‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆயுதம்….

‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ புத்தகத்தின் இரண்டாம்  பதிப்புக்கான முன்னுரை:

மூன்று சிற்றிதழ்களைத் தவிர, எந்த வெகுஜன பத்திரிகைகளிலும் நூல் அறிமுக பகுதிகளில்கூட வெளியாகாமல், அனேகமாக முதல் பதிப்பு 7 மாதங்களுக்குள் தீர்ந்துவிட்டது. தீரும் தருவாயில்தான் இதற்கான வெளியீட்டு விழா மும்பையில் ‘விழுத்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது. புத்தகத்தைப் படித்த தோழர்களின் பரிந்துரைகளினாலேயே இந்த வேக விற்பனை சாத்தியமாயிற்று.

இந்த புத்தகத்தை எழுதியதற்கான நோக்கம் டாக்டர் அம்பேத்கரை, பொதுதளத்திற்கு கொண்டு போகவேண்டும். தலித் அல்லாதவர்களும் அவரை தலைவராக கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

அதன் ஒரு முயற்சியாக டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T-Shirt தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று முயற்சி எடுத்து அதை கொண்டுவந்தோம். அதன் வெளியீட்டு விழாவும் மும்பையில் ‘விழுத்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட T-Shirt கொண்டு வர நாங்கள் முயற்சித்போது எதிர்ப்புகளை, சதிகளை சகஜமாக சந்தித்தோம். சிலர் ‘இதை கொண்டு வர உங்களுக்கு என்ன யோக்கியதை? என்றும் கேட்டார்கள்.

இதை யாரும் கொண்டு வரவில்லை என்பதே எங்களுக்கான முழு யோக்கியதை. தந்தை பெரியாரின் பாணியில் சொல்வதானல், ஜாதி ஒழிப்புக்கு யாரும் முன்வராதபோது, ‘இதை செய்வதற்கு யாரும் முன்வரவில்லை என்பதினாலேயே நான் என்தோள் மேல்போட்டுக் கொண்டு செய்தேன்’ என்றாரே. அதுபோல்.

டாக்டர் அம்பேத்கர்,  பிற்படுத்தப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டு ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள்?’ என்ற நூலை எழுதினார். அதை எழுதியபோது இருதரப்பில் இருந்து அவருக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

பிற்படுத்தப்பட்டவர்களின் இழிநிலைக்கு, சூத்திரத் தன்மைக்கு பார்ப்பனியமும், இந்து மதமும்தான் காரணம் என்று ஆதாரத்தோடு நிரூபித்திருந்தார். அதனால் பார்ப்பனர்கள் டாக்டர் அம்பேத்கர் மீது கடும் வெறுப்பு கொண்டார்கள்.

‘பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு தாழ்த்தப்பட்டவரான இவருக்கு என்ன யோக்கியதை, தகுதி இருக்கிறது?’ என்று ஜாதிவெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு எத்தகைய தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே மிகச் சிறந்த சான்றாகும்.” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

பார்ப்பன அறிவாளிகளோ,  ‘தேவதைகள் போக அஞ்சுகிற, தயங்குகிற இடத்திற்கு, முட்டாள் துணிவோடு போவான்’ என்ற பழமொழியை எடுத்துக்காட்டாக கூறி அண்ணலின் அந்தப் புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தேவதைகள் என்று ‘உயர்’ ஜாதிக்காரர்களையும், ‘முட்டாள்’ என்று டாக்டர் அம்பேத்கரையும் குறிப்பிட்டார்கள், ஜாதி வெறியர்கள்.

உலகின் மாபெரும் மேதைகளுள் ஒருவரான அண்ணல் அம்பேத்கர் இப்படி பதில் அளித்தார், “தேவதை தூங்கச் சென்றுவிடும்போது அல்லது உண்மையைக் கூறுவதற்குத் தயாராக இல்லாதபோது ஒரு முட்டாளுக்குக்கூட அவன் செய்யவேண்டிய கடமை இருக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

அதுபோல் தேவதைகளான பல முற்போக்கு இயக்கங்களும், அறிவாளிகளும் டாக்டர் அம்பேத்கரை பொதுதளத்திற்கு கொண்டு வரமுயற்சிக்காததால், நாங்கள் இதை செய்தோம்.

டாக்டர் அம்பேத்கர் T-Shirt டை பொதுபுழக்கத்திற்கு கொண்டு சென்றபோது, நானும் தோழர்களும் சந்தித்த அனுபவங்கள் மிக மோசமானது. வருத்தத்திற்குரியது.

அதில் குறிப்பாக தோழர் லெமுரியனின் அனுபவத்தை சொல்லலாம்.  தோழர் லெமுரியன், அண்ணலின் T-Shirt டை தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறவர். அதன் பொருட்டு அவர் சந்தித்த அனுபவம் குறிப்பிடத்தக்க அளவில் மோசமானது.

அவர் வீட்டுற்கு கட்டிட வேலைக்கு வந்த கொளுத்துக்காரர், லெமுரியனின் அம்மாவிடம்,  ‘பயன்படுத்துவதற்கு பழைய துணி இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அதை கேட்ட லெமுரியன், பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து வைத்திருந்த புதிய டாக்டர் அம்பேத்கர் T-Shirt டை கொண்டு வந்து தந்திருக்கிறார். இலவசமாகத்தான்.

T-Shirt ல் அண்ணலின் படத்தைப் பார்த்த கொளுத்துக்காரர், ‘அய்யய்ய….இதெல்லாம் எனக்கு வேண்டாங்க…. பழைய துணியிருந்த கொடுங்க…” என்றிருக்கிறார்.

இந்த மோசமான உணர்வு, டாக்டர் அம்பேத்கரை பற்றியான இந்த மதிப்பீடு, ஏதோ அந்த கொளுத்துக்காரர் ஒருவருக்கு மட்டும் உரியதல்ல. பல முற்போக்காளர்களின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. (தோழர் வேந்தனின் அனுபவம் தனி கட்டுரையாக புத்தகத்தின் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது)

அம்பேத்கர் T-Shirt டை கொண்டு வந்தது கூட பிரச்சினை இல்லை. அதை அணியச் சொல்லி தலித் அல்லாதவர்களை குறிப்பாக முற்போக்காளர்களை கட்டாயப்படுத்துவதும், அணிய மறுத்தால் ஏன் என்று கேள்விக்குட்படுத்துவதும்தான் பிரச்சினைக்குரியதாக மாறுகிறது. ‘முடியாது’ என்பற்கான அரசியல் காரணங்களை தெளிவாக சொல்லமுடியாமல் ஏதோ வாயில் வருவதைச் சொல்லி, பரிதாபமாக நெளிவதும், இப்படி ஒரு நிர்பந்ததிற்கு அவர்களை தள்ளியதால், அவர்களின் இயலாமை எங்களுக்கு எதிரான கோபமாக மாறி. அந்தக் கோபம் எங்கள் மீதான அவதூறாக அவதாரம் எடுத்திருக்கிறது.

டாக்டர் அம்பேத்கரின் T-Shirt பலரின் ஜாதிய உணர்வை அம்பலப்படுத்தும் ஆயுதமாக இருக்கிறது. இந்த ஆயுதத்தைக் கொண்டு வந்ததை மிக முக்கியமான ஒரு செயலாக கருதுகிறோம். இதை எங்களின் மாபெரும் தகுதியாக எண்ணி மகிழ்கிறோம்.

இதை கொண்டு வந்த தோழர்களோடு இணைந்து பணியாற்றியதை நினைத்து பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

***

வெகுஜன பத்திரிகைகளில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். வேறு ஒரு நபருக்காக, நான் பரிந்துரை செய்தால், அதை உடனே செய்து கொடுக்கும் நண்பர்கள் அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் இருக்கிறார்கள். நான் பரிந்துரை செய்து அதன் மூலம் பிரபலமான எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், எனக்கு, என் எழுத்துக்களுக்கு குறிப்பாக என்னுடைய புத்தகங்களுக்கு அறிமுகம் என்பதாகக்கூட அது நடப்பதில்லை. அது நிர்வாகம் சார்ந்த முடிவாகிவிடுகிறது அல்லது பொறுப்பில் உள்ள பார்ப்பனர்களின் கோபத்திற்கும், பார்ப்பன மனோபாவம் கொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்பதாலும் அது ஆரம்பத்திலேயே தோழமை ஆனவர்களாலேயே நிராகரிக்கப்படுகிறது.

இதற்கு மிக முக்கியமாக இன்னும் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நான் எல்லா பத்திரிகைகளையும், பேர் சொல்லி கடுமையாக விமர்சித்திருப்பது. பத்திரிகை நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெற்ற மதன், ஞாநி, வாஸந்தி, மாலன், சுதாங்கன் போன்ற பிரபல பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்திருப்பது.

இன்னொன்று, பார்ப்பனத் தன்மை கொண்ட இலக்கியங்களை, பத்திரிகைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதுவது. முற்போக்கு பார்ப்பனியத்தின் முழு அடையாளமான இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் சுப்பிரமணிய பாரதியின் மார்புக்குள் ஹிருதயத்தோடு கண்ணுக்கு தெரியாமல் ஹிருதயம் எது? பூணூல் எது? என்று கண்டுபிடிக்க முடியாமல், ஒளிந்திருந்த பூணூலை, பெரியார் தொண்டனுக்கே உரிய துணிச்சலோடு அறுத்தது.

அதனால்தான், பாரதியைப் போலவே பலதரப்பட்ட மக்களின் ஆதரவுக்காக முற்போக்கான அவதாரங்கள் எடுக்கும், பார்ப்பன பத்திரிகையான ஆனந்த விகடனில், என் நூல் அறிமுகம் மட்டுமல்ல, என் இணையப் பக்க அறிமுகம் கூட இதுவரை நிகழ்ந்ததில்லை. ஒருவேளை பெரியாரை பற்றி அவதூறு எழுதியிருந்தால், சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்ட்டிருப்பேனோ, என்னவோ?

அதுமட்டுமல்லாமல், பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பை தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் இருந்து, பார்ப்பனியத்தை தலைமேல் வைத்து பாதுகாக்கும் இடைநிலை ஜாதிகளையும் பெயர் சொல்லி விமர்சிப்பதால், சுயஜாதி பாசம் கொண்ட பத்திரிகையாளர்களின் ‘கனி’வான கோபத்திற்கும் ஆளாகி இருப்பது, புறக்கணிப்பிற்கான இன்னொரு சிறப்புக் காரணம்.

பார்ப்பனியத்தை சமரசம் இல்லாமல், தொடர்ந்து அம்பலப்படுத்திய தமிழர்களின் மாபெரும் தலைவரான தந்தை பெரியாரையே இந்தப் பத்திரிகைகள் இப்படித்தான் புறக்கணித்திருக்கிறார்கள். இதில் என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு எம்மாத்திரம்?

காலங்கள் மாறினாலும் காட்சிகளை மாற்றாத பார்ப்பனியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கரை ஆழப் படிக்க வேண்டியது அவசியம். இதோ தான் புறக்கணிக்கப்பட்ட விதத்தை டாக்டர் அம்பேத்கர் தனக்கே உரிய மேதைமையோடு, துல்லியமாக வெளிபடுத்துகிறார்:

“பிராமணிய இலக்கியத்தை அம்பலப்படுத்தும் எந்த ஒரு முயற்சியின்பாலும் பிராமண அறிஞன் காட்டும் சகிப்புத் தன்மையற்ற போக்கு எவரையும் எரிச்சல் கொள்ளவே செய்யும். அவசியம் ஏற்படும்போதுகூட மூடநம்பிக்கைகளைச் சாடுபவனாக அவன் நடந்துகொள்ளமாட்டான்.

இத்தகைய திறன் படைத்த பிராமணரல்லாத எவனையும் இத்தகைய பணியைச் செய்வதற்கும் அனுமதிக்கமாட்டான். பிராமணரல்லாத எவனாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் பிராமண அறிஞர்கள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவார்கள்;  அவனுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்கள். ஏதேனும்  அற்பக் காரணங்களைக் கூறி அவனை அப்பட்டமாகக் கண்டிப்பார்கள் அல்லது அவனது படைப்பு பயனற்றது, சல்லிக்காசு பெறாதது என்று முத்திரை குத்துவார்கள்.

பிராமணிய இலக்கியத்தின் சொரூபத்தை வெளிப்படுத்திய எழுத்தாளன் என்ற முறையில் நானும் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இலக்கானவன்தான்.

பிராமண அறிவாளிகளின் போக்கு எத்தகையதாக இருப்பினும் நான் மேற்கொண்ட பணியைத் தொடர்வது எனது கடமை.”

அண்ணல் அம்பேத்கரின் இந்த உறுதியை நெஞ்சில் தாங்கி, அவர் வழியில் பார்ப்பனியத்தை, அது பார்ப்பனரல்லாதவரின் சுயஜாதி ரூபத்தில் வந்தாலும் தொடர்ந்து துணிச்சலோடு அம்பலப்படுத்துவோம்.

***

இந்தப் புத்திகத்திற்கு சிறப்பான அறிமுகத்தை ஆய்வு கண்ணோட்டத்தில் எழுதியிருந்தார் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வே. நெடுஞ்செழியன். தமிழ் ஓசை நாளிதழில் எழுதினார். தமிழ் ஓசையில் சிறப்பாக பிரசுரிதித்த அதன் ஆசிரியருக்கும், அவரை எழுத வைத்து, இந்த நூலுக்கான முதல் அறிமுகத்தை செய்த உதவிஆசிரியர் சிவகுமாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் என் புத்தகத்திற்கு சிறப்பான அறிமுகத்தை செய்கிற என் நண்பர், தீவிர பெரியார் பற்றாளர் தோழர் அரசெழிலன், தனது ‘நாளை விடியும்’ இதழில் இந்த புத்தகத்திற்கும் சிறப்பான அறிமுகத்தை செய்திருந்தார். அந்த அறிமுக உரையை ஆய்வுரையாக எழுதிய முனைவர் க.பூ. மணிமாறனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன் இதழின் தலைமைத் துணை ஆசிரியர் தோழர் லெனின். அரசியல் விமர்சகராக பல சிற்றிதழ்களிலும் முக்கியமான கட்டுரைகள் எழுதி வருகிறார். அந்த சிற்றிதழ்களில் ஒரு நூலைப் பற்றி அறிமுக அல்லது விமர்சன கட்டுரை எழுதவேண்டும் என்றால், அவர் என் நூலைதான் தேர்தெடுத்து இருக்கிறார். ‘வே. மதிமாறன் பதில்கள்’ என்ற என்னுடைய நூலுக்கும் சிறப்பான விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அதுபோல், இந்த நூலுக்கும் மிக சிறப்பான ஆய்வு கட்டுரையை எழுதியிருந்தார். நண்பர் லெனினுக்கும், அதை வெளியிட்ட ‘யாதுமாகி’ இதழுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகங்கள் கொண்டு வருவதை வியாபாரமாக செய்யாமல், கொள்கை பிரச்சாரமாக செய்யும்,  இனிய தோழர், அங்குசம் ஞா. டார்வின் தாசன், இரண்டாம் பதிப்பையும் விரைவாக சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

வே. மதிமாறன்.

29.12.2009

இரண்டாம் பதிப்பு 32 பக்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு வந்துள்ளது. விலை ரூ. 60

சென்னை புத்தகக் காட்சியில் கடை எண் 64–65 கீழைக்காற்று, கடை எண் 221 புதுப்புனல், கடை எண்  240 – 41 விழிகள், கடை எண் 271 கருப்பு பிரதிகள், கடை எண் 460 அலைகள் கடைகளில் கிடைக்கும்.

தொடர்புக்கு;

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384