‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆயுதம்….

‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ புத்தகத்தின் இரண்டாம்  பதிப்புக்கான முன்னுரை:

மூன்று சிற்றிதழ்களைத் தவிர, எந்த வெகுஜன பத்திரிகைகளிலும் நூல் அறிமுக பகுதிகளில்கூட வெளியாகாமல், அனேகமாக முதல் பதிப்பு 7 மாதங்களுக்குள் தீர்ந்துவிட்டது. தீரும் தருவாயில்தான் இதற்கான வெளியீட்டு விழா மும்பையில் ‘விழுத்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது. புத்தகத்தைப் படித்த தோழர்களின் பரிந்துரைகளினாலேயே இந்த வேக விற்பனை சாத்தியமாயிற்று.

இந்த புத்தகத்தை எழுதியதற்கான நோக்கம் டாக்டர் அம்பேத்கரை, பொதுதளத்திற்கு கொண்டு போகவேண்டும். தலித் அல்லாதவர்களும் அவரை தலைவராக கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

அதன் ஒரு முயற்சியாக டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T-Shirt தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று முயற்சி எடுத்து அதை கொண்டுவந்தோம். அதன் வெளியீட்டு விழாவும் மும்பையில் ‘விழுத்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட T-Shirt கொண்டு வர நாங்கள் முயற்சித்போது எதிர்ப்புகளை, சதிகளை சகஜமாக சந்தித்தோம். சிலர் ‘இதை கொண்டு வர உங்களுக்கு என்ன யோக்கியதை? என்றும் கேட்டார்கள்.

இதை யாரும் கொண்டு வரவில்லை என்பதே எங்களுக்கான முழு யோக்கியதை. தந்தை பெரியாரின் பாணியில் சொல்வதானல், ஜாதி ஒழிப்புக்கு யாரும் முன்வராதபோது, ‘இதை செய்வதற்கு யாரும் முன்வரவில்லை என்பதினாலேயே நான் என்தோள் மேல்போட்டுக் கொண்டு செய்தேன்’ என்றாரே. அதுபோல்.

டாக்டர் அம்பேத்கர்,  பிற்படுத்தப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டு ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள்?’ என்ற நூலை எழுதினார். அதை எழுதியபோது இருதரப்பில் இருந்து அவருக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

பிற்படுத்தப்பட்டவர்களின் இழிநிலைக்கு, சூத்திரத் தன்மைக்கு பார்ப்பனியமும், இந்து மதமும்தான் காரணம் என்று ஆதாரத்தோடு நிரூபித்திருந்தார். அதனால் பார்ப்பனர்கள் டாக்டர் அம்பேத்கர் மீது கடும் வெறுப்பு கொண்டார்கள்.

‘பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றி எழுதுவதற்கு தாழ்த்தப்பட்டவரான இவருக்கு என்ன யோக்கியதை, தகுதி இருக்கிறது?’ என்று ஜாதிவெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு எத்தகைய தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே மிகச் சிறந்த சான்றாகும்.” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

பார்ப்பன அறிவாளிகளோ,  ‘தேவதைகள் போக அஞ்சுகிற, தயங்குகிற இடத்திற்கு, முட்டாள் துணிவோடு போவான்’ என்ற பழமொழியை எடுத்துக்காட்டாக கூறி அண்ணலின் அந்தப் புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தேவதைகள் என்று ‘உயர்’ ஜாதிக்காரர்களையும், ‘முட்டாள்’ என்று டாக்டர் அம்பேத்கரையும் குறிப்பிட்டார்கள், ஜாதி வெறியர்கள்.

உலகின் மாபெரும் மேதைகளுள் ஒருவரான அண்ணல் அம்பேத்கர் இப்படி பதில் அளித்தார், “தேவதை தூங்கச் சென்றுவிடும்போது அல்லது உண்மையைக் கூறுவதற்குத் தயாராக இல்லாதபோது ஒரு முட்டாளுக்குக்கூட அவன் செய்யவேண்டிய கடமை இருக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

அதுபோல் தேவதைகளான பல முற்போக்கு இயக்கங்களும், அறிவாளிகளும் டாக்டர் அம்பேத்கரை பொதுதளத்திற்கு கொண்டு வரமுயற்சிக்காததால், நாங்கள் இதை செய்தோம்.

டாக்டர் அம்பேத்கர் T-Shirt டை பொதுபுழக்கத்திற்கு கொண்டு சென்றபோது, நானும் தோழர்களும் சந்தித்த அனுபவங்கள் மிக மோசமானது. வருத்தத்திற்குரியது.

அதில் குறிப்பாக தோழர் லெமுரியனின் அனுபவத்தை சொல்லலாம்.  தோழர் லெமுரியன், அண்ணலின் T-Shirt டை தலித் அல்லாதவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறவர். அதன் பொருட்டு அவர் சந்தித்த அனுபவம் குறிப்பிடத்தக்க அளவில் மோசமானது.

அவர் வீட்டுற்கு கட்டிட வேலைக்கு வந்த கொளுத்துக்காரர், லெமுரியனின் அம்மாவிடம்,  ‘பயன்படுத்துவதற்கு பழைய துணி இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அதை கேட்ட லெமுரியன், பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து வைத்திருந்த புதிய டாக்டர் அம்பேத்கர் T-Shirt டை கொண்டு வந்து தந்திருக்கிறார். இலவசமாகத்தான்.

T-Shirt ல் அண்ணலின் படத்தைப் பார்த்த கொளுத்துக்காரர், ‘அய்யய்ய….இதெல்லாம் எனக்கு வேண்டாங்க…. பழைய துணியிருந்த கொடுங்க…” என்றிருக்கிறார்.

இந்த மோசமான உணர்வு, டாக்டர் அம்பேத்கரை பற்றியான இந்த மதிப்பீடு, ஏதோ அந்த கொளுத்துக்காரர் ஒருவருக்கு மட்டும் உரியதல்ல. பல முற்போக்காளர்களின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. (தோழர் வேந்தனின் அனுபவம் தனி கட்டுரையாக புத்தகத்தின் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது)

அம்பேத்கர் T-Shirt டை கொண்டு வந்தது கூட பிரச்சினை இல்லை. அதை அணியச் சொல்லி தலித் அல்லாதவர்களை குறிப்பாக முற்போக்காளர்களை கட்டாயப்படுத்துவதும், அணிய மறுத்தால் ஏன் என்று கேள்விக்குட்படுத்துவதும்தான் பிரச்சினைக்குரியதாக மாறுகிறது. ‘முடியாது’ என்பற்கான அரசியல் காரணங்களை தெளிவாக சொல்லமுடியாமல் ஏதோ வாயில் வருவதைச் சொல்லி, பரிதாபமாக நெளிவதும், இப்படி ஒரு நிர்பந்ததிற்கு அவர்களை தள்ளியதால், அவர்களின் இயலாமை எங்களுக்கு எதிரான கோபமாக மாறி. அந்தக் கோபம் எங்கள் மீதான அவதூறாக அவதாரம் எடுத்திருக்கிறது.

டாக்டர் அம்பேத்கரின் T-Shirt பலரின் ஜாதிய உணர்வை அம்பலப்படுத்தும் ஆயுதமாக இருக்கிறது. இந்த ஆயுதத்தைக் கொண்டு வந்ததை மிக முக்கியமான ஒரு செயலாக கருதுகிறோம். இதை எங்களின் மாபெரும் தகுதியாக எண்ணி மகிழ்கிறோம்.

இதை கொண்டு வந்த தோழர்களோடு இணைந்து பணியாற்றியதை நினைத்து பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

***

வெகுஜன பத்திரிகைகளில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். வேறு ஒரு நபருக்காக, நான் பரிந்துரை செய்தால், அதை உடனே செய்து கொடுக்கும் நண்பர்கள் அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் இருக்கிறார்கள். நான் பரிந்துரை செய்து அதன் மூலம் பிரபலமான எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், எனக்கு, என் எழுத்துக்களுக்கு குறிப்பாக என்னுடைய புத்தகங்களுக்கு அறிமுகம் என்பதாகக்கூட அது நடப்பதில்லை. அது நிர்வாகம் சார்ந்த முடிவாகிவிடுகிறது அல்லது பொறுப்பில் உள்ள பார்ப்பனர்களின் கோபத்திற்கும், பார்ப்பன மனோபாவம் கொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்பதாலும் அது ஆரம்பத்திலேயே தோழமை ஆனவர்களாலேயே நிராகரிக்கப்படுகிறது.

இதற்கு மிக முக்கியமாக இன்னும் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நான் எல்லா பத்திரிகைகளையும், பேர் சொல்லி கடுமையாக விமர்சித்திருப்பது. பத்திரிகை நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெற்ற மதன், ஞாநி, வாஸந்தி, மாலன், சுதாங்கன் போன்ற பிரபல பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்திருப்பது.

இன்னொன்று, பார்ப்பனத் தன்மை கொண்ட இலக்கியங்களை, பத்திரிகைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதுவது. முற்போக்கு பார்ப்பனியத்தின் முழு அடையாளமான இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் சுப்பிரமணிய பாரதியின் மார்புக்குள் ஹிருதயத்தோடு கண்ணுக்கு தெரியாமல் ஹிருதயம் எது? பூணூல் எது? என்று கண்டுபிடிக்க முடியாமல், ஒளிந்திருந்த பூணூலை, பெரியார் தொண்டனுக்கே உரிய துணிச்சலோடு அறுத்தது.

அதனால்தான், பாரதியைப் போலவே பலதரப்பட்ட மக்களின் ஆதரவுக்காக முற்போக்கான அவதாரங்கள் எடுக்கும், பார்ப்பன பத்திரிகையான ஆனந்த விகடனில், என் நூல் அறிமுகம் மட்டுமல்ல, என் இணையப் பக்க அறிமுகம் கூட இதுவரை நிகழ்ந்ததில்லை. ஒருவேளை பெரியாரை பற்றி அவதூறு எழுதியிருந்தால், சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்ட்டிருப்பேனோ, என்னவோ?

அதுமட்டுமல்லாமல், பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பை தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் இருந்து, பார்ப்பனியத்தை தலைமேல் வைத்து பாதுகாக்கும் இடைநிலை ஜாதிகளையும் பெயர் சொல்லி விமர்சிப்பதால், சுயஜாதி பாசம் கொண்ட பத்திரிகையாளர்களின் ‘கனி’வான கோபத்திற்கும் ஆளாகி இருப்பது, புறக்கணிப்பிற்கான இன்னொரு சிறப்புக் காரணம்.

பார்ப்பனியத்தை சமரசம் இல்லாமல், தொடர்ந்து அம்பலப்படுத்திய தமிழர்களின் மாபெரும் தலைவரான தந்தை பெரியாரையே இந்தப் பத்திரிகைகள் இப்படித்தான் புறக்கணித்திருக்கிறார்கள். இதில் என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு எம்மாத்திரம்?

காலங்கள் மாறினாலும் காட்சிகளை மாற்றாத பார்ப்பனியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கரை ஆழப் படிக்க வேண்டியது அவசியம். இதோ தான் புறக்கணிக்கப்பட்ட விதத்தை டாக்டர் அம்பேத்கர் தனக்கே உரிய மேதைமையோடு, துல்லியமாக வெளிபடுத்துகிறார்:

“பிராமணிய இலக்கியத்தை அம்பலப்படுத்தும் எந்த ஒரு முயற்சியின்பாலும் பிராமண அறிஞன் காட்டும் சகிப்புத் தன்மையற்ற போக்கு எவரையும் எரிச்சல் கொள்ளவே செய்யும். அவசியம் ஏற்படும்போதுகூட மூடநம்பிக்கைகளைச் சாடுபவனாக அவன் நடந்துகொள்ளமாட்டான்.

