‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி

சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே இசுலாமிய இன மக்களையே காட்டுகிறார்களே?

– அப்துல் காதர், பாளையங்கோட்டை

இஸ்லாமிய காதபாத்திரங்களே இல்லாத புராண கதைகள் திரைப்படங்களான அந்தக் காலத்திலேயே, அந்த நிலையை தலைகீழாக மாற்றி ஒரு இந்து கதாபாத்திரம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வந்தது, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற பிறகே.

‘அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன்’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள். ‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது.

அதற்குப் பின்னர் வந்த பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார். இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார். கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார். இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார்.

80களில் வந்த இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), இயக்குநர் ராஜசேகரின் படிக்காதவன் (நாகேஷ்) வாழ்க்கை (வி.கே. ராமசாமி) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன. அப்படி படம் எடுக்க வேண்டிய  கட்டயாத்தை திராவிட இயக்க அரசியல் சூழல் அல்லது சினிமாவில் இருந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள்.

மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும்,  காபரே நடனம் ஆடும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள். அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை. பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

“பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டுவதற்கு, இஸ்லாமிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது” என்று காரணம் இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், அதுவல்ல உண்மை. இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் இதுபோன்ற படங்கள் வருவதற்கு காரணம். இப்போதாவது பாகிஸ்தானோடு எல்லைப் பிரச்சினைதான். ஆனால் பாகிஸ்தானோடு போர் நடந்தபோதேகூட, தமிழில் இஸ்லாமிய எதிர்ப்பு படங்கள் வந்தது கிடையாது; அதற்கு மாறாக இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் ‘பாரதவிலாஸ்’ திரைப்படத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தன் உயிரையே தியாகம் செய்கிற ராணுவ வீரனை ஒரு இஸ்லாமியராகத்தான் காட்டியிருந்தார்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில். டிசம்பர் 2010.

தொடர்புடையவை:

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

பக்திப் படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

‘இது தாண்டா வீரம்’‘இது தாண்டா வீரம்’

உங்கள் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி அதிகம். ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறார்களே அது உங்களைப் பொறுத்தவரை சரிதான்.

-பெயர் குறிப்பிடவில்லை.

ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் மட்டும்தான் நக்கி குடிக்கும்; சிங்கம் என்ன ‘சொம்புல‘ மொண்டா குடிக்கும்? அதுவும் நக்கித்தான் குடிக்கும்.

இதுபோன்ற பழமொழிகள் – தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கவே பயன்படுகிறது. அதிகாரத்திற்கு வந்த யாரோ ஒரு சிலர் செய்கிற தவறுகளை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தின் மீதே சுமத்தி, அவர்களை இழிவாக சுட்டிக் காட்ட ஆதிக்க ஜாதிக்காரர்களால் காழ்ப்புணர்ச்சியோடு பயன்படுத்தப்படுகிறது.

அதே தவறை ஆதிக்க ஜாதிக்காரர்கள் செய்யும்போது, அதை அவர்கள் சார்ந்த ஜாதியோடு தொடர்பு படுத்தி பார்ப்பதில்லை. இது தான்ஆதிக்க ஜாதி மனோபாவம்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு பயப்படுகிற விலங்குகளை மட்டமாகவும், தான் பயப்படுக்கிற விலங்குகளை வீரமாகவும் மதிப்பிடுகிற மனோபாவமும் இத்துடன் சேர்ந்து கொள்கிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும்?

அவைகளை ஆதிக்கத்திற்கான குறியீடாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். எளிய ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தையும், அப்பாவி ஈராக் மக்கள் மீது படையெடுத்து அவர்களை கொன்ற அமெரிக்க ராணுவத்தையும் குறிப்பிடுவதற்கு சிங்கம், புலி, சிறுத்தை குறியீட்டை  பயன்படுத்தலாம்.

தன்னைவிட பலமான கழுகோடு சண்டையிட்டு அதை விரட்டியடித்து, தன் குஞ்சுகளை காக்கிறதே கோழி, அதுதான் வீரம். அமெரிக்கா என்கிற ஆதிக்கக் கழுகை விரட்டியடித்து,  வெற்றிக் கண்டு தன் நாட்டை பாதுகாத்த எளிய வியட்நாம் மக்களைப் போல்.

‘என்னங்க இது..? நம்ம கொழம்புல கொதிக்குது கோழி.. அதபோய் வீரம்னு சொல்றீங்க..!’ -என்று அலுத்துக்காதீங்க. நீங்க அலுத்துக்க மாட்டிங்க… நீங்கதான் சைவமாச்சே.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் டிசம்பர் 2010 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பக்திப் படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

பக்தி படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

கட்சி அரசியல் சார்பற்றவர்களில் தமிழ் திரைப்பட உலகில் செறிவான ஆற்றல் உள்ளவர் என்றால் யாரை குறிப்பிடுவீர்கள்?

-என். சுகுமார், மதுரை.

ஏ.பி. நாகராஜனை. இன்றைய சமூக படங்கள் தீவிரமான இந்து பிரச்சார படமாகவும், இஸ்லாமிய எதிர்ப்பு படமாகவும் இருக்கிறது. ஆனால், ஏ.பி. நாகராஜன் எடுத்த இந்து புராண பக்தி படங்கள் சிறந்த சமூக படங்களாக, பொழுதுபோக்கு படங்களாக இருந்திருக்கிறது.

புராணக் கதை அடிப்படையில் அவர் எடுத்த ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதையால், இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கூட விரும்பி பார்த்தார்கள். அந்தப் படத்தின் வசனங்கள் எல்லா மதக்காரர்களுக்கும் மனப்பாடம்.

கொத்தமங்கலம் சுப்புவின் கதையை சிறந்த திரைக்கதையாக்கி ‘தில்லான மோகனாம்பாள்’ என்று அவர் எடுத்த திரைப்படத்திற்கு இணையாக இதுவரை தமிழில் பொழுது போக்கு படம் வந்ததில்லை.

தில்லான மோகனாம்பாளை தழுவி எடுத்த கரகாட்டக்காரனும் பெரிய வெற்றி பெற்றது. தில்லான மோகனாம்பாளையும்-கரகாட்டக்காரனையும் கலந்து அடித்த, சங்கமமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்லாம் ஏ.பி. நாகராஜனைத்தான் சாரும்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2010 டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

அழகி..!?

அழகி போட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதா?

-விஜயராகவன், திருச்சி

அழகிபோட்டி நடைபெறுவது ஆரோக்கியமானதுதான்; நமக்கல்ல. வர்த்தக நிறுவனங்களுக்கு.

ஒரு காலத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கொக்கோ கோலா, மீண்டும் இந்தியாவில் வர்த்தகம் நடத்த அனுமதிக்கப்பட்டபோது, இந்தியாவின் முதல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மிதா சென்னின் கையில் கொக்கோ கோலா பாட்டிலை கொடுத்து அனுப்பியது அந்த நிறுவனம். அவர்தான் அதற்கான மாடல்.

கோக்கின் போட்டி நிறுவனமான ‘பெப்சி’ பார்த்தது, ‘ இந்தியாவில உனக்குதான் அழகி கிடைப்பாளா? எனக்கு கிடைக்க மாட்டாளா?’ என்று அது ஒரு அழகி போட்டிய நடத்தி, ஐஸ்வர்யாராயை உலக அழகியாக தேர்ந்தேடுத்து, அவர் கையில பெப்சி பாட்டில கொடுத்து அனுப்பியது. அவர்தான் அதற்கான மாடல்.

அதுல இருந்து புடுச்சுது இந்தியாவ ‘அழகிகள் பிசாசு’.

நம் மக்கள் மீது பன்னாட்டு நிறுவனங்கள் என்கிற மந்திரவாதிகள் ஏவி விட்டு இருக்கிற இந்த பிசாசுகளை அடித்து ஓட்டுவதற்கும், மந்திரவாதிகளை ஓட ஓட விரட்டுவதற்கும் தலைவர் லெனினை போல் ஒரு பூசாரி வேண்டும். ஆனால், நமக்கு கிடைச்ச தலைவர்களோ மந்திரவாதிகளுக்கு கூட்டாளிகளான ஜார் மன்னர்கள்தான்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு

நடிகர் கமலஹாசன் உண்மையில் நாத்திகரா? இல்லை நாத்திகர் போல் நடிக்கிறாரா?

-மதன், சென்னை

ஒரு கம்யூனிஸ்ட் அல்லது ஒரு முற்போக்காளன் நாத்திகனாக இருக்க வேண்டியது கட்டாயம்; ஆனால் நாத்திகனாக இருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டாகவோ, முற்போக்காளராகவோதான் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது தவறு.

தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிற பெரிய நிறுவனத்தின் முதலாளி, நாத்திகனாக இருக்கலாம். ஆனால், அவர் முற்போக்காளன் கிடையாது. ‘கடவுள் இல்லை’ என்பது ஒரு அறிவியல். அந்த அறிவியலை புரிந்தவர்கள். புரியாதவர்கள். அவ்வளவுதான்.

‘கமலஹாசன் நாத்திகரா?’ என்று கேட்டு இருக்கிறீர்கள்.

‘கமஹாசன்’ அல்ல; ‘கமல்ஹாசன்’ என்பதுதான் சரியானது. 90களுக்கு முன்புவரைதான் அவர் கமஹாசன் (KAMLAHASAN). அதன் பிறகு அவர் கமல்ஹாசன் (KAMALHASAN).

எந்த எண் ஜோதிடனை கேட்டு இந்த ‘நாத்திகர்’ தன் பெயரில் இருந்த A வை நீக்கினாரோ தெரியாது.

‘கமலஹாசன் உண்மையில் நாத்திகரா?’இந்தக் கேள்வியை நீங்கள் கமலிடமே கேட்டிருந்தால், அவர் நாயகன் திரைப்படத்தில்,“தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?” என்று கேட்ட பேரனை பார்த்து, “தெரியலையேப்பா…” என்று ‘தெளிவாக’ பதில் சொன்னாரே…அதுபோன்ற வசனத்தைதான் பதிலாக அளிப்பார்.

அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கண்டிப்பாக இந்து மதத்தின் ஒரு பிரிவான அய்யங்கார்கள் கடைப்பிடிக்கும் வைணவத்தின் மீதும் அதன் சடங்குகள், வழக்கங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. அதை அவருடைய படங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார். அவர் விஸ்பரூபமாக எடுத்து நின்ற ‘தசவதாரம்’ அதைத்தான் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது.

சரி, இப்ப நீங்களே சொல்லுங்கள், கமல்ஹாசன் நாத்திகரா? ஆத்திகரா?

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2010 நவம்பர் மாத இதழில்  வாசகர் கேள்விக்கு எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

கமல்ஹாசன் பிராமணர் என்பதாலா…..

தசாவதாரம்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

திராவிட ஆட்சியை ஒழித்துவிட்டு, ஆரிய ஆட்சியை கொண்டுவர பார்க்கிறார்கள் என்றும், தினமணி, தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகளையும் கலைஞர் கடுமையாக சாடி உள்ளாரே?

-கு. முருகன்

‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில், கவுண்டமணியை பார்த்து செந்தில், “அண்ணே நீங்க எவ்ளோ நல்லவரு…” ன்னு சொன்னவுடனேயே, சுற்றி நிற்பவர்கள் ‘குபீர்’ன்னு சிரிப்பார்கள். அதுபோல் கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு பேச்சை கேட்டால் நமக்கும் ‘குபீர்’ன்னு சிரிப்புத்தான் வருது.

முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மிக அதிகாரம் மிக்க பதவியான தலைமைச் செயலாளர் பதவியை எல்.கே. திரிபாதி, கே.எஸ்.ஸ்ரீபதி, எஸ்.மாலதி என்று வரிசையாக தொடர்ந்து பார்ப்பனர்களுக்குத்தான் தந்திருக்கிறார். அதன் காரணமாக அல்லது ஸ்ரீபதியின் பரிந்துரையின் பேரில் செம்மொழி மாநாடு உட்பட திராவிட – தமிழ்தன்மை கொண்டதாக சொல்லிக்கொள்ளப்படுகிற அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பார்ப்பனத் தன்மை கொண்ட தொகுப்புரையை சுதா சேஷைய்யர் என்பவர்தான் வழங்கினார்.

கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ், சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற திறமையானவர்களுக்கு  தலைமைச் செயலாளர் பதவி தரவில்லை என்பது மட்டுமல்ல; நிதி, உள்துறை, பொதுப்பணி, கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில்கூட அவர்களை நியமிக்கவில்லை.

திலகவதி ஐ.பி.எஸ் போன்றவர்களும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்திருக்கிறார்கள்.

பல திறமைசாலிகளை பணிமூப்பு அடைப்படையிலும் புறக்கணித்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, மீனா என்கிற பார்ப்பனரையே நியமித்தார்.

சங்கரராமன் கொலைவழக்கில் இருந்து ஜெயேந்திரனை விடுவிக்கும் முயற்சியில், பிராமண சங்கத்தைவிட அதிகம் ஆர்வம் தமிழக அரசு சார்பில்தான் காட்டப்படுகிறது. அல்லது அந்த வழக்கில் அரசு தரப்பு தோல்வியடைய வேண்டும் என்ற அளவில் சாட்சிகள் சர்க்கஸ் பல்டிகள் அடித்துக் கொண்டு இருக்கிறது.

பார்ப்பன சுப்பிரமணியசாமிக்காக, உயர்நீதிமன்றத்தில் போலீஸ் நுழைந்து வழக்கறிஞர்களை தாக்கியது.

ஆக, ஆரிய ஆட்சி அமலில் இருக்கும்போது, அதை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்பது லாஜிக்காக இல்லை. மாறாக, ‘அண்ணே நீங்க எவ்ளோ நல்லவரு…’ வசனத்தைதான் நினைவூட்டுகிறது.

எல்லாவற்றையும்விட மிக கொடுமையானது, இவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை தந்த பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர். ராதாவை, பார்ப்பன எஸ்.வி. சேகரோடு  ஒப்பிட்டு கேவலப்படுத்தியது.

‘தினமணி’ என்கிற நாளிதழ், ‘தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை இன்னும் ஏன் தூக்கில் போடாமல் இருக்கிறது இந்த அரசு?’ என்று கடந்த மாதம் மிகக் கடுமையாக, மோசமாக மனிதாபிமானம் அற்றவகையில் தலையங்கம் எழுதியபோது, ‘எக்ஸ்பிரஸ் வர்த்தக கட்டிட’த்தை திறந்து வைத்து தினமணியை புகழ்ந்து கொண்டு இருந்தார் கலைஞர்.

(தினமணியோடு டையப் வைத்துக்கொண்டு, திமுகவை எதிர்ப்பது மட்டுமே தங்கள் கொள்கையாக கொண்ட, ‘கருணாநிதி மட்டும்தான் தமிழர்களுக்கு தீங்கு செய்தார்’  என்று எழுதுகிற ‘உண்ர்வாளர்களும்’  தினமணியின் மோசடியை கண்டிக்கவில்லை.)

ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்றகுவித்துக் கொண்டிருந்தபோது, ‘இந்து’, ‘தினமலர்’ போன்ற நாளிதழ்கள் அதை நியாயப்படுத்தி சிங்கள அரசுக்கு ஆதரவாக எழுதியபோதும், அவைகளின் பார்ப்பனத் தன்மை கலைஞருக்கு தெரியாமல் போனது ஏன்?

இப்படி எல்லாம் பார்ப்பன சேவகத்தில் ஈடுபட்டு தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு வேண்டுமானல் முடியுமே தவிர, ஒரே ஒரு பார்ப்பன ஓட்டைக்கூட திமுகவிற்கு ஆதரவாக கலைஞரால் பெற முடியாது. அந்த வகையில் வேண்டுமானல் இதை திராவிட ஆட்சியாக அடையாளப்படுத்தலாமே தவிர, மற்றபடி…..

தொடர்புடையவை:

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

ஆனந்த விகடனும் – பெரியாரும்

துதான் ஆனந்த விகடன் – குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை

பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

பிரபாகரன் இருக்கின்றாரா?

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை

அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை

https://i2.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2010/07/beem-back-finel.jpg?resize=322%2C378ப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, அதவாது 1936 ஆம் ஆண்டில் ‘ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்கு‘ டாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் அந்த உரையை இப்படி துவங்கியிருக்கிறார்: இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு பேரன்புடன் என்னை வேண்டிக் கொண்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் உறுப்பினர்களின் நிலைக்காகப் பெரிதும் வருந்துகிறேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காகப் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். ……………………………….. நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மாகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுபாம்பாகவே பார்க்கின்றனர். ………………………………………………………………………

…………. மதஈடுபாடுள்ள சாதாரண இந்துக்களுக்கும் கூட என்னைத் தேர்வு செய்தது பிடிக்காது. ஒரு தலைவைரை தேர்ந்தெடுப்பதற்குச் சாஸ்திரங்கள் விதித்துள்ள விதிமுறைகளை மீறியதேன் என இம்மண்டலைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்க நேரலாம். …………. அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று ஆரம்பித்து, ஜாதிகள் பற்றியும், இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என்றும் வேதங்கள், உபநிஷதங்கள், ஸ்மிருதிகள், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இந்துக்களின் ‘அற‘நூல்களை அம்பேத்கர் நொறுக்கியிருந்தார்.

அந்தத் தலைமை உரையை படித்துப் பார்த்த மாநாட்டின் வரவேற்புக் குழவினர், அதிர்ச்சி அடைகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரையை சுருக்கிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் வேண்டுமென குழவினர் டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொள்கின்றனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் “தலைமை பதவியை அளித்த கவுரவத்திற்காக, மாநாட்டுத் தலைமையுரையைத் தயாரிப்பதற்குத் தலைவருக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது“ என்று மறுத்துவிடுகிறார்.

மாநாட்டுக் குழவினர், டாக்டர் அம்பேத்கரின் தலைமையை நீக்கிவிடுகிறார்கள்.

அதைக்குறித்து 15.5.36 அன்று ஹர்பகவன் என்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: ஒருவரது தலைமையுரையை வரவேற்புக் குழவினர் ஒப்புக் கொள்ளாததால் தலைவரையே ரத்து செய்தது இதுவே முதல் தடவையாக இருக்குமெனக் கருதுகின்றேன். இது சரியோ, தவறோ சாதி இந்துக்களின் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க நான் அழைக்கப்பட்டது இதுவே முதல் தடவை. இது துக்கத்தில் முடிந்தது பற்றி வருந்துகின்றேன். தம் வைதீக சகாகக்களிடமிருந்து சீர்திருத்தப் பிரிவனருக்கும், சீர்திருத்தம் நடைபெற்றே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீண்டாதோரின் தன்மானமுள்ள பிரிவனருக்கும் இடையிலான இத்தகைய அவலமான உறவு எப்படி முடியும்?”

 

1936 ஆம் ஆண்டின் நிலை மட்டுமல்ல இது. இன்றைய நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எழுதியிருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பல உரிமைகளைப் போராடி சட்டமாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிடை வலியுறுத்தி தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்திருக்கிறார். உலகம் வியக்கும் அறிஞராக பல விஷயங்களில் ஆழ்ந்த கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக மட்டுமே பார்க்கிற தொனி இன்றும் நிலவுகிறது.

அப்படிப் பார்ப்பதுகூட பிரச்சினையில்லை, அவரை பிற்படுத்தப்பட்டவர்களின் எதிரியாக சித்தரிப்பது திட்டமிட்ட சதியாக, பேராபத்து நிறைந்ததாக இருக்கிறது. அதன் பொறுட்டே, அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வியை, வேலைவாய்ப்பை எதிர்த்த, மறுத்த – குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி மீது வராத கோபம், காழ்ப்புணர்ச்சி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிட்டை சட்டமாக்கிய டாக்டர் அம்பேத்கர் மீது வருகிறது என்றால், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் என்பதினால்தான். “அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி.

ஒரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள். ஆனால், அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால், சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமனல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராக, தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.

இந்த மனோபாவம், முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்ல, நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம், இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமற, பரம்பொருளைபோல் பரவி இருக்கிறது.

தன் மீது ஆதிக்கம் செலுத்துகிற, தன்னை அவமானப்படுத்துகிற ஆதிக்க ஜாதிகளைப் பார்த்து வராத கோபம் தன்மீது எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்தாத, தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காத, தாழ்த்தப்பட்டவர்கள் மீதே கோபம் கொள்கிற மனோபாவத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த மனோபாவம் மாறாத வரையில் ஜாதி ஒழியாது. ஜாதி மட்டுமல்ல, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள்கூட ஒழியாது.

ஏனென்றால் ஜாதிய அமைப்பு முறை ‘உயர்ந்தவன்-தாழ்ந்தவன்‘ என்ற இரண்டே வேறுபாட்டில் இல்லை. அப்படி இருந்திருந்தால், அது எப்போதோ ஒழிந்திருக்கும், அல்லது அந்த நிலையில் மாற்றம் வந்திருக்கும். ஆனால் இந்து சாதிய அமைப்பின், ஏற்றத் தாழ்வுகள் படிநிலை நிறைந்தாக உள்ளது. அதனால் தான் வேறொருவனுக்கு அடிமையாக இருப்பதை பற்றிய கவலையில்லாமல், தனக்கு கீழ் ஒரு அடிமை இருப்பதில் மகிழ்ச்சியும், அந்த அடிமை தன்னை மீறி போகும்போது ஆத்திரம், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு வன்முறையில் இறங்க வைக்கிறது. 2000 ஆண்டுகளாகியும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்க முடியாததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் ‘உயர்‘ ஜாதிக்ககாரர்கள் எல்லா சாதிக்காரர்களையும் மட்டமானவர்களாக கருதினாலும் அல்லது எல்லோரையும் விட நாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு நடந்து கொண்டாலும், அவர்களிடம் எந்த சாதிக்காரர்களும் சண்டைக்குப் போவதில்லை. எந்த ஜாதிய தகறாறுகளிலும் பாதிக்கப்படாமல், ஜாதி ரீதியாக மரியாதையோடும் வாழ்கிறார்கள். இதுதான் ஜாதியின் இயக்கம். இதுதான் ஜாதிய உணர்வு.

இந்த உணர்வு கொண்ட ஜாதி இந்துக்கள் மனம் திருந்த வேண்டும். ‘தீண்டாமையை பொறுத்தவரையில் அதில் திருந்த வேண்டியவர்களும், மாற வேண்டியவர்களும் ஜாதி இந்துக்கள்தான். தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த தவறும் இல்லை.’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார். ஆகையால் தீண்டாமைக்கு எதிராக சாதி இந்துக்களிடம் தீவிரமாக பிரச்சாரம் செய்யவேண்டியது, சமூக அக்கறை உள்ளவர்களின் கடமை. அதனால்தான் தந்தை பெரியாரும் ஜாதிக்கு எதிராக, இந்து மதத்ததிற்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக ஜாதி இந்துக்களிடமே அதிகம் பேசினார். அதனால்தான் இந்திய அளவில் மிகச் சிறந்த தலைவராக டாக்டர் அம்பேத்கரை போல் , தந்தை பெரியாரும் விளங்குகிறார்.

சமூகத்தில் ஜாதிய வேறுபாட்டை எதிர்க்க, சாதிரீதியான காழ்ப்புணர்ச்சியை குறைக்க, முற்றிலும் விலக்க அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை பிற்படுத்தப்பட்டர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். அப்படி சேர்ப்பதின் மூலம் சமூகம் ஜாதி வேறுபாடற்ற சமூகமாக மாறும். பிற்படுத்தப்பட்ட மக்கள், அம்பேத்கரை தலைவராக ஒத்துக் கொண்டால், அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சசோதரர்களாக பாவிக்கிறார்கள் என்று அர்த்தப்படும். தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாய்த்து தலைவராக வருவதை எதிர்த்து இயங்குகிற, மனநிலையை அது மாற்றும். முற்போக்காளர்கள் – பிற்படுத்தப்பட்டவர்களிடம் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை, அவர் உருவத்தை கொண்டுபோய் சேர்ப்பது தங்களின் தலையாய கடமை என்று இயங்கவேண்டும்.

அதன் ஒரு நிலையாக யாருமே அணியாத டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட டிசர்ட் அணிந்து, அதை சேகுவேரா, பெரியார் டிசர்ட்டை போன்று பிரபலமாக்க வேண்டும். அம்பேத்கர் டி சர்ட் பிரபலமானால், டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கான பொதுத்தலைவர், என்கிற நிலை உருவாகும். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த வேணடும் என்கிற உணர்வு மாறும். அவர் சிலையை கூண்டுக்குள் வைத்து அவமானப்படுத்துகிற நிலை மாறும். தாழ்த்தப்பட்டவர்களின் மீது நடக்கிற வன்கொடுமைகள் அகலும் அல்லது நிச்சயம் குறையும்.

ஆகவே, அண்ணலின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று உறுதி ஏற்பதோடு அவரின் படம் போட்ட டி சர்ட அணிவோம். மிகப் பரவலாக தலித் அல்லாதவர்களையும் அணிய வைப்போம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை, பல புதிய உரிமைகளை மீட்கட்டும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல உரிமைகளை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்கட்டும். ஜாதி வேறுபாடு அற்ற சமூகம் உருவாகட்டும்.

-வே. மதிமாறன்

14.4.2009 டாக்டர் அம்பேத்கரின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அன்புக்குரிய பத்திரிகையாளர் சிவகுமார் கேட்டுகொண்டதற்காக தமிழ் ஓசை நாளிதழில் எழுதிய கட்டுரை.

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, டிசம்பர் மாத  தங்கம் இதழில்  மீள் பிரசுரம் செய்த எனது அருமை நண்பர் தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீனுக்கு நன்றி.

தங்கம் இதழில் :

http://ebook.thangamonline.com/dec10/index.php?page=80

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
இன்றுமுதல்….
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
‘அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?’
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

இன்றுமுதல்….

காந்தியைப் போல் இந்தியா முழுக்க பரவலாக அறிப்பட்ட தலைவர் டாக்டர் அம்பேத்கர். அதுவும காந்திக்கு எதிர்நிலையில் இருந்து ஓடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அரசியல் செய்து அதன்மூலமாகவே பெருவாரியான மக்களால் கொண்டாடப்படுகிற தலைவர் என்பது கூடுதல் சிறப்பு.

பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு இவைகளுக்காக, சுயஜாதி பற்றற்ற நிலையில் இருந்து போராடிய தலைவர். இந்த வகைப் போராட்டங்களில் தந்தை பெரியாரோடு மட்டுமே,  தத்துவ ரீதியாகவும் தோழமையாகிற தலைவர்.

சமூகநீதி அரசியலின் தொட்டில் என்று அழைப்படுகிற தமிழ்நாட்டில், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை, பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் வெளியிடவேண்டியிருக்கிறது என்பது மிகுந்த வெட்கப்படும்படியான  செயலாகவே கருதுகிறேன்.

இந்த தவறுக்கு பரிகாரமாக ‘பாபாசாகேப் அம்பேத்கர் திரைபடத்தை’ ஒரு வெற்றி படமாக்கவேண்டியது அல்லது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.

அதன் துவக்கமாக, இன்று வெளியாகிற ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கவும், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கவும் வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
‘அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?’
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’