பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

பேராண்மை விமர்சனக் கூட்டத்தில், பராசக்தி திரைப்படம் “ஏய் குருக்கள், அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரை பார்த்து கேட்க மறுத்து “ஏய் பூசாரி அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்” என்று பார்ப்பனரல்லாதவரை பார்த்து கேள்வி கேட்டது.’என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்? பராசக்தி திரைப்படத்தை குறை சொல்லும் பாணியில் பேசியிருக்கிறீர்கள். ஆனால், பலமுற்போக்கான கருத்துக்களை உள்ளடக்கி வந்ததுதான் பராசக்தி.

-மணிமாறன்

அப்படி திட்டவட்டமாக தீர்த்துக்கட்டி, பராசக்தியை நான் பேசவில்லை. பெரியாரோடு ஒப்பிடும்போது பராசக்தி பிற்போக்கானது. சினிமாவோடு ஒப்பிடும்போது பராசக்தி முற்போக்கானது என்று அடிப்படையில்தான் குறிப்பிட்டு இருந்தேன்.

பராசக்தி தமிழ் சினிமாவின் ஒரு புதிய அலை. பராசக்தி படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, அதன் திரைக்கதைகூட நவீனமானது, எளிமையானது. எளிய மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது.

பெரும்பாலும் கிராமபுறத்தில் சினிமா பார்க்க போகிறவர்கள், தன் வேலைகளை முடித்துவிட்டு தாமதமாகதான் திரையரங்கிற்கு போவார்கள். அரைமணிநேரம் திரைப்படம் ஓடியிருக்கும். பக்கதில் இருப்பவர்களிடம் நடந்த கதைகேட்டு தொல்லை செய்வார்கள். அப்படி தாமதமாக வருபவர்களுக்காகவே முன்கதை சுருக்கமாக, அரைமணிநேரம் கழித்து அதுவரை நடந்த கதையை இரண்டு கதாபாத்திரங்கள், அந்த வீட்டின் முன்பு நின்று, ”அய்யோ பாவம்…நல்லா வாழ்ந்த குடும்பம்…..”என்று பேசிவிட்டு செல்லும். அது தாமதமாக வருபவர்களுக்காக வைக்கப்பட்ட காட்சி.

‘பொண்ணு பொறந்த நாகம்மையார், பையன் பொறந்த பன்னீர்செல்வம்னு பெயர் வைக்கனும்’ என்று வசனம் வரும். நாகம்மையார் தந்தை பெரியாரின் துணைவியார். சுயமரியாதை இயக்கத் தோழர்களின் தாய். பன்னீர்செல்வம் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர். தந்தை பெரியாருக்காக எதையும் செய்யக்கூடியவராக இருந்தவர்.

படத்தில் சிவாஜியின் காதலியாக வரும், பண்டரிபாய் பெரியாரின் சுயமரியதை கொள்கையை கடைபிடிக்கும் பெண். ஆணைவிட அதாவது கதாநாயகனைவிட புத்திசாலி. பண்டரிபாயின் சகோதரர், சுயமரியாதை கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் சொற்பொழிவாளர் கதாபாத்திரம்.

படத்தின் கடைசிக் காட்சியில், பண்டரிபாய்க்கும் சிவாஜிக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று குடும்பத்தார், பேசிக்கொள்வார்கள். திருமணத்தை வைதீக முறைபடி நடத்த வேண்டும் என்று சொல்லும்போது, ‘அதெல்லாம் எதற்கு? தாலிகூட வேண்டாம். இரண்டு மாலை. ஒரு சொற்பொழிவாளர் போதும்’ என்று பெரியாரின் சுயமரியாதை திருமண முறையை வலியுறுத்திதான் படம் முடியும்.

பிச்சைக்காரர்களை மிகக் கேவலமாக சித்தரித்து நகைச்சுவை செய்கின்றன இன்றையத் தமிழ் சினிமாக்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே,  பிச்சைக்காரர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டிய ஓரே படம் பராசக்திதான்.

ரங்கூனில் இருந்து சிவாஜி கப்பலில் வந்து சென்னையில் இறங்கியவுடன், தன்னிடம் பிச்சை கேட்கும் குரலை, விமர்சிப்பார். அந்த விமர்சனம்கூட பிச்சைக்காரரை குறைசொல்வதாக இல்லாமல், சமூகத்தைகுறை சொல்வதாகதான் இருக்கும். பிறகு எஸ்.எஸ.ஆர்., பிச்சைகாரர்களுக்காக சங்கம் வைத்து அவர்களின் உரிமைக்காக போராடுபவராகவும் வருவார்.

“மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான். உங்களை சொல்லவில்லை….

முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்சா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன்.” என்ற வசனங்களை எல்லாம் உணர்ந்துதான் பேசியிருந்தேன்.

மணிமாறன், நீங்கள் கேட்ட கேள்வியையே, சிலர் திருப்பிப்போட்டு்ம் கேட்கிறார்கள். ‘பராசக்தியை பாராட்டுகிற நீங்கள் ஏன் பேராண்மையில் சொல்லப்பட்ட முற்போக்கான விசயங்களை பாராட்ட மறுக்கிறீர்கள்?’ என்று.

பராசக்தி படத்தின் வசனங்கள், கடைசிவரை சமூகததை, நீதி மன்றத்தை, பக்தியை, அகதிகளை இந்திய அரசு நடத்துகின்ற விதத்தை, இந்த அமைப்பை தொடர்ந்து கேலி செய்துகொண்டு, கேள்வி கேட்டு கொண்டே இருக்கும்.

பூசாரி, பணக்கார பெரிய மனிதர், மைனர், நீதி மன்றம் இவகளைக் குறித்து படம் பார்த்தவர்கள், ஆதரவு நிலை அல்ல. விமர்சன நிலையில்தான் படம்பார்த்து இருப்பார்கள். மக்களுக்கு தேவையில்லாத அல்லது ஆபத்தான கருத்தை பாராசக்தி சொல்லவில்லை. மாறாக பல புதிய சீர்திருத்தக் கருத்துக்களைத்தான் சொன்னது.

தொடர்புடையவை:

‘பேராண்மை’ அசலும் நகலும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு