பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?

பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, தலித் அரசியல், தமிழ்த்தேசியம், இடஒதுக்கீடு ஆதரவு என்று பெயரளவில் இவைகளை தெரிந்துகொண்டு, ஆர்வ மிகுதியால், தன் ‘பொதுவாழ்க்கை’யை துவங்குகிற ஒரு சிறுவன், முதலில் விமர்சிப்பது அநேகமாக இளையராஜாவைதான். துவங்கும்போதே இளையராஜாவைவிட தான் பெரிய முற்போக்காளன் என்கிற மனநிலையை இந்தச் சிறுவர்களுக்கு உண்டாக்கிய பெருமை தத்துவ பெரியவர்களுக்கே உண்டு.

தங்கள் பார்ப்பன எதிர்ப்பையே இளையராஜா எதிர்ப்பின் மூலமாக காட்டிக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்; அல்லது இளையராஜா மீது உள்ள வெறுப்பை தங்களின் பார்ப்பன எதிர்ப்பு என்கிற முற்போக்கான முறையில் வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள்.

தமிழ்த்தேசியத்தை தீவிரமாக பேசுகிற தமழினவாதிகள், இந்திய தேசியத்தை தன் இறுதி மூச்சுவரை ஆதரித்து, தழினவாதிகளை கடுமையாக விமர்சித்த முத்துராமலிங்கத் தேவரை ஆதரித்துக்கொண்டே, இளையராஜாவை விமர்சிக்கிறார்கள்.

தலித் அரசியலின் தலைமகன் என்பதுபோல் தன்னை சித்தரித்துக்கொண்டு, கடைசியில் தலித் விரோதியான காந்தியின் பாதங்களில்போய் சரணடைந்து ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பஜனை பாடுகிற ‘மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரிய’ அறிஞர்களும் காந்தியின் பார்ப்பன-பனியா இந்து அரசியலை ஆதரித்துக்கொண்டே இசைஞானி இளையராஜாவின் இந்து இறைநம்பிக்கையை விமர்சிக்கிறார்கள்.

ஆக, இசைஞானி இளையராஜாவை பொதுபுத்தியில் இருந்து விமர்சிக்கிற இந்த அறிவாளிகளுக்கான பொது விமர்சனமாக இருப்பதால்   இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + தீராநதி அவதூறுகள் என்கிற இந்தக் கட்டுரையை தேவை கருதி தலைப்பை மாற்றி மீண்டும் பிரசுரித்து இருக்கிறேன்.

***

லித் முரசு இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும், மிகச்சிறந்த மக்கள் பாடகரும், புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன் இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார்.

அந்தத் தொடரின் இறுதிப் பகுதியில் இசைஞானி இளையராஜாவைப் பற்றி, இசைக்கு வெளியே சென்று கடுமையான விமர்சனங்களை எழுதி அனுப்பியிருந்தார்.

டாக்டர் குணசேகரன் அவர்களை தொடர் எழுத வைக்கும் பொறுப்பையும், அந்தத் தொடரில் இசைஞானி பற்றி தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய ஆதாரமற்ற விமர்சனங்களை பிரசுரிக்க வேண்டாம் என்கிற முடிவையும் நான்தான் எடுத்தேன். அதற்கான பொறுப்பை தலித் முரசு ஆசிரியர் திரு. புனிதபாண்டியன், என்னிடமே ஒப்படைத்திருந்தார்.

ஆனாலும், டாக்டர் குணசேகரன் அந்தக் கட்டுரைகளை புத்தகமாக கொண்டுவந்தபோது, தலித் முரசால் பிரசுரிக்க மறுத்த, இசைஞானி பற்றிய அந்த ‘விமர்சனங்களை’ சேர்த்துக் கொண்டார்.

‘என்னை தனிப்பட்ட முறையில் அவதூறு செய்கிறது’ என்று  தலித் முரசில் பிரசுரிக்க  மறுத்த அந்தப் பகுதிகளை சுட்டிக்காட்டி இசைஞானி இளையராஜா, டாக்டர் கே.ஏ. குணசேகரன் மீது வழக்கு தொடர்ந்தார். இப்போது அந்தப் புத்தகம் விற்பனைக்கு இல்லாமல் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

‘தலித் முரசு’ சார்பாக டாக்டர் குணசேகரன் நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை வைத்து ஒரு அக்கப்போர் கட்டுரையை பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘தீராநதி’ இதழில் எழுதியிருந்தார்.

அ. மார்க்சின் அக்கப்போரை மறுத்து, கண்டித்து நான் எழுதிய கட்டுரையை தலித் முரசின் நிலைபாடாகவே, அதன் ஆசிரியர் திரு. புனிதபாண்டியன் வெளியிட்டார். அதற்கு முன் அந்த மறுப்பை ‘தீராநதி’ வெளியிட மறுத்தது.

என்மீது கொண்ட நம்பிக்கை, என் நிலைபாட்டில் உள்ள நியாயம் புரிந்து, அதை தன்னுடைய நிலையாகவே உணர்ந்து தலித் முரசின் நிலைபாடகவே அந்தக் கட்டுரையை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு. புனித பாண்டியனின் நேர்மைக்கு இந் நேரத்தில் என் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

தில்லை நடராஜன் மீது தீராத பத்தி கொண்டு இந்து மத அபிமானியாக – அப்பாவியாக வாழ்ந்தவர் நந்தனார். இருந்தும், `தீண்டப்படாதவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர் ஆயினர்?’ என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர், முதல் பக்கத்திலேயே பின்வருமாறு அறிவிக்கிறார்:

`தீண்டப்படாதவரிடையே பிறந்து நமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பைப் பெற்று புகழ்மிகு திருவருட்செல்வர்களாகத் திகழ்ந்த -நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளர் ஆகிய மூவர் நினைவுக்கு உரிமையாக்கப்பட்டது.’

புகழ்பெற்ற நடிகையும், பாடகியுமான கே.பி. சுந்தராம்பாள், சத்தியமூர்த்தி அய்யரோடு சேர்ந்து கொண்டு தந்தை பெரியாரையும், அவரது இயக்கத்தையும் மேடைதோறும் ஏறி திட்டித் தீர்த்தவர்; காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர். அப்படியிருந்தும் பார்ப்பனப் பத்திரிகைகள், அவரது ஜாதியைக் குறிப்பிட்டுக் கேவலமாக எழுதியபோது, அதைக் கடுமையாகக் கண்டித்து, கே.பி.சுந்தராம்பாளை ஆதரித்தவர் பெரியார்.

இதுதான் பெரியார்-அம்பேத்கரின் சமூக நீதி அரசியலின் அடிப்படை. இந்த அடிப்படையில்தான், இளையராஜா பற்றிய டாக்டர் குணசேகரனின் விமர்சனக் கட்டுரையை ‘தலித் முரசு’ வெளியிட மறுத்தது. இது சமூக நீதி அரசியலின் பால பாடம்.

ஆனால், ‘இசை குறித்தும் எனக்குத் தெரியும்’ என்கிற தொனியில் – ‘இனி இளையராஜா எப்படி இசையமைக்க வேண்டும்’ என்று சொல்லுமளவிற்கு அ.மார்க்சின் அறியாமை, ‘தீராநதி’ கட்டுரையில் கொடிகட்டிப் பறந்தது. கூடவே திரித்தலும், பொய்த்தகவல்களும் இணையாகப் பறந்தன.

எடுத்துக் காட்டாக, `வேதம் புதிது போன்ற படங்களில் அவரின் சிறந்த திரை இசைகள் பல சமஸ்கிருத சுலோகங்களோடு குழைந்து வெளிப்பட்டதை மறந்து விட இயலுமா? இவற்றைக் கேட்கிற செவிகளுனூடாக ஏற்படுகிற உணர்வலைகள் எத்தன்மையானவை?` என்கிறார் அ.மார்க்ஸ்.

1. `வேதம் புதிது’ படத்தின் கதையமைப்புக்கு அப்படித்தான் இசையமைக்க வேண்டும். (‘கல்லூரி பாடத்திட்டம் பிற்போக்குத் தனமாக இருக்கிறது; அதை நான் போதிக்க மாட்டேன்’ என்று எந்த முற்போக்குப் பேராசிரியரும் முரண்டு பிடிப்பதில்லை.)

2. அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா அல்ல. தேவேந்திரன்.

கட்டுரையின் இன்னொரு இடத்தில், `நாட்டுப்புற இசையைக் கூட அவர் சாஸ்திரியப் படுத்துகிறார். `பாடறியேன்… படிபப்றியேன்… எனத் தொடங்கி ‘மரி மரி நின்னே’ என முடியும் அவரது புகழ் பெற்ற திரை இசை” என்கிறார் அ. மார்க்ஸ்.

இளையராஜா மீதான இந்த அவதூறு அப்பட்டமான திரித்தலினால் வருவது. ‘பாடறியேன்… படிப்பறியேன்..’ என்ற நாட்டுப்புறப் பாடலில் இருந்துதான் உங்களின் சாருமதி ராகம் வந்தது என்பதைதான் ‘மரி மரி நின்னே…’ வில் அவர் நிரூபித்தார்.

