கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

கலையம்சமே இல்லாமல் திரைப்படம் எடுத்தவர் இராம.நாராயணன். அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்திருக்கிறார்களே?

-எஸ்.கிருஷ்ணசாமி, விழுப்புரம்.

கலையம்சம் இல்லாமல் படம் எடுத்ததுக்கூட பரவாயில்லை. பகுத்தறிவுக்கு எதிரான மூடக்கருத்துகளை -ஏற்கனவே மூடநம்பிக்கையில் மூழ்கி இம்சைபடுகிற எளிய மக்களிடம் பரப்பி, பணம் பார்த்தவர் இராம.நாராயணன்.

குரங்கு, நாய், பாம்பு இவைகளை நடிக்க வைத்தக் கொடுமையைக் கூட மன்னித்துவிடலாம்.  எஸ்.வி.சேகர் என்கிற பார்ப்பன ஜாதி வெறியரை, தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்து, தமிழர்களுக்கு அவர் செய்த தீமையை மன்னிக்கவே முடியாது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிராக இருக்கிற பார்ப்பனரல்லாத பார்ப்பனரான இராம.நாராயணனுக்கு, கலைஞர் கொடுத்திருக்கிற முக்கியத்துவம் ரொம்ப அதிகம்.

சமூக விழிப்புணர்வு – மாத இதழ், செப்டம்பர் 2007

வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புக்கு;

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

சென்னை புத்தகக் காட்சியில் ‘கீழைக்காற்று’ புத்தகக் கடையில் கிடைக்கும்

‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

டாக்டர் அம்பேத்கர் படம்போட்ட T- Shirt கொண்டுவந்ததில் பலர் முக்கிய பங்காற்றினார்கள். அதில் தோழர் வேந்தனும் ஒருவர். டாக்டர் அம்பேத்கர் T- Shirt தலித் அல்லாத முற்போக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரமாக பணியாற்றுபவர்களில் வேந்தனின் பங்கு அதிகம். அதனால் அவர் அடைந்த கசப்பான அனுபவங்களும் அதிகம். அதை orkut –ல் உலக தமிழ் மக்கள் அரங்கம் என்கிற இணைய குழு மத்தில் எழுதியதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தோழர் வேந்தன்:

ண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த பின்னலாடையை (T- Shirt) கடந்த இரு மாதங்களுக்கு (4-10.2009) முன் வெளிகொண்டு வந்தோம். அதன் வெளியிட்டு விழா மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த பின்னலாடையை கொண்டுவரவேண்டும் என்று முன்னெடுத்த தோழர் மதிமாறனுக்கு,  அண்ணலின் உருவம் பொறித்த ஆடையை அணியும் தேவையை உண்டாக்கியது, சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி சம்பவம் தான் என்று அவர் தன்னுடைய நான்  ‘யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதை இழிவாக கருதிய மாணவர்களின் எண்ணம், அண்ணல் பற்றி எந்த அளவு தவறான கருத்து மாணவர்களிடையே பரவியுள்ளது என்பதை காட்டியது. சாதி எண்ணம் அடுத்த தலைமுறைக்கு எப்படி விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் காட்டியது.

இன்றைய சமூக சூழலில் அண்ணல் அம்பேத்கரை சாதி தலைவர் தாழ்த்தபட்ட மக்களுக்கான தலைவர் என்னும் கருத்து நிலவுகிறது. அதை தகர்த்து அவர் சாதி தலைவர் அல்ல; சாதியொழிக்க பாடுபட்ட தலைவர் என்னும் கருத்தை மக்களுக்கு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் சகோதரர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தான்  அம்பேத்கர் பின்னலாடையை கொண்டு வந்தோம்.

எனவே இந்த ஆடையை பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த  சகோதரர்கள் பலர் அணிய வேண்டும் என்பதையே பிரச்சாரமாகவும் செய்தோம்.

இந்த கருத்தை தோழர் மதிமாறன் முன்னெடுத்தபோது, தலித் அல்லாத தோழர்களையும் ஒருங்கிணைத்து  ஒரு கூட்டு முயற்சியாகவே செயல்பட்டோம். ஆனால், அம்பேத்கர் பின்னலாடையை கொண்டு வந்த பிறகு, ஆடையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும் அவர்களை வாங்கி அணிய செய்ய சொல்லும் போதும் நமக்கு பல  அனுபவங்கள் கிடைத்தன.

இன்னும் சொல்லப் போனால் அண்ணலின் உருவம் பொறித்த இந்த ஆடை மற்றவர்களின் சாதிப்பற்றை உரசிப்பார்க்கும் உரைகல்லாகவே இருந்தது; இருக்கும் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல், சாதி அமைப்புச் சமூகத்தை ஆழ நோக்குவதற்கும் பயன்பட்டது. சமூகத்தில் சாதி உணர்வு கொண்ட சாதாரண மக்கள் மட்டுமல்ல, சமூகத்தை சீர்த்திருத்தும் சில முற்போக்காளர்களின் முகத்திரையை கூட நீக்கி அவர்களின் சுயசாதிபற்றை நமக்கு காட்டியது என்பது கசப்பான விடயம்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாம் இன்னும் முற்போக்காளர்களிடமே நிறைய பணியாற்ற வேண்டி இருக்கிறது என்னும் கவலையான எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தின.

குறிப்பாக சில முற்போக்கான தோழர்கள் இதை அணிய மறுத்த காரணங்கள் வேடிக்கையானவை. அண்ணல் உருவம் பொறித்த ஆடையின் நோக்கத்தை கூறி எங்கள் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் (தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவரல்ல) ஒருவருக்கு அணிய கொடுத்தோம்.

ஆனால், அவர் “கையில் பணமில்லை” என்றார்.

நாம் கொடுத்தது ஒரே சட்டை தான்.  இருப்பினும் நாம் “பரவாயில்லை. வாங்கிக்கோங்க. அப்புறம் பணம் தாங்க” என்றோம்.

ஆனால் அவரோ “ச்சி..ச்சீ… அம்பேத்கர் படம் போட்ட சட்டையையெல்லாம் காசு கொடுக்காம வாங்கினா நல்லா இருக்காது. நீங்க கஷ்டப்பட்டு கொண்டு வந்திருப்பீங்க… காசு கிடைக்கும் போது நானே கேட்டு வாங்கிக்கிறேன்” என்று மழுப்பினார். இன்னும் அவர் அழைக்கவில்லை. அந்த வசதியானவருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லைபோலும்.

தீவிர தமிழ்த்தேசியமும் பெரியாரியமும் கலந்து குழப்பும், சேகுவேரா பின்னலாடை அணியும் நண்பரிடம், அண்ணலின் பின்னலாடையை அணிய சொல்லி கேட்ட போது “நான் வெள்ளை நிற சட்டைகளை அணிவதில்லை” என்று காமெடி செய்தார்.

“என்னங்க இது வேடிக்கையாக இருக்கு.  இதெல்லாம் ஒரு காரணமா?” என்று அவரிடம் நேரடியாகவே கேட்டபோது, உரிய பதிலை நமக்கு தராமல் மவுனமாக இருந்துவிட்டு, வெளியில் சென்று நமக்கு தெரிந்தர்வர்களிடம், அவர்களை பற்றி நாம் அவதூறாக பேசியதாக ‘கோல்’ மூட்டினார். இப்படி பலரிடம் நம்மை பற்றி ‘கோல்’ மூட்டி தீரா பகையை உருவாக்கினார். இவரைபோலவே பலர் கோல் மூட்டி, நம்மை பழிதீர்த்த மனத் திருப்தியை அடைந்தார்கள்.

சிலர், ஏதோ சும்மா பேருக்கு அம்பேத்கர் பின்னலாடையை வாங்கி கொண்டார்கள். அதை அவர்கள் அணிந்து நாம் பார்க்கவே இல்லை.

இன்னும் சிலர் நாம் அண்ணலின் உருவம் பொறித்த பின்னலாடையை வெளிகொண்டு வந்த பிறகு, “ஆடையை அணிவது முக்கியமல்ல. அவரின் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும்” என்று பாடம் எடுக்க தொடங்கினர். இவர்கள் சட்டையை வாங்கவும் இல்லை. அதை வெளிகொண்டுவரும் போது அந்த விவாதத்தில் பங்கு பெறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ஏற்கனவே வந்திருக்குங்க அம்பேத்கர் பின்னலாடை. அதனாலதான் நாங்க கொண்டாரல்ல…” என்றார் ஏற்கனவே பலமுறை பலபேரால் கொண்டு வரப்பட்ட சேகுவேரா, பிரபாகரன், பெரியார் பின்னலாடைகளை மீண்டும் மீண்டும் புது புது வடிவத்தில் தயார் செய்து அணியும் அந்த நபர்.

எவ்வளவோ நிகழ்விற்கு வாழ்த்துக்களை வாரிவழங்கும் நம் நண்பர்களில் பலர், நம் அண்ணலின் சட்டையை வாங்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. காசு பணம் செலவழிக்காத அந்த வாழ்த்தை கூட தெரிவிக்க விரும்பவில்லை.

இன்னும் சிலர், அண்ணலின் உருவம் பொறித்த ஆடையை நாம் ஏதோ வர்த்தக நோக்கத்திற்க்காக கொண்டுவருவது போல அவதூறுகளை பரப்பினர். இந்த அவதூறுகளுக்கு காரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியும் அண்ணல் அம்பேதகர் மீதான வெறுப்பும்தான்.

இன்னும் சிலர் இதில் நாங்கள் ஏதோ தனிப்பட்ட முறையில் புகழ் அடைவதாக நினைத்து எங்கள் மீதான வெறுப்பிலும், பொறமையிலும் அவதூறுகள் கிளப்பினார்கள். மும்பையில் நடந்த விழாவை எப்படியாவது நிறுத்திவிட மிக கேவலமான வழிகளில் பெரும் முயற்சியும் செய்தனர். வெளிவந்த பிறகு சிலர், இதில் தலித் அல்லாதவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு, ‘அவர்கள் அம்பேத்கர் பின்னலாடையை கொண்டுவருதற்கு என்ன யோக்கியதை?’ என்று குழப்பம் விளைவித்தார்கள்.

இப்படிபட்ட அவதூறுகள், நம்மிடம் கேட்கப்படும் கேள்விகள், நமக்கு சொல்லும் அறிவுரைகள் எல்லாமே ஒரு புள்ளியில் மையமாக குவிகிறது. அது என்னவென்றால் அண்ணல் அம்பேத்கர் பின்னலாடை புறக்கணிப்பு என்னும் மையபுள்ளி.

இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள், அறிவுரைகள், அவதூறுகள் எதுவும் வேறு தலைவர்களின் பின்னலாடைகள் கொண்டுவந்தபோது, வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல கூட்டங்களில் பெரியார், சே, பிரபாகரன் உருவம் பொறித்த பின்னலாடைகள் பல தோழர்கள் அணிய பார்த்திருக்கிறோம். ஆனால் அதை வெளியிட்ட தோழர்களுக்கு இவ்வளவு நடைமுறை சிக்கல்கள் நேர்ந்திருக்குமா?

அண்ணலின் உருவம் பொறித்த சட்டைக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுரைகளும் என்று பார்த்தால் மறுபடியும் நாம் பணியாற்றும் களத்திற்கு தான் நம்மை கொண்டு வருகிறது. அது தான் “அண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்கான தலைவர்” என்பது.

இந்த கருத்தை தான் நாம் உடைக்க வேண்டும். அண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்காக மட்டும் பாடுபட்டவர் அல்ல. பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபட்டவர்.

தாழ்த்தபட்ட பெண்களுக்களின் உரிமைக்காக மட்டும் அவர் பாடுபடவில்லை. பார்ப்பன பெண்கள் உட்பட்ட ஒட்டுமொத்த பெண்களுக்கான உரிமைக்காகவும் பாடுபட்டவர்.

ஆணாதிக்கத்திடம் இருந்து விடுபட்டு பெண்கள் தன் வாழ்க்கையை தனியே நடத்தி கொள்ளும் அளவிற்கு பெண்களுக்காக விவாகரத்து என்னும் உரிமையை, சட்டத்தின் மூலம் வழங்கியவர் அண்ணல். அதை பயன்படுத்தி அதிகமாக பலனடைவது பார்ப்பன பெண்களும் மேல் தட்டு வர்க்க பெண்களுமே!

பிற்படுத்த சமூகத்தில் குற்றப்பரம்பரையினர் என்பதை நீக்க சொல்லி நீதிகட்சியும் பெரியாரும்  கடுமையாக முயற்சித்து நடைமுறைபடுத்தியபோது, அதை எளிமையாக சட்டமாக இயற்றி மாற்றியவர் அண்ணல் அம்பேத்கர். குற்றப்பரம்பரையினர் என்கிற இந்த கொடுமை பார்ப்பனியம் இந்து மதம் செய்த சதி என்று அதை அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.

இவ்வாறு தாழ்த்தபட்ட மக்களுக்காக மட்டுமல்லாது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராகத் தான் அண்ணல் உயர்ந்து நிற்கிறார்.

ஆனால் சாதி ஒழிக்க பாடுபட்ட அண்ணல் அவர்களை குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தலைவராகத் தான் சாதி இந்துக்களும் பார்ப்பனர்களும் சாதிய கண்ணோட்டத்துடன் சுருக்கி வைத்துள்ளனர்.

இதை தகர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தான் அதிகமாக உள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடையை கொண்டுவரும் நிகழ்வை முன்னெடுத்த, உறுதுணையாக இருந்த, உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மற்றும் உறுப்பினர்களுக்கும், விழித்தெழு இளைஞர் இயக்கத் தோழர்களுக்கும், கார்டூனிஸ்ட் பாலாவிற்கும் இன்னும் பல தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

தோழமையுடன்,

வேந்தன்.

‘பேராண்மை’ அசலும் நகலும்

பேராண்மை விமர்சினக் கூட்டத்தின் முழு பேச்சு

S.P. ஜனநாதன் இயக்கியபேராண்மைதிரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு:

‘கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகபடுத்தியது திராவிட இயக்கம். வணக்கம் என்கிற கலகச் சொல்லோடு என் உரையை துவங்குகிறேன் வணக்கம்.

‘அய்ரோப்பாவை பிடித்து ஆட்டுகிறது ஒரு பூதம். கம்யூனிசம் என்னும் பூதம்’ என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கல்சும் சொன்னது போல், தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்டியது ஒரு பூதம். சுயமரியாதை இயக்கம்  பூதம்.

1925 ல் தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம், காங்கிரஸ், நீதிக்கட்சி என்று பல இடங்களில் ஊடுறுவியது. அதுகாறும் அவர்கள் நம்பிக்கொண்டிருந்த புனிதமாக நினைத்துக்கொண்டிருந்தவைகளை தலைகீழாக கவிழ்த்து நொறுக்கியது. அதற்கு ஆதரவாக எதிராக ஏதோ ஒரு நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அப்படித்தான் அது நாடக கலைஞர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்தான் நடிகவேள் எம்.ஆர். ராதா.

தந்தை பெரியார் அரசியல் மேடைகளில் எப்படி சமரசம் இல்லாமல் போர்க்குணத்தோடு இயங்கினாரோ, அதுபோல் நாடக மேடைகளில் பெரியாரைபோலவே ஒரு ஒற்றை போர்வாளாக இயங்கினார் நடிகவேள். இப்படித்தான் திராவிட இயக்கம்  கலைத்துறையில் கால்பதித்தது.

ஆனால், சினிமாவில் பெரியாரோ பெரியாரின் தீவிர தொண்டர்களோ பங்கு கொள்ளவில்லை. நடிகவேளே கூட ஒரு படைப்பாளனாக தன் பங்களிப்பை சினிமாவில் செய்யவில்லை. நடிகனாகத்தான் அதுவும் நீண்டநாட்கள் கழித்துதான் பங்கெடுத்தார். அதை தன் ‘ரிடையர்டு லைப்’ என்றுதான் சொன்னார். சினிமாவில் பங்கெடுக்க கூடாது என்பதல்ல பெரியாரின் எண்ணம். ‘முடியாது’ என்பதுதான்.

தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பை சினமாவில் செய்ய முடியாது என்பதுதான் காரணம். ஆனால், திமுக காரர்கள் சினிமாவில் பங்கெடுத்தார்கள். அதற்குக் காரணம் பெரியாரின் கொள்கையில் இருந்து விலகி அவர்கள் செய்து கொண்ட சமரசம்தான்.

அவர்கள் பெரியாரிடம் இருந்து விலகி பிற்போக்காளராக மாறினாலும், சினிமா அவர்களைவிடவும் பிற்போக்காக இருந்தது. அதனால் அவர்கள் சினிமாவில் முற்போக்காளர்களாக முன்னணி  பாத்திரம் வகித்தனர்.

அதனால்தான், பராசக்தியில் “கோயில் கூடாது என்பதல்ல…. அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது….” என்று வசனம் வந்தது. இதை பெரியார் சொல்லமுடியாது. திமுகவால் தான் சொல்ல முடியும்.

“ஏய் குருக்கள்… அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரை பார்த்து கேட்க மறுத்து, “ஏய் பூசாரி அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்” என்று பார்ப்பனரல்லாதவரை பார்த்து கேள்வி கேட்டது.

இன்று காஞ்சிபுரத்தில், குருக்கள் என்ன பண்றானோ? அதைத்தான் பாரசக்தியில் அந்த பூசாரி பண்ணுவான். பூசாரிக்கு பதில் பார்ப்பன குருக்கள் காதாபாத்திரத்தை காட்டி பூணூலோடு கோர்ட்டு கூண்டுல நிறுத்தி இருந்தால் பராசக்தி ரிலீசே ஆகியிருக்காது.

பார்ப்பனியத்தை எதிர்த்து மேடையில், தனி பத்திரிகையில் ஆயிரம் எழுதலாம். ஆனால், பார்ப்பனர்கள் செல்வாக்காக இருக்கிற அதிகார மையத்தில் குறிப்பால்கூட எதிர்ப்பை காட்ட முடியாது.

ஆனாலும், திமுக காரர்களின் சினிமா பிரவேசம், ஆரோக்கியமான மாற்றத்தை தான் உருவாக்கிச்சு.  ‘ப்ரணநாதா, ஸ்வாமி’ என்ற பார்ப்பனவசனத்தை ஒழிச்சி, தனித்தமிழ் வசனங்களை கொண்டு வந்தது. ‘ராமாயணம், மகாபாரதம்’ போன்ற புராண குப்பைகளை தீர்த்துக்கட்டி சமூக படங்களை கொண்டு வந்தது.

திமுக வருகைக்கு முன் தமிழ்சினிமாவில், ஓரே ஒரு கதாபாத்திரம் கூட இஸ்லாமிய காதாபாத்திரம் கிடையாது. ராமாயணத்திலும், மகாபாரத்திலும் எப்படி முஸ்லீமை காட்ட முடியும்? திமுக கலைஞர்கள் உருவாக்கிய அலை தமிழ்சினிமாவின் உள்ளடக்கத்தை தலைகீழ் மாற்றியது.

அதற்கு முன் ஒரு முஸ்லீம் கதாபாத்திரம்கூட இல்லாமல் வந்த தமிழ்சினிமாவில், ஒரு இந்துகூட இல்லாத முமுமையான இஸ்லாமிய சூழலில் சினிமாக்களை கொண்டுவர திமுக  ஏற்படுத்திய அலை முழு காரணமாக இருந்தது.

குலேபகாவலி, அலிபாபவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன் என்று முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வர ஆரம்பித்தன. திமுக அல்லாத இயக்குநர்கள் கூட இப்படித்தான் படம் எடுக்க ஆரம்பித்தார்கள். குலேபகாவலியின் இயக்குநர் டி.ஆர். ராமண்ணா. இவர் திமுக காரர் அல்ல. இப்படி ஒரு Trend திமுக காரகள்தான் உருவாக்கினார்கள்.

பீம்சிங்கின் பாவமன்னிப்பில் இஸ்லாமியராக வரும் நாகையாதான் மிகவும் நல்லவர். இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவர் போல்தான் வருவார். அவர் ஒரு இந்து குழந்தையை எடுத்து நல்ல மனிதனாக வளர்ப்பார். கிறிஸ்துவராக வரும் சுப்பையா அவரும் ரொம்ப நல்லவர். அந்தப் படத்துல வில்லன் ஒரு இந்து. அதுவும் அந்த வில்லன் எல்லா வில்லத்தனங்களையும் இந்து அடையாளத்தோடுதான் செய்வார்….எங்கப்பனே ஞானபண்டிதா…..என்ற குரலோடு….

நடிகவேள்தான் அந்த வில்லன். சொல்லவும் வேணுமோ?

கிறித்துவராக வரும் சுப்பையா, அநாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் மூலம் மக்களிடம் அவருக்கு கிடைக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாத… ஆளவந்தார் என்கிற இந்து (எம்.ஆர்.ராதா)  “இதுனால நாட்டுக்கு என்ன புண்ணியம்? நான்கூடதான் போனவாரம் ஒரு கல்யாணம் பண்ணிவைச்சேன். அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் அதுல இல்லாத புண்ணியமா?” என்பார்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வந்த ‘அடுக்குமல்லி’ திரைப்படத்தில் கூட ஒரு முஸ்லீம், இறந்துபோன தன் இந்து நண்பனின் குடும்பத்தை காப்பாற்றுவார்.

ரஜனிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில் கூட முஸ்லிமாக வரும் நாகேஷ்தான் அநாதையான குழந்தைகளை வளர்த்திருப்பார். இப்படி தமிழர்களில் ஒரு பகுதியான இஸ்லாமியர்ளை நல்லவர்களாக காட்ட வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது….. இதை மாற்றிய படம் மணிரத்தினமும் பாலசந்தரும் இணைந்து எடுத்த ரோஜா.

இந்தப் படம் அதுகாரும் தமிழ்சினிமாவில் இருந்த இஸ்லாமிய ஆதரவு என்கிற நிலையை தலைகீழாக மாற்றியது. இந்தப் படத்தின் ‘சிறப்பு மோசடி’  இசை.

வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை ஒரு அச்சமூட்டுகிற ஒலி….அல்லது திகிலூட்டுகிற இசை… என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக…இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக மாற்றியது.

இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.

ரோஜா இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு அடையாளங்களோடு எடுப்பதற்கு, காஷ்மீர் பிரச்சினையும் பாகிஸ்தான் உளவாளிகளும் என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரிவினையின்போதோ, பாகிஸ்தானோடு போர் நடந்தபோதோ கூட இஸ்லாமியர்களை வில்லனாக சித்தரித்து தமிழ்படங்கள் வரவில்லை.

‘பேராண்மை‘ இந்தப் படத்தை பற்றி என்னுடைய இணையப் பக்கத்தில் விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் படித்த பல தோழர்கள் “நன்றாக இருக்கிறது” என்றும்  ”சரியில்லை. ஜனநாதனை எதிர் அணியில் நிறுத்திவிட்டிர்கள்” என்று ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து சொன்னார்கள். இந்த சமயத்தில்தான் தோழர் பாஸ்கர் ஒருநாள் போன் பண்ணி, “பேராண்மை திரைபடத்திற்கு விமர்சனம் கூட்டம் நடத்துகிறோம். ஜனநாதனும் கலந்து கொள்கிறார். நீங்கள் பேச வேண்டும்” என்று கேட்டார்.

நான் “அந்தப் படத்தை பற்றி விமர்சித்து எழுதி இருக்கிறேன். ஜனநாதன் கலந்துகொள்ளும்போது நானும் கலந்து கொண்டு பேசுவது   சங்கடத்தை ஏற்படுத்துறதா இருக்கும். வேணாமே” என்றேன்.

ஆனால் தோழர் பாஸ்கர், “பாராட்டியும் பேசுறாங்க… பாராட்டுறது மட்டுமல்ல நம்ம வேலை…. நீங்க உங்க கருத்த சொல்லுங்க… ஜனநாதன் ஒன்னும் தவறா நினைக்க மாட்டார்” என்றார். சரின்னு ஒத்துக்கிட்டேன்.

நேத்து (12-12-2009) இயக்குநர் ஜனநாதன் எனக்கு போன் பண்ணி, “நாளைக்கு முக்கியமான யூனியன் சம்பந்தமான வேலை இருக்கு. அதனால வரமுடியாது.  நீங்க வருவதினால்தான் நான் வரல என்று யாரும் நினைச்சுடக் கூடாது” என்று தான் வரமுடியாத சூழலை விளக்கி வருத்தப்பட்டார்.

பேராண்மையை எல்லாரும் இங்கிலிஷ் படம் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க… உண்மையில் அது ரஷ்ய படம். இரண்டாம் உலகப் போரின் போது, 16 ஜெர்மானிய நாஜிகள் ரஷ்ய காட்டுக்குள் ஊடுருவிடுகிறார்கள்.  தலைவர் ஸ்டாலின் தலைமையிலான 6 கம்யூனிஸ்டுகள், எப்படி அவர்களை வெற்றி கொள்கிறார்கள் என்பதுதான் கதை.

ஆமா, அவர்களை சிப்பாய்கள் என்று சொல்வதை விட கம்யூனிஸ்டுகள்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் ராணுவவீரன் வேறு கம்யூனிஸ்ட் வேறல்ல.

குதிரை தளவாட பட்டறையில் வேலை பார்த்து, லெனின் தலைமையிலான புரட்சியில் பெரும் பங்காற்றியவர் தலைமையில்தான் உலக புகழ் பெற்ற ஸ்டாலின் கிராட் யுத்தம் நடைபெற்றது.

‘பேராண்மை’யின் அடிப்படையான முதன்மையான தவறு புரட்சிகர சூழலில் நடந்த போராட்டத்தை அல்லது போரை, மோசமான இந்திய சூழலுக்கு மாற்றி படம் எடுத்தது.

இது எப்படி என்றால் ‘ஆதிக்க ஜாதிக்காரர்களின் செத்த மாட்டை அப்புறப்படுத்தக்கூடாது, அவர்களின் வீட்டுச் சாவுக்கு, திருவிழா போன்றவைகளுக்கு பறை அடிக்கக் கூடாது’ என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஆதிக்க ஜாதிவெறியர்களுக்கு எதிராகப் போராடி ஆதிக்க ஜாதிக்காரர்களால் கொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனின் போர்குணமிக்க வாழ்க்கையை, கொஞ்சம் மாற்றி (இந்த வரிகளை மட்டும் மேடையில் சொல்ல மறந்துவிட்டேன்)

இடஒதுக்கீட்டில் படித்து அதிகாரியான ஒரு இளைஞன், தன் உயிரை பணயம் வைத்து ஆதிக்கஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக பங்காளி தகராறில் பாதிக்கப்பட்டு, நின்றுபோன  ஊர்கோயில் திருவிழாவை பல சதிகளை முறியடித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார். அதற்கு நடுவுல இடஒதுக்கிடுக்கு ஆதரவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு வசனம் என்று செருகி  படம் எடுப்பது எவ்வளவு தவறானதோ, அதுபோல்தான் இந்தப் படத்தை பொருத்தமற்ற இந்தியதேசிய சூழலில் பொருத்தி படம் எடுத்ததும்.

இந்த படத்தில் இடஓதுக்கீட்டு ஆதரவான வசனங்கள் எதிர்நிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கு. தன்னை ஜாதி பெயர் சொல்லி இழிவாக பேசுகிற உயர் அதிகாரியான கணபதிராம் முன்பு, கதாநாயகன் துருவன், விஜிபி கோல்டன் பீச்சில் ஒருவர் என்ன பண்ணாலும் சிரிக்கமா எந்த சலனமும் காட்டாமல் அமைதியா நிப்பாரே… அதுபோல் எந்த உணர்வும் அற்று அமைதியாக பரிதாபமாக நிற்கிறார்.

ஆனால், கிளைமாக்சுல வெள்ளைக்காரன் துருவனை ‘இந்திய அடிமை நாயே’ என்று சொன்னவுடன் அவனை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார். கணபதிராம் என்கிற அந்த ஜாதி வெறி அதிகாரியை அப்படி அடிக்கிறமாதிரி கூட காட்டியிருக்க வேண்டாம். சின்ன எதிர்ப்புகூடவா காட்டமுடியாது.

அப்புறம் ராக்கெட். இந்திய விவசாயத்தை மேம்படுத்த இந்திய அரசு ராக்கெட் விடுதாம். இதுதான் படத்துல பெரிய ராக்கெட்டா இருக்கு.  படத்துல வடிவேலு இருந்தும் காமெடி இல்லாத குறையை இந்த ராக்கெட்தான் தீத்து வைக்குது.

புதிய பொருளாதார கொள்கை என்ற கவர்ச்சிகரமான பெயரில் விவசாயத்தை சீரழித்து, இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறது இந்த மோசமான அரசு. படத்தில் அதைப் பற்றி ஒருவார்த்தை கூட இல்லாமல், விவசாயத்திற்கு ராக்கெட் விடுறதா காட்டுறாங்க.

ஏதோ சில நேரங்களில், வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட்டை இந்தியா ஏவி இருக்கிறது என்பது உண்மைதான். அவை ‘மெட்டி ஒலி, கோலங்கள், மானாடா மயிலாட’ போன்ற அக்கப்போருகளை சேட்டிலைட் மூலமாக பார்ப்பதற்குத்தான் பயன்பட்டிருகிறதே தவிர, மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. செல்போன் கம்பெனிகாரனுங்களுக்குத்தான் நல்லா சம்பாதிப்பதற்கும் பயன்படுது.

மூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக ஒரு சினிமாவை பலமுறை  பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் பேராண்மை தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான்.

பார்ப்பன-முதலாளித்துவ ஆதரவு கொண்ட மணிரத்தினம் போன்றவர்கள் இந்திய தேசியத்திற்கு ஆதரவா படம் எடுத்தால், ரோஜா மாதிரி எடுப்பாங்க. ஏகாதிபத்திய எதிர்ப்பு, இடஒதுக்கிடு ஆதரவு நிலைபாடு கொண்டவர்கள் இந்திய தேசியத்திற்கு ஆதரவா படம் எடுத்தா, ‘பேராண்மை’ மாதிரி எடுப்பாங்க போல….

அதுக்காக சினிமாவே எடுக்க வேணான்னு சொல்லல… முற்போக்காக எடுக்குறேன்னு இப்படி குழப்பறத தவிர்க்கலாம். உழைக்கும் மக்களின் அரசியலை காண்பிச்சா நேர்மையா தவறில்லாமல் காட்டனும். ஆனால், இந்த சூழலில் அது சாத்தியமில்லை. அதுக்கு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சொல்லிட்டுப்போலாம்.

மலையாளத்தில் வந்த செம்மீன் மாதிரி… மீனவர்களின் வாழ்க்கையை மிக உன்னதமா அந்தப் படம் காண்பிச்சிச்சு. பிற சமூக மக்கள் மீனவர்களை புரிந்து கொள்ளவும், அவர்களை மரியாதையாக நடத்தவும், பார்க்கவும் அந்தப் படம் பயன்பட்டது. செம்மீன் நாவலில் சொல்லப்பட்டதில் பாதிதான் படத்துல இருந்தாலும், அந்தப் பாதி சிறப்பாகத்தான் இருந்தது.

ஒரு வேளை செம்மீன் மாதிரி எடுக்க முடியாட்டிகூட பரவாயில்ல, தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்கு படமான, தில்லானா மோகனாம்பாள் மாதிரி எடுக்கலாம். அல்லது அதையே உல்டா பண்ணி, எளிய மக்களை, எளிய கலையை உள்ளடக்கமாக கொண்டு வந்த கரகாட்டக்காரன் மாதிரியாவது எடுக்கலாம். அதனால எந்த தீங்கும் இல்ல. இநதப் படம் யாரையும் இழிவு படுத்தியும் காட்டல.

என்னைப் பொறுத்தவரை, மணிரத்தினம், கமல், பாலச்சந்தர் இவர்களைவிடவும் டி. ராஜேந்திர், ராமராஜன் போன்றவர்கள் முற்போக்கனவர்கள்தான். அவர்கள் படம் எதையோ ஒன்னு சம்மந்தமில்லாம சொல்லிட்டு போவுது. அந்த சினிமாக்களால… சமூகத்திற்கு பயன் இல்லாட்டியும் கூட ஆபத்தில்ல.

ஆனால், கமல்ஹாசனின் உன்னை போல் ஒருவன் போலவோ, மணிரத்தினத்தின் ரோஜா மாதிரி குறிப்பிட்ட மக்களை இழிவு படுத்தியோ அவர்களை குற்றவாளிகளாக சித்திரித்தோ காட்டறதில்ல.

நீ வந்து சினிமா எடுத்து பாரு, அப்ப தெரியும். வெளியில இருந்து பேசலாம். உள்ள வந்து பாத்ததான் அதன் சிரமம் தெரியும்’ அப்படின்னு இங்கவந்திருக்கிற சினிமாவை சேர்ந்தவங்க என் மேலே கோபப்படலாம். மீண்டும சொல்லிக் கொள்கிறேன்… நான் சினிமாவே எடுக்க வேணாம்ன்னு சொல்லல. அரசியல் ரீதியா எடுத்து குழப்பறதவிட கரகாட்டக்காரன் மாதிரி எடுக்கறது பிரச்சினை இல்லாதது.

தீவிரமான இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணல் அம்பேத்கரோ, தந்தை பெரியாரோ சினிமா மூலமா தங்கள் கருததுகளை சொல்ல விரும்பல. ஏற்கனவே சொன்ன மாதிரி, ‘அது கூடாது’ என்பதால் அல்ல. ‘முடியாது’ என்பதினால்தான்.

தந்தை பெரியார் சினிமாவை முற்றிலுமாக தவிர்ததார். அல்லது எதிர்த்தார். அவர் செஞ்சது எவ்வளவு சரி என்று பின்னாட்களில் திராவிடர் கழகம் எடுத்த சினிமாக்கள் அதை நிரூபிச்சிச்சு. அவர்கள் எடுத்த புரட்சிக்காரன் திரைப்படத்தின், புரட்சிக்காரன் அதான் கதாநாயகன் பார்ப்பன அய்யங்கார் குடும்பத்தில் இருந்து வருவதாகத்தான் காண்பித்தார்கள். கதாநாயகன் பார்ப்பனர். வில்லன் முஸ்லீம். அதாங்க பின்லேடன்தான் வில்லன். கெட்ட சாமியாரா வருபவர் கூட ஜெயேந்திரன் மாதிரி பார்ப்பன சாமியார் அல்ல. பார்ப்பனரல்லாத சாமியார்தான். இது வேறயாரோ எடுத்தப் படமல்ல. திராவிடர் கழகம் எடுத்த படம்.

பெரியார் படத்தில் வந்த பெரியாரே, பார்ப்பன எதிர்ப்பே இல்லாம பரிதாபமாகத்தான் இருந்தார். அவரை பார்ப்பனர்களின் எதிரி அல்ல என்று காட்சி வைப்பதில்தான் அதிகம் கவனம் எடுத்துக் கொண்டார்கள். அதனால்தான் படத்தில் பெரும் பகுதி ராமசாமி நாயக்கராக இருந்த காலத்தை காண்பித்தார்கள். பார்ப்பன நண்பரோடு காசிக்கு போவது…. கதர் துணி விக்கறது…. கள்ளுக்கடை மறியல் பண்ணறது…. இதெல்லாம் தந்தை பெரியார் பண்ணல…ராமசாமி நாயக்கர்தான் பண்ணார்.

பெரியாரா காட்டின பகுதிகளில் கூட அவருடைய பார்ப்பன எதிர்ப்பு காட்டப்படவேயில்ல….அப்பக்கூட பிரசவ வலியில் துடிக்கிற பார்ப்பன பெண்ணுக்கு உதவி செய்வது… தன் மீது செருப்பை வீசிய பார்ப்பனர்களிடம் கூட நிதானமா நடந்து கொள்வது போன்ற சம்பவங்களுக்குத்தான் முக்கியததுவம் கொடுத்திருந்தார்கள்.

பிறகு தமிழக முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் இவர்கள் பெரியாரிடம் பிரியமாய்  நடந்துகொண்டது என்றுதான் இருந்தது. ஜாதிக்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரின் போர்குணமிக்க போராட்டங்கள் படத்தில் இடம் பெறவே இல்லை.

தலைவர் லெனின் சினிமாவை பற்றி சொல்லும்போது, மிக சக்திவாய்ந்த ஊடகம். ஆனால் அதை எடுப்பதற்குத்தான் நம்மிடம் பணம் இல்லை என்றார். புரட்சி வெற்றி பெற்று தலைவர் லெனின் தலைமையில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான சினிமாக்களை கம்யூனிஸ்டுகள் எடுத்தார்கள். புரட்சியை சித்திரிச்சு எடுத்த அய்சன்ஸ்டினோட அக்டோபர், பொட்டம்கின் போன்ற படங்களுக்கு இணைய இன்னைக்கு வரைக்கும் யாரும் சினிமா எடுக்கல.

சிறந்த வடிவம் வானத்துல இருந்து வராது. தன் சொல்லவர செய்தியை தெளிவா சொல்லனும். புரியும் படி சொல்லனும்னு முயற்சிக்கும்போதுதான் சிறந்த நேர்த்தியான வடிவங்கள் உருவாகுது.

இன்றைய ஹாலிவுட் படங்களில் இருந்து தமிழ்படங்கள் வரை ரஷ்ய பட இயக்குநர் அய்சன்ஸ்டினோட வடிவங்களை காப்பியடிச்சுதான் எடுக்குறாங்க. பொட்டம்கின் படத்துல ஒரு காட்சி. புரட்சி முதலில் கப்பலிலதான் துவங்கியது. ஆனால், அது தோத்துப்போயிற்று. கப்பலில் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு புழு நெளியும் உணவு தரப்படுகிறது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிறார்கள். அப்போ ஒரு தொழிலாளியின் முறுக்கேறிய கைக்கு ஒரு குளோசப் போட்டிருப்பாரு அய்சன்ஸ்டின்.

அந்த குளோசப் அப்படியே ஹாலிவுட்டுக்கு போயி, சுத்தி சுத்தி வந்து சில்வர் ஸ்டலோன் கையா மாறி, தமிழ் நாட்டுக்கு சரத்குமார் கையா வந்து, நாகார்ஜீனனுககு கோபம் வந்தவுடன் அவரு கையில் தனி நரம்புல ரத்தம் ஏறி…. இப்படி அதை கேவலப்பட்டுத்தினார்கள்.

அக்டோபர் படத்துல ஒரு காட்சி. ஜார் மன்னன் வீழ்த்தப்படுறான். அத குறிப்பால் உணர்த்துவதற்கு, ஜார் மன்னன் சிலை துண்டு துண்டாக உடைந்து கீழே விழுவது மாதிரி காட்டியிருப்பார் அய்சன்ஸ்டின்.

ஆனால், ஜார் மன்னனுக்கு பிறகு அதிகாரத்திற்கு வருபவர்கள் அறிவுஜீவிகளும் எதிர் புரட்சியாளர்களுமான மென்ஷ்விக்குகள். அவர்களும் ஜார் மன்னனைப்போல் மோசமானவர்கள் என்பதை காட்டுவதற்கு அல்லது மீண்டும் ஜார் மன்னன் ஆட்சியைதான் அவர்களும் தருவார்கள், என்பதை குறிப்பால் உணர்த்துவதுபோல், உடைந்த அந்த ஜார் மன்னனின் சிலை ஒன்றாகி மீண்டும் கம்பீரமாக பீடத்தில் அமவர்வதுபோல் ஒரு ரிவர்ஸ் ஷாட் போட்டிருப்பார்.

மிக ஆழ்ந்த, நூறு பக்கங்களுக்குமேலும் விவரித்து எழுதப்படவேண்டிய செய்தியை, மிக எளிமையாக, ஒரு சில வினாடிகளில் சொல்லியிருப்பார் அய்சன்ஸ்டின். இப்படி அறிவுப்பூர்வமாகவும் உணர்வோடும் சொன்ன உலகத்தின் முதல் ரிவர்ஸ் ஷாட் அதுதான்.

அந்த ஷாட்டை ஹாலிவுட்டிலிருந்து, பிரன்ச்சு சினிமா, ஜெர்மன் சினிமா வரை காப்பியடித்தார்கள். தனிமனிதர்களின் பிரச்சினைய உலகப் பிரச்சினையாக காட்டுகிற, பிரான்சு போன்ற முதலாளித்துவ நாடுகளின் சினிமாக்களை பற்றி சிலாக்கிற, பிலிம் சொசைட்டி வைச்சிருக்கிறவனுங்கு எவனும் கம்யூனிஸ்டுகளின் கலைவடிவத்தை காப்பி அடிச்சு சினிமா எடுக்கறத சொல்றதில்ல. அந்த படங்களின் பெருமையை பேசறதுக்கு வெக்கப்படறதுமில்ல.

தமிழில் இந்த ரிவர்ஸ் ஷாட் பல கொடுமைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அநேகமா அத அதிகம் பயன்படுத்துனது கே. பாலச்சந்தர். அவருடைய சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துலதான் அத முதல்ல பயன்படுத்ததுனாருன்னு நினைக்கிறேன். அது ஒரு முக்கோணக் காதல். முக்கோணக் காதல்கூட இல்ல. அக்கா தங்கச்சிங்க மூணுபேரு ஒரு ஆணை காதலிப்பாங்க. மணியனோட கதை. அவரு குடும்ப கதையா என்னன்னு தெரியல. கடைசியில கதாநாயகன் கடைசி பொண்ணதான் காதலிப்பான். எப்போதுமே கதாநாயகன் அல்லது ஆண், வயசுல சின்னப்பொண்ணா பாத்துதானே காதலிப்பான்.

சிவகுமார் படிக்கட்டுல இறங்கி வரும்போதெல்லாம் ஸ்ரீவித்யா நாற்காலியில் இருந்து எழுந்து ஒடி வந்து நிப்பாங்க. காதல் தோல்வி அடைஞ்ச உடனே அப்படியே ரிவர்சுல போயி தொபக்கடின்னு நாற்காலியில விழுவாங்க. அப்புறம் உன்னால் முடியும் தம்பி படத்துல கீழ விழுந்திருக்கிற பூ வெல்லாம் திரும்பி மரத்துல போயி ஒட்டிக்கும். கீழே விழுந்திருக்கிற சைக்கிள் தானா எழுந்து நின்னுக்கும்… இப்படி கேவலப்படுத்தபட்டுது அயஸன்ஸ்டினோட ரிவர்ஸ் ஷாட்.

இன்றைய ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம், வடிவம் கம்யூனிஸ்டுகள் போட்ட பிச்சைதான். கப்பலில் துவங்குகிற புரட்சியை சித்திரிச்சு அயஸ்ன்ஸ்டின் எடுத்த பொட்டம்கின் படத்தோடு ஒப்பிடும்போது, டைட்டானிக் படம் எல்லாம் ஒன்னுமே இல்ல. உள்ளடக்கத்தை மட்டும் சொல்லல. டெக்னிக்கலாவே ஒன்னுமில்ல. டைடானிக் எல்லாம் டெஸ்க் ஒர்க்தான்.

பேராண்மையில் ஒரு வசனம் உறுதியா அழுத்தத்தோடு சொல்லப்படுது. ‘உயிரை கொடுத்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன்’னு. இந்த வசனம் யதார்த்தமா இல்ல. யாதார்த்தமா இருக்கனும்ன்னா நடைமுறையில் எப்படி இருக்கோ அது மாதிரி இருப்பதுதானே எதார்த்தாம்.

‘காஷ்மிர் மக்களின் உயிரை குடித்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். அஸ்ஸாம் மக்களின் உயிரை குடித்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். மணிப்பூர் பெண்களை மானபங்க படுத்தியேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். ஈழத் தமிழர்களை கொன்று குவித்தேனும்  இந்திய தேசியத்தை பாதுகாப்பேன்’ னு வசனம் இருந்திருந்த எதார்த்தமா இருந்திருக்கும்.

ஆனால், அப்படி உண்மைய வசனமா வைக்க முடியாது. வைச்சா படம் வெளிவராது. ஈழத்தில் தமிழர்களை  கொலை செய்த ரத்தத்தின் ஈரம்கூட இன்னும் காயல, இந்த சூழலில் இப்படி இந்திய தேசியத்தை வலியுறுத்தி ஒரு படம், அதுவும் நம்ம ஆதரவாளர்ன்னு சொல்றவர்கிட்ட இருந்து.

இத இப்படி ஒரு அர்த்ததோடு சொல்லனும்னு இயக்குநர் நினைச்சிருக்க மாட்டார். அவரோட நோக்கம் அதுவாகவும் இருக்காது. ஆனால், அந்த ரஷ்ய படம் தன் நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்வதாகதான் படம் சொல்கிறது. அதை இந்திய சூழலுக்கு பொருத்தியதால் வந்த தவறு இது.

‘என் உயிரை கொடுத்தேனும் ரஷ்ய நாட்டிற்காக என்  உயிரை தியாகம் செய்வேன்’’ என்று சொல்லமுடியாது இல்லியா? அதான்.

பேராண்மையை பற்றி ஒரே வரியில் சொல்லனும்ன்னா, தேசியம் என்கிற வௌக்குமாத்துக்கு கட்டப்பட்ட பட்டுக் குஞ்சம்.

தி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்

அய்சன்ஸடினின் அக்டோபர் படத்தின் போஸ்டர்

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1

‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3

பகுதி – 4

‘நீ வந்து சினிமா எடுத்து பாரு, அப்ப தெரியும். வெளியில இருந்து பேசலாம். உள்ள வந்து பாத்ததான் அதன் சிரமம் தெரியும்’ அப்படின்னு இங்கவந்திருக்கிற சினிமாவை சேர்ந்தவங்க என் மேலே கோபப்படலாம். மீண்டும சொல்லிக் கொள்கிறேன்… நான் சினிமாவே எடுக்க வேணாம்ன்னு சொல்லல. அரசியல் ரீதியா எடுத்து குழப்பறதவிட கரகாட்டக்காரன் மாதிரி எடுக்கறது பிரச்சினை இல்லாதது.

-முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1

‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள்

S.P. ஜனநாதன் இயக்கியபேராண்மைதிரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1

‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2

பகுதி – 3

மூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக ஒரு சினிமாவை பலமுறை  பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் பேராண்மை தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான்.

பார்ப்பன – முதலாளித்துவ ஆதரவு கொண்ட மணிரத்தினம் போன்றவர்கள் இந்திய தேசியத்திற்கு ஆதரவா படம் எடுத்தால், ‘ரோஜா’ மாதிரி எடுப்பாங்க. ஏகாதிபத்திய எதிர்ப்பு, இடஒதுக்கிடு ஆதரவு நிலைபாடு கொண்டவர்கள் இந்திய தேசியத்திற்கு ஆதரவா படம் எடுத்தா, ‘பேராண்மை’ மாதிரி எடுப்பாங்க போல….

அதுக்காக சினிமாவே எடுக்க வேணான்னு சொல்லல… முற்போக்காக எடுக்குறேன்னு இப்படி குழப்பறத தவிர்க்கலாம். உழைக்கும் மக்களின் அரசியலை காண்பிச்சா நேர்மையா தவறில்லாமல் காட்டனும். ஆனால், இந்த சூழலில் அது சாத்தியமில்லை. அதுக்கு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சொல்லிட்டுப்போலாம்.

மலையாளத்தில் வந்த செம்மீன் மாதிரி… மீனவர்களின் வாழ்க்கையை மிக உன்னதமா அந்தப் படம் காண்பிச்சிச்சு. பிற சமூக மக்கள் மீனவர்களை புரிந்து கொள்ளவும், அவர்களை மரியாதையாக நடத்தவும், பார்க்கவும் அந்தப் படம் பயன்பட்டது. செம்மீன் நாவலில் சொல்லப்பட்டதில் பாதிதான் படத்துல இருந்தாலும், அந்தப் பாதி சிறப்பாகத்தான் இருந்தது.

ஒரு வேளை செம்மீன் மாதிரி எடுக்க முடியாட்டிகூட பரவாயில்ல, தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்கு படமான, தில்லானா மோகனாம்பாள் மாதிரி எடுக்கலாம். அல்லது அதையே உல்டா பண்ணி, எளிய மக்களை, எளிய கலையை உள்ளடக்கமாக கொண்டு வந்த கரகாட்டக்காரன் மாதிரியாவது எடுக்கலாம். அதனால எந்த தீங்கும் இல்ல. இநதப் படம் யாரையும் இழிவு படுத்தியும் காட்டல.

என்னைப் பொறுத்தவரை, மணிரத்தினம், கமல், பாலச்சந்தர் இவர்களைவிடவும் டி. ராஜேந்திரர், ராமராஜன் போன்றவர்கள் முற்போக்கனவர்கள்தான். அவர்கள் படம் எதையோ ஒன்னு சம்மந்தமில்லாம சொல்லிட்டு போவுது. அந்த சினிமாக்களால… சமூகத்திற்கு பயன் இல்லாட்டியும் கூட ஆபத்தில்ல.

ஆனால், கமல்ஹாசனின் ‘உன்னை போல் ஒருவன்’ போலவோ, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ மாதிரி குறிப்பிட்ட மக்களை இழிவு படுத்தியோ அவர்களை குற்றவாளிகளாக சித்திரித்தோ காட்டறதில்ல.

-தொடரும்

தொடர்புடைய பதிவுகள்:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1

‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2

‘பேராண்மை’ விடும் ராக்கெட்

ஸ்டாலின் கிராட் யுத்தத்தில் வீழ்த்தப்பட்ட ஜெர்மானிய நாஜிகள். (நிஜப் படம்)

S.P. ஜனநாதன் இயக்கியபேராண்மைதிரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்  -1

பகுதி – 2

‘பேராண்மை இந்தப் படத்தை பற்றி என்னுடைய இணையப் பக்கத்தில் விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் படித்த பல தோழர்கள் “நன்றாக இருக்கிறது” என்றும்  “சரியில்லை. ஜனநாதனை எதிர் அணியில் நிறுத்திவிட்டிர்கள்” என்று ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து சொன்னார்கள். இந்த சமயத்தில்தான் தோழர் பாஸ்கர் ஒருநாள் போன் பண்ணி, “பேராண்மை திரைபடத்திற்கு விமர்சனம் கூட்டம் நடத்துகிறோம். ஜனநாதனும் கலந்து கொள்கிறார். நீங்கள் பேச வேண்டும்” என்று கேட்டார்.

நான் “அந்தப் படத்தை பற்றி விமர்சித்து எழுதி இருக்கிறேன். ஜனநாதன் கலந்துகொள்ளும்போது நானும் கலந்து கொண்டு பேசுவது   சங்கடத்தை ஏற்படுத்துறதா இருக்கும். வேணாமே” என்றேன்.

ஆனால் தோழர் பாஸ்கர், “பாராட்டியும் பேசுறாங்க… பாராட்டுறது மட்டுமல்ல நம்ம வேலை…. நீங்க உங்க கருத்த சொல்லுங்க… ஜனநாதன் ஒன்னும் தவறா நினைக்க மாட்டார்” என்றார். சரின்னு ஒத்துக்கிட்டேன்.

நேத்து (12-12-2009) இயக்குநர் ஜனநாதன் எனக்கு போன் பண்ணி, “நாளைக்கு முக்கியமான யூனியன் சம்பந்தமான வேலை இருக்கு. அதனால வரமுடியாது.  நீங்க வருவதினால்தான் நான் வரல என்று யாரும் நினைச்சுடக் கூடாது” என்று தான் வரமுடியாக சூழலை விளக்கி வருத்தப்பட்டார்.

பேராண்மையை எல்லாரும் இங்கிலிஷ் பாடம் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க… உண்மையில் அது ரஷ்ய படம். இரண்டாம் உலகப் போரின் போது, 16 ஜெர்மானிய நாஜிகள் ரஷ்ய காட்டுக்குள் ஊடுருவிடுகிறார்கள்.  தலைவர் ஸ்டாலின் தலைமையிலான 6 கம்யூனிஸ்டுகள், எப்படி அவர்களை வெற்றி கொள்கிறார்கள் என்பதுதான் கதை.

ஆமா, அவர்களை சிப்பாய்கள் என்று சொல்வதை விட கம்யூனிஸ்டுகள்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் ராணுவவீரன் வேறு கம்யூனிஸ்ட் வேறல்ல.

குதிரை தளவாட பட்டறையில் வேலை பார்த்து, லெனின் தலைமையிலான புரட்சியில் பெரும் பங்காற்றியவர் தலைமையில்தான் உலக புகழ் பெற்ற ஸ்டாலின் கிராட் யுத்தம் நடைபெற்றது.

‘பேராண்மை’யின் அடிப்படையான முதன்மையான தவறு புரட்சிகர சூழலில் நடந்த போராட்டத்தை அல்லது போரை, மோசமான இந்திய சூழலுக்கு மாற்றி படம் எடுத்தது.

இது எப்படி என்றால் ‘ஆதிக்க ஜாதிக்காரர்களின் செத்த மாட்டை அப்புறப்படுத்தக்கூடாது, அவர்களின் வீட்டுச் சாவுக்கு, திருவிழா போன்றவைகளுக்கு பறை அடிக்கக் கூடாது’ என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஆதிக்க ஜாதிவெறியர்களுக்கு எதிராகப் போராடி ஆதிக்க ஜாதிக்காரர்களால் கொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனின் போர்குணமிக்க வாழ்க்கையை, கொஞ்சம் மாற்றி (இந்த வரிகளை மட்டும் மேடையில் சொல்ல மறந்துவிட்டேன்)

இடஒதுக்கீட்டில் படித்து அதிகாரியான ஒரு இளைஞன், தன் உயிரை பணயம் வைத்து ஆதிக்கஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக பங்காளி தகராறில் பாதிக்கப்பட்டு, நின்றுபோன  ஊர்கோயில் திருவிழாவை பல சதிகளை முறியடித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார். அதற்கு நடுவுல இடஒதுக்கிடுக்கு ஆதரவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு வசனம் என்று செருகி  படம் எடுப்பது எவ்வளவு தவறானதோ, அதுபோல்தான் இந்தப் படத்தை பொருத்தமற்ற இந்தியதேசிய சூழலில் பொருத்தி படம் எடுத்ததும்.

இந்த படத்தில் இடஓதுக்கீட்டு ஆதரவான வசனங்கள் எதிர்நிலையில் இருந்து எழுதப்பட்டிருக்கு. தன்னை ஜாதி பெயர் சொல்லி இழிவாக பேசுகிற உயர் அதிகாரியான கணபதிராம் முன்பு, கதாநாயகன் துருவன், விஜிபி கோல்டன் பீச்சில் ஒருவர் என்ன பண்ணாலும் சிரிக்கமா எந்த சலனமும் காட்டாமல் அமைதியா நிப்பாரே… அதுபோல் எந்த உணர்வும் அற்று அமைதியாக பரிதாபமாக நிற்கிறார்.

ஆனால், கிளைமாக்சுல வெள்ளைக்காரன் துருவனை ‘இந்திய அடிமை நாயே’ என்று சொன்னவுடன் அவனை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார். கணபதிராம் என்கிற அந்த ஜாதி வெறி அதிகாரியை அப்படி அடிக்கிறமாதிரி கூட காட்டியிருக்க வேண்டாம். சின்ன எதிர்ப்புகூடவா காட்டமுடியாது.

அப்புறம் ராக்கெட். இந்திய விவசாயத்தை மேம்படுத்த இந்திய அரசு ராக்கெட் விடுதாம். இதுதான் படத்துல பெரிய ராக்கெட்டா இருக்கு.  படத்துல வடிவேலு இருந்தும் காமெடி இல்லாத குறையை இந்த ராக்கெட்தான் தீத்து வைக்குது.

புதிய பொருளாதார கொள்கை என்ற கவர்ச்சிகரமான பெயரில் விவசாயத்தை சீரழித்து, இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறது இந்த மோசமான அரசு. படத்தில் அதைப் பற்றி ஒருவார்த்தை கூட இல்லாமல், விவசாயத்திற்கு ராக்கெட் விடுறதா காட்டுறாங்க.

ஏதோ சில நேரங்களில், வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட்டை இந்தியா ஏவி இருக்கிறது என்பது உண்மைதான். அவை ‘மெட்டி ஒலி, கோலங்கள், மானாடா மயிலாட’ போன்ற அக்கப்போருகளை சேட்டிலைட் மூலமாக பார்ப்பதற்குத்தான் பயன்பட்டிருகிறதே தவிர, மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. செல்போன் கம்பெனிகாரனுங்களுக்குத்தான் நல்லா சம்பாதிப்பதற்கும் பயன்படுது.

-தொடரும்

தொடர்புடைய பதிவு:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

S.P. ஜனநாதன் இயக்கியபேராண்மைதிரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு:

‘கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகபடுத்தியது திராவிட இயக்கம். வணக்கம் என்கிற கலகச் சொல்லோடு என் உரையை துவங்குகிறேன் வணக்கம்.

‘அய்ரோப்பாவை பிடித்து ஆட்டுகிறது ஒரு பூதம். கம்யூனிசம் என்னும் பூதம்’ என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கல்சும் சொன்னது போல், தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்டியது ஒரு பூதம். சுயமரியாதை இயக்கம் என்னும் பூதம்.

1925 ல் தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம், காங்கிரஸ், நீதிக்கட்சி என்று பல இடங்களில் ஊடுறுவியது. அதுகாறும் அவர்கள் நம்பிக்கொண்டிருந்த புனிதமாக நினைத்துக்கொண்டிருந்தவைகளை தலைகீழாக கவிழ்த்து நொறுக்கியது. அதற்கு ஆதரவாக எதிராக ஏதோ ஒரு நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அப்படித்தான் அது நாடக கலைஞர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்தான் நடிகவேள் எம்.ஆர். ராதா.

தந்தை பெரியார் அரசியல் மேடைகளில் எப்படி சமரசம் இல்லாமல் போர்க்குணத்தோடு இயங்கினாரோ, அதுபோல் நாடக மேடைகளில் பெரியாரைபோலவே ஒரு ஒற்றை போர்வாளாக இயங்கினார் நடிகவேள். இப்படித்தான் திராவிட இயக்கம்  கலைத்துறையில் கால்பதித்தது.

ஆனால், சினிமாவில் பெரியாரோ பெரியாரின் தீவிர தொண்டர்களோ பங்கு கொள்ளவில்லை. நடிகவேளே கூட ஒரு படைப்பாளனாக தன் பங்களிப்பை சினிமாவில் செய்யவில்லை. நடிகனாகத்தான் அதுவும் நீண்டநாட்கள் கழித்துதான் பங்கெடுத்தார். அதை தன் ‘ரிடையர்டு லைப்’ என்றுதான் சொன்னார். சினிமாவில் பங்கெடுக்க கூடாது என்பதல்ல பெரியாரின் எண்ணம். ‘முடியாது’ என்பதுதான்.

தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பை சினமாவில் செய்ய முடியாது என்பதுதான் காரணம். ஆனால், திமுக காரர்கள் சினிமாவில் பங்கெடுத்தார்கள். அதற்குக் காரணம் பெரியாரின் கொள்கையில் இருந்து விலகி அவர்கள் செய்து கொண்ட சமரசம்தான்.

அவர்கள் பெரியாரிடம் இருந்து விலகி பிற்போக்காளராக மாறினாலும், சினிமா அவர்களைவிடவும் பிற்போக்காக இருந்தது. அதனால் அவர்கள் சினிமாவில் முற்போக்காளர்களாக முன்னணி  பாத்திரம் வகித்தனர்.

அதனால்தான், பராசக்தியில் “கோயில் கூடாது என்பதல்ல…. அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது….” என்று வசனம் வந்தது. இதை பெரியார் சொல்லமுடியாது. திமுகவால் தான் சொல்ல முடியும்.

ஏய் குருக்கள்அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரை பார்த்து கேட்க மறுத்து, “ஏய் பூசாரி அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்என்று பார்ப்பனரல்லாதவரை பார்த்து கேள்வி கேட்டது.

இன்று காஞ்சிபுரத்தில், குருக்கள் என்ன பண்றானோ? அதைத்தான் பாரசக்தியில் அந்த பூசாரி பண்ணுவான். பூசாரிக்கு பதில் பார்ப்பன குருக்கள் காதாபாத்திரத்தை காட்டி பூணூலோடு கோர்ட்டு கூண்டுல நிறுத்தி இருந்தால் பராசக்தி ரிலீசே ஆகியிருக்காது.

பார்ப்பனியத்தை எதிர்த்து மேடையில், தனி பத்திரிகையில் ஆயிரம் எழுதலாம். ஆனால், பார்ப்பனர்கள் செல்வாக்காக இருக்கிற அதிகார மையத்தில் குறிப்பால்கூட எதிர்ப்பை காட்ட முடியாது.

ஆனாலும், திமுக காரர்களின் சினிமா பிரவேசம், ஆரோக்கியமான மாற்றத்தை தான் உருவாக்கிச்சு.  ‘ப்ரணநாதா, ஸ்வாமி’ என்ற பார்ப்பனவசனத்தை ஒழிச்சி, தனித்தமிழ் வசனங்களை கொண்டு வந்தது. ‘ராமாயணம், மகாபாரதம்’ போன்ற புராண குப்பைகளை தீர்த்துக்கட்டி சமூக படங்களை கொண்டு வந்தது.

திமுக வருகைக்கு முன் தமிழ்சினிமாவில், ஓரே ஒரு கதாபாத்திரம் கூட இஸ்லாமிய காதாபாத்திரம் கிடையாது. ராமாயணத்திலும், மகாபாரத்திலும் எப்படி முஸ்லீமை காட்ட முடியும்? திமுக கலைஞர்கள் உருவாக்கிய அலை தமிழ்சினிமாவின் உள்ளடக்கத்தை தலைகீழ் மாற்றியது.

அதற்கு முன் ஒரு முஸ்லீம் கதாபாத்திரம்கூட இல்லாமல் வந்த தமிழ்சினிமாவில், ஒரு இந்துகூட இல்லாத முமுமையான இஸ்லாமிய சூழலில் சினிமாக்களை கொண்டுவர திமுக  ஏற்படுத்திய அலை முழு காரணமாக இருந்தது.

குலேபகாவலி, அலிபாபவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன் என்று முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வர ஆரம்பித்தன. திமுக அல்லாத இயக்குநர்கள் கூட இப்படித்தான் படம் எடுக்க ஆரம்பித்தார்கள். குலேபகாவலியின் இயக்குநர் டி.ஆர். ராமண்ணா. இவர் திமுக காரர் அல்ல. இப்படி ஒரு Trend திமுக காரகள்தான் உருவாக்கினார்கள்.

பீம்சிங்கின் பாவமன்னிப்பில் இஸ்லாமியராக வரும் நாகையாதான் மிகவும் நல்லவர். இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவர் போல்தான் வருவார். அவர் ஒரு இந்து குழந்தையை எடுத்து நல்ல மனிதனாக வளர்ப்பார். கிறிஸ்துவராக வரும் சுப்பையா அவரும் ரொம்ப நல்லவர். அந்தப் படத்துல வில்லன் ஒரு இந்து. அதுவும் அந்த வில்லன் எல்லா வில்லத்தனங்களையும் இந்து அடையாத்தோடுதான் செய்வார்….எங்கப்பனே ஞானபண்டிதா…..என்ற குரலோடு….

நடிகவேள்தான் அந்த வில்லன். சொல்லவும் வேணுமோ?

கிறித்துவராக வரும் சுப்பையா, அநாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் மூலம் மக்களிடம் அவருக்கு கிடைக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாத… ஆளவந்தார் என்கிற இந்து (எம்.ஆர்.ராதா)  “இதுனால நாட்டுக்கு என்ன புண்ணியம்? நான்கூடதான் போனவாரம் ஒரு கல்யாணம் பண்ணிவைச்சேன். அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் அதுல இல்லாத புண்ணியமா?” என்பார்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வந்த ‘அடுக்குமல்லி’ திரைப்படத்தில் கூட ஒரு முஸ்லீம், இறந்துபோன தன் இந்து நண்பனின் குடும்பத்தை காப்பாற்றுவார்.

ரஜனிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில் கூட முஸ்லிமாக வரும் நாகேஷ்தான் அநாதையான குழந்தைகளை வளர்த்திருப்பார். இப்படி தமிழர்களில் ஒரு பகுதியான இஸ்லாமியர்ளை நல்லவர்களாக காட்ட வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது….. இதை மாற்றிய படம் மணிரத்தினமும் பாலசந்தரும் இணைந்து எடுத்த ரோஜா.

இந்தப் படம் அதுகாரும் தமிழ்சினிமாவில் இருந்த இஸ்லாமிய ஆதரவு என்கிற நிலையை தலைகீழாக மாற்றியது. இந்தப் படத்தின் ‘சிறப்பு மோசடி’  இசை.

வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை ஒரு அச்சமூட்டுகிற ஒலி….அல்லது திகிலூட்டுகிற இசை… என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக…இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக மாற்றியது.

இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.

ரோஜா இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு அடையாளங்களோடு எடுப்பதற்கு, காஷ்மீர் பிரச்சினையும் பாகிஸ்தான் உளவாளிகளும் என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரிவினையின்போதோ, பாகிஸ்தானோடு போர் நடந்தபோதோ கூட இஸ்லாமியர்களை வில்லனாக சித்தரித்து தமிழ்படங்கள் வரவில்லை.

தொடரும்

‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம்

***

தொடர்புடைய பதிவுகள்:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

யாரையும் விட மாட்டீர்களா?

யாரையும் விட மாட்டீர்களா? எல்லாரையும் திட்டுகீறீர்களே?

-சு.விநாயகம், சென்னை

தன்னைப் பற்றியோ அல்லது தனக்கு வேண்டியவர்கள் பற்றியோ விமர்சிக்கும்போது, அதை நேரடியாக கேட்க தைரியமற்றவர்களின் உளவியல் சார்ந்த கேள்வி இது.

தன் விஷயத்தையே பொதுவிஷயமாக மாற்றி, தன்னையும் தனக்கு வேண்டியவர்களை விமர்சிக்கிற காரணத்தினாலேயே, தரமான ஒன்றை ‘தரமற்றது’ என்று பிரச்சாரம் செய்வதின் மூலமாக, ‘பழிவாங்கிய மனத் திருப்தி’யை அடைவதற்கான முயற்சியே இந்தக் கேள்வியின் உளவியல் பின்னணி.

நான் விமர்சிக்கிற விஷயம், சரியா? தவறா? என்பது பற்றிதான் உங்கள் கேள்வி இருக்க வேண்டும். தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்.

பாராட்டிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் பேர்கள் வருவார்கள். பாராட்டி அதன் மூலம் பலனும் பெறுவார்கள். சமூக பொறுப்புள்ளவன் யாரையும் தேவையற்று பாராட்டிக் கொண்டிருக்க மாட்டான். 1.5.1927 ம் ஆண்டு தந்தை பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடியரசினால் நான் செய்து வந்த பிரச்சாரத்திலும் அரசியல் இயங்கங்களைக் கண்டித்தேன். வேதம் என்று சொல்லுபவற்றை, சாத்திரம் என்பதைக் கண்டித்தேன்.

பார்ப்பனியம் என்பதை கண்டித்தேன். சாதி என்பதை கண்டித்தேன். அரசாங்கம் என்பதை கண்டித்தேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்தேன்.நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்தேன். தேர்தல் என்பதைக் கண்டித்தேன். கல்வி என்பதைக் கண்டித்தேன்.

ஸ்ரீமான்கள் கல்யாண சுந்தரம் முதலியார், வரதராஜூலு நாயுடு, ராஜகோபாலாச் சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்தேன். இன்னும் என்னெனவற்றையோ, யார் யாரையோ கண்டித்தேன். கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன்? எதைக் கண்டிக்கவில்லை? என்பது எனக்கு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது.

இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும், கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத தியாகமோ, திட்டமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படமாட்டேன் என்கிறது.

செப்டம்பர்  2007 சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடைய  கட்டுரை, பதில்கள்:

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

ஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…

பணமா? பாசமா?

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்அண்ணல் அம்பேத்கரின் 53 ம் ஆண்டின் நினைவு நாளையொட்டி

“சாதியொழிக்க அண்ணல் அம்பேத்கர்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கருத்தரங்க உரை :  வே.மதிமாறன்

மனிதனை மனிதன் சுரண்டவும் ஒடுக்கவும் பயன்படும் சாதியை ஒழிக்க நாம் என்ன செய்யவேண்டும்?

விவாதிப்போம்! அனைவரும் வருக!

நாள்: 6-12-09

நேரம்: மாலை 3 மணி

இடம்: சென்னை மாநகராட்சி குழந்தைகள் பள்ளி,

டாக்டர் சந்தோஷ் நகர், எழும்பூர், சென்னை – 8

தொடர்புக்கு:

வேந்தன்

சாகேப் முடித்திருத்தகம்

எழும்பூர், சென்னை – 8.

அலைப் பேசி எண்: 98841 99901

தொடர்புடைய பதிவுகள்:

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்