அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2010/07/beem-back-finel.jpg?resize=322%2C378ப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, அதவாது 1936 ஆம் ஆண்டில் ‘ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்கு‘ டாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் அந்த உரையை இப்படி துவங்கியிருக்கிறார்: இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு பேரன்புடன் என்னை வேண்டிக் கொண்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் உறுப்பினர்களின் நிலைக்காகப் பெரிதும் வருந்துகிறேன். என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காகப் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். ……………………………….. நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மாகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுபாம்பாகவே பார்க்கின்றனர். ………………………………………………………………………

…………. மதஈடுபாடுள்ள சாதாரண இந்துக்களுக்கும் கூட என்னைத் தேர்வு செய்தது பிடிக்காது. ஒரு தலைவைரை தேர்ந்தெடுப்பதற்குச் சாஸ்திரங்கள் விதித்துள்ள விதிமுறைகளை மீறியதேன் என இம்மண்டலைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்க நேரலாம். …………. அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று ஆரம்பித்து, ஜாதிகள் பற்றியும், இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என்றும் வேதங்கள், உபநிஷதங்கள், ஸ்மிருதிகள், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இந்துக்களின் ‘அற‘நூல்களை அம்பேத்கர் நொறுக்கியிருந்தார்.

அந்தத் தலைமை உரையை படித்துப் பார்த்த மாநாட்டின் வரவேற்புக் குழவினர், அதிர்ச்சி அடைகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரையை சுருக்கிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் வேண்டுமென குழவினர் டாக்டர் அம்பேத்கரை கேட்டுக் கொள்கின்றனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் “தலைமை பதவியை அளித்த கவுரவத்திற்காக, மாநாட்டுத் தலைமையுரையைத் தயாரிப்பதற்குத் தலைவருக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது“ என்று மறுத்துவிடுகிறார்.

மாநாட்டுக் குழவினர், டாக்டர் அம்பேத்கரின் தலைமையை நீக்கிவிடுகிறார்கள்.

அதைக்குறித்து 15.5.36 அன்று ஹர்பகவன் என்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: ஒருவரது தலைமையுரையை வரவேற்புக் குழவினர் ஒப்புக் கொள்ளாததால் தலைவரையே ரத்து செய்தது இதுவே முதல் தடவையாக இருக்குமெனக் கருதுகின்றேன். இது சரியோ, தவறோ சாதி இந்துக்களின் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க நான் அழைக்கப்பட்டது இதுவே முதல் தடவை. இது துக்கத்தில் முடிந்தது பற்றி வருந்துகின்றேன். தம் வைதீக சகாகக்களிடமிருந்து சீர்திருத்தப் பிரிவனருக்கும், சீர்திருத்தம் நடைபெற்றே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீண்டாதோரின் தன்மானமுள்ள பிரிவனருக்கும் இடையிலான இத்தகைய அவலமான உறவு எப்படி முடியும்?”

 

1936 ஆம் ஆண்டின் நிலை மட்டுமல்ல இது. இன்றைய நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எழுதியிருக்கிறார். அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பல உரிமைகளைப் போராடி சட்டமாக்கியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிடை வலியுறுத்தி தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்திருக்கிறார். உலகம் வியக்கும் அறிஞராக பல விஷயங்களில் ஆழ்ந்த கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக மட்டுமே பார்க்கிற தொனி இன்றும் நிலவுகிறது.

அப்படிப் பார்ப்பதுகூட பிரச்சினையில்லை, அவரை பிற்படுத்தப்பட்டவர்களின் எதிரியாக சித்தரிப்பது திட்டமிட்ட சதியாக, பேராபத்து நிறைந்ததாக இருக்கிறது. அதன் பொறுட்டே, அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வியை, வேலைவாய்ப்பை எதிர்த்த, மறுத்த – குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி மீது வராத கோபம், காழ்ப்புணர்ச்சி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கிட்டை சட்டமாக்கிய டாக்டர் அம்பேத்கர் மீது வருகிறது என்றால், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தார் என்பதினால்தான். “அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.” என்று அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி.

ஒரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள். ஆனால், அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால், சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமனல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராக, தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.

இந்த மனோபாவம், முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்ல, நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம், இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமற, பரம்பொருளைபோல் பரவி இருக்கிறது.

தன் மீது ஆதிக்கம் செலுத்துகிற, தன்னை அவமானப்படுத்துகிற ஆதிக்க ஜாதிகளைப் பார்த்து வராத கோபம் தன்மீது எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்தாத, தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காத, தாழ்த்தப்பட்டவர்கள் மீதே கோபம் கொள்கிற மனோபாவத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த மனோபாவம் மாறாத வரையில் ஜாதி ஒழியாது. ஜாதி மட்டுமல்ல, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள்கூட ஒழியாது.

ஏனென்றால் ஜாதிய அமைப்பு முறை ‘உயர்ந்தவன்-தாழ்ந்தவன்‘ என்ற இரண்டே வேறுபாட்டில் இல்லை. அப்படி இருந்திருந்தால், அது எப்போதோ ஒழிந்திருக்கும், அல்லது அந்த நிலையில் மாற்றம் வந்திருக்கும். ஆனால் இந்து சாதிய அமைப்பின், ஏற்றத் தாழ்வுகள் படிநிலை நிறைந்தாக உள்ளது. அதனால் தான் வேறொருவனுக்கு அடிமையாக இருப்பதை பற்றிய கவலையில்லாமல், தனக்கு கீழ் ஒரு அடிமை இருப்பதில் மகிழ்ச்சியும், அந்த அடிமை தன்னை மீறி போகும்போது ஆத்திரம், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு வன்முறையில் இறங்க வைக்கிறது. 2000 ஆண்டுகளாகியும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்க முடியாததற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் ‘உயர்‘ ஜாதிக்ககாரர்கள் எல்லா சாதிக்காரர்களையும் மட்டமானவர்களாக கருதினாலும் அல்லது எல்லோரையும் விட நாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு நடந்து கொண்டாலும், அவர்களிடம் எந்த சாதிக்காரர்களும் சண்டைக்குப் போவதில்லை. எந்த ஜாதிய தகறாறுகளிலும் பாதிக்கப்படாமல், ஜாதி ரீதியாக மரியாதையோடும் வாழ்கிறார்கள். இதுதான் ஜாதியின் இயக்கம். இதுதான் ஜாதிய உணர்வு.

இந்த உணர்வு கொண்ட ஜாதி இந்துக்கள் மனம் திருந்த வேண்டும். ‘தீண்டாமையை பொறுத்தவரையில் அதில் திருந்த வேண்டியவர்களும், மாற வேண்டியவர்களும் ஜாதி இந்துக்கள்தான். தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த தவறும் இல்லை.’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார். ஆகையால் தீண்டாமைக்கு எதிராக சாதி இந்துக்களிடம் தீவிரமாக பிரச்சாரம் செய்யவேண்டியது, சமூக அக்கறை உள்ளவர்களின் கடமை. அதனால்தான் தந்தை பெரியாரும் ஜாதிக்கு எதிராக, இந்து மதத்ததிற்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக ஜாதி இந்துக்களிடமே அதிகம் பேசினார். அதனால்தான் இந்திய அளவில் மிகச் சிறந்த தலைவராக டாக்டர் அம்பேத்கரை போல் , தந்தை பெரியாரும் விளங்குகிறார்.

சமூகத்தில் ஜாதிய வேறுபாட்டை எதிர்க்க, சாதிரீதியான காழ்ப்புணர்ச்சியை குறைக்க, முற்றிலும் விலக்க அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை பிற்படுத்தப்பட்டர்களிடமும் கொண்டு சேர்க்கவேண்டும். அப்படி சேர்ப்பதின் மூலம் சமூகம் ஜாதி வேறுபாடற்ற சமூகமாக மாறும். பிற்படுத்தப்பட்ட மக்கள், அம்பேத்கரை தலைவராக ஒத்துக் கொண்டால், அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சசோதரர்களாக பாவிக்கிறார்கள் என்று அர்த்தப்படும். தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாய்த்து தலைவராக வருவதை எதிர்த்து இயங்குகிற, மனநிலையை அது மாற்றும். முற்போக்காளர்கள் – பிற்படுத்தப்பட்டவர்களிடம் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை, அவர் உருவத்தை கொண்டுபோய் சேர்ப்பது தங்களின் தலையாய கடமை என்று இயங்கவேண்டும்.

அதன் ஒரு நிலையாக யாருமே அணியாத டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட டிசர்ட் அணிந்து, அதை சேகுவேரா, பெரியார் டிசர்ட்டை போன்று பிரபலமாக்க வேண்டும். அம்பேத்கர் டி சர்ட் பிரபலமானால், டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கான பொதுத்தலைவர், என்கிற நிலை உருவாகும். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த வேணடும் என்கிற உணர்வு மாறும். அவர் சிலையை கூண்டுக்குள் வைத்து அவமானப்படுத்துகிற நிலை மாறும். தாழ்த்தப்பட்டவர்களின் மீது நடக்கிற வன்கொடுமைகள் அகலும் அல்லது நிச்சயம் குறையும்.

ஆகவே, அண்ணலின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று உறுதி ஏற்பதோடு அவரின் படம் போட்ட டி சர்ட அணிவோம். மிகப் பரவலாக தலித் அல்லாதவர்களையும் அணிய வைப்போம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை, பல புதிய உரிமைகளை மீட்கட்டும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் பல உரிமைகளை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்கட்டும். ஜாதி வேறுபாடு அற்ற சமூகம் உருவாகட்டும்.

-வே. மதிமாறன்

14.4.2009 டாக்டர் அம்பேத்கரின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அன்புக்குரிய பத்திரிகையாளர் சிவகுமார் கேட்டுகொண்டதற்காக தமிழ் ஓசை நாளிதழில் எழுதிய கட்டுரை.

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, டிசம்பர் மாத  தங்கம் இதழில்  மீள் பிரசுரம் செய்த எனது அருமை நண்பர் தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீனுக்கு நன்றி.

தங்கம் இதழில் :

http://ebook.thangamonline.com/dec10/index.php?page=80

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
இன்றுமுதல்….
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
‘அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?’
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

3 thoughts on “அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading