காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

காலச்சுவடு – ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்கிய வடிவமாகவே பார்க்கிறது. எல்லா மனிதர்களும் அவர்களுக்கு கதாபாத்திரங்கள் அல்லது தீவிர வாசகர்கள், வாசகர் அல்லாதவர்கள். காலச்சுவட்டின் பார்வையில் சமூகத்தில் இரண்டு விஷயங்களே:

தரம் x திறமை – தரமின்மை x திறமையின்மை

இவைகளுக்குள் நடக்கும் யுத்தம். மனிதர்களின் ஜீவாதாரமான விஷயம் இலக்கியம். அதிலும் உயர்தரமான இலக்கியம். உயர்தரமென்றால் அரசியல் அற்ற(?) பிரச்சாரமற்ற இலக்கியம். மக்கள் பிரச்சினையை மையமாக வைத்து தீவிரமாக எழுதுகிற நிலைக்கு எதிர்நிலை.

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பிரச்சாரம் இருக்கக் கூடாதா(?). நீ பீயைப் பற்றி வேண்டுமானாலும் எழுது. ஆனால் அழகாக எழுது.


இந்த அழகியல் ஆராதனையில், ஜாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் (முற்போக்கு). ஆனால், பார்ப்பனத் தரமில்லாமல் இருக்கிற இலக்கியங்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டும். (தீவிர இடதுசாரி சிந்தனை எழுத்துகளை, தலைவர்களை) இதில் பார்ப்பனரல்லாதவருக்கே முன்னுரிமை.


அப்படி விமர்சிப்பவர் கூடுதல் தரம், திறமை உள்ளவராக அங்கீகரிக்கப்படுவார். சுருங்கச் சொன்னால், இந்த வகையான இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்கிற மநுதர்மம். (வேதம் தெரிந்தவன்-அறிவாளி, உயர்ந்தவன். தெரியாதவன்-முட்டாள், தாழ்ந்தவன்)

பார்ப்பனரல்லாத இந்த வகை அழகியல் அறிவாளிகள் நிறையப் பேர் காலச்சுவடுமுழுக்க விரவிக் கிடைக்கிறார்கள். (தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை) அதில் முக்கியமாக இரண்டு விசுவாசிகள் பிரபஞ்சன், ரவிக்குமார்.


இவர்கள் காலச்சுவட்டிலும் அதைத் தாண்டி வெளியிலும் நிரம்ப விசுவாசத்தோடு இருப்பவர்கள். இவர்களின் சிந்தனையில் ஒரு தொடர்ச்சி இந்த விசுவாசத்தில் மட்டுமே.


காலச்சுவடு வைத்திருக்கிற அழகியல் அளவுகோலில் அளந்துப் பார்த்தால், உருப்படியாக ஒரு சிறுகதையைக் கூட எழுதாத பிரபஞ்சன் சொல்கிறார்:

திராவிட இயக்கம் இலக்கியத்தில் ஒன்றும் செய்யவில்லைஎன்று. இதனாலேயே இவர் அழகியல் அறிஞர். (இவரின் ஞானகுருவை ஜெயகாந்தனிலிருந்து சுந்தர ராமசாமிக்கு மாற்றி விட்டார்)


ரவிக்குமார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இவரை விடவும் இவருடைய அவதூறுகள் புகழ்பெற்றவை. காலச்சுவட்டின் சகவாசத்திற்குப் பிறகுதான் இவர் பெரியார் குறித்த அவதூறுகளில் தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பெரியார் குறித்தோ, திராவிட இயக்கங்கள் குறித்தோ சுந்தர ராமசாமியோ, அவருக்குப் பிறகு மறைமுகமாக மணிமுடி சூட்டிக் கொண்ட அவருடைய மகன் கண்ணனோ தீவிரமாக எழுதுவதில்லை. சொல்லப் போனால், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரை அப்பாவும், மகனும் கலைஞர்என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கருணாநிதி என்று மொட்டையாக எழுதுவதில்லை.


