ஈழத் தமிழர்களும் வர்க்க வேறுபாடும்

வர்க்க வேறுபாடுகளை குறித்த உங்களது பதில்களை படித்துவருகிறேன். ஆனால், ஈழப் பிரச்சினை வர்க்க ரீதியான பிரச்சினை என்பதைவிட அது இனரீதியான பிரச்சினை. அதில் எப்படி வர்க்க வேறுபாடுகளை பார்க்க முடியும்?

தமிழ்ப்பித்தன்

ஈழமக்களின் பிரச்சினையை வர்க்க வேறுபாட்டினால் வந்தப் பிரச்சினை என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும், ஈழ மக்களின் துயரங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சொல்கிற தலைவர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும்தான் ஈழ மக்களிடம வர்க்க வேறுபாட்டுன் நடந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், செங்கல்பட்டு, கும்பிடிபூண்டி போன்ற இடங்களில் மிக ஏழ்மையான, அவலமான நிலையில் அகதிகளாக  வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் காட்டுகிற அன்பை விட, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அகதிகளாக வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் இவர்கள் காட்டுகிற அன்பு அலாதியானது. பிரத்தியேகமானது. பாசமயமானது.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பல நாடுகள் கடந்து வாழ்கிற, இணையத்தில் வலம் வருகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் சாட்டில், மெயிலில், விசா வாங்கி நேரில் சென்றும், அவர்கள் நேரில் இங்கு வந்தால் ‘விருந்தோம்பலில்’ வெளிப்படுத்துகிற அன்பில், நட்பில் ஒரு சிறு பகுதியையாவது தன் அருகில் அகதிகள் முகாமில் அவதிப்படுகிற ஈழத்தமிழர்களிடம் காட்டவேண்டுமல்லவா?

பிரான்சில், ஜெர்மனியில், இங்கிலாந்தில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் வாழ்கிற ஈழத்தமிழர்களிடம் நெருக்கமாக நட்பு வைத்திருக்கிறவர்களில் எத்தனைப் பேர் தன் அருகில் உள்ள கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வாழ்கிறவர்களிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்?

இந்த ‘ இன உணர்வில்’ இருக்கிறது வர்க்க வேறுபாடு?

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

பணமா? பாசமா?