போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை

மனிதர்களை தின்னும் மருந்து கம்பெனிகள்

போலி மருந்துகளைவிற்று கோடிகோடியாக பணம் சம்பாதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அரசின் இந்த அசுர வேகம் வியப்பளிக்கிறதே?

சதிஸ்

இந்த நடிவடிக்கை மக்கள் மீது உள்ள அக்கறையினால் அல்ல. அப்படியானால் உணவுப் பொருட்களில் விஷத்தன்மையுள்ள பொருட்களை  கலப்படம் செய்கிறவன், உணவின்றி மக்கள் பட்டினியால் சாகும்போதும், உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கிறவன் இவர்கள் மீதும் இதே வேகத்தை காட்டியிருக்கவேண்டும்.

போலி மருந்துகளினால், வர்த்தக ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியப் பெரு முதலாளிகளும்தான்.

மிகப் பெரும்பான்மையான மருந்துகளில் ஒரு மாத்திரையின் தயாரிப்பு செலவு, சில பைசாக்களிலேயே முடிந்துவிடுகிறது. ஆனால், மக்களிடம்  நூறு மடங்கு லாபம் வைத்துதான் விற்கப்படுகிறது. இதில் மிகப் பெரிய கொள்ளை அடிப்பவர்கள், பன்னாட்டு கம்பெனிகளும், உலகப் பெரும் பணக்காரர்களான இடைத்தரகர்களும்தான். போலி மருந்துகளினால், பன்னாட்டு கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு பிரச்சினை என்பதால்தான் இந்த வேகம்.

குறிப்பிட்ட மருந்துகளை சாப்பிட்டால் அது தற்காலிகமாக நிவாரணம் தரலாம். ஆனால், மிக கடுமையான  உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்கா, அய்ரோப்பா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட ஏராளமான மருந்துகள், மிக தாராளமாக இந்திய அரசு அனுமதியோடு கொள்ளை லாபம் வைத்து இந்திய நோயாளிகளின் வயிற்றில் புதைக்கப்படுகிறது.

அரசு அனுமதியோடு முறையாக மருந்துக்கடைகளில் விற்கப்படுகிற பல மருந்துகளே போலி மருந்துகள் தான் என்பதை தெரிந்துகொண்ட சமூகவிரோதிகளான சில மருந்து வியாபாரிகள், காலவதியான மருந்துகளை குப்பைகளில் இருந்து பொறுக்கி  விற்று இருக்கிறார்கள்.

போலி மருந்துகளைத் தேடி எல்லா இடங்களிலும் சோதனை போடுகிறார்கள் அதிகாரிகளும், காவல் துறையினரும். அரசு மருத்துவமனைகளில் போய் சோதனைப் போடடுப் பார்க்கட்டும். அங்கே தேவையான அளவிற்கு உயிர் காக்கும் அத்தியாவசியமான மருந்துகள் இல்லை. காலவதியான போலி மருந்துகள் கூட இல்லை.

அரசு மருத்துவமனைகளில், அவசர அறுவை சிகிச்சைக்கு அனுமதியாகிற நோயாளிகள் உரிய கருவிகள், மருந்துகள் இல்லாததால் பல மாதங்கள் மருந்துவமனையிலேயே சும்மா படுத்துக்கிடக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நோய் முற்றி மேலும் தொந்தரவு. ஏற்கனவே வறுமையின் துயரத்தில் இருக்கிற அவர்களுக்கு பல மாதங்களாக வேலைக்கும் போக முடியாமல் இருப்பதால், குடும்பமே ஒரு வேளை உணவிற்கு அவதி.

இப்படி பலரின் வாழ்க்கையை சீரழிக்கிற இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண, அதிக விலை வைத்து மருந்து கம்பெனிகள் அடிக்கிற கொள்ளையை தடுத்து, மருந்துகளை குறைந்த விலைக்கு விற்க மருந்து கம்பெனிகளுக்கு அரசு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும்.

நடுத்தர மக்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கிற ஆஸ்மா, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இருதய நோய் போன்றவற்றிற்கான விலை அதிகம் உள்ள மிக முக்கியமான மருந்துகளை அரசே தயாரித்து மானியத்தின் மூலம் பாதிவிலைக்கு தர வேண்டும்.

அரசு மருந்துவமனைகளில் சிகிச்சை பெரும் எளிய மக்களுக்கு, எல்லா மருந்துகளும் இலவசமாக, உடனடியாக கிடைக்கச்  செய்யவேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள்தான் போலி மருந்துகளை ஒழிக்குமே தவிர, அதற்கு மாறாக வேறு எந்த நடவடிக்கையும் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அந்த நடவடிக்கைகள் பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை கொண்டு வந்து குடி வைச்சக் கதையாகத்தான் ஆகும்.

முதலாளிகளும், தனியார் மருத்துவமனைகளும், தனிநபர்களும் கொள்ளையடிப்பதற்குத்தான் பயன்படும்.

இப்போ போலி மருந்து விக்கிற இந்த திருட்டுக் கும்பல புடுச்சி சிறையில் தள்ளுனா, இன்னொரு திருட்டுக் கும்பல் உருவாகமலா இருக்கும்? போலி மருந்து கும்பல கடுமையாக தண்டிக்கிறது எவ்வளவு சரியோ, அதைவிட மருந்து கம்பெனிகள் மருந்துகளின் விலையை குறைக்க அரசு கடுமையான நடிவடிக்கைகளை எடுப்பது ரொம்ப ரொம்ப சரி.

குப்பையில் இருந்து மருந்த பொறுக்குனா, கொஞ்நஞ்ச பணமா? கோடிக்கணக்கல இல்ல கிடைக்குது… இந்த மோசடியை செய்வதற்கு அடிப்படைக் காரணம், அந்த மருந்தோட உண்மையான ஒரிஜனல் அநியாய விலைதான்.

கடுமையான தண்டனைன்னு தெரிஞ்சும், சாரயத்திற்கே கள்ளச் சாரயம் போடுறான். மருந்துக்கு போலி மருந்து போடமா இருப்பானா? இது அதவிட லாபம். அதவிட ‘கவுரவமான’ வேலை.

இனி பணத்துக்காக எதையும் செய்ய துணிஞ்ச எவனும் இந்த மோசடியை செய்வான்.

தாய்மை விற்பனைக்கு

கையில் கத்தியுடன் வருவது வழிப்பறிக்காறர்கள் மட்டுமல்ல; டாக்டர்களும்கூடத்தான்

12 thoughts on “போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை”

 1. தோழர் எதை எடுத்தாலும் பன்னாட்டு கம்பெனிகள்தான் நம் கண்ணுக்கு தெரிகின்றன, இந்தியாவில் சுமார் 45 ஆயிரம் வகை மறுந்துகள் விற்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன, 99 சதவிகித மாத்திரைகள் உள்நாட்டிலேயே இந்திய முதலாலிகளால் தான் தாயர்செய்யப்படுகின்றன, அதுமட்டுமல்லாமல் பெரும்பாமையான‌ கெமிக்கல் கம்பெனிகள் மருந்து தாயாரிப்பதற்க்கான கலவையை இந்தியாவில் (கடலூர் போன்ற இடங்களில்) தயார் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி நல்ல டாலர் பார்கிறார்கள், இதுபோன்ற கம்பெனிகள் ஆண்டிற்க்கு ஆறு மாதம் கூட இயங்கினால் போதும், அடுதத் ஐந்தான்டிற்க்கு தொழிற்சாலையை நடத்தலாம். ஆனால் வழக்கமாக இதற்க்கும் நம்முடைய அரசியல்வாதிகள்தான் காவல் நிற்கிறார்கள்.

  தமிழகத்தில் போலி மருந்துமட்டுல்ல, போலி டாக்டர், போலி போலிஸ் என போலிகள் எல்லா இடங்களிலும் நிறம்யிருக்கிறார்கள் காற்றைப்போல!

  தோழமையுடன்

  அப்ரகாம் லிங்கன்..

 2. //இப்படி பலரின் வாழ்க்கையை சீரழிக்கிற இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண, அதிக விலை வைத்து மருந்து கம்பெனிகள் அடிக்கிற கொள்ளையை தடுத்து, மருந்துகளை குறைந்த விலைக்கு விற்க மருந்து கம்பெனிகளுக்கு அரசு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும்.//

  THANK YOU BROTHER VE. MATHIMARAN. ALL THE PEOPLE IN INDIA WILL BE THANKFUL TO YOU for your this article.

  “Deivobet “- 0intment – 15 grams- Price is Rs 800.

  Vaazavathaa? saavathaa?

 3. ஹய்யோ … 20 வருஷமா நடக்குதாம் இந்த பிஸினஸ். அது மட்டுமா?

  சாப்பட்டுல உரம், மருந்து போலி, நாட்டுல தீவிரவாதம், சாமியார் செக்ஸ், கோவிலில் “பள்ளி”யறை, வெளிநாட்டு கழிவு கப்பலில் வருது …

  அட போங்கடா நீங்களும் உங்க அரசியலும், நாடும், மக்களும் … வும் வும் வும் ….

 4. பெரும்பாலும் மக்களிடம் சுய நலம் பெருகி விட்டது. அதனால் யார் எந்த தவறு செய்தாலும் கவலை இல்லை. நம்ம வாழ்க்க நல்லா ஓடுதா எவன் எக்கேடு கேட்ட எனக்கு என்ன என்கிற மனோபாவம் மாற வேண்டும். போலி மருந்து மட்டுமல்ல , அரசியல் ஊழல்கள், சுகாதார கேடுகள் , தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்கள், ஈழ படுகொலைகள் , எல்லாவற்றிலும் பாராமுகமே மக்களிடம். போராட முன்வந்தாலே இதற்கெல்லாம் தீர்வு. தொலைக்காட்சி பெட்டிகேல்லாம் ஒட்டு போடும் குணம் மாற வேண்டும். போலி கம்யுனிஸ்டுகளை ஒழித்துக்கட்டி உண்மையான மார்க்சியத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுது தான் போராடும் குணம் வளரும்.

 5. மருந்துகளால் நோயே ஒழிவதில்லையா என்ன? போலி மருந்துகளால்தான் பிரச்சினை. ஒட்டுமொத்தமாக மருந்துகளையே குறை சொல்லவேண்டாம்.

 6. உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை..

  இந்த மருந்தாயுத யுத்தம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.. வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகளில் தங்கள் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்திவருகிறது, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் (வளர்ந்த நாடுகள்)..

  இதை பற்றிய பிரச்சாரம் கிராமங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.. இந்த படித்த திருட்டுக்கூட்டம் புதுப்புது நோய்களை உருவாக்கி கொண்டுவருகிறது.. மேலும் தற்போது இந்த மாத்திரைகள் இதயத்தைத்தான் அதிகமாக பாதிக்கிறது..

  // இனி பணத்துக்காக எதையும் செய்ய துணிஞ்ச எவனும் இந்த மோசடியை செய்வான்.//

  உண்மைதாங்க..

 7. உள்ளம் பொங்கி எழுந்த பதிவு.

  இது போன்றவற்றில் அரசியல் வாதிகளை விட, அதிகாரிகளே காரணமாவர். எந்த அதிகாரி தணிக்கை செய்ய வேண்டுமோ, அவர் மாதம் ஒரு முறை போய், மாமூல் மட்டும் வாங்கிக்கொண்டு இருந்தால் இது போன்ற வியாபாரிகள் எவ்வாறு அஞ்சுவர்? இந்தியாவின் இந்த கேடு கேட்ட நிலைக்கு, எனக்கென்னமோ அரசியல் வாதிகளை விட அதிகாரிகளே கண்டிக்கப் படவேண்டியவர் எனத் தோன்றுகிறது.
  இன்னொரு சின்ன சமர்ப்பணம்: நீண்ட நாட்களுக்கு பிறகு, பார்ப்பனீயம் என்ற சொல்லாடலை ஏந்தாத பதிவு. நன்றி.

 8. இந்த நாடுதான் உண்மையான ஜனநாயக நாடு…..!? விழிப்பா இருக்கறவங்க மட்டும்தான் இங்க பிழைக்க முடியும். மத்தவங்க எல்லாம் சாகலாம்…

Leave a Reply