ஒரு போராட்டக்காரனாய், உலகத்தில் புனிதம், புனிதன் என்று எதுவுமில்லை என்று இந்து மதத்தின் எதிரியாய், ஜாதியின் விரோதியாய் வாழ்ந்த தலைவர் பெரியாரை, ஒரு சாதாரணக் கவிஞன் சுப்பிரமணிய பாரதிக்கு இணையாக நிறுத்திப் போற்றுகிற(?) ஞானிகூட காலச்சுவடுபேட்டியில், கருணாநிதியின் இன்னொரு புறத்தையும், முரசொலிமாறனின் மறுபுறத்தையும் பெருமையோடே குறிப்பிடுகிறார்.

இது எப்படி இருக்கு?

***

தலிபான்களின் பெண் அடிமைத்தனத்தை, பெண்களுக்கு எதிரான செயலைக் கண்டிக்கிற காலச்சுவடு’ (கண்ணன்), ஒட்டு மொத்தமான தமிழ் மக்களை வெறும் ஆண்குறிகளாக, பெண் குறிகளாக மட்டுமே பார்க்கிற, தமிழ் ஆபாசத்தின் குறியீடான குமுதத்தை, பெண்களுக்கு எதிரான அதன் சிந்தனையைக் கண்டித்து, ஒரு வார்த்தை கூட எழுதாத இந்த இலக்கிய இதழ், திடீரென்று தன் தலையங்கத்திலேயே பாய்ந்து புடுங்கிறது.


குமுதம் தொடரும் அராஜகம்

‘‘குமுதத்திலும், குமுதம் டாட் காமிலும் காலச்சுவடுக்கு எதிரான திட்டமிட்ட அவதூறு, இருட்டடிப்பு ஆகியவை தொடர்ந்து ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. (இது பற்றி காலச்சுவடுஇதழ் 37லும் எழுதியிருந்தோம்)

காலச்சுவடு கடந்த எட்டு ஆண்டுகளில் வெகுஜன கலாச்சாரம் பற்றி தொடர்ந்து விவாதங்களை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், குமுதத்தை எப்போதும் வம்புக்கு இழுத்ததே இல்லை. அது மட்டுமல்ல, குமுதம் வெளியிட்டு வரும் தீபாவளி சிறப்பு இலக்கிய இதழ்களை வரவேற்று எழுதிய ஒரே இதழ் காலச்சுவடுதான்.’’ (‘காலச்சுவடுதலையங்கம் நவம்பர்-டிசம்பர்2001)


காலச்சுவட்டின் சமூகப் பொறுப்பிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றால், பற்றி எரிகிற பிரச்சனைகள் வரும்போது, காலச்சுவட்டிற்கு பீரிட்டுக் கிளம்புகிறது சமூகப் பொறுப்பு. அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்டதை (அது அமெரிக்காவின் ஆண்குறியாம்) பற்றி எழுதுகிற கண்ணன் – அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும், சில இடதுசாரி அறிவு ஜீவிகளுக்கும் கண்டனங்களையும், அறிவுரைகளையும் சொல்லிவிட்டு பெரிய தீர்வையும் – தீர்ப்பையும் சொல்லி விட்டதாக அவரே பெருமைபட்டுக் கொள்கிறார்.


கொசுறாக, இந்தத் தீர்ப்பின் இன்னொரு நீதிபதி சேரன், டொரன்டோவிலிருந்து எழுதுகிறார்: இந்த சம்பவத்திற்குப் பிறகு எங்கள் சுக வாழ்விற்குத் தீங்கு வந்துவிட்டது. சொந்த நாட்டு மக்களையே நொறுக்குகிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவால் ஆப்கானிஸ்தான் மக்கள் என்ன சிரமப் படுகிறார்களோ, அதே சிரமம்தான் அமெரிக்க மக்களுக்கும்என்பது போல் அவரும் ஒரு தீர்ப்பை எழுதுகிறார். இவை எல்லாவற்றையும் விட, கண்ணன் எழுதிய கட்டுரைக்கு என்ன தலைப்பு தெரியுமா?

அமெரிக்க – இஸ்லாமிய பயங்கரவாதம்: இறுதித் தீர்ப்பும் இறுதித் தீர்வும்’.அதாவது, அமெரிக்காவிற்கு எதிராக இஸ்லாம்.

அமெரிக்க – அல்கொய்தா பயங்கரவாதம் அல்லது அமெரிக்க – தலிபான் பயங்கரவாதம்இப்படிக் கூட தலைப்பு வைத்திருக்கலாம்.

ஏன் இல்லை? எல்லாம் மனுஷ்யபுத்திரன் இருக்கிற தைரியம்.


இது மகனோட பாணி சமூக அக்கறை. அவுங்க அப்பாவோட சமூக அக்கறை இதையே தூக்கி சாப்பிடுவது.

இந்தியாவில் இந்து – முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது?இந்தக் கேள்விக்கு சுந்தர ராமசாமி பதில் சொல்கிறார்:

‘‘மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்ததும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பாகிஸ்தானைப் பிரித்துத் தர முஸ்லிம்கள் வற்புறுத்தியதும், இந்து – முஸ்லிம் உறவை மேம்படுத்த காந்தி எடுத்த முயற்சிகளை அவர்கள் போதிய அளவுக்கு அங்கீகரிக்காததும், வரலாற்று ரீதியாகவே இந்துக்களுக்கு இஸ்லாமியர் பற்றி குறையும் வருத்தமும் உருவாக்கியிருக்கின்றன’’

(காலச்சுவடுசனவரி – பிப்ரவரி 2002)


இதை ஒட்டு மொத்த இந்துக்களின் இயல்பான உணர்வு போல ஆண்டியக்கிறார் சுந்தர ராமசாமி. எந்த இந்துக்கு குறையும் வருத்தமும் உருவாகியிருக்கிறது?


ஜாதி அடையாளத்தைத் தவிர, இந்து என்ற அடையாளத்தோடு, உணர்வோடு எவன் இருக்கிறான்? இந்து என்கிற உணர்வே இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு உண்டாக்கிய ஒன்றுதானே. (பார்ப்பனிய – ஜாதி ஆதிக்கத்தை மறைத்துக் கொள்ளவும்) அப்படியிருக்க வரலாற்று ரீதியாகவே இஸ்லாமியர் மீது இந்துக்களுக்கு எப்படி குறையும், வருத்தமும் இருக்க முடியும்?


இஸ்லாமிய மன்னர்களுக்கு எதிராக – பாகிஸ்தானுக்கு எதிராக – காந்திக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், அந்த அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் முறை என்ன? எப்படி வெளிப்படுத்தினால் நீங்கள் அவர்களை அங்கீகரிப்பீர்கள்?


இந்த பதிலைப் பின் தொடருகிறவரிகளில், இந்து மத தீவிர அமைப்புகளுக்குப் பாடம் கற்பிக்கிறார். பெரியாரையே பின் தள்ளும் அளவுக்கு சகல மதங்களையும் சவுக்கால் அடிக்கிறார். இஸ்லாமியருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்துக்களின் தலைவர்போல் அறிவுரையெல்லாம் சொல்லி முடிக்கிறார். அத்வானியின் மத நல்லிணக்கம் போல்.

***

பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின், இஸ்லாமியர்களின் விரோதிஎன்று ஆதாரப்பூர்வமாக பொய் சொல்கிற ரவிக்குமார், இஸ்லாமியர்களின் தீவிர ஆதரவாளரும், இந்தியாவின் ஆயுதம் தாங்கி இயங்குகிற புரட்சிகர இயக்கத்தின் தலைவரும், சே குவேராவிற்கே கொரில்லா யுத்த முறையை பயிற்சி அளித்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் உயிரையே அர்ப்பணித்தவரும், சங்கராச்சாரி, ஜீயர்களின் ஜென்ம விரோதியும் ராம. கோபாலனின் கெட்டக் கனவும் ஆன சுந்தர ராமசாமியை எப்படி கொஞ்சுகிறார் பாருங்கள்.


நா. பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி ஒரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலைப் பற்றி ரவிக்குமார் எழுதுகிறார். கவிதை குறித்து ரவிக்குமாருக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியுமா?என்று சுந்தர ராமசாமியே ஆச்சரியப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு கவிதைகளைத் தனித் தனியாகக் கழட்டி மாட்டுகிறார்.


கட்டுரையின் ஓர் இடத்தில், சு.ராவின் (சுந்தர ராமசாமியைத்தான் செல்லமாக சொல்கிறார்) இந்த நூலைப் படிக்கும் போதும், பிறகு பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் படித்த போதும் எனக்கு தோன்றிய இன்னொரு விஷயம், பிச்சமூர்த்தியின் கவிதைகளை விடவும், சுந்தர ராமசாமியின் உரைநடை கவித்துவத்தோடு இருக்கிறது என்பதுதான்’.


இந்த வரிக்காகவே, சு.ரா. (நாமும் செல்லமாக சொல்லுவோம்) ரவிக்குமாரின் கவிதை அறிவை நினைத்து ஆச்சரியப் பட்டிருப்பார். பிறகு இன்னொரு இடத்தில் பயங்கரமான பிரகடனம் ஒன்றை அறிவிக்கிறார் ரவிக்குமார்:

‘‘உரைநடை எழுத முடியாத கவிஞன் கவிதை எழுத முடியாதுஎன்ற சு.ரா.வின் முடிவு, இன்றைய நவீன கவிகள் பலரை நடுநடுங்க வைத்துவிடும்’’நவீன கவிஞன் நடுநடுங்குகிறானோ இல்லையோ, இந்த வரியைப் படிச்சு சு.ரா.நடுநடுங்கிப் போயிருப்பாரு.


கடைசியாக கட்டுரையை முடிக்கும் போது, ‘‘ஆக சு.ரா. சொல்லியிருப்பதை உரைநடைக்கும் கவிதைக்குமான எதிர்நிலைகளாக கொள்ளாமல், உரை நடையை கவிதைக்கு அருகில் கொண்டு செல்லவேண்டுமென்று குறிப்பாகவே நான் கொள்ளுகிறேன். அப்படி கொண்டு செல்லும்போது, விமர்சனம் படைப்பிலக்கியத்தின் ஆற்றலைப் பெறுகிறது. இதற்கான சரியான உதாரணம் மாரி ப்ளான்ஷொவின்எழுத்துகள். தமிழில் உதாரணம் காட்ட எவருமில்லையா என்று நீங்கள் கேட்கலாம்.’’

இதற்குப் பின் ஒரு பெயர்ப்பட்டியலைத் தருகிறார் ரவிக்குமார். எல்லாம் பச்சைத் தலித்துகளின் பட்டியல்:

‘‘ப்ளான்ஷொவை பதிலீடு செய்யாவிட்டாலும் கூட பாரதி, புதுமைப்பித்தன், ஜீ.நாகராஜன், சு.ரா. சுஜாதா எனப் பலரிடமிருந்தும் இதற்கான சான்றுகளை நிச்சயமாக நாம் எடுத்துக் காட்டமுடியும்.’’ (காலச்சுவடு மார்ச் ஏபரல்2002)


இப்படி உள்ளன்போடு கவிதைகளைக் குறித்து மட்டும் நேசிப்போடு பார்ப்பனர் திறமையைப் பாராட்டி பட்டியல் இடுகிற ரவிக்குமார், தலித் எழுத்தாளர்களை, குறிப்பாக, தாய் மண்ணிலும், தலித் முரசிலும் எழுதுகிற இளைஞர்களை அல்லது தாய் மண்குறித்தும், தலித் முரசுகுறித்தும் இப்படி எழுதுவாரா?

மாட்டார்என்றால் என்ன காரணம் சொல்வார்? அவர்களுக்கு அந்தத் தகுதியோ, திறமையோ கிடையாது என்பாரோ?

சுப்பிரமணிய பாரதிக்கு ஒரு கனகலிங்கம். சுந்தரராமசாமிக்கு ஒரு ரவிக்குமார்.

***

சமூகத்தை சீர்த்திருத்துவதற்கு முன்னால், சாகித்ய அகாதமியை சீர்திருத்தணும்ங்கற வேகத்தோடவும், கோபத்தோடவும் அறிஞர்கள் சில பரிந்துரைகளை சொல்றாங்க.

. . .

பிரபஞ்சன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. ராஜ் கவுதமன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. பாவண்ணன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. ராஜமார்த்தாண்டன்: சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. நாஞ்சில் நாடன்: இவரும் அவ்வண்ணமே.


சுந்தர ராமசாமி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறது தப்பில்லை. ரசிகர்களின் மன உணர்வைப் புரிஞ்சுக்க முடியுது. இப்படி எல்லோரும் போற்றும் உலகத் தரத்துக்கு எழுதுற  ஒரே தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, யாரையெல்லாம் பரிந்துரைக்கிறார் என்ற ஆர்வத்தில் காலச்சுவட்டைப் புரட்டி, புரட்டிப் பார்த்தா, அய்யங்கார் பாணி வடகலை நாமத்தைக் குழைச்சிப் பெரிசா போட்டாரு.

***

காலச்சுவட்டின் கவிதைகளைக் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். இதில் வருகிற ஒவ்வொரு கவிதையும், தனக்கென்று சுயநடையோடு, சுயமொழியோடும், சுய உணர்வோடும் இல்லாமல் எல்லா கவிதைகளும், ஒரே மாதிரியாகத்தான் இருக்கு. எழுதியவர்களின் பெயர் மட்டும்தான் வித்தியாசமா இருக்கு. பாரதிதாசன் குறித்து காய்மொழி சொன்ன கனிமொழியின் கவிதையும் அதே லட்சணம்தான்.


எல்லோருடைய கவிதையும், கவிதை படிச்சி, கவிதை படிச்சி – அது மாதிரி ஒரு ஒரு கவிதை எழுதுன கதையாகத்தான் இருக்கு. பல கவிதைகள் suicide pointஇல் நின்று கொண்டு கடைசி நேரத்தில் எழுதுன மாதிரி அவ்வளவு நம்பிக்கையா இருக்கு. சுருக்கமாகச் சொன்னால், கவிதைகள் பிணமுக லட்சணம்’.


இன்னும் நிறைய இருக்கு எழுதுறதுக்கு. ஆனா, எழுதுனவங்க மட்டுமே படிக்கிற காலச்சுவட்டைப் பற்றி இவ்வளவு எழுதுனதே அதிகம்னு தோணவே, இத்தோட முடிச்சிக்கிறேன்.

வர்க்க புத்தி..

சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி (தொழிலாளர்கள்) இவர்களுக்கு உள்ள மட்டமான அபிப்ராயமே கதை எழுதுகிற ஆட்டோக்காரரை குறித்து பெருமையாக பேச வைத்தது.


தன் கதைகளில் பொருளாதர ரீதியாக ஜாதி ரீதியாக உயர்ந்தவனை கிரிமினல் ஆக இருந்தாலும், அவர் இவர் என்று எழுதுவதும் – ரிக்ஷாக்காரர், மீன் விற்கும் பெண், கீரை விற்பவர், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக நேர்மையானவர்களாக இருந்தாலும் அவர்களை `அவன் – அவள்என்று விளிப்பதுதான் இவர்களது அழகியல்.


ஆம், எழுத்தாளனாக இருப்பவன் வங்கியில், தொலைபேசி துறையில், ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும்; அல்லது துணிக்கடை வைத்திருக்க வேண்டும். இல்லையேல் எந்த வேலையும் செய்யாமல் ஊதாரியாக ஊர் திரிய வேண்டும். உழைப்பாளர்கள் கதை எழுதுகிறார்கள் என்பது, இவர்களுக்கு அதிசயம் மட்டுமல்ல. அவமானமும் கூட.


பெருவாரியான உழைப்பாளர்கள் இவர்களைப் போல் இலக்கியவாதிகளாக மாறிவிட்டால், இவர்கள் வேறு துறைக்கு மாறிக் கொள்வார்கள் என்பதே உண்மை. இது உயர் நடுத்தர வர்க்க புத்தி.

மார்க்ஸ் நாவல்கள் எழுதியிருந்தால்…

ராசேந்திர சோழன் இவர் ஒன்பதாவது படிக்கும் போதே ஞானம் பெற்றவர். (அகிலன், மு.வ, கல்கி, ஜெகசிற்பியன் இவர்களெல்லாம் வாழ்க்கையை சித்தரிக்கவில்லை, போலியாக எழுதுகிறார்கள் என்பதை அப்போதே கண்டுபிடித்திருக்கிறார்.) ஞானசம்மந்தனுக்கு வந்தது போல் பார்ப்பனர்களுக்குத் தான் பிறவியிலேயே ஞானம் வருமா என்ன? காலச்சுவட்டில் இவரின் பதிமூணு பக்க பேட்டியின் சாரம் இதுதான், படைப்புகள் (எழுத்தாளன் என்ன பிரம்மனா?) இசங்கள் சார்ந்து இருக்கக் கூடாது. முற்போக்கு சண்டித்தனம் பண்ணக் கூடாதுஎன்பதே.


தி.ஜானகிராமன், ராஜேஷ் குமார், சுபா, சுஜாதா, லா.ச.ரா., பால குமாரன் இவர்கள் மாதிரி கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார் போலும்.


கார்ல்மார்க்சையும் சிறந்த எழுத்தாளராகத்தான் பார்க்கிறார். மார்க்ஸ் மூலதனம் எழுதியதற்கு பதில் மூன்று நாவல்கள் எழுதியிருந்தால் அவரால் தி.ஜானகிராமனுக்கு இணையாக எழுதியிருக்கமுடியும்னு இன்னும் கொஞ்ச நாளில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தலித் முரசு இதழுக்காக 2002ல் எழுதியது.

தொடர்புடையது:
கலைஞன் பரப்பிய வெளி: சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

9 thoughts on “காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

  1. காலச்சுவடு என்பது உங்கள் இதழா? பின் ஏன் இவ்வளவு பெரிய விளம்பரம்?

    எல்லாம் சரி, பிரபஞ்சனைக் குறித்த விமர்சனம் சற்றுக் கூடுதல்.

  2. தோழர் மதிமாறன்,

    போலி இலக்கிய வேடதாரிகளுக்கு மிகச் சரியான ‘சூடு’ இது. உங்களுடைய பாரதி மீதான தாக்குதலில் இருந்தே இன்னும் விடுபடாத இக்கும்பல், இந்தத் தாக்குதலை எப்படி எதிர்கொள்ளுமோ!!!! பொறுத்திருந்து பார்ப்போம்.

    அடுத்து அதி. அழகு,

    ////காலச்சுவடு என்பது உங்கள் இதழா? பின் ஏன் இவ்வளவு பெரிய விளம்பரம்?///

    இது காலச்சுவடு குறித்த அவரது அறிமுகத்தைக் காட்டுகிறது என்றால்….,

    ///எல்லாம் சரி, பிரபஞ்சனைக் குறித்த விமர்சனம் சற்றுக் கூடுதல்////

    இது அதைவிட அதிகமாக பிரபஞ்சன் குறித்தான இவரது அறிமுகத்தை வெளிப்படுத்துகிறது.

    “பேருமட்டும் பெத்த பேரு, மத்ததெல்லாம் அழுகலு….” என்று மகஇகவின் பாடல் ஒன்றில் கேட்டிருக்கிறேன். அதுதான் கிட்டதட்ட பிரபஞ்சன். கிட்டத்தட்ட என்ன ஒட்டு மொத்தமாக அதுதான் பிரபஞ்சன் (ஆனால் அந்தப் பாடல் சாடுவது வேறு விசயத்தை).

    “என்ன செய்து கிழித்தார் பெரியார்” (http://mathimaran.wordpress.com/2007/09/) என்ற தலைப்பிட்ட ஒரு கவிதையைத் தமது இந்த வலைதளத்தின் முதல் பதிப்பாக மதிமாறன் வெளியிட்டிருக்கிறார். அது முழுக்க முழுக்க நம்ம பிரபஞ்சன்களுக்கான செருப்படிதான், நண்பர் அழகு அவர்களே.

    ஏகலைவன்.

  3. வாசிப்பைப் பொறுத்தவரை எனக்கொன்றும் பெரிய அனுபவம் கிடையாது. இது வரை காலச்சுவடு வாசித்ததும் கிடையாது. ஆனால் புதிதாக வாசிக்க விரும்புகிறவர்கள் எவரெவர் எழுத்துக்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்க்கான வழிகாட்டியாக இருக்கிறது மதி அண்ணனின் இந்தப் பதிவு.

  4. Having read this I thought it was very enlightening.
    I appreciate you taking the time and effort to put this article together.
    I once again find myself spending way too much
    time both reading and commenting. But so what, it
    was still worth it!

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading