மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

mrs doubtfire படத்தில் பெண் வேடத்தில் ராபின் வில்லியம்ஸ். அவ்வை சண்முகியின் அசல்.

திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருட்டு வி.சி.டிக்கு தருகிற பணம் மக்கள் அவர்கள் தலையில் அவர்களே போட்டுக் கொள்கிற குண்டு.” என்று சகலகலா வல்லவன் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘உலகநாயகனுக்கு மக்கள் மீது அப்படி என்ன அன்பு?’ என்று கேட்பதைவிடவும், ‘முஸ்லிம்கள் மீது அப்படி என்ன வெறுப்பு?’ என்று கேட்பது சரியாக இருக்கும்.

ஜக்குபாய் வி.சி.டி. விவகாரத்தில் கைதானவர்களில் ஒருவர் இஸ்லாமியர் என்பதால், இப்படி ஒரு கைகுண்டை வீச முயற்சி்த்திருக்கிறார், குமுதம் ஞாநியின் மனம் கவர்ந்த காதல் மன்னன். இதற்கு முன் இவரின் சொந்த தயாரிப்பான ‘ஹேராம்’ பட வி.சி.டி. விவகாரத்தின் போதுகூட இஸ்லாமிய பெயர் கொண்ட ஒருவரோடு பர்மா பஜார் ரோட்டில் இறங்கி டூப்போடாமல் சண்டைபோட்டார், ஹாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடும் ‘நம்’ நடிகர்.

ஜக்குபாய் வி.சி.டி. விவகாரத்தின் போதும் அந்த இஸ்லாமிய பெயர் கொண்டவர் ஞாபகம் வந்ததோ என்னவோ, இந்தக் கைகுண்டை வாயில் கடித்து துப்பி, வீச முயற்சித்திருக்கிறார். ஆனால், கடிக்கும்போதே அவர் வாயிலேயே வெடித்திருக்கிறது அந்த வாய்குண்டு.

உண்மையில் புதுப்பட வி.சி.டி என்பது கமல்ஹாசன் தலையில் விழுகிற குண்டு. அதை அப்படி நேரடியாக சொன்னால் எடுப்பாக இருக்காது என்பதால், இப்படி ‘உன்னைப்போல் ஒருவன்’ பாணியில் இஸ்லாமியர்களிடம் இருந்து இந்துக்களை பாதுகாக்கும் அக்கறையில் ஏற்றி சொல்லியிருக்கிறார், இந்தியன் தாத்தா கமல்ஹாசன்.

இந்திய நாட்டை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், இந்திய ராணுவ வீரர்கள், எல்லையை பாதுகாப்பதைவிட்டு இந்த வில்லையை (வி.சி.டி) தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைப்பார் போலும் இன்டலக்சுவல் நடிகர். அப்படி வைத்தால் அதையும் நிறைவேற்றி வைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார் தமிழக முதல்வர். காரணம், கமல்ஹாசன் மற்றும் தமிழ் சினிமா மீது உள்ள அக்கறையினால் அல்ல. கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்ற தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் தாத்தா என்கிற முறையில்.

(ஒக்கேனேக்கல் பிரச்சினையின்போது நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்த மேடையில் வட்டாள் நாகராஜ் போன்றவர்களை, சத்தியராஜ் மிக கடுமையான வார்த்தைகளால் பேசியபோது ‘நாம் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது. அடிதடி வன்முறை தீர்வல்ல’ என்று விளக்கிய, கண்டித்த இந்த அகிம்சாமூர்த்தி சாகேத்ராமன், அதற்கு முன் ஹேராம்  வி.சி.டி.க்காக தெருவில் இறங்கி நாகரீகமாக சண்டைபோட்டார்.

‘பொது பிரச்சினை என்றால், காந்தி மாதிரி அகிம்சையா நடந்துக்கனும். சொந்த பிரச்சினை என்றால், கோட்சே மாதிரி கொலைகாரனா கூட மாறலாம்’ என்கிற பார்ப்பனிய தத்துவத்தோடு இதை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம்)

‘இந்த திருட்டு வி.சி.டி.யால் லைட்மேன் போன்ற பல தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.’ என்று கவலைகொள்கின்றனர் இன்னும் சில நடிகர்கள். பக்கத்து இலைக்கு பாயாசம் என்கிற பாணியிலான அக்கறையில், எப்போதுமே சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அதிகம் லாபம் அடைகிற அல்லது பாதிக்கப்படுகிற வசதியானவர்களால்தான் இந்த வசனம் வாசிக்கப்படுகிறது.

நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக பெரிய அளவில் சீரழித்த, லாட்டரி சீட்டை தடை செய்தபோது, அதன் மூலமாக கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள்கூட இப்படி ஆஸ்கர் நாயகன் கமல்ஹாசன் அண்டு கம்பெனி பாணியில்தான்  வசனம் பேசினார்கள்.

‘இந்த லாட்டரி சீட்டை தடை செஞ்சா அதன் மூலமாக பாதிக்கப்படப்போறது, ஊனமுற்றவர்களும், பார்வையற்றவர்களும்தான். அவர்கள்தான் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு அதன் மூலமான வருமானத்தில் வாழ்கிறார்கள்’ என்று ஊனமுற்றவர்களை முன்நிறுத்தி, போராடினார்கள் லாட்டரி சீட்டின் மூலமாக பெரும் கொள்ளை அடித்த அதிபர்கள்.

புதுப்பட வி.சி.டி.யினால், சினிமா எடுக்கறதே நின்னுபோயிடுமாம். நின்னுபோன நிக்கட்டுமே அதனால் என்ன இப்போ?

உழைப்பை மூலதனமாக வைத்து பிழைக்கிற சினிமாவில் இருக்கிற கூலி தொழிலாளர்கள், அந்த உழைப்பை எங்கே போய் செய்தாலும் பிழைத்துக் கொள்வார்கள். (என்ன பொல்லாத சம்பளம் கொடுக்குறாங்க?)

ஆனால், ஊதாரி வாழ்க்கையில் ஊறிப்போன, கொள்ளை அடிக்கிற இந்தக் கும்பல் இதுபோன்ற ஒரு சொகுசான ‘தொழிலை’ திரும்ப உருவாக்கிக்கொள்வது கடினம். இந்த உல்லாசத்துக்கு ஆபத்து வந்துடுமோன்னுதான், ‘ஆடு நனையுதேன்னு அழுகிறது இந்த ஓநாய்கள்.’

இந்த தேசபக்தி கமல்ஹாசன், இவ்வளவு அக்கறையா, நேர்மையா, கோபமா வி.சி.டி பத்தி பேசுறாரே,  இவருடைய உன்னைப் போல் ஒருவன் படத்தை, நான் சென்னை அம்பத்தூர் தியேட்டர் ஒன்னுல 80 ரூபா கொடுத்து பார்த்தேன். தியேட்டர்காரன் கொடுத்த டிக்கெட்டுல 10 பைசான்னு கூட பிரிண்ட் பண்ணல. வெறும் வெள்ளை பேப்பர்ல ஏதோ எழுதி கொடுத்தான். இந்த இந்தியன் தாத்தாக்களுக்கு இத எதிர்த்து கோபம் வருமா? ஹேராம் வி.சி.டி.க்கு ரோட்டுல இறங்கி சண்டைபோட்டவர், இதற்கு எதிராக போடுவாரா?

இது சட்டவிரோதம் இல்லியா? இப்படி சட்டவிரோதமாக சம்பாதிக்கிற பணம்தான் மாலேகான் குண்டு வெடிப்புக்கு பயன்படுதுன்னு சொன்னா ஒத்துப்பாரா மாலனின் மனம் கவர்ந்த மகாநடிகன்.

இந்த சட்டவிரோத விற்பனையை மையமாக வைத்துதானே கோடிக்கணக்குல கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. இந்த மோசடி டிக்கெட் விற்பனையை மூலதனமாக வைத்துதானே பிரம்மாண்டமான தயாரிப்பில் படம் எடுக்கலாம்ன்னு முடிவாகுது.

எது மக்கள் தலையில் போடுகிற குண்டு? இதுவா? புதுப்பட வி.சி.டியா?

உண்மையில் தீவிரமாக சினிமா பார்ப்பவர்களுக்கு புதுப்பட வி.சி.டி ஒரு புதையல். இன்றைய அத்தியாவாசிய பொருட்களின் விலையேற்ற சூழலில், ஒரு நபருக்கு 80 ரூபா கொடுத்து பார்ப்பதைவிட, ஒரு குடும்பத்திற்கு 40 ரூபா கொடுத்து பார்ப்பது சிக்கனம் மட்டுமல்ல, அதுதான் அவர்களுக்கு சாத்தியம்.

தன்னோட படத்தை ஒருவர் பிரதி எடுத்து வி.சி.டியா விற்கிறார் என்று தெரிந்தஉடன் அவருடன் ரோட்டில் இறங்கி சண்டைபோடுகிறாரே நாயகன். இத்தனைக்கும் அது பணம் பிரச்சினை மட்டும்தான். அந்த வி.சி.டி.யில் தயாரிப்பு அல்லது கதை என்று தன்  பெயரை போட்டுக்கொள்வதில்லை வி.சி.டி.காரர்கள்.

ஆனால், அடுத்தவன் படைப்பை அவன் அனுமதியில்லாமல், ஒருவன் அவன் பெயரில் எடுத்து அதன் மூலமாக கோடிகோடியாக சம்பாதித்து, பேரும், புகழும் வாங்குகிறார்களே அவர்களோடு சண்டையி்ட்டு கட்டி புரளவேண்டும் என்றால், ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிற நமது இயக்குநர்களோடும், நடிகர்களோடும் கோடம்பாக்கத்து தெருக்களில் காலம் முழுவதும் ஹாலிவுட் மற்றும் வெளிநாட்டுக்காரர்கள் கட்டி உருண்டுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

ராபின் வில்லியம்ஸ் நடித்த, உலகப் புகழ்பெற்ற திரைப்படமான ‘mrs doubtfire’ என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்து பச்சையாக ‘அவ்வை சண்முகி’ என்று எடுத்த கமல்ஹாசனோடு, ராபின் வில்லியமஸ் ஆழ்வார்பேட்டை தெருவில் சண்டை செய்து கட்டி உருண்டு இருக்கவேண்டும். யார் போய் சொல்றது ராபின் வில்லியம்ஸ்கிட்ட.

உலக சினமாவை டப்பாவில் போட்டு குலுக்கி எடுக்குற மதன் போய் வில்லியம்ஸ்கிட்ட சொல்லுவாரா? அவர் கமல்ஹாசனிடம்தான் சொல்லுவார்:

“ராபின் வில்லியம்ஸ் நடிச்ச புதுப்பட சி.டி ஒன்னு இருக்கு பாக்குறீங்களா?”ன்னு.

‘‘எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சம்பளம் தரலாம்’’என்று உலகத் தமிழர்களின் ஓரே துயரம் திருட்டு வி.சி.டிதான் என்பதுபோல், மிகத் தீவிரமாக கொதித்திருக்கிறார் சேரன்.

சேரன் சொன்னதையே கொஞ்சம் திருப்பிப்போட்டு பார்ப்போம்.  இதே யோசனையை, வெளிநாட்டு சினிமாக்காரர்கள் சொன்னால், எப்படி சொல்லியிருப்பார்கள்:

இந்தியாவில எங்காவது திருட்டுத்தனமாக நம்ம படத்தை காப்பியடிச்சு தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த திரையுலகம் சார்பாக மாநிலத்திற்கு 100 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்து லட்சம் வரைக்கும் சம்பளம் தரலாம்

இது உண்மையில் நடைமுறைக்கு வந்தா, எவ்வளவு பெரிய மனுசங்க எல்லாம் அடிவாங்குவாங்க…அதுவும் கடுமையா அடிபடற பெரிய மனுசங்க எல்லாம் இருக்காங்க…. நினைச்சாலே நமக்கு பயமா இருக்கு.

‘ஒரு சினிமாவை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்? கடன வாங்கி, ராத்திரி பகலா, கண்முழுச்சி பாடுபட்டு, சிரமப்பட்டு எடுக்குறோம். அதபோய் திருட்டு வி.சி.டி. போடுறானுங்களே?’ என்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட துயரத்தை விடவும், இதுபெரிய துயரம் என்பதுபோல் மிகவும் மனம் ஒடிந்துபோகிறார்கள் சினிமாக்காரர்கள்.

கஷ்டப்படுறதுனாலேயே ஒரு விசயம் நியாயம் ஆகிவிடுமா?

அப்படி பார்த்தால், பெரும் பணக்காரர்கள்தான் சினிமா எடுக்க வருகிறார்கள். பெரும்பான்மையான சினிமாக்கள், கருப்பு பணத்துலதான் தயாராகிறது. நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் கொடுக்கப்படுகிற சம்பளம் வெளிப்படையாக இல்லைங்கறதே அதற்கு சாட்சி.

ஆனால், புதுப்படத்தை வி.சி.டி.யில் கொண்டுவருகிறவர்கள், தன் பொண்டாட்டி தாலிய அடகு வைச்சோ இல்ல 10 வட்டிக்கு பணம் வாங்கியோ கொண்டுவருகிறவர்கள்போல்தான் தெரிகிறார்கள். போலிசுக்கு பயந்து, மாட்டுனா குண்டர் சட்டத்துல் கைதாகி… பல வருடங்கள் உள்ள இருக்க வேண்டிய சூழல் வேற…

ஒப்பிட்டளவில் பாத்தா, சினிமாக்காரர்களைவிடவும், புதுப்பட வி.சி.டிபோடுகிறவர்கள்தான் அதிக பிரச்சினைகளை, சிரமங்களை சந்திக்கிறதா தெரியுது. சிரமம் மட்டும்தான் ஒரு விசயத்திற்கான உரிமைய தீர்மானிக்கிறது என்றால், அப்போ புதுப்பட வி.சி.டி.காரங்க சிரமத்தை ஒத்துக்கிட்டு அமைதியாக இருக்கவேண்டியதுதானே? எதுககு ஒப்பாரி.

சரி, அதெல்லாம் இருக்கட்டும்.

இந்த மாமேதைகள் எடுக்கிற படங்கள், பல நேரங்களில், திருட்டு வி.சி.டிகளில் கூட சரியா ஓட மாட்டேங்குது. அந்தப் படத்தோட தயாரிப்பாளர் மட்டுமல்ல. அதை திருட்டு வி.சி.டி போட்டவர்கள்கூட நஷ்டம் தாங்காம நடுத்தெருவுக்கு வந்துடுறதா சொல்றாங்க.

இதுயார் தப்பு? இதுக்கு யார் பொறுப்பு?

*
ஜனவரி19, 2010 அன்று எழுதியது.