தாழ்த்தப்பட்டவர், நிறைந்த பக்தியோடு கோயிலின் கருவறைக்குள் நுழைந்து, கடவுள் மீது கை வைக்க ஆசைப்பட்டது மாதிரி, மிகவும் புனிதமானது கர்நாடக சங்கீதம், தெய்வாம்சம் பொருந்தியது, அதில் ஒரு திருத்தம் கூட செய்யக் கூடாது?’ என்று சனாதனவாதிகள் கொண்டாடிய அதே வார்த்தைகளோடும், அதே பக்தியோடும் உள்ளே சென்று, அந்தப் புனிதத்தில் கை வைத்து – ‘இதில் புனிதமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை’ என்று தன் இசையால் அந்தப் புனிதத்தை நடுத்தெருவில் போட்டுடைத்தார் இளையராஜா.

‘மரி மரி நின்னே…’ இந்தக் கீர்த்தனையை தியாகய்யர் காம்போதி ராகத்தில்தான் இயற்றி இருந்தார். ஆனால், இளையராஜா தன் அசாத்தியமான, துணிச்சலான இசைத் திறமையால், காம்போதியில் இருந்து ‘மரி மரி நின்னே…’ என்ற வார்த்தைகளை மட்டும் உருவி சாருமதியில் தான் உருவாக்கிய ராகத்தில் இட்டு நிரப்பினார்.

ஆம், தியாகய்யரையே மெட்டுக்குப் பாட்டெழுத வைத்தவர் இளையராஜா. சனாதன ஆதரவாளர் என்று சொல்லப்படும் இளையராஜாவின் இந்தச் செயலுக்கு, அவரைக் கொலை செய்யும் அளவுக்கு கோபத்தில் இருந்தனர் சனாதனவாதிகள் என்பது, சனாதன எதிர்ப்பாளரான அ.மார்க்சுக்கு எப்படித் தெரியாமல் போனது?

(உண்மையான பக்தியோட கோயிலுக்குள் நுழைய முயற்சித்த நந்தனைத்தானே கொளுத்தினார்கள். ஆம், நந்தன் தன்னை அறியாமலே செய்த கலகம் அது.)

***

எஸ்.என்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், இப்படி எல்லா இசையமைப்பாளர்களும் திரை இசைப் பாடலை கர்நாடக சங்கீத அடிப்படையில் தான் அமைத்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இளையராஜாவும் அதைச் செய்தார்.

மேற்சொன்ன அனைவரும் கர்நாடக இசை மரபுக்குள்ளேயே அடக்கி வாசித்தவர்கள். இளையராஜா ஒருவர்தான் திமிறி நின்றவர்.

அது மட்டுமின்றி, ‘தோடி, காம்போதி போன்றவை மிகக் கடினமான, உயரிய ராகங்கள். அதை மிக எளிமையாக எவனாலும் கையாள முடியாது’ என்ற மிரட்டலோடு இறுமார்ந்த கூட்டத்தைக் கேலி செய்வதுபோல் அந்த ராகங்களை மிகச் சாதாரணமாகக் கையாண்டு அதில், பம்பை, உடுக்கை, பறை போன்ற தமிழர் இசைக் கருவிகளை மிக அதிக அளவில் பயன்படுத்தி, அந்த ராகங்களின் புனிதத்தைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தவர் இளையராஜா. இந்த கலகத்தை அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் இசை அறிவின் இயல்பான உணர்வு அது.

எடுத்துக்காட்டாக, ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில், `மாம(ன்) ஊடு மச்சு ஊடு’ என்ற கானாப் பாடலை, மோகனமும்+சங்கராபரணமும் கலந்த பிலஹரி ராகத்தில் அமைத்திருப்பார்.

ஆரோகணம் –    ச ரி க ப த ச்

அவரோகணம்  –  ச நி த ப ம க ரி ச

(ஸ்வர ஜதி இதன் சாகித்தியம் – ரா ர வேணு கோபாலா)

இவைகளோடு அந்தப் பாடலின் மய்யமாக ஓடுவது, `வெஸ்டர்ன் கிளாசிக்கல்’. இவை எல்லாவற்றையும் விட அந்தப் பாடலை ஆக்கிரமிக்கும் வாத்தியக் கருவிகள் எவை தெரியுமா? உறுமியும், பறையும்.

ஆம், யாரும் தொட அஞ்சுகிற இந்தக் கடினமான ராகத்தை ‘மாம(ன்) ஊடு மச்சு ஊடு…’ என்று சேரிகளில் இருந்து ஒலிபெருக்கி மூலமாக மச்சு வீட்டு சங்கீத வித்வான் காதில் விழுந்த போது, அவரின் புனிதம் எப்படி பொல பொலத்துப் போனது என்று அ.மார்க்சுக்கு தெரியுமா? இது போல் நிறைய எடுத்துக் காட்டுகளைச் சொல்ல முடியும். கர்நாடக இசையில் இனி புதிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு அதைச் சக்கையாக்கி வீசியவர் இளையராஜா ஒருவர்தான்.

ஆம், அவர் மேற்கத்திய இசையில் நின்று கொண்டுதான் கர்நாடக இசையைக் குனிந்து பார்க்கிறார். அதனால் தான் அவர் உலகின் தலை சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கர்நாடக இசையின் உச்சத்தைச் சென்று அதை உலுக்கிய பிறகும், இளையராஜாவை சாஸ்திரிய இசை மேதைகள் புகழ்கிறார்கள் என்றால், இளையாரஜாவை, ‘வம்புக்காகவாவது’ அவரது இசை குறித்து அவதூறு சொன்னால், ‘தனக்கு இசை பற்றி தெரியாது’ என்று ஆகிவிடுமோ என்கிற பயமே காரணம். உண்மை இப்படி இருக்க, `சனாதன இசையில் இளையாராஜா காணாமல் போய்விட்டார்’ என்பது கற்பனை மட்டுமல்ல, பித்தலாட்டமும் கூட.

`மணியே, மணிக்குயிலே…’ (நாடோடித் தென்றல்) என்கிற பாடல் பின்னுக்குச் சென்று ரஹ்மானின் `சின்னச் சின்ன ஆசை (‘ரோஜா’) முன்னுக்கு வந்தது. ரசிக மதிப்பீட்டில் ராஜாவின் வீழ்ச்சி இப்படியாக வெளிப்பட்டது. உண்மையிலேயே ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது” என்கிறார் அ.மார்க்ஸ்.

`சின்னச் சின்ன ஆசை’யோடு  `மணியே மணிக்குயிலே’ பாடலை ஒப்பிடுவதே அபத்தம். மிக அற்புதமான உணர்வுகளைத் தரக்கூடிய உன்னதமான பாடல் `மணியே மணிக்குயிலே’. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் `ரோஜா’ திரைப்படம் அளவிற்கு ஓடவில்லை என்பதால், `சின்னச் சின்ன ஆசை’ அளவிற்கு `மணியே மணிக்குயிலே..’ பிரபலமாகவில்லை.

ஒரு பாடலின் வெற்றி என்பது, பிரபலமாவதில் மட்டுமில்லை. அப்படிப் பார்த்தால், தமிழ் நாட்டின் மிகப் பெரிய அறிவாளி ரஜினிகாந்தாகத்தான் இருப்பார்.

`சின்னச் சின்ன ஆசை…’ பாடலை ரஹ்மான், அ.மார்க்ஸ் விரும்புவது போல் ஜாஸ், புநூஸ், நாட்டுப்புறப் பாடல்கள் சாயலில் அமைக்கவில்லை. `ஹரி காம்போதி’ என்கிற சாஸ்திரிய சங்கீத அடிப்படையில்தான் அமைத்தார். வீணையும், கஞ்சீராவும் அதில் முக்கியமான கருவிகள். இதைத்தான் ‘ஒரு புயலாக ரஹ்மானின் பிரவேசம் அரங்கேறியது’ என்கிறார் அ.மார்க்ஸ்.

இளையராஜாவிற்கு எதிராக ரஹ்மானை நிறுத்துவது, இளையராஜாவிற்கு எதிராக தேவாவை  ஒப்பிடுவது என்பது ஒரு இசை ஒப்பீடாக இல்லை. (அவருடன் ஒப்பிடுவதற்கு இங்கு ஒருவரும் இல்லை) அ.மார்க்சின் இந்த ஒப்பீட்டில் அரசியல் இருக்கிறது.

அந்தக் காலத்தில், டாக்டர் அம்பேத்காருக்கு எதிராக எம்.சி.ராஜாவை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக தேவா.

இந்தக் காலத்தில், டாக்டர் கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக அப்துல் கலாமை நிறுத்திய தொனியிலேயே இளையராஜாவுக்கு எதிராக ரஹ்மான். இந்த அரசியல்தான் அ.மார்க்சின் ஒப்பீட்டில் ஒளிந்திருக்கிறது.

இதை நிரூபிப்பது போல், “உலகத் தரத்துக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தக்க அளவில் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் முதலானோர் இசைக் கட்டுமானங்கள் அமைத்து அவற்றை வெகுசனப்படுத்தினர்” என்கிறார் அ.மார்க்ஸ்.

உண்மையில் ரஹ்மான் என்கிற புயல், தமிழ் மக்களின் மனதில் இசைப் புழுதியை வாரி இரைத்துவிட்டு கரை கடந்து போய் அய்ந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இந்த அய்ந்தாண்டில் ஒரு பாடல் கூட பிரபலமாகவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர், நான்கு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறார். அதில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் பிரபலம் (‘வசீகரா’)

உண்மை இப்படியிருக்க, இவர்களை `உலகத்தரத்துக்கு’ என்று பொய் சொல்கிறார்.

அ.மார்க்சே ஒரு ஒப்பீட்டை உண்டாக்குகிறார். அந்த ஒப்பீட்டிலும் அவர் நேர்மையாக இல்லை. இன்றைய திரை இசை நிலையில் வியாபார ரீதியாகவும்,  வெற்றி பெற்று நிறைய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜாதான் (இளையராஜாவின் மகன்.) அதன் பிறகு வித்யாசாகர். நிலைமை இப்படியிருக்க மறந்து ஓரிடத்தில் கூட, யுவன் சங்கர் ராஜாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏன்?

இளையராஜாவின் பரம்பரையின் மீதே கோபமா?

***

ஜெ.பிஸ்மியின் ‘தமிழ் சினிமாவில்..’ என்ற புத்தகத்திற்கான முன்னுரையில் அ.மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்;

“யோசித்துப் பார்க்கும்போது இச்சைகளின் ஓட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த வகையில் தமிழ்த் திரைப்படங்கள் பாசிசத்திற்கு, பாசிசக்கட்டமைப்பிற்கு எதிரான ஒரு பாணியைத் தம்மை அறியாமலேயே நிறைவேற்றி வந்துள்ளது என்று சொல்லத் தோன்றுகிறது…”

“கவுண்டமணி – செந்தில் நகைச்சுவையையும் கூட நாம் இந்த நோக்கில் பரிசீலிக்கும்போது வேறுவிதமான முடிவுகளுக்கு வர முடியும். காலங்காலமாக இங்கே பதிக்கப்பட்டுள்ள பல்வேறு மதிப்பீடுகளையும், பிம்பங்களையும், அவர்கள் தலை கீழாக்கிக் கவிழ்த்து நொறுக்குவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே எனக்குப் படுகிறது.”

`இட்லர், பாசிசத்திற்கு எதிரானவர்’ என்பதுபோல் தமிழ்த் திரைப்படங்கள் பாசிசத்திற்கு எதிரானது என்கிறார் அ.மார்க்ஸ்.

பெண்களை, உடல் ஊனமுற்றவர்களைப் படுகேவலமாக கேலி செய்து, ‘சண்டாளப் பயலே’ `அட சண்டாளா’ என்று தலித் மக்களை இழிவுபடுத்துகிற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிற கவுண்டமணி – செந்திலை அதையெல்லாம் தாண்டி, ‘பல்வேறு மதிப்பீடுகளையும், பிம்பங்களையும் அவர்கள் தலைகீழாக்கிக் கவிழ்த்து நொறுக்குகிறார்கள்’ என்கிற அ.மார்க்ஸ் தான், இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அ.மார்க்ஸ் உட்பட பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கான தகுதி, திறமைக்கான இந்திய உதாரணம் மட்டுமல்ல இளையராஜா; மூன்றாம் நாடுகளில் முகம் அவர்.

பின்குறிப்பு: “யாரையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக நிறுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான ஒன்று. யாரையும் விமர்சனத்திற்குத் தகுதியற்றவர்களாக நிறுத்துவது இன்னும் மோசமான ஒன்று. விமர்சன அறிவு என்பது ஒரு மனித மாண்பு”என்று கட்டுரையில் ‘தலித் முரசு’க்கு அறிவுரை சொல்கிறார் அ.மார்க்ஸ்.

அதனால் அவரைப் பற்றியான இந்த விமர்சனங்களுக்கும் இதே அளவுகோலைப் பொருத்திப் பார்ப்பார் என்று நம்புகிறோம்.

-வே. மதிமாறன்

‘தலித் முரசு’ ல் டிசம்பர் 2002 ல் எழுதியது.

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

5 thoughts on “பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?

  1. madhimaran yen kelvi idhuthaan oru paarpanan periyarai kochai padthuvadhu iyalpu.paarpaniya yedhiri periyar.aanal ilayaraja periyar thiraipadathirkku isai amaikka maruthadhu yen.avardhu parpaniya sindhanaidhaane.sindhanai adipadayil yennai poruthavarai ilayaraja oru paarpanare.

Leave a Reply

%d bloggers like this: