திராவிட இயக்க ‘பாசம்’,

தலித் அரசியல் என்று பொதுவாக பேசினாலும், தன் ஜாதித் தலைவரை மட்டும் ஆதரிக்கிற,  சில நேரங்களில் தலித் விரோத ஆதிக்க ஜாதி தலைவர்களை ஆதரித்தாலும்கூட, உட்ப்பிரிவு தலித் ஜாதி தலைவர்களை ஒப்புக்குக்கூடஆதரிக்க விரும்பாத, தலித் ‘ஒற்றுமை’ அரசியல் பேசுகிற தலித் ‘அறிவுஜீவி’,

மார்க்சிய இயக்கத்தில்கூட தன் ஜாதிக்காரன் இருக்கிறானா எனறு தேடிப் பார்த்து ‘இயங்கியல்’ அடிப்படையில் தொடர்பு வைத்துக் கொள்கிற,  பார்ப்பன மார்க்சிஸ்டின் ‘வர்க்க’ உணர்வு,

நவீன அறிவியல் வளர்ச்சியை அவ்வப்போது, ‘அப்டேட்’ செய்து கொண்டு ஒரு விஞ்ஞானியைப்போல் பேசி,  தன்னை இறை மறுப்பாளராக, பகுத்தறிவாளராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் வைரமுத்து போன்ற பல திரைமுற்போக்காளர்களின் சுயஜாதி பாசம்,

‘தமிழ்மண், தமிழனின் மண்’ என்று நீட்டி முழங்கிவிட்டு,  தேவர் ஜெயந்தியின்போது , ‘போற்றிப் பாடடிப் பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ எனறு சுருதி கூட்டுகிற சில தமிழ்த்தேசியவாதிகள்,

பகுத்தறிவாளர்களில் யார் ‘நம்மாளு’? என்று பகுத்து அறிகிற இந்த முற்போக்காளர்களின் சுயஜாதி உணர்வு,  பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற ஆதிக்க ஜாதிகளை ஆதரிக்கிற அல்லது விமர்சிக்க மறுக்கிற தன்மை,  அறியாமையால் ஆனதல்ல. மிகச் சரியாக திட்டமிடப்பட்டது. அது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் லாபமாக இருக்கிறது. ஓட்டாகவோ, பணமாகவோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கை பெறுவதற்கான வழியாகவோ இருக்கிறது.  அல்லது அந்த ஜாதியை விமர்சித்தால், தன் கட்சியில் இருக்கிற ‘அந்த’ஜாதிமுற்போக்காளர்களின் மனம் புண்பட்டு, அவர் வேறுகட்சிக்கோ, அமைப்பிற்கோ போய் விடக் கூடாது என்கிற முன் எச்சரிக்கை உணர்வும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால் இசைஞானி இளையராஜாவின் இந்துமத இறைநம்பிக்கை இதுபோல் ஆனதல்ல. ஒரு எளிய பக்தனுக்கு இருப்பதுபோல், முழுமையான அறியாமையால் ஆனது.

இந்துமதம் என்பதே ஜாதிதான்.  இறைநம்பிக்கையைவிட ஜாதி நம்பிக்கைதான் ஆபத்தானது.  அதுஒன்றுதான் இந்து மதத்தை பாதுகாப்பது.  ‘ஜாதியை பாதுகாக்கிறது’ என்பதற்காகத்தான் தந்தை பெரியார் இந்துமத்தையே எதிர்த்தார். ஆனால் ‘நம்மாளுகளில்’ பலர் இந்து மதத்தையும் கடவுளையும் எதிர்த்துவிட்டு ஜாதியை பாதுக்காக்கிறார்கள்.

ஆக, இந்த ‘பகுத்தறிவாளர்களின்’ சுயஜாதி உணர்வைவிட, பக்திமானான சுயஜாதி உணர்வற்ற இசைஞானி இளையராஜாவின் இறைஉணர்வு ஆபத்தானதல்ல. அறியாமையால் ஆனது. அப்பாவித்தனமானது.

‘முற்போக்காளர்’களின் ஜாதி அபிமானத்தைவிட, ‘பிற்போக்காளர்’களின் ஜாதி உணர்வற்ற இறைஉணர்வு முற்போக்கானது.

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

பிடரி மயிர் பிடித்து உலுக்கிய தலைவன்

ambedkar-wrapper6

-கோவி.லெனின்

‘நக்கீரன்’ இதழின் தலைமைத் துணை ஆசிரியர்
எழுத்தாளார், ஆவணப்பட இயக்குநர்.

ரலாறு உண்மையானதாக இருந்தாலும் அதனை அறிமுகப்படுத்தும் விதத்திலும் அது பரப்புரை செய்யப்படும் விதத்திலும்தான் தாக்கத்தை உருவாக்கும். வரலாற்று நாயகர்களும் அப்படித்தான். இந்தியாவை காந்தி நாடு என உலகத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதனால்தான் நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா  என ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாக ஒலிக்கும் உலகளாவிய தலைவர்கள், இந்தியா என்றதும் மகாத்மா காந்தி பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள்.

காந்தியும் காந்தியமும் சுதந்திர இந்தியாவை உருவாக்குவதில் வகித்த பங்கு முக்கியமானதெனினும், காந்தியைத் தாண்டிய தேவை இந்தியாவில் இருந்தது. இருக்கிறது. இந்த உண்மை வரலாற்றையும், அந்த வரலாற்றில் நிகழ்ந்த போராட்டங்களையும், அவற்றை நிகழ்த்திய தலைவர்களையும் எடுத்துச் சொல்வதே இங்கு ஒரு போராட்டமாக இருக்கிறது.

கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் சில தலைவர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்வது பாதுகாப்பானதாக இருக்கிறது. ஒரே கொள்கைப் பாதை என்ற போதும், சில தலைவர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே பாதுகாப்பாளதாக இருக்கிறது. இத்தகைய பாதுகாப்பைவிடவும் உண்மை வரலாற்றைச் சொல்ல வேண்டிய சமுதாயக் கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது.

இதனை இலக்காகக் கொண்ட செயல்பாடுகளில் ஒன்றுதான்,தோழர் வே.மதிமாறனின் நான் யாருக்கும் அடிமையில்லை– எனக்கடிமை யாருமில்லை என்கிற நூல். அண்ணல் அம்பேத்கரை தலித் மக்களின் தலைவர் என்றளவில் மட்டுமே நிலைநிறுத்த முயற்சிக்கும் இந்துத்வா சக்திகளின் மனநிலையில் செயல்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் அம்பேத்கரை இந்தியச் சமுதாயத்தின் சமூக நீதிப் போராளியாக அறிமுகப்படுத்தும் நூலாக இது அமைந்துள்ளது.

தலித் அல்லாத மக்களுக்கு அம்பேத்கரை சரியான முறையில் அறிமுகப்படுத்தும் முயற்சியை சிரத்தையுடன் மேற்கொண்டிருக்கிறார் மதிமாறன். தேவையைப் பொறுத்தே வெளிப்பாடு அமைகிறது. வலைப்பதிவில் கட்டுரையாக வெளியிடப்பட்டு, தற்போது புத்தகமாகியிருக்கும் இதற்கானத் தேவை என்ன என்பதை நூலாசிரியரே தனது முன்னுரையில் விளக்கியிருக்கிறார்.

திட்டமிட்டுதிரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லுர்ரியில் நடந்த சண்டையை, தொலைக்காட்சிகளில் பார்த்தேன்.  …. …. … ஒரு செய்தி உறுதியாகத் தெரிந்தது. அது டாக்டர் அம்பேத்கர் என்கிற பெயர் ஜாதி இந்துக்களுக்குஆத்திரமூட்டுகிற, எரிச்சலுர்ட்டுகிற பெயராக இருக்கிறது என்பதே! ஆதிக்க ஜாதிகளுக்கு எதிரான, ஜாதி வெறிக்கு எதிரான குறியீடாக அம்பேத்கர் பெயர் இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் பெயரை-அவர் உருவத்தைப் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் உயர்ஜாதிக்காரர்களிடமும் கொண்டுபோய் சேர்ப்பது, ஜாதிக்கு எதிராகத் தீவிரமாக இயங்குவது போன்றதாகும் என்ற எண்ணத்தையும் இதுவே முற்போக்காளர்களின் முதன்மையான கடமை என்ற சிந்தனையையும் சட்டக் கல்லுர்ரி சண்டை எனக்குக் கற்றுத் தந்தது என்கிறார் .   அந்த எண்ணத்தை அவர் எந்தளவு நிறைவேற்றியுள்ளார் என்பதை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது புரிந்துகொள்ள முடிகிறது.

அம்பேத்கர், தலித் மக்களின் தலைவரில்லையா? அவர்களின் உரிமைக்காகப் போராடி ய தலைவர்தான்.  அவரை தலித் அல்லாத சமூகத்தினரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியதன் அவசியமென்ன? அண்ணல் அம்பேத்கர், சமூகரீதியாகப் பின்தங்கியிருக்கிற அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர். அதனால்தான் அவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

“தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும்போது, பிற்படுத்தப்பட்ட ஜாதியினைக் கண்டிக்கிற டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களின்  பிரச்சினைகளுக்கு முழுக்காரணம் என்று இந்து மதத்தையும் பார்ப்பனர்களையுமேதான் குற்றம் சுமத்துகிறார்” என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு, அம்பேத்கரை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் மதிமாறன்.

சாதிப் படிநிலைகளின் அடிப்படையில், தலித் மக்களைவிட ஒரு படி உயர்ந்ததாகச் சொல்லப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்தான், தலித் மக்களை நேரடியாகத் தாக்குபவர்களாகவும், அவர்கள் மீது வன்கொடுமை செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை திண்ணியம், உத்தபுரம் உள்ளிட்ட அண்மைக்கால சாட்சியங்கள்வரை காண முடிகிறது. இத்தகைய செயல்களுக்காக பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைக் கண்டிக்கிற அம்பேத்கர், இந்த சாதிப்படிநிலையின் மூலம் எது என்கிறபோது இந்து மதம் என்கிற பார்ப்பன மதம் என்பதையும் அது கற்பிக்கும் கடவுளர்கள், வேதங்கள், வருணாசிரமம் ஆகியவையுமே என்பதை சம்மட்டி கொண்டு அடித்து நொறுக்குகிறார்.

கோவி. லெனின்
8-6A
இதோ அம்பேத்கரின்  பதிவிலிருந்தே இதனைப் பார்ப்போம். சூத்திரர்களைத் தவிர இதர மூன்று பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. மேலே குறிப்பிட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:

குற்றப்பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம். 2. ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி. 3. தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி –என அன்றைய கணக்கை அம்பேத்கர் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிடும் தோழர் மதிமாறன், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேச வந்த டாக்டர் அம்பேத்கர் சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப்பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார். இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இத்தனை ஆவேசம்? என கேள்வி எழுப்புகிறார்.

இந்தியாவில் உருவாகிய சாதிப்படிநிலையின் ஆணிவேர் இந்துமதம் என்கிற பார்ப்பனியமே என்ற முடிவில் அம்பேத்கருக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்பதை அவருடைய எழுத்தும் பேச்சும் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. தங்கள் வாழ்க்கை எந்தப் படிக்கட்டு வழியாகவும் கீழே இறங்கிவிடக்கூடாது என்ற கவனத்துடன் பார்ப்பனியம் உருவாக்கிய சாதிகளால் உழைக்கும் சமுதாயத்தினர் பிளவுபடுத்தப்பட்டு, தனக்கு கீழ்ப்படிநிலையில் உள்ளதாகக் கருதப்படுவோர் மீது ஆதிக்கம் செலுத்துவது இன்றும் நீடிக்கிறது. இந்த  ஆதிக்கமும் மோதல்களும் இல்லாத நிலை உருவாக வேண்டுமென்றால் இந்து மதத்தின் மீதும் அது வலியுறுத்தும் வர்ணாசிரமம் மீதும் சித்தாந்த ரீதியான தாக்குதலை தயவுதாட்சண்யமின்றித் தொடரவேண்டும்.இத்தகைய கொள்கைப் பார்வையில், அம்பேத்கரும் பெரியாரும் ஒரே  கண்ணோட்டத்துடன் இருப்பதைக் காண முடிகிறது.

கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். இராதாவோ ஏற்கனவே மணமானவள். கிருஷ்ணனோ முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் வாழ்க்கை நடத்துகிறான்.   ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷ்ணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை  பதினாறாயிரத்து ஒரு நுர்ற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர்கள்

ராமன் அளவுக்கதிகமாகக் குடிக்கும் பழக்கத்தை க் கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான் என வால்மீகி குறிப்பிடுகிறார். அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து இன்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்-இவை பெரியார் எழுதியவையல்ல. அம்பேத்கர் எழுதியவை.

புராண புரட்டுகளையும், அதிலுள்ள ஆபாசங்களையும் பெரியாருக்கு சற்றும் குறைவில்லாத விதத்தில் கேள்வி எழுப்பிச் சாடுகிறார் அம்பேத்கர். அவரது கேள்விகள், இந்து மதத்தையும் சனாதனத்தையும் பிடரி மயிர் பிடித்து உலுக்குகிறது. இந்துக்கள் என்றாலும் நீங்கள் சூத்திரர்களே என்று ஒடுக்கிவைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் சுயமரியாதைக்  குரலாக, இந்துத்வத் தத்துவங்களோடு நேருக்கு நேரான யுத்தத்தை நடத்தியிருக்கிறார் அம்பேத்கர்.

இந்தக் குரலுக்காக இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதே தனக்கு சௌகர்யமாக இருக்கிறது என்றவர் பெரியார்.  இந்து மதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தில் இணைந்தவர் அம்பேத்கர். பவுத்தத்தின் மறுபிறவிக் கொள்கை உள்பட அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார். தீண்டாமைக்கு எதிராக பவுத்தத்திற்கு மாறுவது என்பது அவரது நிலைப்பாடு. அதுகுறித்த பார்வையை அவர் வெளிப்படுத்தும்போது, ரஷ்யர்கள் தங்களுடைய பொதுவுடைமை பற்றிப் பெருமைப்படுகிறார்கள். ஆனால் புத்தர், சர்வாதிகாரம் இல்லாமலேயே பிக்கு சங்கத்தில் பொதுவுடைமையை நிறுவினார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று எழுதியிருக்கிறார்.

இத்தகைய கருத்துகளால் அம்பேத்கரை பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரானவராக நிலை நிறுத்த முயற்சிக்கும் சில முற்போக்கு சிந்தனையாளர்களையும், அம்பேக்ரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவராகக் கட்டமைக்கப் முயற்சிப்போரையும் சாடும் நூலாசிரியர், இந்துத்வா மேலாண்மைக்கும் ஜாதி  வெறி பிடித்த இந்துக்களுக்கும் எதிராகத்தான் அம்பேத்கரின் அத்தனை செயல்பாடுகளும் இருந்தன என்பதை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.  இந்துத்வா மேலாண்மை என்பது பார்ப்பனியம் பெற்ற பிள்ளை என்றபோதும், அங்கே பார்ப்பன பெண்களுக்கான உரிமைகளும் மற்ற சமுதாயத்துப் பெண்களின் உரிமைகள் போலவே மறுக்கப்பட்டே வந்தன.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை  அண்ணல் அம்பேத்கர், அதில் பெண்களின் உரிமைகளுக்காக கொண்ட வந்த சட்டங்கள் அனைத்தும் முதலில் பயன் தந்தது பார்ப்பன சமுதாயத்துப் பெண்களுக்குத்தான் என்பது வரலாற்று உண்மை.

முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் ஒரு தார மணம், விவாகரத்து பெறுகின்ற உரிமை, கணவனை இழந்தவர்களோ மணவிலக்கு பெற்றவர்களோ மறுமணம் செய்துகொள்ளும் உரிமை, விவாகரத்து பெற்றவர்களுக்கான ஜீவனாம்சம், குடும்பச் சொத்தில் பெண்களுக்கான உரிமை என இந்தியப் பெண்களுக்காக அம்பேத்கர் உருவாக்கிய சட்டங்கள் பல உள்ளன.  பெண்களை ஒடுக்குவதை

மனரீதியாகவும் மரபுவழியாகவும் இன்றும் கடைப்பிடிக்கும் இந்திய சமுதாயத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வர அண்ணல் அம்பேத்கர் என்ன பாடு பட்டிருக்க வேண்டும் எனக் கேட்கும் மதிமாறன்,  அன்று அரசியல் சாசன உருவாக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எல். அனந்தசயனம் அய்யங்கார் போன்ற பார்ப்பனர்களை எதிர்த்துதான் பார்ப்பன பெண்களுக்கும் நலன் பயக்கும் இந்தச் சட்டங்களை அம்பேத்கர் உருவாக்கினார் என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

அன்றைய அல்லாடிகளிலிருந்து இன்றைய ஜெயேந்திரர்கள் வரை பார்ப்பன சமுதாயத்து பெண்கள் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்கு எதிராக கருத்தாலும் கரத்தாலும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மதிமாறன் பதிவுசெய்வதோடு, பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டிவைக்க வேண்டிய படம், அண்ணல் அம்பேத்கர் படமும் தந்தை பெரியார் படமும்தான். இவர்கள் இருவரால்தான் அவர்கள் இன்று சமூகத்தில் மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறார். அவர்களது வீடுகள் இந்த இருவரின் படங்களை ஏற்றுக்கொள்கின்றனவோஇல்லையோ, இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களுக்கான சட்டங்களுக்கும் பாடுபட்டவர்கள் இந்த இருவரும்தான் என்பதை பார்ப்பன பெண்களின் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும்.

இந்தப் புத்தகத்தின் நோக்கமும் அதுதான். ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்களுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே… என்பதுதான் மதிமாறனின் குரல்.

yougamaeiniஅண்ணல் அம்பேத்கரை ஜாதி ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் அனைத்தும் உயர்த்திப்பிடிக்கும்விதமாக அவரது உருவம் பொறித்த டி-சர்ட்டுகளை அணிய வேண்டும் என்ற திட்டமும் இந்தப் புத்தகத்தின் மூலம் முன்வைக்கப்படுகிறது. உருவங்கள் வாயிலாக ஒன்றை மனதில் நிறுத்துவது இந்திய மரபு மட்டுமன்று. உலகளாவியதாகவும் அது இருக்கிறது.

உருவ வழிபாட்டுக்கு எதிரான புத்தனுக்கு அதுதான் நேர்ந்தது. டி-சர்ட் திட்டம் திட்டம் முன்மொழியப்படுகிற அதே நேரத்தில், அம்பேத்கரை தலித் அல்லாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை முன்னெடுத்திருக்கும் இப்புத்தகத்தை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடுவது இந்திய அளவில் உள்ள தலித் அல்லாதோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நன்றி ‘யுகமாயினி’ மாதஇதழ்

***

நான் யாருக்கும் அடிமையில்லை – எனக்கடிமை யாருமில்லை

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384