இத்தகைய திறன் படைத்த பிராமணரல்லாத எவனையும் இத்தகைய பணியைச் செய்வதற்கும் அனுமதிக்கமாட்டான். பிராமணரல்லாத எவனாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் பிராமண அறிஞர்கள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவார்கள்;  அவனுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்கள். ஏதேனும்  அற்பக் காரணங்களைக் கூறி அவனை அப்பட்டமாகக் கண்டிப்பார்கள் அல்லது அவனது படைப்பு பயனற்றது, சல்லிக்காசு பெறாதது என்று முத்திரை குத்துவார்கள்.

பிராமணிய இலக்கியத்தின் சொரூபத்தை வெளிப்படுத்திய எழுத்தாளன் என்ற முறையில் நானும் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இலக்கானவன்தான்.

பிராமண அறிவாளிகளின் போக்கு எத்தகையதாக இருப்பினும் நான் மேற்கொண்ட பணியைத் தொடர்வது எனது கடமை.”

அண்ணல் அம்பேத்கரின் இந்த உறுதியை நெஞ்சில் தாங்கி, அவர் வழியில் பார்ப்பனியத்தை, அது பார்ப்பனரல்லாதவரின் சுயஜாதி ரூபத்தில் வந்தாலும் தொடர்ந்து துணிச்சலோடு அம்பலப்படுத்துவோம்.

***

இந்தப் புத்திகத்திற்கு சிறப்பான அறிமுகத்தை ஆய்வு கண்ணோட்டத்தில் எழுதியிருந்தார் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வே. நெடுஞ்செழியன். தமிழ் ஓசை நாளிதழில் எழுதினார். தமிழ் ஓசையில் சிறப்பாக பிரசுரிதித்த அதன் ஆசிரியருக்கும், அவரை எழுத வைத்து, இந்த நூலுக்கான முதல் அறிமுகத்தை செய்த உதவிஆசிரியர் சிவகுமாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் என் புத்தகத்திற்கு சிறப்பான அறிமுகத்தை செய்கிற என் நண்பர், தீவிர பெரியார் பற்றாளர் தோழர் அரசெழிலன், தனது ‘நாளை விடியும்’ இதழில் இந்த புத்தகத்திற்கும் சிறப்பான அறிமுகத்தை செய்திருந்தார். அந்த அறிமுக உரையை ஆய்வுரையாக எழுதிய முனைவர் க.பூ. மணிமாறனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன் இதழின் தலைமைத் துணை ஆசிரியர் தோழர் லெனின். அரசியல் விமர்சகராக பல சிற்றிதழ்களிலும் முக்கியமான கட்டுரைகள் எழுதி வருகிறார். அந்த சிற்றிதழ்களில் ஒரு நூலைப் பற்றி அறிமுக அல்லது விமர்சன கட்டுரை எழுதவேண்டும் என்றால், அவர் என் நூலைதான் தேர்தெடுத்து இருக்கிறார். ‘வே. மதிமாறன் பதில்கள்’ என்ற என்னுடைய நூலுக்கும் சிறப்பான விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அதுபோல், இந்த நூலுக்கும் மிக சிறப்பான ஆய்வு கட்டுரையை எழுதியிருந்தார். நண்பர் லெனினுக்கும், அதை வெளியிட்ட ‘யாதுமாகி’ இதழுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகங்கள் கொண்டு வருவதை வியாபாரமாக செய்யாமல், கொள்கை பிரச்சாரமாக செய்யும்,  இனிய தோழர், அங்குசம் ஞா. டார்வின் தாசன், இரண்டாம் பதிப்பையும் விரைவாக சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

வே. மதிமாறன்.

29.12.2009

இரண்டாம் பதிப்பு 32 பக்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு வந்துள்ளது. விலை ரூ. 60

சென்னை புத்தகக் காட்சியில் கடை எண் 64–65 கீழைக்காற்று, கடை எண் 221 புதுப்புனல், கடை எண்  240 – 41 விழிகள், கடை எண் 271 கருப்பு பிரதிகள், கடை எண் 460 அலைகள் கடைகளில் கிடைக்கும்.

தொடர்புக்கு;

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

25 thoughts on “‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

  1. தோழர் மதிமாறன்
    உங்களின் இந்தப் புத்தகத்தை சென்ற ஆண்டு வாங்கினேன். உங்களின் எழுத்து நன்றாக உள்ளது. இந்து மத யோக்யதையை இன்னும் தொலுரித்துக் காட்ட வென்டிய அவசியம் உள்ளதா? சஙராச்சாரி கொலை வழக்கில் மாட்டுகிறார்; கருவரையில் (அதாவது அவாளின் பனியிடத்தில்) பொதுமக்கள் விரும்பாத சமாச்சாரங்கள் அனாச்சரமாக நடக்கின்றன. இந்த நிலையிலும் இந்து மதத்தின் புராணக்குப்பைகளை தேடிப்பிடித்து விமர்சிக்க வேன்டிய அவாரம் இருக்கிறதா? அம்பேத்கரை பொதுமைப்படுத்த விரும்பும் உங்களின் நோக்கம் மீதான என் விமர்சனத்தை நாம் என்றாவது சந்திக்கும் போது பேசலாம் என்றிருக்கிறென்.

  2. உங்கல் புத்தகத்தின் அட்டைப்பட வடிவமைப்பு மிக அருமையாக இருந்தது. உள்ளடக்கம் குரித்த என் கெள்வியே மேலே.

  3. இந்து மதத்தை விமர்சிக்க வேண்டியிருக்கிறதா? என்று தோழர் Jayaprakashvel மிகச்சாதாரணமாக கேட்டுவிட்டார்………..ஏதோ மக்களின் நிறுவனம் பரந்து விரிந்து மடத்தனங்களையும், சுரண்டலையும் மூலதனமாக கொண்டு வளர்ந்து நிற்கும் இந்த மதத்தை விமர்சிக்காமல் எப்படி அழிப்பது………………….

  4. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ….

  5. புத்தகம் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் பதிப்பு வெளிவரும் இந்த தருவாயில் உங்களுக்கு என்னுடைய பாராட்டுகள்….
    சாதீயத்திற்க்கு எதிரான உங்கள் போராட்டம் தொடரட்டும்…வாழ்த்துக்கள்….

  6. இந்து ம‌த‌ம் ப‌ற்றிய‌ விம‌ரிச‌ன‌ங்க‌ள் அத‌ற்க்கு ந‌ல்ல‌துதான். இந்து ம‌த‌மே விம‌ரிச‌ன‌ங்க‌ள் மூல‌ம் வ‌ள‌ர்ந்த‌துதான். புத்த‌ர்,ஆதி ச‌ங்க‌ர‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகிய‌ ப‌ல‌ரும் இந்து ம‌த‌த்தை விம‌ரிசித்தே அதை செம்மைப் ப‌டுத்தின‌ர்.

    அம்பேத்க‌ர், பெரியார் ஆகிய‌வ‌ர்க‌ள் இந்து ம‌த்தின் மீது வைத்த‌ விம‌ரிச‌ன‌ங்க‌ளை ச‌ரியாக‌ப் புரிந்து கொண்டால், அது இந்து ம‌த‌த்தை இன்னும் செம்மைப் ப‌டுத்த‌வும், நூறு கோடிக்கும் மேலான‌ ம‌க்க‌ள் ச‌மூக‌த்தை, சாதி பேத‌ம‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌மாக உருவாக்க‌வும் உத‌வும்.

    உல‌கில் தோன்றிய‌ ம‌த‌ங்க‌ளில் மிக‌வும் ப‌ழைமையான‌தாக‌ இருக்கும் இந்து ம‌த‌ம், அவ்வ‌ப்போது பின்ன‌டைவு க‌ண்டாலும், த‌ன்னை ந‌வீன‌ப் ப‌டுத்திக் கொண்டு இன்னும் அதிக‌ உயிர்த் துடிப்புட‌ன் செய‌ல் ப‌டுகிற‌து.

    ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ துடிப்புட‌ன் செய‌ல் ப‌டும் ஒரு ம‌த‌த்தை, நூறு கோடி ம‌க்க‌ளுக்கு மேல் பின்ப‌ற்றும் ம‌தத்தை சில‌ ஆயிர‌ம் பேர் அழித்து விடுவோம் என‌ ‌ நினைப்ப‌து, இம‌ய‌ ம‌லையை த‌‌னி ஒரு ம‌னித‌ன் த‌ன் த‌லையால் முட்டி ப‌த்து கிலோ மீட்ட‌ர் தூர‌ம் த‌ள்ள‌ப் போகிறேன் என்று சொல்வ‌து போல‌ உள்ள‌து. நான் இந்து ம‌த‌ பிர‌ச்சார‌ம் செய்ய‌ இதை எழுத‌வில்லை. ந‌ம்முடைய‌ குறிக்கோள் என்ன‌ என‌ப‌தை நாம் தீர்மானிக்க‌ வேண்டும். ந‌ம்முடைய‌ குறிக்கோள் சாதி ம‌த‌ பேத‌ம‌ற்ற‌‌ ச‌ம‌த்துவ‌ ச‌ம‌ர‌ச‌ நாக‌ரீக‌ ச‌முதாய‌மா, இல்லை ந‌ம்முடைய‌ குறிக்கோள் இந்து ம‌தத்தை அழிப்போம் என‌ப் ப‌க‌ல் க‌ன‌வு காண்ப‌தா?

    இந்து ம‌த‌த்தை உங்க‌ளால் அழிக்க‌ முடியாது. ஏனெனில் நீங்க‌ள் அந்த‌ ம‌தத்தின் ப‌ல‌வீன‌ங்க‌ளை ம‌ட்டுமே பார்க்கிறீர்க‌ள். அத‌ன் அடிப்ப‌டைக‌ள் என்ன‌ என்று பார்க‌காம‌லேயே அதை அவ‌ச‌ர‌மாக‌ வ‌ரைய‌ரை செய்து விடுகிறீர்க‌ள். புத்த‌ரின் சீட‌ர்க‌ளே அவ்வ‌ள‌வு ம‌ன‌க் குவிப்பு, தியான‌ம் செய்தும் இந்த‌ முய‌ற்ச்சியில் தோற்று விட்ட‌ன‌ர்.

  7. அன்பின் திருச்சிக்காரன்,

    ”அம்பேத்க‌ர், பெரியார் ஆகிய‌வ‌ர்க‌ள் இந்து ம‌த்தின் மீது வைத்த‌ விம‌ரிச‌ன‌ங்க‌ளை ச‌ரியாக‌ப் புரிந்து கொண்டால், ..”

    – நீங்கள் எப்படி சரியாக புரிந்து கொண்டீர்கள் என்பதையும் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதையும் விளக்க இயலுமா?

    “புத்த‌ரின் சீட‌ர்க‌ளே அவ்வ‌ள‌வு ம‌ன‌க் குவிப்பு, தியான‌ம் செய்தும் இந்த‌ முய‌ற்ச்சியில் தோற்று விட்ட‌ன‌ர்.”

    – கடமையை செய் – பலனை எதிர்பாராதே

  8. எல்லோருக்கும் பொருளாதார நிறைவு வரும்போது மதம் என்பது எல்லோராலும் இரண்டாம் பட்சமாக ஆக்கப்படும். அதன்பின் மதத்தை ஒழிக்க நீங்கள் பாடுபட வேன்டியதே இல்லை. இந்து மதம் என்றில்லை. எல்லா மதங்களுமே எதாவது ஒருவகையில் சமத்துவமின்மையை முன்னிறுத்துபவைதான். அதிகார பீடங்கள் தான். எளிய மக்களுக்கான விடுதலை என்பது பொருளாதார நிறைவுதான். அதை அரசு தராது. மதம் தராது. இந்து மதத்தை தோலுரிக்கிற மறுதலிக்க்கிற எல்லோருக்கும் ஒரு பொதுவான கேள்வி கேட்கிறேன். இந்து மதத்தை விலக்கும் நீங்கள் அதற்கு மாற்றாக என்ன முன்வைக்கிறீர்கள்?

  9. அன்பர் திருச்சிக்காரன் அவர்களே,

    நஞ்சுச் செடியை வேறோடு பிடுங்கி எறிவதுதான் சரியான நோக்கமாக இருக்க முடியும்…………..அதேபோல சாதியத்தின் வேராய் இருக்கிற இந்து மதத்தை அழிக்க நினைப்பதுதான் சரியான நோக்கமாக இருக்க முடியும்..

    சாதி ஒழிப்புதான் எம்(கவனிக்க!!!) நோக்கம் எனினும்………….

    சாதி ஒழிப்பும், பார்ப்பன இந்து மத எதிர்ப்பும் ஒன்றோடுன்று பிணைந்திருக்கிறது…………..சாதி ஒழிந்தால் இந்து மதம் சொந்த செலவில் செத்து போய் விடும்

  10. சகோதரர் மகிழ்நன் அவர்களே,

    நீங்க‌ள் இந்து‌ ம‌தத்தின் ப‌ல‌வீன‌ங்க‌ளை ம‌ட்டுமே பார்க்கிறீர்க‌ள். அத‌ன் அடிப்ப‌டைக‌ள் என்ன‌ என்று பார்க‌காம‌லேயே அதை அவ‌ச‌ர‌மாக‌ வ‌ரைய‌ரை செய்து விடுகிறீர்க‌ள்.

    முன்பை விட இப்போது சாதி வேறுபாடு குறைந்துள்ளது. இன்னும் குறையும். சமத்துவ சமுதாயம் அமைப்போம். இந்து மதம் ஒன்றும் அழியப் போவதாகத் தெரியவில்லை. அது இன்னும் வேகமாக முன் நோக்கி செல்கிறது. இந்த நிலையிலே சமத்துவ சமுதாயம் அமைக்கும் போது, இந்து மதம் அழியாமலே சமத்துவ சமுதாயம் அமைத்து விட்டாங்கலடா என்று சிலர் வருத்தப் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இனி யார் தடுத்தாலும். முட்டுக் கட்டை போட்டாலும் சாதிகள் அழிந்து ஒரே சமுதாயம் உருவாகத்தான் போகிறது. கடைசி முட்டுக் கட்டை சாதியை வைத்து அரசியல் செய்பவர்கள்தான்.

  11. இந்து மதம் என்று ஒன்று இருந்ததே இல்லை. சாதியமைப்பை காப்பாற்றி கொள்ள ஏற்படுத்தப்பட்ட கருத்துக்குதான் இந்து மதம் என்கிற பெயர். சாதிய அமைப்பே இந்து மதம். சாதிகள் ஒழிந்து விட்டால் இந்து மதம் என்பதே இருக்காது. இது இந்துக்களாக சொல்லிகொள்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்து மதம் வளரவில்லை,அது போன்ற தோற்றத்தை நவ நாகரீக சாமியார்கள் தோற்றுவிகீரார்கள்.இந்து மதம் ஒழிந்து கொண்டுதான் வருகிறது. சாதியை ஒழிக்க பாடுபடும் தோழர்கள் பெரும்பான்மையோர் இந்து மத சாதிகளில் பிறந்தவர்களே .இன்னும் நிறைய மக்கள் இந்து மத குப்பையை விட்டு அகன்று கொண்டுதான் வருகின்றனர். பார்பன கும்பல் அதற்குதான் புதுபுது மூட நம்பிக்கைகளை(ராசிக்கல், அட்சய திரிதியை,பரிக்காரம்) புகுத்தி வருகிறது. இதை நம்பும் முட்டாள்களும் நிறைய உள்ளனர். பார்பனர்கள் கோவிலுக்கு உள்ளேயே ஜல்சா பண்ணி கொண்டுதிரிகின்றனர்.

  12. சகோதரர் முகமது இஸ்மாயில் அவர்களே அவர்களே,

    உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கவேண்டுமென்றால் அது மிகவும் விவரமான பதிலாக அமையும். நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவேன்.

    அதே நேரம் உண்மையான இந்து மதம் எல்லா மார்க்கங்களையும் அரவணைக்கும் மார்க்கமாக இருக்கிறது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

  13. நீண்ட நாள் கழித்து சகோதரர் Matt இன் பின்னூட்டம் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. Matt போன்றவர்களின் கருத்துக்கள் இந்து மதத்திற்கு மிகவும் உபயோகமானவை.

    இந்து மதம் என்பது உண்மையைத் தேடுவதும், உண்மையை நோக்கி செல்வதும் ஆகும். தன்னுடைய மன வலிமையை உயர்த்திக் கொள்ள உதவுவதுதான் (spiritual upliftment) இந்து மதம்.

    நவ நாகரீக சாமியார்கள் இந்து மதத்தை போர்வையாக வைத்து பில்லியனகளைக் குவிக்கிறார்களே அல்லாமல் அவர்களால இந்து மதத்திற்கு இலாபத்தை விட தொல்லையே அதிகம். அவ்வப் போது காஞ்சி தேவநாதன் போன்றவர்கள் இந்து மத போர்வையில் அட்டகாசம் செய்வது அதற்க்கு பலவீனத்தை உருவாக்கினாலும், அதில் இருந்தும் இந்து மதம் பாடம் கற்றுக் கொள்கிறது .

    நாம் சமத்துவ சமுதாயம் அமைப்பதற்க்கான வழி முறை பற்றி ஆராய்வோம்.

    இந்து மதம் பற்றி நாம் அதிகம் கவலைப் படத் தேவை இல்லை. அது உறுதியானது. இந்து மதம் பற்றிய விமரிசனங்கள் அதற்க்கு நல்லதுதான்!

  14. அனைவரையும் பெயரைக் குறிப்பிட்டே விமர்ச்சனம் எழுதும் மதிமாறன் கூட பல இடங்களில், சீமானை விமர்ச்சனம் செய்யும் போது மட்டும் ஏனோ பெயரைக் குறிப்பிடுவதில்லை.

    தீவிர தமிழ் தேசியமும் பெரியாரியமும் கலந்து குழப்பும், சே குவேராவின் டி-ஷர்ட் அணியும் நண்பர் அம்பேத்கரின் T-shirt அணிய மறுத்தார் என்று தான் வேந்தனும் குறிப்பிட்டிருந்தார்.

    சரி இனி சீமானைக் நாம் கவனிப்போம், ஏன் இந்த அஞ்சா நெஞ்சன் சீமான் அம்பேத்கர் T-shirt என்றதும் கழிகிறார். சாதிய உணர்வு எட்டிப் பார்த்து விட்டதா? அப்படி நினைத்துவிட வேண்டாம். சீமான் என்றாலே அந்தக் கருமம்தான்.

    சீமான் தமிழ் தேசியம் (இன்னும் தேசியம் என்றால் என்ன என்பதை எளிய மக்களுக்கு விளக்க ஒருவருக்கும் வக்கில்லை- கீழே விளக்கியுள்ளேன்) பெரியாரியம், கொஞ்சம் கம்யூனிசம் பேசும் முற்போக்குச் சிந்தனைக்காரர்தான்.ஆனால் சாதிய உணர்வு என்று வந்துவிட்டால், கொஞ்சம் திரும்பிக்கொண்டு அவருக்கு முற்போகாகச் சிந்திப்பார்.

    சாதிய உணர்வு என்று வந்தால் இப்படி வரிந்துகட்டிக்கொண்டு சிந்திக்கும் இவரை நக்கீரன் கோபால் தம்பி பட வெற்றி விழா மேடையிலிருந்து பாராட்டித் தள்ளிவிட்டார், மறுபடியும் மேடை ஏற முடியுமா என்பது தெரியவில்லை, வாழ்(த்)துக்கள் சார்!
    தம்பி படத்தில் ஒரு panning shotல் முத்துராமலிங்கத்தின் படமும் அம்பேத்கரின் படமும் தெரியும். இதற்காகத்தான் ந.கோபால் மேடையில் தள்ளினார். முக்குளத்து சிங்கமுங்க…முத்துராமலிங்கமுங்க…. என்று அவரின் பாஞ்சாளங்குறிச்சி படத்தில் பாட்டு வைத்ததெல்லாம் இவர்கலுக்குத் தெரியாது பாவம்! அந்தப் panning shotல் காட்டிய படம் எனக்கு நினைவில் வரமாட்டேங்குது… அப்படி ஒரு படம் அது, ஜெராக்சு எடுத்து ஒட்டி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். முத்திராமலிங்கத்தின் படத்துடன் அம்பேத்கர் படத்தை சேர்த்துக் காட்டி சபாஷ் வாங்கிவிட்டார்! சபாஷ்…

    தன் படத்திற்கு தம்பி என்று பிரபகரனைக் குறிக்கும் பெயரை வைத்துவிட்டு சாதித்தலைவர் முத்துராமலிங்கத்தின் படத்தை மட்டும் காட்டினால் சீமான் முற்போக்காளர் என்று இப்போது இருக்கும் பெயருக்கு ஆபத்து வந்து விடாதா? அதான் வேறு ஒன்றுமில்லை… சீமானை யாரும் தப்பா நெனச்சுக்க வேண்டாம்.

    இதில் கூட முதலில் திலீபன் பெயரைத்தான் வைத்திருந்தார்கள் பிறகு வணிக நோக்கத்திற்காத்தான் தம்பியின் பெயர் வைக்கப்பட்டது. தம்பி படத்தை வெளி நாடுகளில் வெளியிட்டு சே குவேராவின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து ஓட்டினார்கள். சே குவேரா வெளினாடுகளிலும் சீமானுக்கு உதவி இருக்கிறார்! அது வேறுகதை விட்டு விடுவோம்.

    சீமான் தனக்கு அண்ணன் என்று சொல்லும் அழகிற்காக பூனூல் அருத்துக்கொண்ட பார்ப்பனன் கமலஹாசன் தனது ஹேராம் படத்தில் முஸ்லிம் மக்கள் செய்யும் வன்முறைகளை தெளிவாகவும், இந்துக்கள் செய்யும் வன்முறைகளை sill hought, out of focus மேலும் தனக்குத்தெரிந்த எல்லா சினிமா அறிவையும் பயன்படுத்தி மறைத்து அவர்களின் வன்முறையைக் காட்டியிருப்பார். படம் பார்த்த மக்களின் மனதில் முஸ்லிம் மக்கள் செய்த வன்முறைகள்தான் நினைவில் இருக்கும்.
    ஓரளவு சீமான் தன் அண்ணனிடம் மலுப்பும் தொழிலைக் கற்றுகொண்டுவிட்டார். சினிமாவையும் கற்றுக்கொண்டால் சரி!

    சரி அவ்வளவுதானா சீமான்? இல்லைங்க…
    ஒடுக்கப்பட்ட தளத்தில் பிறந்து, யாரும் எதிற்க பயந்த முத்துராமலிங்கத்தின் அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் எதிர்த்து பலமுறை வெற்றிகண்டு, முத்துராமலிங்கத்தின் கைக்கூலிகளால் வெட்டி சாய்க்கப்பட்டு, வீரமரணம் அடந்த மாவீரன் இமாணுவேல் சேகரனின் நினைவு நாளன்று நினைவிடத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தினார் சீமான். இது தமிழின உனர்வு இல்லையா?
    அதையும் பார்போம்..

    இதற்கு முன் ஏன் சீமான் இமாணுவேல்சேகரனின் அஞ்சலிக்குச் செல்லவில்லை? தன் சாதியில் பிறந்த “பணக்கார சீமான்” என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தலைவர் ஆன முத்துராமலிங்கத்தின் “தேவர் ஜெயந்தி” “குரு பூஜை” இவைகளுக்காக தவம் கிடக்கும் சீமான், மக்கள் உரிமைக்காக போராடி வீர மரணம் அடைந்த மாவீரனின் நினைவு நாள் மறந்தது யதார்த்தம்தான்.

    தேவர் ஜெயந்தியை சென்னையில் பிரபலப்படுத்திய பெருமையும் பேரும் தமிழன் சீமானையே சேரும்.

    பிறகு எதற்காக “அஞ்சா நெஞ்சன் except for ambethkar T-shirt” சீமான் இந்த வருடம் மட்டும் கலந்து கொண்டார்? அரசியலில் தாவப்போகிரார் அல்லவா! அதான்.
    தென் மாவட்ட ஒடுக்கப் பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்ட தனது அரசியல் வாழ்வின் முதல் அல்வா இந்த அஞ்சலி. வெள்ளையர்கள் ஆண்ட போது ஆங்கிலம் கற்றுக்கொண்ட பார்ப்பனர்கள் ஜெர்மன் படை முன்னேறுவதை அறிந்து ஜெர்மன் மொழி கற்கத் தொடங்கியதாக மதிமாறன் இதே தளத்தில் கூறியிருந்தாரல்லவா. பார்ப்பனர்கள் தங்களுக்கு ஒரு வேலை நடக்கவேண்டும் என்றால் எதையும் செய்வார்கள். “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாரும் இல்லை’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சீமானிலும் பார்பானியத்காக்கமே தெரிகிறது.

    திராவிட இயக்கங்களின் தலையெடுப்பிற்குப் பின்னால் ஓரளவு அடங்கி இருக்கும் பார்ப்பனர்கள் “ஏ வோய் நீர்தாம் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை” என்று சுயசாதி உனர்வுள்ள சீமான் போன்றவர்களை தூண்டிவிட்டு தமிழர்களை ஒன்றுசேரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள் அதில் நல்ல வெற்றியும் அடைந்துள்ளார்கள். மூச்சுக்கு முந்நூரு முறை தமிழ்தேசியம் தமிழ்தேசியம் என்று பேசும் சீமான் ஏன் இன்னும் இதை உணரவில்லை? தேசிய மக்கள் ஒன்றினையாமல் தேசிய விடுதலை என்பது சாத்தியமா? அதானே…பிரபாகரன் தமிழீழம் அமச்சுட்டாருன்னா.. ஒரு குச்சிய எடுத்துகிட்டு வந்து அப்டியே தமிழ்நாட்டச் சுத்தி ஒரே கோடா கிழிச்சு பிரிச்சுருவாராம்! அப்பறம் இவங்க என்ன கிழிக்கப் போராங்கன்னு தெரியல. பிரபகரன் வரும் வரைக்கும் வெயிட் பன்னுராங்களோ! அவரோட பட வசனத்தை அவரிடமே கேட்போம். இனி என்ன செய்ய்யப் போறீங்க?

    ஈழத்திற்கு நாம் ஆதரவாக இருக்கலாம் போராட முடியாது. அது போலதான் நமக்கும் நாம் தான் போராட வேண்டும்.தமிழீழத்திற்க்கு ஆதரவான பிரச்சாரத்தில் சீமானின் பங்கு போற்றுதலுக்கு உரியதுதான். அதற்காக?

    தேசம்:

    முன்னால் வாழ்ந்த வரலாற்றை பதிவு செய்த திறமைசாலிகள் பெரும்பாலும் சுரண்டித் திண்றவர்கள் என்பதால் அவர்களுக்கெல்லாம் இது பற்றி எழுத நேரம் இருந்திருக்கவில்லை. அதற்குள் ஏதேனும் ஒரு தேசத்தை எப்படிப் பிடிப்பது என்ற பிளானைக் கொண்டுவந்துவிடுவார்கள். தேசம் என்பதற்கு மார்க்சிய அடிப்படையிலான வரையரைதான் முழுமையாக உள்ளது. அதன்படி தேசம் என்பது பொதுவான மொழி, தொடர்ச்சியான வரையருக்கப்பட்ட எல்லையுடங்கூடிய நிலப்பரப்பு, பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான கலாச்சாரத்தில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு இவை நான்கின் அடிபடையில் உருவாகிய மக்கள் சமுதாயமே தேசம். இந்திய தேசியம் என்பதெல்லாம் உண்மயில் உச்சகட்ட காமெடி..இதைப்பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.

    நன்றி-தோழமையுடன்-தும்பையன்

  15. //‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’//

    கண்டிப்பாக தோழர்.. நிதர்சனமாக உண்மையை மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்.. இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் தோழரே..

    தோழர் தும்பையருக்கும் வாழ்த்துகள்

    **பதிவை திசைதிருப்ப அந்த குடிமி வந்துருச்சு, தயவுசெய்து தோழர்கள் யாரும் அதை கண்டுகொள்ளாதீர்கள்..

  16. ம‌த‌ வெறியை ம‌ன‌தினில் வைத்து, சாதிக் காழ்ப்புண‌ர்ச்சியை தூண்டி விட்டு, ம‌க்க‌ளை மோத‌ விட்டு இர‌த்த‌ம் குடித்து குழ‌ம்பிய‌ குட்டையில் மீன் பிடிக்க‌ நினைக்கும் ந‌ண்ப‌ரின் ம‌ன‌தில் உள்ள‌ காழ்ப்புணர்ச்சிக்கு அஞ்சாம‌ல், ‌ மிர‌ட்ட‌லுக்கு ப‌ணியாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் உற்சாக‌த்துட‌ன் ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முன் வ‌ர‌ வேண்டும்.

  17. சதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ் நாட்டின் விவசாய விருத்திக்குத் கற்×ண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேக பலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குற்ற பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம்! இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதை யுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப்போகும் தேர்தலில் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம். – “விடுதலை’ குடி அரசு ( மறு பிரசுரம் ) 08.12.1935

    நன்றி: அதி அசுரன், மேலும் தகவலுக்கு இந்த சுட்டியை அழுத்தவும்

    http://thozharperiyar.blogspot.com/2010/01/blog-post.html

  18. //இந்து மதத்தை விலக்கும் நீங்கள் அதற்கு மாற்றாக என்ன முன்வைக்கிறீர்கள்?//

    என்ன ஒரு கேள்வி?????
    என்ன ஒரு புத்திசாலித்தனம்?????

    பரவாயில்லை இந்த கேள்வியோட நிப்பாட்டிடீங்க…
    சாதியை ஒழிக்கும் நீங்கள் அதற்கு மாற்றாக என்ன சாதியை முன் வைக்கிறீர்கள் என்று கேட்காம இருந்தீங்களே..
    கோடி நமஸ்காரம்(?)!!!!!!

  19. தும்பையன் (08:42:45) :

    ///அனைவரையும் பெயரைக் குறிப்பிட்டே விமர்ச்சனம் எழுதும் மதிமாறன் கூட பல இடங்களில், சீமானை விமர்ச்சனம் செய்யும் போது மட்டும் ஏனோ பெயரைக் குறிப்பிடுவதில்லை.////

    என்று சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் பெயரை குறிப்பிடாமலே சீமானை விமர்சித்திருக்கிறீ்களே?

    நீங்கள் என்ன தொம்பனா?

  20. வன்னியர் சாதி, தேவர் சாதி, பார்ப்பனர் சாதி, தலித் சாதி ….இப்படி எல்லா சாதி அடையாளங்களையும் விட்டு, ஒரே மனித சாதியாக கனவானாக, மனசாட்சி உள்ளவனாக உருவாக்குவதன் மூலமே சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும்.

    யாராவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருடன் கை கோர்த்து, எனக்குப் பிடிக்காத இன்னொரு சமூகத்தினரை கட்டம் கட்டப் பார்ப்பேன் -என்று நினைத்தால், அவர்களைப் பார்த்து சந்தேகப் பட்டு இன்னும் அதிகமாக விலகி செல்வார்கள்.

    “இவன் இன்னிக்கி இந்த சாதிக் காரனை நம்மோடு சேர்ந்து கட்டம் கட்டப் பார்க்கிறான், நாளைக்கு நம்மையும் கட்டம் கட்டுவான்” என்று எச்சரிக்கையுடனும், எரிச்சலுடனும் விலகி செல்வார்களேயன்றி, கை கோர்க்க வர மாட்டார்கள்.

    நாம் இப்போது இருப்பது 2010ல். சாதிக் காழ்ப்புணர்ச்சியை தூண்டி விட இப்போது வழி இல்லையே என்று 80 வருடங்களுக்கு முன் பேப்பரில் வந்த பழைய நிகழ்ச்சிகளையே திரும்ப திரும்ப எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அளவுக்கு சாதி வேறுபாடுகள் இன்றைய கால கட்டத்திலே குறைந்து வருவது நம்பிக்கையூட்டும் விடயம்.

    சாதிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் குறைந்து வருகின்ற காலத்திலே, முழுமையான சமத்துவ சமுதாயம் அமைக்க முன்னோக்கி சிந்திக்க வேண்டுமேயல்லாது பிற்போக்கு சிந்தனை பின்னடைவையே உருவாக்கும். மக்களைப் பிரித்து மோத விட்டு குளிர் காய நினைக்கும் மனப் போக்கிற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காது. இதயத்தை நேர் வழி திருப்பி விடுங்கள்.

    சாதிக் காழ்புணர்ச்சி தீயை எரிய விட்டுக் கொண்டே, சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைக்க முடியாது. நண்பர்கள் அனைவரும், சாதி வெறியை , சாதிப் உணர்வை, சாதிக் காழ்புணர்ச்சியைக் கைவிட்டு, மனிதத்தின் மீது நம்பிக்கை வைத்து மனிதர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

    முற்போக்கு சமத்துவ மனித நேய சிந்தனையாளர்கள் இந்த சுட்டிகாளை அடைந்து கட்டுரையைப் படித்து கருத்து தெரிவிக்க கோருகிறோம்.

    சாதிகளற்ற சமத்துவ சமுதாயம்

    http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

    நாகரீக சமுதாயம்

    http://thiruchchikkaaran.wordpress.com/2010/01/06/civilised-soceity/

  21. முஸ்லீம்களில் சிலர் குண்டு வைத்ததால் ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் மீடியாக்கள் தீவிரவாதிகளாக்கினார்கள்,

    இப்போ கிட்டதட்ட எல்லா சாமியாரும் பொம்பள பொறுக்கியாக உள்ளதால் ஒட்டு மொத்த இந்துக்களையும் மீடியாக்கள் என்ன ஒன்றும் சொல்லாமல் இருக்கிறது..?

  22. சகோதரர் முகமது இஸ்மாயில் அவர்களே,

    இசுலாமியர்களில் 99 சதவீதம் பேர் சாதாரண இயல்பு வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது இந்தியர் எல்லோருக்கும் தெரியும். வூடகங்கள் எல்லா இசுலாமியரையும் தீவிரவாதியாக சித்தரிக்கவில்லை.

    மேலை நாடுகளில் இஸ்லாமியர் அனைவரையும் குற்றவாளி போலக் கருதும் வழக்கம் உள்ளது. ஆனால் ஆசிய நாடுகளில் அப்படிக் கருதுவது இல்லை.

    மதங்களுக்கு இடையிலே நல்லிணக்கத்தை வளர்க்க முயலுங்கள்.

    ஏதாவது வாய்ப்பு கிடைக்குமானால், உடனே பிற மார்க்கத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி கருத்துக்களை எழுதலாமா என்ற வகையிலே பதிவு அமைவதாக படிப்பவர் எண்ணும்படிக்கு எழுதுவது யாருக்கும் நல்லது அல்ல. எனக்கு ஒரு கண் போனால் பக்கத்து வீட்டுக் காரனுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும், என்பது போல உங்களின் பதிவு இருப்பதாக கருதப் பட வாய்ப்பு உள்ளது.

    எல்லா மார்க்கத்தவரும் அமைதியாக, வெறுப்பைக் குறைத்து , அன்பை வளர்த்து, பிற மார்க்கத்தில் உள்ள நல்ல கருத்துக்களை பாராட்டி சகிப்புத் தன்மையுடன் வாழ்வதே மனித சமுதாயம் வாழ வழி. இல்லையேல் உலகில் கல்லறைகள் மட்டுமே மிஞ்சும்.

  23. ambedkar patri yarum ivvalavu virivaga pesuvathillai.

  24. What a pity. Mathimaran says he wants to promote ambedkar thru his t-shirt.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading